
வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் வந்து விட அகிலாவும் தனது கணவனுடன் வந்திருந்தாள்.
பெரியவர்கள் என்ன விஷயம்? என்று கேட்க,
சரவணன் தனது நண்பனின் அருகில் வந்து நின்றான்.
“இவங்க நம்ம தனாவும், காயுவும் படிக்கிற காலேஜ்ல ஒர்க் பண்றாரு. கெமிஸ்ட்ரி புரொபசரா இருக்காரு. இவங்க நம்ம காயத்ரியைப் பொண்ணு கேட்டு வந்திருக்காங்க” என்றான் ருத்ரன் அனைவரையும் பார்த்து.
நண்பனை முறைத்துக் கொண்டு நின்றான் சரோ.
“என்ன மாமா சொல்ற?” என்று காயு கேட்க,
“சார், நீங்க ஒரு புரொபசர், நான் ஒரு ஸ்டுடென்ட். அது உங்களுக்கு ஞாபகத்துல இருக்கா? படிக்கிற பொண்ண, அதுவும் உங்க ஸ்டுடெண்டை பொண்ணு கேட்டு வந்திருக்கீங்க?” என்றாள்.
அப்போது கை தட்டிக் கொண்டே அங்கு வந்து நின்றாள் ஆனந்தி.
யாரும் ஆனந்தியை அங்கு எதிர்பார்க்கவில்லை.
“இங்கு உனக்கு என்னடி வேலை?” என்று அகிலா கேட்க,
“இரு மா, எதுக்கு இவ்வளவு சீறி கிட்டு வர… என்னமா நடிக்கிறாப்பா, உங்க வீட்டுப் பொண்ணு. என் அண்ணனை மயக்கிப் பாடம் எடுக்கிற வாத்தியாரைத் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டு, இப்போ என்னவோ நல்லவ வேஷம் போடுறா… என் அண்ணனை மயக்க தான் படிக்க காலேஜுக்கு வந்தாளா?
படிக்க தானே காலேஜ் அனுப்புனீங்க? இல்ல எவன் கூட வேணாலும் ஊர் மேஞ்சிட்டு வா… எவன் பின்னாடி வேணும்னாலும் சுத்திட்டு வா என்று காலேஜ் அனுப்புனீங்களா?” என்ற உடன் வேகமாக ஆனந்தியைத் தமிழ் ஒரு பக்கமும், அகிலா ஒரு பக்கமும் அறைந்திருந்தார்கள்.
இருவருமே அவளை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு,
“தொலைச்சிடுவேன். இங்கயே கொன்னு குழி தோண்டிப் புதைத்து விட வேண்டி இருக்கும்டி. எங்க வளர்ப்பைத் தப்பு சொல்ல நீ யார்டி முதல்ல… பொண்ணு கேட்டு வந்து நிற்கிறது அவரு. இன்னொரு விஷயம் இவர் உனக்கு அண்ணனா?” என்று கேட்டு விட்டுக் காயத்ரியைத் தமிழ் பார்க்க,
காயத்ரி அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
“ஒரு விசயம் நான் சொல்லிக்கிறேன். ஒரு நிமிஷம் இதைப்பற்றி ஃபர்ஸ்ட் நான் சொல்லி முடிச்சிடுறேன்” என்றான் அதிரன்.
அனைவரும் இப்பொழுது அதிரனைப் பார்க்க,
“எனக்கு உங்க வீட்டுப் பொண்ணு மேல விருப்பம் இருக்கு. கல்யாணம் பண்ணி என் வாழ்க்கை முழுக்க என்னோட தக்க வச்சிக்கணும் என்ற ஆசை இருக்கு.
எங்க வீட்ல எனக்குப் பொண்ணு பார்க்குறேன் என்று சொன்னதால, என்னால என் லைஃப்ல இருந்து காயத்ரியை இழக்க முடியாதுன்னு நினைச்சதால, எங்க வீட்டுல சொல்லி முறைப்படி உங்க வீட்டுல பொண்ணு கேட்டு வந்து நிக்கிறேன். வீட்டுல பொண்ணு கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று முடிவோடு தான் வந்திருக்கேன்.
மத்தபடி உங்க பொண்ணுகிட்ட இதுவரைக்கும் நான் தனிப்பட்ட முறையில் என்னோட விருப்பத்தைச் சொல்லல. இன்னொரு விஷயம்…” ஆனந்தியைக் கை காண்பித்து “இவளுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று விட்டு ஆனந்தியை முறைத்துக் கொண்டு இருக்க,
“அண்ணா, உனக்கும் எனக்கும் ஆயிரம் சண்டை சச்சரவு மனஸ்தாபம் இருக்கலாம். ஆனா, இந்த மாதிரிப் பொது இடத்தில் விட்டுக் கொடுத்துப் பேசுவியா?” என்று நல்லவள் போல் ஆனந்தி நடிக்க,
அவளை வேகமாகக் கை ஓங்கிக் கொண்டு வந்த அதிரன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தனது கையைக் கீழே போட்டுவிட்டு, நாக்கை மடித்துத் தனது கோபத்தை வெளிப்படுத்தியவன்,
“யாருக்கு யார் தங்கச்சி? நீ எனக்குத் தங்கச்சியா? எப்ப சொத்தைப் புடுங்கிட்டுப் போனீங்களோ, எங்கள நடுத்தெருவுல விட்டுட்டுப் போனீர்களோ, அப்பவே முடிஞ்சிடுச்சுடி உங்களுக்கும், எனக்குமான சொந்த உறவு எல்லாமே…
சொத்துக்காக யோசிச்சு எவனையோ கல்யாணம் பண்ணப் போயிட்டு அடுத்தவங்க குடும்பத்தையும், கெடுத்துட்டு வந்தவ தான நீ… கல்யாண மேடை வரை போய் கல்யாணம் நின்னு வீட்டுக்கு அசிங்கப்பட்டு வந்து நின்னீங்களே, அன்னைக்குத் தெரியலையா?”
அண்ணன், பெரியப்பா, பெரியம்மா என்றவுடன் ருத்ரனின் கை முஷ்டிகள் முறுக்கேறியது.
“இன்னொரு விஷயம், காலேஜ் கேம்பஸ் விட்டு வெளியே வந்துட்டா எனக்கும், காயத்ரிக்குமான உறவு சக மனுஷங்களா மட்டும் தான் இருக்கும். காலேஜ் கேம்பஸ்குள்ள மட்டும் தான் நான் புரொபசர், அவ ஸ்டூடென்ட் சரியா? என்னோட வாழ்க்கையில தலையிடுற உரிமையை நான் உனக்குத் தரல” என்று விட்டு ருத்ரனைப் பார்த்தான்.
ருத்ரனின் முகம் இறுகிப் போய் இருப்பதைப் பார்த்து விட்டு,
“அது நான்…” என்று ஒரு சில நொடி எதையோ யோசித்தவன்,
“சாரி, உங்க வீட்டுப் பொண்ணோட பேரு என்னால இப்போ கெட்டுப் போய் இருக்கு. நான் பொண்ணு கேட்டு வந்தேன். ஆனா எங்களுக்குள்ள இருக்க பகையை அவ இங்கயும் கொண்டு வந்து விடுவா என்று நான் யோசிக்கல. இந்த அளவுக்கு அற்பப் புழுவா இருப்பான்னு நாங்க நினைக்கல, மன்னிச்சிடுங்க” என்று மொத்தக் குடும்பத்தையும் கையெடுத்துக் கும்பிட்டான் அதிரன்.
“மத்தபடி இவளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ ஏன் இத்தனை நாள்களுக்குப் பிறகு எங்களுடைய வாழ்க்கையில் வந்தாள் என்றும் புரியவில்லை. எங்களைப் பின்தொடர்ந்து ஏன் உங்கள் வீட்டில் வந்து நிற்கிறாள் என்றும் புரியவில்லை. இது எங்களுடைய குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம்” என்றவுடன்,
தனா தான் அதிரன் அருகில் வந்து நின்று, “சார், இவங்க உங்களோட சித்தப்பா பொண்ணு, உங்க தங்கச்சி மட்டும் கிடையாது. எங்க குடும்பத்திலயும் பெரிய கலவரத்தையே செஞ்சுட்டுப் போன ஒரு துரோகி. என் அண்ணன் முதுகுல குத்துன பச்சைத் துரோகி” என்று முனகினாள்”.
“என்ன தனா மா சொல்ற?” என்று அதிரன் கேட்க,
தனா ஒன்று விடாமல் ஒரு வருடம் முன்பு நடந்த அனைத்து விவரத்தையும் சொல்ல,
“அதனாலதான் இங்க வந்து இருக்காளா? நான் கூட எங்கடா என் வாழ்க்கையைச் சூனியமாக்க இப்போ இங்க வந்து நிற்கிறாளோனு நினைச்சேன். இவ இப்போ இல்ல, எப்பவும் திருந்த மாட்டா. இவ அப்பா அம்மா ஒழுங்கா இருந்தா தானே, இவ ஒழுங்கா இருப்பா…
அவங்க மனசே முழுக்க முழுக்க வன்மமும், பணத்தாசையும் பிடிச்ச சாக்கடை தான். அவங்க வயித்துல பிறந்த, அவங்க வளர்த்த இவ மட்டும் சாக்கடையா இல்லாமல், சந்தனமாவா இருக்கப் போறா?” என்று ஆனந்தியை முறைத்துக் கொண்டே சொல்ல,
“டேய், என்னடா?” என்று ஆனந்தி குதித்துக் கொண்டு வர,
“போதும் நிறுத்தறியா? உன்னோட சாக்கடைப் புத்தியை உன் வாழ்க்கையோட வச்சுக்கோ, என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வராத. என் வாழ்க்கையில கலகம் மூட்ற வேலையெல்லாம் வேண்டாம்.”
“இருந்தாலும், படிக்கிற பொண்ணு மனசை இப்படிக் கெடுக்கிறயே, உனக்கு வெட்கமாக இல்லை” என்றாள் ஆனந்தி குரோதத்துடன்.
“போதும் நிறுத்து… இப்ப தான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ புரொபசரா இருக்கற என்னை விரும்புறான்னு அவ மேல பழி சுமத்தின… இப்போ என்னை வச்சுக் காய் நகர்த்தப் பாக்குறியா? இந்த வேலை எல்லாம் இங்க வச்சுக்காத, சரியா? உன் குடும்பத்தோட உன் அப்பா, ஆத்தா வோட நிறுத்திக்கோ…
முதல்ல அவ என்னை விரும்புறான்னு சொன்ன… இப்போ படிக்கிற பொண்ண நான் விரும்புறேன்னு சொல்ற… எனக்குத் தெரியும் நான் என்ன பண்ணனும்னு. என் வாழ்க்கையில என்ன முடிவு எடுக்கணும்னு சரியா? உன் வாழ்க்கைல முடிவு எடுக்கறதோட நிறுத்திக்கோ…”
காயத்ரி வீட்டில் உள்ள அனைவரையும் திரும்பிப் பார்த்த அதிரன்,
“இவளுக்கும், எனக்கும் எந்த விதமான உறவும் கிடையாது. சம்பந்தமும் கிடையாது. சித்தப்பா பொண்ணு தான். ஆனா இப்போ எங்களுக்கும் இவங்களுக்கும் எந்த உறவும் கிடையாது. சித்தப்பானு சொல்லவே அசிங்கமா இருக்கு. சொத்து காசு பணத்துக்கு ஆசைப்பட்டுச் சொந்த அண்ணன் குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்தின துரோகிங்க…
இப்போ சொல்லிக்கிற அளவுக்கு எங்ககிட்டக் காசு பணம் இருக்கு என்று வந்து ஒட்டிக்கிட்டு நிக்கப் பாக்குதுங்க” என்று விட்டு இப்பொழுது காயத்ரியைக் குறுகுறு பார்வையோடு அதிரன் பார்க்க,
ருத்ரனின் பார்வையும் காயத்ரி பக்கம் தான் சென்றது.
“இல்ல மாமா அது…” என்று ஏதோ பிதற்றச் செய்தாள் காயு.
“காயு, எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லு, என்ன நடந்துச்சுனு முழுசா தெரியணும். இந்த வீட்ல இருக்க எல்லாரையும் விட என் காயுமா எந்த அளவுக்குத் தைரியமானவ, எந்த ஒரு விஷயத்தையும் எந்த அளவுக்கு ஃபேஸ் பண்ணுவான்னு எனக்குத் தெரியும்.
உன்னப் பத்தித் தெரிஞ்சு இருந்ததால தான், நான் இவ்ளோ நேரம் அமைதியா இருந்ததுக்கு ஒரே காரணம். ஆனா, இப்போ என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியனும்” என்றான்.
“என்னடி?” என்று அகிலாவும், தமிழும் ஆளுக்கு ஒரு பக்கம் காயத்ரியின் கையைப் பிடிக்க,
“இல்ல, ஒன் வீக் முன்னாடி நான் இவர்கிட்ட காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது ஒரு சந்துல நின்னு தனியாப் பேசிட்டு இருந்தேன்.”
“ஏன்? உன் கூடதான தனா வருவா…” என்று ஒரே போல் அகியும், தமிழும் கேட்கத் திருதிருவென முழித்தாள் காயு.
அப்போது முன்னாடி வந்த சரவணன், “நான் தான் தனாவிடம் தனியாய் பேச வேண்டும் என்று அன்னைக்குத் தனியாக தனாவை அழைத்துக் கொண்டு சென்றேன். அன்னைக்கா இருக்கும்” என்று சொல்ல,
ருத்ரன் தனது நண்பனை முறைத்துக் கொண்டு நின்றான்.
“அமைதியா இருடா” என்றான் சரோ. தனது நண்பனுக்கு மட்டும் கேட்கும் விதமாக.
தனா தான் அன்று சரவணனைப் பார்த்தே தீர வேண்டும் என்று காயுவின் நம்பரில் இருந்து அழைத்து இருக்க,
“சரி…” என்று பார்க்க வந்திருந்தான். அன்றுதான் நடந்திருக்க வேண்டும் என்று எண்ணிய சரவணன் முழுப் பழியையும் தன் மீது போட்டுக் கொண்டான்.
“சரி அன்னைக்கா காயு…” என்று தமிழ் கேட்க,
“ஆமாம். தமிழ் அன்னைக்கி இவரு என்கிட்ட வந்து பேசினார்.”
“என்ன பேசினார்?”
“அவர் என்கிட்ட ப்ரொபோஸ் எல்லாம் பண்ணல தமிழ். சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம். அது மட்டும் இல்லாம நாங்க காலேஜ் விட்டு வரும்போது எப்பயாச்சும் பார்த்துக்கிற மாதிரி சூழ்நிலை வரும். அப்போ சாதாரணமா இவரை வம்பு இழுத்து மட்டும்தான் பழக்கம். மத்தபடி வேற எதுவும் இல்லை” என்று விட்டுத் தனது அத்தை பாக்கியத்தைப் பார்த்து,
“அத்தை, நான் எதுவும் தப்புப் பண்ணல, உங்க அண்ணன் பேரைக் கெடுக்க மாட்டேன் என்றைக்குமே” என்று சொல்ல,
அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட பாக்கியம், “என்னைக்குமே என் அண்ணன் மகளுங்களுக்கு என் அண்ணன், அண்ணியைத் தலை குனிய வைக்கத் தெரியாதுடி.
நீ சொல்லு காயுமா, உனக்கு அவரைப் புடிச்சிருந்தா, நாங்களே கட்டி வைப்போம் டா தங்கம். அவ கிடக்கிறா பணத்தாசை பிடித்த மோகினிப் பிசாசு” என்று ஆனந்தியைப் பார்த்துச் சொல்லி விட்டுத் தனது அண்ணன் மகளின் தலையைக் கோதினார்.
“அன்னைக்குச் சாதாரணமா தான் பேசிட்டு இருந்தாரு. தனியா வர, எங்க உன்னோட ஜோடிப் புறா? என்று கேட்டார். அது உங்களுக்கு எதுக்கு? அதைக் கேட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க. அவ இருந்தா என்ன, இல்லன்னா உங்களுக்கு என்ன வந்துச்சு? என்று நானும் சாதாரணமா தான் பேசிட்டு இருந்தேன்.
பேசிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு அவர் போயிட்டாரு. அதுக்கப்புறம் தான் இவ வந்தா…” என்று ஆனந்தியைக் கை காமிக்க.
