மீனாட்சி சமையலறை சென்றதும் மனைவியின் அருகில் நெருங்கி அமர்ந்த குகன், “அம்மா சொல்றதும் சரிதான். அவனை இங்கேயே விட்டுட்டு போவோம். அப்பதான் நீ என் பக்கத்துல வருவ” என்று விஷமமாக சிரித்தான்.
அவனின் கிண்டலை புரிந்து கொள்ளாமல் அதிர்ந்த தெய்வானை “அவன் நான் இல்லாமல் இருக்க மாட்டான்”‘என்றாள் பதட்டமாக.
“ஏய், ஏன் இப்படி பயப்படுகிறாய்? அம்மா சும்மா சொன்னாங்க” என்று அவளது பதட்டத்தை குறைக்க முயன்றான். நான் என்ன சொன்னேன் இவள் எப்படி புரிஞ்சுகிட்டா என்று முணுமுணுத்தான்.
அப்பொழுது காலையில் நடைப்பயிற்சி முடித்து விட்டு வந்து அமர்ந்தார் சக்திவேல்.
“என்னப்பா? காலையிலேயே வாக்கிங் போயிட்டீங்களா?” என்ற குகனிடம் ஆமாம் என்று தலையாட்டிய சக்திவேல்,
“நல்லா தூங்கினியாமா?” என்று மருமகளிடம் கேட்டார்.
அவளும் “ஆமாம்” என்று சொல்லி தலையாட்ட,
“சரிப்பா, நாங்கள் காலைல சாப்பிட்டு கிளம்பறோம்” என்றான் குகன்.
அனைவருக்கும் குடிப்பதற்கு கொண்டு வந்து கொடுத்த மீனாட்சி, “ஏன்டா? ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போலாம் இல்ல!” என்க,
“இல்லைம்மா, வேலை இருக்கு. அப்பாக்கு ஃப்ரீயா இருந்தா நீங்க வேணா அங்க வாங்க” என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானான்.
அதன்படியே காலை உணவு முடித்து, அவர்களது பண்ணை வீட்டை நோக்கி கிளம்பினான் தன் மனைவி, மகனுடன் குகன்.
வரும் வழியில் எல்லாம் செந்தூர் ஏதேதோ தாய் தந்தையிடம் பேசிக் கொண்டே வர, அவர்களது காரும் பண்ணை வீட்டை நெருங்கியது.
வீட்டை பார்த்ததும் தெய்வானையின் கண்கள் கலங்கியது. இதுவரை பேசிக்கொண்டே இருந்த தெய்வானை, திடீரென்று அமைதியானதில், குகன் அவள் முகம் காண, அவளின் உணர்வை புரிந்து கொண்டவன், மென்மையாக அவளின் கையைப் பற்றி, காரை வீட்டில் முன் நிறுத்தினான்.
கார் சத்தத்தில் வீட்டிற்குள் இருந்து வந்த கந்தனும் அவனது மனைவியும். காரில் இருந்து இறங்கிய குகனின் குடும்பத்தைக் கண்டு மகிழ்ந்து, ஆரத்தி எடுத்து வரவேற்றார் கந்தனின் மனைவி.
“என்னண்ணா? வேலையெல்லாம் எப்படி போகுது?” என்று பேசிய படியே இறங்கிய குகனிடம், கந்தன் “நல்லா போகுது தம்பி” என்று சொல்லிக் கொண்டு வேலையைப் பற்றி பேசினான்.
ஆரத்தி எடுத்ததும் வீட்டுக்குள் செல்லும்படி கூறிச் சென்றனர் கந்தனும் அவன் மனைவியும். கந்தன் குடும்பம் அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு கிளம்பியதும் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டே, உள்ளே நுழைந்தாள் தெய்வானை.
வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் அவர்களது காதல் நினைவுகள்தான் அவளுக்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே? ஹாலில் சென்று சோபாவில் மகனை உட்கார வைக்க, சமையல் மேஜையின் அருகே யாரோ நிற்பது போல் தெரிந்தது.
நிமிர்ந்து அங்கு பார்த்து அதிர்ந்து, “அம்மா” என்று கத்தி விட்டாள். அவளின் கத்தலில் பயந்த செந்தூரை ஆதரவாக அணைத்துக் கொண்ட குகன், மனைவியை பார்த்தான்.
அதிர்ந்தவள் வேகமாகச் சென்று அங்கு நின்றிருந்தவரை அணைத்து “அம்மா, அம்மா” என்று அழுதாள். அவளின் முதுகை ஆதரவாக தடவி விட்ட சரசு, “எப்படிம்மா இருக்க?” என்றார்.
சற்று நேரத்திற்கு தெய்வானையால் பேசவே முடியவில்லை. அவளின் முதுகை தடவிய குகன், “இப்ப எதுக்கு அழுகுற?” என்று மிரட்டினான்.
அவனின் மிரட்டலில் சற்று அமைதி அடைந்த தெய்வானை, “அம்மா.. அம்மா..” என்று பேச்சு வராத குழந்தை போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ஆமாம் அம்மாதான். உன் அம்மாதான்” என்று அவன் கிண்டலாக சொல்ல,
“நீங்க எப்படிம்மா இங்கே,” என்று தன் தாயிடம் கேட்டாள்.
“ஒரு நாள் உன்னை தேடி கொண்டு மருமகப்பிள்ளை அங்கு வந்தார்” என்று அன்று நடந்ததை கூற தொடங்கினார்
“தெய்வானையை தேடி அவளது வீட்டிற்கு குகன் சென்ற அன்று, ஊரே அவளது வீட்டில் கூடி, “யார் நீங்க? என்ன விஷயமா தெய்வானையை தேடுறீங்க?” என்று கேட்டனர்.
முதலில் வேலை விஷயமாக அவளை தேடுவதாக கூறினான்.
அவளது அம்மா “மகள் அதன் பிறகு வீட்டிற்க்கே வரவில்லை” என்று அழ ஆரம்பித்தார்.
அவருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று தெரியவில்லை. அவரின் கைகளைப் பிடித்துக் கொண்ட குகன் “என்னை மன்னித்து விடுங்கள் அத்தை” என்றான்.
அவன்”அத்தை” என்றதும் அதிர்ந்து அவனைப் பார்த்தார்.
ஊரார் அனைவரும் “என்ன தம்பி” சொல்றீங்க என்று கேட்க,
தன் ஃபோனில் இருந்த திருமண புகைப்படத்தை எடுத்து காண்பித்த குகன், “எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது” என்று நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் கூறினான்.
அதில் கோபம் கொண்ட ஊர் மக்கள், “நீங்கள் எங்கள் பிள்ளையை ஏதோ செய்து விட்டு, இப்பொழுது வந்து தேடுவது போல் நடிக்கின்றீர்களா?” என்றார்கள் கோபமாக.
அவனோ “உண்மையிலேயே அப்பாவிற்கு உடம்பு சரி இல்லை என்று போய்விட்டு இப்பொழுதுதான் வந்தேன்” என்று நடந்த அனைத்தையும் மீண்டும் தெளிவாக கூற, அதில் முதலில் தெளிந்த சரசு,
“சரி தம்பி, அவள் எப்படியும் வந்து விடுவாள். கவலை படாதீங்க. நானும் எனக்கு தெரிஞ்ச இடத்தில் எல்லாம் தேடுகிறேன்” என்று கூறினார்.
“உனக்கு உடம்பு சரியில்ல. நீ எங்க போயி தேடுவாய்” என்று பக்கத்து வீட்டு பெண்மணி கூற,
“என்ன ஆயிற்று” என்றான்.
“அவருக்கும் கொரோனா நோய் வந்து, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. யாரும் இல்லாமல் தனியாக கஷ்டப்படுகிறார். அவரது தம்பியும் இவருக்கு நோய் வந்ததும் வீட்டை விட்டு போய் விட்டான்” என்று கூற
“நானும் வீட்டில் தனியாகத்தான் இருக்கேன் அத்தை. என்னை பார்த்துக்கொள்ள என் அம்மாவாக அங்கு வருகிறீர்களா?” என்று ஏக்கமாக கேட்டான்.
சுற்றி உள்ளவர்கள் அனைவரும் அவன் கூறுவது சரி என்று கூறி, “இங்கு நீ தனியாக இருப்பதற்கு அங்கு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தனர்.
“அன்றிலிருந்து நான் இங்கு தான் இருக்கிறேன்” என்றார்.
தன் கணவனை முறைத்த தெய்வானை, “இதை ஏன் நீங்கள் முன்னமே சொல்லவில்லை?” என்றாள்.
“முன்பே சொல்லி இருந்தால், இப்போ உனக்கு சர்ப்ரைஸா இருந்திருக்காது இல்லையா?”என்று சிரித்தான்.
“சரி சரி, பேசிக்கிட்டு இருந்தது போதும். போய் தயாராகிட்டு வாங்க. சாப்பாடு தயாரா இருக்கு, சாப்பிடலாம்” என்று சரசு, பேரனை தூக்கிக்கொண்டு மகளையும் மருமகனையும் அனுப்பினார்.
தங்களது அறைக்கு வந்த குகன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்து விட்டான். அவர்கள் அறையை கண்டதும் பழைய நினைவுகள் எல்லாம் கண்முன்னே வந்து போனது. புன்னகையுடன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து மதிய உணவை முடித்தனர்.
பின்னர் தாயும் மகளும் பேச ஆரம்பிக்க, குகன் வேலை இருப்பதாக சொல்லி வெளியே கிளம்பி விட்டான். எத்தனை வருட கதைகள் அவர்களுக்கு. பேசுவதற்கு நேரம் தான் போதவில்லை. நேற்று இரவு வள்ளியம்மாவுக்கு அழைத்து திருச்சியில் இருப்பதை சொல்லி இருந்தாள்.
சரசு தான் “உன்னை நல்லபடியா பார்த்துக்கொண்டதற்கு அந்த அக்காவுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்” என்று சொன்னதும்தான்,
“அச்சோ அம்மா, நான் இங்கு வந்ததை வள்ளியம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லவே இல்லை” என்று கூறி உடனே ஃபோன் செய்தாள்.
தன் அம்மாவைப் பற்றியும் கூற, வள்ளியம்மாளுக்கு நிம்மதியாக இருந்தது. சரசுவும் வள்ளியும் பேசி நன்றி கூறி மகழ்ந்தனர். இவர் அவரை அக்கா என்க, அவர் இவரை அக்கா என்க, ஒரே அக்கா தங்கை பாசமலர் படம் தான் ஓடியது.
அப்படியே நேரம் கடக்க சாயங்காலமானதும் கந்தனும் அவன் மனைவியும் அவர்களின் பையனையும் பெண்ணையும் அழைத்து வந்து தெய்வானையை பார்க்க, அவர்கள் மகன் செந்தூரை தூக்கிக் கொண்டான். அவர்களுக்கும் புதிதாக விளையாட குட்டி தோழன் கிடைத்துவிட, பிள்ளைகள் மகிழ்ச்சியாக விளையாடினர்.
கந்தனின் மனைவி தெய்வானையிடம் குகன் தன் மனைவியை தொலைத்து பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் கூற, அதை கேட்க கேட்க தெய்வானைக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நேரம் கடக்க அவர்களும் தங்கள் வீட்டிற்கு செல்ல,
தனக்கு வேலை இருப்பதாகவும், இரவு உணவை வெளியேவே சாப்பிட்டு விடுவதாகவும், அவர்கள் அனைவரையும் சாப்பிட்டு உறங்கும்படி ஃபோன் பண்ணி கூறினான் குகன்.
நேரம் ஆகிவிட்டதால் சரசுவும் பேரனுக்கு உணவை ஊட்டி விட்டு, தானும் உண்டு மகளையும் உண்ண வைத்து, பேரனை அழைத்துக் கொண்டு தெய்வானை இங்கு வந்து தங்கி இருக்கும் பொழுது இருந்த சிறிய அறைக்கு சென்று விட்டார்.
“அம்மா அவன் என்னுடனே இருக்கட்டும். இரவு முழித்தாள் என்னை தேடி அழுவான்” என்றவளிடம்
“நான் உன்னை பெற்று வளர்த்தவள். குழந்தை அழுதால் என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் .ரொம்ப அழுதான்னா உன்னை எழுப்புகிறேன். நீ பேசாம தூங்கு” என்று சொல்லிவிட்டு பேரனை தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
தங்களது அறைக்கு வந்து படுத்த தெய்வானைக்கும் பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வர உறக்கம் வராமல், புரண்டு புரண்டு படுத்து, ஒரு வழியாக தன்னையும் அறியாமல் உறங்கி விட்டாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் அவளின் பின்புறம் இருந்து அணைத்த குகனின் கைகளை எடுத்து கன்னத்தில் வைத்த தெய்வானை, “உண்மையிலேயே என்னை மறந்துட்டீங்களா?” என்று சோகமாக கேட்டாள்.
அவள் கேட்டதும், ‘அன்றும் அவள் அப்படித்தானே கேட்டாள் என்று நினைத்தான் குகன். அவள்தான் சொன்னாளே! என்னுடன் கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக. அப்படி என்றால் தினமும் நான் அவளை பின்னால் இருந்து அணைப்பது போல் கற்பனை செய்து கொண்டு இருந்திருக்கிறாள் போல’ என்று நினைக்க, அவள் மீது காதல் பெருகியது.
உடனே அவளது உச்சியில் முத்தம் கொடுத்து அவளை மேலும் இறுக்கமாக அணைத்த குகன், “உன்னை என்னால் மறக்க முடியுமா?” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
காதில் உரசிய அவன் மீசையின் குறுகுறுப்பில் உறக்கம் களைந்து எழுந்த தெய்வனை, தன்னை அணைத்து இருந்த குகனின் கைகளின் மீது கைகளை வைத்து, “எப்போ வந்தீங்க? நான் அசந்து தூங்கிட்டேன். சாப்டீங்களா?” என்று அரை உரக்கத்திலும் அவனை அக்கறையாக விசாரிக்க,
அவளை தன்னை பார்த்து திருப்பி அணைத்து, அவள் நெற்றியில் இதழ் பதித்து, “எப்பொழுதும் உனக்கு என் ஞாபகம் தானா? என்றான் குகன்.
“ஆமாம்” என்று தலையாட்டிய தெய்வானை
“எப்பொழுதும் உந்தன் ஞாபகங்கள்
முப்பொழுதும் உந்தன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நான் தொடும் ஆலயம் நீயல்லவா” என்று வரிகளை மாற்றி மென்மையாக பாடினாள்.
அவள் பாடியதில் இருந்தே அவளது காதலின் ஆழத்தை புரிந்து கொண்டு, அவளை இறுக்கமாக அணைத்து முத்தங்களினால் தன் காதலின் ஆழத்தை அவளுக்கு புரிய வைக்க முற்பட்டான் குகன்.
நீண்ட வருடங்கள் கழித்து இரு காதல் உள்ளங்களின் சங்கமம். தங்கள் காதலையும் தேடலையும் முத்தங்களால் உணர்த்தியும் உணர்ந்தும் கொண்டார்கள் இருவரும்.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..