உயிலை பற்றிப் பேசி முடித்து விட்டு, நேராக வேலையை பார்க்கச் சென்ற ஜாக்ஷி, அப்போது தான் வீடு திரும்பி இருந்தாள்.
“காபி போடவா?” என்று கேட்டுக் கொண்டு சுபத்ரா வந்து நின்றாள்.
“காபி வேணாம். எதாச்சும் ஸ்வீட்டா பண்ணு. சாப்பிடனும் போல இருக்கு” என்றதும், சுபத்ரா சந்தோசமாக தலையாட்டி விட்டு ஓடி விட்டாள்.
ஜாக்ஷி குளித்து உடையை மாற்றிக் கொண்டு வந்தாள். கைபேசியில் பார்வை பதிந்து இருந்தது.
சில நிமிடங்கள் கழித்து வாசலுக்கு கார் வர, எழுந்து சென்று பார்த்தாள். பாட்டியின் காரை பார்த்ததும் ஆச்சரியத்தோடு வாசலுக்கு சென்றாள்.
மறுபக்கமிருந்து வீரா இறங்க, அடுத்த ஆச்சரியத்தோடு நின்று விட்டாள்.
‘இவன் எங்க இங்க?’ என்று யோசனை ஓட பாட்டியும் இறங்கி வந்தார்.
“ஹாய்” என்று வீராவை பார்த்து சொல்ல, “ஹாய்” என்றான்.
“என்ன இங்க வந்துருக்கீங்க? இவ்வளவு நேரம் அங்க தான இருந்தேன்?” என்று பாட்டியிடம் கேட்டுக் கொண்டே உள்ளே சென்றாள்.
மூவரும் உள்ளே வர, சுபத்ரா வந்து எட்டிப் பார்த்தாள்.
“எதுனாலும் அங்க இருக்கும் போதே சொல்லிருக்க வேண்டியது தான?”
“சொல்லலாம். பொறு” என்றவர் அமர்ந்து கொண்டு, வீராவையும் அமர வைத்தார்.
சுபத்ரா பாட்டியை பார்த்ததும் ஓடி வந்து நின்றாள்.
“நல்லாருக்கியாமா?” என்று கேட்டதும் பலமாக தலையாட்டியவள், “எதாவது கொண்டு வரவா?” என்று கேட்டாள்.
“வேணாம்.”
“ஸ்வீட் பண்ண சொன்னேன்ல? அத நிறைய பண்ணி எடுத்துட்டு வா போ” என்று ஜாக்ஷி சொன்னதும், உடனே சென்று விட்டாள்.
“இந்த பொண்ணு சுபத்ரா.. இங்க எல்லா வேலையும் அவ தான் பார்க்குறா” என்று பாட்டி கூற, வீரா தலையாட்டி கேட்டுக் கொண்டான்.
“இப்ப என்னனு சொல்லலாமா?” – ஜாக்ஷி
“வீராவ கம்பெனில நீ முதல்ல இருந்த இடத்துல உட்கார வைக்கலாம்னு இருக்கேன்”
“வாட்? வைஸ் பிரசிடன்ட்டா?” என்று அவள் அதிர்ச்சியோடு கேட்க, வீரா கூட அதிர்ச்சியானான்.
“ஆமா”
வீராவும் ஜாக்ஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் இதை எதிர்பார்க்கவில்லை. வேலை நிச்சயமாக பெரிய பதவியாக தான் இருக்கும் என்று நினைத்தான் தான். ஆனால் இது அதிகப்படி.
ஜாக்ஷிக்கு முதலில் அதிர்ச்சியை சமாளிக்க வேண்டியிருந்தது. சமாளித்ததும், அமைதியாக பேச முயற்சித்தாள்.
“கம்பெனிக்குனு ரூல்ஸ் இருக்கு பாட்டி. நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல. தெரிஞ்சவங்கனு யாரையும் தூக்கி அவ்வளவு பெரிய இடத்துல உட்கார வைக்க முடியாது”
“எல்லாம் எனக்கும் தெரியும். நானும் திறமையே இல்லாத ஒருத்தன கூட்டிட்டு வந்து பேசிட்டு இருக்கல”
“பட் இவரோட திறமைய பத்தி எனக்கு எதுவும் தெரியாதே?”
“அத நீ தான் தெரிஞ்சுக்கனும். தெரிஞ்சுட்டே நீ போஸ்டிங் போடலாம். என்ன வீரா உனக்கு ஓகே தான?”
வீரா சில நொடிகள் பதில் சொல்லவில்லை.
“இது நானே எதிர் பார்க்காதது தான். பட்.. முயற்சினு வந்தாச்சு. செஞ்சு பார்த்துடலாம்” என்று கூறி, ஜாக்ஷியை பார்த்தான்.
ஜாக்ஷிக்கு நடப்பதை நம்ப முடியவில்லை. பாட்டி இப்படி யாரையும் அலுவலகத்தில் நுழைய விட்டது இல்லை. எதுவாக இருந்தாலும், அலுவலகத்தில் இருப்பவர்கள் தலைமையில் தான் நடக்கும். முதல் முறையாக, இவனை கொண்டு வந்து நிறுத்துகிறார்.
“ஓகே. பட் நான் என்ன முடிவு சொன்னாலும் நீங்க அக்சப்ட் பண்ணிக்கனும்”
பாட்டியின் முகத்தில் புன்னகை வர, தலையாட்டி விட்டு எழுந்தார்.
“நான் போய் இந்த சுபத்ரா என்ன பண்ணுறானு பார்க்குறேன்” என்று விட்டு சென்று விட்டார்.
“உங்க பேரு?”
“வீரபத்திரன்”
“இதுக்கு முன்ன எங்க வேலை பார்த்தீங்க?”
நிறுவனத்தின் பெயரை சொல்ல தலையாட்டினாள்.
“என்ன நடக்குது?”
“உங்க பாட்டி கிட்ட கேட்க வேண்டியது தான?”
“அவங்க சொல்ல மாட்டாங்க”
“நான் சொல்லுவேன்னு நம்பிக்கையா?”
“இல்லனா கேட்டுருக்க மாட்டேன்”
அவளது நம்பிக்கையில் புன்னகை மலர, நடந்ததை சொன்னான். ஜாக்ஷிக்கு பாதுகாப்பு என்பதை மட்டும் மறைத்து விட்டான்.
“பாட்டி சொன்னாங்கனு வேலைய விட்டீங்களா?”
“எஸ்”
“இப்ப நான் வேலை தர மாட்டேன்னு சொன்னா?”
“உங்க கம்பெனில இன்டர்வியூ நடக்கும்ல? அதுல பார்த்துக்கலாம்”
அவனது தன்னம்பிக்கை, அவளை இப்போது ஆச்சரியப்படுத்தியது.
“அவ்வளவு கான்ஃபிடண்ட்டா?”
“கான்ஃபிடண்ட் தப்பில்ல.. ஓவர் கான்ஃபிடண்ட் தான் தப்பு”
“ரியலி?”
“என்ன நினைக்கிறீங்க? உங்க பாட்டி வேலை தர்ரேன்னு சொன்னதும், உடனே ஓடி வந்து நிக்கிறானேனா?”
அவளுக்கு அப்படித்தான் தோன்றியது. அதனால் அமைதியாக பார்த்து வைத்தாள்.
“உங்க பாட்டிய எனக்கு எத்தனை வருசமா தெரியும்னு தெரியுமா? அவங்க முன்னாடி தான் நான் வளர்ந்தேன்னு சொல்லலாம். படிச்சு முடிச்சு வேலைக்கு சேரும் போதே, நான் நினைச்சுருந்தா உங்க கம்பெனில வேலைக்கு சேர்ந்துருக்க முடியும். என் பாட்டி கேட்டா, உங்க பாட்டி முடியாதுனு சொல்லிருக்க மாட்டாங்க. ஆனா நாங்க கேட்கல. நட்பு வெறும் நட்பா தான் இருக்கனும். நன்றிக்கடனாக கூடாது இல்லையா?”
“அப்ப இப்ப என்ன?”
“உங்க பாட்டிக்கு என் திறமை மேல நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லனா கேட்டுருக்க மாட்டாங்க. அண்ட்.. உங்க கம்பெனி வேல்யூ எனக்கு ரொம்ப நல்லா தெரியும். இப்படி ஒரு ஆஃபர் வரும் போது, மரியாதைக்கோ கூச்சத்துக்கோ பயந்து வேணாம்னு சொல்லுறது முட்டாள்தனம். நான் முட்டாள் இல்ல. நானா தேடி போகல. தானா வர்ரத முயற்சி கூட பண்ணாம விடுறது தப்பில்லையா?”
“அந்த முயற்சிகாக, பார்த்துட்டு இருந்த இருந்த வேலைய விட்டீங்களே? அது தப்பா போயிட்டா?”
“போகாது. இத்தனை வருச எக்ஸ்பீரியன்ஸ்க்கு, இங்க இல்லனா இன்னொரு வேலைய தேடிக்க முடியும் என்னால. ஆனா ட்ரை பண்ணாம விட்டனேனு வருத்தபடக் கூடாது.”
“குட்.. பிராக்டிக்கலா யோசிக்கிறீங்க”
வீரா தலையாட்டி வைத்ததோடு வேறு எதுவும் சொல்லவில்லை.
“நான் யோசிச்சுட்டு டூ டேய்ஸ்ல சொல்லுறேன்”
“ஓகே”
பேசி முடித்ததும், ஜாக்ஷி எழுந்து மற்றவர்களை பார்க்கச் சென்றாள். சில நிமிடத்தில் ஆளுக்கொரு கிண்ணத்தில் பாயாசம் வந்தது.
சுபத்ரா, “வேறு எதுவும் வேணுமா?” என்று கேட்டு நிற்க, “ஒன்னும் வேணாம். நீயும் சாப்பிடு” என்று அனுப்பி வைத்தாள் ஜாக்ஷி.
சுபத்ரா சென்று விட, மூவரும் பாயாசத்தை ருசித்தனர்.
“என்ன முடிவு பண்ணிருக்க?”
“ரெண்டு நாள் டைம் கொடுங்க பாட்டி. யோசிச்சு சொல்லுறேன். பட்.. அது வரை நீங்க என்ன செய்வீங்க?” என்று வீராவிடம் கேட்க, “வீட்டுல ஒரு இஸ்யூ. அத பார்க்க வேண்டியது தான்” என்றான்.
“ஓகே.” என்றதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
எதெதோ பேசி விட்டு, மீண்டும் பாட்டியை அழைத்துக் கொண்டு கிளம்பினான் வீரா.
வீடு வந்து சேர்ந்ததும், “நைட் இங்கயே தங்கிக்க வீரா. நாளைக்கு எல்லாரையும் வர சொல்லி, செக் அப் முடிச்சுட்டு ஒன்னா கிளம்பு” என்றார் ஜகதீஸ்வரி.
“அவங்களுக்காக நான் ஹோட்டல்ல ரூம் போடனும் பாட்டி. நாளைக்கே வர முடியாது. ஒரு நாள் ஆகும்.”
“பரவாயில்ல. உனக்கு அவசர வேலை எதுவும் இல்லல? ஒரு நாள் இங்கயே இரு. உனக்கு ஆஃபிஸ பத்தி எல்லாம் சொல்லுறேன்”
இதற்கு மேல் மறுக்க வேண்டாம் என்று தலையாட்டி விட்டான்.
தாமரை, பசுபதி இருவரும் சேகரோடு கிளம்பி விட, கவிதாவையும் அருளையும் லட்சுமியிடம் விட்டு விட்டனர்.
வீரா ஜகதீஸ்வரியின் வீட்டில் தான் இருந்தான். பாட்டி அவனை அமர வைத்து, அலுவகத்தில் முக்கியமான சிலரை பற்றிக் கூறினார்.
“இவ்வளவும் சொல்லுறீங்களே.. உங்க பேத்தி வேலை இல்ல வெளிய போடானு சொல்லிட்டா என்ன செய்யுறதாம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டு வைத்தான்.
“ஜாக்ஷி முட்டாள் இல்ல வீரா. எதையும் முயற்சி பண்ணி பார்க்காம விட மாட்டா. உன்னை பத்தியும் நல்லா தெரிஞ்சுட்டா, வேணாம்னு சொல்ல மாட்டா”
“அப்படியா சொல்லுறீங்க? சரி பார்க்கலாம்.”
பாட்டி சொன்ன விவரங்களை எல்லாம் முழு மனதாக கேட்டுக் கொண்டான். அதோடு அவரோடு காரை ஓட்டிக் கொண்டு வெளியே சென்று வந்தான்.
ஒரு நாள் முழுவதும் கடந்து போக, தாமரையின் குடும்பம் வந்து சேர்ந்தது.
அவர்களை அழைத்துச் சென்று, ஹோட்டலில் தான் விட்டான்.
“மதியம் சரியா ஹாஸ்பிடல்ல இருக்கனும். கிளம்பி இருங்க. வந்து நானே கூட்டிட்டு போறேன்”
“நீ எங்க வீரா இருக்க?”
“ஃப்ரண்ட் வீட்டுல”
“வேலைய விட்டுட்டு இங்க என்ன செய்யுற?”
“வேலை தேடுறேன்”
“இருக்க வேலைய விட்டுட்டு வேற தேடுறியா? என்ன வீரா இது?”
“பார்த்தத விட பெட்டரா ஒரு வேலை வேணும்னு தோனுச்சு. அதான் விட்டேன்” என்று சாதாரணமாக சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
மதியம், சரியான நேரத்திற்கு டாக்சியோடு வந்து மூவரையும் அழைத்துச் சென்றான்.
ஜகதீஸ்வரி மருத்துவமனையை பார்த்ததும், “ரொம்ப பெருசா இருக்கே? நிறைய செலவாகுமா?” என்று சேகர் தான் கேட்டான்.
“அதெல்லாம் ஆகாது. இது பாட்டிக்கு தெரிஞ்ச ஒருத்தரோட ஹாஸ்பிடல். குறைஞ்ச செலவுல பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க”
“அதெப்புடி பண்ணுவாங்க? ஹாஸ்பிடலுக்குனு ரூல்ஸ் இருக்குல? யாரோ ஒருத்தருக்காக எப்படி குறைப்பாங்க?”
“குறைக்க மாட்டாங்க. டொனேஷன் மாதிரி ஏற்பாடு பண்ணிடுவாங்க. பாதி செலவு அவங்க மீதி நம்ம.”
“ஓ.. அப்படியா?”
“அதுக்கு சைன் கேட்டு வருவாங்க. பார்த்து போடுங்க. இப்ப செக் அப் முடிஞ்சு டெஸ்ட் எல்லாம் எடுத்து, டாக்டர் என்ன சொல்லுறாங்கனு கேட்போம்”
பேசிக் கொண்டிருக்கும் போதே கைபேசி இசைக்க, அதை எடுத்துக் கொண்டு தள்ளிச் சென்றான் வீரா.
அவனுடைய நண்பன் அழைத்திருந்தான். திடீரென வேலையை விட்டதை பற்றி பேசிக் கொண்டிருக்க, “ஹலோ” என்றாள் ஜாக்ஷி.
அவளது குரலை உடனே கண்டு பிடித்துத் திரும்பி பார்த்தான்.
“அப்புறம் பேசுறேன். வை” என்று அழைப்பை துண்டித்து விட்டு, “சொல்லுங்க” என்றான்.
“என்ன ஹாஸ்பிடல்ல?”
“ஃபேமிலியோட வந்தேன்”
“எதாவது பிரச்சனையா?”
“ம்ம்.. கிட்னி டிரான்ஸ்ப்ளான்ட் பண்ணனும்”
‘இதான் அந்த பேமிலி இஸ்யூவா?’ என்று நினைத்தவள், “டாக்டர பார்த்தாச்சா?” என்று கேட்டாள்.
“இல்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”
“யாருக்கு பண்ணனும்?”
ஒரு நொடி யோசித்து விட்டு, “என் அம்மாவோட ஹஸ்பண்ட்க்கு” என்று விட்டான்.
ஜாக்ஷியின் புருவம் உயர, “என் அப்பா எப்பவோ இறந்துட்டாரு. அம்மாக்கு செகண்ட் மேரேஜ். சோ..” என்றான்.
“அவர அப்பானு கூப்பிட மாட்டீங்களோ?”
“கூப்பிடக் கூடாதுனு சொல்லி தான் வளர்த்தாங்க”
“உலகமே சுயநலவாதி இல்ல?”
“நானும் தான். ஏன் நீங்க இல்லையா?”
“இந்த உலகத்துல வாழ்ந்துட்டு, இல்லனு சொன்னா பச்சை பொய்யா இருக்காது?”
ஜாக்ஷியின் எதிர் கேள்வியில் அவன் முகத்தில் புன்னகை மலர, அது அவளிடமும் எதிரொலித்தது.
‘இவன் சிரிச்சு இப்ப தான் பார்க்குறேன். பார்க்குற நேரமெல்லாம் எதாவது யோசிச்சுட்டு தான் இருப்பான்’ என்று அவளும், ‘இந்த பொண்ணு சிரிச்சா தான் கேசுவலா இருக்கா. மத்த நேரமெல்லாம் ரொம்ப இறுக்கமா இருக்கா’ என்று அவனும் மனதில் சொல்லிக் கொண்டனர்.
“எனக்கு டைம் ஆகுது. எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க”
“கேட்காமலே உங்க பாட்டி பண்ணிட்டாங்க. பட் நான் தான் அவங்க கிட்ட எதையும் சொல்லல”
“ஏன்?”
“தெரிய வேணாம். சான்ஸ் கிடைச்சா இன்னொரு நாள் சொல்லுறேன். இப்ப உங்க வேலை கெட வேணாம்”
“ஓகே. பை.”
“பை”
ஜாக்ஷி சென்று விட, சேகர் அவனை நோக்கி சந்தேக பார்வையோடு வந்தான்.
“என்ன?”
“அடுத்து நாம தான்னு அம்மா சொன்னாங்க”
எதுவும் பேசாமல் வீரா நடக்க, சேகர் அவனை சந்தேகமாக பார்த்தான்.
‘திடீர்னு வேலைய விட்டுட்டு இங்க வந்து வேலை தேடுறேன்னு சொல்லுறான். இப்ப எதோ ஒரு பொண்ணு கூட சிரிச்சு பேசிட்டு இருக்கான். எதாவது லவ் மேட்டரா இருக்குமோ?’ என்று சந்தேகத்துடனே இருந்தான்.
பசுபதியை பரிசோதித்து முடித்து விட்டு, அங்கேயே இரண்டு நாட்கள் அட்மிட் ஆக சொன்னார் மருத்துவர். கிட்னி உடனே கிடைத்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து விடலாம் என்று கூறி விட்டார்.
மருத்துவ மனையில் அவர்களை தங்க வைத்து விட்டு, வீரா மட்டும் திரும்பினான்.
வந்ததும் பாட்டி விசாரிக்க, நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான்.
“நான் வந்து பார்க்கலாம்னு இருக்கேன்.”
“வேணாம் பாட்டி”
“ஏன்டா?”
“அவங்களுக்கு ஈகோ அதிகம். அவங்கள அப்படியே விடுறது தான் நல்லது”
“ஏன்டா இப்படி பேசுற? தாமரை உன் அம்மாடா?”
“அப்படினு எல்லாரும் சொல்லிக்கிட்டா போதுமா? நான் உணரவே இல்லையே” என்று கையை விரித்தான்
தொடரும்.
கன்ஃபார்ம்ட்டா வைஸ் பிரசிடென்ட் போஸ்டிங் வீராவுக்குத்தான். ஆனா, ஜாசஷியோட உசிருக்கு ஏதாவது ஆபத்திருக்கா என்ன ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
இரண்டு பேரும் செம