
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 40
சித்தார்த்தும் வார வாரம் அவன் தாராவை பார்க்க ஓடிவந்துவிடுவான். அவன் இருக்கும் நாள் எல்லாம் அவளைக் கண்ணுக்குள் வைத்துத் தான் பார்த்தான். அவளுக்குப் பிடித்ததெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தான். உள்ளே அவன் குழந்தையும் அவளை அதிகமாகப் படுத்தவில்லை. நல்ல படியாக வளர்ந்தது.
நாட்கள் மாதங்களாகக் கடந்து ஏழு மாதம் இருக்கும்போது வளைகாப்பு வைக்கலாமெனப் பேசும்போது சிந்துவையும், ஆனந்தியையும் அழைத்தால் வளைகாப்பு வைங்க இல்லையென்றால் வளைகாப்பே வேண்டாமென மதுதாரா கூறிவிட, அன்புவும், ஈகையும் சென்று அழைத்தனர். அப்போது அவர்களிடமும் மன்னிப்பு கேட்டார் ஆனந்தி.
மதுவோ அத்தோடு விடுவதாக இல்லை. சித்தார்த்தை அங்கு அழைத்துச் செல்வதில் அதிக பிடிவாதம் பிடித்தாள். அவள் பிடிவாதத்தை சாப்பாடு, மாத்திரையில் காட்ட, அவளுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்தது. தன் கோபத்தை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு தன் மனைவி பின்னால் ஆட்டுக்குட்டி போலச் சென்றான். மதுவும், சித்தார்த்தும் வீட்டிற்குள் செல்ல, ஆனந்தி உடைந்தே விட்டார்.
“எய்யா சித்தார்த்து.. இம்பூட்டு நாளாச்சாய்யா அம்மாள மன்னிக்க” என்றவர் ஓடிவந்து அவனை அணைத்து அவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்துவிட பதறிவிட்டான் சித்தார்த். தாயின் மேல் கோபம் இருந்தது தான் ஆனாலும் பாசம் வற்றவில்லை. தாய் தன் காலடியில் அமர பதறி அன்னையை தூக்கி அணைத்துக் கொண்டான். சிந்துவும் அவனிடம் மன்னிப்பு கேட்டாள். அவன் தாராவுக்காக அனைவரையும் மன்னிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டான்.
ஆனந்தி “வாயா.. அப்பாவ வந்து பாரு..” என அழைத்துச் செல்ல, அவனைப் பார்த்ததும் இளங்கோ எழுந்துவிட்டார்.
“சித்தார்த்து.. சித்தார்த்து” என எழுந்து சென்று அவனை அணைக்க, அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. அவனும் “அப்பா” என அணைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவன் மேலே அவர் மயங்கியிருக்க, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
திடீரெனச் சித்தார்த்தை கண்டதாலும், கூடவே பழைய நினைவுகளும் லேசாக வரத் தலையில் ஏற்பட்ட அதீத வலியால் மயங்கிவிட்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்க, கொஞ்சம் கொஞ்சமாக நினைவும் வர ஆரம்பித்தது. பத்து நாள் மருத்துவமனையில் இருக்க, அனைவரும் அவரைச் சென்று பார்த்தனர். அனைவரிடமும் மீண்டும் அவரும், ஆனந்தியும் மன்னிப்பு கேட்டனர்.
சந்தோஷமாக அனைவரின் ஆசியுடன், பிரமாண்டமாக ஆரம்பமானது மதுதாராவின் வளைகாப்பு நிகழ்வு. ஆதவன் தான் இழுத்து போட்டு எல்லா வேலையும் செய்தான். அஸ்வந்துக்கு நிறை மாதமாக இருக்கும் அகிலாவை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. சித்தார்த்துக்கு அவன் தாராவை சைட்டடிப்பதற்கே நேரம் போதவில்லை.
“ஒரு ஈனாவானாவ நான் சிக்கிடுக்கேன் இந்த வீட்டுக்கு.. ஏய் அத்தை எனக்குச் சீக்கிரம் ஒரு பொண்ண பாரு இவனுக்க டார்சர் தாங்க முடியல” என ஈகையிடம் வம்பு வளர்த்தாலும் அனைத்து வேலையும் சரியாக செய்துகொண்டிருந்தான் ஆதவன். கோலாகலமாக நடந்து முடிந்தது மதுதாராவின் வளைகாப்பு.
நாட்கள் செல்ல பிரசவ காலமும் வந்தது. சித்தார்த் அன்று தான் வந்திருந்தான். அவன் குழந்தை அவன் இருக்கும் போதே வந்துவிட நினைத்துவிட்டது போலும். அவன் வந்த சிறிது நேரத்தில் மதுக்கு பிரசவ வலி வர மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவள் சித்தார்த் கையை விடவே இல்லை. அவனையும் அழைத்துக் கொண்டு தான் பிரவசத்துக்கு சென்றாள். அவள் கூறியது போலவே அவன் உடன் இருந்ததால் பிரசவ வலி இதயத்தைப் பாதிக்காத அளவுக்குத் தன்னை தானே பக்குவப்படுத்தி இருந்தாள்.
அவன் கைகளை இறுக்கி பிடித்து வலிகளைத் தாங்கி, இடையை பிழந்து, அவன் உயிரை உலகத்துக்குக் கொண்டு வந்தாள். தாயை அதிக நேரம் போராட விடாமல் தானே போராடி வெளியே வந்தாள் சித்தார்த், மதுதாராவின் மகள் ஐரின் சித்தாரா. இருவருமாகத் தங்களின் மகளை இப்பூலகில் வரவேற்றனர். பெற்றோரின் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்த வண்ண மலர். இனி இருவரின் வாழ்வும் ஐரின் சித்தாராவோடு இனிதே துவக்கம்.
ஆறு மாதத்திற்கு பிறகு
“சித்தத்து இன்னும் எழும்பலயா? எத்தனை தடவை வந்து எழுப்புறது? இப்போ எழும்பல சுடுதண்ணிய தூக்கி ஊத்திடுவேன் பாரு.. உன்னை எழுப்புறேனு பாப்பா எழுத்தா அவ்ளோ தான் உனக்கு. எனக்கு நிறைய வேலை இருக்கு. எழுந்து முதல்ல குளிச்சிட்டு வா” என சித்தார்த்தை மெல்லிய குரலில் எழுப்பிக்கொண்டிருந்தாள் மதுதாரா.
ஏனெனில் உறக்கிக் கொண்டிருப்பவளின் மகிமை அப்படி. ஐரின் சித்தாரா.. சித்தார்த் மதுதாராவின் செல்லமகள். அம்மாவின் வயிற்றிலிருக்கும்போது தாயின் உடல்நிலை கருதியும், தந்தையின் மனநிலை கருதியும் எவ்வளவு சமத்தாக இருந்தாளோ இப்போது அத்தனை படுத்தி எடுக்கிறாள் அத்தனை பேரையும்.
ஆறுமாதம் குழந்தை அவள் உறக்கும்போது மட்டுமே அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்க்க முடியும். உறக்கும் முன்னால் ஒரு மணிநேரம், உறங்கி எழுந்து ஒரு மணிநேரம் அவளுக்கு அழுவதற்கான நேரம்.
ஆம்! உறங்குவதற்கும் அழுவாள், உறங்கி எழுந்தாலும் அழுவாள், யாரேனும் ஒருவர் அவளைத் தோளில் போட்டு ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். ஒருவர் மட்டும் தான் தப்பித்தவறி கைமாற்றினால் அவ்வளவு தான் அன்றையபொழுது முழுவதையும் அழுகையிலேயே கடத்திவிடுவாள் சித்தாரா.
அதே போல் மாலை ஆறு மணிக்கு அழுவதற்காகத் திறக்கும் வாயை ஏழு மணி அடித்தால் தான் மூடுவாள். இதைத் தினமும் வழமையாகவே வைத்திருக்கிறாள் ஐரின் சித்தாரா அதனால் அவளுக்கு ஆதவன் வைத்த பேரோ ஒரு மணி சங்கு. மணிக்கணக்கில் அழுவதால் இந்தப் பெயர்.
அவள் எழுந்தால் இனி ஒரு வேலையும் நடக்காது என அவளைத் தொந்தரவு செய்யாதவண்ணம் கணவனை எழுப்ப, அவனோ இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் காரணம் நேற்று நள்ளிரவில் வீட்டுக்கு வர, அவன் சத்தத்தில் விழித்த அவனின் மகள் அவன் தூக்கத்து சங்கு ஊதிவிட்டாள்.
வெளியே ஈகையும், ஆனந்தியும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.
ஆனந்தி “செல்வி புது அடுப்புக்கு ரெகுலேட்டர் மாட்டியாச்சா?”
ஈகை “அய்யோ அத மறந்துட்டேனே!”
“எவனையாவது மாட்ட சொல்லு நல்ல நேரத்துல பால் காய்ச்சனும்”
இன்று சித்தார்த், மதுதாராவின் புதுமனை புகுவிழா. புதுவீடெல்லாம் இல்லைங்க, அன்பு வீட்டுடிற்கும், ஆனந்தி வீட்டிற்கும் இடையில் ஒரு வீடு விற்பனைக்கு வந்தது. அதைத் தான் சித்தார்த் வாங்கியிருக்கிறான்.
அவன் இன்னமும் தூத்துக்குடியில் தான் வேலை பார்க்கிறான் ஆனால் சென்னையில் பணிமாற்றத்திற்காக விண்ணப்பித்தும் உள்ளான். எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறான். அதுதான் அவர்களுக்கென ஒரு வீட்டை அவன் சொந்த முயற்சியில் வாங்கிவிட்டான்.
என்ன தான் ஆனந்தி மனம் திருந்தினாலும் அவனால் அவர்களுடன் ஒட்ட முடியவில்லை அதற்காகப் பிரிந்தும் இல்லை. கோட்டைத்தாண்டாத மெல்லிய உறவு தான். அவர்களும் அவனைத் தொந்தரவு செய்யவில்லை அவன் போக்குக்கே போய்விட்டனர். நினைத்தால் அவனைச் சென்று பார்த்தால் போதும், அவனும் வந்து போய் இருந்தால் போதும் என்ற மனநிலை.
அன்பு வீட்டிலோ அவனுக்கு எப்போதும் போலப் பாசம், மதிப்பு, மரியாதை தான் கூடுதலாக வீட்டு மாப்பிள்ளை வேறு கேட்கவா வேண்டும் இராஜ உபச்சாரம் தான். ஐரினுக்கு ஆறுமாதம் தான் ஆகிறதென்ற காரணத்தால் மது இன்னமும் அன்பு வீட்டில் தான் இருந்தாள். வாரம் ஒருமுறை வருவதால் அவனும் அங்கேயே தங்கிக்கொண்டான்.
எப்படி இருந்தாலும் வேலைமாற்றம் கிடைத்துவிடும் அப்போது அங்கேயே தங்குவதாக இருந்தால் சரிவராது என்பதே அவன் எண்ணம். அதனால் அவர்களின் குடியிருப்பு பகுதியிலேயே வீடு வர அதை வாங்கி அனைவரின் ஆசியுடன் பால்காய்ச்சி நடக்கிறது. சித்தார்த் இங்கு வரும்போது மதுவுடன் இவ்வீட்டுக்கு குடியேறலாம் என்ற திட்டம்.
இளங்கோ, பூபாலன் மற்றும் அன்பு மூவரும் வாயிலில் அமர்ந்து வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அகிலா அவளின் பிள்ளைகள் இருவரையும் கவனித்துக்கொள்ள அஸ்வந்தும், ஆதவனும் தான் வெளிவேலைகள் எல்லாம் பார்த்தனர். வீடு வாங்கியவன் ஒரு வேலையும் செய்யாமல் மகளுடன் சேர்ந்து நல்ல சயனத்தில் இருந்தான். அவனை எழுப்பியே சோர்ந்து போனாள் மது.
“இந்த மது சித்துவ எழுப்புறேனு ரூம்குள்ள போனா இப்போ அவளையும் ஆள காணோம். இவளும் சேர்ந்து தூங்குறா போல” என ஈகைச்செல்வி வசைபாட,
ஆனந்தி “கதவ தட்டுனோம் அவ்ளோதான் செத்தோம்.. ஒருத்தி இங்க யாரையும் ஒரு வேலை பார்க்கவிட மாட்டா.. அவங்களா எழுந்து வரட்டும்” என அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வேலை பார்க்க, எழிலோ பூஜைக்காக வாங்கி வந்த பூவைக்கட்டிக்கொண்டிருந்தார்.
“சித்தத்து இப்போ நீ எழும்பல உன் மகள எழுப்பி விட்டுறுவேன் அப்புறம் சங்கு தான்” எனக்கூற, பதறியடிச்சு எழுந்து குளிக்கச் சென்றான். அதில் மெல்லமாகச் சிரித்தவள் மகளுக்குத் தூக்கம் கலையாமல் இருக்க அணைவாகத் தலையணையை வைத்துவிட்டு வெளியே வந்தவள், விசேஷத்திற்கான வேலைகளில் தன்னை புகுத்திக் கொண்டு மகளின் பொறுப்பைக் கணவனிடம் தள்ளிவிட்டாள்.
தூங்கி எழுந்து அழுது கொண்டிருந்த ஐரினை பார்ப்பது மட்டுமே இன்று சித்தார்த்தின் வேலை. அங்கு வந்த ஆதவனோ “என்னா ஒரு மணி சங்கு ஊத ஆரம்பிச்சுட்டாளா?” என ஐரினை பார்த்துக் கேட்க,
அஸ்வந்தோ “அம்மாடி சங்கு இப்ப தான் நான் பெத்தத என் பொண்டாட்டி தூங்க வச்சிருக்கா. உன் சங்க கொஞ்சம் மெதுவா ஊதும்மா” எனக் கிண்டல் அடிக்க,
சித்தார்த் “அச்சோ! அச்சோ” என மகளைச் சமாதனம் செய்து கொண்டே “மாமாவும், சித்தப்பாவும் கேலி பண்றாங்களா வாங்க இரண்டு பேரையும் அடிக்கலாம்” என அந்தப் பிஞ்சு விரலால் இருவரையும் அடிக்க அழுகையை நிறுத்தி கிளுங்கி சிரித்தாள்.
ஆதவன் “அடிச்சதும் சிரிப்ப பார்த்தியா? சரியான புலிகேசியா இருப்பா போல.. உன் சங்க கண்டினியூ பண்ணு எங்களுக்கு வேலை இருக்கு” என வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர். அன்றையபொழுது அழகாகச் சென்றது. விசேஷமும் சிறப்பாக நடைபெற்றது.
இரவு புதிதாகப் பால்காய்ச்சிய வீட்டில் தான் அன்று தங்க வேண்டுமென அங்குத் தான் தங்கினர். அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, அவர்களது அறைக்கு வந்தாள் மது. சித்தார்த் மகளைத் தூங்கவைத்து தூளியில் போட்டுவிட்டு மனைவியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளோ அங்கிருந்த அலங்கார மேஜைக்கு அருகில் அமர்ந்து தன் நகைகளை எல்லாம் கழட்டிக்கொண்டிருக்க, அவளைப் பார்த்துக்கொண்டே மெல்லிய குரலில்,
“அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே!
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே!”
எனப்பாட, அவளோ அவனுக்குப் பதிலாக,
“மாமனே உன்னை காணாம.. வட்டியில் சோறும் உண்காம.. பாவி நான் பருத்தி நாரா போனேனே!”
சித்தார்த் “பார்த்தா அப்படி தெரியலயே! அம்மாச்சி, அத்தை கைவண்ணத்துல நல்ல கும்முனு காஷ்மீர் ஆப்பிள் மாதிரில இருக்க” எனக்கூற, அவனை நாக்கை துறுத்தி மிரட்டியவள்,
“காகம் தான் கத்தி போனாலோ.. கதவு தான் சத்தம் போட்டாலோ.. உன் முகம் பாக்க ஓடி வந்தேனே!” எனப்பாடினாள்.
“என்னை ரொம்ப தேடுதா என் தாராக்குட்டி” என அவளை இழுத்து அணைத்துக்கொண்டே, “அயித்தயும் மாமனும் சுகந்தானா? ஆத்துல மீனும் சுகந்தானா? அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த என் அம்மாச்சி சுகந்தானா?” எனப் பாடல் மூலமாகக் கேட்க,
“காலையிலருந்து பார்த்துட்டு அப்புறம் என்ன கேள்வி வேண்டிக் கிடக்கு, அவங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க.. ஆனா நான் தான் நீயில்லாம நல்லா இல்லை” எனக் கூறியவள் தொடர்ந்து “ஐரின் அப்பா என்னை விட்டுப் போகாதே!” எனப்பாட்டாகவே மீண்டும் பாட,
“தொட்ட பூ எல்லாம் சுகந்தானா? தொடாத பூவும் சுகந்தானா? தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா?” அவள் அங்கங்களை அளவிட்டவாறே பாட, அவன் கைகளைத் தட்டிவிட்டு எழுந்தவள், சுட்டுவிரலை நீட்டி மிரட்டினாள்.
“எப்போ எதுக்குடி தள்ளி போற? அதான் ஆறுமாசம் ஆச்சுல.. என்னை பட்டினி போடாத செல்லம்.. உன் சித்தத்து பாவம் இல்ல” எனக் கூறிக்கொண்டே அவளை மீண்டும் இழுத்து அணைத்தவன் அவன் தேவைகளை எல்லாம் அவளிடம் தீர்த்துவிட்டு தான் விட்டான்.
இருவரும் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்க, அவன் மார்பில் படுத்திருந்தவள் கையில் ஒரு காகிதத்தைத் திணித்தான் சித்தார்த்.
“என்ன சித்தத்து?” எனக் கேட்டு அதைப் பிரித்துப் படித்தவள் மகிழ்ச்சியில் அவன் முகம் முழுவதும் முத்தத்தால் அராதனை செய்துவிட்டாள். ஆம்! வேலை மாற்றல் கடிதம். சென்னைக்கே மாற்றல் வந்துவிட்டது. இனி அவன் தாராவை பிரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரே வீட்டில் வளர்ந்த காதல் கிளிகள் பல்வேறு சூழ்நிலையில் பிரிந்து, பிரிந்து இப்போது நிரந்தரமாகக் கூடிவிட்டனர். இனி இந்தக் கூட்டுக்கிளிகளின் மகிழ்வுக்கு குறையின்றி வாழ்நாள் முழுவதும் இனிதே வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.
சுபம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
19
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

பைனல் டச் செம்ம. அந்த பாட்டும் செம்ம. ஆதவனுக்கு ஒரு ஜோடியை போட்டிருக்கலாம்.
மிக்க நன்றி😍😍 கடைசி வரை கூடவே பயணித்து கருத்து தெரிவித்து ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி😍😍
ஆர்ப்பாட்டமான கதை.
தொடக்கமே அதிரடியாக தான் இருந்தது. திருமணம் வரையிலுமே ஒவ்வொரு அத்தியாயமும் இரத்த அழுத்தத்தை கூட்டியது.
வாழ்வில் அம்மா, அப்பா, தன் குடும்பம் என்ற உரிமையுணர்வு கிடைக்க பெறாமல், அதற்கு ஈடுகட்டும் வகையில் மாமன் குடும்பத்தால் தங்கமாய் தாங்கப்பட்டு வளர்ந்தவன் சித்தார்த்.
உடன் வளர்ந்த தனது தாராவை தரணியாக கொண்டு சுற்றி வந்தவன். அவளது ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் அறிந்து அவளை அரவணைப்பவன்.
தான் தரணியாய் நினைத்த தாராவே தனக்கு துரோகம் இழைத்ததாய் எண்ணி மருகி மாமன் குடும்பத்தின் மீது கோபம் கொள்கின்றான்.
தாராவை இழக்க மனமில்லாமல் ஆதங்கதோடு மதுவை தாரம் ஆக்கிக்கொண்டான்.
மது மாமன் மகன் மீது பாசமும் நேசமும் கொண்டு, ஒட்டுமொத்த குடும்பத்தாரின் அன்பையும் பெற்று மகிழ்வாக வளர்ந்த பெண்.
அதனாலோ என்னவோ வாழ்வின் பிற்பாதி அவளுக்கு கவலைகளை கொண்டு வந்து சேர்த்து விட்டது.
கடினமாக இருந்தாலும் தனது சித்தத்துவுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்தால் மது.
தன்னால் சித்தார்த்துக்கு எந்த வேதனையும் வர கூடாது என்றெண்ணி அனைத்தும் செய்தால்.
இருவரும் போட்டுக்கொண்டு ஒருவர் மீது மற்றொருவர் அன்பை செலுத்தினர்.
ஆதவன் மது சித்தார்த் தாரா அன்பு பிணைப்பு அருமை. ♥️
“சித்தாரா” அழகான பெயர் தேர்வு. 😍😍👸🏼
வாழ்த்துகள் சகோதரி 👏🏼🤝❤️