- அத்தியாயம் – 1
பல ஏக்கர்களை விழுங்கிய பிரமாண்டமான மாளிகை அது. வீட்டின் வெளியில் ‘மாயா மாயா’ என்று எதிரொலித்த ரசிகர்களின் ஆர்ப்பாட்டமான குரல்களை கேட்டும் கேட்காததுமாக அமர்ந்திருந்தாள் மாயா.
சினிமாத் துறையில் கொட்டிக் கட்டி பறக்கும் இளம் நடிகை. பல ரசிகர்களின் கனவுக் கன்னியும் கூட.! பதினான்கு வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடினமாக போராடி இறுதியில் முன்னணி நடிகையின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறாள்.
முதலில் சிறுசிறு வேடங்களில் நடித்து பின்பு கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் அவ்வளவாக ஓடவில்லை தான். ஆனாலும் அடுத்தடுத்து இவளிடம் வந்த படங்கள் சினிமாத் துறையில் காலூன்றி நின்று சாதிக்க வைக்க கை குடுத்து நடிப்பும் அவளின் உயிர் மூச்சாக்கி விட்டது.
குடும்ப பெண்ணாக நடித்ததில் எந்த பயனும் இல்லாமல் போனதில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டித் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்து விட்டாள். இப்போது புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் வீட்டிற்கு இவள் வந்திருப்பது வெளியில் கசிந்ததில் ரசிகர் கூட்டமும் கூடி விட்டது அவ்விடத்தில்.!
திடீரென்று முளைத்த கூட்டத்தை அப்புறப்படுத்தும் வேலையில் காவல் துறையினர் இறங்கிட, இளைஞர்கள் கூட்டமும் நகர்வேனா என்று விடாமல் அவ்விடத்தையே சுற்றி வந்தது.
இது எதையும் கண்டுக் கொள்ளாமல் அடுத்த படத்திற்கான கதைப் பற்றி கூறுவதை அமைதியாக கேட்டிருந்தாள் மாயா. எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
“மாயா இந்த படத்துல கொஞ்சம் கவர்ச்சி காட்ட வேண்டி வரும்.. உனக்கு ஓக்கேவா.?” என்று தயங்கி தயங்கி கேட்டவரின் மேல் அசால்ட்டாக ஒரு பார்வையை வீசி “அது எப்பவும் காட்டறது தானே.? இப்ப என்ன புதுசா கேட்கற மாதிரி கேட்கறீங்க.?” என்று கேட்டு தோளைக் குலுக்கினாள்.
கேட்க நினைத்ததை “இல்ல மாயா… உனக்கு கல்யாணம்னு… ஒரு வேளை வருண் வேணாம்னு சொன்னா.?” என்று கேட்டவருக்கு சற்று பயம் எங்கு இவள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று விடுவாளோ என்று.!
“மேரேஜ் நடந்தா என்ன.? என் நடிப்புல யாரும் தலையிடறது எனக்கு பிடிக்காது” என்றாள் பட்டென்று. இதன் பிறகே சீராக மூச்சு விடவும் முடிந்தது அவரால்.
கதையை கூற வந்தவரைத் தடுத்து “ஹீரோ யாரு.?” என்று கேட்க, தயங்கி தயங்கி “வருண் தான் மாயா” என்றவரை பார்வையால் பொசுக்கி “****** இவரைப் போடுங்க” என்றாள் கட்டளையுடன்.
“கதைக்கு வருண் தான் கரெக்ட்டா இருப்பாரு.. நீங்க தான் மேரேஜ் பண்ணிக்க போறீங்களே.? அப்பறம் என்ன.? ரெண்டு பேரும் ஒன்னா நடிச்சு என் படத்தை ஹிட் பண்ணி குடுத்துருங்க” என்று சாதாரணமாக கூறியவரின் வார்த்தையை அவள் காதில் வாங்கியதாக தெரியவில்லை.
“தாராளமா வேற ஹீரோயினை நீங்க பார்த்துக்கலாம்” என்றவள் யாரின் பேச்சையும் கேட்காமல் வெளியேறினாள். அவரின் பார்வையும் சகிக்கவில்லை. பட வாய்ப்பு வேண்டுமென்றால் எந்த எல்லைக்கும் செல்வது எல்லாம் நின்று இதோடு இரண்டு வருடங்களாகி இருந்தது.
அவளுக்கு பிடித்தால் மட்டுமே சம்மதிப்பாள். இல்லையென்றால் இப்படித்தான் யாரையும் மதிக்காமல் கிளம்பி விடுவாள். இவள் அமைதியாக இருந்தாலும் இவளைப் பற்றி எதிர்மறைக் கருத்துக்கள் தான் அதிகமாக உலாவி வருகின்றது இரண்டு வருடங்களாக.!
அனைத்தையும் கண்டுக் கொள்ளாமல் இருக்க பழகி விட்டாள். அதனை எல்லாம் கடந்தும் வந்து விட்டாள். என்ன தான் எதிர்மறைக் கருத்துக்கள் உலாவினாலும் இவளின் ரசிகர் கூட்டங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.
முதலில் வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்து ரசிகர்களை குளிர்வித்தவள் இப்போது வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே அரிதாக இருந்தது. அப்போதும் இவளின் படம் என்றால் ரசிகர்களுக்கு ஏகப்போக குஷி தான். அதுவும் அவளுக்கு பிடித்த கதையம்சம் என்றால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறாள்.
அவளின் உதவியாளர் மீராவுக்கு அழைத்து “நான் சொன்னதை பண்ணிட்டியா.?” என்று கேட்க, “மேடம் என்ன இருந்தாலும் அவங்க வருண் சாரோட தம்பி.. இது வருண் சாருக்கு தெரிஞ்சா உங்க ரெண்டு பேருக்கும் தான் சண்டை வரும்.. நீங்க இப்படி பண்ண வேணாமே.. ப்ளீஸ் மேடம்” என்றாள் அவளின் நலனில் அக்கறைக் கொண்டு.
“சொன்னதை மட்டும் பண்ணு.. தேவையில்லாம வேற எதுவும் பேச நினைக்காத.. நீ இல்லனா நான் வேற யாராவதை வெச்சு வேலையை முடிச்சுக்கறேன்” என்று நெற்றிப் பொட்டில் அடித்ததை போல் கூறியதில் “சரிங்க மேடம்” என்றாள் மீரா வேறு வழியின்றி.
போனையே வெறித்து ‘மேடம் பண்றது சரியா.? தப்பா.? அவங்க நிலைல இருந்து பார்த்தா சரினு தான் தோணுது.. ஆனா இதனால மேடமோட வாழ்க்கை கேள்வி குறியானா..?’ என்று வருந்தினாள். ஆனாலும் மாயா சொன்னதை செய்யவும் தவறவில்லை.
அடுத்த சிலமணி நேரங்களில் ‘பிரபல நடிகரான வருண்தேவனின் சகோதரனான ராம்பிரபு பல பெண்களுடன் உல்லாசம்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக மாட்டினார்’ என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் சுடச்சுட செய்திகளாக மாறி இருந்தது இந்நிகழ்வு.
இதோடு ராம்பிரபு கைதாகும் செய்திகளும் ஒலிப்பரப்பாகிட, அதை தனது அலைப்பேசியில் புன்னகை முகமாக பார்த்திருந்தாள் மாயா. அவளின் முகத்தில் எதையோ பெரியதாக சாதித்து விட்ட நெகிழ்ச்சி. இதழ்களும் தாராளமாக விரிந்து கொண்டது.
ஹைதராபாத் படப்பிடிப்பு தளமொன்றில் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் கண்மூடி படுத்திருந்தான் வருண்தேவன். நடிகன் என்பதாலோ என்னவோ அவனின் தோற்றமும் அடிக்கடி மாறி விடும். ஒருசமயம் உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கோடு வைத்திருக்க வேண்டும். அதுவே இன்னொரு சமயம் உடலை முற்றிலும் குறைத்திருக்க வேண்டும்.
இப்போது நடக்கும் படப்பிடிப்புக்காக அவனின் உடல் எடை சற்று ஏறி இருந்தது. பார்க்கவும் அவனின் தோற்றமும் மாறுப்பட்டிருந்தது.
அலைப்பேசி அழைத்திட, அதை எடுத்துப் பேசியவனின் விழிகள் சட்டென்று முழித்து கொண்டது மட்டுமின்றி இவ்வளவு நேரம் அவனை ஒட்டி இருந்த சோம்பலும் விரட்டி அடிக்கப்பட்டிருந்தது.
சட்டென்று தொலைக்காட்சியையும் உயிர்ப்பித்திட, அதில் தன் தம்பி கைதான செய்தியை கண் இமைக்காமல் பார்த்தவனுக்கு இதற்கு காரணம் யாரென்று அவனுக்கு தெரியும்.
ஆனால் இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும் என்று தான் அவன் எதிர்பார்க்கவில்லை. ‘மாயா’ என்று பெண்ணவளின் பெயரைப் பல்லிடுக்கில் நசுக்கியவனுக்கு சற்று கடுப்பு தான்.
அன்னை அழைத்த அழைப்பையும் அவன் எடுக்கவில்லை. தங்கையின் அழைப்பையும் ஏற்கவில்லை. யாரிடமும் பேச அவனுக்கு துணிவுமில்லை.
அவன் எதிர்பார்த்து காத்திருந்தது மாயாவின் அழைப்பை மட்டும்தான். அந்தோ பரிதாபம் அவள் இவனுக்கு அழைக்கவே இல்லை. ‘நான் ஏன் உனக்கு அழைக்க வேண்டும்.?’ என்ற எண்ணம் போலும். ஆடவனிடம் பேசவும் அவள் விரும்பவில்லை.
சொன்னதை செய்து விட்டேன் என்று கூறிடவாவது தனக்கு அழைத்திருக்கலாமோ.? என்று தான் எண்ணினான் அவன்.
‘அண்ணா இப்ப நீ போனை எடுக்கல நானும் அம்மாவும் விஷத்தை குடிச்சுருவோம்’ என்ற தங்கையின் மிரட்டல் வீடியோவும் இவனை வந்தடைந்து விட, இருந்த இடத்திலே பிடித்து வைத்த பிள்ளையாராகி போனான் வருண்.
தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருந்த செய்தியை தன்னை மறந்து பே வென்று பார்த்து நின்றிருந்தவளின் முதுகில் சுள்ளென்று ஒரு வலிய கரம் தடத்தைப் பதிக்க, அதில் துள்ளி விலகி
யாரென்று திரும்பி பார்த்தவளுக்கு மூச்சே
நின்றது போலானது.
அச்சத்தில் வெலவெலத்து நின்றவளுக்கு கைகால்கள் வேறு ஆட்டம் காண தொடங்கியது. விழிகளும் கலங்கி உயிர்ப்பின்றி நின்றாள் அவள் லீலா.
“ஏய் கழுதை உன்கிட்ட என்ன சொன்னேன்.? நீ சொகுசா டிவி பார்த்துட்டு இருக்கீயா.?
அப்பறம் எப்ப வேலையை முடிக்கறது.? சோறு மட்டும் நேராநேரத்துக்கு கரெக்ட்டா
திங்க தெரியுதுல.? வேலை செய்ய மட்டும் நோவுதா.?” என்று மனசாட்சியின்றி
பேசியது வேறு யாருமில்லை லீலாவின் பெரியம்மா தான்.
மறுவார்த்தை பேசினாலும் திட்டுவார். பேசாமல் அமைதியாக இருந்தாலும்
கடித்து குதறுவார். அதனாலே “இல்ல பெரிம்மா..” என்று திணறிட, “போ போய்
துணியை துவைச்சு போட்டுட்டு வந்து வீட்டை துடைச்சு விட்டுட்டு சாப்பிட்டு
ஆக்கற வேலையை பாரு” என்று நாயை விரட்டுவதை போல் விரட்டினார்.
இது எப்போது நடக்கும் நிகழ்வுதான் என்றாலும் இன்றோ லீலாவின் மனது
வெறுத்து போனது.
‘தன் விருப்பத்தை செய்ய கூட தனக்கு உரிமையில்லை.. ஒரு நிமிடம் அந்த செய்தியை பார்த்து விட்டதில் இந்த வீடே
தலைகீழாக மாறி விட்டதா என்ன.? நாயை விரட்டுவது போல் தன்னையும்
விரட்டுகிறார்களே.? ஒரு நாளாவது தன்னிடம் அன்பாக பேச மாட்டார்களா.?’ என்று ஏங்க தொடங்கிய மனதை
கடிவாளமிட்டு அடக்க முயன்றவளுக்கு தோல்வியே கிட்டியது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் துவைக்கும் கல்லின் கீழே அமர்ந்தவளுக்கு அழுகையை அடக்கவே பெரும்பாடாக இருக்க, வாய்விட்டு கதறினாள் அப்பேதை. ‘அழுகாத’ என்று கூறத் தான் ஆளில்லாமல் போனது.
தொடரும்..