சமையல் முடித்து குகன் சாப்பிட்டதும், குளித்துவிட்டு சாப்பிடுகிறேன் என்று சொன்ன தெய்வானை, குகன் கொடுத்த உடைகளை வாங்கிக் கொண்டு அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் வந்து குளித்து, அவன் கொடுத்த டி-ஷர்ட் மற்றும் சாட்ஸை அணிந்து கொண்டாள்.
அவளின் குள்ளமான உருவத்திற்கு டி-ஷர்ட் தொடை வரை இருக்க, சட்ஸ்சோ முட்டிக்கு கீழ் வரை இருந்தது. இருந்தும் அவளுக்கு அந்த ஆடை அணிந்து கொண்டு வெளியே அவனின் முன் செல்ல சற்று கூச்சமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. அவள் வெளியே சென்று தான் ஆக வேண்டும். அது மட்டும் அல்லாது உடைகளை வெயிலில் காய போட்டால் தான் சீக்கிரம் எடுத்து அதை உடுத்திக் கொள்ள முடியும். ஆகவே மெதுவாக கதவை திறந்து அவன் அங்கு இருக்கிறானா? என்று எட்டிப் பார்த்தாள். அவள் குளிக்கச் செல்லும் பொழுது உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தான் குகன்.
நல்ல வேலை அவர் லேப்டாப்பை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து கொண்டு ஈர துணி அடங்கிய வாலியை தூக்கிக்கொண்டு பின்புறம் வேகமாக சென்றுவிட்டாள்.
அங்கிருந்த கொடியில் நன்றாக வெயில் படும் இடத்தில் தன் உடைகளை காய போட்டாள் தெய்வானை.
பின்னர் அப்படியே சமையலறை சென்று இட்லியையும் சாம்பாரையும் ஊற்றி சாப்பிட்டாள். பசியில் வேக வேகமாக சாப்பிட, புறப்பேறியது. அவள் தலையை தட்டிய குகன் அவள் முன் ஒரு டம்ளர் தண்ணீரை நீட்டினான். அவளோ அதிர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டே, தண்ணீரை வாங்க, “ஏன் உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானே? என்ன அவசரம்?” என்று கேட்டவாறு அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.
அவன் தனக்கு சின்னது என்று நினைத்த உடை, அவளுக்கு இவ்வளவு பெரிதாக இருக்கிறதே என்று எண்ணி வியந்து புன்னகைக்க, அவளுக்கு அவன் பார்வையில் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தாள்.
அது அவள் முகத்தில் தெளிவாகத் தெரிய, அவனும் புரிந்துகொண்டு, “சரி உட்கார்ந்து மெதுவா சாப்பிடு” நாய்க்கு சாப்பாடு செய்யணும். அரிசி கந்தன் வீட்டில் இருக்கிறதாம். நான் போய் எடுத்து வருகிறேன்” என்று அவளை பார்க்காமலே சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.
அவன் வெளியே சென்ற பிறகுதான் அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது. பெருமூச்சு விட்டுவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு, தன் உடை காய்ந்து விட்டதா என்று பார்க்க வெளியே சென்று திருப்பித் திருப்பிப் போட்டு அரை மணி நேரத்திலேயே காய வைத்து உடையை மாற்றிக் கொண்டாள். அதன் பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
வெளியே சென்ற குகனும் தோட்டத்தை ஒரு முறை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு? கந்தனின் வீட்டிற்குச் சென்று தேவையானவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து தான் வந்தான்.
அவன் வரும்பொழுது தெய்வானை சமையலறையில் மதியத்திற்கு தேவையான சமையலை செய்து கொண்டிருந்தாள். அவள் பின்னால் வந்து நின்ற குகன், “என்ன செய்ற?” என்றான்.
“பிரிட்ஜில கொஞ்சம் காய் இருக்குது. அதை வைத்து மதியம் சமையல் செய்கிறேன்” என்றாள்.
“உனக்கு சமைக்க தெரியுமா?” என்று அவன் சந்தேகமாக பயந்து கொண்டே கேட்டான்.
“ஓரளவுக்கு செய்வேன். சுவையாக இருக்குமா என்று தெரியாது? ஆனால் கண்டிப்பாக சாப்பிடும் படி இருக்கும்!” என்றாள் சிரித்துக் கொண்டே.
அவனும் “இருந்தா சரிதான்” என்று சொல்லிக் கொண்டே வேலையை செய்ய சென்றான்.
தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்க, அதில் கொரோனா நோயைப் பற்றி செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டே இருந்தது. நோயின் பரவுதல் அதிகமாக இருக்க உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே இருந்தது.
சமையல் அறை வரை செய்தி கேட்க, தெய்வானைக்கும் கொரோனா நோயைப் பற்றி பயம் உள்ளுக்குள் பரவத் தொடங்கியது. கடவுளே நான் போகும் வரைக்கும் அம்மா எந்த நோயும் வராமல் பத்திரமா இருக்கணும் என்று வேண்டிக் கொண்டாள்.
சமையல் முடிந்ததும், சாப்பிடும் பொழுது தெய்வானையின் சாப்பாட்டை சாப்பிட்ட குகன் “இப்போ கொரோனா நோய் பரவிக்கிட்டு இருக்கு. அதுல நிறைய பேரு இறந்து விடுகிறார்களாம். அதுல இறந்தால் கூட கொரோனா வந்து இறந்துட்டாங்கன்னு பெருமையா சொல்லிக்கலாம். உன்னோட சாப்பாட்டை சாப்பிட்டு செத்துட்டா என்ன பண்ணுறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நல்ல வேளையாக நல்லாவே சமைச்சி இருக்க” என்று பாராட்டினான்.
ஏதோ நோயைப் பற்றி முக்கியமான விஷயம் சொல்ல வருகிறான் என்று கவனமாக கேட்டுக் கொண்டிருந்த தெய்வானை அவன் அவளை கிண்டல் செய்வதை கண்டு, “ஏன் கிண்டல் பண்ண மாட்டீங்க? உங்களுக்காக வேர்க்க விறுவிறுக்க சமையல் செஞ்சேன்ல்ல, இதுவும் சொல்லுவீங்க இதுக்கு மேலயும் சொல்லுவீங்க” என்று முறைத்தாள்.
“ஐயோ அம்மா. முறைக்காத, பயமா இருக்கு. உன் மூஞ்ச மட்டும் தான் நீ இங்க இருக்கிற வரைக்கும் பார்க்கணும். தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் பார்க்காதே!” என்றான் மீண்டும் கிண்டலாக. இப்படியே இருவரும் கேலிப் பேசிக்கொண்டு மதிய உணவை உண்டு முடித்தனர்.
“நீ போய் ரெஸ்ட் எடுக்கணும்னா எடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று ஃபோனையும் லேப்டாப்பும் எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அவளும் கொஞ்ச நேரம் டிவியை சேனல் மாத்தி மாத்தி பார்த்துக் கொண்டு இருந்தாள். பின்னர் கொஞ்ச நேரம் உறங்குவோம் என்று சென்று படுத்துவிட்டாள்.
சாயங்காலமும் கோனார் வந்து பால் கறந்து கொடுத்து சென்றார். அவரிடம் ஊரில் உள்ள நிலவரம் விசாரிக்க,
“எல்லா இடத்துலயும் போலீஸ் கெடுபிடி இருக்கு தம்பி. நானு பால் கறந்து கொடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனால் தினமும் இப்படி விடுவாங்களா? என்று தெரியலை” என்றார் சோகமாக.
அவரிடம் “ஊருக்குள் ஏதாவது கடை திறந்து இருக்கிறதா?” என்றான்.
“இல்லை தம்பி. ஏன் ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார்.
“இல்லை ஒரு 20 வயசு பொண்ணுக்கு போடுற மாதிரி பொண்ணுக்க டிரஸ் வேணும். அதுதான் துணிக்கடை எதுவும் திறந்து இருக்கிறதா? என்று கேட்டேன்” என்றான்.
“யாருக்கு தம்பி?” என்று அவர் சந்தேகமாக கேட்க,
“என் மனைவிக்கு தான். அவள் எந்த உடையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. வந்ததும் கிளம்பி விடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் இப்பொழுது ஊருக்கு போக முடியாது. மாற்றுடை இல்லை. அதனால் தான் கேட்டேன். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. இங்கேயே உடைகள் இருக்கிறது” என்றான்.
“அவ்வளவுதானா தம்பி. என் பொண்ணு கிட்ட ஏதாவது புது உடுப்பு இருக்கான்னு கேட்டு, நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வரேன் தம்பி. என்றார் கோனாரும்.
அவரிடம் உள்ளாடைகளை பற்றி கேட்க கூச்சமாக இருக்க, “சரி அப்போ நீங்க உங்க வீட்டுக்கு போனதும் உங்க மகள் கிட்ட, என்னிடம் பேச சொல்லுங்க” என்றான் குகன்.
“சரிங்க தம்பி” என்று அவரும் கிளம்பி விட்டார்.
அவர் சென்றதும் பாலை சுட வைத்து இருவருக்கும் தேநீர் போட்டு தயாராக வைத்தான். டீயின் மணம் அறைக்கு வர, மெதுவாக கண் விழித்தாள். எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்த தெய்வானை, சமையலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்க, அங்கே செல்ல, டீ போட்டுக் கொண்டிருந்தான் குகன்.
“நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க. நான் போடுவேன் இல்ல. என்னை எழுப்பி இருக்க வேண்டியதுதானே?” என்று வேகமாக அவனிடமிருந்து வாங்கி டீயை வடிகட்டினாள்.
பின் இருவருக்கும் கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு அவன் கையில் ஒன்றை கொடுத்து விட்டு, ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து தேநீரை ரசித்து குடிக்க ஆரம்பித்தாள்.
தெய்வானையின் பழக்கம சாப்பாடு கூட நின்று கொண்டு சாப்பிட்டு விடுவாள், ஆனால் காலையிலும் சாயங்காலமும் டீ காபி குடிக்கும் பொழுது மட்டும் உட்கார்ந்து ரசித்து குடிப்பாள்.
அவனும் அவளின் எதிரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டு அவளிடம் ஏதேதோ கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அவளிடம் இருந்து பதில் தான் வரவில்லை.
என்ன பதிலை காணும் என்று அவளை பார்க்க, கண்களை மூடி ஒவ்வொரு சிப்பாக ரசித்து குடித்துக் கொண்டிருந்த தெய்வானையை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தான் குகன்.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..