தாமரையால் கண்ணீரை மறைக்க முடியவில்லை. மகனுக்காக உருகிக் கொண்டே இருக்க, மற்றவர்களுக்கு கோபம் தான் வந்தது.
“ம்மா அவனே நம்மல கண்டுக்கல.. நீங்க ஏன்மா அழுறீங்க?” என்று அருள் பொறுமையிழந்து கேட்க, “உங்கம்மாவுக்கு அவன்னா பாசம் அதிகம்டா” என்றார் பசுபதி.
“அவனுக்கு தான் எந்த பாசமும் இல்லையே. வேலை முடிஞ்சதுனு அம்போனு விட்டுட்டு போயிட்டான்” என்று சேகர் அலட்சிய குரலில் பேச, கதவை திறந்து உள்ளே வந்தார் லட்சுமியம்மாள். கவிதாவுக்கு நாளை தேர்வு இல்லை என்பதால், தந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்டாள். அதனால் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.
வந்ததும் நலவிசாரிப்பு முடிந்தது. லட்சுமி அம்மாள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “அத்த.. உங்க கிட்டயாச்சும் வீரா பேசுனானா?” என்று கேட்டு வைத்தார் தாமரை.
“பேசுனான் தாமரை”
“இங்க வரவே இல்ல அத்த. ஃபோனயும் எடுக்க மாட்டேங்குறான். எங்க இருக்கான்னு கூட தெரியல”
“அவன ஏன்மா தேடுற?”
“எங்கள இங்க விட்டுட்டு போயிட்டானே.. எதுனா ஒன்னுனா அவன தான கூப்பிடனும்?”
“ஏன் தாமரை? உனக்கு தான் இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்களே.. ஒருத்தனுக்கு வீரா வயசு தான். சின்ன பசங்க கூட இல்ல. அவங்க பார்த்துக்க மாட்டாங்களா?”
தாமரை திணறிப்போய் பார்க்க, “அத தான் நாங்களும் சொல்லுறோம். நாங்களே பார்த்துக்குறோம். அவன் ஒன்னும் தேவையில்லனு. இவங்க தான் கேட்காம அழுறாங்க” என்றான் சேகர்.
“அது தான் சரி. உன் மகனுங்க பார்ப்பானுங்க. என் பேரன விடுமா”
“அப்ப அவன் எனக்கு பிள்ளையில்லையா?”
“இல்ல தாமரை. என்னைக்கு உன் மாமியார் வீராவ அடிக்கும் போது, நீ நின்னு வேடிக்கை பார்த்தியோ, அன்னைக்கோட அவன் உனக்கு பிள்ளை இல்லனு ஆகிடுச்சு. நீ நல்லவ தாமரை. வாயில்லா பூச்சி. அதான் என் புள்ளைக்கு அப்புறம் நீ தனியா தவிக்க வேணாம்னு, நானே கல்யாணம் பண்ணி வச்சேன். நீ நல்லா வாழுவனு நினைச்ச நான், என் பேரன பத்தி யோசிக்காம விட்டேன்.”
இதைக்கேட்டு தாமரை கண்ணீர் விட, மற்ற யாருக்கும் பேச்சே வரவில்லை.
“இப்ப என் பேரன் சந்தோசமா இருக்கான். அவனுக்கு அம்மா அப்பாலாம் வேணாம். அப்பத்தா நான் போதும். நீ உன் குடும்பத்த பாரு தாமரை. அது போதும்”
“அவனும் என் குடும்பம்னு நினைச்சேன் அத்த.. இல்லனு சொல்லுறீங்களே” என்று தாமரை அழுகையோடு பேச, “அதான் உண்மை தாமரை. அவன விட்டுரு” என்றார்.
“எங்கம்மா விடனும்னு எல்லாம் அவசியமில்ல. உங்க பேரனே இவங்கள வேணாம்னு உதறி தள்ளிட்டு தான் போனான். எங்கம்மா மேல தப்பிருக்க மாதிரி பேசாதீங்க” என்று அருள் கோபப்பட, கவிதா தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு எல்லாரையுமே பிடிக்கும். பிரிந்து செல்வதை நினைத்தால், வருத்தமாக இருந்தது.
“ஆமாபா.. என் பேரன் தான் வேணாம்னு சொல்லிட்டான். அதுனால அத அதோட விடுங்க” என்று விட்டார்.
“அதான் முடிஞ்சதுனு சொல்லிட்டாங்கள்ள? இன்னும் கண்ண கசக்கி என்ன செய்ய போற?” என்று பசுபதி அதட்ட, தாமரைக்கு தான் மனம் வெதும்பியது.
எத்தனை பிள்ளை பெற்றாலும், வீரா தலைமகன் அல்லவா? இரத்தம் துடித்தது.
“நான் கிளம்புறேன். நாளைக்கு தான் ஊருக்குப் போறேன். அது வரை கவிதா உங்க கூட இருக்கட்டும்”
“நீங்க எங்க போவீங்க?”
“என் பேரன பார்க்க போறேன்”
‘அப்போ இவருக்கு மட்டும், அவன் இருக்கும் இடம் தெரியுமா?’ என்று ஆச்சரியமாக பார்த்தனர்.
“அத்த..”
“அவன வர சொல்ல மாட்டேன் தாமரை. அவன் ஏற்கனவே நிறைய செஞ்சுட்டான். இனியும் செய்ய சொல்ல மாட்டேன்”
இதைக்கேட்டு சேகருக்கு கோபம் வந்தது.
“அவன் என்ன செஞ்சான்? செலவெல்லாம் நாங்க தான் பார்த்தோம். என்னமோ அவன பண்ண மாதிரி நிறைய செஞ்சான்னு சொல்லுறீங்க? சும்மா வந்து நின்னான். அவ்வளவு தான்”
“ரோசமா? செஞ்சத சொல்லி காட்ட கூடாதுனு பார்க்குறேன்.” என்று லட்சுமி அம்மாள் கோபப்பட, “அப்படி என்ன செஞ்சான்னு தான் நானும் கேட்குறேன்” என்று பதிலுக்குக் கோபப்பட்டான்.
“தாமரை முகத்துக்காக பார்த்தேன். ஆனா நீங்க அவனுக்கு செஞ்சதுக்கு சொல்லாம போகக்கூடாது. இந்த ஹாஸ்பிடல்ல சாதாரணமா ஆப்ரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்னு தெரியுமா? தெரியலனா அக்கம் பக்கத்துல கேட்டு தெரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு மட்டும் ஏன் இந்த கம்மியான காசு? வீரா முகத்துக்காக, இந்த ஹாஸ்பிடல் முதலாளியே பணத்த குறைச்சுருக்காங்க. இங்க இந்த ரூம்க்கு சாதாரணமா எவ்வளவு வாடகை தெரிஞ்சுக்கிட்டீங்களா? நீங்க எல்லாம் இங்க இருக்கதுக்கான அனுமதி யாரு கொடுத்தா? இதெல்லாம் வீராவால கிடைச்சது.”
எல்லோருக்கும் அதிர்ச்சி தான். ஆனால் இவ்வளவு நாளாக இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. அவர்களை போலவே சிகிச்சை செய்தவர்கள் நிறைய செலவு செய்திருக்க, அவர்களிடம் மட்டும் குறைவாகத்தான் வாங்கினர்.
ஏன் என்ற காரணம் இப்போது புரிந்தது. மற்றவர்களை போலவே செலவு செய்திருந்தால், அவர்களது நிலை?
“அவன் பேரால உங்களுக்கு செலவு குறைஞ்சது. ஆப்ரேஷனும் உடனே நடந்துச்சு. ஆனா அவன் என் புள்ளை மாதிரி பாதில போயிடுவான்னு சொல்லுறீங்கள்ள?” என்று கேட்டு தாமரையை முறைக்க, தாமரை திடுக்கிட்டார்.
“அது…”
“பேசாத.. எந்த பெத்த அம்மாவும் புள்ளைய இப்படி சபிக்க மாட்டா. ஆனா நீ? எதையும் பேசாம போகனும்னு தான் வந்தேன் . நீயா பேசி கொட்ட வச்சுட்ட. இனிமே அவன கூப்பிடாத. அவன் கிட்டப் பேசாத. உன் குடும்பத்த மட்டும் பாரு. நாளைக்கு வந்து இவள கூட்டிட்டுப் போறேன்” என்றவர் உடனே வெளியேறி விட்டார்.
கவிதாவின் கண்கள் கலங்கி விட்டது. வீராவையா இப்படி சொல்லி வைத்தார்கள்? அருள் முதலில் புரியாமல் பார்த்து விட்டு, புரிந்ததும் அதிர்ந்து போனான். சேகருக்கு வீராவை அவ்வளவு பிடிக்காது என்றாலும், இது போன்ற வார்த்தையை அவனாலும் ஏற்க முடியவில்லை.
அங்கிருந்த எல்லோருமே அமைதியாக இருக்க, தாமரை மட்டும் கண்ணீர் விட்டு விசும்பினார்.
லட்சுமி அத்தனை கோபத்தையும் கொட்டி விட்டு, பேரனை பார்க்கக் கிளம்பி விட்டார்.
நேற்று ஜகதீஷ்வரி தான் அனைத்தையும் சொன்னார். வீரா சொல்ல வேண்டாம் என்று விட்டாலும், அவருக்கு மனம் பொறுக்கவில்லை. லட்சுமியிடம் சொல்லி விட்டார்.
“அவள விடாத லட்சுமி.. பெத்த பிள்ளைய எப்படி பேசிருக்கா?”
“இருக்கு அவளுக்கு”
“ஆனா வீரா உன் கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னான். சொன்ன மாதிரி காட்டிக்காத” என்று கூறி விட, லட்சுமி இப்போது பேசி விட்டு கிளம்பி இருந்தார்.
ஜகதீஸ்வரி வீட்டுக்கு வர, “வா லட்சுமி.. நேரா ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்ட.. போய் கைகால கழுவு” என்று அனுப்பி வைத்தார் ஜகதீஸ்வரி
லட்சுமி மருத்துவமனையில் நடந்ததை பேசிக் கொண்டிருக்க, வீரா வேலை முடிந்து வந்து விட்டான்.
வேலையில் சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது. அவனது இரண்டு வேலையும் சிறப்பாக தான் செய்து கொண்டிருக்கிறான்.
“அப்பத்தா.. எப்ப வந்தீங்க?”
“காலையிலயே வந்துட்டேன். ஆஸ்பத்திரில அவங்கள பார்த்துட்டு வந்தேன்”
“ஓஹோ.. இருங்க நான் ஃப்ரஸ்ஸாகிட்டு வர்ரேன். அப்படியே போய் ஃப்ளாட்ட பார்த்துட்டு வந்துடலாம்”
லட்சுமி தலையாட்டியதும் உடை மாற்றச் சென்றான். சில நிமிடங்கள் இருவருமே கிளம்பினர். ஜாக்ஷி சொன்ன ஃப்ளாட் தான். அலுவலகத்திற்கு மிகவும் பக்கத்தில் இருந்தது.
லட்சுமியோடு செல்ல, அவரும் அந்த இடத்தை அலசி ஆராய்ந்தார். வீட்டின் முதலாளி நன்றாகவே பேசினார். வேறு ஊரில் பெரிய வீடாக கட்டி விட்டார்களாம். இந்த ஃப்ளாட்டை விற்கும் பணம், அவர்களது முக்கியமான தேவைக்கு வேண்டும் என்றனர்.
இடம் இருவருக்குமே பிடித்து விட, பணத்தை பற்றிப்பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அடுத்த வாரம் பணத்தை கொடுத்து விட்டு ரிஜிஸ்டர் செய்வதாக பேச்சு முடிந்தது.
மீண்டும் வீடு திரும்பும் போது, இருட்டி இருந்தது.
“இடம் பிடிச்சுருந்துச்சா?” என்று விசாரித்தார் ஜகதீஸ்வரி.
அவர்கள் பேசிக் கொண்டிருக்க, வீரா ஜாக்ஷிக்கு செய்தி அனுப்பினான். அவள் சொன்ன ஃப்ளாட்டை வாங்கப்போவதாக.
வேலையில் இருந்த ஜாக்ஷி, செய்தியை படித்து விட்டு பதில் அனுப்பினாள்.
“எல்லாம் பேசியாச்சா?”
“அடுத்த வாரம் பணத்த செட்டில் பண்ணிட்டு, ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்”
“எவ்வளவு கேட்டாங்க?”
விலையை சொன்னதும், புருவம் உயர்த்தினாள்.
“இது அந்த ஏரியாவுக்கு டூ மச் ஆச்சே?”
“முழு பர்னிச்சரோட வாங்கிக்கலாம்னு இருக்கேன். தனியா எனக்காக அலைஞ்சு வாங்க முடியாது”
“ஓகே.. யுயர் விஸ். பட் நீங்க சிங்கிள் பேமண்ட்ல இவ்வளவு கொடுக்குற அளவு ரிச்னு எதிர்பார்க்கல”
இதைப்படித்ததும் வீராவுக்கு சிரிப்பு வந்தது.
“உங்கள விடவா நான் ரிச்? உங்க வீடு இருக்க ஏரியாவ பத்தி எனக்கு தெரியாதுனு நினைப்பா?”
இதை பார்த்து ஜாக்ஷியின் முகத்திலும் புன்னகை வந்தது.
“பால் காய்ச்சி பங்சன் வைப்பீங்களா?”
“வைக்கனும். இல்லனா அப்பத்தா விட மாட்டாங்க. வச்சு இன்வைட் பண்ணா வருவீங்களா?”
“அத அப்ப பார்ப்போமே”
அதோடு பேச்சு முடிந்து போனது.
லட்சுமியிடம் திரும்பியவன், “அவங்க எப்ப டிஸ்சார்ஜ்னு சொன்னாங்களா அப்பத்தா?” என்று கேட்டான்.
“அடுத்த வாரமோ என்னமோ சொன்னாங்க. ஏன்?”
“அவங்க ஊருக்கு போனப்புறமா வீட்ட வாங்கிக்கலாம். அவங்க இங்க இருந்தா, அவங்களையும் கூப்பிட வேண்டி வரும். இல்லனா ஒரு வார்த்தை சொல்லலனு ஊரே சொல்லிட்டு இருப்பாங்க”
“சரிபா.. அப்புறமாவே வாங்கிக்கலாம்”
“கவிதா எக்ஸாம் எப்ப முடியுது?”
“இன்னும் ரெண்டு பரிட்சை இருக்காம்”
“அது முடிச்சதும் அவங்க கிட்ட அனுப்பிட்டு, நீங்க இங்க வாங்க. ரெண்டு வாரம் கூட இருந்து வீட செட் பண்ணிக் கொடுத்துட்டு போங்க”
“நீ பேசாம இங்கயே இருக்கலாம்ல?” என்று ஜகதீஸ்வரி லட்சுமியிடம் கேட்க, “அதுக்கு மட்டும் ஒத்துக்கவே மாட்டாங்க” என்றான் வீரா சலிப்பாக.
“அங்க இருக்க வேலைய விட்டுட்டு, இங்க வந்து நான் என்ன செய்யுறது? எல்லா நேரமும் வீட்டுக்குள்ள கிடக்குறதுக்கா?” என்று மறுத்தார் லட்சுமி.
அடுத்த நாள் லட்சுமி கவிதாவோடு கிளம்பி விட, நாட்கள் அமைதியாக சென்றது. பசுபதியும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
வீரா அவர்களை பார்க்கவில்லை. லட்சுமி மூலம் விசயம் தெரிந்தாலும், வேலை இருப்பதாக மறுத்து விட்டான். வரும் போது அவர்களுக்காக எல்லாம் செய்தவன், கிளம்பும் போது வழியனுப்பவும் வரவில்லை. தாமரை உள்ளே புழுங்கி செத்துக் கொண்டிருந்தார். அவருக்கு மகனது கோபம் புரியத்தான் செய்தது. ஆனால் அதை எப்படி போக்குவது என்று விளங்கவில்லை.
சேகரும் அருளும் எல்லாவற்றுக்கும் அலைந்து, கடைசியாக கார் ஏற்பாடு செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் கிளம்பிய இரண்டு நாட்களில், கவிதாவை அங்கே விட்டு விட்டு லட்சுமி கிளம்பினார்.
“அங்க வீடு வாங்க போறானாம். அதுக்கு தான் போறேன்” என்றார் தாமரை கேட்டதற்கு.
“வேலை கிடைச்சதாமா?” என்று கேட்க, “ம்ம்.. அதெல்லாம் கிடைச்சுருச்சு” என்றார்.
இருந்த கோபத்தில் விவரங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. இன்று தான் தன்மையாக பதில் சொன்னார்.
“நல்ல வேலையா? முதல்ல பார்த்த வேலைய விட்டுட்டு வேற தேடுறான்னு சொன்னானே.. நல்ல வேலை கிடைக்கனும்னு நினைச்சேன்”
“அதெல்லாம் நல்ல வேலை தான். முன்ன விட இப்ப நிறைய சம்பளம் தான்”
“அப்படியா? அப்ப சரி தான்”
அதற்கு மேல் வீராவைப்பற்றி எதையும் சொல்லாமல் கிளம்பி விட்டார். வாங்கும் வீட்டின் விவரங்களை கேட்டதற்கு, அங்கு போனால் தான் தெரியும் என்று சமாளித்து விட்டார்.
லட்சுமி கிளம்பி வர, வீட்டின் ரிஜிஸ்டரேஷன் முடிந்தது. பணத்தை கொடுத்து வீட்டை வாங்கிக் கொண்டான் வீரபத்திரன்.
“பர்னிச்சர் எதுவும் வாங்குறது இல்ல. பெயிண்ட் மட்டும் அடிச்சுட்டா போதும்” என்று பேசிக் கொண்டிருக்க, ஜாக்ஷி வந்து சேர்ந்தாள்.
வரும் போதே அவள் முகம் தீவிரமாக இருக்க, “ஹாய் மேடம்” என்றான் வீரா.
“ஹாய்” என்றவள், லட்சுமியை கவனித்து நலம் விசாரித்தாள்.
அவளது முகத்தை நன்றாக கவனித்து விட்டு, “பாட்டி ரூம்ல இருக்காங்க” என்றான்.
உடனே ஜகதீஷ்வரியை தேடிச் சென்று விட்டாள்.
வீரா அவளுக்கு காபி கொண்டு வர சொல்லி வைக்க, “ரொம்ப பரபரப்பா இருக்கே இந்த பொண்ணு? எதாவது பிரச்சனையா?” என்று கேட்டார் லட்சுமி.
“இருக்கலாம்.” என்று தோளை குலுக்கியதோடு அதை விட்டு விட்டான்.
தொடரும்.
லஷ்மி பாட்டி சூப்பர்..! வீராவை மாதிரி மனசுல வைச்சுக்கிட்டு புலம்பாம மனசுல இருக்கிறதை
வெளிப்படையா கேட்டுட்டாங்க.
லஷ்மி பாட்டி மருமகளை பத்தி யோசிச்சாங்களே தவிர பேரனை பத்தி யோசிக்காம போனதாலத்தான் இன்னைக்கு
தாய் இருந்தும் இல்லாத சூழ்நிலை வீரவாக்கு. அவன் அம்மாவை விட்டுக் கொடுத்ததாலத்தான், இன்னைக்கு புருசனும் இன்னும் மூணு பிள்ளைங்களும் இருக்காங்க இப்பவாவது தாமரைக்கு இது
புரிஞ்சா சரி தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797