
அகம் 15
பரபரப்பான சென்னை மாநகரம், அபிஷேக்க்கின் வீட்டின் முன் தான் அனைத்து மீடியாக்களும் நின்றிருந்தது, லேகாவோ முகத்தைத் துப்பட்டாவால் மறைத்தபடி காவல் வாகனத்தில் ஏறிக்கொண்டிருந்தாள்.அவளை தொடர்ந்து அபிஷேக் கைகுட்டையால் முகத்தை மறைத்தபடி, அதே வாகனத்தில் ஏறினான்.
“லேகா எல்லாமே உன்னால தான், உன் எக்ஸை பழி வாங்குறேன்னு என் சாம்ராஜியத்தையே அழிச்சிட்ட, என் பணத்துக்காகத் தான என்னைக் கல்யாணம் பண்ணின” அபிஷேக் கோபமாய்க் கத்தினான்.
“அபி ஜெஸ்ட் லிசன், இதெல்லாம் ஒரு விசயமே இல்லை, இதுல இருந்து ஈசியா வெளிய வந்திறலாம்” என லேகா சொல்ல,
“வெளிய வந்து என்ன செய்யப் போற பிச்சை எடுக்கப் போறியா.? ப்ளடி ஷிட்” சினம் கொண்டு கத்தினான் அபிஷேக்க், அவன் கத்தியதில் அமைதியானாள் லேகா.
அனைத்தும் லேகாவால் தான். அகத்தினியனை பழி வாங்குவதாய் எண்ணி, அவந்திகையின் அங்காடி பொருள்களைப் போலவே போலியான பொருள்களை, சந்தைபடுத்த முயன்றதால் நடந்த விபரீதத்தில் தான் மாட்டிக்கொண்டாள். இந்த விசயம் இவ்வளவு பத்திரிக்கை அளவுக்குப் பெரிதாவதற்குக் காரணமும் அவள் தான், ஏன்னென்றால் லேகா ஒரு மாடல் அழகி என்பதால், பத்திரிக்கை, மீடியாவிற்கு இது பெரும் தீணியாய் அமைந்ததோடு, அவந்திகைகயின் பொருள்களை உலகம் அறிய வைத்த பொருமை லேகாவையே சாரும், இனி அவந்திகையின் பொருள்கள் உலகளவில் கிடைக்கும் வண்ணம் வலைதளம் மூலம் விற்கும் உரிமையோடு, அந்தப் பொருள்களுக்கான காப்புரிமையும் பெற்றுத் தந்திருந்தான் அகன்.
அகனின் அன்பில் அவந்திகை பூரித்துப் போனாலும், கோவிலும் கட்டியாகியது, வீடும் கட்டி முடித்தாயிற்று, இரண்டு ஊர்காரர்களும் சாமியின் பெயரை கண்டுபிடிப்பதில் மும்மரமாய் இருந்தனர். ஆனால் காவல்காரியின் பெயரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
அதே சமயம் சிவசக்தி பள்ளி முடிந்து அழுதபடி நடந்து வந்துக்கொண்டிருந்தாள். அவளின் விழிகளில் இருந்து உவர் நீர் வழிந்துக்கொண்டே இருந்தது,அந்த வழியில் வந்துக்கொண்டிருந்தான் மன்னராசா. சிவசக்தியை பார்த்துப் பாராதது போல், தன் வாகனத்தை ஓட்டி சென்றவனின், வாகன கண்ணாடியில் சக்தி அழுதபடி வருவது தெரிய, பட்டென நிறுத்தியிருந்தான்.
“ஏட்டி சக்தி.!” அவனழைக்கக் கேளாதது போல் அவனைக் கடந்து சென்றாள் சக்தி.
“ஏய் சக்தி இந்தாட்டி நில்லு” எனச் சொல்லிக்கொண்டே பைக்கில் இருந்து இறங்கியவன் தள்ளிக்கொண்டே அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.
“ஏய் சக்தி பேசமாட்டியோ.?”
“ஆமா நீங்க யாரு.?” எனக் கண்ணீரை துடைத்தபடி கேட்டாள் சக்தி.
“ஏய் என்னட்டி அத்தான்கிட்டையே விளையாடுதியோ.?” சிரித்தான் மன்ராசா.
“ஓ நீங்க எனக்கு அத்தான்ல,மறந்திட்டு பார்த்துகிடுக, பேசினா தான நெனைப்பு இருக்கும்” என அவள் கோபமாய்ப் பேசி முடிக்க.,
“ஏம்ட்டி சக்தி அது தான் விசயமா.? உன் படிப்பு கெட்டுட கூடாதுன்னு தான் உன்கிட்ட பேசாம இருந்தேன் பார்த்துக்க,உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லைட்டி” அவள் மௌனமாய் நடந்துக்கொண்டிருந்தாள், அவளின் முகச் சுணக்கத்தைக் கண்டு கொண்டவன்.
“ஏம்ட்டி சக்தி எதுவும் பிரச்சனையா.?”
“எனக்கு என்ன பிரச்சனைன்னா உங்களுக்கென்ன அ.!” அத்தான் எனச் சொல்ல வந்தவள் நாக்கை கடித்துக்கொண்டாள்.
“என்ன பயலுவ தொந்தரவு கொடுக்குதானுவளோ.?” அக்கறையாய் அவன் கேட்க.,
“அதெல்லாம் நானே சமாளிச்சிகிடுவேன், இது வேற பிரச்சனை” அவள் எதோ சொல்ல வந்து மீண்டும் நிறுத்தினாள்.
“என்கிட்ட சொல்லமாட்டியோ.?சரி நான் கிளம்புதேன் அழுதுக்கிட்டே வீடு வந்து சேரு” என அவன் நகைத்தாலும், இத்தனை நாள் பேசாது போக்கு காட்டியவன் இன்று பேசியதே சக்திக்குள் மகிழ்வை தர விசயத்தைச் சொல்லலானாள்.
“அது வந்து அத்தான், எங்க பள்ளிகொடத்துல கபடி போட்டியில கலந்துகிட்டேன், இப்போ ஸ்டேட் லெவல்லா போட்டி நடக்குது,அதுக்கு நான் செலக்ட் ஆகிருக்கேன், ஆனா வீட்ல சொன்ன மெட்ராஸூக்கு விடமாட்டாவ, நான் போகலைனா எனக்குப் பதிலா இன்னொரு பிள்ளைய கூட்டிட்டு போயிருவாவ அத்தான்” என வருத்ததுடன் தெரிவித்தாள்.
“அவிக்கிட்ட சொன்னியாட்டி.?” மன்னராசா கேட்டான்.
“அக்கா திட்டுவான்னு பயந்து சொல்லல”
“அவி ஏம்ட்டி உன்ன திட்ட போறா.? வா நான் வீட்டுல சொல்லி சென்னைக்கு அனுப்பி வைக்குதேன்” என அவள் சொல்ல அகம் மகிழ்ந்தாள் சிவசக்தி.
“நிசமாத்தான் சொல்லுறியளா அத்தான்” ஆர்வமாய் அவளின் முகம் பார்த்தாள்.
“பொட்டை பிள்ளைலேல் எதாவது சாதிக்கணும்ல, அவி தனியா ஒரு தொழிலை நடத்தி சாதிச்சு காமிச்சிட்டா, அவளை மாதிரி உன் திறமைய காட்டு, பெத்தவிய சம்மதிச்சி தான ஆவணும்” அவன் அவளுக்கு ஆறுதலான வார்த்தைகளைப் பேச,
“அப்பா சம்மதிச்சாலும் அம்மா சம்மதிக்க மாட்டாவ அத்தான்” என வருத்துடன் கூறினாள்.
“அம்புட்டு தானா, இந்த அத்தான் எதுக்கு இருக்கேன், வண்டில ஏறு வீட்டுக்கு போவோம் சம்மதத்தை வாங்குவோம்” என அவளைத் தன்னுடைய பைக்கில் அழைந்து வந்தான். வீடு வந்து சேர்ந்த மன்னராசாவை பாரத்தவுடன் கோபத்துடன் தன் அங்காடியில் இருந்து வெளியே வந்தாள் அவந்திகை.
“உன் கிட்ட என்ன லே சொல்லிதுக்கேன், அவ படிப்பை முடிக்குத வரை அவக்கிட்ட பேசாதன்னு சொல்லிருக்கேன்ல, என்னத்துக்கு ஜோடி போட்டு அவளைக் கூட்டிட்டு வந்திருக்க” கோபமாய் அவந்திகை சாட, அக்கா சொல்லி தான் இத்தனை நாள் மன்னராசா தன்னுடன் பேசாமால் இருந்திருக்கிறான் என எண்ணிக்கொண்ட சக்தி மௌனித்தாள்.
“ஏய் இல்லைட்டி அவி, ஒரு சந்தோசமான விசயம்ட்டி, வீட்டுல யாரெல்லாம் இருக்காவ.?” ஆர்வமாய்க் கேட்டான்.
“அகன் வீட்டுல எல்லாரும் புதுவீட்டை பார்க்க போயிருக்காவ, அம்மையும் ,அப்பாவும் உள்ள தான் இருக்காவ, அத்தையும், மாமனும் உள்ள தான் இருக்குதாவ” என அவந்திகை சொல்லி முடிக்க,
“சரி கடைய சாத்திட்டு வீட்டுக்குள்ள வாட்டி” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்தான் மன்னராசா. அவந்திகையோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல், பால்கனியை கடையைப் பார்த்துக்கொள்ளும்படி கேட்டவள், வீட்டிற்குள் நுழைந்தாள்.
ஹாலில் இருந்த சோபாவில் முத்துவேல் அமர்ந்திருக்க, பார்வதியும் ராஜபூபதியும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர், ஜெயக்கொடி அடுக்களையில் இருந்து வெளியே வந்தார். அந்தச் சமயம் பார்த்து மன்னராசா, சிவசக்தி,அவந்திகை மூவரும் வீட்டுனுள் நுழைந்தனர்.
“மாமா நான் உங்க கிட்ட ஒரு விசயம் பேசதணும்” பேச்சு வார்த்தையைத் துவங்கினான் மன்னராசா.
“என்ன மன்ராசா.? முக்கியமான சமாச்சாராமோ.?” மன்னராசாவை பார்த்து முத்துவேல் கேட்க,
“சக்தி நீயே சொல்லுதியா.? நான் சொல்லட்டுமா.?” அவனின் அதட்டலிலும், தந்தையை எதிரில் பார்த்து பயந்தபடி கையைப் பிசைந்து கொண்டு நிற்க, அவந்திகைக்கு உலகமே இருண்டு விடும் போலிருந்தது, சக்தி காதலிப்பதை மன்னராசாவிடம் சொல்லியிருப்பளோ,என்ற பயம் மேலோங்க,
“அதெல்லாம் பிறவு பேசிக்கிடலாம் மன்ராசா” அவந்திகை திசைதிருப்ப முயன்றாள்.
“இப்போ நான் இந்த விசயத்தைச் சொல்லலைன்னா, பின்னாடி நீயே வருத்தபடுவ அவி, அவ சொல்லமாட்டா நானே சொல்லுதேன்” என்றவன் முத்துவேல்புறம் திரும்பி.
“மாமா சக்தி கபடி விளையாட்டுல, மாவட்ட அளவுல விளையாடியதுக்கு அவிய பள்ளிகொடத்துல அவளைத் தேர்ந்தெடுத்திருக்காவ”
“அதுக்கு என்ன செய்யணும்.?” கோபமாய் விழுந்தது முத்துவேலின் வார்த்தைகள். தந்தையின் கடுமையான முகத்தைப் பார்த்து பயந்து போய் அவந்திகையின் பின் ஒளிந்துக்கொண்டாள் சிவசக்தி. ஆனால் அவந்திகையோ மன்னராசாவையும், சிவசக்தியையும் நினைத்து பெருமைக்கொண்டாள், ஒரு நிமிடம் அவர்களைத் தவறாய் நினைத்ததை எண்ணி வருத்தமும் கொண்டாள். பின்னே நின்றிருந்த தங்கையின் கை பிடித்துத் தைரியமூட்டியவள்.,
“அப்பா சக்தி போயிட்டு வரட்டும்” அவந்திகை சக்தியின் பக்கம் நிற்க,
“பொட்டபுள்ளைய அவ்வளவு தூரமெல்லாம் அனுப்ப முடியாதுட்டி, என்னை விளையாடிட்டு இருக்கியளா.? எல்லாரும், அதுவும் அரைக்கால் டரவுசர் போட்டுகிட்டு ஆம்பளை புள்ளைய விளையாடுத விளையாட்டை விளையாடணுமா.” எனக் கண்டிப்புடன் பேசினார் ஜெயக்கொடி.
“செயா விடு போயிட்டு வரட்டும்” என ஒரக் குரலாய் பார்வதியும் ராஜபூபதியும் பரிந்துரைக்க, முத்துவேலுக்கும்,ஜெயக்கொடிக்கும் மனமே இல்லை.
“எம்மா அவ பரிசு வாங்கிட்டு வந்தா உனக்குப் பெருமையில்லையா.?”
“ஆனா அவிம்மா.?” கேள்வி தாங்கிய முகத்துடன் முத்துவேல் அவந்திகையைப் பார்க்க.,
“எப்பா.! அவ இயல்பாவே பயந்த சுபாவம் உடையவ, என்ன மாதிரி பட்டு பட்டுன்னு பேசிகிட மாட்ட, அழுது கரைய மட்டும் தான் தெரியும் அவளுக்கு, இப்படி நாலு இடங்களுக்குப் போய் மனுச மக்க கூடப் பழகினா தான் தைரியம் வரும் அவளுக்கு, இந்த வீட்டுகுள்ளையே அவள அடச்சுராதியப்பா” கெஞ்சலாய் முடித்தாள் அவந்திகை.
“ஊர் உலகம் என்னட்டி பேசும்.? மகளை எப்படி வளர்த்து விட்டிருக்கான்னு, என் வளர்ப்பை பத்தி தப்பும் தவறுமா பேசாது” ஜெயக்கொடி கேட்க,
“ஏன்ம்மா இப்படிப் பேசுத.? நான் அங்காடி வைக்கதுக்கு எனக்குக் கொடுத்த வாய்ப்பு மாதிரி அவளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்காளன்ம்மா.?”
“இவளை இந்த மாதிரி விளையாட்டுகெல்லாம் அனுப்பினா, எவன்ட்டி கட்டிக்குவான்.? ஆம்பிளை பிள்ளை மாதிரி வளர்த்திருக்கான்னு, எவனும் கெட்டிக்க வரமாட்டான்ட்டி” எனப் பயத்தில் ஜெயக்கொடி சொன்ன மறுநொடி.
“நான் கட்டிகிடுதேன் அத்தை” என மன்னராசா மொழிந்துவிட, ஒரு நிமிட நிசப்தம் வரவேற்பரை முழுவதும் நிலவ, மன்னராசவையே அனைவரும் அதிர்வுடன் பாரத்திருந்தனர்
“உங்களுக்கு அவ கல்யாணம் தான் பிரச்சனைனா, நான் கட்டிகிடுதேன் அத்தை, அவ நல்லா படிச்சு, நல்லா விளையாடி, அவளுக்காகப் பேசின மன்ராசா அத்தானுக்குப் பெருமை தேடி தரட்டும் நான் கட்டிகிடுதேன்” என மன்னராசா மீண்டும் அதையே சொல்ல, சக்தியின் விழிகளில் சந்தோச கண்ணீர் எட்டி பார்த்தது. அவந்திகையும் சந்தோசமே கொண்டாள், சக்தியை கட்டிக்கொள்ளச் சொல்லி கேட்டதே அவந்திகை தானே.
ஆனால் பெரியவர்கள் நால்வரும் அதிர்வில் நிற்க,
“மாமா.!” என மன்னராசா அழைக்க நடப்புக்கு வந்த முத்துவேல். அதுவரை வாடே, போலே, என அழைத்துக்கொண்டிருந்தவர்.
“நீ சொன்னா சரிதான்யா மன்ராசா” என முத்துவேல் சொல்ல, வீடே மகிழ்ச்சியில் களைக்கட்டியது. பார்வதிக்கும், ராஜபூபதிக்கும், சந்தோசம் தான், ஜெயக்கொடி மட்டும் கையைப் பிசைந்துக்கொண்டு நின்றிருந்தார்.
“என்னம்மா யோசிக்குத”
“ஏட்டி அவி அவ சின்னைபிள்ளைட்டி, இப்போவே கலியாணத்தைப் பத்தி பேசி, அவ மனசுல ஆசை வந்து, படிப்புல கோட்டை விட்டுட்டா.? என்னடி பண்ணுறது” வெள்ளந்தியாய் கேட்டார் ஜெயக்கொடி.
“எத்தை நான் சொன்னதும் உங்க பொண்ண கட்டி தூக்கிட்டு போயிட மாட்டேன், சக்தி நல்லா படிப்பா அத்தை, அதுவரைக்கும் அவ முகத்துல கூட நான் முழிக்கமாட்டேன்” என மன்னராசா வாக்கு கொடுக்க, அதன் பின் சக்தி கபடி விளையாட செல்ல சம்மதித்தார் ஜெயக்கொடி. மறுநாளே கபடி போட்டிக்ககாக சக்தி கிளம்பி சென்றுவிட்டாள்.
**********
மதிய நேரத்தில் உணவை உண்டு விட்டு தன் அறையில் விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவந்திகை, அவளெதிரே மடிக்கணிணியில் முழ்கியிருந்தான் அகன்.
“ஹேய் அவந்தி.! என்ன யோசனை.?”
“இல்ல அகன் இந்தச் சாமி பேரு என்னவாதான் இருக்கும்”
“நீ தான் பால்கனி பாட்டிக்கு தெரியும் சொன்ன, பாட்டி சொல்லலையா,?”
“பாட்டி என்னத்த சொல்லுச்சு, குடும்பத்துல யாருக்காவது சாமி பேரை ஒட்டி வச்சிருக்காவளன்னு பாருட்டி, எப்படியும் வைக்கமா இருக்க மாட்டவன்னு சொல்லுச்சு, அதான் எல்லோரோட பேரையும் யோசிச்சிட்டு இருக்குதேன்” என அவந்திகை மொழிய,
“வாவ் இன்டரஸ்டிங் அவந்தி” எனச் சொல்லியவன் ஆர்வமானான்.
“நான் யோசிச்ச வரைக்கும் சக்தி பேரும், பார்வதி அத்தை பேரும், காயத்ரி அத்தை பேரும் தான் சாமி பேருன்னு நினைக்குதேன், இதுல எது அந்தச் சாமி பேருன்னு விளங்கலை” அவள் முயன்றும் கண்டுபிடிக்க முடியாததை நினைத்து வருந்தினாள் அவந்திகை.
“அவந்தி நீ ஏன் இப்படி யோசிக்குற? இது ஏன் நம்ம முன்னோர்கள்ல யாரோட பேராவது இருக்கக் கூடாது” என யோசித்துக் கொண்டிருக்க.
“அப்படி இருக்குமா அகன்.?நம்ம குடும்பத்தோட பூர்வீகம் தெரிஞ்சாகணுமே”
“இல்லை அவந்தி நாளைக்கு மாமாகிட்ட கேட்டு பாரப்போம், மாமாக்குத் தெரிஞ்சிருக்கும்” என அவளைத் தேற்றினான்.
“சரி அகன் விடியட்டும் பேசிகிடலாம், எனக்கு உறக்கம் வருது, நான் உறங்குதேன்” எனச் சொல்லியவள்” அவனருகே போர்வையைப் போர்த்திக்கொண்டு ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றிருந்தாள்.
அவனோ அவளருகே அமர்ந்தபடி மடிக்கணிணியில் விக்கிரமசிங்கபுரத்திலிருந்தே சென்னையில் நடக்க வேண்டிய வேலைகளை மடிக்கணிணி மூலம் பார்த்துக்கொண்டிருந்தான்.
****************
விக்கரமசிங்கபுரம்
மன்னராசா வீடு:
“பிறவு மன்னராசா, கிளியை பிடிக்கச் சொன்னா.? கிளியோட தங்கச்சிய பிடிச்சுட்ட” நக்கலாய் கேட்டார் பார்வதி.
“எம்மா.! சோத்தை போடு பசிக்குது, ராத்திரி மணி பத்தாகுது, இன்னும் குழம்பு வைக்கக் காணும், வெறும் சோத்தை எவ்வளவு நேரம் பார்த்திக்கிட்டு இருக்கது” கடுகடுத்தான் மன்னராசா.
“ஏன்ட்டி பார்வதி, பிள்ளை பசியில இருக்குதான்ல குழம்ப ஊத்தி கொடாம்ட்டி” சிடுசிடுத்தார் ராஜபூபதி.
“இப்போதான் சாள மீனை போட்டுதிருகேன் குழம்பு ஒரு கொதி வரட்டுமே” எனப் பார்வதி சொல்ல,
“எம்மோ விளையாடிட்டு இருக்கியோ, காவக்காரி கோயில் விசயமா அங்கேயும் இங்கேயும் ஓடிகிட்டு இருக்குதேன்,மீனை அவிச்சிகிட்டு இருக்கா.? மீன் குழம்ப உன் தலையிலையே அள்ளி தட்டு” எனத் திட்டிவிட்டு வெறும் சோற்றில் தண்ணீரை ஊற்றி முழுவதுமாய் உண்டு முடித்து எழுந்தான்.
“எம்மா இந்தா இதுல ஒரு லட்சம் இருக்குது, இதுல நகை எடுத்து வையி, பார்க்க பார்வையா பெரிய ஆரமா எடுத்து வை”என மன்னராசா பணத்தை நீட்டினான்.
“ஏதுடே இந்தப் பணம், யாருக்கு நகை எடுக்கணும்.?” கேள்வியாய் மன்னராசாவின் முகம் பார்த்தார் பார்வதி.
“இது வீட்டுச் செலவெல்லாம் போக, மிச்சம் இரண்டு மாசத்துல, சக்திக்கு தான் எடுக்கச் சொல்லுதேன்” என மன்னராசா உறைத்த நொடி முகமே மாறியது பார்வதிக்கு.
“என்ன லே சொல்லுத” கோபமாய்ப் பார்த்தார் பார்வதி.
“என்ன சொல்லுதான் வருங்காலப் பொண்டாட்டிக்கு சேர்த்து வைக்குதேன்னு சொல்லுதான், உனக்கு விளங்கலையோ” நக்கலாய் சிரித்தார் ராஜபூபதி.
“சரியா சொன்னியப்பா” தந்தையை மெச்சிக்கொண்டான் மன்னராசா.
“தகப்பனும் பிள்ளையும் சேர்ந்துகிட்டு என்னை உரசி பாக்குதியளா.?” நாசி துடிக்கப் பார்வதி கேட்க,
“மன்ராசா கல்யாணத்துக்குப் பிறவு,மருமகளும் எங்க கூட்டணிக்கு வந்திடுவா, நீ ஒத்தையில நிக்கணும்” மீண்டும் வெறுப்பேற்றினார் ராஜபூபதி.
“ஏலே மன்ராசா அதான் சக்திக்கு அவிய வீட்டுல சீர் செய்வாவ, பிறவு என்னத்துக்கு நகை எடுக்கணும்”
“மாமன் வீட்டுல இருந்து ஒத்தை ரூவா வாங்க மாட்டேன், கல்யாணத்துக்கு வேண்டிய நகையை, என் பொண்டாட்டிக்கு நான் தான் போடுவேன், உனக்கு நகை வேணும்னா உன் வீட்டுகார்கிட்ட கேளு” என்ற மன்னராசாவின் பதிலில் ஆடி போய்விட்டார் பார்வதி.
“என் அண்ணேன் போட்ட நகை அவ்வளத்தையும் உங்க அப்பா குடிச்சே அழிச்சிட்டாருடா” என ராஜபூபதியை முறைக்க.
“பார்வதி உனக்கு நகை தான வேணும் நான் உழைச்சு போடுதேன்” எனச் சொன்னவுடன் பட்டெனச் சிரித்துவிட்டார் பார்வதி.
“அம்மா சிரிச்சிட்டா, இனி சக்திக்கு நகையை வாங்கிக் கொடுத்திருவா” என மன்னராசாவும் சேர்ந்து சிரிக்க.
“உனக்கு இம்புட்டுப் பொறுப்பு வந்ததே போதும்ய்யா, மருமகளுக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொடு” எனச் சம்மதம் தெரிவித்தார் பார்வதி.
************************
நடப்பவை அனைத்தும் நன்மையாய் நடந்துக்கொண்டிருக்க, அவந்திகையின் நித்திரையில் காவல்காரி காட்டிய வழியில் பயணித்துக்கொண்டிருந்த அவந்திகை, நித்திரையில் இருந்தபடி அலற துவங்கினாள்.
“வேண்டாம் .! வேண்டாம் அப்படிச் செய்யாத” என அலறிக்கொண்டு அவள் விழிக்க. அவள் அலறலில் அரண்டு போனான் அகத்தினியன்.

