Loading

அகம் 2

தங்கையின் நிலையை மனதில் போட்டு உழற்றியவாறு வண்டியை இயக்கிக்கொண்டு வந்தாள் அவந்திகை, நேரம் ஆகிவிட்டதே, கடையை வேறு திறக்க வேண்டும், என்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டு வந்தவள் அந்தக் கடையின் வாசலில் நிறுத்த.,

“என்னட்டி அவி இந்தப் பக்கம்” அவனைப் பார்த்து பல் இளித்தான் அவளின், அத்தை மகன் மன்னராசா, முத்து வேலின் தங்கை பார்வதி-ராஜபூபதி தம்பதிகளின் ஒரே மகன்.

“ஏலே மாமன் மகன்னு வழிய மறிக்குறது, போறப்ப, வரப்ப பல் இளிக்குற வேலையெல்லாம் பண்ணின்னு வை, மூஞ்சி முகரையெல்லாம் பேத்துருவேன் டே, வழிய விடுல” அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காது அவனைக் கடந்து அவள் சென்றதே அவனுக்குப் பெருத்த அவமானமாய் இருந்தது.

“ஏட்டி அவி, எம்பராசா மகன்னு நினைப்போ.? நில்லாம்ட்டி” அவள் வளையல் அணிந்த கைகளைப் பிடித்துத் தன் புறம் இழுத்தான் மன்னராசா.

“ஏலே கைய விடாம் டேய், கடைவீதில வந்து கையபிடிச்சு இழுக்குதியோ, உமக்கு அறிவு இருக்காலே, உன் கூட்டுக் கரப் பயலுவகிட்ட வீர தீர செயலை செய்யப் போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கியோ” என எகத்தாளாமாய் அவள் கேட்க, அவன் முகம் கன்றிப் போனது.

“ஆமாட்டி அவி, என் மாமன் மக கைய பிடிச்சு இழுக்கப் போறேன் வந்து பாருங்கடேன்னு, சொல்லிட்டு வந்திருக்கேன், உன் கைய கட்டிக்கப் போற நான் பிடிக்காம வேற எவன்ட்டி பிடிக்கப் போறான்” என அவன் திமிராய்ப் பேசினான்.

“இன்னைக்கி நீ அசிங்கபட்டுதாம்லே போகப் போற” அவள் விரல் நீட்டி எச்சரிக்கை விடுக்க, அவள் கையைப் பட்டென உதறியவன், பதறிபோனான், இருக்காத பின்ன அவளிடம் ஏற்கனவே அவமானபட்டிருக்கிறானே, அதுவும் நடு ரோட்டில்

“அதான் கைய விட்டுடேன்ல, இப்பாயச்சும் சொல்லேன்ட்டி, என்ன இந்தப் பக்கம்”

“தார்க்கம்பு வாங்க வந்தேன்லே”

“என்கிட்ட சொல்லிருந்தா நான் வாங்கிக் கொடுத்திருப்பேன்லட்டி, என்ன வீட்டுல மாடு வம்பு பண்ணுதோ அதை அடிக்கத் தான் தார்கம்பு வாங்க வந்தீயோ” அக்கறையைப் போல் அவன் கேட்க,

“வீட்டுல இருக்குற மாடு அவ்வளவும் என் பேச்சை கேக்குமே, இது ரோட்டுல சுத்துற ஒரு எருமை மாட்டுக்குலே” என அவள் சொல்லி கடை வீதிக்குள் நடக்கலானாள்.

“என்னட்டி என்னை எருமைமாடுன்னு சொல்லுதீயோ”

“சீ நான் எருமைமாட்டைக் கேவலபடுத்துவேனாலே.? என நக்கலாய் சொல்லிவிட்டு அவனைக் கண்டுக்கொள்ளாது முன்னேறி நடந்தாள் அவந்திகை. அவந்திகை என்னவோ அவனின் பார்வையும், பேச்சும் அறவே பிடிக்காது, என்ன செய்வது அத்தை மகன் என்பதால் அவள் பேசும்படி ஆகி விட்டது, பேசவில்லை என்றால் தான் அத்தை சாமியாடி விடுவார்களே, இவனும் தாயிடம் போய்த் தவறாமல் சொல்லி விடுவான், அவந்திகை பேசவில்லை என்று,

“ஏட்டி நீ என்ன தான் சொல்லுத தெரியுது, பரவாயில்லை சொல்லிக்ககோட்டி மாமன் மகளா போயிட்டா” எனப் பேசியவனைத் தன் அகன்ற விழிகள் விரிய பாரத்தாள் அவந்திகை.

“இதோ பாருலே, கடைய தொறக்கணும், இதுல இருக்கச் சாமானெல்லாம் வாங்கிட்டு வருதியா.?” கட்டளையாய் அவள் சொல்ல, அவளுக்காக எதையும் செய்யத் துணியும் இவன் இதைச் செய்துவிட மாட்டானா.? அதற்காகவே காத்திருந்தது போல் மன்னராசாவின் முகத்தில் புன்னகை அப்பிக்கொண்டது.

“நீ போயாம்ட்டி நான் வாங்கியாறேன்” என அவள் கைகளில் இருந்த வெள்ளை காகிதத்தை வாங்கிவிட்டு உற்சாகமாகக் கடை வீதிக்குள் நுழைந்தான் மன்னராசா. அவனிடம் கொடுத்துவிட்டு ஒரு நிம்மதியில் தான் சென்றாள் அவந்திகை, அனைத்து பொருள்களையும் சரியாக வாங்கிக் கடையில் வந்து சேர்த்துவிடுவான் மன்னராசா, இல்லை என்றால் தான் அவந்திகை அவனைத் தோலுரித்துவிடுவாளே.

**********

“ஏம்ட்டி அவி சாமான் வாங்க போறேன்னு சொல்லிட்டு வெறுங்கைய வீசிட்டு வந்திருக்க.?” அவள் உண்ணாமல் சென்ற கோபத்தில் பொரிந்து தள்ளினார் ஜெயக்கொடி

“மன்னராசாகிட்ட கொடுத்திட்டு வந்திருக்கேன், அவன் விரச வாங்கிட்டு வந்துடுவான், நான் கடைய தொறக்கணும்ல“ என அவள் பதிலை சொல்லிவிட்டு அவர்கள் வீட்டிற்கு எதிரே இருந்த பொட்டிக் கடையைத் திறந்தவள், கடைக்குப் பின் இருந்த கூடத்திற்குள் நுழைந்தாள். சிறிய வகைத் தொழிற்சாலை போல் இயங்கி கொண்டிருந்தது அந்த இடம். கிட்டதட்ட பதினைந்து பெண்கள் அங்கு வேலை செய்துக்கொண்டிருந்தனர், சிலர் இயற்கை முறையில் தயார் செய்த வழலை கட்டிகளை அதற்கு உரிய அச்சில் ஊற்றிக் கொண்டிருந்தனர்.,

“ஏய் மில்க்ப்ரூட் காலை பையினி வந்துச்சா..?” அதிகாரமாய்க் கேட்டாள் அவந்திகை,

“வாட்டி அவி, கடைய தொறக்காம ஊரெல்லாம் சுத்திட்டு காலை பையினி எங்கன்னு கேக்குதீயோ..? பையினிய நீ வாரதுக்கு முன்ன நானே வித்துட்டேன் இந்தா பைசா” முடிந்து வைத்த சுருக்குப் பையில் இருந்து எடுத்து நீட்டினார் பால்கனி. இவர் அவந்திகையிடம் வேலை பார்க்கும் அறுபது வயது முதியவர், தன்னால் இயன்ற வேலையைச் செய்து அதற்கான கூலியை பெற்றுக்கொண்டு, அந்த ஊரில் கண்ணியமாக வாழ்ந்து வரும் முதியவர், பெற்ற பிள்ளைகளையும் அவர் நம்பவில்லை, கட்டிய கணவனையும் அவர் நம்பவில்லை, அவர் நம்பியெதெல்லாம் அவர் கை மட்டும் தான், பார்க்க தான் வயதனவர் போல் இருப்பார் வேலை என்று வந்துவிட்டால் படு சுறுசுறுப்பாக மாறிவிடுவார், அவரைப் பாட்டி என்றழைத்தாள் தான் அவருக்குக் கோபம் வரும் ஊரார்க்கு அவர் கனி.

“இந்தா கனி பையினி காச நீயே வச்சுக்கோ, கருப்பட்டி காய்ச்சிறதுக்கு மாலைப் பையினி வாங்கிட்டு வந்துரு” என அவந்திகை சொல்ல,

“பைசா வேண்டாம்ட்டி அவி, என் பேரை பிள்ளைகள் வந்திட்டுனா புஸ்தகமும் பென்சிலும் கொடுட்டி அவி போதும்” எனப் புன்னகைத்தார் பால் கனி.

“அதெல்லாம் நான் பார்த்துகிடுதேன் கனி பாட்டி, நீ இதை வச்சுக்க” என அவள் புன்னகைக்க,

“யாரை பாத்துட்டி பாட்டி சொல்லுத, நான் அரசிளங்குமாரிட்டி”

“சரி கனி குமரி” எனப் பல்லைக்காட்டிய அவந்திகையின் முகம் சட்டெனக் கோபத்தை த்த்தெடுத்தது. அதற்குக் காரணம் அவள் கைப்பேசி இசைந்து தன் இருப்பைக் காட்ட அதில் ஒளிர்ந்த அவனின் பெயரை பாரத்ததும் கோபம் அடைந்த அவந்திகையின் முகத்தைப் பார்த்தே கணித்துவிட்டார் பால்கனி அவந்திகையின் மனதை.

“கொடம்ட்டி நான் பேசுதேன், பச்சைய தான அமுக்கனும்” என வெள்ளந்தியாய் கேட்ட பால்கனியிடம் ஆம் எனத் தலையசைத்தாள், பைங்கிளி அவந்திகை. தட்டு தடுமாறி அழைப்பை ஏற்று மௌனமாய்க் காதில் வைத்தார் பால்கனி,

“அவி செல்லம்” மறுமுனையில் ஆணின் குரல்

“ஆஆஆஆ” பதில் கொடுத்தார் பால்கனி,

“கடைக்கி போய்ட்டியோட்டி செல்லம்”

“ஆஆஆஆ” இந்த முறை ராகத்தோடு பதில் கொடுத்தார்.

“என்னட்டி ஆஆஆ சொல்லுத பதிலச் சொல்லாம்ட்டி”

“மண்ணு நீ தானா டே.?” பால்கனி கேட்க,

“ஏய் கிழவி நீயா, வந்தேன்னு வையி கொண்டை முடிய அறுத்துருவேன் பார்த்துக்க, அவிக்கிட்ட கொடான்” ஆவேசத்தோடு கத்தினான் மன்னராசா.

“நீ ஏம்டே கொண்டை முடி அறுக்கணும், இந்தப் பால்கனி முடியில தான் உமக்கு ஆசைன்னா.? நான் அவுத்து கொட்டுத்தரன்டே” என நக்கலாய் பால்கனி சிரிக்க,

“கிழவி அவக்கிட்ட கொடு நான் பேசதனும், சாமான் வாங்க அம்பைக்கி வந்திருக்கேன்”

“உனக்கு என்ன சந்தேகம் சொல்லாம்ட்டே நான் தீர்த்து வைக்குதேன்” இன்னும் பலமாய் ஒலித்தது பால்கனியின் குரல்,

“நான் அவிக்கிட்ட சொல்லணும்”

“நல்ல போடு டே, இந்தா கொடுக்குதேன் பேசு, அவ நல்லா அறுத்து கிழிப்பா வாங்கிக்கோடே” எனச் சொல்லி கைப்பேசியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார் பால்கனி, அவி தன் பொட்டிக் கடை நோக்கி நடந்தவள் உள்ளே சென்று மரத்திலான நாற்காலியில் அமர்ந்தாள், அவளைச் சுற்றிலும் மாசாலா பாக்கெட்டுகள் சரமாய்த் தொங்கிக் கொண்டிருந்தது, அதோடு சேர்ந்து சுக்குக் காப்பிப் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, இயற்கை சார்ந்த மூலிகை பொடிகள் தொங்கிக் கொண்டிருக்க, இதற்கு நடுவில் அழகு தேவதையாய் அமர்ந்திருந்தாள் நம் நாயகி.

“சொல்லாம் டே, என்ன எலவுக்குப் போன் போட்ட” அவளுடைய பிடித்தமின்மையைக் காட்டிய படி பேச,

“ஏம்ட்டி அவி நீ கொடுத்த தாள்ல கடைசில என்னட்டி எழுதியிருக்க, ஒன்னும் புரியலை” சலிப்பாய்ச் சொன்னான் மன்னராசா.

“சுருட்டு டே, அதைப் படிக்கத் தெரிலையோ, நீ எல்லாம் என்னன்னு பாஸ் ஆனியோ, கூமுட்டை பயலே” என அவள் பேச்சில் நக்கல் வழிந்ததைப் பொறுத்துக் கொள்ளாமல்,

“நீ மட்டும் என்னட்டி கலெக்டர் படிச்சு கிழிச்சிட்டியோ, ஒம்பதாம் பூ பெயிலு, பத்தாவது பாஸ் ஆன, என்னைக் கிண்டல் செய்தீயோ”

“நான் ஒம்பதாப்பூ பெயிலுனாலும் உழைச்சு சாப்பிடுதேன்ல, உன்ன மாதிரி எடுபுடியா சுத்திட்டு திரியலை” அவனுடைய பலகீனத்தில் சரியாய் அடித்தாள் அவள்.

“அதெல்லாம் விடு சுருட்டு யாருக்குட்டி, உன் கடையிலையும் வச்சு விக்க மாட்ட, மாமாக்கும் இந்தப் பழக்க வழக்கம் இல்லை, அப்போ யாருக்குட்டி உனக்குத் தானா”

“ஆமா டே எனக்குத் தான், மரியாதையா வாங்கிட்டு வா, கடைக்கு ஆள் வந்திட்டு” துரிதமாய் இணைப்பை துண்டித்தாள் அவந்திகை.

“அவி எக்கோய், சிப்ஸ் இருக்கோ” கடையில் அமைந்திருந்த திண்டின் உயரம் கூட இல்லாத சிறுமி எட்டி நின்று கேட்க,

“சிப்ஸலாம் இல்லைட்டி, அக்கா முறுக்கு தரவா”

“முறுக்கு வேண்டாம்க்கா, அம்மைய கூட்டி வருதேன்” எனச் சிட்டாய் பறந்துவிட்டாள் சிறுமி.

நேரம் கொஞ்ச கொஞ்சமாய்க் கடந்து மாலைப்பொழுதை நெருங்கி விட, தங்கையை அழைத்து வர வேண்டும், என்ற எண்ணம் அவளுக்குள் தலைதூக்க, கடையை மூடச் செல்லும் நேரத்தில் சாமான்களை வாங்கி வந்திருந்தான் மன்னராசா,

“எல்லாத்தையும் வீட்டுக்குள்ள வை டே, சக்திய கூட்டிட்டு வந்துடுதேன்” என அவள் சொல்ல,

“அவசியம் இல்லைட்டி நானே கூட்டியாந்திட்டேன்” எனப் பேசியவனின் விழிகளில் அவ்வளவு ஆத்திரம். தன்னவள் திசை மாறி போகிறாளோ என்ற ஆதங்கம் ஒன்று சேர, அவந்திகையை ஆத்திரத்துடன் விழித்தான்.

“வீட்டுக்குள்ள போட்டி அவி..!” முறைத்தபடி சொன்னான் அவன்.

“மாமா, அத்தை.!” என அழைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தான் மன்னராசா.

“அவிய அந்திக்கு வந்திடுதேன்னு சொல்லிட்டு போனாவ மன்ராசா, இன்னும் வர காணோம், என்ன விசயம் டே, நீ மட்டும் வந்திருக்க அம்மையும் அப்பனும் வரலையோ” என்றபடி அடுக்களைக்குள் இருந்து வெளியே வந்தார் ஜெயக்கொடி.

“மாமா வரட்டும் அத்தை விசயம் பேசதணும்” என்றவன் சோபாவில் அமர்ந்தபடி அவந்திகையைப் பார்வையிலே துளைத்தெடுத்திருந்தான்.

அவந்திகை அவனைக் கண்டுகொள்ளாது, தங்கை சிவ சக்தியை தேடிச் சென்றாள்.

வீட்டின் பின்னே இருந்த தோப்பில், மாமரத்தின் அடியில் முழங்காலுக்குள் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதுக்கொண்டிருந்தாள் சிவ சக்தி. பதறிப்போன அவந்திகையோ,

“ஏம்ட்டி அழுதுக்கிட்டு இருக்க, அந்தப் பய சிரசம் பன்னினானோ” தங்கையின் அழுகை கேவலாக மாற, அவந்திகையின் நெஞ்சாங்கூடு படபடத்தது, அய்யோ நடக்கக் கூடாதது எதோ நடந்து விட்டதோ, தங்கையைத் தான் அழைக்கச் செல்லாததால் எதாவது நிகழ்ந்திருக்குமோ, தன்னையைக் குற்றம் சாட்டிக் கொண்டது அவந்திகையின் மனம், விழிகளில் நீர் கோர்க்க.,

“என்னட்டி ஆச்சு, சொல்லாம்ட்டி, எதுக்கு அழுவுதடி” என அவள் கேட்ட பொழுதில் கண்ணிமைகள் தடுத்துக்கொண்டிருந்த நீர் துளிகள் கரை புரண்டோடியது.

“எக்கோய் நான் சாவ போறேன்க்கா” நிமிரந்து பார்த்தவள் அழுதபடி சொல்ல,

“ஏம்ட்டி அப்படிச் சொல்லுத” அவளை அறைய கை ஓங்கிய சமயம்,

“அவிக்கா என்னை அடிச்சிடாதா, எனக்கு எதோ நோய் வந்திட்டு போலக்கா” எனப் புலம்பிக்கொண்டிருந்த தங்கையிடம் என்ன சொல்லி ஆறுதல் சொல்லவதென்று புரியாமல் அவந்திகை விழிக்க., தங்கையின் குருதி படிந்த பாவாடையைப் பார்த்துச் சந்தோசம் கொண்டாள்,

“ஏட்டி சக்தி நீ பெரிய மனுசி ஆயிட்டடி” விழியில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு புன்னகைத்தாள் அவந்திகை. சின்னவளோ ஒன்றும் புரியாது விழிக்க,

“எம்மோய் செத்த வளவுக்கு வாங்களேன்” கத்தி தன் அன்னையை அழைத்தாள் அவந்திகை, அவள் குரலில் அவ்வளவு உற்சாகம், இருக்காதா பின்ன தங்கை பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள் ஆனால் இன்னும் பெண்மையை அடையவில்லை என்ற பயம் அவளுக்கும் இருக்கத் தான் செய்தது, கிராம பகுதியை பொருத்தமாட்டில் இதெல்லாம் புரளியாகப் பேசப்படும் விசயம், இவை அனைத்தும் தங்கையின் காதில் சேராதவாறு பார்த்துக்கொண்டாள் அவந்திகை.

“ஏம்ட்டி அவி அலறுத, இவ ஏன் அழுதிட்டு குத்த வைச்சிருக்கா.?” திட்டிய படி கேட்டார் ஜெயக்கொடி.

“எம்மோய் உன் மக குத்த வைச்சுட்டா, அதான் குத்த வைச்சிருக்கா” என அவந்திகை சொல்ல

“என்னட்டி ஒலருத.?”

“சக்தி பெரிய மனுசி ஆகிட்டாம்மா” இதழ்மலர்ந்து சொன்னாள் அவந்திகை.,

“என் தாயி வயசுக்கு வந்துட்டியோட்டி, நான் வேண்டாத தெய்வம் இல்லையே, என் சாமி கருணை காட்டிருச்சு” எனப் பேசியவர் மகளின் கன்னத்தை வாஞ்சையோடு தடவிக்கொடுக்க, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியாது விழித்தாள் சின்னவள். அதே சமயம் வீட்டின் பின் புறம் மன்னராசா வந்துவிட.

“ஏலே சின்னவ வயசுக்கு வந்துட்டா, ஆம்பிளைங்க கண்ணுல முழிக்கக் கூடாது, பிறத்தால வராத டே” எனக் கடிந்தார் ஜெயக்கொடி அவர் சொன்னதைக்கேட்டு தலைக் குணிந்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றான் மன்னராசா.

அதன்பின் தங்கைக்கு வெந்நீர் வைத்துக்கொடுத்துக் குளிக்கச் சொன்னாள் அவந்திகை, தங்கைக்குத் தேவையான விசயங்களைச் சொல்லி, தெளிவில்லாமல் நின்றிருந்தவளுக்குப் புரியவைத்தாள், அவளின் தாவணியை எடுத்து கட்டிவிட்டவள். வீட்டின் ஒரு மூலையில் தங்கையை அமரச் செய்து அவள் முன் உலக்கையைப் போட்டாள்,

“இந்தா பாருட்டி சக்தி இனி மாச மாசம் இப்படி நடக்கும், இதுக்கு நீ பயப்படத் தேவையில்லை சரியா” எனச் சொல்லிவிட்டு அமர்ந்த அவந்திகையை, மெய்ச்சுதலோடு பார்த்தார் ஜெயக்கொடி.

“எம்மோய் நாளைக்கு ஓலை கொண்டு வரச் சொல்லிக்கலாம் கருக்கல் ஆயிட்டுல” எனத் தாய் புறம் திரும்பி அவந்திகை கேட்க,

“இதெல்லாம் தாய் மாமன் செய்ய வேண்டியதுட்டி, உங்களுக்குத் தாய் மாமா இருந்தும் இல்லாமா போயிட்டாரே, என் பிள்ளைங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யலையே, அப்படி என்னத்த கோபம் மனுசங்களுக்கு” ஜெயக்கொடி புலம்பினார்.

“எம்மோய் விடேன்,நான் வயசுக்கு வந்தப்பயும் இப்படித் தான் புலம்பி தள்ளின்ன, சக்திக்கு நான் செய்யுதேன்மா சீர்” அவந்திகை தாய்க்கு தைரியமூட்ட,

“ஏட்டி அவி அப்ப நாங்கலாம் எதுக்கு இருக்குதோம்” என்ற குரல் வந்த திசையைப் பார்த்தாள் அவந்திகை, அவளின் பார்வை குத்தி நின்ற இடத்தில் பார்வதி – ராஜபூபதி தம்பதிகள் நிற்க, அவர்களுடனே மன்னராசாவும் வந்து நின்றதே, தகவலை இவன் தான் சொல்லியிருப்பான் என அனுமானித்தாள் அவந்திகை,

“எத்தை வாங்க,மாமா வாங்க, காப்பித் தண்ணி குடிக்கிறியளா.?” பணிவாய் கேட்டாள் அவந்திகை.,

“என் மருமவன்னா மருமவதான், என்ன ஆசையா கேக்குதா பார்த்தியளா மைனி” எனச் சொன்னவர் “வயசுக்கு வந்த பிள்ளை தலையில பூ இல்லைமால இருப்பட்டி” எனத் தன் புறம் வலுக்கட்டயமாக இழுத்துத் தொடுத்திருந்த மல்லிச் சரத்தை அவந்திகைக்குச் சூடிவிட்டவர்,

“வாயேன்ட்டி சின்ன மருமகளே, நீயும் பூ வச்சிக்க” என அவளுக்குப் பூவைச் சூடிவிட்டார் பார்வதி.

“என்ன மைனி உங்க அண்ணன் சடங்கு சம்பிரதாயம் செய்ய இல்லையேனு வருத்தபடுதியளோ, வருத்தபட்டு என்ன செய்ய, உங்களுக்கும் என் அண்ணனுக்கும் கல்யாணம் ஆன நாளுல இருந்து இப்படிதான, உங்களைக் கெட்டி கொடுத்ததோட சரி, பிறவு இங்க எட்டி பாத்திருப்பாவளா.? ஏன் மருமகளுக்கு நான் சீர் செய்ய மாட்டேனோ” எனப் பார்வதி சொல்ல, பார்வதியின் கணவர் ராஜபூபதி அமைதியாய் நிற்க,

“என்னங்க மைனிகிட்ட சொல்லுங்க, சிலை மாதிரில நிக்குறீய” என அதட்டிய அதட்டலில்,

“எம்மா செயக்கொடி பிள்ளைக்கு நாங்க, சீர் சனத்தி செய்யுதோம்மா கவலைபடாத” ஆறுதலாய் சொன்னார் ராஜபூபதி. மௌனமாய்த் தலையசைத்தார் ஜெயக்கொடி.

“என்ன மைனி மூணாவது நாள் கூட்டி இருத்தி சடங்கை கழிச்சிரலாமா.?”

“உங்க அண்ணன் வந்துகிடட்டும் பார்வதி பேசிகிடலாம்” எனப் பதிலுரைத்தார் ஜெயக்கொடி.

“என்ன தான் எங்க அண்ணன் தலையாரியா இருந்தாலும், முக்கிய முடிவெல்லாம் நீங்க தான் எடுப்பியன்னு தெரியும் மைனி” மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே ஒன்றாய் பேச, அதற்குப் பதில் சொல்லி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ள, அவர் என்ன பழைய ஜெயக்கொடியா.? ஜெயக்கொடிக்கும், முத்து வேல்க்கும் திருமணம் ஆன புதிதில் பல பிரச்சனைகளுக்குத் துவக்க புள்ளியாய் இருந்தென்னவோ பார்வதி தான், அண்ணி வந்த பின் அண்ணன் மாறிவிட்டான் என்று தொடங்கி, அவளால் முடிந்த பிரச்சனைகளை ஜெயக்கொடிக்கு கொடுத்துக்கொண்டிருந்தாள், அவளின் திருமணம் இது தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

“எம்மா பார்வதி எப்ப வந்தீய.? ஏட்டி ஜெய வந்திருக்கவியளுக்குக் காப்பித் தண்ணி கொடு” என மனைவிபுறம் திரும்பி சொன்னவர்,

“வாங்க மாப்பிளை, சொகமா இருக்கியளா.? அவிமா மாமானுக்குச் சேர் எடுத்து போடாம்ட்டி” எனச் சொல்லி திரும்பத் தன் சின்ன மகள் வீட்டின் மூலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தே கணித்துவிட்டார், மகள் பெரிய மனுசி ஆகியிருப்பதை.

“நான் சொகமா இருக்கேன் மச்சான் நீங்க எப்படி இருக்குதீய, வேலை வெட்டிலாம் எப்படிப் போவுது” என ராஜபூபதி கேட்க,

“ஆஹா அதெல்லாம் நல்லதான் போவுது”

“அண்ணன் பார்தியளா.? சக்தி பெரியவளாகிட்டா, அடுத்து என்ன கலியாணம் தான்” எனப் பார்வதி பேசிக்கொண்டிருக்க, ஜெயக்கொடி அனைவருக்கும் காபி கலந்து கொண்டு வந்துக்கொடுத்தார், அதே சமயம் தன் மாமனுக்கு நாற்காலியை எடுத்து அவந்திகை கொடுக்க,

“இருக்கட்டும் தாயி பராவாயில்லை” என்றார் ராஜபூபதி

“இதுல இருங்க மாமா” எனத் தன் மாமனை அமர்த்திவிட்டு அன்னையிடமிருந்து காபியை வாங்கி அவர் கைகளில் திணித்தவள், மன்னராசாவிடம் காபியை நீட்ட,

“எனக்கெல்லாம் சேர் போடமாட்டியோட்டி” நக்கலாய் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தான் மன்னராசா.

“காப்பிய வாங்குதீயா மூஞ்சில ஊத்தவா.?” அவந்திகை கோபமாய்ப் பதிலுரைக்க,

“எங்க ஊத்தாம்ட்டி பார்ப்போம்” அவளை மீண்டும் வம்பிழுத்தான் அவன்

“எங்கிட்ட வம்பு பண்ணுதீயோ இழுத்து வச்சு அறுத்துருவேன் டே, காபியை வாங்கு டே” அவள் விட்ட அதட்டலில் பவ்யமாய்க் காபியை வாங்கிக் கொண்டு வாசல் நோக்கி நடந்தவன் வெளியில் இருந்த திண்ணையில் போய் அமர்ந்துக்கொண்டான், அவன் திண்ணையில் இருந்து காபி பருகுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவசக்தி, அவளின் என்ன ஓட்டத்தை அவளால் தடுக்கவே முடியவில்லை, இதுவரை அவளுக்குள் இப்படி ஒரு எண்ணம் எழுந்ததே இல்லை அந்தச் சம்பவம் நடக்கும் வரை இவனைப் பொருட்டாகக் கூட மதிக்காத சிவசக்தியின் மனதில் மெல்ல அச்சாரமிட்டிருந்தான் மன்னராசா.

பள்ளி முடிந்து அவந்திகை வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தாள் சிவசக்தி, ஆனால்அவந்திகை வரவில்லை நடந்தே பாதி வழி செல்லலாம் அதற்குள் அக்கா வந்து விடுவாள் என்ற நினைப்பில், நடை பயற்சி செல்வது போல் நடக்கலானாள்,

“ஏட்டி சக்தி” என்ற குரல் கேட்டு உடல் வெடவெடத்து போனாள், அது அவனே தான், அவளிடம் பிரச்சனை செய்தவன் தான், மனதில் கடவுளை வேண்டிக்கொண்டவள் விறுவிறுவென நடக்க, அவள் குறுக்கே வந்து கை மறித்தான்,

“என்ன டே என் பேரை சொல்லி கூப்பிடுத, செருப்பு பிஞ்சிரும் டே” மிரட்டலாய் சக்தி சொல்ல,

“சக்தி உங்க அக்காவ கூட்டிட்டு வந்து மிரட்டிட்டா பயந்துருவேனோ.? இனி தாம்ட்டி உனக்கு இருக்கு” மிரட்டல் தொனியில் அவனும் சொல்ல,

“இங்க பாருலே பேசிட்டே இருக்க மாட்டேன் செருப்ப கழட்டி அடிச்சிருவேன், உன் கூட்டு பயலுவல கூட்டிட்டு வந்தா பயந்திடுவேனோ.? இன்னக்கி நீ செத்தல” எனத் தைரியமாய் அவள் பேசினாலும், உடல் வெடவெடத்தது, இதயம் படப் படவென அடித்துக்கொண்டிருக்க

‘அவிக்கா சீக்கிரம் வாயேன்ட்டி’ என மனதில் வேண்டுதலிட, மன்னராசா அங்கே நின்றிருந்தான்.

“சக்தி என்னட்டி, அவி உன்னைக் கூப்பிட வரலையோ..?” அவனைக் கண்ட பின் நிம்மதி பெருமூச்சு விட்டாள் சக்தி.

“அத்தான் இந்தப் பயலுவ வம்பிழுக்குறானுவ” எனச் சொன்னவள் அவன் பின்னே ஒழிந்துக்கொண்டு, அவன் சட்டையை இறுக பற்றிக்கொண்டாள்.

“எவன்டே அது என் மாமா பொண்ண வம்பிழுக்குறது” என்ற ஒரு அதட்டலில் தலைதெறிக்க ஒடினார்கள் அவனும் அவனின் கூட்டாளிகளும், அத்தை மகன் என்பதற்குள் இத்தனை அர்த்தம் இருக்கிறதா என உணர்ந்தாள் சிவசக்தி, அவனின் ஒற்றை அதட்டலுக்கே இத்தனை சக்தி இருக்கிறதா.? மாமன் மகள் என்று அவன் உரிமையாய் சொன்னதே அவள் மனதில் அவன் மீதான அன்பு துளிர்க்க காரணமாய் இருந்தது, அவன் கொடுத்த பாதுகாப்பான உணர்வும், அவனின் வீச்சருவா பார்வையிலே சமைந்துவிட்டாள்.

அவன் பார்த்ததுமே

நான் பூத்து விட்டேன்..!

அந்த ஒரு நொடியை நெஞ்சில்

ஒளித்து வைத்தேன்.!

நான் குழந்தை

என்று நேத்து நினைத்திருந்தேன்.!

அவன் கண்களிலே என்

வயதறிந்தேன்.!

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்