Loading

நந்தகோபாலன் சத்தியபாமாவிற்கு மூன்று பிள்ளைகள்.

முதல் மகன் ஸ்ரீனிவாசன். இரண்டாவது மகன் கோபிநாதன். மூன்றாவது மகள் வசந்தகுமாரி.

மூன்று குடும்பமும் இப்போது நந்தவனத்தில் தான் இருக்கின்றனர். எல்லோருக்கும் தனித் தனி வீடுகள். தனித்தனி தொழில்கள். யாரும் யாரையும் சார்ந்து இருப்பது இல்லை.

நந்தகோபாலனுக்கு ஓய்வூதியமே கைநிறைய வர, அவர்களும் தனி தான். யாரையும் சார்ந்து வாழத்தேவை இருக்கவில்லை‌.

சத்தியபாமாவும் சுந்தரவல்லியும் மூன்றாவதாக இருந்த வீட்டில் அமர்ந்து, திருமண செலவுகளை பற்றிப் பேசிக் கொண்டிருக்க, மகன் கிளம்பியதும் அங்கு வந்து சேர்ந்தார் வசந்தா.

“ம்மா..” என்று அழைத்தபடி செருப்பை வாசலில் விட்டு விட்டு உள்ளே வந்தார்.

“வா வசந்தா. உட்காரு.. பத்திரிக்கை எழுதிட்டீங்களா?”

“எங்க? அப்பா கிட்ட கேட்டு யதுவ எழுதச்சொல்லி சொன்னேன். அவன் தலையத் தலைய ஆட்டிட்டு கிளம்பிப் போயிட்டான்”

“சாயந்தரம் வரட்டும் பார்ப்போம். இப்போ யாருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுக்கனும்னு எழுதி வைப்போம். அப்புறம், சாப்பாடு அலங்காரத்துக்கு எல்லாம், எல்லாமே பண்ணி கொடுக்குற ஆளுங்க இருக்காங்களாம்ல? வானு சொன்னா. அந்த மாதிரி கொடுத்துருவோமா? கிருபா கல்யாணத்துக்கே திணறிப்போயிட்டோம். அது கூட வெளிய இருந்து வந்தாங்க. இப்ப வீட்டுக்குள்ளயே பண்ணுறோம். நம்ம சொந்தத்த நம்மலால திருப்தி படுத்தவே முடியாது”

“அதுவும் சரி தான்மா. கிருபா கல்யாணத்துல எவ்வளவு கலாட்டா பண்ணிட்டாங்க. அது மாதிரி மறுபடியும் எதையாவது பண்ணிட்டு இருப்பாங்க. பேசாம ப்ளானர் கிட்டயே கொடுத்துரலாம்.” என்று வசந்தாவும் சம்மதம் சொல்ல, அதே நேரம் கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள் வனிஷா.

“வேலைக்கு கிளம்பிட்டேன் பாட்டி.. வர்ரேன்” என்று எல்லோருக்கும் பொதுவாக சொல்லி விட்டு வெளியேறினாள்.

வனிஷா அந்த வீட்டின் கடைசி பிள்ளை. கோபிநாதனின் மகள். அவர்களது வீடு எதிரில் இருந்தாலும், இப்போது இருப்பது பாட்டியோடு தான். வனிஷாவிற்கு ஏழு வயது இருக்கும் போது, நோயில் விழுந்த கோபிநாதன் ஒரு வருடத்தில் இறந்து போனார்.

அதன் பின் சிறு பெண்ணை வைத்துக் கொண்டு, கோபிநாதனின் மனைவி மலர்விழி தவிக்க வேண்டாம் என்று, பாட்டியும் தாத்தாவும் தங்களோடு தங்க வைத்து விட்டனர்.

அவர்களது வீடு வாடகைக்கு விடப்பட்டது. அந்த வீட்டில் சுந்தரவல்லி பாட்டியும், அவரது பேத்தி தீபாவும் தங்கி இருக்கின்றனர். சுந்தரவல்லியின் மகனும், அமெரிக்காவில் தான் இருக்கின்றார். மகளை மட்டும் அம்மாவிடம் விட்டிருக்கிறார்.

வனிஷா… ஐந்தடி உயரம். மகாலட்சுமியை விட ஒரு வயது இளையவள். ஆனால் மகாலட்சுமிக்கு நேர் எதிர் துருவம். மார்டன் மங்கை. பளிச்சென்ற பாலாடை நிறத்தில் இருந்தாலும், மேக் அப் செய்து கொள்வதில் ஆர்வம் அதிகம். முடியை முதுகு வரை ஆங்கில எழுத்தான யூ வடிவில் வெட்டி இருந்தாள். அவ்வப்போது கலரிங் செய்வதும் உண்டு.

காதில் வளையங்கள் தொங்க, கழுத்தில் எதுவும் இல்லை. சார்ட் டாப் ஜீன்ஸ் சகிதம் கைப்பையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடக்க, அவள் எதிரில் வந்தாள் தீபா.

தீபா வனிஷாவை மேலிருந்து கீழ் வரை ஆராய்ச்சியாக பார்க்க, வனிஷா அவளை திரும்பியும் பார்க்கவில்லை. யாரையும் திரும்பிப் பார்க்க மாட்டாள். பாட்டி, தாத்தா, அம்மா தவிர யாரிடமும் ஒரு வார்த்தை அதிகம் பேச மாட்டாள்.

ஐடி நிறுவனத்தில் வேலை. கை நிறைய சம்பளம். அது கொடுக்கும் திமிர் என்று யாரும் அவளிடம் நெருங்குவது இல்லை.

பெரியப்பா குடும்பம், அத்தை குடும்பம் இரண்டும் அதே காம்பவுண்டுக்குள் இருக்கிறது என்றாலும், அவர்களிடம் கொஞ்சவும் பேசவும் அவளுக்குப் பிடிப்பதில்லை.

ஏன் அவர்கள் வீட்டுக்கு கடைசியாக அவள் எப்போது சென்றாள்? என்பதே யாருக்கும் ஞாபகம் இல்லை.

மகாலட்சுமி, கிருபாநந்தினி, யதுநந்தன், செல்வகுமார் என்று எல்லோரும் விளையாடும் போது, வனிஷா அவர்களை ஓரப்பார்வை பார்த்து, அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விடுவாள். இவர்கள் வலிய சென்று அழைத்தாலும் கூட, “நான் வரல” என்று முகத்திலடித்தது போல் பேசி விட்டுச் செல்வாள்.

அதனால் மொத்தமாக எல்லோருமே அவளிடமிருந்து விலகி விட்டனர். அவளும் யாரை பற்றியும் அக்கரை பட்டதில்லை.

இப்போதும் யாரையும் பார்க்காமல் வெளியே வந்தவள், அவளுக்காக வந்த கேப்-இல் ஏறி வேலைக்கு புறப்பட்டு விட்டாள்.

“இவ மட்டும் ஒரு தினுசா திமிரு பிடிச்சவளா இருக்காளே.. இந்த குடும்பத்துல இவ தப்பி பிறந்துட்டா.” என்று வழக்கமாக நினைப்பதை இன்றும் முணுமுணுத்துக் கொண்ட தீபா தனது பாட்டியிடம் சென்றாள்.

“பாட்டி..” என்று வாசலில் நின்றபடி அழைக்க, “உள்ள வா தீபா” என்றார் சுந்தரவல்லி.

“பாட்டி.. நான் மகாவ பார்க்க போறேன். வேலைய முடிச்சுட்டேன்” என்று கூறி விட்டு, உடனே கிளம்பி விட்டாள்.

மகாலட்சுமியும் தீபாவும் நெருங்கிய தோழிகள். இருவருமே ஒரே பள்ளியில் தான் வேலையில் சேர்ந்திருந்தனர். ஒரே வயதும் கூட. இங்கு வந்ததும் தீபா மகாவிடம் பேசுவது போல் வனிஷாவிடம் பேச முயற்சிக்க, அவளது அலட்சியம் தான் பதிலாக கிடைத்தது. அதனால் தான் அடிக்கடி வனிஷாவை பற்றி இப்படி முணுமுணுத்துக் கொள்வது.

“மகா..” என்று தீபா குரல் கொடுத்ததும், மகாலட்சுமி ஓடி வந்து தீபாவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

“என்ன அவசரம்? எப்படியும் உட்கார வச்சு உன் ஆளு புராணத்த படிக்க போற. அதுக்கு இவ்வளவு வேகமா?” என்று தீபா சலித்துக் கொள்வது போல் கிண்டலடிக்க, “சரி போ. நான் எதுவும் சொல்லல” என்று மகா முறுக்கிக் கொண்டாள்.

“அப்பாடா.. தப்பிச்சேன்” என்று தீபா நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட, மகா முறைத்து வைத்தாள்.

“ரொம்ப தான் பண்ணுற போடி”

“பின்ன? இந்தா இருக்கு எதிர் வீடு. அவர கல்யாணம் பண்ணிட்டு போறதுக்கு நீ கொடுக்குற அலப்பறை இருக்கே.. தாங்கல.. ஆமா அவர் நம்பர் வாங்குனியே மெஸேஜ் பண்ணியா இல்லையா?”

“இல்லபா. பயமா இருக்கு”

“சொந்த அத்தை மகனுக்கு மெஸேஜ் பண்ணுறதுக்கு பயமா? ஏன்டி?”

“இல்ல.. இது அரேன்ஜ் மேரேஜ் தான? எனக்கு தான் அவர் மேல ரொம்ப இஷ்டம். அவரு அப்படி எல்லாம் வெளிய காட்டிக்கல. என்னை பார்த்தா ஸ்மைல் பண்ணுறார். சேட்டிங் எல்லாம்… என்ன நினைப்பாரோ?”

“உனக்கே இது ஓவரா தெரியலயா?”

“உனக்கு புரியல. விடு. கல்யாண மேக் அப் ஆன்லைன்ல பார்த்துட்டு இருந்தேன். அத பார்ப்போம் வா” என்று பேச்சை திசை திருப்பினாள்.

______

வனிஷா அலுவலகம் சென்று தன் இடத்தில் அமர, அவளை இரண்டு கண்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“நீயும் அவள கண்ணாலயே காவல் காக்குற. அவ உன் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்குறா. இன்னும் எத்தனை வருசம்டா இப்படியே இருக்கப்போற? தைரியமா லவ்வ சொல்லித்தொலையேன்”

விஷ்வாவின் தலையில் அடித்து சலிப்பாக பேசினாள் அவனது தோழி. அவளுக்கு பதில் சொல்லாமல் சிரித்து வைத்தவன், பார்வை மீண்டும் ஒரு முறை வனிஷாவிடம் சென்று வந்தது.

“இப்ப நீ சொல்ல போறியா? இல்ல நான் போய் சொல்லவா?”

“எங்க போய் பேசு பார்க்கலாம்? அவ உன் கிட்ட நாலு வார்த்தை பேசிட்டா.. இன்னைக்கே என் லவ்வ சொல்லிடுறேன்” என்று சவால் விட்டான் விஷ்வா.

“நடக்குற காரியத்த பேசு.. நாலு வார்த்தை? அதுவும் வனிஷா? செவ்வாய் கிரகத்துல வீடு கட்டுறது கூட நடந்துடும். வனிஷாவ பேச வைக்கிறது நடக்காது”

“தெரியுதுல? போ போய் வேலைய பாரு” என்று துரத்தி விட்டவன், வேலையில் பாதி கவனமும் வனிஷாவிடம் மீதி கவனமும் வைத்திருந்தான்.
_______

மதியம் யதுநந்தன் வந்து சேர, பத்திரிக்கை எழுதி அச்சிட கொடுக்கப்பட்டது. அதோடு வேலைகள் மளமளவென நடக்க ஆரம்பித்தது.

திருமண திட்டமெல்லாம் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட, அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழச்சி என்று குறித்து வைத்தனர்.

அவர்களது திட்டத்தின் படியே, ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்க ஆரம்பித்தது. ஒன்றாய் திருமணப் புடவை எடுத்து வந்தனர். வீட்டில் பந்தல் போடப்பட்டது. சொந்தபந்தங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கப்பட்டது.

மகாலட்சுமியின் விருப்பத்திற்காக, மண்டபத்திலேயே திருமணத்திற்கு முதல் நாள் மருதாணியிடும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

வனிஷா எதிலும் பெரிய ஈடுபாடு காட்டவில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று கடந்தாள். மகாலட்சுமியும் தீபாவும் தான் சந்தோசமாக வலம் வந்தனர். கிருபாநந்தினி கூட, அவளது குடும்பத்தோடு நான்கு நாட்களுக்கு முன்பு வந்து விட்டாள்.

மருதாணி விழாவை கேட்டு சத்தியபாமா தான் முழித்தார்.

“மருதாணி வைக்குறதுக்குப் போய் பங்சனா?” என்று அவர் அதிசயமாக பார்க்க, “இப்போ இதான் பாட்டி ட்ரெண்ட். வடமாநிலத்துல பண்ணுவாங்க. அத இங்க நம்ம ஆளுங்களும் காபி அடிச்சுட்டு சுத்துறாங்க. நம்ம வழக்கத்துக்கு ஒழுங்கா மருதாணிய அரைச்சு வச்சாலே நல்லா தான் இருக்கும். ஆனா இந்த மாதிரி வச்சா, இன்னும் குடும்பம் எல்லாம் சேர்ந்து கொண்டாடலாமேனு தான் இப்படி” என்று தீபா விளக்கோ விளக்கென்று விளக்கி வைத்தாள்.

அதன் பின்பே சத்தியபாமாவும் ஒப்புக் கொள்ள, திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் மெஹந்தி விழா நடந்து முடிந்தது.

மண்டபத்திற்கு அருகே இருந்த ஹோட்டலில் அறைகள் எடுத்திருந்தனர். இரவு வீடு வந்து, திரும்பவும் மண்டபம் போவது என்றால், இடையில் தூக்கத்திற்கு நேரமிருக்காது என்று இந்த முடிவு.

வனிஷா மெஹந்தியை கழுவி விட்டு கையைத் திருப்பிப் பார்த்தாள். அழகிய டிசைன் தான். அவள் தேர்ந்தெடுத்தது தான். ஆனாலும் அதில் எதோ குறை போல தோன்றியது.

“வேற ஆளுங்கள கூப்பிட்டு இருக்கலாம். மெஹந்தி சாடிஸ்ஃபையா இல்ல” என்று வனிஷா கூற, மகாலட்சுமி அவளை திரும்பிப் பார்த்து விட்டு, “எனக்கு பிடிச்சுருக்கே” என்றாள்.

“நான் எனக்குப் பிடிக்காதத பத்தி பேசுனேன்” என்று வனிஷா பதில் சொல்லி விட்டு, “நான் பாட்டி கூட படுக்கப் போறேன்.” என்று கிளம்பி விட்டாள்.

இளம் பெண்களுக்கு ஒரே அறை என்று, மஹாலட்சுமி தீபாவுடன் வனிஷாவும் தங்குவதாக சொல்ல, அவளுக்கு இந்த ஏற்பாடு சுத்தமாக பிடிக்கவில்லை.

வாயைத்திறந்து சொன்னால் பாட்டி வருத்தப்படுவாரே என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருந்தாள். இப்போது கிளம்பி விட்டாள்.

பாட்டிகளும் மலர்விழியும் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

“எங்கள சொல்லிட்டு நீங்க யாரும் தூங்கல போல?” என்று வனிஷா கேட்டபடி உள்ளே வர, “இந்தா படுக்க தான் போறோம். கிருபா மாமியாரு சாயந்தரம் சாப்பிட்ட சமோசா சேரலனு, சோடா வாங்கி கொடுனு ஒரே ஆர்பாட்டம். அத வாங்கி கொடுத்துட்டு இப்ப தான் வர்ரோம்” என்றார் சுந்தரவல்லி.

“அவங்க பண்ணுற அலப்பறை டூ மச். என்னமோ பெரிய கொம்பு முளைச்ச மாதிரி பிகேவ் பண்ணுறாங்க. என்னை விட்டா நல்லா பேசிடுவேன். எப்ப பாரு எதாவது குறை சொல்லிட்டு. இரிட்டேட்டிங் ஃபெல்லோஸ்”

“வானு..” என்று மலர்விழி அதட்ட, “ம்மா.. அவங்க பண்ணுறது நல்லாவா இருக்கு? சேராதுனா ஏன் சாப்பிடனும்? வாயிருக்கேனு முழுங்கிட்டு அப்புறம் குத்துது குடையுதுனு புலம்புறதா? என்ன மாதிரி ஆளுங்கடா” என்று எரிச்சலில் பொறிந்து தள்ளினாள்.

“என்னவாம்? எங்க பேரு அடிபடுது?” என்று கெத்தாக முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே வந்தார் கிருபாநந்தினியின் மாமியார் கஞ்சனா.

பேசியதை கேட்டு விட்டார் தான். ஆனால், தான் உள்ளே சென்றதும் எல்லோரும் பயந்து பம்முவதை பார்க்க ஆசை. அதனால் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

“இல்ல சம்மந்தி.. வேற பேசுனோம்” என்று மலர் சமாளிக்க பார்க்க, “இப்ப எதுக்கு மழுப்புறீங்க? ஆமா நான் உங்கள பத்தி தான் பேசுனேன். உடம்பு முழுக்க வியாதி இருக்குனா, எதுக்கு கண்டதையும் சாப்பிட்டுட்டு கலாட்டா பண்ணுறீங்க? கொஞ்ச காலமாவது வாழ ஆசை இருந்தா, எதையும் சாப்பிடாம வாய கட்டிப்போடனும்” என்று பட்டென பேசினாள் வனிஷா.

“வானு..” என்று சத்தியபாமாவும் மலர்விழியும் அதட்ட, ‘அப்படி போடு’ என்று பார்த்திருந்தார் சுந்தரவல்லி.

என்னவோ மொத்த குடும்பத்துக்கும் வனிஷாவை பற்றிய வெவ்வேறு எண்ணம் இருந்தாலும், சுந்தரவல்லிக்கும் சத்தியபாமாவுக்கும் மட்டும் வனிஷா என்றால் தனி பிரியம் தான்.

“என் உடம்பு முழுக்க வியாதியா?” என்று அலறிய காஞ்சனா, திரும்பி உடன் வந்த மருமகளை பார்க்க, அந்த இடம் காலியாக இருந்தது.

கிருபாநந்தினி உள்ளே வரவில்லை. வெளியே நின்று கொண்டு காதை கதவில் வைத்துக் கொண்டாள். அவளால் பேச முடியாததை ஒருத்தி பேசுகிறாள். உள்ளே சென்றால், கிருபாவை நடுவே இழுத்து மாமியார் வேறு பிரச்சனையை கிளப்புவார் என்று, வெளியே நின்று கொண்டாள். மருமகள் கிடைக்காததில் மற்றவர்கள் பக்கம் திரும்பினார் காஞ்சனா.

“என்ன இது? இதான் நீங்க பொண்ணு வளர்க்குற லட்சணமா? பெரியவங்க கிட்ட எப்படி பேசனும்னு கூட தெரியாதா? இதான் இந்த கல்யாணத்துக்கே வர மாட்டேன்னு சொன்னேன். எங்க கேட்டானுங்க?”

காஞ்சனா பெரும் குரலில் பேச, “ஹலோ.. வாய்ஸ குறைங்க. உங்கள விட எனக்கு கத்த தெரியும். கத்திட்டா நீங்க பெரிய இதுவோ? சம்பந்தம் பண்ணிருக்க வீட்டு விசேசத்துக்கு வந்துருக்கோம். அங்க நம்ம மரியாதைய காப்பாத்திக்னும்னு உங்களுக்கு அக்கறை இருக்கா? கண்டத திண்ணுட்டு உருண்டு புரண்டு ஒப்பாரி வைக்கிறமே.. இவங்க எல்லாம் நம்மல எவ்வளவு கேவலமா நினைப்பாங்கனு யோசனை இருக்கா? என் வளர்ப்ப பத்தி கவலைபடுறத விட உங்க மேனர்ஸ பத்தி கவலை படுங்க. இப்ப கூட என்னடா வம்பிழுக்கலாம்னு தான வந்தீங்க? காலையில கல்யாணத்த வச்சுட்டு உங்க கிட்ட மல்லுகட்ட எங்களுக்கு நேரமில்ல. போய் தூங்குங்க.” என்று வனிஷா பல்லைக்கடித்துப்பேச, இடையே தடுக்க வந்த மலர்விழியை சுந்தரவல்லி கையைப்பிடித்து தடுத்து விட்டார்.

“ம்மா.. லைட் ஆஃப் பண்ணுங்க. பாட்டி.. பேசாம படுங்க. தூக்கம் வருது. நாளைக்கு நமக்கு தான் வேலை. இந்த விருந்தாளிங்களுக்கென்ன? அலங்கரிச்சுட்டு உட்கார போறாங்க. நாம தூங்கனும்” என்றவள் அவளே விளக்கை அணைத்து விட்டு, கதவினோரம் சென்று கதவை திறந்தாள்.

அதாவது காஞ்சனாவை வெளியே போகச்சொன்னாள்.

அவ்வளவு நேரம் கதவில் காதை வைத்து கேட்டு சிரித்துக் கொண்டிருந்த கிருபா, “அத்த.. இங்கயா இருக்கீங்க? உங்க பிரஷ்ஷர் மாத்திரைய எடுத்துட்டு ரூம்க்கு போனா காணோம். தேடிட்டே வர்ரேன்” என்று அப்போது தான் வந்தது போல் பேசினாள்.

மருமகளும் வியாதி இருப்பது உண்மை என்று வந்து சொல்லி விட்டதில், வனிஷா நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள்.

காஞ்சனாவிற்கு அவமானமாகி விட, ‘இதுக்கெல்லாம் சேர்த்து கவனிச்சுக்கிறேன்’ என்று முறைத்து விட்டு வேகமாக வெளியேறினார்.

கிருபாநந்தினி அவர் பின்னால் சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்