Loading

அன்று காலையில்…

ஜாக்ஷி நீதிமன்றத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்க, வீரா அங்கு தான் அமர்ந்திருந்தான். தன்னிடம் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து, “இது என்ன தெரியுமா?” என்று கேட்டாள் ஜாக்ஷி.

“என்னது?”

“லெட்டர்”

“ஹான்?”

“சிற்றம்லம் தன் கைப்பட எழுதுன லெட்டர்” என்றவள் அவனிடம் நீட்டினாள்.

“உனக்கு லெட்டர்லாம் எழுதுனாரா?”

“உயிலோட வந்த லெட்டர். காதம்பரிக்கு ஒன்னு எனக்கு ஒன்னு. காதம்பரிக்கு எல்லாரு முன்னாடியும் கொடுத்தாச்சு. இத என் கிட்ட தனியா வக்கீல் கொடுத்தாரு. படிச்சு பாரேன்”

வீரா படித்து பார்த்தான். மன்னிப்புக்கடிதம் தான். தன்னை நல்லவனாக்காமல் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தார்.

“இத என்ன செய்ய போற?”

“நேத்து பாட்டி கிட்ட பேசும் போது ஒன்னு தோனுச்சு. அதான் இது நமக்கு தேவைப்படும்னு நினைக்கிறேன்”

“எப்படி?”

“நேத்து என்ன ப்ளான் பண்ணோம்?”

“பாட்டி கோர்ட்க்கு வந்து, காதம்பரியே சொத்து வேணாம்னு சொல்லிட்டு  போனதா சொல்ல போறோம்”

“காதம்பரி அத ஒத்துக்குமா?”

“நோ சான்ஸ்.”

“அங்க தான் இது தேவைப்படும்னு தோனுது”

“இதுல எதுவும் இல்லையே?”

“இத எப்படி டிரம்ப் கார்டா யூஸ் பண்ணுறேன்னு மட்டும் பாரு” என்று சிரித்து விட்டு, கிளம்பி வந்திருந்தாள்.

முதல் நாளே, ஜகதீஸ்வரி என்ன சொல்ல வேண்டும் என்று பேசி வைத்து விட்டனர்.

அதை தான் அவரும் இங்கு பேசினார். காதம்பரியின் நடிப்பும் எதிர்பார்த்தது தான். வக்கீலுக்கு விசயம் தெரிந்தாலும், அவர் அமைதியாக காட்டிக் கொண்டார்.

இப்போது ஜாக்ஷி வந்து நின்றாள்.

“உனக்கென்னமா சொல்லனும்?”

“என் கதை பெரிய கதை யுவர் ஹானர். அத வளவளனு சொல்லாம சுருக்கமா சொல்ல அனுமதி கொடுக்கனும்”

“சொல்லுமா”

“என்னோட மூணு வயசுல இருந்து, என் அப்பா வேற ஒரு தொடர்புல இருந்துருக்காரு. அது ஆறு வருசம் கழிச்சு தான் எங்களுக்கு தெரிய வந்துச்சு. அவராவே வீட்ட விட்டு போயிட்டாரு. டைவர்ஸ் வாங்குற நிலைமை. என் பாட்டியோ தாத்தாவோ எதையும் தடுக்கல. நான் கூடவே இருந்தா பாதிக்கப்படுவேன்னு என்னையும் ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டாங்க.

டைவர்ஸ் கேஸும் நடந்துச்சு. அதுல இந்த காதம்பரியும் சிற்றம்பலமும், என்னை வேணாம்னு கோர்ட்ல சொல்லிருக்காங்க. அதுவும் காதம்பரி, அந்த துரோகி பெத்த புள்ளைய நான் வளர்க்கனுமா? வேணாம்னு சொல்லிருக்காங்க. கோர்ட்ல பேசுனது ஆதாரமா இருக்கு. அத எடுக்க தான் வக்கீல் நேரம் கேட்குறாரு. ஆனா நான் வேற ஒன்னு வச்சுருக்கேன்.

துரோகி பெத்த பிள்ளையே வேணாம்னு சொன்னவங்கள தான், என் பாட்டி மிரட்டியிருக்காங்க. அப்போ ஒன்பது வயசு பொண்ணு நான். அம்மா கிட்ட வளரனும்னு கோர்ட் சொல்லிருக்கு.

ஆனா காதம்பரி, இந்த வீட்டுல இருந்து அவள நான் பார்க்க முடியாதுனு வீட்ட விட்டே கிளம்பிருக்காங்க. அவங்கள தடுக்க தான், பாட்டி பொண்ண வளர்க்கலனா சொத்த தர மாட்டேன்னு சொல்லிருக்காங்க. அதுவும் வேணாம்னு தான் போயிருக்காங்க.

என்னை இவங்களுக்கு எப்பவும் பிடிக்காது. அதுக்கு என் கிட்ட ஆதாரம் இருக்கு. சாகுறதுக்கு முன்னாடி, என் அப்பா எனக்காக அவரே கைப்பட எழுதுன லெட்டர். அதுல காதம்பரிக்கு என் மேல எவ்வளவு வெறுப்புனு சொல்லிருப்பாரு.

இவ்வளவு வெறுப்ப வச்சுருக்கவங்க, இங்க வந்து மகள பிரிச்சுட்டாங்கனு அழுது நடிச்சு நாடகமாடுறாங்க. என்னை வேணாம்னு சொன்னா, இந்த சொத்தையும் வேணாம்னு சொன்னதா தான் அர்த்தம். நான் அந்த லெட்டர தர்ரேன். நீங்களே படிச்சு பாருங்க.

எதுவும் வேணாம்னு அப்ப சொல்லிட்டு போயிட்டு, இப்ப வந்து கேட்டா எப்படி? பாட்டி என் பேருக்கு எல்லாத்தையும் மாத்திட்டாங்க. திரும்ப தர எனக்கு விருப்பமில்ல. அவங்களுக்குனு ஒரு குடும்பம், ஒரு பையன்னு தனி வாழ்க்கை வாழுறாங்க. என் மேல இருக்க கோபத்துல, நான் நல்லா வாழக்கூடாதுனு, என் பேர்ல இருக்க சொத்த பறிக்க நினைக்கிறாங்க. அத நான் தரனுமா வேணாமானு நீங்களே சொல்லுங்க”

முடித்து விட்டு கடிதத்தை ஒப்படைத்தாள். சிற்றம்பலம் எழுதிய கடிதம்.

காதம்பரிக்கு ஜாக்ஷியை எவ்வளவு பிடிக்காது என்று தெளிவாகவே எழுதி இருந்தார். அவரிடம் ஜாக்ஷி வளராமல் போனது நலம் என்றார். தானும் அழைத்துச் சென்றிருந்தால், மேனகா ஜாக்ஷியை கொடுமை தான் செய்திருப்பார். அதனால் தான் தானும் கை விட்டதாக சொல்லி மன்னிப்பு கேட்டு வைத்திருந்தார்.

இந்த கடிதம் இப்படி ஒரு ஆதாரமாக மாறும் என்று சிற்றம்பலமே நினைத்திருக்க மாட்டார். ஆனால் ஜாக்ஷி மாற்றி இருந்தாள்.

“ஜட்ஜம்மா நான் அப்படி சொல்லவே இல்ல” என்று காதம்பரி பதற, “எதமா சொல்லல?” என்று கேட்டு வைத்தார்.

“சொத்து வேணாம்னு சொல்லவே இல்ல”

“அப்ப மகள மட்டும் வேணாம்னு சொல்லிருக்க அப்படித்தான?”

காதம்பரி விழித்தார்.

“மக இல்லனா சொத்துமில்லனு உங்கம்மா சொல்லிருக்காங்க. அதுக்கு சரினு சொல்லிட்டு தான போயிருக்க?”

“அப்படி ஒன்னும் அவங்க சொல்லவே இல்ல”

“சொல்லலங்குறதுக்கு உன் கிட்ட ஆதாரம் இருக்கா? இந்த பொண்ண நீ வேணாம்னு சொன்னதுக்கு அவங்க ஆதாரம் வச்சுருக்காங்களே?”

காதம்பரி திணற, வக்கீல் சமாளிக்க பார்க்க, “போதும் போதும். இதுக்கு மேல இந்த கேஸ இழுக்குறது நேரவிரயம் தான்” என்று விட்டு தீர்ப்பை எழுதி விட்டார்.

சொத்து கேட்டு போட்ட வழக்கு தள்ளுபடியானது. காதம்பரி வேண்டாம் என்று சொல்லி விட்டு, முன் பகை காரணமாக மீண்டும் சொத்தை கேட்டால், அதை ஜகதீஸ்வரி தர வேண்டிய அவசியமில்லை என்று விட்டார். இது போல் மீண்டும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று காதம்பரிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

அதோடு வழக்கு முடிய, எல்லோரும் கலைந்து விட்டனர்.

ஜாக்ஷி காதம்பரியை மேலும் கீழும் நக்கலாக பார்த்து விட்டு, பாட்டி வீராவோடு கிளம்பினாள்.

காரில் அமர்ந்து, “தீர்ப்ப கேட்டதும் காதம்பரி மூஞ்சிய பார்க்கனுமே” என்று ஜாக்ஷி சிரிக்க, “அவளயும் குறை சொல்ல முடியாது ஜாக்ஷி. உங்க தாத்தா கொடுத்த செல்லம். கெட்டுப்போயிட்டா. நானாவது அவள அடிச்சு கொஞ்சம் திருத்தி இருக்கனும்” என்று பெருமூச்சு விட்டார்.

“சிலருக்கு பிறவி புத்தி தான் இருக்கும் பாட்டி. யாரு அடிச்சாலும் என்ன நினைச்சாலும், அத திருத்த முடியாது. அந்த கேஸ் காதம்பரி. சொத்து இல்லனு சொன்னதும் இப்படியே விடாது. மேல கேஸ் போட்டாலும் போடும். பார்த்துக்கிறேன்”

இருவரும் பேசிக் கொண்டே வர, வீரா காரை ஓட்டினான்.

*.*.*.*.*.*.

வழக்கு முடிந்து இரண்டு வாரங்கள் கடந்து போனது.

அன்று ஜாக்ஷி ஒரு டீலை முடித்து விட்டு சந்தோசமாக பாட்டியை தேடி வர, அங்கு காதம்பரி அமர்ந்திருந்தார்.

வீரா காரை பூட்டி விட்டு பின்னால் வந்தான்.

காதம்பரி ஜாக்ஷியை எதிர்பார்க்காமல் ஒரு நொடி அதிர்ந்து பிறகு சுதாரிக்க, அது ஜாக்ஷியின் கண்ணில் இருந்து தப்பவில்லை.

“நீ இங்க என்ன பண்ணுற?”

“ஏன்டி? நான் வர கூடாதா?”

“என்ன பண்ணுறனு கேட்டேன்?”

“இது என் அம்மா வீடுடி. இங்க நான் வருவேன் போவேன். அத கேட்க நீ யாரு?”

காதம்பரி கத்த, ஜாக்ஷிக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.

“பாட்டி அது என்ன?” என்று கிண்ணத்தில் இருந்ததை காட்டி கேட்டாள்.

“இது எதோ புது டிஸ்ஸாம்.. வேலைக்காரி செஞ்சா… நீயும் சாப்பிடுறியா?”

“வேலைக்காரியா? ஸ்வீட்டா?”

“அப்படி தான் நினைக்கிறேன்”

“இத எதுக்கு செஞ்சா? உங்களுக்கு சுகர் கூடியிருக்குனு அவளுக்கு தெரியாதா? எங்க அவ?” என்று திரும்ப, வேலைக்காரி சட்டென மறைவது வீராவின் கண்ணில் விழுந்து விட்டது.

“ஒரு நாள் தான? ஒன்னும் ஆகாது. நீ என்னடி எங்கம்மா சாப்பிடுறதுல கூட கை வைக்கிற? பிடிச்சத சாப்பிடட்டுமே” என்று காதம்பரி குறுக்கே வர, வீரா சட்டென பாய்ந்து அந்த கிண்ணத்தை தூக்கி விட்டான்.

அவனுக்கு வினய் சொன்ன விசயங்கள் கண் முன்னால் வந்து போனது. வினய் ஜாக்ஷியிடம் சொன்னதை, ஜாக்ஷி வீராவிடம் சொல்லி இருந்தாள்.

காதம்பரியின் கைகூலி ஒருத்தி இதே வீட்டில் இருப்பதாக ஜாக்ஷி சொன்னாளே? சட்டென பயம் வந்து விட்டது அவனுக்கு.

“பாட்டி.. இத சாப்பிட்டீங்களா?” என்று அவன் பதட்டமாக கேட்க, “இல்ல இப்ப தான் கொடுத்தா. நீங்க வந்துட்டீங்க. சுகர் கூட தான். சும்மா ஒரு வாய் சுப்பிடலாம்னு நினைச்சேன்” என்றார் அவர்.

“இத செஞ்சவ எங்க?”

“ஏய்.. இங்க வா” என்று ஜாக்ஷி கத்த, அவளும் வந்து நின்றாள்.

அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்த்துக் கொட்டிய முகம் ஜாக்ஷியையும் வீராவையும் மேலும் பதற வைத்தது.

“நீ தான் செஞ்சியாடி இத?” என்று ஜாக்ஷி அவளருகே வந்து கேட்டாள்.

“இப்ப ஏன் அவள மிரட்டுற? ஸ்வீட்டு செஞ்சது தப்பா?” என்று காதம்பரி இடையே வர, “ஏய் வாய மூடிரு. மரியாதை கெட்டுரும்” என்று ஜாக்ஷி மிரட்டினாள்.

“கேட்குறேன்ல? பதில் சொல்லுடி” என்று ஜாக்ஷி குரலை உயர்த்த, வேலைக்காரி பதட்டத்தோடு மேலும் கீழும் தலையாட்டினாள்.

“அத இங்க கொண்டாடா… இவ சாப்பிடுவா” என்றதும், வீரா பக்கத்தில் வந்தான்.

“இந்தா.. இத இப்ப நீ முழுசா தின்னுற.. வாய திற” என்று வீரா மிரட்ட, வேலைக்காரிக்கு பயத்தில் உடம்பு உதற ஆரம்பித்தது.

“என்ன? தின்னு” என்று ஜாக்ஷி அதட்ட, உடல் தூக்கி வாரி போட்டது.

“ம்மா.. எனக்கும்.. சு..சுகர் இருக்குமா”

“ஒரு நாள் சாப்பிட்டா செத்துட மாட்ட” என்று கூறி வீரா ஸ்பூனில் அள்ளி திணிக்க, துப்பி விட்டு பட்டென ஜகதீஸ்வரி காலில் விழுந்து விட்டாள்.

“அம்மா என்னைய மன்னிச்சுடுங்க.. இத நான் பண்ணல.. காதம்பரி அம்மா தான் கொண்டு வந்தாங்க” என்று கூறி விட்டாள்.

ஜாக்ஷி அக்னி பிழம்பாக திரும்பி காதம்பரியை முறைத்தாள்.

‘துரோகி’ என்று வேலைக்காரியை மனதில் திட்டிய காதம்பரி, ஜாக்ஷியை பார்த்ததும் முகத்தை மாற்றிக் கொண்டார்.

“ஆமாடி நான் தான் கொண்டு வந்தேன். இப்ப அதுக்கென்ன?”

“அப்ப நீ சாப்பிடுற” என்ற ஜாக்ஷி கையில் அள்ளி காதம்பரியின் வாயில் திணிக்க போக, பதறி அடித்து தட்டி விட்டார்.

வந்த கோபத்தில், கிண்ணத்தோடு வாங்கி காதம்பரியின் முகத்தில் எறிந்தாள் ஜாக்ஷி.

“எவ்வளவு திமிரு இருந்தா இத செய்வ?” என்று கேட்டு ஜாக்ஷி கையை ஓங்கி விட, வீரா பிடித்து விட்டான்.

“என்னடி? என்ன கை ஓங்குற? அடிச்சுடுவியா? அடிடி பார்க்கலாம்.” என்று காதம்பரி எகிற, ஜகதீஸ்வரிக்கு நடப்பது புரிந்து விட்டது.

காதம்பரியை தன் பக்கம் திருப்பியவர், பளிச்சென ஒன்று வைத்தார். காதம்பரி அதிர்ந்து விட, ஜகதீஸ்வரி மேலும் இரண்டு வைத்தார்.

“உன்னை பெத்துருக்கவே கூடாதுடி பாவி. உன்னைய பெத்த வயித்துக்கு உண்மையிலயே விசம் தாண்டி சரியான தண்டனை” என்று கூறி மீண்டும் அடிக்க, காதம்பரிக்கு கோபம் வந்தது.

“ஏய்..” என்று பதிலுக்கு கை ஓங்கி விட, ஜாக்ஷி, “ஏய்..” என்று அலறி முன்னால் வந்து கையை பிடித்தாள்.

“யார கை ஓங்குற?” என்று கேட்டு, பின்னால் மடக்கி திருக ஆரம்பித்து விட்டாள்.

வேலை செய்பவர்கள் எல்லோரும் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க வந்து விட, “இங்க என்ன வேடிக்கை?” என்று வீரா கத்தினான்.

சட்டென எல்லோரும் கலைந்து விட, ஒருத்தியை மட்டும் அழைத்தான்.

“இது மிச்சமிருந்தா அத எடுத்துட்டு, இவளோட ஃபோனயும் எடுத்துட்டு வா போ” என்றதும், உடனே எடுத்து வந்து கொடுத்தாள்.

“அய்யோ அம்மா.. எனக்கு எதுவும் தெரியாதுமா.. அவங்க தான்மா விசம் வச்சாங்க.. என்னை விட்டுருங்கமா” என்று வேலைக்காரி ஜகதீஸ்வரியின் காலை பிடிக்க, உதறி விட்டு ஓய்ந்து போய் அமர்ந்து விட்டார் அவர்.

“ஏய் கைய விடுடி” என்று காதம்பரி கத்த, “கொண்டு போய் அந்த ரூம்ல போட்டு லாக் பண்ணு” என்றான் வீரா.

அவன் தங்கியிருந்த அறை அது. அங்கிருந்து தப்பிக்க வழி கிடையாது என்பதால், அதிலேயே அடைத்து வைத்தனர்.

வேலைக்காரி உடனே எழுந்து ஓடப்பார்க்க, “வாட்ச் மேன் அவள புடிங்க” என்று வீரா கத்தினான்.

சத்தம் கேட்டு வந்து கொண்டிருந்தவர், உடனே பிடித்து விட்டார்.

“பாட்டிக்கு விசம் வச்சுட்டு ஓடப்பார்க்குறா” என்று வீரா சொன்னதும், வாட்ச் மேனுக்கு கோபம் வர தரதரவென இழுத்து வந்து கீழே தள்ளி விட்டார்.

“அம்மா என்னைய விட்டுருங்க.. நான் எதுவுமே பண்ணல.. நான் இல்லனா என் புள்ளைங்க அனாதையா போயிடும்” என்று காலை பிடித்தாள் வேலைக்காரி

ஜாக்ஷி கீழே கிடந்தவள் முடியை கொத்தாக பிடித்து, ஓங்கி ஒரு அறை விட்டாள்.

“நீ நல்லவளாடி? இங்கயே இருந்துட்டு உளவு பார்த்தவ தான நீ?” என்று கேட்டு, அவளை மேலும் பதற வைத்தாள்.

வீரா ஜாக்ஷியின் கையில் கைபேசியை திணித்தான். அதில் எழிலரசியின் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

உடனே காதில் வைத்தாள்.

“ஹலோ”

“மேடம் நான் ஜாக்ஷி”

“சொல்லுங்க”

“ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கனும். எங்க வீட்டு வேலைக்காரி என் பாட்டி சாப்பாட்டுல விசம் வச்சுருக்கா”

“வாட்? அவங்களுக்கு எதுவும் ஆகலயே?”

“இல்ல மேடம். அவங்க சாப்பிடுறதுக்கு முன்னாடியே பார்த்துட்டேன்.”

“நான் வெளிய இருக்கேன். அஞ்சு நிமிஷத்துல அங்க அரெஸ்ட் பண்ண ஆளுங்க வருவாங்க” என்று கூறி விட்டு வைத்தார்.

வேலைக்காரி காலில் விழுந்து கதறி அழுத போதும் யாரும் கண்டு கொள்ளவில்லை. காவல்துறையினர் வர, அவளை ஒப்படைத்து மிச்சம் இருந்த உணவு, கைபேசி, அனைத்தையும் கொடுத்து அனுப்பி விட்டனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
31
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. காதம்பரி என்ன செய்ய போகிறாள்

    2. அடிப்பாவி..! இந்த காதம்பரி பொண்ணா…? பேயா…?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797