Loading

விடிந்து வெகுநேரமாகியும் கதவை திறக்காததால், செந்தூருக்கு பசிக்குமே என்று கதவை தட்டிய வள்ளியம்மாளுக்கு, கதவை திறந்த தெய்வானை தாமதமாக எழுந்ததற்கு காரணத்தைச் சொல்லி, தன் காலை கடனை முடித்து செந்தூரை எழுப்ப உள்ளே வர, தந்தையின் மார்பில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மகனைக் கண்டு, இருவரையும் ரசித்துப் பார்த்தாள்.

அப்பொழுது உள்ளே வந்த வள்ளியம்மாளும் தந்தை மகன் பாசத்தை கண்டு மகிழ்ந்தார். இத்தனை காலம் தந்தையின் பாசம் இல்லாமல் வளர்ந்த செந்தூரின் நிலை அவருக்கு வருத்தமாக இருந்தாலும், தெய்வானையின் முடிவின்படி விட்டுவிட்டார். இப்பொழுது அவனின் ஏக்கத்தைக் கண்டு நாம் கொஞ்சம் வற்புறுத்திக் கொண்டு இருக்க வேண்டுமோ? என்று நினைத்து வருந்தினார். 

வெளிச்சமாக இருப்பதால் குகனும் எழுந்து விட, வள்ளியம்மாளை கண்டு “குட் மார்னிங் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு, “ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றான். 

அவரோ எதற்கு என்று பார்க்க, “என் மனைவியையும் மகனையும் இத்தனை காலம் உங்கள் மகள் போல் பார்த்து கொண்டதற்கு” என்றான் புன்னகைத்துக் கொண்டே 

“இதில் என்ன தம்பி இருக்கு?” என்று சொல்லிய வள்ளியம்மாள் “காபி தயாராக இருக்கு தம்பி” என்றார். 

அவனும் எழுந்து தன் காலை கடனை முடித்து வர, அதற்குள் தெய்வானை செந்தூரை எழுப்பி காலை வேலைகளை முடித்து அவனுக்கு குடிப்பதற்கு கொடுத்துக் கொண்டிருந்தாள். 

குகன் வந்ததும் அனைவரும் காபி குடிக்க, “முன்னமே வந்துட்டீங்களா ஆன்ட்டி. காஃபி எல்லாம் போட்டு இருக்கீங்க?” என்க 

“இல்ல தம்பி. நான் பக்கத்து வீட்டிலேயே சமைச்சுட்டேன். சாப்பாடு ரெடியா இருக்கு. குளித்தீங்கன்னா சாப்பிடலாம்” என்றார் வள்ளியம்மாள் 

அவனும் சரி என்று தலையாட்ட, தயக்கமாக நின்றிருந்த தெய்வானையை பார்த்து, தன் அருகில் வந்து அமரும்படி சொல்லி “என்ன யோசனை?” என்றான். 

அவள் தயக்கமாக அவனைப் பார்க்க, “என்னன்னு கேளுடி? அப்பதானே தெரியும்” என்றான் சற்று சத்தமாக. 

அவன் கேட்டதும் தான் வள்ளியம்மாலும் தெய்வானையை பார்க்க, “அது.. நீங்க எப்போ இங்கு வந்தீங்க?” என்றாள் தயங்கி தயங்கி. 

“நான் வந்து மூன்று நாள் ஆகுது” என்றான்.

“ஓ.. அப்போ நீங்கதான் அன்று நாங்க கன்னியாகுமரிக்கு சென்றிருக்கும் போது செந்தூருக்கு சாக்லேட் கொடுத்ததா?” என்றாள்.

“ஓ.. அதையே மேடம் இப்ப தான் கண்டுபிடிச்சீங்களா?” என்று கிண்டலாக சிரித்தான். 

“நான் வந்த அன்று கன்னியாகுமரியில் அறை எடுத்து தங்கி இருந்தேன். அப்பா இங்கே வேலைப் பார்க்கும் டீச்சருக்கு சக வாத்தியார் ஒருவர் தொல்லை கொடுப்பதாகவும், அப்பிரச்சினையை முடித்து விட்டு வரும்படியும்தான் என்னை இங்கு அனுப்பினார்.

அதைப்பற்றி கேட்க அன்று சாயங்காலம் ஊர் தலைவரை பார்ப்பதற்காக சின்ன முட்டம் வந்தேன். அப்பொழுது அவர் சென்ற வருட ஆண்டு விழா புகைப்படத்தை காண்பித்துக் கொண்டிருந்தார். அதில் உன்னை குழந்தையுடன் பார்த்தேன். பார்த்தவுடன் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா? அதன் பிறகு யார்? என்று விசாரிக்க அவர் உன்னை பற்றி எல்லாம் கூறினார். உடனே உன்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. 

அவரிடம் நம்மைப் பற்றி கூற, அவரும் மிகவும் மகிழ்ந்து உடனே வள்ளி ஆன்ட்டிக்கு அழைத்து சொல்லப்போனார். நான் தான் வேண்டாம் நாளை காலையில் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 

அதன்பிறகு தான் அவரிடம் கண்ணன் என்ற வாத்தியார் ஏதோ ஒரு பெண்ணிடம் திருமணம் செய்ய சொல்லி சொல்வதாக கூறியிருந்தீர்களே என்று கேட்க, அவர் தயங்கிக் கொண்டே உன்னை தான் என்று கூற, சரி இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான். 

அங்கிருந்து உங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதிற்குள்ளே வைத்துக் கொண்டு, நேராக எனது அறைக்கு வந்து, கண்ணனுக்கு ஃபோன் செய்து அவனையும் வரவைத்தேன். அவனிடம் நம்மைப் பற்றி கூற, அவனும் மிகவும் மகிழ்ந்து, தான் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டான்” 

அவனைத் தோளுடன் அனைத்த குகன் “உன் மேல் தவறு ஒன்றும் இல்லை. ஆதரவு இல்லாமல் இருக்கும் ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுக்க தானே நினைத்தாய்? உன் நல்ல மனதிற்கு உனக்கு நல்ல பெண் கிடைப்பாள். மணம் முடிந்து சந்தோஷமாக இரு” என்று மனமார வாழ்த்தி விட்டு, 

“இன்னொரு முறை என் மனைவியை பார்த்தாய் என்றால்?” என்று கிண்டலாக மிரட்டினான்.

“ஐயோ சார். ஏதோ தெரியாம பண்ணிட்டேன். மன்னிச்சிடுங்க, இனிமேல் மேடம் கிட்ட தவறா பேச மாட்டேன்” என்று சிரித்துக் கொள்ள இருவரும் நண்பர்களாகி போனார்கள். 

அவன் தான் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நீ கன்னியாகுமரிக்கு செல்வதாக கூறினான். அதுபோலவே நீ பள்ளிக்கு 

சென்ற பிறகு ஆன்ட்டியை வந்து பார்த்து விவரம் அனைத்தையும் கூறினேன். அவரும் மிகவும் மகிழ்ந்தார். 

நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை சொன்னதும், உன் வள்ளியம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. 

“இப்பவே அவளுக்கு ஃபோன் பண்ணுறேன் தம்பி. அவள் ரொம்ப சந்தோஷப்படுவா” என்று ஃபோனை எடுத்தார். 

அவரை தடுத்த குகன் “இல்ல ஆன்ட்டி. நான் அவளிடம் நேரில் பேச வேண்டும்” என்று சொல்லி, இனிமேல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு, அன்று சாயங்காலம் வரை காத்திருந்து, கன்னியாகுமரியில் உன்னையும் செந்தூரையும் பார்த்தேன்.

“நான் சொல்லியபடி தான் கண்ணனும் ஆண்டியும் நடந்து கொண்டார்கள்” என்று சிரித்துக் கொண்டே வள்ளியம்மாளை பார்த்தான். 

அவரும் ஆமாம் என்று தலையாட்டி “இனிமேலாவது நீங்கள் குடும்பமாக சந்தோஷமாக வாழுங்கள்” என்று மகிழ்ச்சியாக கூறினார். 

“ஆமாம் ஆன்ட்டி. இங்கே சில வேலைகள் இருக்கு. அதை எல்லாம் முடித்துவிட்டு, நாம் எல்லோரும் சேலத்துக்கு போகலாம்” என்றான். 

“இல்லை தம்பி. என்னால் என் கணவர் இருந்த இந்த ஊரை விட்டு வர முடியாது. நீங்கள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருந்தால் போதும். இங்கு இருக்க எனக்கு ஒரு  பிரச்சனையும் இல்லை. இந்த ஊரே சொந்தம் தான். நான் இங்கு பயமில்லாமல் தான் இருப்பேன். என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றார்.

வள்ளியம்மாள் கூறுவதும் உண்மைதானே. அவர் கணவர் இறந்த பிறகு மகனின் வீட்டிற்கு கூட செல்லாமல், அவர் தனியாகத்தானே இங்கு இருக்கிறார். அவரைப் பற்றி நன்கு உணர்ந்த தெய்வானைக்கு அவரை தன்னுடன் வர சொல்லி வற்புறுத்தவும் கஷ்டமாக இருந்தது. 

“என் உடம்பில் தெம்பு இருக்கிற வரைக்கும் நான் இங்கு இருக்கிறேன் தெய்வானை. என்னால் முடியவில்லை என்றால் உன் வீட்டிற்கு தானே வருவேன்? அப்பொழுது என்னை கவனித்துக் கொள்” என்று அவரின் நாடி பிடித்து கூறினார் 

இத்தனை காலம் தன்னை பாதுகாத்தவரை விட்டு பிரிவதற்கு தெய்வானைக்கு வருத்தமாக இருந்தது.

அவர்களின் உணர்வை புரிந்து கொண்ட குகன் “சரி ஆன்ட்டி, எனக்கு பள்ளிக்கூடத்தில் வேலை இருக்கு” என்று சொல்லி குளிக்க கிளம்பினான். 

“நீயும் இன்னைக்கு பள்ளிக்கூடம் போறியா டா?” என்று தெய்வானையை கேட்டார் வள்ளியம்மாள்.

“தெரியலம்மா, அவர் என்ன சொல்றாருன்னு கேட்கணும்” என்றதும், மகளின் புரிதலில் மகிழ்ந்தார் வள்ளியம்மாள்.

“உன் குணத்துக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருப்ப. அந்த தம்பியை பார்த்தாலும் ரொம்ப நல்ல மாதிரி தெரியுது. இனிமே உன்னை பற்றிய கவலை எனக்கு இல்லை” என்றார் மகிழ்ச்சியாக. 

குகனும் “இன்று பள்ளிக்கு வந்து, உன் வேலையை முறைப்படி விட்டுவிட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு வரலாம்’ என்று தெய்வானையை அழைத்துச் சென்றான். 

குகனுடன் வந்து இறங்கிய தெய்வானையை கண்டு ஆசிரியர்கள் ஆச்சரியமாக பார்க்க, தெய்வானை தன் மனைவி என்றும் செந்தூர் தன் மகன் என்றும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

கண்ணன் தலைமை ஆசிரியருக்கு ஏற்கனவே விஷயத்தை சொல்லி இருக்க, அவர்கள் இருவரை தவிர மற்றவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ள, 

“எனக்கும் என் மனைவிக்கும் சிறு கருத்து வேறுபாடு இருந்தது. அதில் பிரிந்து விட்டோம். அவள் இங்கு இருப்பது எனக்கு தெரியாது. இங்கு வந்த பிறகு தான் அவளைப் பார்த்தேன். பேசி எங்கள் பிரச்சனையை முடித்துக் கொண்டோம். அதனால் அவளை எங்கள் ஊருக்கே அழைத்துச் செல்கிறேன். 

இனிமேல் அவள் இங்கு வேலைக்கு வர மாட்டாள். அதை முறைப்படி சொல்லிச் செல்லத்தான் அழைத்து வந்தேன்” என்று சொல்லிவிட்டு 

தெய்வானையைப் பார்த்து, “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ உன் பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிளம்பு” என்றான்.

அவளும் சரி என்று தலையாட்டி ஆசிரியர் ஓய்வறைக்கு வர, அவளை சுற்றி எல்லா ஆசிரியர்களும் நின்று அவர்களை பற்றி விசாரித்தார்கள். குகன் சொல்லியதையே அவளும் கூற, அனைவரும் அவளுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள்.

தான் பாடம் எடுக்கும் வகுப்புக்கும் சென்று அனைவரிடமும் இனிமேல் உங்களுக்கு புது டீச்சர் வருவாங்க என்று சொல்ல, சில பிள்ளைகள் அழ ஆரம்பித்து விட்டார்கள், எங்களுக்கு நீங்கள் தான் வேண்டும் என்று.

அனைவரையும் சமாதானப்படுத்தி புது டீச்சரும் நல்ல பாடம் நடத்துவாங்க. உங்ககிட்ட அன்பா இருப்பாங்க, என்று அவர்களுக்கு புரியும்படி கூறி அவர்களை சமாதானம் செய்தாள்.

ஒரு வழியாக அனைத்து வேலைகளையும் முறைப்படி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள். அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைவருக்கும் அவள் கணவன் வந்தது தெரிய, எல்லோரும் வந்து அவளிடம் விசாரித்து, வாழ்த்து சொல்லி சென்றார்கள். 

இங்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் அங்கு உள்ளவர்கள் அனைவரும் அக்கா தம்பி என்று முறை வைத்து பழகி இருக்க, அனைவரிடமும் சென்று விடை பெற்று வருவதற்குள் இருட்டி விட்டது.  

வள்ளியம்மாள் இரவு உணவை தயாராக வைத்திருக்க, குகனும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். அன்று இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்புவதாக கூற, வள்ளியம்மாளுக்கும் தெய்வானைக்கும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக போய்விட்டது. 

தெய்வானையின் முகத்தைப் பார்த்த வள்ளியம்மாள் “இப்படி வருத்தப்படக்கூடாது. புருஷன் வீட்டுக்கு தானே போற. விருப்பப்படும் பொழுது சொன்னா அவர் உன்னை கூட்டிட்டு வருவாரு, இல்ல தம்பி?” என்று குகனையும் சேர்த்துக் கொண்டார்.

அவன் ஆமாம் என்று தலையாட்டி “ஆன்ட்டி நான் ஊர் தலைவரிடம் போய் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று கூறி மனைவி மகனையும் அழைத்துக் கொண்டு ஊர் தலைவரின் வீட்டிற்கு வந்தான். 

அவரிடமும் தாங்கள் ஊருக்குச் செல்வதாக கூறி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள் தெய்வானை. 

அவரும் மிகவும் மகிழ்ந்து “இனிமேல் நீ ரொம்ப சந்தோஷமா வாழணும்மா!” என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். 

வீட்டிற்கு வந்ததும் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து பேசி உண்டனர் அனைவரும். 

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்