Loading

 

ஜானகி அந்த வேலையை விட்டு விட்டு, தொழிற்சாலைக்கு வந்து விட்டாள். அங்கு வேலை செய்பவர்கள் எல்லோரும், அவளை மிகவும் மரியாதையாக நடத்தினர். எல்லோருக்குமே சிற்றம்பலத்தின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. அதை அவளிடமும் காட்டினர்.

“ஐயா வேலையில ரொம்ப கறாருமா” என்று தான் அனைவரும் சொல்லி வைத்தனர்.

அவரது சொந்த விசயங்களை வைத்து, யாரும் அவரை குறைவாக பேசவில்லை.

முதலில் வேலை பார்த்த இடத்தில் அவளுக்கு இருந்த அசௌகரியம் எதுவும் இங்கு இல்லை. ஆனால் வேலை தலைக்கு மேல் இருந்தது.

கந்தசாமி வேறு அவளை வேலை பார்க்க வைத்துக் கொண்டே இருந்தான். எல்லா நேரமும் வேலை இருந்தது. சாப்பிடும் போதும், உணவு ஒரு கையில் வேலை ஒரு கையில் என்று இருக்க வேண்டியிருந்தது.

நாளையே அவளை ஞானியாக்கி விடும் முயற்சி செய்பவன் போல், அவ்வளவு சொல்லிக் கொடுத்தான்.

அவள் சோர்ந்து போய் அமர்ந்திருக்க, ஜெகன் பாவமாக பார்த்தான்.

“அக்கா பாவம்.. ஒரே நேரத்துல எல்லாம் பார்க்கனுமா?”

“வேற எப்ப பார்க்குறது?” என்று கந்தசாமி கேட்டு வைக்க, ஜெகனுக்கு பதில் வரவில்லை. ஜானகிக்கு கூட அதே கேள்வி தான். அவளது முகத்திலும் அதிருப்தி தெரிந்தது.

“முதலாளியா இருக்கது அவ்வளவு ஈசினு நினைச்சீங்களா ரெண்டு பேரும்?” என்று கேட்டு வைக்க, “அதுக்காக ஒரே நாள்ல இவ்வளவு பார்க்கனுமா?” என்று கேட்டு விட்டாள்.

“பார்த்து தான் ஆகனும். வேலை ஒழுங்கா நடக்கனும்னா பொறுப்ப தூக்கி சுமக்க கஷ்டப்பட கூடாது”

“விடுங்க சார். மேடம் சின்ன பொண்ணு வேற. பழகிப்பாங்க” என்று அங்கு வேலை செய்த வேறு ஒருவர் சொல்ல, “எப்ப சார்? பத்து வருசம் கழிச்சா?” என்று கோபமாக கேட்டு வைத்தான்.

“நீங்க ஏன் இப்ப கோபப்படுறீங்க?” என்று ஜானகி முறைக்க, கந்தசாமி பொறுமையை இழுத்துப் பிடித்தான்.

அவன் சிற்றம்பலத்திடம் வேலை செய்தவன். இப்போது வேலை ஆமை வேகத்தில் போவதே அவனுக்கு கடுப்பு தான். இவளை போன்ற வயதில் தான் ஜாக்ஷியும் வந்தாள். ஆனால் சிற்றம்பலத்திற்கு சரிசமமாக நிற்பதை பார்த்திருக்கிறான்.

இவளிடம் அந்த வேகம் இல்லாமல் போனது, அவனை எரிச்சல் படுத்த தான் செய்தது. அவனும் வேலையை முடிந்த வரை துரிதப்படுத்த பார்க்கிறான். இப்படி குறை சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தால் எப்படி?

கோபப்பட வேண்டாம். சின்ன பெண் என்று மனம் சொன்னது தான். ஆனால் அவனது மூளைக்கு இது போதவில்லை. அதனால் தான் பேசி விட்டான்.

“நான் ஏன் மேடம் கோபப்பட போறேன்? எனக்கும் இந்த ஃபேக்டரிக்கும் என்ன சம்பந்தம்? நான் மாசமான சம்பளத்த வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டே இருப்பேன். நான் மட்டுமில்ல, இங்க வேலை செய்யுற அத்தனை பேரும் அத தான் செய்வோம். ஆனா உங்க பொறுப்ப நினைச்சு பார்த்தீங்களா? நீங்க இங்க தனி ஆளு இல்ல. இந்த ஃபேக்டரியோட பர்ட்னர்சிப் இன்னும் ஜாக்ஷி மேடம் கிட்ட தான் இருக்கு. உங்கப்பா பங்க தான் உங்களுக்கு கொடுத்துருக்காங்க. இதுல லாபம் நஷ்டம் வந்தா அவங்களுக்கு கணக்கு காட்டனும். அவங்க கேட்க போற கேள்விக்கு பதில் சொல்லனும். தொழில் நின்ன இடத்துலயே நின்னா, கொஞ்ச நேரத்துல படுத்துடும். ஓடனும். புதுசா தேடனும். அத தேடுற அளவுக்கு உங்க கிட்ட தெம்பில்லனா, நானும் என் சம்பளத்த கொடுங்க உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லனு கண்டுக்காம போறேன். சரி தான?”

ஜானகிக்கும் ஜெகனுக்கும் ஒரு மாதிரியாகி விட, மற்றவர் தான் அவனை தட்டிக் கொடுத்தார்.

“அவங்களுக்கு எல்லாம் புதுசு சார். சீக்கிரம் தெரிஞ்சுப்பாங்க”

“நீ பொறுமையா கத்துட்டு வா.. நான் வெயிட் பண்ணுறேன்னு மார்கெட் காத்திட்டு இருக்குமா சார்? நீங்களும் இப்படி பேசாதீங்க. தட்டிக் கொடுக்குற விசயத்துல தான் தட்டிக் கொடுக்க முடியும். எல்லாத்துலயும் விட முடியாது சார். நீங்களாவது பேசி புரிய வைங்க. இந்த வேகமெல்லாம் தொழில்க்கு சுத்தமா செட்டாகாது”

சொன்னதோடு கோபமாக எழுந்து சென்று விட்டான்.

ஜானகிக்கு கண்கள் கலங்கி விட்டது. ஜெகனுக்கு அக்காவை அழ வைத்து விட்டானே என்று கோபம் வந்தது.

“க்கா என்னகா நீ? அவரு எதோ சொல்லிட்டு போறாரு. நீ என்ன முயற்சி பண்ணாமலா இருக்க?” என்று அவன் ஆறுதல் சொல்ல, ஜானகி உடனே கண்ணை துடைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.

“சரி நீ கிளம்பு. போய் உன் வேலைய பாரு. நான் இங்க பார்த்துட்டு வீட்டுக்கு வர்ரேன்” என்று அனுப்பி வைத்தாள்.

ஜெகன் வருத்தத்துடனே கிளம்பிச் சென்று விட்டான்.

கந்தசாமி கோபமாக சென்றாலும், சில மணி நேரங்களில் மீண்டும் வந்து எதுவும் நடக்காதது போல் அடுத்த வேலையை பற்றிப் பேச ஆரம்பித்து விட்டான். ஜானகியும் வேலையை மட்டுமே கவனித்தாள்.

(இவங்களுக்கு தனி கதை எழுதலாமா? இல்ல இதுலயே முடிச்சுடலாமானு சொல்லுங்க. யோசிக்கிறேன்)

*.*.*.*.*.*.

ஜாக்ஷிக்கு வேலை முடிந்ததும் உடல் களைப்பாக இருந்தது. எழுந்து கொள்ள பிடிக்காமல் அமர்ந்திருந்தாள்.

சுபத்ராவிடமிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுமா” என்று கேட்க, “நான் ஒரு நியூஸ் அனுப்பிருக்கேன் பாருங்க” என்றாள்.

எடுத்து பார்த்தாள். முருகன் இருந்தான். முழுப்பெயர் திருமுருகன். அவனை பற்றிய ஆர்டிக்கல் ஒன்று வந்திருந்தது.

இளம் வயதில், மிக சிக்கலான வழக்குகளை வெற்றி பெற்ற வக்கீல்கள் பட்டியலில், அவனது புகைப்படம் இருந்தது.

‘லாயரா இவன்?’ என்று பார்த்து விட்டு, அவனை பற்றிப் படித்தாள்.

மிகவும் சிக்கலான சவாலான வழக்குகளை சரியாக கையாள்வதை பற்றி அவன் சொன்னதை இணைத்து இருந்தனர்.

‘நல்லா தான் பேசிருக்கான்’ என்ற நினைத்தவள், சுபத்ராவை அழைத்தாள்.

“பார்த்தேன்.. அவன் லாயர்னு தெரியுமா?”

“தெரியாது அண்ணி. இது வீட்டுல இருந்ததேனு படிக்க எடுத்தேன். அதான் உங்களுக்கும் அனுப்புனேன்”

“ஓகே ஓகே”

“நீங்க ஈவ்னிங் வர்ரீங்க தான?”

“ஆமா..”

“ஓகே வாங்க” என்றதோடு வைத்து விட்டாள்.

ஜாக்ஷி கிளம்ப, வீராவிடமிருந்து செய்தி வந்தது. வீட்டிற்கு சுபத்ராவை பார்க்க கிளம்பி விட்டதாக.

‘ரொம்ப தான் செய்யுறான்’ என்று சம்பந்தமில்லாமல் அவனை திட்டி விட்டு, தானும் கிளம்பினாள்.

அங்கு சென்று, இரண்டு பாட்டி, சுபத்ராவிடம் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். இருவருக்கும் இடையே இருக்கும் கோபத்தை அங்கு காட்டிக் கொள்ளவில்லை.

“நல்லா வெயிட் போட்ட நீ” என்று சுபத்ராவை பார்த்து ஜாக்ஷி சொல்ல, “எல்லாம் பாட்டியோட சமையல் தான்” என்றாள்.

“இன்னைக்கு நீங்களும் இங்கயே சாப்பிடுங்க” என்று லட்சுமி சொல்ல, மறுக்காமால் தலையாட்டினர்.

“நீங்க என்னை படிக்க சொன்னீங்கள்ள? நான் லா படிக்கவா?” என்று கேட்டு வைத்தாள் சுபத்ரா.

ஜாக்ஷி ஆச்சரியமாக பார்த்து வைத்தாள். வீராவிற்கு சிரிப்பு வந்தது.

“ஏன் உன் ஃப்ரண்ட்ட பார்த்து இன்ஸ்பெயர் ஆகிட்டியா?”

“ஆமா நான் படிச்சு என் பேரும் இப்படி ஆர்டிக்கல்ல வந்தா நல்லா இருக்கும்ல? இல்லனா என்னை மாதிரி இருக்கவங்களுக்கு ஹெல்ப்பாச்சும் பண்ணுவேன்”

“அடியே.. நீ தான என் கம்பெனில வந்து வேலை செய்வனு சொன்ன?”

“இப்ப என்ன நம்ம கம்பெனிக்கு இன்னொரு லாயர் கிடைச்சுட்டாங்கனு நினைச்சுக்க” என்று ஜகதீஸ்வரி சொல்ல, வீரா சிரித்து வைத்தான்.

“அதுவும் சரி தான். நீ எங்க என்ன படிச்சாலும், எங்கள விட்டு போக முடியாது சுபி”

“நான் போக மாட்டேனே” என்று சிரித்தாள் அவளும்.

படிப்பு சம்பந்தமான பேச்சுக்கள், அவள் படிக்க வேண்டியது, செய்ய வேண்டியது எல்லாம் அப்போதே விசாரித்து அவளுக்கு தெரியப்படுத்தினர். அவள் படிக்க தேவையான எல்லாவற்றையும் வாங்க, நாளை அழைத்துச் செல்வதாக வீரா சொன்னான்.

“எனக்கு வேலை இருக்கு. நீங்க போயிட்டு வாங்க” என்று கூறி விட்டாள் ஜாக்ஷி.

அங்கேயே சாப்பிட்டு விட்டு, ஜாக்ஷியும் வீராவும் இரவு கிளம்பினர். தனித்தனி காரில் வந்ததால், தனித்தனியாக தான் செல்ல வேண்டியிருந்தது.

ஜாக்ஷி முன்னால் செல்ல, வீரா பின்னால் வந்தான். காரை நிறுத்தியதும் ஜாக்ஷி அவனை பார்த்துக் கொண்டு நிற்க, அவன் திரும்பிப் பார்க்காமல் கதவை திறந்து உள்ளே சென்று விட்டான்.

அவன் தான் சொன்னானே, “உன்னை விட அதிகமாக பிடிவாதம் பிடிப்பேன்” என்று.

இப்போது அவளை விட அதிகமாக கோபத்தில் இருந்தான்.

ஜாக்ஷிக்கு இருந்த கோபமெல்லாம் வடிந்து போனது. அவளது குணம் அப்படித்தான். கோபம் வந்தால் திட்டி விட்டு அதோடு மறந்து விட்டு போய் விடுவாள். தூக்கி சுமக்க அவளால் முடியாது. அதே போல் இப்போதும் கோபம் காணாமல் போயிருக்க, வீரா பேசாமல் போனது அவளை வருத்தியது.

முதல் முறையாக வீடு மிகவும் அமைதியாக இருப்பது போல் தோன்றியது.

உடைமாற்றி படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை.

“இவன் இப்படியே எத்தனை நாள் போறான்னு பார்க்கலாமா? ஆனா என்னால முடியலயே” என்று புலம்பிக் கொண்டு படுத்திருந்தாள்.

நள்ளிரவு நேரம் வரை தூக்கம் வரவில்லை. காலையில் சீக்கிரமாக எழ வேண்டும். முக்கியமான வேலை இருக்கிறது. தூங்காமல் அதை பார்க்க முடியாது.

ஒரு முடிவோடு எழுந்தவள், விறுவிறுவென வீராவின் அறைக்குச் சென்றாள்.

படுத்திருந்தவன் திரும்பிப் பார்த்தான். அவனை முறைத்தபடி அருகே சென்றவள், அவனை அணைத்து படுத்துக் கொண்டாள்.

அவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது. கோபமாக இருந்தாலும் உரசிக் கொள்ளும் நாய்க்குட்டி போல நடந்து கொள்பவளை என்ன செய்வது?

ஒன்றும் சொல்லாமல் அவன் படுத்திருக்க, அவள் அதை கண்டு கொள்ளாமல் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்து விட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
29
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. வீராவோட இந்த வழிமுறை சூப்பர். அப்பத்தான் ஜாக்ஷியை கன்ட்ரோல் பண்ண முடியும்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. ஜாக்ஷி வீரா வழிக்கு கொண்டு வந்து விடுவான் போல