அத்தியாயம் – 3
அதிகபட்ச சினத்துடன் “இந்த நக்கல் பண்றது கேலி பண்றது எல்லாம்
என்கிட்ட வெச்சுக்கிட்ட தொலைச்சுருவேன் தொலைச்சு.. எங்கடி என் பொண்ணு?” என்று மிரட்டல் விடுத்து அதிகாரமாக கேள்வியையும் எழுப்பினாள் மாயா.
வாங்கிய அடியில் வருணின் தங்கையான சுபவர்ஷினியின் கன்னம் தீப்பிழம்பாய் எரிந்திட, மறுவார்த்தை பேசவும் திரணியற்று பார்வையை மட்டும் ஒரு அறையின் பக்கம் திருப்பிட, “என்கிட்ட உன் வேலையை காட்டுன சாவடிச்சுருவேன்… என் பொண்ணை தூக்கி வெச்சு மிரட்டுனா
பயந்துருவோமா.? இனி என் பொண்ணு மேல உன் கை பட்டுச்சு கொலை பண்ணிருவேன்” என்று சிடுசிடுத்தவள் முறைத்து விட்டு அவள் காட்டிய அறையை திறக்க முயன்றாள்.
அது உள்பக்கம் பூட்டி இருக்க, நொடியும் தாமதிக்காமல் படபடவென்று கதவைத் தட்டினாள். தன் மகள் யாருடன் இருக்கிறாள்.? என்று புரியாமல்
குழம்பினாள்.
கதவை திறந்தவனை கண்டு இவள் பேச்சற்று போனது என்னமோ சில
நொடிகள் தான். தன்னை மீட்டு அவனின் கையில் இருந்த தன் மகளை வாங்க முற்பட, ‘ஆஹான்’ என்று கேலிச்சிரிப்புடன் விலகி நின்றான் வருண்.
“யாரை கேட்டு தியாவை இங்க கூட்டிட்டு வந்த.? அவ நிழல் கூட இந்த வீட்டுல பட கூடாதுனு இருக்கேன்.. ஒழுங்கா தியாவை குடு” என்று கடுங்கோவத்துடன் சினந்திட, “என் பொண்ணை தூக்கிட்டு வர்ற
யாருகிட்ட கேட்கணும்.?” என்று அலட்சியமாக கேட்டான் அதுவும் ‘என்
பொண்ணு’ என்ற வார்த்தைகளில் மட்டும் அதிகமான அழுத்தம் குடுத்து.!
அவனை வெறித்து பார்த்து பின்பு கேலியுடன் “என்ன உன் பொண்ணா.? இது எப்போ இருந்து.? பாருடா சாருக்கு திடீர்னு
ஞானோதயம் வந்துருக்கு.? அது எப்படி வந்துருக்கும்.?” என்று தீவிரமாக யோசிப்பதை போல் பாவனை செய்து “ஓஹோ ஓஹோ புரிஞ்சுருச்சு.. உன் தம்பி ஜெயிலுக்கு போனதும் தான் சாருக்கு ஒரு
பொண்ணு இருக்கறதே ஞாபகம் வந்துருக்கு போல.?” என்று நக்கலுடன் வினவினாள்.
பின்பு “நீங்க பண்றதுக்கு எல்லாம் வாயை மூடிட்டு இருப்பேனு நினைக்காதீங்க.. ஒழுங்கா தியாவை குடுத்துரு” என்று மீண்டும் மகளை வாங்க முயல, அவளுக்கு பதிலுரைக்காமல் தியாவுடன் உள்ளே சென்றான் வருண்.
இதில் சினமேறியதில் அவனை பின்தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக மகளை பிடுங்கியவள் கிளம்ப எத்தனித்திட, சட்டென்று அறைக்கதவை மூடி அதில் சாய்ந்து கைகளை கட்டி கொண்டு நின்றான் அவன்.
“தள்ளு நான் போகணும்” என்று அவனை விலக்க முற்பட்டு இறுதியில் ஆடவனின் கைவளைவுக்குள் சிறைப்பட்டு போனவள் அவனை ஏறிட்டு பார்க்க தைரியமின்றி விழிகளை மட்டும் திருப்பி கொண்டாள்.
அவனை கண்டால் தான் பலகீனம் ஆகி விடுகிறோம். அவனின் முகத்தை மட்டும் பார்க்கவே கூடாது என்ற தீர்மானத்துடன் விழிகளை திருப்பி “விடு நான் கிளம்பணும்” என்றாள் சுருதியே இல்லாத குரலில்.
பெண்ணவளின் மதிமுகத்தை திருப்பி லேசாக கலங்க தொடங்கி இருந்த விழிகளை உற்று நோக்கி “பிரபு என்ன தப்பு பண்ணுனான்.? எனக்கு என்ன தண்டனை குடுக்க நினைக்கறீயோ அதைய தாராளமா
குடு.. நான் மனசார ஏத்துக்கறேன்.. அவனை விட்டுரு” என்றதில் கலங்கிய விழிகள் இப்போது அனலாக தகிக்க தொடங்கியது.
அவனை பட்டென்று தள்ளி விட்டு “என்னைய பார்த்தா உனக்கு பைத்தியக்காரி மாதிரி தெரியுதா.? நீ என்ன சொன்னாலும் கேட்டுக்குவேனு நினைக்கறீயா.? மாட்டேன் கேட்கவே மாட்டேன்.. அந்த அயோக்கியன் பண்ணுன தப்புக்கு தான் தண்டனை அனுபவிக்கறான்.
அவன் செஞ்ச தப்பை எல்லாம் வெளியுலகத்துக்கு கொண்டு வருவேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க” என்று கத்தி விட்டு வெளியேற முயன்றவளின் கையில் இருந்த மகளை
வாங்கியவன் விறுவிறுவென வெளியேறினான்.
இதை எதிர்பார்க்காத மாயா விக்கித்து நிற்க, மகளின் அழுகுரல் தாயவளின் செவியை தீண்டியதும் பதறிய வெளியே ஓடிட, அதற்குள் காரை எடுத்து கொண்டு சென்றிருந்தான் வருண்.
உடைந்து விட்டாள். மகளை பணயக்கைதியாக வைத்தே இவர்கள்
காரியத்தை சாதித்து கொள்கிறார்களே.? அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது.?
‘அய்யோ இனி விடாமல் அழுதால் காய்ச்சலும் மூச்சுத்திணறலும் வந்து விடுமே.? அய்யோ தியா..’ என்று
பதட்டமடைந்து அழுதாள்.
அவனை பின்தொடர்ந்து செல்லாமல் விட்ட தன் மடத்தனத்தை நொந்து இப்போது அவன் எங்கு சென்றான்.? என்று புரியாமல் பெண்ணவள் தான் நடுக்காட்டில் விட்டு சென்றதை போல் செல்லும் வழியறியாமல்
நிற்கிறாள் தன்னந்தனியாக.!!
“என்னயா வந்ததுல இருந்து யோசிச்சுட்டு இருக்க.?” என்று சரோஜாவும் கேட்டுப் பார்த்து விட்டார். பாஸ்கர் தான் இன்னும் பதிலுரைக்காமல் ஏதோ யோசனையிலே இருக்கிறார்.
கடுப்பாகி “யோவ் உன்னைய தான்யா” என்று மறுபடியும் சரோஜா கத்த, அவரை முறைத்து “இப்ப எனத்துக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்க.? உனக்கு நாயே பரவால்ல போல.?” என்று இவரும் சிடுசிடுத்தார்.
“உன்கிட்ட கேட்டேன்ல என் தப்புத்தான்.. என்னமோ பண்ணி தொலை” என்று வெடுக்கென்று சாடி விட்டு சரோஜா நகர்ந்திட, “ஏய் இங்க வாடி.. போய் தொலைஞ்சராத” என்று மனைவியை அழைத்தார்.
அவரை முறைத்தபடி சரோஜா இருந்தாலும் மீண்டும் வாயை திறந்து ‘என்ன விசயம்’ என்று வினவவில்லை. அவரே கூறட்டும் என்று அமைதியாக இருக்க, “எல்லாம் அந்த லீலா புள்ளைய பத்தி தான்” என்று பீடிகை போட்டார்.
“அந்த சிறுக்கி என்ன பண்ணுனா. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்ல.? ஓஓஓ பையன் கிடைச்சுட்டானா.?” என்று அவரே முடிவு
செய்து கேட்டிட, “இவ இருக்கா பாரு ஆமா இவ உலக அழகி.. சொன்னதும் நான், நீ ன்னு போட்டி போட்டு கொண்டு வர்ற.? அடி
கூறுகெட்டவளே வாயை மூட்டிட்டு இருடி” என்று அதட்டினார்.
பின்பு “ஒரு வயசான கிழவியை பார்த்துக்க ஆள் தேவைப்படுதுனு என் நண்பன் ஒருத்தன் சொன்னான்.. மாசம் சுளையா முப்பதாயிரம் கிடைக்கும்னா பார்த்துக்கோயேன்’ என்று தன் யோசனைக்கான காரணத்தை கூறினார்.
”எது முப்பதாயிரமா.?” என்று சரோஜாவும் வாயை பிளந்திட, “ம்ம்ம்ம்ம் ஆமா.. அதுக்கு மேல கேட்டாலும் குடுப்பாங்கனு சொல்றான்.. பணம் எல்லாம் பிரச்சனை இல்லைனு சொன்னான்.. ஆனா அங்கயே இருந்துபார்த்துக்கணும்.. இப்ப அது மட்டும் தான் எனக்கு யோசனையா இருக்கு” என்று லீலாவை அனுப்பி விடலாம் என்று சூசகமாக
உரைத்தார்.
அதைப் புரிந்து கொண்ட சரோஜாவும் இருக்கும் பணத்தை கணக்கில் கொள்ளாமல் “இதுல யோசிக்க என்ன இருக்கு.? வீட்டுல இருந்து இந்த சிறுக்கி எனத்த கிழிக்க போறா.? ஒரு கிழவியை கூட இவளால பார்த்துக்க முடியாதா என்ன.? இதைய பத்தி முழுசா விசாரிச்சுட்டு
வாங்க.. மத்ததை பேசிக்கலாம்..’ என்று தன் சம்மதத்தை அளித்து விட்டார்.
இவர்கள் இருவருமே முடிவு செய்து அதற்கான வேலையிலும் இறங்கிட, அன்று மாலையே இதைப்பற்றிய முழு தகவலுடன் வந்து விட்டார் பாஸ்கர்.
அவரின் முகம் பிரகாசமாக இருந்தது. வந்ததுமே ‘விசாரிச்சுட்டேன்” என்று பல்லை காட்ட, லீலா சமையலறையில் இருப்பதை சுட்டிக்காட்டி தனியாக சென்றவர்கள் “என்னயா இப்ப சொல்லு” என்று கேட்டார்.
“அந்த வீட்டுல அந்த கிழவியும் அவ பையனும் தான்.. அதுவும் பக்கத்து ஊர்ல தான்.. அவ பையன் வீட்டுல இருக்கவே மாட்டான்.. எப்ப வெளில் போவான் எப்ப வீட்டுக்கு வருவானு தெரியாதுனு சொல்றாங்க.. அந்த கிழவியைப் பார்த்துக்கிட்டு அவ கூடவே ஒரு ஆள் இருக்கற மாதிரி வேணும்னு கேட்கறாங்க.. சொல்லி இருக்கற சம்பளத்தை விட இப்ப
ஆள் கிடைச்சுட்டா அதிகமாவே குடுக்கறேனு சொல்லிருக்காங்க” என்று தன் முகமலர்ச்சிக்கான காரணத்தை முன் வைத்தார்.
இதை கேட்டு சரோஜாவின் முகமும் பிரகாசித்திட, “அப்ப இவளை அங்க
அனுப்பி விட்டரலாம்ங்க.. ஆனா அவ சம்பளத்தை நம்ம கைல தான் குடுக்கணும்னு முதல்லயே சொல்லிருங்க” என்றார் முன்னெச்சரிக்கையாக.
“இதைய யோசிக்காத முட்டாளா நானு? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. இப்ப அந்த புள்ளகிட்ட சொல்லணுமே.? என்னனு
சொல்ல போற.?” என்றவரிடம் “நான் பார்த்துக்கறேன்” என்று விட்டார் இவர்.
கூறியதை போலவே லீலாவிடமும் விசயத்தை கூறி “அங்க போற வழியை பாரு” என்று அதட்டல் விடுக்க, பாவம் அவளுக்கு ஒன்றும் புரியாமல் “நான் அங்க போகல பெரியம்மா.. இங்கயே இருந்துக்கறேன்” என்று தன் விருப்பமின்மையை தெரிவித்தார்.
சுறுசுறுவென ஏறிய கோவத்தில் “சனியனே இங்கிருந்து எங்க தலையை உருட்ட பார்க்கறீயா.? உனக்கு சோறு போட்டுட்டே
இருக்கணும்னு எங்களுக்கு என்ன தலையெழுத்தா.? அப்பவே வீட்டை விட்டு துரத்தி விட்டுருக்கணும்.. அப்பதான் புத்தி வந்துருக்கும்.. இப்படி வீட்டுல மகாராணியை போல வெச்சுருந்தது எங்க தப்புத்தான்..
ஒழுங்கா அங்க கிளம்பற வழியா பாரு” என்று கத்தி அடிக்கவும் செய்தார்.
அதிகமாக வெளியுலகம் அறியாத பேதைக்கு வெளியில் செல்லவே பயமாக இருந்தது. ‘அதனால் தான் இங்கயே இருந்து விடுகிறேன்’ என்று கூறி வாங்கியும் கட்டி கொண்டாள்.
இவர்களிடம் பேச்சு வாங்குவதற்கு பேசாமல் இவர்கள் சொல்லும் இடத்திற்கே சென்று விடலாம் என்றிருக்க, அதன் பிறகு இவள் வாயை திறக்கவே இல்லை. அவர்கள் சொன்ன அனைத்திற்கும் தலையாட்டி
பொம்மையாக தலையை மட்டும் அசைத்தாள்.
அதற்கும் ‘வாயைத் திறந்து பேசுடி’ என்று சரோஜாவிடம் அடியும் வாங்கிட, அப்போதும் வீம்புடன் மறுவார்த்தை பேச முயலவில்லை.
“அப்படியே எவனையாவது கூட்டிட்டு போய் தொலைஞ்சுரு.. இந்த வீட்டுப்பக்கம் வந்தராத.. சனியன் தொலைஞ்சுச்சுனு நாங்க நினைச்சுக்கறோம்” என்ற பெரியன்னையின் வழியனுப்பலில் வழியும்
கண்ணீருடன் அவ்வீட்டை விட்டு வெளியேறினாள் பெண்ணவள் தன்
வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்காக.!!!
தொடரும்..