Loading

 

வினய் கவிதாவை கவனித்துக் கொண்டே இருந்தான். எப்போதும் தைரியமாக இருக்கும் பெண். அவளது தைரியம் அவனுக்கு பிடிக்காது தான். ஆனால் இப்போது தரையை மட்டுமே பார்த்தபடி இருந்தாள். சற்று வருத்தமாக கூட இருந்தது.

அவளுடைய தோழிகள் அவளை பேச வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

“பாவம்ல?” என்று வினய் சொல்ல, “யாரு?” என்று கேட்டான் நண்பன்.

ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டி விட்டுச் சென்று விட்டான்.

கவிதா மாலை வரை அமைதியாகவே இருக்க, திடீரென வகுப்பிற்குள் ஓடி வந்து நின்றான் ஒருவன். அவன் சொன்ன செய்தி அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்திருந்தது.

அவர்களது வகுப்பு மாணவன் ஒருவன், எதையோ திருடி மாட்டிக் கொண்டான். அவனது பெற்றோர்களை அழைத்து பிரச்சனையை பேசப்போவதாக சொல்ல, எல்லோரும் நம்ப முடியாமல் பார்த்தனர்.

மாலை இவர்களது வகுப்பை மட்டும் அனுப்பாமல், இருக்க வைத்து விட்டனர். என்ன நடக்கிறது? என்று புரியாமல் இருக்க, திருடனின் வீட்டிலிருந்து திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கைபேசிகள் பணம் என்று நிறைய திருடியிருக்கின்றான். எல்லாமே உரிமையாளர்களை கண்டு பிடித்து ஒப்படைத்து விட்டு, அவனை காவல்துறையில் ஒப்படைத்து விட்டனர்.

அதன் பிறகே எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

“கவிதா” என்று வினய் பாதையை மறைத்து நின்றான்.

“நான் ஃபோன எடுக்கலனு சொன்னேன்ல? இவன் தான் எடுத்துட்டு என் பேக்ல போட்டுருக்கான்”

“ஓ!”

“நீ எனக்கு சாரி சொல்லனும்”

“எதுக்கு?”

“என் மேல அநியாயமா சந்தேகப்பட்டியே. அதுக்கு தான்”

“ஃபோன் அவன் கையில இருந்து, உன்னை சந்தேகப்பட்டுருந்தா தான் அது அநியாயம். உன் பேக்ல இருந்து எடுத்தா உன்னை தான் சந்தேகப்பட முடியும். இதுக்கு சாரி எல்லாம் சொல்ல முடியாது”

“அடிப்பாவி!” என்று வினய் அதிர்ந்து நிற்க, கவிதா அமைதியாக கிளம்பி விட்டாள்.

‘இவ மாறமாட்டா.. அமைதியா இருக்கானு பார்த்தா.. கொஞ்சம் கூட திமிர் குறையாம பேசிட்டு போறா’ என்று நினைத்து விட்டு அவனும் கிளம்பி விட்டான்.

*.*.*.*.*.*.

“மாமா.. சாப்பிடுங்க” என்று நிஷாந்தினி அழைக்க, பசுபதி எழுந்து வந்தார்.

நிசாந்தினி எல்லாவற்றையும் முன்னால் வைத்து விட்டு, தானும் சாப்பிட‌ அமர்ந்து விட்டாள்.

அருளும் சேகரும் தானாய் போட்டு சாப்பிட, பசுபதிக்கு முடியவில்லை. தாமரை பரிமாறுவார். பார்த்து பார்த்து எடுத்துக் கொடுப்பார். சாப்பாடும் அவருக்கு பிடித்த விதமாக தான் இருக்கும்.

இன்று எல்லாமே தலைகீழ். மருமகளை குறை சொல்ல முடியாது. வேலைக்கும் சென்று வீட்டையும் கவனிக்கிறாள். அவளால் முடிந்தவரை செய்யும் போது, குறை கூற முடியவில்லை.

வயதான பிறகு துணையை இழப்பதை விட பெரும் தண்டனை எதுவும் இல்லை. பெயருக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டார்.

சேகரும் அருளும் கூட உணவின் வித்தியாசத்தை உணரத்தான் செய்தனர். ஆனால் நிஷாந்தினியை குறை சொல்ல நா எழ வில்லை.

“நல்லா இருக்கா?” என்று சற்று கவலையோடு கேட்டாள் நிஷா.

“நல்லா தான் இருக்கு” என்றான் சேகர்.

“அத்த அளவுக்கு எனக்கு செய்ய வராது. என்னால முடிஞ்ச வரை கத்துக்கிட்டு பண்ணுறேன். ஆனா என்னால காலையில காலேஜ்க்கு கிளம்பும் போது சமையல் வேலையையும் சேர்த்து பார்க்க முடியல”

அவளது கஷ்டத்தை சொல்ல, “என்ன பண்ணலாம்?” என்று கேட்டான்.

“சமைக்க ஆள் வைக்கலாமா? என்னால எல்லாத்தையும் சரியா பண்ண முடியாது” என்க சேகர் யோசித்தான்.

“வேலைக்கு வச்சு சம்பளம் கொடுக்குற அளவு நம்ம கிட்ட பணமில்ல நிஷா”

“நான் வேணா கொடுக்குறேன். என் சம்பளம் வருதுல?”

“அதெல்லாம் வேணாம். நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன். கடைக்கு போற வேலைனா, அருள் பார்ப்பான். கொஞ்ச நாள் சமாளிக்கலாம்”

அருள் பேசவில்லை என்றாலும் சேகரின் முடிவே சரியானதாக இருந்தது அவனுக்கும்.

வீட்டின் வேலைகளை பகிர்ந்து கொண்டு தான் ஆக வேண்டும். எல்லாவற்றையும் தாமரை பார்க்க, தன் போக்கில் இருந்தது போல் இனி இருக்கவே முடியாது.

வீட்டின் தலைவி இல்லை என்றால் எவ்வளவு பொறுப்புகளை கவனிக்க வேண்டும் என்று, இப்போது தெளிவாக புரிந்தது.

நிஷாந்தினியும் அவர்களது முடிவுக்கு தலையாட்டி வைத்தாள். மொத்தமாய் அவளை மறுக்கவில்லை. ஆனால் உதவுவதாக முன் வரும் போது, தட்டிக் கழிக்கவும் கூடாதே.

*.*.*.*.*.*.

அடுத்த நாள் காலை..

வீரா தான் முதலில் எழுந்தான். கண்விழித்து பார்க்க, ஜாக்ஷி அருகே உறங்கிக் கொண்டிருந்தாள்.

நேற்று நடந்த எல்லாமே நினைவில் வந்து புன்னகையை மலரச் செய்தது. அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்து குளிக்கச் சென்றான்.

அவனது கைபேசி ஒலியெழுப்ப, அந்த சத்தத்தில் ஜாக்ஷியின் தூக்கம் கலைந்தது. முழுதாய் எழுந்து எடுத்துப் பார்க்கும் முன்பு அழைப்பு நின்று விட, மெத்தையில் உருண்டாள்.

வீரா வந்ததும் எழுந்து அமர்ந்தாள்.

“ஃபோன்ல யாரு?”

“பாட்டி”

“அப்பத்தாவா?”

“ம்ஹும் என் பாட்டி”

“எடுத்து பேச வேண்டியது தான?”

“அதுக்குள்ள கட் ஆகிடுச்சு” என்றவளை பார்த்து புன்னகைத்தான்.

எழும்போதே கலைந்த ஓவியமாக இருந்தாள்.

அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “எழுந்து கிளம்பு. சாப்பிட எதாவது செய்யுறேன். வேலைய பார்க்கனும்ல?” என்றான்.

“ரொம்ப டயர்டா இருக்கு” என்று ஜாக்ஷி சிரிக்க, அவனுக்கும் சிரிப்பு வந்தது.

“அப்ப ரெஸ்ட் எடு”

“ம்ஹும். மீட்டிங் இருக்கு. போகனும்”

“அப்ப பிரேக் பாஸ்ட் பண்ணி வைக்கிறேன். போய் குளிச்சுட்டு வா” என்றவன், கைபேசியில் ஜகதீஸ்வரியை அழைத்தான்.

“சொல்லுங்க பாட்டி”

“வீரா எந்திரிச்சுட்டியா?”

“இப்ப தான். குளிச்சுட்டு இருந்தேன். என்ன விசயம்?”

“கார் அனுப்பி வைக்க சொல்லி ஜாக்ஷி கிட்ட சொல்லியிருந்தேன். அவ எங்க? எந்திரிச்சுட்டாளா?”

அவளை ஒரு நொடி பார்த்து விட்டு, “தெரியல” என்றான்.

“அவளுக்கு ஃபோன் பண்ணேன் எடுக்கல”

“சைலண்ட்ல இருந்துருக்கும். நான் சொல்லுறேன்”

“சரி சரி.. இன்னைக்கே அனுப்பிடுங்க. அப்ப தான் நாளைக்கு வர முடியும்” என்று விட்டு வைத்து விட்டார்.

“தெரியாதா? உன் முன்னாடி தான முழிச்சு உட்கார்ந்துருக்கேன்” என்று ஜாக்ஷி முறைக்க, “மக்கு. உனக்கு ஃபோன் பண்ணிருக்காங்க நீ எடுக்கல. என் கிட்ட கேட்டு நீ முழிச்சு தான் இருக்கனு சொல்லி வச்சா.. நாமலே நம்மல எக்ஸ்போஸ் பண்ண மாதிரி இருக்கும்.” என்றான்.

ஜாக்ஷிக்கு இதைக்கேட்டு வெட்கத்தோடு சிரிப்பு வந்தது.

“அது சரி. நான் போய் குளிக்கிறேன்” என்று எழுந்து தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.

குளிக்கும் போது தன் மீது இருந்த சிறு சிறு காயங்கள் கூட, அவளுக்கு வெட்கம் கொடுத்தது.

“ச்சே நேத்து நிஜம்மாவே வெட்கம் போயிடுச்சு” என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டு கிளம்பினாள்.

வீரா சமைத்து வைத்து விட்டு அவளுக்காக காத்திருந்தான்.

சுபத்ராவிடம் பேசி விட்டு, இருவரும் சாப்பிட்டு கிளம்பினர்.

“என்னால டிரைவ் பண்ண முடியாது. நீயே பண்ணு” என்று பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“ரொம்பவா டயர்ட்?”

“தூக்கம் வருது. இன்னும் கொஞ்சம் தூங்குனா நல்லா இருக்கும். மீட்டிங் முடிச்சுட்டு ஆஃபிஸ்லயே தூங்க வேண்டியது தான். என்னை டிராப் பண்ணிட்டு நீ கார எடுத்துட்டு போ”

“நான் ஒரு கார் வாங்கலாம்னு இருக்கேன் ஜக்கம்மா”

“என்ன மாடல்?”

“இன்னும் யோசிக்கல”

“எதுனாலும் சொல்லு.. இந்த கார் வாங்குன இடத்துலயே வாங்கிடலாம்.”

“பாட்டிக்கு மறக்காம கார அனுப்பிடு”

“ஆமா.. டிரைவருக்கு சொல்லனும்” என்றவள், அப்போதே அழைத்து சொல்லி விட்டு அலுவலகத்தில் இறங்கிக் கொண்டாள்.

வீரா தன் வேலையை பார்க்கச் சென்றான்.

*.*.*.*.*.*.

ஜானகி சம்பளத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். இந்த மாதம் வீட்டுச் செலவு குறைவு தான். காரணம் மேனகா சமைக்கவே இல்லை.

வீம்புக்கு அவர் சமைக்க மாட்டேன் என்று இருக்க, ஜானகி மிகவும் குறைவான செலவில் சாப்பாடை முடித்துக் கொண்டாள்.

ஜெகனும் சம்பளம் வாங்கி விட்டான். அவனது செலவுகளை இனி செய்ய வேண்டாம். மற்ற செலவுகள் போக பணம் மிச்சமிருக்கும் என்று நினைக்கும் போதே, நிம்மதியாக மூச்சு வந்தது.

“க்கா.. என்னகா வந்ததுல இருந்து ஃபோனயே பார்த்துட்டு இருக்க?”

“அப்பா சம்பாதிக்கும் போது இஷ்டத்துக்கு செலவு பண்ணிருக்கேன்டா. இன்னைக்கு இதுல இருக்க ஒரு ஒரு காசும், நான் உழைச்சு சம்பாதிச்சதுனு யோசிக்கும் போது வருத்தமா இருக்கு. இப்படித்தான அப்பாவும் உழைச்சுருப்பாரு?”

“ஆமா.. உங்கப்பா உசுர கொடுத்து உழைச்சது தான் எல்லாம். அத தான் தூக்கி ஜாக்ஷி கிட்ட கொடுத்துட்டு இங்க பிச்சக்காரியா நிக்கிறோம்” என்று மேனகா நொடித்துக் கொள்ள, ஜெகனுக்கு சலிப்பாக இருந்தது.

“ம்மா.. அப்பா வேலை பார்த்து சம்பளம் வாங்குனவரு”

“ஏய்.. என்னடா பேசுற? அந்த மொத்த சொத்துக்கும் சொந்தக்காரர் அவரு. அவரில்லாம அந்த கம்பெனியே இல்ல. வேலை பார்த்து சம்பளம் வாங்குனாருங்குற?”

“அப்படித்தான் அந்த ஜாக்ஷி சொன்னா. எங்க கிட்ட காட்டுற கோபத்த அவ கிட்ட காட்ட வேண்டியது தான? அவ கிட்ட மட்டும் போய் ஃபேக்டரிய கொடுனு கெஞ்சிட்டு நிக்கிறீங்க?” என்று ஜானகி சொல்ல, மேனகா தீயாய் முறைத்தார்.

“முடியாதுல? அவ கிட்ட இப்படி பேசுனா, உங்க வண்டவாளத்த எல்லாம் கப்பல்ல ஏத்தி விட்டுருவானு பயம். எங்க கிட்ட மட்டும் கத்துங்க. போய் வேற வேலை இருந்தா பாருங்க. இல்லையா சும்மா இருங்க. எங்க உசுர வாங்காதீங்க”

“என்னடி கப்பல்ல ஏத்துவா? இல்ல என்ன கப்பல்ல ஏத்துவா? எங்க சொல்லேன்” என்று மேனகா எகிற, ஜானகிக்கு கோபம் வந்தது.

தினம் தினம் எதாவது ஒன்றை மேனகா சொல்லி, அவரோடு சண்டை போட்டு ஓய்ந்து போயிருந்தாள் ஜானகி. இன்று சொல்லி விடுவது என்ற முடிவுக்கு வந்தாள்.

“நீங்களும் அப்பாவும் வாழ்ந்த லட்சணத்த சொல்லுறேன்”

“நாங்க நல்லா தான்டி வாழ்ந்தோம். அவரு போனதும் நீங்க தான் என் உயிர வாங்குறீங்க”

“ஆஹான்? எப்படி நல்லா வாழ்ந்தீங்க? கல்யாணமாகி புள்ளையோட இருந்தவர் கூட ஆறு வருசம் அஃபயர்ல இருந்தீங்களே, அதான் நல்ல வாழ்க்கையா?”

இதைக்கேட்ட அடுத்த நொடி, மேனகா ஜானகியை அடித்து விட்டார்.

“கண்டத பேசுன பல்ல தட்டிருவேன்”

“ம்மா.. அக்காவ ஏன் அடிக்கிறீங்க? உண்மைய சொன்னா கசக்குதா?”

“டேய்” என்று அவனிடமும் கை ஓங்க, “என்ன? அடிச்சுட்டா? நீங்க பண்ணது இல்லனு ஆகிடுமா? என்ன கண்டராவி எல்லாம் பண்ணி வச்சுருந்தீங்கனு எங்களுக்கு தெரியும். காலம் முழுக்க எங்களுக்கு தெரியாமலே போயிடும்னு நினைப்பா?” என்று கத்தினான்.

“அப்புறம்.. இது ஒன்னும் அடுத்தவங்க சொல்லல. உங்க புருஷன் எங்கள பெத்த அப்பாவே சொல்லிட்டாரு. எல்லாமே எங்களுக்கு தெரியும். அடுத்தவ வாழ்க்கைய காசு பணத்துக்காக பறிச்சுட்டு, ஆறு வருசமா ரகசியமா வாழ்ந்துட்டு.. அந்த வாழ்க்கைக்கு சாட்சியா தான, ஜகதீஸ்வரி பாட்டியோட நகைங்க எல்லாம் உங்களுக்கு வந்துச்சு? பணத்துக்காக அவர ஏமாத்தி கல்யாணமும் பண்ணிட்டு.. அவர் உங்கள நல்லா வச்சுருந்தாரு. நாங்க பிச்சக்காரி ஆக்கிட்டோமா? போயிடுங்க. பெத்த அம்மானு பார்க்குறேன். ஜாக்ஷி ஒரு வகையில கொடுத்து வச்சவ. தப்பு பண்ணது பெத்தவங்களா இருந்தாலும், தேவையில்லனு தூக்கி எறிஞ்சுட்டு வாழுறா. எங்களால அது கூட முடியல. ச்சை…”

“இங்க பாருங்க.. இதோட நிறுத்திக்கோங்க. சும்மா அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்பட்டு எங்க உயிர வாங்காதீங்க. அப்படி செஞ்சீங்க? சொல்லாம கொள்ளாம நாங்க ரெண்டு பேரும் வீட்ட விட்டு போயிடுவோம். அக்காக்கும் வேலை இருக்கு எனக்கும் வேலை இருக்கு. ஞாபகம் வச்சுக்கோங்க” என்ற ஜெகன், கோபத்தில் இருந்த ஜானகியை கையோடு இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
31
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மேனகா நல்ல வேண்டும் உனக்கு

    2. எனக்கென்னவோ பாட்டிங்க ரெண்டு பேரும் வந்தவுடனே
      வீராவும் ஜாசஷியும் சொல்லப் போற நல்ல விஷயமே சீக்கிரம் கல்யாணத்துக்கு நல்ல நாள் பாருங்க என்கிறது தான் இருக்கும் போல.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797