Loading

 

சுபத்ரா முருகனுக்காக இரண்டு நாட்கள் காத்திருந்தாள். திடீரென அவனை காணவில்லை. மூன்றாவது நாளும் அவனில்லை. ஆனால் சுபத்ராவை பார்த்ததும், சிறுவன் தான் ஓடி வந்தான்.

“ஃப்ரண்டக்கா” என்று அவன் சிரிப்போடு வர, அவனை பார்த்து புன்னகைத்தவள் முருகனை தேட, அவனது சாயலில் வேறு ஒருவன் தான் வந்தான்.

“நீங்க தான் அந்த ஃப்ரண்டக்காவா? உங்கள தான் பார்க்கனும்னு ஓடி வந்தான்”

யாரென தெரியாமல் அவள் விழிக்க, “நான் இவனோட அப்பா” என்று அறிமுகம் செய்தான்.

தலையாட்டி வைத்தாள். அவள் கழுத்தில் இருந்த கட்டு அவன் கண்ணிலும் பட்டது. அதோடு மகனும் அவள் பேச மாட்டாள் என்று சொல்லி இருந்ததால், வேறு எதுவும் கேட்கவில்லை.

“ஃப்ரண்டக்கா.. சித்தப்பா வரல. நான் ஐஸ்கிரீம் கேட்டா அப்பா வாங்கி தரல” என்று புகார் வாசித்தவனிடம் சில நிமிடங்கள் செலவழித்து விட்டு, அறைக்குத்திரும்பி விட்டாள்.

அவனுடைய அண்ணன் வந்து விட்டதால், அவன் வரவில்லை போலும். புதிதாய் கிடைத்த நண்பன் இல்லை என்றதும், வருத்தமாகத் தான் இருந்தது அவளுக்கு.

“அவங்க நம்பராச்சும் வாங்கி இருக்கலாமோ? ச்சே வேணாம். அண்ணன் அண்ணி அளவோட தான் பழகனும்னு சொல்லிட்டாங்க” என்றதோடு விட்டு விட்டாள்.

ஆனாலும் முருகனை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளே இருந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் அவளும் வீடு திரும்ப வேண்டும். லட்சுமி பாட்டி வந்து அவளுக்கு தேவையானதை செய்தி கொண்டிருக்க, “பாட்டி” என்று இழுத்தாள்.

“என்னமா?”

“நான் உங்க வீட்டுல வந்து இருக்கவா?”

“அதென்ன உங்க வீடு?”

“சரி நம்ம வீடு. அங்க வந்துடவா?”

“ஏன்? ஜாக்ஷி கூட இருக்க வேணாமா?”

“அது இல்ல. நான் உங்க கூட கொஞ்ச நாள் இருக்கேனே” என்று கேட்டாள்.

அடுத்த நாள் வந்த ஜாக்ஷி இதைக்கேட்டு அவளை முறைத்தாள்.

“ஏன் அங்க போற?”

“அங்க போனா லட்சுமி பாட்டி எனக்காக நிறைய செஞ்சு கொடுப்பாங்க.”

“ஓஹோ.. அப்ப எல்லாரும் வந்து இங்க இருங்களேன்”

“வேணாம். நான் ரெண்டு பாட்டி கூடவும் இருக்கேன்”

“அதுவும் சரி தான். பார்த்துக்க நாங்க ரெண்டு பேரும் எப்பவும் வீட்டுல இருப்போம். நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா போய், வேலைய பார்த்துட்டு நைட் தான் வருவீங்க. அதுவரை இவளையும் பார்க்கனும்ல?” என்று ஜகதீஸ்வரி சொல்ல, ஜாக்ஷி வீராவை பார்த்தாள்.

“நீ இல்லாம நைட் தூங்கவே மாட்டேன்னு அடம் பிடிச்ச சுபி இப்ப வளர்ந்துட்டா. கொஞ்ச நாள் அங்க இருக்கட்டும். திரும்ப நாமலே கூட்டிட்டு வரலாம்” என்று வீரா சொன்னதும், ஜாக்ஷி அரை மனதாக தலையாட்டி வைத்தாள்.

எல்லோருக்குமே அவர்களை தனியே விட்டு விடத்தான் ஆசை. அதனால் மறுநாள் சுபத்ராவும் பாட்டியிடமே சென்று விட்டாள்.

போகும் போது எப்படியாவது முருகனை பார்க்க மாட்டோமா? என்று ஆசை இருந்தது. ஆனால் கடைசி வரை அவன் கண்ணில் படவில்லை. ஜாக்ஷி கூட கேட்டாள்.

“அவங்க அண்ணன் வந்துட்டாருனு அவர் வர்ரது இல்ல போல. நான் கேட்கல” என்று விட்டாள்.

*.*.*.*.*.*.

ஃபேக்டரி கைமாறும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. சுபத்ராவை வீட்டில் விட்டு விட்டு, ஜகதீஸ்வரியோடு ஜாக்ஷி அலுவலகம் வந்தாள்.

ஜானகியும் ஜெகனும் அமைதியாக அமர்ந்திருக்க, முகமெல்லாம் பளிச்சென்ற சிரிப்போடு அமர்ந்திருந்தார் மேனகா.

அதை பார்த்தும் பார்க்காதது போல், ஜாக்ஷி வந்த வேலையை பார்த்தாள்.

சிற்றம்பலத்தின் பங்கு அவர்களின் பிள்ளைகளுக்கு என்று எழுதிக் கொடுத்தனர்.

ஜானகியும் ஜெகனும் கையெழுத்திட, கந்தசாமியும் அங்கு தான் நின்றிருந்தான்.

“நீயும் சைன் பண்ணு” என்று அவனையும் அழைத்து ஒப்பந்தத்தை முடித்தாள்.

“இனி உன் தம்பி பர்மிஷன நீயே எழுதி வாங்கிட்டு, உன் வேலைய பார்க்கலாம். இல்லனா அவனும் வந்து வேலை பார்த்தாலும் சரி.”

ஜானகி தலையாட்ட, “நாளையில இருந்து அங்க ஜாயின் பண்ணிக்கிறேன் மேடம். இங்க கொஞ்சம் வொர்க் இருக்கு” என்று கந்தசாமி சொன்னதும், “ஓகே” என்று விட்டாள்.

“ரொம்ப நன்றி மா” என்று ஜகதீஸ்வரிக்கு மேனகா நன்றி சொல்ல, தலையாட்டி வைத்ததோடு அமைதியாகி விட்டார் அவர்.

எல்லோரும் கிளம்பிச் சென்று விட, “பொறுப்ப கொடுத்துட்ட. ஆனா ஜானகி பார்த்துப்பானு தோனுதா?” என்று கேட்டார் பாட்டி.

“கத்துக்கட்டும் பாட்டி. அவ அப்பா பல தொழில பார்த்துருக்காரு. இத கூட சமாளிக்க முடியலனா அவ எப்படி வாழுவா?”

“பார்த்தா சரி கந்தசாமி கூட இருந்தா நல்லா பார்த்துப்பான்”

“அவனுக்கு அவள பிடிச்சுருக்குனு நினைக்கிறேன்”

“என்னது?”

“கந்தசாமிக்கு ஜானகி மேல லைட்டா கிரஸ்ஸுனு நினைக்கிறேன் பாட்டி. அவள அவன் நல்லாவே பார்த்துப்பான். அதுவும் இல்லாம, அவனுக்கு தான் தெரியும் சிற்றம்பலம் வேலை பார்க்குற ஸ்டைல். அதையே அவளுக்கும் சொல்லிக் கொடுத்து பார்த்துப்பான். நமக்கும் பர்ஃபெக்ட்டா வேலை நடந்தா போதும்”

ஜகதீஸ்வரி அதற்கு மேல் அதை பற்றிப் பேசவில்லை. மற்ற வேலைகளை பேச ஆரம்பித்தார்.

ஜானகி ஃபைலை தூக்கிக் கொண்டு வந்தாள். அவளால் இதை நம்ப முடியவில்லை. வேண்டாம் என்று தூக்கிப்போட்ட ஒன்றை, அவளே கேட்டு வாங்கி இருக்கிறாள். சரியோ? தவறோ? வாங்கி விட்டதை காக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

“மேடம் நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்கு உங்கள ஃபேக்டரில பார்க்குறேன்.” என்றதோடு கந்தசாமி சென்று விட்டான்.

‘நானும் இப்ப மேடமா?’ என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அந்த ஜாக்ஷியை தான் அவ்வளவு மரியாதையாக அழைத்து இருக்கிறான். இனி அதே போன்ற மரியாதை அவளுக்கும். தானும் அவளைப்போலவே ஆளுமையான பெண்ணாக வரவேண்டும் என்ற உறுதி மனதில் வந்தது.

“வீட்டுக்கு போனதும் உனக்கு என்ன வேணுமோ கேளு செஞ்சு தர்ரேன்” என்று மேனகா பல் மொத்தமும் காட்டி பேச, பெற்ற பிள்ளைகளுக்கு அவர் மேல் வெறுப்பு தான் வந்தது.

“இது கையில வந்துட்டதால எல்லாம் வந்துடுச்சுனு நினைப்பா? நான் வேலை பார்த்து உழைக்கனும். அப்ப தான் வரும்” என்று வெடுக்கென சொல்லி விட்டுச் சென்று விட்டாள் ஜானகி.

மகளின் மீது கோபம் வந்தாலும், தான் கேட்டதை மகள் வாங்கி விட்டதே அவருக்கு போதுமானதாக இருந்தது. அதனால் சந்தோசம் குறையாமலே பின்னால் சென்றார்.

*.*.*.*.*.*.

இந்த தொழிற்சாலை விவரம் காதம்பரி அசோக் காதிலும் வந்து விழுந்து விட்டது.

“யாரு வீட்டு சொத்த யாருக்கு எழுதிக் கொடுப்பா?” என்று வெகுண்டு எழுந்தார் காதம்பரி.

அவரால் இதை ஏற்கவே முடியாது. உடனே வக்கீலை அழைத்து விசயத்தை சொன்னார்.

“சொத்துல கேஸ் போட்டுருக்கும் போது, அவங்க எப்படி அடுத்தவங்களுக்கு எழுதிக் கொடுக்கலாம்? இதையும் சேருங்க. இதுக்கு தனியா கேஸ் போடுங்க” என்று குதித்தார்.

அந்த வக்கீலும் அந்த வேலையில் இறங்கினார். வழக்கை தொடரும் முன்பு, ஜாக்ஷியின் வக்கீலை சந்தித்து கேட்டார்.

“அப்படியா சார்? இருங்க நான் கேட்குறேன்” என்று வக்கீல் ஜாக்ஷியை அழைத்து விசாரித்து விட்டார்.

அவளும் விசயத்தை சொல்லி வைத்தாள்.

“சார்.. அவங்க எழுதிக் கொடுத்த சொத்து, சிற்றம்பலம் தனியா வாங்கிப்போட்டது. பார்ட்னர்ல தான் ஜகதீஸ்வரி அம்மா இருந்துருக்காங்க. அது தனி சொத்து. நீங்க கேஸ் போடனும்னா, பரம்பரை சொத்துல தான் போடனும். தனியா வாங்குனதுல வந்து பங்கு கேட்க முடியாது. அதுவும் சிற்றம்பலம் விவாகரத்துக்கு அப்புறம் வாங்குனதுல கேட்க, உங்க மேடம்க்கு எந்த உரிமையும் கிடையாது. வீணா இத அங்க இழுத்துட்டு வராதீங்க. ஜட்ஜே திட்டுவாங்க. உங்களுக்கே தெரியவேணாமா இது?” என்று கூறி துரத்தி விட்டார்.

காதம்பரிக்கும் இதைத் தெரியப்படுத்த, கோபம் வந்தது.

“பரம்பரை சொத்துல தான் கேட்கனுமா? எல்லாமே அந்த சொத்துல வந்த பணத்துல தான வாங்குனது?” என்று காதம்பரி குதிக்க, “சட்டப்படி என்ன செய்ய முடியும்னு தெரிஞ்சும் இஷ்டத்துக்கு இப்படி குதிக்காத” என்று அதட்டினார் அசோக்.

“அதுக்காக அவ அந்த மேனகாவுக்கு கொடுப்பாளா? எனக்கு எதுவும் இல்லனு சொல்லிட்டு, அவளுக்கு கொடுக்குறா? எவ்வளவு திமிரு? அவள பார்த்து பேசலனா எனக்கு மனசு ஆறாது” என்று கிளம்பி விட்டார்.

ஜாக்ஷி வேலை எல்லாம் முடிந்து அப்போது தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

வீரா அழைத்தான்.

“வேலை முடிஞ்சதா ஜக்கம்மா?”

“முடிஞ்ச்சு”

“வெளிய சாப்பிட போகலாமா?”

“இப்பவா?”

“ஆமா”

“சரி உன் கார்ல வா. என்னோடது இங்கயே இருக்கட்டும்” என்று விட்டாள்.

உடனே வீராவும் வந்தான். ஜாக்ஷி கீழே வர, காதம்பரி புயல் வேகத்தில் அவள் முன்பு வந்து நின்றார்.

“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?” என்று கோபமாக கேட்க, ஜாக்ஷி அவளை மேலும் கீழும் பார்த்தாள்.

அலுவலகம் கிட்டத்தட்ட காலியாகி இருந்தது. அதனால் அங்கு வீரா வின் கார் தவிர யாரும் இல்லை.

“உன்னை பத்தியா? சொன்னா உனக்கு தான் அசிங்கம்”

“என்னடி? திமிரா? எவ்வளவு தைரியம் இருந்தா என் அம்மா சொத்த தூக்கி அந்த **** க்கு கொடுப்ப?” என்று கத்தினார்.

“நீ யாரு அத கேட்க?” என்று ஜாக்ஷி கேட்க, காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வீரா, பதட்டமாக இறங்கி வந்தான்.

‘இந்தம்மா எங்க இருந்து வந்துச்சு? ஏன் தேடி வந்து இவள கோபப்படுத்துறாங்க?’ என்று சலிப்பாக இருந்தது.

“என் சொத்துடி அது. உன் இஷ்டத்துக்கு அவளுக்கு கொடுத்துருக்க? யார கேட்டுடி கொடுத்த?”

“யாரையும் கேட்க வேண்டிய அவசியம் இல்ல. கிளம்பு”

“அசிங்கமா இல்லையாடி? அவளால தான் எல்லா பிரச்சனையும் வந்துச்சு. அவ கிட்ட போய் பேசுற.”

“நான் யார் கிட்ட வேணா பேசுவேன். நீ ஏன் இப்படி வந்து கத்துற?”

“பேசுவடி பேசுவ. அவள மாதிரி தான நீயும். கல்யாணம் பண்ணாம ப**** தான நீயும். இனம் இனத்தோட தான் சேரும்”

“ஏய்…” என்று ஜாக்ஷி கையை ஓங்கி விட, வீரா பிடித்து விட்டான்.

“பெத்தவள கை ஓங்குறல? உண்மைய சொன்னா எரியுதா? அதுவும் ஒரு வேலைக்காரனோட.. ச்சை…” என்று பேச, ஜாக்ஷிக்கு கோபம் உட்சத்தை தொட்டது.

“வேணாம். போயிடு”

“போறேன்டி. ஆனா உன் திமிர எல்லாம் ஒரு நாள் அடக்காம விட மாட்டேன். உன்னை எல்லாம் பெக்கும் போதே கொன்னுருக்கனும். சொன்னேன். இவள இவ்வளவு கஷ்டப்பட்டு பெக்கனும்னு அவசியமில்ல. வயித்துலயே கொன்னுட்டு வெளிய எடுத்து போடுங்கனு சொன்னேன். அந்த டாக்டர் தான் கேட்க மாட்டேன்னுட்டான். இல்லனா அன்னைக்கே உன்னை புதைச்சுட்டு நிம்மதியா வாழ்ந்துருப்பேன்”

ஜாக்ஷி மட்டுமல்ல வீரா கூட அதிர்ந்து போய் நின்றிருந்தான்.

“விசச்செடி உன்னை கொல்லாம விட்டதுக்கு, வளர்ந்து என்னேயவே கை ஓங்குவியா? பார்த்துக்கிறேன்டி. அதுவும் ஒரு வேலைக்காரன் கூட… ஊருக்குள்ள ஆம்பளயே இல்லையா? உன் அப்பன் புத்தியோட பிறந்து தொலைச்சுருக்க. ஒரு நாள் உன்னை எல்லாத்துக்கும் சேர்த்து அழ விடுறேன்”

ஜாக்ஷிக்கு உள்ளம் உடைந்து போயிருந்தது. அதை தாண்டி அவள் எதோ பேசப்போக, வீரா அவள் கையை பிடித்து இழுத்தான்.

“நாம கிளம்பலாம் வா”

“நீயெல்லாம் ஒரு ஆளுனு என் முன்னாடி நிக்கிறல? சொத்துக்காக தான இவ கூட இருக்க? அந்த சொத்த நான் வாங்கிட்டா என்ன செய்வ?” என்று வீராவை பார்த்து கேட்க, “உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. அந்த அளவுக்கு உங்களுக்கு தகுதியும் இல்ல” என்றவன், ஜாக்ஷியை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.

காதம்பரி இருவரையும் எரிப்பது போல் பார்த்து விட்டுச் செல்ல, காரின் அருகே வந்ததும், வீராவிடமிருந்து கையை வெடுக்கென உருவிக் கொண்டாள் ஜாக்ஷி.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
26
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அச்சோ…! இந்த காதம்பரியாலே வீரா கூட இனி சேர்ந்து வாழக் கூடாதுன்னு தப்பான முடிவை எடுத்திடுவாளோ இந்த ஜாக்ஷி.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. காதம்பரி 😈😈😈😈😈