Loading

 

வீட்டுக்கு வந்தும் மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். வீட்டில் வைத்து பல சம்பிரதாயங்களை முடித்து விட்டு, ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து விட்டனர்.

சொந்தங்கள் நிறைய இருந்ததால் பேச்சு சத்தம் அடங்கவே இல்லை. மாலைக்குள் பலர் கிளம்பி விட, இரவு வரை சாதனாவும் புவனனும் இருந்து விட்டு கிளம்பினர். நாளை காலையில் தான் அழைக்க வருவர்.

சம்பூர்ணா தன் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றாள். முதலிரவுக்கான அலங்காரம் பெரிதாக இல்லை. மெத்தையில் மலர்களால் லவ் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தனர். அங்காங்கே அழகுக்காக சில விளக்குகள். அறை முழுவதும் வாசனை திரவியத்தில் கமகமவென இருந்தது. அவ்வளவு தான்.

மித்ரனை கண்டு கொள்ளாமல் மெத்தையின் அருகே சென்று பார்த்தாள்.

“லவ்? வாட் அ ஜோக்” என்று நக்கலாக.

“நீ பண்ணுறத விடவா?” என்று மித்ரன் கேட்க, பதில் சொல்லாமல் அந்த மெத்தை விரிப்பை எடுத்து உதறி விட்டாள். அத்தனை மலர் இதழ்களும் காற்றில் பறந்து தரையில் சிதறியது.

மெத்தையில் சில இதழ்கள் விழ அதையும் அகற்றி விட்டு மித்ரனை திரும்பிப் பார்த்தாள்.

“யாரு கண்டு பிடிச்சது ஃபர்ஸ்ட் நைட்ல பூ அலங்காரம் பண்ணனும்னு?” என்று கேட்டவளுக்கு சலிப்பு தான் வந்தது.

“ஒரு வேளை நல்ல ஸ்மெல் இருக்கனும்னு நினைச்சுருப்பாங்க”

“அதுக்கு பர்ஃபியூம் போதாதா?”

“அந்த காலத்துல பர்ஃபியூம் யாரு யூஸ் பண்ணா? ஒன்னு பத்தி.. இல்லனா பூ தான்..”

“இங்க இருக்க பர்ஃபியூமே போதும்.” என்று கடுப்பானவள் பிறகு முகத்தை மாற்றி கையை பின்னால் கட்டிக் கொண்டு, “அடுத்து என்ன? ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடனுமா?” என்று தலைசாய்த்து கேட்டு வைத்தாள்.

மித்ரன் கையை கட்டிக் கொண்டு நக்கலாக பார்த்தான்.

“நீ என்ன முடிவுல இருக்க?”

“நான் வேணும்னா நீ வேணாம்னு சொல்லுவ.. நான் வேணாம்னு நீ வேணும்னு சொல்லுவ.. அதான?’

மித்ரன் ஒரு நொடி அதிர்ந்து பார்த்தான். அவன் நினைப்பதை எப்படித்தான் கண்டு பிடித்து விடுகிறாளோ? ஆனாலும் சமாளித்துக் கொண்டான்.

“அப்படியா? அப்ப நீ என்ன சொல்லப்போற?”

“எனக்கு வேணாம்” என்றாள் கண்கள் மின்ன.

அவன் மீண்டும் அதிர்ந்தான். அவன் வேண்டும் என்று சொல்வான் என்று தெரிந்தும் இப்படி சொல்லி வைக்கிறாளே.

சம்பூர்ணாவுக்கோ அவள் பயந்து பின்வாங்கியதாக இருக்கவே கூடாது. அவன் தான் பின்வாங்க வேண்டும். அது தான் நடந்தது.

மித்ரன் அவசரமாக தனக்கு சாதகமான பதிலை யோசித்து விட்டு சம்மதமாக தலையாட்டினான்.

“நோ சொன்னது பொண்டாட்டியாவே இருந்தாலும் அத மதிக்கனும். நான் உன்னை மாதிரி கிடையாது. பிடிக்காதவன ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு நிக்கிறதுக்கு. சோ எனக்கும் வேணாம்”

சம்பூர்ணா மெச்சுதலாக பார்த்தாள்.

“என்ன ஒரு அறிவுடா.. ஆனா நீ ஒன்னும் பண்ண முடியாது. நடந்த கல்யாணம் நடந்தது தான்.”

“நான் டிவோர்ஸ் கேட்டா?”

“அதுக்கும் ஒரு வருசம் தேவைப்படும். ஆனா நான் சம்மதிப்பேன்னு எதிர்பார்க்காத. இப்ப நான் டிரஸ் சேன்ஜ் பண்ண போறேன். உனக்கும் வேணும்னா மாத்திக்கோ” என்று விட்டு அலமாரியை திறந்தாள்.

மித்ரன் சிதறிக் கிடந்த மலர்களை பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு, “மேடையில இருந்தப்போ வேற பிரச்சனைனு சொன்னியே என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.

“அது உனக்கு தேவையில்லாத விசயம்”

“அதெப்புடி? நீ என் வொயிஃப்.. உன் விசயம் எல்லாமே எனக்கு தேவையானது தான். சொல்லு” என்று போலி அக்கறை காட்டி கேட்க, சம்பூர்ணா அவனை முறைத்து வைத்தாள்.

“அத பத்தி பேச எனக்கு விருப்பமில்ல. இது உனக்காக தான் வாங்கி வச்சாங்க.. பிடிச்சா மாத்திக்க” என்று விட்டு தன் உடையை எடுத்துக் கொண்டாள்.

மித்ரனுக்காக புது உடைகள் இருந்தது.

சம்பூர்ணா நேராக சென்று ஒரு டேபை எடுத்து, “இதுல வீடு டிசைன்ஸ் இருக்கு.. பார்த்துட்டு இரு வந்துடுறேன்” என்று விட்டு உடை மாற்றச் சென்று விட்டாள்.
மித்ரன் அந்த படங்களை பார்க்கும் முன்பு அவனது உடையையும் மாற்றி விட்டு மெத்தையில் அமர்ந்தான். கீழே சிதறிக்கிடந்த பூக்களை பார்க்க கடுப்பாக இருந்தது.

‘டோட்டல் வேஸ்ட்.. ப்ச்ச்.. என்னவோ பண்ணட்டும்’ என்று நினைத்துக் கொண்டு படங்களை பார்த்தான்.

ஒவ்வொரு வீடும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்தது. அதன் விலையை எல்லாம் பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

ஆனால் அத்தனை வீடுகளும் அழகாக இருக்க படங்களை பார்த்துக் கொண்டே இருந்தான். சம்பூர்ணா டீசர்ட்டுக்கு மாறி வெளியே வந்தாள்.

நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் குனிந்து கொண்டான்.

‘நார்மல் டிரஸ்ல இப்படித்தான் இருப்பாளா? ரொம்ப சின்ன பொண்ணா தெரியுறாளே’ என்று நினைத்தவனின் கண்கள் மீண்டும் ஒரு முறை அவளை பார்த்து விட்டுத் திரும்பியது.

தலையில் இருந்த பூக்களை எல்லாம் கழட்டிக் கொண்டே சம்பூர்ணா அவனருகில் வந்து அமர்ந்தாள்.

“எதாவது பிடிச்சதா?”

“நீ இப்படித்தான் வீடு பார்ப்பியா?”

“வேற எப்படி பார்ப்பாங்க?” என்று புரியாமல் கேட்டாள்.

“இது எதுக்கு? வாங்குறதுக்கா?”

“ஆமா.. நீ இங்க இருக்க மாட்ட. என் கிட்ட இருக்க மத்த ரெண்டும் கெஸ்ட் ஹவுஸ் தான்..”

“கெஸ்ட் ஹவுஸா?”

“ஆமா.. க்ளையண்ட் யாராவது வந்தா ஹோட்டல்ஸ் பிடிக்கலனா வீடும் கேட்பாங்க. அவங்களுக்கு விட்டுருவேன். ரெண்டு மூணு வொர்க்கர்ஸோட இருப்பாங்க. ஒன்னு இங்கயும்.. இன்னொன்னு பாண்டிச்சேரிலயும் இருக்கு. ரெண்டுலயும் நாம தங்க முடியாது. இன்னொன்னு கூட இருக்கு. அது பாட்டியோடது. ரென்ட்க்கு விட்டுருக்காங்க. சோ புது வீடே வாங்கிடலாம்னு பார்த்தேன். புதுசா கட்டுன வீடுகள் தான் இதெல்லாம்.. பிடிச்சா ரிஜிஸ்டர் பண்ணிடலாம். பில்டர் தெரிஞ்சவங்க தான். வீடுனா ஓகே.. ஃப்ளாட் எல்லாம் வேணாம். கஷ்டம்.”

மித்ரனுக்கு அவள் பேசப்பேச அவள் வாழும் உலகமே வேறு என்று நன்றாக  புரிந்தது. சாதனா சொன்ன போது கூட நம்பவில்லை. என்ன பெரிய வித்தியாசம் இருந்து விடும் என்று நினைத்தான்.

ஆனால் அங்கே வந்து சம்பூர்ணா இப்படி பேசி வைத்தால்? அவள் சாதாரணமாக தான் பேசுகிறாள். ஆனால் கேட்கும் போது நிச்சயமாக தாழ்வுமனப்பான்மை உண்டாகி விடும்.

தனியாக தங்க வீடு வாங்கும் இவளும், கணவனின் மரியாதைக்காக வாடகைக்கு வேறு வீடு பார்க்க அடம்பிடிக்கும் சாதனாவும் சேர்ந்தால்?

“என்ன மேன்? எதாவது பிடிச்சதா இல்லையா?” கேட்டு டேபை பறித்துப் பார்த்தாள்.

“என்னமோ நான் கை காட்டுறத வாங்க போற மாதிரி பேசுற?”

“உன் டேஸ்ட் என் டேஸ்ட் விட பெட்டர்னு நினைச்சேனே.. இல்லையா?” என்று போலியாக வருத்தப்பட்டாள்.

“நக்கலா? நீயே ஒன்ன பாரு”

“இது ஓகேவா? நம்ம ஆஃபிஸ்க்கு பக்கமா இருக்கும். வேணும்னா கார் வாங்கிடு. ஈசியா இருக்கும்”

“என் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” என்று மித்ரன் இப்போது கிண்டலாக பார்க்க, “தெரியுமே” என்றாள்.

“அத வச்சு கார் வாங்கிட்டு? காலம் முழுக்க ஈ.எம்.ஐ கட்டவா?”

“அப்ப எப்ப தான் வளருற ப்ளான்ல இருக்க?” என்று புருவம் உயர்த்தினாள்.

“எனக்கு இருக்க உயரமே போதும்”

டேபை அடிப்பது போல் ஓங்கியவள், “ஒரே இடத்துல நின்னு பழகாத.. நாலு விசயத்த தெரிஞ்சுக்க.. கத்துக்க.. அப்ப தான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும்.” என்று அறிவுரை சொன்னாள்.

“கல்யாண கட்டமே சரியில்ல.. இதுல அடுத்த கட்டமாக?”

“புலம்பாத மேன்.. வாழ்க்கையில அடுத்து என்னனு யோசி.. கார் வாங்கு.. புது வீடு வாங்கு.. அதுல உன் அம்மா பாட்டிய சந்தோசமா வாழ வை.. வயசானப்புறம் அவங்க வேலை செய்ய விடாம ஒரு சர்வண்ட் ஏற்பாடு பண்ணு.. உன் அண்ணன் வளருறதுக்கு ஐடியா கொடு.. இப்படி எதையும் யோசிக்காம இருக்கதே போதும்னு சொல்லுற?”

“ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனா.. இருக்கதுலயும் சந்தோசப்படனும்”

“பைத்தியம்.. இருக்கதுலயே சந்தோசப்டலாம்னு எல்லாரும் நினைச்சுருந்தா லெட்டர்ல இருந்து ஸ்மார்ட் ஃபோன்ஸ் வந்துருக்காது.. புக்ஸ்ல இருந்து ஏஐ வந்துருக்காது” என்று முறைத்து விட்டு எழுந்தாள்.

பூக்களை எல்லாம் வைத்து விட்டு பொறுமையாக தலையலங்காரத்தை கலைக்க ஆரம்பித்தாள்.

“சோ பணக்காரவங்க எல்லாம் இப்படித் தான் யோசிப்பீங்களோ?” என்று கேட்க திரும்பிப் பார்த்தாள்.

“இதுக்கு பணக்காரனா இருக்கனும்னு இல்ல. ஒரு ஆர்வமும் ஈடுபாடும் இருந்தா போதும். உனக்கு உன் அம்மா பாட்டிய சந்தோசமா வாழ வைக்க ஆர்வமிருந்தா செய்.. அவ்வளவு தான்” என்றவள் திரும்பி தலையை கவனித்தாள்.

முழுதாக பிரித்து கொண்டை போட்டுக் கொண்டு திரும்ப மித்ரன் டேபை விட்டு நிமிர்ந்து பார்த்து இமைக்க மறந்தான்.

விதவிதமான அலங்காரங்களில் எல்லாம் நேற்றிலிருந்து பார்க்கிறான். ஆனால் எதுவும் அவனது மனதை பாதிக்கவில்லை.

வெறும் டீ சர்ட்டும் கொண்டையுமாக நிற்கிறாள். அவளது கழுத்தில் தாலி அவளது தோலோடு போட்டி போட்டுக் கொண்டு மின்ன, கொஞ்சமாக கலைந்திருந்தது அவன் வைத்த குங்குமம்.

இமைக்க மறந்து பார்த்தவனின் இதயம் தாறுமாறாக துடிக்க, அதை கவனிக்காமல் சம்பூர்ணா உறங்க தயாரானாள்.

“எதாவது பிடிச்சதுனா சொல்லு.. இல்லனா நாளைக்கு பார்க்கலாம்.. இப்ப தூங்கலாம்” என்று விட்டு மெத்தையில் ஏறிக் கொண்டாள்.

துடிக்கும் இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு டேபை அணைத்து வைத்து விட்டு மித்ரன் படுக்க தயாராக, “இரு.. அந்த பால குடிச்சுடு.. சாதனா சொல்லுச்சு” என்று காட்டினான்.

ஏற்கனவே வைத்திருந்தது தான். இந்த நேரத்தில் ஆறிப்போயிருக்கும்.

“எனக்கு வேணாம்.. நீ வேணா குடி”

“கிரேட்.. தலை வலிக்குது.. மாத்திரைய போட்டுட்டு குடிக்க வேண்டியது தான்” என்று வேகமாக எழுந்து மாத்திரையை எடுத்தாள்.

“சாதனா நல்லாவே சாப்பிட விடல.. சாப்பிட்டா தூங்கிடுவேனாம்” என்றவளுக்கு சிரிப்பு வந்தது.

“அண்ணி அப்பாவி.. உன் பித்தலாட்டம் தெரியாம பேசிட்டாங்க”

“பித்தலாட்டம்? நானு?”

“என்னை கல்யாணம் பண்ணதே பித்தலாட்டம் தான?”

“உன்னை யாரு ஏமாற சொன்னா?” என்று நக்கலாக கேட்டு விட்டு, மாத்திரையை விழுங்கி பாலையும் எடுத்து குடித்தாள்.

“அண்ட்.. நாளைக்கு முழு டீடைல் சொல்லனுமாம். ஒன்னு விடாம.. என்னத்த சொல்லுறது? உன் கொழுந்தனாரு ஜென்டில் மேன்னு வேணா சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

“இதெல்லாமா கேட்பாங்க?”

“கேட்டுச்சே.. அதோட ஐடியாவும் கொடுத்துச்சு” என்று கண்ணடித்தாள்.

“வாட்? ஐடியாவா?”

“ஆமா என்ன ஐடியா தெரியுமா?”

“என்னது?”

“நாளைக்கு சொல்லுறேன்.. குட் நைட்” என்றவள் டம்ளரை வைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

இருப்பதை வைத்து சந்தோசப்படுவதால் வளர்ச்சியை வெறுக்க வேண்டியதில்லையே!

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்