Loading

மெல்லினம் 25:

அத்வியை இறுக கட்டி கொண்டவளின்‌, உள்ளமும் உடலும் இன்னும் படபடத்து நடுங்கி கொண்டிருக்க, காதால் கேட்ட விஷயத்தின், வீரியம் தாங்காது உதடுகள் அழுகையில் பிதுங்க, கண்கள் உடைப்பெடுக்க தொடங்கின.

“எத்தனை பெரிய விஷயத்தை என்னிடம் மறைத்து விட்டான்” என விசும்பியவளின் அழுகை, தவிப்பு, படபடப்பு எல்லாம் ஒரு கட்டத்தில் கோபமாக மாறி அவளை எரிக்க ஆரம்பித்ததிருந்தது.

இப்போது எல்லாம், அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் பக்கம் சாய்வதை கண் கூடாக காண்கிறாள். அவளிற்கும் அந்த மாற்றமும்‌, கதிரையும் மிகவும் பிடித்திருந்ததில், தெரிந்தே தன் மனதை அவனிடம் இழுந்து கொண்டிருக்கிறாள்.

இந்த வேளையில் அவள் கேட்ட விஷயங்கள், அவள் ஈரக்குலையையே நடுங்க வைத்திருந்தது.

அவள் இதயம் அதிவேகமாக படபடப்புடன் துடிக்க 

கதிரும், சுரபியும் பேசி கொண்ட வார்த்தைகள், எல்லாம் திரும்ப திரும்ப காதினில் விழ, கண்களை இறுக மூடி கொண்டவளிற்கு தான் கண்டது கேட்டது எல்லாம் கனவாக இருக்க கூடாதா? என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அவளையும் மீறி மனம் சற்று முன் நடந்தவற்றை மீண்டும் நினைவில் கொண்டு வந்தது.

கதிரிடம் நடந்த அந்த சண்டைக்கு பிறகு, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு சட்டென விழிப்பு தட்ட, எழுந்தவள் கதிரை தேட அருகில் இல்லை பாத்ரூமை பார்க்க அங்கும் இல்லை. சரி இங்கே தான் எங்கேனும் இருப்பான் போலும், என நினைத்து அவள் காத்திருக்க நேரம் போனதே தவிர அவன் வரவில்லை.

‘என்ன இன்னமும் காணோம். போன் ஏதும் பேசுவாங்களா இருக்கும் நம்ம தூங்குவோம்’ என கேள்வியையும் பதிலையும் அவளே நினைத்து கொண்டு படுத்து உறங்க,

அவனின் கையணைப்பில் உறங்கி பழகியவளுக்கு, நித்திரை அண்டாது போக, உரண்டு புரண்டு படுத்தவள் ஒரு கட்டத்தில் எழந்தமர்ந்து விட்டாள்.

“ச்சே, அவரு பக்கத்துல இல்லாம தூக்கம் கூட வரமாட்டுது.‌எப்புடி மாத்தி வச்சுருக்காரு என்னை” என சிணுங்களாக கூறியவள்,

“இன்னமும் என்ன தான் பண்ணிட்டு இருக்காரோ. பொண்டாட்டி புள்ளைய தனியா விட்டுட்டு போயிருக்கோம்ன்ற எண்ணமே இல்லை போல, இன்னமும் காணோம்” என புலம்பியவளுக்கு தூக்கம் தூர ஓடி விட,

‘சரி நம்மளே தேடிப் போவோம்’ என நினைத்தவள், அத்வி நன்றாக உறங்குவதை உறுதி செய்து தலையணையை வைத்தவள், மெதுவாக அறையை விட்டு வெளியேறி லாபியில் தேட அங்கும் இல்லை.

இவள் தேடுவதை கண்டு அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் ஏதும் உதவி வேண்டுமா என கேட்க,

“நத்திங் என் ஹஷ்பண்ட் தேடி போறேன்” என்க,

“ஓ, ஓகோ மேம். கீழ ஸ்வீம்மீங் ஃபூல் கிட்ட தோட்டம் இருக்கு, அங்க வேணும்னா போய் பாருங்க இப்போ தான் ரெண்டு பேர அங்க பாத்தேன்” என்றவள் தன் வேலையை கவனிக்க,

முல்லை கதிரை தேடி சென்றாள். அவனை காண போகும் ஆவலில், அவள் நடையில் ஒரு துள்ளல் எழுந்தது.

தூரத்திலயே அவனை கண்டு விட்டவள், விரைந்து அவன் அருகே செல்ல, அவன் அருகே நின்றிருந்த சுரபியை‌ கண்டதும் ‘இவளோட என்ன பேசிட்டு இருக்காரு’ என யோசித்து அருகே நடந்தவள், அடுத்தடுத்து அவள் கேட்ட வார்த்தைகளில் தன் நடையினை நிறுத்தி அதிர்ந்து விட்டாள்.

முதலில் அதிர்ச்சி, அழுகை என இருந்தவளிற்கு போக போக ஆத்திரம் தலைக்கு ஏற அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டாள்.

நினைவுகளில் இருந்துவிட்டு, கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் தன்னால் அவள் உடல் விரைத்து கொண்டது.

தன்னருகில் வந்து அவன் உறங்கினால், நிச்சயம் தான் இருக்கும் மனநிலையில் அவனை வார்த்தைகளால் வதைத்து விடுவோம்  என நினைத்தவள், என்ன செய்து அதனை தடுக்கலாம், என யோசிக்கையில் கதிர் கட்டிலின் அருகே வந்து விட இவளிற்கு தவிப்பு கூடியது.

கதிர் அவள் அருகே படுத்து அவளை அணைக்க வர ‘முருகா என்னை மன்னிச்சிடு இதை தவிர எனக்கு இப்போ வேற வழி இல்லை’ என வேண்டியவள் அத்வியின் தொடையை சற்றே வலிக்குமாறு கிள்ளி விட,

வலி தாங்க முடியாது தூக்கத்தில் இருந்தவன் “ம்மா….” என அலறி‌ விட்டான்.

அவனது அழுகையில் கதிர் பதறியடித்து எழுந்தவன் “அதி அதி குட்டி ” என்றவாறு அவனை தூக்கி கொள்ள முல்லையும் அப்போது தான் எழுவது போல் எழுந்து கொண்டாள்.

“அதி ப்பா, ஏண்டா அழுகுற” என அவன் கத்தலின் வீரியம் தாங்காது கதிரும் கலங்கி கேட்க,

முல்லையின் கண்கள் கலங்கி சிவந்து விட்டன, அவளிற்கு தான் தெரியுமே அத்வி எதற்கு அழுகிறான் என.

‘சாரி டா தங்கம்’ என மனதோடு மன்னிப்பு கூறி கொண்டாள்.

“அங்கி, அங்கி வலிக்கு” என அத்தி அவன் தொடையை சுட்டி காட்ட,

அந்த இடமே சிவந்து போயிருந்தது.

“அச்சோ என்னடா இது இப்புடி சிவந்து போய் இருக்கு” என்றவன் அதில் கை வைத்து தேய்க்க மேலும் மேலும் வீறிட்டது குழந்தை.

கதிரின் பதறலில், முல்லையும் அந்த இடத்தினை கன்றி சிவந்திருந்ததை கண்டதும் ‘என்னால் தானே’ என நினைத்தவளிற்கு கண்கள் கலங்கி கண்ணீர் இரு கன்னங்களிலும் வழிந்தோட,

பிள்ளையின் அழுகையை கண்டு தான் அழுகிறாள் என நினைத்த கதிர் “ஒண்ணும் இல்லை முல்லை, ஏதாச்சம் பூச்சி கடிச்சிருக்கும்.‌ இவனை பிடி நான் ஆயில்மென்ட் எடுத்துட்டு வரேன்”

என அத்வியை அவளிடம் விட்டு விரைந்தவன், ரூமில் வைக்கப்பட்டிருந்த முதலுதவி பெட்டியில், வலிநிவாரணியை எடுத்து வந்து அதில் பூச எரிச்சல் மிகுதியால் அதிகமாகவே கத்தி விட்டான் அத்வி.

“ஒண்ணும் இல்லடா ஒண்ணும் இல்லை அவ்ளவுதான் வலிக்காது சரியாயிடும்” என அவனை கெஞ்சி கொஞ்சி ஒருவழியாக அதனை போட்டு முடித்தவன்,

“அத்விய தட்டி கொடுத்து தூங்க வை முல்லை, விசும்புறான் பாரு என்ன கடிச்சதுன்னு தெரியல. அலர்ஜி மாதிரியும் இல்லை. வெயிட் பண்ணி பாப்போம். இப்போ போய் இந்த ஹோட்டல் மேனஜர, நாலு மிதி மிதிச்சுட்டு வரேன். என்னத்தை ரூம் சர்வீஸ் பண்ணி வச்சுருகானுங்க. பூச்சி இருக்குறது கூட தெரியாம” என பல்லை கடித்து அவன் கூற,

பதறிய முல்லை “இல்லை…இல்லை, விடுங்க அவுங்களும் பாவம் சின்ன சின்ன பூச்சிய எல்லாம் தேடி பிடிச்சு கொல்ல முடியுமா அவங்களால?விட்டுடுங்க அத்வி நடுவுல படுக்கட்டும் நா கட்டில் ஒட்டி படுத்துக்கிறேன்” என்றவள் அவசரமாக தூங்க போக,

அதில் அவளை முறைத்தவன்,

“அதெல்லாம் எதுவும் வேண்டாம். உன்னையும் கடிச்சதுன்னு என்ன பண்ணுறது.‌எக்ஸ்ட்ரா பெட் இருக்கு எல்லாரும் கீழவே தூங்கலாம்” என,

“ப்ச், ஒண்ணும் ஆகாதுங்க இடம் மாறுனா இவன் சிணுங்குவான். நீங்க அந்த பக்கம் தூங்குங்க தரை எல்லாம் சில்லுன்னு வேற இருக்கு”

“அப்போ நீ இந்த பக்கம் வா நான் அங்க தூங்குறேன்” என அவன் பிடிவாதம் பிடிக்க,

முதலில் அதனை எல்லாம் ரசிப்பவளுக்கு இப்போது குற்றவுணர்வு தலைதூக்க,

“கதிர் ப்ளீஸ் எனக்கு ரொம்ப டயர்ட் டா இருக்கு. ஆர்க்யூ பண்ணாம தூங்குங்க ப்ளீஸ்” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காது, அவனிற்கு முதுகு காட்டி உறங்கி விட,

அவளின் பேச்சில் கதிரின் முகம் சுருங்கி விட்டது. “போ டி மக்கு முல்லை” என திட்டியவன் அத்வியை அணைத்து கொண்டு உறங்க,

முதல் விலகல்! முல்லை, கதிர் அறியாதவாறு மெல்ல அவனிடம் இருந்து விலகலை ஏற்படுத்தி கொண்டாள்.

சில நிமிடங்களிலேயே அத்வி தகப்பன் தந்த தாலாட்டில் அழுகையை மறந்து துயில் கொள்ள, வழமை போல் கதிரின் கரங்கள் அவன் கன்னத்தை வருடி விட்டது.

 எட்டி முல்லையை பார்க்க, அவள் கண் மூடியிருப்பது தெரிய அத்வியை சேர்த்தணைத்து, முல்லையின் கன்னங்களையும் வருடியவன் மெல்ல துயிலில் ஆழ்ந்தான்.

அவனது வருடலில் அவள் அதுவரை அடக்கி வைத்திருந்த கேவல் வெடிக்க, வாயை அழுந்த இரு கைகளாலும் மூடி கொள்ள கண்கள் மட்டும் அழுகையினை வெளிப்படுத்தின.

‘இவனின் இந்த செய்கை இதில் காதல் இல்லாமல் இல்லையே. ஒவ்வொரு செயலில் என்மேல் உள்ள காதலை அப்பட்டமாக வெளிப்படுத்துபவன் ஆயிற்று.

இவன் என்னை விரும்பினானா?எப்போது? கடவுளே நான் கேட்டது அனைத்தும் பொய்யாக இருக்க கூடாதா? இவன் என்னை விரும்பியிருக்கவே கூடாது, அந்த உண்மையை என்னால் தாங்கி கொள்ளவே முடியாது.

சுரபியுடன் இவன் வாழவே இல்லாத போது…நான்..நான் ஹரிஷீடன் வாழ்ந்து ஒரு புள்ளையை பெற்றவள், அப்படி இருக்கையில் எப்படி? எப்படி?நான் இவனிற்கு மனைவியாக இருக்க முடியும். முடியாது நிச்சயம் முடியாது, இவனிற்கு என்ன தலையெழுத்தா? விவாகாரத்து ஆன என்னுடன் வாழ, அதுவும் இதுவரை அவன் உள்ளத்தால் உடலால் தூய்மையானவனாக இருக்க!

நான் அவனிற்கு தகுதியே இல்லாதவள். இவனை விட்டு என்னால் பிரிய முடியுமா? அதற்கு அனுமதிப்பானா இவன்? கடவுளே ப்ளீஸ் நான் கேட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும்.

ஒருவேளை உண்மையாக இருந்தால், அப்போது என்ன செய்வது? இவனுடன் என்னால் குற்றவுணர்வு இன்றி வாழ்ந்திட முடியுமா, பிரிவது தான் நல்லது’ என அவள் பிரிவு என்று நினைக்கையிலேயே அவள் இதயத்தில் யாரோ கத்தியால் குத்திய உணர்வு.

‘பொறு மனமே பொறு! அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதே, இன்னமும் நீ கேட்டது உண்மை என தெளிவாக தெரியாது.‌சுரபி ஏதோ பொருள், பெயர் என கூறினாலே அதனை முதலில் தேடு, அதன் பின் உண்மைகள் எல்லாம் தானே வெளிவரும். அதுவரை எந்த முடிவயையும் எடுத்து விடாதே.., இதில் கதிரின் வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது.

இதோ இப்போது அவனிடம் இருந்து விலகியது போல், உண்மை தெரிய வரும் வரை அவனிடம் இருந்து விலகிய இரு, இவன் விடாக்கண்டன், சிறு துரும்பு கிடைத்தாலும் அதனை வைத்தே, என் விலகலை கண்டு கொள்வான். பின் இவனிடம் இருந்து விலகுவது கனவில் கூட நடக்காத ஒன்று.

ஆக செய்யும் செயலில், கவனத்தை சிதற விடாது செய்ய வேண்டும்’ என தனக்கு தானே கூறி கொண்டு திடமான ஒரு முடிவை எடுத்தவளின், நிம்மதி முற்றிலும் தொலைந்து போயிருக்க, நேரம் சென்றே கண்ணயர்ந்தாள்.

*************************

“முல்லை, நான் கிளம்புறேன் அத்விக்கு ஸ்கூல் அண்ட் லன்ச் பேக் எல்லாம் எடுத்து வச்சுட்டியா??” என அவன் கேட்க,

“எல்லாம் ரெடிங்க” என அவள் கூறும் போதே “அங்கி…..சித்தப்பா…!!!” என்றவாறு ரேஷ்மியும் அத்வியும் ஓடி வர,

“ஹேய், குட்டீஸ் பாத்து மெதுவா ” என்றவன் அவர்கள் இருவரையும் தூக்கி கொண்டு,

“ம்ம்ம் ரெடியா ரெண்டு பேரும், ஸ்கூலுக்கு போக இவ்வளவு ஆர்வமாடா?? சரி சரி டைம் ஆச்சு கிளம்பலாம். எல்லாருக்கும் பாய் சொல்லிடுங்க” என்றவன் முல்லையிடம் இருந்து குழந்தைகளின் லன்ச் பேக்குகளை வாங்கி கொண்டவன்,

“வரேன் முல்லை ” என அவளிடம் தலையசைத்து, குழந்தைகளை தூக்கி கொண்டு கிளம்பியவன் காருக்கு செல்ல, அங்கே இவர்களுக்காக காத்திருந்தனர் பிரகாஷின் குழந்தைகளான ரியாஸ் மற்றும் ஆர்யன்.

ஸ்ருதி மற்ற விடயங்களில் எப்படியோ குழந்தைகளிடம் அவளின் கோபத்தையும் ஆத்திரத்தினையும் சொல்லி வளர்க்கவில்லை. அதற்கு பிரகாஷீம் விடவில்லை, ஆக குழந்தைகள் எப்போதும் போல் அனைவரிடமும் செல்லம் கொஞ்சினர்.

பிரகாஷின் குழந்தைகள், மற்றும் ரேஷ்மி பின்சீட்டில் ஏறி கொள்ள அத்வியை முன்சீட்டில் அமர வைத்து காரினை கிளப்பினான் கதிர்.

கொழுக்! மொழுக்! என்று அகன்ற விழிகளுடன் பொம்மை போல் இருந்த சிறியவனை கண்டு, பிரகாஷின் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்து விட, அவனிடம் பேசி விளையாடும் ஆவல் கொண்டனர்.

 அவனை தங்களுடன் பேச வைக்குமாறு அவர்கள் ரேஷ்மியிடம் முறையிட,

தன் பையில் இருந்த சாக்லேட்டினை எடுத்து கொடுத்தவள் “இதை காட்டுங்க வந்துடுவான்” என ஐடியா கொடுக்க,

ஆவலாக அதனை வாங்கியவர்கள் முன்சீட்டில் இருந்தவனிடம் எட்டி,

“அத்வி, இங்க பாரு சாக்லேட்” என காட்ட,

வாய் எல்லாம் பல்லாக அதனை அவன் வாங்க வர,

“அப்போ இங்க அண்ணா கிட்ட வா அப்போதான் தருவேன்” என ரியாஸ் கையை மடக்கி கொள்ள,

அதில் தன் சிறு விழிகளை இன்னும் சுருக்கி அவர்களை முறைத்தவன், “மாத்தேன் போ” என கைகளை அடமாக கட்டி கொண்டு முகத்தை திரும்பி கொள்ள, அதில் ரியாஸின் முகம் விழுந்து விட்டது.

அதை கதிர் கவனித்து சரி செய்ய வருவதற்குள், அத்வி ஓரக்கண்ணால் தங்களை பார்ப்பதை கண்ட ஆர்யன்,

“சரி ரியாஸ், அத்விக்கு வேண்டாமாம் நம்மளே இதை சாப்பிடலாம். ரேஷ்மிக்கு கொடுக்கலாம், அவ எல்லாம் குட் கேர்ள்! நம்மகிட்ட உட்கார்ந்துருக்க பாரு, நம்மளை அண்ணன்னு கூப்பிடுவா அப்பிடிதானே ரேஷ்மி??” என கேட்க,

“ஆமா, ஆமா அண்ணா, நான் குட் கேர்ள். சமத்து பொண்ணு எனக்கு சாக்லேட் கொடுங்க” என அவளும் அத்வியை கண்டு பேச,

ஆர்யனும் சாக்லேட்டை பிய்ப்பது போல் பாவ்லா காட்ட, சாக்லேட் பறிபோக போவதை கண்ட அத்வி கதிரை பாவமாக பார்க்க, அதில் சிரிப்பு வர பார்த்தது கதிருக்கு.

‘அடேய் கேடி! அங்கே வேலை ஆகலனதும் என்னை பாக்குறது பாரு. நோ..நோ..இது உனக்கும் உன் அண்ணன்களுக்கும் இடையில நடக்குறது, நான் தலையிட மாட்டேன் பா’ என நினைத்தவன் அத்வியை பார்க்காதது போல் காட்டி கொண்டான்.

ஆர்யன் மேலும் “சாக்லேட் பிய்க்க போறேன்” என்றவாறு கவரை பிரித்து விட, அதனை ஓரக்கண்ணால் கண்ட அத்விக்கு இனி கதிரும் தனக்கு உதவ போவது இல்லை என்பது தெரிந்ததே.

அவர்கள் சாக்லேட்டினை எடுத்து வாய் அருகே கொண்டு சென்ற நொடி,”அண்ணா!! நா சமத்து பாய்” என்றவாறு அத்வி சட்டென பின்பக்கம் தாவிட, சுதாரித்த ஆர்யன் அவனை மடியினில் தாங்கி கொண்டான்.

“அண்ணா! நா வந்த்துத்தேன் அண்ணா..! இனி உன் கூத பேசுதேன அண்ணா எனக்கு சாக்கி அண்ணா…” என வார்த்தைக்கு ஒரு அண்ணா போட்டு மயக்க,

அதில் சிரித்த ஆர்யன் அத்விக்கு அதனை ஊட்ட, பாதி வாங்கியவன் மீதியை மூவர் வாயிலும் திணிக்க, மகிழ்ச்சியாக நகர்ந்தது அந்த காலை வேளை.

கதிருக்கு தன் அண்ணன் மகனின் திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

இவர்கள் கிளம்பி சென்றதும், வேக வேகமாக மாடியேறி அவர்கள் அறை சென்ற முல்லை, கதிரின் பீரோ, கபோர்ட் எல்லாம் ஒன்று விடாமல் தேட ஆரம்பிக்க, அவள் தேடிய பொருள் மட்டும் கிடைக்கவே இல்லை.

கடந்த மூன்று நாட்களாக, அதாவது அவர்கள் ஏற்காட்டில் இருந்து திரும்பிய தினத்தில் இருந்து, முல்லை சுரபி சொன்ன அந்த பொருளை தேடி கொண்டிருக்கிறாள்.

இந்த காலை வேளையில் மட்டுமே அளவிற்கு தனிமை கிடைக்கும். சிறிது நேரம் சென்றால் சீதா அவளை தேடி கொண்டு வந்து விடுவாள். கீழே சென்றால் என்றால் அடுத்து அவளுக்கு இப்படி தனிமை கிடைக்கவே கிடைக்காது. மதியம் போல் கதிர் வந்து விடுவான் அத்வியை அழைத்து கொண்டு.அவர்களின் பின் அலையவே இவளுக்கு நேரம் சரியாக இருக்கும்.

ஆகவே, கிடைத்த இந்த நேரத்தை விடாது பற்றி கொண்டு அவள் தேட, ம்ஹீம்! அவள் தேடியது மட்டும் மூன்று நாட்களாகியும் கிடைக்க வில்லை.

இப்போதும் கிடைக்காது போக சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

“முல்லை ச்சீயர் அப்! தேடு, தேடு இங்க தான் இருக்கும். மனசை விட்டுடாம தேடு கிடைக்கும்” என தன்னை தானே தேற்றி கொண்டவளுக்கு மீண்டும் மீண்டும் பலன் இல்லாமல் போக,

“அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காதா? உண்மை என்னன்னு எனக்கு தெரியாமலேயே போய்டுமா??” என நினைத்து அச்சம் கொண்டவளிற்கு கண்கள் கலங்க சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

சிறிது நேரத்தில் சீதா வந்து விட, தன்னை தானே தேற்றி கொண்டவள் அவளுடன் கீழே சென்று விட்டிருந்தாள்.

இந்நிலையில் ஹரிஷ் மற்றும் ஆர்யனுக்கு மொட்டை அடிப்பதற்காக குடும்பம் மொத்தமும் அவர்களின் தந்தையின் பிறந்த ஊருக்கு செல்ல,

அங்கே முல்லை தேடிய பொருள் கிடைத்ததோடு கதிரை விட்டு பிரிந்தும் சென்றிருந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
29
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. முல்லை அவளை பத்தி மட்டும் யோசிக்கிறா. கதிர் மனசு கஷ்டப்படும்னு ஏன் யோசிக்கல.