தெய்வானை தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை முதலில் தன் தாய்க்கு ஃபோன் செய்து மகிழ்ச்சியாக கூறினாள்.
சரசுவுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நினைத்தபடி சேலத்திலேயே வேலை கிடைத்துவிட, மிகவும் மகிழ்ந்து “ரொம்ப சந்தோஷமா இருக்கு தேவா. அப்பாதான் கடவுளாக இருந்து நமக்கு நல்லது செய்கிறார்” என்றார் கண்ணீர் மல்க.
தாயின் குரலில் மனம் நெகிழ்ந்த தெய்வானையும் கலங்கினாள். “அம்மா” என்று அவள் குரலும் உடைய, தன்னை சமாளித்த சரசு, “நீ கிளம்பிட்டியா?” என்று கேட்டார்.
“இப்பதான் அம்மா இன்டர்வியூ முடிந்தது. வெளியே வந்ததும் உங்களுக்குத் தான் முதலில் ஃபோன் பண்ணினேன். இனிமேல் தான் என் பிரண்டுக்கு ஃபோன் பண்ணி சொல்ல வேண்டும். எப்படியும் ஐந்து மணி பஸ்ல கிளம்புகிறேன் அம்மா” என்றாள்.
“சரிமா. பத்திரமாக வா” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார் சரசு.
அதன் பிறகு அவளது தோழிக்கு ஃபோன் செய்து வேலை கிடைத்த விஷயத்தை கூற, அவளும் “நானும் இங்கு பர்மிஷன் சொல்லிவிட்டு கிளம்புகிறேன். இன்னும் கால்மணி நேரத்தில் வந்து விடுவேன்” என்றாள்.
சொன்னபடியே கால்மணி நேரத்தில் வந்து அவளை அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தாள்.
இன்று இரவு இங்கே தங்கி விட்டு செல்லலாமே என்ற தோழியிடம்
“இல்லைடி. அம்மா அங்கு தனியாக இருப்பார்கள். ஐந்து மணிக்கு பஸ் ஏறிட்டேன்னா போதும். எப்படியும் ஒன்பதரைக்குள்ள சேலம் போயிடுவேன். அங்கிருந்து ஷேர் ஆட்டோ புடிச்சு பத்து பத்தரைக்குள்ள வீட்டுக்கு போயிடலாம். அம்மாவும் ரொம்ப பயந்துக்கிட்டே இருப்பாங்க இல்ல” என்றாள்.
அவளும் தோழியின் நிலையை உணர்ந்து, “சரி” என்று பேருந்து நிலையத்தின் அருகிலேயே ஒரு கடையில் இருவரும் டீ குடித்துவிட்டு, அவளுக்கு பழங்களும் பிஸ்கட் பாக்கெட் தண்ணீர் என்று, அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கட்டப்பை நிறைய வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
“எதற்குடி இவ்வளவு” என்ற தோழியிடம்,
“நான் அங்கு ஹாஸ்டலில் தங்கி படிக்கும்பொழுது, உங்கள் அம்மா எனக்கு எவ்வளவு சமைத்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். என்னால் இப்பொழுது எதுவும் உனக்கு சமைத்துக் கொடுக்க முடியவில்லை. அதுதான் வாங்கிக் கொடுக்கிறேன்” என்று கூறினாள்.
ஆமாம் திவ்யாவிற்கு திருச்சியில் வீடு என்றாலும் அவள் சேலம் கல்லூரியில் தான் ஹாஸ்டலில் தங்கி படித்தாள். ஆரம்பத்தில் ஹாஸ்டல் உணவு பிடிக்காததால் மிகவும் சோர்ந்து போன தோழியை கண்டு வருந்திய தெய்வானை, அவர்கள் வீட்டில் இருந்து தினமும் காலையில் சாப்பாடு செய்து கொண்டு வந்து விடுவாள். அதில் தான் கொஞ்சம் தேறினாள்.
அதிலேயே தெய்வானையை அவளது பெற்றோர்களுக்கும் பிடித்து விட, திருச்சி வரும் பொழுது கண்டிப்பாக தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என்றுதான் கூறியிருந்தார்கள். இப்பொழுது திடீரென்று தெய்வானையின் தந்தை இறந்து விட அவர்கள் தாயை நினைத்து, அவளை அதிகம் தொந்தரவு செய்யாமல் அனுப்பிவிட்டார்கள்.
சேலம் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு, பேருந்து கிளம்பியதும் தோழிக்கு டாட்டா சொல்லி அவ்விடமிருந்து கிளம்பினாள் திவ்யா.
தோழி கிளம்பியதும் அவர்களது கல்லூரி வாழ்க்கையை பற்றி நினைத்துக் கொண்டேவர, சிறிது நேரம் கடக்க பஸ்ஸில் ஏறிய ஒரு சிலர் முகத்தை மறைத்தபடி மாஸ்க் அணிந்திருப்பதை விசித்திரமாக பார்த்தாள்.
அவளது பக்கத்தில் அமர்ந்திருந்த பாட்டி ராசிப் புரத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வதாக கூறினார். பின்னர் ஏதோ புதுசா நோய் பரவ போகுதாமே, அதுக்கு தான் நாளையிலிருந்து பஸ் எல்லாம் ஓடாதாம் என்றார் புது தகவலாக.
தெய்வானைக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன நோய் பாட்டி? ஏன் பஸ் ஓடாது?” என்று கேட்க,
“எனக்கு மட்டும் என்ன தெரியும்?” என்று பேருந்து நடத்துனரை அழைத்த பாட்டி, “என்ன தம்பி நாளைக்கு பஸ் ஓடுமா ஓடாதா?” என்று கேட்டார்.
அவருக்கும் சரியாக தெரியாததால் “நாளையிலிருந்து ஏதோ லாக்டவுன் என்று சொல்றாங்க பாட்டி. எத்தனை நாளைக்குன்னு தெரியல? இன்னைக்கு நைட்டு இந்த பஸ் சேலம் ஷெட்டுக்கு போகுது. அதுக்கு அப்புறம் அவங்க சொல்லும்போது தான் எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க” என்று புலம்பிக் கொண்டு பயணச்சீட்டு வழங்க சென்றார்.
இன்னும் எப்படியும் குறைந்தது மூன்றரை மணி நேரங்கள் ஆகும். அதற்குள் சற்று கண்ணுறங்கலாம் என்று கண்களை மூடியபடி ஃபோனில் பாட்டு போட்டு காதில் மாட்டிக் கொண்டு கண் மூடி பஸ்ஸின் இருக்கையில் தலை சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவள் கண் மூடியதும் அதன் பிறகு பாட்டி எதுவும் பேசாமல் நடத்துனரிடம் “ராசிபுரம் வந்ததும் சொல்லு தம்பி” என்று சொல்லிவிட்டு பாட்டியும் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு இடத்தில் பேருந்து நிற்க, பாட்டியும் இறங்கி கழிவறை சென்று விட்டு வந்தார். இவளையும் “செத்த இறங்கி கீழ நடந்துட்டு வாத்தா” என்று சொல்ல,
தெய்வானையோ பயந்து கொண்டு “இருக்கட்டும் பாட்டி. ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று அமர்ந்து விட்டாள். அதன் பிறகு சிறிது நேரத்தில் ராசிபுரத்தில் பாட்டியும் இறங்கிவிட, பேருந்தில் மக்கள் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
நடத்துனர் இருக்கும் பயணிகளிடம் அடுத்தடுத்து ஊருக்குள் செல்வதென்றால் நேரம் ஆகும். பைபாஸில் போகட்டுமா?” என்று கேட்டார்.
பயணிகளும் ஒவ்வொரு இடம் சொல்லி அங்கு நிறுத்தினால் போதும் என்று சொல்ல, ஓட்டுனரும் பேருந்தை பைபாஸில் செலுத்த தொடங்கினார். ஒரு அரை மணி நேரத்திற்கு எல்லாம் பேருந்து பழுதாகி நின்று விட்டது.
அதை சரி செய்ய நடத்துனரும் ஓட்டுனரும் முயற்சி செய்ய, அவர்களால் சரி செய்ய முடியவில்லை வேறு வழி இன்றி வரும் வாகனத்திடம் உதவி கேட்டு ஒவ்வொருவரையும் அனுப்பி விடுவதாக கூறிய நடத்துனர், கைகாட்டி ஒவ்வொரு வண்டிகளையும் நிறுத்த போராடினார். ஏனோ மக்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
ஓர் இரண்டு கார்கள் மட்டும் நிறுத்த அதில் அவர்கள் செல்லும் வழி கேட்டு மக்களை ஏற்றி அனுப்பி கொண்டிருந்தார். ஒரு கணவன் மனைவி குழந்தையுடனும் தெய்வானை மட்டுமே மிஞ்சி இருந்தனர். அவர்கள் சேலத்திற்கு முன்பு உள்ள ஒரு ஊரில் இறங்க வேண்டும். சேலம் செல்ல தெய்வானை மட்டுமே இருந்தாள். அதன் பிறகு ஒவ்வொரு வண்டியாக நிறுத்த போராடிக் கொண்டிருந்தார் நடத்துனர்.
ஒரு வழியாக வேகமாக வந்த கார் அவ்விடம் நின்றது அதிலிருந்து இறங்கிய இளைஞன், “என்ன?” என்று விசாரித்தான்.
நடத்துனர் நடந்தவற்றை கூற, அவனும் சேலம் செல்வதாக கூறி மூவரையும் ஏற்றுக் கொள்வதாக கூறினான். அதில் மகிழ்ந்து நடத்துனர் மூவரிடமும் கூற கணவன் மனைவி உடனே ஒத்துக் கொண்டனர். ஆனால் தெய்வானைக்கோ தயக்கமாக இருந்தது. அந்த தம்பதியர் இருவரும் இறங்கிய பிறகு அவள் மட்டும் தனியாக செல்ல வேண்டுமே என்ற பயம் தான். ஆனால் நேரமோ இப்பொழுதே ஒன்பதரை ஆகிவிட்டது. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் தேட தொடங்கி விடுவார் என்ற எண்ணமும் வர, வேறுவழியின்றி சரி என்று ஒத்துக் கொண்டாள்.
டிரைவருக்கு அருகில் உள்ள இருக்கையில் ஆண் ஏறிக்கொள்ள, பின் இருக்கையில் தெய்வானை, தாயும் குழந்தையும் ஏறி கொண்டார்கள். மிதமான வேகத்தில் கார் பயணிக்க, முன்னால் அமர்ந்த இரு ஆடவர்களும் பேசிக் கொண்டு வந்தார்கள். தான் சேலத்திற்கு அருகில் ஒரு பார்ம் ஹவுஸ் வைத்திருப்பதாகவும் அங்கு செல்வதாகவும் கூறினான், அந்த இளைஞன்.
– தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…