Loading

சக்கரை தழுவிய நொடியல்லவா!

அத்தியாயம் 33

சித்தார்த்துக்கு தெரியாமல் இங்கு நடந்த அத்தனையையும் விவரிக்க ஆரம்பித்தாள் சிந்து. “நீ அன்பு மாமாவோட வூட்டுலயே இருந்ததால உனக்கு அஸ்வந்த் அத்தான் மது எல்லாரும் ரொம்ப குளோஸ். ஆனா நான் அந்தாண்ட வந்தா அஸ்வந்த் அத்தான் என்ன கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. அதால நான் அங்க வரவே மாட்டேன். வந்தாலும் உங்களாண்ட எல்லாம் அதிக ஒட்டுதல் கிடையாது. ஆனா நீங்க ஐஞ்சு பேரும் ஒட்டுக்க விளையாடுறத பார்க்குறப்போ எனக்குப் பொறாமையாவும், ஆசையாவும் இருக்கும். ஆனா உங்களாண்ட ஒண்ட முடியாது என்னால.

மாமா பையன்றனாலயும், அவர் என்னைக் கிண்டல் பண்றதாலயும் அவர் மேல ஒரு பிடித்தம் இருந்ததோ என்னவோ ஆனா ஒருநாள் அஸ்வந்த் அத்தான் அகிலாவ பைக்கில இட்டுகினு போறப்போ எனக்குப் பொறாமையாகிடுச்சு. அஸ்வந்த் அத்தான் என்னாண்ட மட்டும் தான் இருக்கனும்னு ஆசை வந்துருச்சு. உங்க கூட எல்லாம் சேரனும்ன்ற ஆசையும் ஒரு காரணம் தான்.

என்னால அகிலாவ அஸ்வந்த் அத்தான் கூடப் பார்க்க முடியல. எதாவது பண்ணி அவர கட்டிக்கனும்னு நினைச்சு அம்மாவ நான் தான் ஏத்திவிட்டேன். ஆனா அந்தச் சம்மந்தம் முடியாம போனபோது உங்க எல்லார் மேலயும் எனக்கும், அம்மாக்கும் காண்டு.

அத்தோட அவசர அவசரமா அகிலா, அஸ்வந்த் அத்தான் கல்யாணமும் நடக்கவும் அது ரொம்ப அதிகமாக ஆச்சு. அப்பால அம்மா என்னையும் சம்மதிக்கவைச்சு எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சது.

அப்போ எங்கவூட்டுக்கு பக்கத்து  வூட்டு சரோஜா அத்தை மகள் உஷா உன்னைப் பார்த்து விரும்பிட்டாண்ணா. அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சுகினுச்சு. எனக்காக நீ பார்த்துப் பார்த்துப் பண்ணகினதுல அவ மனசுல விழுந்துட்ட. அவ அத்த(அதை) கொஞ்சமும் தயங்காம அவங்க வூட்டிலயும் சொல்லிட்டா.

அப்பத் தான் நீ எஸ்.ஐ எக்ஸாம் எழுதிப் பாஸ்ஸாகி டிரைனிங்க்கு போறதா இருந்துச்சு. அவங்களுக்கு சமமா நாம இல்லைனாலும் உனக்குக் கவர்மெண்ட் வேலை அதுவும் போலீஸ் வேலைனு தெரியவும் உனக்கு அவங்க பொண்ணை கொடுக்கச் சம்மதிச்சு, அம்மாக்கிட்ட பேசினாங்க.

அம்மாவ பத்தி சொல்லனுமா என்ன? நல்ல பணக்கார பொண்ணுனு.. அந்தப் பொண்ணை உனக்குக் கட்டி வச்சே ஆகனும், அது மூலமா நம்மளும் முன்னுக்கு வரலாமுனு நினைச்சிக்கினாங்க. மதுக்கு உங்களையும், உங்களுக்கு மதுவையும் பிடிக்கும்னு தெரிஞ்சும் தான் நானும், அம்மாவும் உனக்கு உஷாவ கட்டிவைக்க நினைச்சோம் காரணம் வன்மம் தான் கண்டிப்பா.

அப்போ ஏற்கனவே நானும் கண்ணாலம் ஆகி வீட்டவிட்டு என் புருஷன் வீட்டுக்குப் போயிருக்க அம்மாக்கும், அப்பாவுக்கும் தனிமையில உன்னை அவங்க கூடவே வச்சிக்கனும்னு ஆசைப்பட்டாங்க. இப்போ இதுவும் சேர்ந்துச்சு. அப்போ அந்த நேரம் தான்” என அப்போ நடந்ததை கூற ஆரம்பித்தாள் சிந்து.

சரோஜா “ஆனந்தி! இன்னா இன்னும் மாப்பிள்ளை உன் அண்ணன் வூட்டுலயே இருக்கார். வயசு பொண்ணு இருக்குற வூட்டுல”

ஆனந்தி “அவேன் அந்தாண்டயே பழகிட்டான் அத்தாச்சி. கல்யாணத்துக்கு அப்பால நம்ம வூட்டுக்கே வந்துருவான்”

“நீ இன்னா இப்படீருக்க ஆனந்தி. எதுக்கு புள்ளைய இப்படி அந்தாண்ட விட்டுட்டு இருக்க. எனக்கு இன்னமோ எதுவும் சரியா படல. ஏற்கனவே கேள்விபட்ட விஷயம் தான் ஆனா அது அப்போ ஒன்னும் தோனல ஆனா இப்போ என் பொண்ணுக்கு பேசினதுக்கு அப்பால எனக்கு இதெல்லாம் பிடிக்கல”

“இன்னா அத்தாச்சி. இன்னா விஷயம்?”

“ம்ம் உன் அண்ணன் மகளுக்குக் கொரானா வந்துச்சே அப்போ மாப்பிள்ளை தான அவள பார்த்துக்கிட்டாரு.. ஏன் அத்தனை பேர் வூட்டுல இருந்தாங்க இவருக்கு மட்டும் இன்னா வந்துச்சு?”

“இன்னா அத்தாச்சி சொல்றீங்க?” என அதிர்ச்சியாகக் கேட்டார். அவருக்கு அது புது விஷயமல்லவா. அவர் தான் கொரானா சமயம் அவர் உயிர் மட்டுமே முக்கியமென இருந்தவரல்லவா!

“இன்னா சொல்ற உனக்கு அந்த சேதி தெரியாதா?”

“இன்னானு விளங்கலயே அத்தாச்சி”

“உங்க அண்ணன் மக மதுவுக்கு கொரானா வந்தப்போ மாப்பிள்ளை தான் கூடவே இருந்து பார்த்துக்கிட்டாராம். இரண்டு பேரும் ஒரே ரூம்ல தான் தங்கிக்கினாங்க. அதுல தான் அவருக்கும் கொரானா வந்துருக்கு”

“அடியாத்தே! எனக்கு மெய்யாலுமே தெரியாது அத்தாச்சி. அத்தனை பேருக்கும் அவங்கவங்க உசிரு முக்கியம்.. அப்போ என்புள்ள மட்டும் அவங்களுக்கு கிள்ளுக்கீரையா?”

“அதான் பாரு. வயசு பொண்ணையும், பையனும் ஒட்டுக்கா ஒரே ரூம்ல விடலாமா? அப்போ அது உங்க குடும்ப விஷயம்னு நாங்க கண்டுக்கல.. ஆனா இப்போ என் மகளுக்குப் பேசினதுக்கு அப்பாலயும் மருமகன் அந்த வூட்டுல இருக்குறது எவ்வூட்டுக்காரருக்கு பிடிக்கல. நீ மாப்பிள்ளைய இனி நம்ம வூட்டுலயே நிறுத்திக்கோ. அங்க வுடாத” எனக்கூற,

“சரிங்க அத்தாச்சி” எனக்கூறி வீட்டிற்கு வந்தவருக்குக் கொஞ்சமும் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. ‘எப்படி.. எப்படி.. ஒரே ரூம்ல’ எனப் பலவாறு யோசித்துக்கொண்டே இருந்தார். இவ்விஷயம் இளங்கோவுக்கு தெரியுமா என்பதும் அவருக்குத் தெரியவேண்டி இருந்தது.

அவர் வந்ததும் கேட்க, அவருக்கும் அவ்வளவு தெரிந்திருக்கவில்லை, மேலோட்டமாகத் தெரிந்து இருந்தது. அதில் மேலும் கோபம் பொங்கியது.

“இன்னா நெஞ்சழுத்தம் பாத்தியாயா? எங்காத்தாள நம்பி தான நான் வுட்டேன் என்புள்ளைய இப்படி சீக்குக்காரி பக்கத்துலவுட்டு அவனுக்கும் சீக்கு ஒட்டி ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிருந்தா?”

“நம்ம புள்ளை வுட்டது நம்ம தப்பு. இப்ப கத்தி என்ன பண்ண?”

“இனியும் நான் வுட மாட்டேன். இனி அந்த வூட்டு பக்கமே என்மகன் போவக் கூடாது. இனி நம்மளோட தான் இருக்கனும். இன்னைக்கு இருக்குயா அவங்களுக்கு” எனக் கலைந்து கிடந்த முடியை இழுத்து கொண்டையை போட்டுக்கொண்டு, முந்தாணையை இழுத்து சொருகி கிளம்ப,

“இந்தாடி எங்க போற?”

“எங்காத்த வூட்டுக்கு. வந்துருறேன் நீ படுயா”

“அய்ய. படுடி இந்நேரம் எங்க போற. படு. எதுனாலும் காத்தால பார்த்துக்கலாம். நம்மபுள்ளைய நம்ம கைக்குள்ள வச்சி வளர்க்க உனக்கு துப்பில்ல நானும் உன் பேச்சை கேட்டு வுட்டுப் போட்டேன். இப்போ வந்து சலம்புறா. படுடீ” என்ற இளங்கோ, காலையில் தன் மனைவி செய்யப் போகும் அனர்த்தம் புரியாது படுத்துவிட்டார்.

காலையில் இளங்கோ கடைக்குக் கிளம்பவும் முதலில் அன்பு வீட்டுக்குத் தான் சென்றார் ஆனந்தி. அஸ்வந்த் கல்யாணத்துக்கு கூட வரவில்லை, சிந்து கல்யாணத்துக்கும் சொல்ல வரவில்லை, ஆனால் இன்று அவர் வந்திருப்பது ஆச்சரியம் தான். ஆனாலும் வீட்டுக்கு வந்தவர்களை அவமதிப்பது தவறு என நினைத்த ஈகை ஆனந்தியின் நோக்கம் அறியாது,

“வாங்கண்ணி. உட்காருங்கண்ணீ. டீ கொண்டு வரேன் இருங்க” எனக்கூற,

“எவ்வூட்டுல டீத்தண்ணிக்கு வக்கில்லாமயா இந்தாண்ட வந்தேன். உன் புருசனையும், எங்காத்தாளையும் கூப்பிடு” எனக்கூற, அன்று பள்ளி விடுமுறையால் வீட்டில் இருந்த அன்புவையும், வைரம் பாட்டியையும் அழைத்து வந்தார் ஈகை.

வைரம் “வாடி என் சீமசித்தராங்கி! இன்னைக்கு தான் ஆத்தாள தேடுச்சோ? இத்தனை நாளா ஆத்தானு ஒருத்தி இருக்குறது கண்ணுக்குத் தெரியல. சரி என்னைய தான் தெரியல உன் புள்ளையவுமா தெரியல? என் பேரன் ஊருக்குப் போறன்னைக்கு கூட வராம அப்படி என்னதான் கோவமோ? கொஞ்சமாச்சும் புள்ளனு உனக்கு பாசம் இருக்கா?” என, ஆனந்தியின் நிலை தெரியாமல் சிங்கத்தின் வாயிலில் தலையைக் கொடுத்தார்.

“தப்புத்தான். தப்புத்தான். எங்காத்தானு உன்னய நம்பி தான என் புள்ளைய வுட்டுப்புட்டேன். வுட்டதுக்கு அவன எங்கிட்ட இருந்து மொத்தமா புடிங்கிட்டிங்கல. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா?” எனக் கோபமாகக் கேட்க, அத்தனை பேரும் அதிர்ந்தனர்.

வைரம் “என்னாடி வாய் துடுக்கா வருது வார்த்தை.. என்னா? இப்போ என்னா குறைச்சல் உன் மகன நாங்க பார்த்துக்கிட்டதுல? இல்ல குறைனு எம்பேரன் உன்கிட்ட வந்து நின்னானா?”

“அதெப்புடி வருவான்? அதான் அவன மயக்கி இங்கனயே புடிச்சு வைச்சுக்கிட்டிங்களே. என்புள்ளைய நீ பாத்துப்பனு விட்டேன் தான் அதுக்கு உங்களுக்கு அடிமையாவா வுட்டேன்? ஒரு அடிமை சிக்கிருச்சுனு கூடவே வச்சிக்கிட்டிங்கல”

ஈகை “இங்க யாரும் மயக்கவும் இல்ல, அடிமையாக்கவும் இல்ல. பார்த்து வார்த்தைய விடுங்கண்ணீ”

“இந்தாரு நான் உன்னாண்ட பேசல. நான் எங்காத்தட்ட பேசுறேன்”

வைரம் பாட்டி “புள்ள மேல இம்பூட்டு அக்கறையா இன்னைக்கு வந்து குதிக்கிறவ, வளர்த்துருக்கனும். பெத்துப் போட்டது மட்டும் போதுமுனு போய்ட்ட புருஷன் கூட. அவ பால்குடுத்து வளர்த்தா உன்புள்ளைய. அவள பேச ஒரு தகுதியும் உனக்கில்ல”

“அதான என்னைக்கு நீ மக’னு எனக்குச் சாதகமா பேசின, இன்னைக்கு பேச. ஆமா அப்போ வுட்டுட்டேன் எம்புள்ளைய, தப்பு தான் ஆனா அதுக்கு அப்பறமும் என்புள்ளைய எத்தனை தபா வூட்டுக்கு கூப்பிட்டேன். வந்தானா அவன்? இல்ல நீங்கத் தான் பெத்தவ கிட்ட போனு அனுப்பினிங்களா? இப்போ வரக்கும் அடிமையா தான எம்புள்ளைய வச்சிருக்கீங்க”

“இப்ப யாரு உன் புள்ளைய அடிமையா வச்சிருக்கா. என் புள்ள மாதிரி தான் அவன் இந்த வீட்டுல இருக்கான்” எனக் கோபமாகக் கூறினார் அன்பு.

“அப்போ உன் மவ கொரானாவ இழுத்துட்டு வந்தப்ப உன்புள்ளைய விட்டு அவளுக்கு சேவகம் செய்ய வேண்டியது தான.. இன்னாத்துக்கு எம்புள்ளைய வுட்டு சேவகம் பண்ண வச்சி அவனுக்கும் அந்த நோய இழுத்துவுட்ட. அவனுக்கு எதாவது ஆனா பெத்தவளுக்கு புள்ளைய கொடுப்பியா நீயி?” அத்தனை பேரும் இது என்னடா புது குழப்பம் இத்தனை நாளுக்குப் பிறகு எனப் பார்த்தனர் மது உட்பட.

“நாங்க யாரும் அவன பார்த்துக்க சொல்லல அவனா தான்” என்றார் தயக்கமாக.

“அவன் சொன்னா நீங்களும் வுட்டுடுவிங்களா? அதென்னா வயசு பையனவுட்டு உன் மவள பார்க்கச் சொல்லுறது? உன்பொண்டாட்டிய வுடு என் மவன இன்னாத்துக்கு வுட்ட?”

அவர்களுக்குப் பேச்சு வரவில்லை. அந்தநேரத்தில் அவர்களுக்கு அந்தச் சூழ்நிலையும், மதுவின் நிலைமையும் எதையும் யோசிக்க விடவில்லை. ஆதனால் இன்று இப்படியொரு பிரச்சனை வரும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

“என் மவன அவளோட ஒரே ரூம்க்குள்ள வுட்டுருக்க? என்புள்ளைய வளைச்சி போட்டு உன் சீக்காளி மவள என்மகன் தலையில கட்ட உன் பொண்டாட்டி பிளான் போட்டுக் குடுத்தாளோ? உன் மகள கட்டிக்கொடுக்க வக்கில்லாம ___ கொடுத்தியோ? இதுக்கு..” என அசிங்கமா பேச, இடிந்து போய் அமர்ந்தனர் அன்புவும், வைரம் பாட்டியும். ஈகையும், மதுவும் நெஞ்சில் கைவைத்து சுவரோரம் சாய்ந்து கண்ணீர் விட,

அப்போது தான் உள்ளே வந்த அஸ்வந்த் “அத்தை! வார்த்தைய பார்த்து வுடுங்க. நாங்க ஒன்னும் யாரையும் மாதிரி கீழ்தரமானவங்க கிடையாது”

“யாரையும் மாதிரினா யாரடா சொல்ற? உங்காத்தா பிளான் பண்ணி தாண்டா மகள காட்டி என் மகன வசியம் பண்ணி வச்சிருக்கா.. இந்தா நிக்கிறா பாரு இந்த சீக்குக்காரி அவளும் லேசுப்பட்டவ கிடையாது.. என் மவனோட ஒட்டிட்டே திரியுருதென்ன.. பெத்த ஆத்தா என் முன்னாலயே அவனோடு சோடி போட்டுச் சுத்தறதென்ன”

அஸ்வந்த் “என் அம்மாவை, தங்கச்சிய பத்தி பேசுற வேலை வேணாம். எதுவா இருந்தாலும் உங்க புள்ளைக்கிட்ட கேளுங்க.. அவன் தான அவள கூட்டிட்டு போனான் என் தங்கச்சிய மட்டும் சொல்லி”

“பொட்டச்சிய அடக்க ஒடுக்கமா வளக்க துப்பில்ல. வந்துட்டான் என்ன பேச, ராசாவாட்டம் எம்புள்ள இருக்குறனால வளச்சு போட நினைச்சிங்களோ.. கட்டிக்கொடுக்க வக்கில்லனா நாண்டுக்கிட்டு சாவுங்க அதுக்கு எம்புள்ளைக்கு ___ கொடுத்திருக்கீங்க”

“இன்னொரு வார்த்தை பேசினிங்க இங்க நடக்குறதே வேற. உங்க மகனுக்கு யாரும் இங்க மாமா வேல பார்க்கல. கிளம்புங்க இனி உங்ககிட்ட பேசி எங்க மதிப்ப நாங்க கொடுக்க விரும்பல”

“அப்படினா இனி என்புள்ளைய இத்தோட விடுங்க நான் பார்த்துக்கிறேன். அத வுட்டுட்டு அந்த சீக்குக்காரிய என் மவன் தலையில கட்டனும்னு எதாவது பிளான் பண்ணி வந்தீங்க அசிங்கப்படுத்திருவேன்”

“இன்னும் அசிங்கப்படுத்த என்ன இருக்கு? என் தங்கச்சிய ஜாம் ஜாம்னு கட்டிக்கொடுக்க எங்களுக்குத் தெம்பு இருக்கு. யாரையும் வளைச்சு போடனும்னு இல்ல எங்களுக்கு. ஆனா உங்க மகன் தான் என் தங்கச்சிய கட்டுவேனு சொல்றான். நீங்க எதுனாலும் உங்க மகன் கிட்ட பேசிக்கோங்க. கிளம்புங்க” என வாசலை நோக்கிக் கையைக் காட்ட,

“அவன என்னத்த காட்டி மயக்கினாளோ? அதான் மயங்கிருப்பான். அதுக்காக இவள என் மருமகளா ஆக்குவேனா? இனி என்புள்ளைக்கும் உங்களுக்கும் எந்த ஒட்டுமில்ல ஒரவுமில்ல. இனி என்புள்ளைய நான் பார்த்துக்குவேன். அவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணனும்னு எனக்குத் தெரியும்”

“நல்லது. வாசல் அந்தப்பக்கம் இருக்கு கிளம்புங்க திரும்பி வந்துருராதீங்க”

“நான் ஏண்டா வர போறேன்? எனக்கு இன்னா தேவைங்குறேன்? உங்க தேவைக்கு நீங்க தான் என்புள்ளைய புடிச்சு வச்சிருக்கீங்க. இத்தோட என்புள்ளைய விட்டுடுங்க” என வாயில் வந்த அசிங்கமான வார்த்தைகளை எல்லாம் போட்டுப் பேசிவிட்டு போக, இதுவரை இடிந்து போய் அமர்ந்த அன்பு நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்திருந்தார்.

அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, மருத்துவர் மாரடைப்பு எனக்கூறிவிட்டார். ஆனால் சரியான நேரத்திற்கு அழைந்து வந்து மருத்துவமனையில் சேர்த்ததால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. குடும்பமே இடிந்து போய் இருந்தது. அனைவரையும் தூணாக இருந்து காத்தது பூபாலன் தான் கூடவே எழிலரசியும், ஆதவனும். அவர்கள் மட்டும் இல்லையென்றால் இந்தக் குடும்பம் அன்றே உடைந்து, நொறுங்கி போயிருக்கும்.

ஈகையை சமாளிக்கவே முடியவில்லை அழுது அழுது மயங்கும் நிலைக்கே சென்றுவிட்டார். அஸ்வந்த் முதலில் மறுகினாலும் தான் தான் அனைவரையும் தேற்றிக் கொண்டுவர வேண்டும் என நினைத்தவன் வெகுவாக முயன்று தன்னை தானே தேற்றி, வெளிகொண்டு வந்து அனைவரையும் தாங்கிப் பிடித்தான்.

மது சொல்லவே வேண்டாம். அவளுக்கு அவளால் தான் தன் அப்பாவுக்கு இந்த நிலைமையெனத் தன்னையே நொந்து கொண்டாள். அதுவும் அஸ்வந்த் அன்று சபையில் வைத்துச் சித்தார்த் மதுவைத் தான் கட்டுவேன் எனக் கூறினானெனக் கூறியது அவளைப் பொறுத்தவரை புது தகவல். நியாயமாக இது தெரிந்தபோது அவள் மகிழ்ந்திருக்க வேண்டும்.

தான் விரும்பியவன் தன்னை விரும்பியது மட்டுமல்லாமல், தன்னைச் சார்ந்தவர்களிடம் தங்களது திருமணம்வரை பேசியிருக்கிறான் என்றால் அவள் மனம் எவ்வளவு உவகை கொள்ளும் ஆனால் இந்த நிலையில் அவள் மனம் நொந்தது மட்டும் தான் மிச்சம்.

இணைய வாய்ப்பில்லை என்ற பிறகு எதற்காக இந்தப் பிடித்தம் இருவருக்கும் வர வேண்டும்? எதற்காக இப்படி மனம் முழுக்க காதல் இருந்தும் இணைய முடியாமல் வலியில் துடிக்க வேண்டும்? இதற்கு அவர்களுக்கிடையில் இந்தக் காதல் வராமலே இருந்திருக்கலாம் அல்லவா? ஏன் அந்தக் கடவுள் இருவர் மனதையும் குழப்பி, இப்படி தவிக்க விடுகிறார்?

தன்னாலும், தன் காதலாலும் தான் இன்று தன் தகப்பன் இந்த நிலையில் இருக்கிறார் என்பது அவளுக்கு தாங்க இயலாத வலியைத் தந்தது. தந்தையைக் காயப்படுத்தி, அசிங்கப்படுத்தி தான் தன்னவன் தனக்கு கிடைக்க வேண்டும் என்றால், காலம் முழுக்க அவன் நினைவில் கூட வாழலாம் ஆனால் மரியாதை இல்லாத இடத்தில் தன் தகப்பன் தலைகுணிந்து நிற்கக் கூடாது என்னும் முடிவுக்கு வந்துவிட்டாள் தான் ஆனால் அதுவும் அவளைக் கொல்லாமல் கொன்றது.

காதலனையும் இழந்து, தகப்பனையும் இந்த நிலையில் பார்ப்பது உயிர்வலியாக இருந்தது. ஆனாலும் அவள் வேண்டுதல் தந்தை நல்லபடியாகத் திரும்பி தன்னிடம் வர வேண்டும் என்பது மட்டும் தான்.

இது மட்டும் தான் ஆதவனுக்கும் மதுக்கும் திருமணம் நடக்க காரணமா? இல்லை இன்னும் வேறு எதுவும் நடந்ததா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
13
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. இன்னும் வேற இருக்கா. சித்தார்த் ரியாக்ஷன் எப்படி இருக்கும். இதெல்லாம் தெரிஞ்சு இப்போ நீ ஃபீல் பண்ணி என்ன போகுது சித்து. மது பாவம் தான்.

    1. Author

      உண்மை தான்.

      மிக்க நன்றி😍

  2. சிந்துவின் ஆசையில் தவறில்லை ஆனால் அவளுக்கு நல்வழி போதித்து வழிநடத்தாமல் பழி வெறியை தூண்டி விட்டுள்ளார் ஆனந்தி.

    எத்தனை கீழ்த்தரமான வார்த்தைகள். இத்தனைக்கு பிறகும் சித்தார்த் முகத்திற்காக கூட மதுவை அந்த வீட்டிற்குள் செல்ல அனுமதித்திருக்க கூடாது அன்பு குடும்பத்தினர்.

    கல்யாணமே நடக்காது என்பது போல் என்னவெல்லாம் பேசியுள்ளார். அன்பு குடும்பத்தினர் ஆதவ் மது திருமண ஏற்பாட்டை செய்ததில் எந்த தவறும் இல்லை.

    மதுவின் மனம் அப்பாவிற்காகவும் அன்புக்குரியவனுக்காகவும் யோசித்து மருகியுள்ளது.

    இன்னும் என்னவெல்லாம் நிகழ்ந்ததோ?