
- அத்தியாயம் 7
கண்கள் அறியா காற்றைப் போலே
கனவில் என்னை தழுவியதென்ன
என்ற பாடல் வரிகளை முணுமுணுத்து கொண்டே வாகனத்தை இயக்கி கொண்டிருந்தவனின் அடர்ந்த கேசத்தை மழைக் காற்று வருடி விட்டது…
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்
பூவே உந்தன் முகவரியென்ன
‘ நீ இல்லாத இந்த மூணு வருஷமும் எனக்கு தூக்கமே வரதில்லை அம்மு…’ என மனதிற்குள் தன்னவளோடு பேசிக் கொண்டிருந்தவனின் கேசத்தை கலைத்து கலைத்து விளையாடியது மழை காற்று… அதை உள் வாங்கி கொண்டே வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தவனின் காதில் மெல்லிய தேம்பல் சத்தம் கேட்க
அது கேட்காதவாறு பிளேயரின் சத்தத்தை கூட்டி வைத்தான்…
கூந்தல் காட்டில் வழி தெரியாமல்
மாட்டிகொண்டேன் என் வழியென்ன…
அடுத்த வரிகள் சத்தமாக காதில் விழுந்தாலும் முன்பு கேட்ட மெல்லிய தேம்பல் ஒலி அவனின் மனதை பிசைய தொடங்கி இருந்தது. தன்னுள் எழும் மெல்லிய உணர்வை முழுவதும் வெறுத்தவனாய்
“மா, சும்மா, சும்மா மூக்கை உறிஞ்சிட்டே வர வேண்டாமுன்னு சொல்லுங்க மா,எரிச்சலா இருக்கு…” எனப் பல்லைக் கடித்தப்படி கூறினான்.
“இரத்தத்தை பார்த்து பயந்துட்டா போல தம்பி விடு…” என அவனிடம் பதில் கூறினாலும் பின்னால் திரும்பி
“சாதாரண காயம் தான் ஆனந்தி மா, ஹாஸ்பிட்டல்ல கூட அப்படி தானே சொன்னாங்க. இன்னும் ஏன் மா இப்படி அழற…” என அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.
“நான் அங்க போனதுனல தான் இவனும் வந்தான் இல்லைன்னா வந்து இருக்கவே மாட்டான். என்னால தான் என் பையன் விழுந்துட்டான்…” என அழுகையாக கூறினாள். ஆனந்தியின் பேச்சில் திகைத்து பார்த்தார் சீதா.
‘அவள் மகனா??, அவளின் மகன் என்றா கூறினாள்?” என அவரின் மனம் கேள்வி எழுப்பியது.
‘ஆம் அவளின் மகன் என்று தான் கூறினாள். பத்து மாதம் சுமந்து பெற்றால் தான் தாயா என்ன? ஒரு பெண் தாய்மையை உணர்ந்தாலே தாய் தானே,ஒரு பொண்ணாய் உனக்கு தெரியாதாத சீதா…’ என மதி பதில் மொழி கூறியது.
‘ இவ வேற ரொம்ப அக்ட் பண்றா, அதை பார்த்துட்டு இந்த அம்மாவும் எதுவும் சொல்லாம வராங்க…’ என நினைத்தவன் பக்கவாட்டில் திரும்பி தன் தாயை பார்த்தான். அவரின் ஜென் நிலையை பார்த்து பல்லைக் கடித்தவன் பின்னால் திரும்பி
“ஏம்மா பரதேவதையே, கொஞ்சம் அழாம தான் வாவேன். என் பொண்டாட்டிக் கூட இந்தளவுக்கு அழுது சீன் கிரியேட் பண்ணி இருக்க மாட்டா…” என முன்பை சத்தமாகவும் பின்னதை முணுமுணுப்பாகவும் கூறினான்.
மகனின் பேச்சில் தன் நினைவில் இருந்து வந்தவர் பக்கவாட்டில் திரும்பி “ஆமா ப்பா, அனு இருந்தாக் கூட இப்படி அழுது இருக்க மாட்டா…” என மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினார். அவரது பேச்சில் சட்டென முகம் இறுக அவரை எரிச்சலாக பார்த்தான்.
இங்கு ஆனந்தியோ, அபியின் கேலிக்கு பதில் கொடுக்க எண்ணி தலையை முன்னால் நீட்டி ‘ நீங்க…’ என ஆரம்பிக்கும் முன்பே “குளோரி…” என ஆனந்தியின் கன்னத்தை தன் பக்கம் திருப்பினாள் குந்தவி.
‘என்ன டா,..” என்பதைப் போல் பார்த்தாள் ஆனந்தி.
“குளோரி,எங்களுக்கு ஐஸ் கிரீம் வேணும்…” ஆனந்தியின் செவியில் தன் இதழ்கள் உரச மெல்லிய குரலில் கேட்டவளின் பார்வை சாலையின் வலது புறத்தில் இருந்த ஐஸ் கிரீம் பார்லரைத் தொட்டு மீண்டது.
குந்தவியை விழி விரிய பார்த்தவள் “உஷ்,..” என வாயில் கை வைத்து அபியை கண் காட்டினாள்.
“பிளீஸ், பிளீஸ்,…” அவளின் கன்னத்தை பற்றி கொஞ்சி கேட்டாள் குந்தவி. அதற்கு மேல் மறக்க முடியுமா என்ன? சற்று முன் அபி பேசியதை மறந்தவளாய்
“ஐஸ் கட்டி வாங்கி கொடுங்க சார்…” என்றாள். ஐஸ் கட்டி வாங்கும் சாக்கில் குந்தவி கூறியதை செய்ய நினைத்தாள். குந்தவி கூறியதை அப்படியே கூறியிருக்க வேண்டுமோ? அவன் கோப முகத்தை பார்த்தும் குழந்தை கேட்டதாக கூற விரும்பவில்லை அவள்.
ஏற்கனவே தன் தாயின் கூற்றில் எரிச்சலில் இருந்தவன் தற்போதைய ஆனந்தியின் பேச்சில் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டான். அவள் தன்னிடம் உரிமையாக ஐஸ் கிரீம் கேட்பது போல் தோன்றியது அவனுக்கு.
“வாட்…”என எரிச்சலில் கத்தியவன் வேகமாக காரின் விசையை அழுத்தவும் சீதா உட்பட பின்னால் அமர்ந்திருந்த மூவரும் விசையின் வேகத்தில் முன்னால் சென்று மீண்டும் தன் நிலைக்கு வந்தனர்.
தன்னால் தான் தன் தந்தை கோப்பபடுகிறார் என பயந்தே போனாள் குந்தவி… கண்களில் பயத்தை தேக்கி தந்தையே பார்த்தாள். குந்தவியின் பார்வையை கண்டுகொள்ளும் நிலையில் தான் அபி இல்லை… வேகமாக ஆனந்தியின் புறம் திரும்பி “என்ன கேட்ட…” என்றான் அழுத்தமாக
“ஐஸ் கட்டி சார்,ஐஸ் கட்டிஇஇஇ..” அவனை விட அழுத்தமாக கூறினாள்.
அவளின் அழுத்தமான பேச்சில் மேலும் எரிச்சலடைந்தவனாய்
“நீ என்னக் கேட்டாலும் வாங்கிக் கொடுக்க நான் ஒன்னும் உன் புருசனில்லை. அண்ட் நீ எங்க வீட்டுக்கு வந்த வேலைக்காரிங்கற லிமிட்டுகுள்ள இருந்தா இன்னும் நல்லது. என்னவோ என் மகன் என் மகன்னு உருகற, ஒண்ணு புரிஞ்சுக்க அவன் என் மகன் மட்டும் தான்” என்றவன் அடுத்து ஆனந்தி பேசும் முன்பே வாகனத்தை கிளப்பிருந்தான்.
அபியின் பேச்சு அவளுக்கு உட்சபட்ச கடுப்பைக் கிளப்பியது ‘அப்படி என்ன கேட்டுட்டேன்னு இந்தளவுக்கு பேசுறான் இவன்…’ என நினைத்தவள்
“இந்த அதட்டி பேசறதெல்லாம் என்கிட்ட வேண்டாம் சார், அதுக்கு வேற ஆளை பாருங்க… எனக்கு பொறந்தா தான் என் பையன்னு சொல்லனும்னு இல்லை… தாய்மை உணர்வை இவங்க கிட்ட உணர்ந்தாலே போதும்” இவளும் கோபத்தில் கத்த தொடங்க,
“ஆனந்தி…” சீதா அதட்டலாக அழைத்தார். இவளின் கத்தலால் அவனின் கோபம் அதிகமாகிட கூடாது என்ற காரணத்தால் தான் அவளை அடக்கிட நினைத்தார்.
“நான் என்ன பண்ணனேன்னு உங்க பையன் இந்த கத்து கத்தறாருன்னு நீங்களே சொல்லுங்க மேம்? நான் ஏதாவது தப்பா கேட்டேனா? சோழா நெத்தில வீக்கம் அதிகமா தெரிஞ்சுது. வீட்டுக்கு போக லேட் ஆகுமேன்னு ஐஸ் கட்டி வாங்கிக் கொடுங்கன்னு கேட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு? எதுக்காக இவரு இப்படி பேசிட்டிருக்காரு…” அவரிடம் எகிற நிற்கவில்லை என்றாலும் சற்று காட்டமாகவே பதில் கூறினாள்.
ஆனந்தி பேச பேச அபியை பார்த்தார் சீதா, அவனோ முகம் இறுக வாகனத்தை இயக்கி கொண்டிருந்தான். பெருமூச்சுடன் பின்னால் திரும்பி ஆனந்தியின் கையை அழுத்தமாக பிடித்து விட அது அவளை சற்றே மட்டுப்படுத்தியது.
பெருமூச்சுடன் கண் மூடி அமர்ந்து கொண்டவளின் மனமோ நிலைக் கொள்ளாமல் தவித்தது… என்னவெல்லாம் பேசுவிட்டான். என் மகன் என்று கூறியது தவறாம் ஏன் பத்து மாதம் சுமந்து பெற்றால் தான் பிள்ளையா? அவனிடம் என் தாய்மையை உணர்ந்தால் போதாதா? உண்மையாகவே அத்தனை ஆதங்கமாக இருந்தது.
என் மகன் என்ற வார்த்தையில் அவளது வாழ்க்கையின் திசையே மாறப் போகிறதென்று அப்பொழுது அவளுக்கு தெரியவில்லை
தந்தை தன் புது உறவைக் கடிந்து கொண்டதை எண்ணி வருத்தப்பட்ட சிறு உள்ளமோ “சாரி குளோரி, என்னால தான் அப்பா உன்னைத் திட்டிட்டாரு…” என மழலை மொழியில் அழுகைக் குரலில் கூறினாள் குந்தவி.
சட்டென விழிகள் திறந்து பக்கவாட்டில் திரும்பி குந்தவியை பார்த்தவள் “உஷ் அதெல்லாம் ஒன்னுமில்ல” என மெல்லிய குரலில் கூறியவளை தாவி அணைத்துக் கொண்டாள் குந்தவி.
குந்தவி அணைத்ததும் அவளின் மடியில் படுத்திருந்த சோழாவும் எக்கி அவளின் கழுத்தை கட்டிக் கொண்டான். இருவரின் அணைப்பிலும் சிலிர்த்து அடங்கியது ஆனந்தியின் மெல்லிய தேகம். அவர்களின் பிணைப்புக்கு காரணமானவனோ மூவரையும் கண்டும் காணாமல் வாகனத்தை இயக்கி கொண்டிருந்தான்.
என்னதான் சாலையில் கவனம் இருந்தாலும் அவனது மனம் முழுக்க மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வை தேடி ஓடியது.
*****
“அம்மு, அம்மு எழு,..” என அவசரமாக அனிதாவை எழுப்பினான்.
“போ அபி, தூக்கம் வருது.” என சிணுங்கினாள் பெண்ணவள். அவளின் சிணுங்களை இப்பொழுதும் ரசிக்க தோன்றியது அவனுக்கு. தன் மனம் போன போக்கை நினைத்து தன்னையே நொந்து கொண்டவன்
“ஏய் ஜில்லு, எழு டி பசங்களும், அத்தையும் வந்து இருக்காங்க…” மெல்லிய குரலில் கூறினான்.
“அத்தை தானே…” என்றவள்
“ஐயோ அம்மாவா…” என அவசரமாக எழுந்து அமர்ந்து திருதிருவென விழித்தாள்.
“ஐயோ டெம்ப்ட் பண்ற டி நீ…” என்றபடியே அவசரமாக அவளின் இதழில் அழுத்தமாக தன் இதழை பதித்து விட்டு நிமிர்ந்தவன்
“சீக்கிரம் குளிச்சுட்டு வா…” என அறையை விட்டு வெளியேறினான்.
குழந்தைகளுக்கு மூன்று வயது தொடங்கியும் தொடங்காமல் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டாள் அனிதா. இன்று அவர்களுக்கு விடுமுறை என்பதால் தாயிடம் அவர்களை விட்டுவிட்டு வந்திருந்தாள். தீடிரென பிள்ளைகளை அழைத்து வருவார் என்று எண்ணவில்லை அவள். இவனது அத்தையை விட அவளது அத்தை அத்தனை ஸ்வீட் பெரியதாக இருவரையும் கண்டுக் கொள்ள மாட்டார். ஆனால் அவனது மாமியார் அப்படியானவர் அல்ல, அதனாலயே அத்தனை பயம் இருவருக்கும்.
சிறிது நேரத்திலேயே அறையில் இருந்து வெளி வந்தவளின் கால்களைக் கட்டிக் கொண்டான் சோழன்.
“ம்ம்மா,…” என அண்ணார்ந்து தன்னை பார்த்தபடி அழைத்தவனை குனிந்து தூக்கியப்படி “ரெண்டு நாளா அம்மா, உங்களை பாக்காம எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா…” என்றவள் சோழாவின் கன்னங்களில் மாறி மாறி முத்தம் வைத்தாள்.
“ரெண்டு புள்ளையை பெத்துட்டேன்னு தான் பேரு, இன்னும் எட்டு மணிக்கு எழுந்துக்கற பழக்கம் மட்டும் போகல…” என்ற தாயின் குரலில் பொறுமையாக திரும்பி பார்த்தவள்
“நான் என்ன செய்வேன், வளர்ப்பு சரியில்ல..” என நமட்டு சிரிப்போடு சொல்ல,அவளை மூக்கு விடைக்க பார்த்தார் சாரதா.
தன் தாயின் முறைப்பை கண்டுகொள்ளாமல் “அக்கா எங்க பட்டு…” சோழாவின் கலைந்திருந்த கேசத்தை சரி செய்து கொண்டே கேட்டாள். ‘ அங்க…’ என்பதை போல் கையை காட்டினான் சோழன்.
“கிச்சன்ல என்ன செய்யறாங்க…” என்றவள் கிச்சனுக்குள் நுழைய குந்தவியை கையில் வைத்தபடி தோசை வார்த்துக் கொண்டிருந்தான் அபி.
“மாமா, எனக்கு ரெண்டு தோசை…” என்றவளை திரும்பி பார்த்தவன் சிரித்துக்கொண்டே தட்டை நீட்டி “குழந்தைக்கு ஊட்டி விடு, அப்படியே நீயும் சாப்பிடு…” என்றவன் மீண்டும்
“ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் அம்மு,..” என்றவனிடம் அவள் பதில் ?
****
“அப்பா…” என்ற குரலில் தன் நினைவில் இருந்து வந்தவன் அறையின் வாயிலில் நின்ற குந்தவியும்,சோழாவும் பார்த்தான்.
“ஏன் அங்கேயே நின்னுட்டீங்க? வாங்க” என்றவன் முகத்தை அழுந்த துடைத்தப்படி இருவரையும் பார்த்தான்.
“நான் தான் குளோரி கிட்ட ஐஸ் கிரீம் கேட்டேன்…” என்ற குந்தவியின் குரல் பயத்தில் நடுங்கியது. எங்கே தந்தை தன்னை அடித்து விடுவாரோ என்ற பயம் அவளிடம் நன்றாகவே தெரிந்தது.
பெண்ணரசியின் பயந்த முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ போலிருந்தது. சட்டென இருவரின் முன் முட்டி போட்டு அமர்ந்தவன் மகளின் முகத்தை அழுந்த துடைத்து விட்டப்படி “என்கிட்ட கேட்க வேண்டியது தானே டா. நான் வாங்கி தர மாட்டேனா? என்கிட்டக் கேட்க என்ன பயம்…” எனக் கேட்டவனின் குரலில் அத்தனை வலி இருந்தது.
‘அந்தளவிற்கு நான் அவர்களிடம் ஒட்டவில்லையா? இத்தனை விரிசலா எங்களுக்குள்’ என்ற மனதின் கேள்விக்கு பதில் அவனுக்கு தெரிந்தே இருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
1
+1
2
