Loading

திருச்சியில் வேலைக்கு இன்டர்வியூ சென்று திரும்பி கொண்டிருக்கும் பொழுது பேருந்து பழுதாகிவிட, வழியில் வந்த ஒரு காரில் ஏறி சேலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தாள் தெய்வானை.

ஏற்கனவே ஏதோ புதுவிதமான நோய் பரவுவதாகவும், அதற்காக நாளையில் இருந்து பேருந்துகள் ஓடாது என்ற செய்தியை கேட்டு பயந்து கொண்டிருக்க, அவள் வந்த பேருந்தும் பழுதாகி நின்றது. அதன் பிறகு வழியில் வந்த மற்ற வாகனங்களை நிறுத்தி, ஒவ்வொரு பயணிகளாக அங்கிருந்து அனுப்ப, கடைசியில் வந்த ஒரு காரை நிறுத்திய நடத்துனர், மிஞ்சி இருந்த தெய்வானை மற்றும் கணவன் மனைவி ஒரு குழந்தை என்று இருந்த ஒரு குடும்பத்தை மட்டும் ஏற்றி அனுப்பினார். 

பின் இருக்கையில் அமர்ந்திருந்த தெய்வானை கடவுளிடம் எப்படியாவது இன்று நான் வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று அவளது இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டே அமர்ந்திருந்தாள். அவளுடன் இருந்த பெண், தெய்வானையுடன் பேச்சிக் கொடுத்தும், அவளோ கேள்விக்கு மட்டுமே தேவையான பதில் கூறிக்கொண்டு இருந்தாள். 

ஒரு கட்டத்தில் கணவன் மனைவி இருவரும் அவர்கள் இருப்பிடம் அருகே வந்ததும் இறங்கிவிட, பின்னிருக்கையில் தனித்து அமர்ந்திருந்தாள் தெய்வானை.

கார் ஓட்டிக் கொண்டிருந்த இளைஞனும் அவளிடம் கேள்வி கேட்க அவள் பதிலுக்கு கூறிய விதத்திலேயே மிகவும் பயந்து இருப்பதை புரிந்து கொண்டான்.

அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். 

அப்பொழுது எதிரில் அவர்கள் காரை மறித்தனர் காவல் துறையினர். காவல்துறையினர் அவர்கள் இருவரைப் பற்றியும் எங்கிருந்து வருகிறீர்கள், எங்கே செல்கிறீர்கள் என்றும் விசாரித்தார்கள். 

காரில் இனிமேல் பயணிக்க கூடாது அரசாங்க உத்தரவு என்று ஏதேதோ கூறினார்கள். அந்த இளைஞனும் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் அந்த பெண்ணை கொண்டு விட வேண்டும் என்று கூற, அதெல்லாம் ஊருக்குள்ள செல்லக்கூடாது என்று தடை விதித்தனர். 

அவர்கள் கூறியதை கேட்டபின், தெய்வானையிடம் வந்து “இப்பொழுது ஊருக்குள் போகக்கூடாது என்று சொல்றாங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், அருகில் தான் என் பண்ணை வீடு இருக்கிறது. அங்கு இரவு தங்கி விட்டு காலையில் நான் உங்களை உங்கள் வீட்டிலேயே விட்டுவிடுகிறேன்” என்றான்.

தெய்வானைக்கோ பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்கியது. “இல்லை சார். நான் இங்கேயே இறங்கிக்கிறேன். அப்படியே மெதுவா நடந்து வீட்டுக்கு போயிடுறேன்” என்று அழுதுவிடும் தோரணையில் பேசினாள். 

எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் நடப்பீங்க. நடுராத்திரியில் தனியா நடந்து போவீங்களா? போலீஸ் எல்லா இடத்துலயும் இருக்காங்க. வண்டியை விட மாட்டேங்கிறாங்க. நாளை காலை எப்படியாவது நான் உங்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன்” என்றான் சற்று எரிச்சலாக.

தெய்வானைக்கும் அவனை தொந்தரவு படுத்துவது போல் இருக்க, இந்த இரவில் செல்வதற்கு வேறு வழியும் இல்லை. சரி என்று அரைமனதாக தலையாட்ட, அந்த இளைஞனும் அவனது பண்ணை வீட்டிற்கு காரைத் திருப்பினான்.  

பிரதான சாலையில் இருந்து சிறிய சாலை வழியாக அரை மணி நேரம் பயணித்த பிறகு கம்பிகள் வைத்து சூழப்பட்ட வேலி தெரிந்தது. அதன் ஆரம்பத்தில் இருந்த பெரிய இரும்பு கேட் முன்னால் காரை நிறுத்தி, தன்னிடம் இருந்த சாவியை வைத்து கேட்டை திறந்து, காரை உள்ளே செலுத்தினான். சிறிது நேரத்திற்கு பிறகு சிறிய வீடு ஒன்று தெரிந்தது. 

“வீடு வந்துவிட்டது இறங்குங்க என்று சொல்லி அவன் பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கினான். இவளும் பையை எடுத்துக்கொண்டு இருங்க, தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டை திறந்து, மின்விளக்குகளை ஒளிர விட்டான்.

மரச் சட்டங்களால் ஆன கதவை திறந்ததும்., பெரிய வராண்டா. அதன்பிறகு இருந்த வேலைப்பாடுகள் நிறைந்த மரக்கதவை, நிலையின் மேலிருந்து சாவியை எடுத்து திறந்தான். நுழைந்ததும் அந்த இருளிலும் முத்தம் வைத்த வீடு மின் விளக்குகளின் வெளிச்சத்தில் அழகாக தெரிந்தது. 

வீட்டை பார்த்ததுமே அவளுக்கு பழைய சினிமாக்களில் வரும் வீடு போல் தெரிய, நின்ற இடத்தில் இருந்து வீட்டை சுற்றி ரசித்துப் பார்த்தாள். 

ஒரு பக்கம் மூலையில் இருந்த அறையின் கதவை திறந்து “இந்த ரூம யூஸ் பண்ணிக்கோங்க” என்று சொல்லிவிட்டு அதற்கு எதிரில் மறுபக்கம் மூலையில் இருந்த அறையைத் திறந்து அவன் நுழைந்து கொண்டான். 

அறைக்குள்ளேயே குளியலறை வசதி இருக்க தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஓசை கேட்க, எழுந்து கதவை திறந்த தெய்வானையிடம் “ஏதாவது சாப்பிடுகிறீர்களா? செய்யட்டுமா?” என்று கேட்டான்.

தோழி வாங்கிக் கொடுத்த தின்பண்டங்களை பேருந்தில் வைத்து தின்றதால் “எனக்கு பசிக்கவில்லை” என்றாள். 

“சரி தூக்கம் வந்தா தூங்குங்க. காலையில எப்படி போவது என்று யோசிப்போம். நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு படுக்கிறேன்” என்று தார்சாவில் இருந்த டிவியை ஆன் செய்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து விட்டான். 

அவளுக்கும் உறக்கம் வராமல் இருக்க ஒற்றைச் சோபாவில் வந்து அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள். நியூஸ் சேனல் தான் வைத்திருந்தான். அதில் கொரோனா நோய் பற்றி கூறி அதனால் ஊரடங்கு உத்தரவு இருப்பதாக செய்தி ஒளிபரப்பாகியது. 

அதை கண்டதும் தெய்வானையின் மனதில் கிளி பரவியது. ‘எப்படி நான் வீட்டிற்கு செல்வேன்? நாளை பகலில் கூட போக முடியுமா? என்பது சந்தேகம்தான்’ என்று நினைத்துக் கொண்டாள். 

அவள் முகத்தில் தெரிந்த பயத்தை கண்டு “கவலைப்படாதீங்க. எப்படியாவது உங்க வீட்டில் விட்டுவிட முயற்சி செய்கிறேன்” என்றான். 

அவன் கூறியதும் சற்று நிம்மதி அடைந்த தெய்வானையைப் பார்த்து “சரி நீங்க போய் தூங்குங்க. கதவை பூட்டிக்கோங்க” என்றான். பின்னர் “இது சுற்றி மரங்கள் நிறைந்த இடம், ஏதாவது சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். பயப்படாம இருங்க” என்று சொல்லிவிட்டு வாசல் கதவையும் அடைத்து விட்டு, டிவி பார்க்க உட்கார்ந்து விட்டான். 

அவன் உட்கார்ந்ததும் அறைக்கு வந்து கதவை பூட்டிக்கொண்டாள். அப்பொழுது அவளது அம்மா அவளை அழைத்தார். டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஹால் டேபிளிலேயே ஃபோன் இருந்ததால் போனை உற்றுப் பார்த்தான். அம்மா என்று வந்தது. தான் எடுத்து பேசினால் நிச்சயம் அவர்கள் வீட்டில் பயம் கொள்வார்கள் என்று அவளே பேசட்டும் என்று கதவை தட்டினான். 

அவளோ பாத்ரூம் சென்றிருந்ததால் வர தாமதம் ஆகியது. அதற்குள் ஃபோன் அடித்து ஓய்ந்தது. பேட்டரி லோ என்று காட்ட, மீண்டும் சிறிது நேரத்தில் ஃபோன் ரிங்காக, அதில் மாமா என்று தெரிந்த முகம் கண்டு புருவம் சுருக்கினான். இவன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

அதே சமயம் கதவை திறந்த தெய்வானையும், என்ன? என்று அவனிடம் கேட்க “உனக்கு ஃபோன் வந்தது. முதலில் உங்கள் அம்மா ஃபோன் பண்ணாங்க. அடுத்தது மாமா. அதற்குள் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது” என்றான் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.

வந்ததிலிருந்து மரியாதையாக பேசியவன் திடீரென்று ஒருமையில் பேசியதும் அவனை அதிர்ந்து பார்த்தாள் தெய்வானை.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்