Loading

இன்று பள்ளியில் குகனை பார்த்த அதிர்ச்சியில் இருந்த தெய்வானை, அவன் தன் மகனுடன் கடல் கரையில் விளையாடி விட்டு தங்களது வீட்டிற்கே வந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தாள். 

வள்ளியம்மாள் அவனுக்காகத்தான் உணவு தயாரிக்க சொல்லி இருக்கிறார் என்பதை நினைத்து மேலும் அதிர்ந்து அவனுக்கு உணவு பரிமாறினாள் தெய்வானை. 

அவனுக்கு சாப்பிடுவதற்கு வைத்துவிட்டு ஓரமாக சென்று நின்று கொண்டிருந்த தெய்வானையை பார்த்த குகன், வள்ளியம்மாளிடம் “நான் என்ன தீண்ட தகாதவனா ஆண்ட்டி, சாப்பாடு போட்டுட்டு அவ்வளவு தூரத்தில் போயி நிக்கிறாங்க” என்றான். 

அவன் அப்படிச் சொன்னதும் தெய்வானை வள்ளியம்மாளை கவலையாக பார்க்க, அவரோ பக்கத்தில் வந்து உட்காரும்படி செய்கை செய்தார். அவள் மறுப்பாக தலையாட்ட, வள்ளியம்மாள் அவளை முறைத்து, “இப்படி வந்து உட்கார்ந்து பரிமாறுமா!” என்றார் மென்மையாக. 

அதற்கு மேல் வேறு வழியும் இல்லை. வேகமாக மற்றொரு தட்டில் உணவு வைத்து எடுத்துக் கொண்டு வந்து அவன் அருகில் உட்கார்ந்த தெய்வானை, செந்தூரை தன்னிடம் வரும்படி அழைத்தாள். “அம்மா உனக்கு சாப்பாடு ஊட்டுகிறேன் வா. அவர் சாப்பிடட்டும்” என்று மகனைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள். 

ஆனால் செந்தூரோ, “நான் அப்பா கூட தான் உட்காருவேன்” என்று மீண்டும் அவன் மடிக்குத் தாவ முயன்றான். நீ மடியில் உட்கார்ந்தால், அப்பா எப்படி சாப்பிடுவாரு? அம்மா கிட்டயே இரு, அம்மா ஊட்டி விடுகிறேன்” என்று தன்னை மறந்து இலகுவாக பேசினாள்.

அவளின் தாய் தந்தை என்ற வார்த்தை கேட்டதும் குகனுக்கு மனதிற்கு இதமாக இருக்க, காதலுடன் தன் மனைவியை பார்த்தான். அவனின் பார்வையை கண்ட பிறகுதான், தன் பேச்சின் அர்த்தத்தை உணர்ந்த தெய்வானை, எதுவும் பேசாமல் தலைகுனிந்து மகனுக்கு ஊட்டி விட தொடங்கினாள். 

செந்தூரோ “எனக்கு அப்பா தான் ஊட்ட வேண்டும்” என்று அடம் பிடிக்க, 

“என்ன குட்டி? இன்னைக்கு ரொம்ப அடம்பிடிக்கிற?” என்று அவன் முதுகில் மெதுவாக ஒரு அடி வைத்தாள். 

அவள் அடித்ததும் குகன் #பிள்ளையை ஏன் அடிக்கின்றாய்?” என்று கோபமாக கத்தினான். 

அவன் கோவத்தில் மூவருமே பயந்துவிட்டனர். அதிர்ந்து அவனைப் பார்க்க, செந்தூரோ “எனக்கு வலிக்கலப்பா” என்றான் அம்மாவை காக்கும் பொருட்டு. 

“அவன்தான் நான் சாப்பாடு ஊட்டணும் என்கிறான் இல்ல? என் பக்கத்தில் வந்து உட்கார்” என்று அவளை இன்னும் தன் பக்கத்திற்கு இழுத்து உட்கார வைத்துவிட்டு, உணவை பிசைந்து மகனுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.  

வள்ளியம்மாளுக்கு குகனின் செயலில் உள்ள காதல் புரிந்தது. அவர் எதையும் கண்டு கொள்ளாமல் குகனின் தட்டை பார்த்து பரிமாற ஆரம்பித்தார். 

மகனுக்கு ஊட்டியபடியே தானும் உண்ட குகன், “ஆன்ட்டி, அருமையா சமைச்சு இருக்கீங்க. இந்த மீன் குழம்பு வைத்த கைக்கு தங்கத்திலேயே வளையல் செய்து போடலாம். குழம்பு ரொம்ப அருமையா இருக்கு” என்று ஒவ்வொரு வாயையும் புகழ்ந்து புகழ்ந்து உண்டான். 

அவர்கள் இருக்கும் ஊரில் கடல் மீன்கள் கிடைப்பது அரிது. அதை உணர்ந்த வள்ளியம்மாள், “கடல் மீன்ல ஒரு தனி சுவை இருக்கும் தம்பி” என்று சொல்லியே அவனுக்கு மீண்டும் இரண்டு மீன்களை எடுத்து வைத்தார்.

“ஐய்யோ.. வயிறு ஃபுல்லா ஆயிடுச்சு. இதுக்கு மேல சாப்பிட்டா வயிறு வெடிச்சிடும்” என்று சொல்லி எழுந்து விட்டான்.

அதன் பிறகு வள்ளியம்மாளும் தெய்வானையும் சாப்பிட்டு முடிக்க, சாப்பிட்ட உணவு பாத்திரங்களை ஏற கட்டி, தூக்கத்துக்கு செல்ல துடிக்கும் மகனை படுக்க வைக்க பாய்யை விரித்தாள் தெய்வானை. 

அப்பொழுது வள்ளியம்மாள், “தம்பி, எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா? பக்கத்து வீட்டுல் மகளும் மருமகனும் இல்ல என்று என்னை படுக்க துணைக்கு கூப்பிட்டாள். அதனால் நான் அங்கு போகிறேன். இன்றைக்கு ஒரு நாள் தெய்வானைக்கு துணையாக இங்கு இருக்கிறீர்களா?” என்றார். 

அவர் கேட்டதும் தெய்வானை அதிர்ந்து “அம்மா, நீங்க ஏன் போறீங்க? அவர்களை இங்க வர சொல்லுங்க” என்றாள் படபடப்பாக. 

“இங்க எப்படி இடம் பத்தும் தெய்வானை. தம்பி வந்து இருக்காங்க இல்ல” என்றார். 

“அவர் ஏன் இங்கே தங்கப் போறாரு? இங்க வசதியாக இருக்காது அவர் ரூம் போட்டு இருப்பார் அங்கேயே போகட்டும்” என்று மெதுவாக வள்ளியம்மாளிடம் முணுமுணுக்க,

“எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை ஆண்ட்டி. நான் இங்கு தங்கிக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் நான் ஊருக்கு போகணும், அதற்குள் சில வேலைகளை முடிக்க வேண்டியது இருக்கிறது. அதைப் பற்றியும் டீச்சரிடம் கொஞ்சம் பேசணும், அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை” என்றான்.

சரிங்க தம்பி என்ற வள்ளியம்மாள் செந்தூரை தூக்க போக, தெய்வானையோ பதறி விட்டாள். 

“அவன் இங்கேயே இருக்கட்டும் ஆன்ட்டி” என்றான் மென்மையாக. 

அவரும் மென் புன்னகையாக இருவரையும் பார்த்து தலையாட்டி விட்டு கிளம்ப, தெய்வானை அவரை போகாதீங்க என்று பார்வையாலேயே கடைசி வரை சொல்லிக் கொண்டிருந்தாள். அது எதையும் கண்டு கொள்ளாமல் அவர் பாட்டுக்கு கிளம்பிவிட்டார். 

வள்ளியம்மாள் சென்றதும் சமையல் மேடையின் அருகிலேயே அமர்ந்திருந்த தெய்வானையை பார்த்த குகன், “எவ்வளவு நேரம் தான் அங்கேயே உட்கார்ந்துட்டு இருக்க போறீங்க டீச்சர்” என்று டீச்சரில் அழுத்தமாக கூறினான். 

மற்றொரு பாயை எடுத்து, அவள் உட்கார்ந்து இடத்திலேயே விரித்துக்கொண்டு, “நீங்க அங்கேயே படுத்துக்கோங்க, நான் இங்கு படுத்துக் கொள்கிறேன்” என்று படுக்கப் போக, 

“நான் என்ன உறங்குவதற்காகவா இங்கே வந்தேன்” என்றான் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டு. 

அவனின் குரலில் இருந்த கோபத்தைக் கண்டு அவனை மிரண்டு பார்த்தாள் தெய்வானை.

இப்படி முழிச்சு முழிச்சு பார்த்து நம்மளை நிம்மதியாக பேச விட மாட்டா போலிருக்கு என்று நினைத்துக் கொண்டு தலையை கோதி தன்னை சமன்படுத்திய குகன், “இப்ப எதுக்கு இப்படி முழிக்கிற?” என்றான். 

அவளிடம் பதில் இல்லாமல் போக அவள் முகத்தைப் பார்த்து “என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா? என்றான் மீண்டும்.

அவள் ஆமாம் என்று தலையாட்ட,

என்ன? என்பது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் கண்களைப் பார்த்ததும் அவளால் பேச முடியவில்லை. மெதுவாக தலையை குனிந்து பாயின் ஓரத்தை பிடித்து இழுத்துக் கொண்டே, “அது” என்று தயங்கினாள். 

“என்னிடம் என்ன தயக்கம், தயங்காமல் சீக்கிரம் விஷயத்தை சொல்லு. எனக்கு தூக்கம் வருது” என்று செந்தூரின் அருகில் படுத்தான். 

“அது” என்று மீண்டும் தயங்க, 

அவன் முறைக்க 

“நான் அங்கேயே வேலை பார்க்கிறேனே! என்னை வேலை விட்டு நிறுத்தாதீங்க. நான் எப்படியாவது அந்த வேலைக்கு தகுந்த மாதிரி படித்து விடுகிறேன். தயவு செய்து என்னை வேலையில் இருந்து நீக்காதீர்கள்” என்றாள். 

எழுந்து அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்த குகன் “உனக்கு அந்த வேலை அவசியமா?” என்றான் அழுத்தமாக. 

“ஆமாம்” என்று தலையாட்டிய தெய்வானை “வேலை இல்லாவிட்டால் நான் வருமானத்திற்கு என்ன செய்வேன்? எங்கள் மூவருக்கும் வருமானம் என்று ஒன்று வேண்டும் அல்லவா?”

“ஓ.. அப்படி என்றால் நீ இங்கேயே இருக்கப் போகிறாயா?” என்றான். 

அதற்கு அவளும் ஆமாம் என்று தலையாட்ட,

“சரி, நீ தொடர்ந்து இங்கு அதே வேலையை செய்து கொள். உன் திறமையையும் வளர்த்துக் கொள். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. நான் வந்த வேலைகளை முடித்துவிட்டு இன்னும் நான்கைந்து நாட்களில் இங்கிருந்து கிளம்பி விடுவேன். இப்பொழுது நீ வாங்கும் சம்பளம் உங்கள் மூன்று பேருக்கும் போதுமானதாக இல்லை அல்லவா?” ஆகையால்” 

என்றதும் அவன் பேச்சை தடுத்து நிறுத்திய தெய்வானை “அப்படியெல்லாம் இல்லை. எனக்கு இதே சம்பளமே போதும். எனக்கு எந்த சலுகையும் வேண்டாம்” என்றாள் அவசரமாக.  

“நீ போதும் என்று சொன்னாலும், மூணு பேருக்கு இந்த சம்பளம் கொஞ்சம் குறைவு தான். நீ என் மனைவி என்பதற்காக உன் சம்பளத்தை எல்லாம் ஏற்றவில்லை, கவலைப்படாதே. உன் வாழ்க்கை பலுவை குறைப்பதற்காகத்தான் முடிவு செய்துள்ளேன். நான் ஊருக்கு செல்லும் பொழுது என் மகன் செந்தூரையும் அழைத்துச் சென்று விடுகிறேன்” என்று அலுகாமல் குலுங்காமல் அவள் தலையில் கல்லை தூக்கி போட்டான் குகன்.  

அதில் அதிர்ந்த தெய்வானை “என்ன சொல்றீங்க? அவன் என் மகன். அவன் என்னை விட்டு இருக்க மாட்டான். அவனை நான் உங்களுக்கு கொடுக்க மாட்டேன்” என்று கதறியபடி வேகமாக எழுந்து மகனை தூக்கி அணைத்துக் கொண்டாள். 

“என்னது? உன் மகனா? உனக்கு மட்டும் தான் மகனா? நானில்லாமல் அவன் உனக்கு பிறந்து விட்டானா? இல்லை, வேறு..” என்ற அவளை மேலிருந்து கீழ் பார்த்தான். 

அவனை முறைத்த தெய்வானை “என்ன பேசுறீங்க என்று புரிந்து தான் பேசுறீங்களா?” என்றாள் அவள் கண்களில் கண்ணீருடன் கோபமாக. 

“நான் புரிந்து தான் பேசுகிறேன். நீ தான் நிலைமை புரியாமல் நடந்து கொள்கிறாய்” என்று சொல்லி, “இவன் என் பிள்ளை தானே? அப்படி என்றால் அவன் இனிமேல் என்னுடனே இருக்கட்டும், நீ உன் விருப்பம் போல எங்கு வேணாலும் இருந்து கொள்” என்றான் அமைதியாக.

“அவன் எனக்கும் மகன்தான்” என்று அவள் மீண்டும் கோவப்பட, 

“நான் ஒன்றும் இல்லை என்று சொல்லவில்லையே! என் மகன் என்னுடன் தான் இருப்பான். நீ உன் மகனுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால், நீயும் என்னுடன் தான் வர வேண்டும்” என்று முடிவாகச் சொல்லி, மகனை அவனிடமிருந்து வாங்க முயன்றான். 

அவளோ அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு குகனிடம் தர மறுத்தாள். 

“இங்க பார் பிடிவாதம் பிடித்து அவனது தூக்கத்தை கெடுத்து விடாதே!” என்று மிரட்ட, அவளும் அமைதியாக அவனிடம் கொடுத்து விட்டாள்.‌ 

அவளிடமிருந்து மகனை வாங்கிய குகன், அவனை சுகமாக படுக்க வைத்து விட்டு தெய்வானையின் அருகில் வந்து அமர்ந்தான். 

அவள் விலகி அமர பார்க்க, அவள் இடையில் கைவைத்து தன்னுடன் சேர்ந்து இருக்குமாறு அணைத்தபடி உட்கார்ந்தான். 

நீண்ட நாட்கள் கழித்து கணவனின் அணைப்பு. அவனது ஸ்பரிசத்தில் அவள் மேனி சிலிர்க்க, “ப்ளீஸ்.. என்னை விடுங்க” என்று அவனிடமிருந்து விலகப் போராடினாள் தெய்வானை. 

அவளின் சிலிர்ப்பையும் கதகதப்பையும் உணர்ந்த குகனுக்கு அவர்கள் ஒன்றாக வாழ்ந்த நாட்கள் ஞாபகத்திற்கு வர, தன் உணர்வை மறைக்கும் பொருட்டு, “இத்தனை நாள் என்னை விட்டு தனியாகத்தானே இருந்தாய்” என்று கோபமாக சொல்லி, சற்றென்று அவள் இடுப்பில் இருந்து கையை எடுத்து தள்ளி விட, 

அவனிடம் இருந்து விலக போராடிய வேகத்தில் ஒரு அடி அவனை விட்டு விலகி விழப் பார்த்தாள். 

பின் சமாளித்து அமர்ந்து, “இப்படி எல்லாம் பண்ணாதீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல? உங்கள் மனைவிக்கு உண்மையாக இருங்கள். தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க. எனக்கு எந்த வேலையும் வேண்டாம். நான் வேறு ஏதாவது வேலை பார்த்துக் கொள்கிறேன். தயவுசெய்து நீங்கள் உங்கள் மனைவி குழந்தையுடன் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழுங்கள். எங்களை விட்டு விடுங்கள்” என்று அவனை கையெடுத்து கும்பிட்டாள் தெய்வானை.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்