Loading

காதல் 8

“நமக்குக் கிடைச்ச பெரிய கிப்ட் இந்த வாழ்க்கை… இதோட பர்பஸ் சந்தோசமா வாழுறது மட்டும் தான்… அப்பிடி இருக்குறப்ப ஏன் தேவையில்லாத சுமைகளை ஏத்துக்கிட்டு அதை ட்ரபிள் ஆக்கிக்கணும்? பேரண்ட்ஸ்ல ஆரம்பிச்சு லைஃப் பார்ட்னர், கிட்ஸ்னு ஒவ்வொருத்தரோட ஆசைக்காகவும் நம்மளை கட்டுப்படுத்திக்கிட்டு, நமக்குப் பிடிச்சதை தியாகம் பண்ணி வாழப்போற வாழ்க்கைல என்ன சந்தோசம் இருக்க முடியும்னு எனக்குப் புரியல… இந்த சுமை எதுவுமில்லாத வாழ்க்கை எவ்ளோ அற்புதமானது தெரியுமா? ஐ ஜஸ்ட் வாண்ட் டு ஷோ திஸ் டு ஜெர்ரி… அப்பா, அக்காவோட லைஃப்னு பயந்து பயந்து ஒவ்வொரு தடவையும் அவளே தனை ஒரு வளையத்துக்குள்ள அடைச்சுக்கிறா… இதுவா லைஃப்?”

 

-டாம்

 

பல்கலைகழகத்தில் செமஸ்டர் ஆரம்பித்துவிட்டது. ஆர்யாவும் டாமும் அதில் மும்முரமாகிவிட ஆர்யாவிடம் தவறாக நடக்கப் பார்த்ததற்காகவும், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளைப் பயன்படுத்தியதற்காகவும் ரவியின் மீது பதியப்பட்ட வழக்கில் அவனுக்கு ஒரு மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

 

தண்டனைக்காலம் முடிந்தாலும் அவனது வேலை போய்விடும் ஆபத்து உண்டு என்று டாம் சொன்னது ஆர்யாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அவனுக்கு வேலை இல்லை என்றால் இந்தியாவக்குச் சென்று தன்னைப் பற்றி தந்தையிடம் அவதூறு பரப்புவானே என உள்ளுக்குள் அவள் பயந்து கொண்டிருந்தாள்.

 

அந்தப் பயம் முதல் நாள் பல்கலைகழகத்தில் வகுப்பில் அமர்ந்ததும் மறைந்து போனது. இந்தியக்கல்விமுறைக்கு முற்றிலும் மாறாக மாணவர்களை நட்பாக நடத்தும் பேராசிரியர்கள், புத்தகமே உலகம் என்று மாற்றிவிடாமல் அவர்களைச் சிந்திக்க தூண்டும் கல்விமுறை, பல்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களோடு இணைந்து படிப்பது என அனைத்தும் சேர்ந்த சூழல் அவளுக்குள் ஒரு தெளிவை விதைத்தது.

 

எதுவாயினும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் அவளுக்குள் மெதுவாய் சுடர் விட ஆரம்பித்தது. அவளுக்கு வகுப்பில் சில தோழமைகளும் கிடைத்தார்கள்.

 

இந்தியாவில் தனக்கு நட்பு வட்டம் கிடையாதென ஆர்யா டாமிடம் சொன்னபோது அவன் கொடுத்த அறிவுரை தான் ஒரு மனிதனுக்கு நட்பு எத்தகைய அத்தியாவசிய உறவு என்பது.

 

அவள் நட்புக்காக ஒரு விரலை நீட்டினால் போதும், நட்பாக பழக விரும்பும் சகமனிதர்கள் தங்கள் கரத்தையே கொடுப்பார்கள் என்றான் டாம்.

 

அப்படி முதல் நாளிலேயே அவளுக்குக் கிடைத்த தோழமைகள் தான் மதுரிமாவும், நவீனும். இருவருக்கும் பூர்வீகம் போபால்.

 

நொய்டாவில் செய்து கொண்டிருந்த ஐ.டி வேலையை விட்டுவிட்டு இருவரும் டெக்சாஸ் பல்கலைகழகத்தில் படிக்க வந்துள்ளனர். இருவரும் காதலர்கள் என்பது கூடுதல் தகவல்.

 

இருவரும் ஸ்காலர்ஷிப்புக்காக விண்ணப்பிக்கவிருப்பதாகவும் கூறினர். கூடவே அதற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகவல்களை ஆர்யாவுக்கும் கூறினார்கள்.

 

அவள் பேயிங் கெஸ்டாக தங்கியிருப்பதாகக் கூறவும் தாங்கள் இருவரும் தங்கியுள்ள வீட்டுக்கு வரவேண்டுமென அழைப்பும் விடுத்தனர்.

 

டெக்சாஸ் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்கள் அங்கே உள்ள UT Outpost மூலமாக பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள், அன்றாட தேவைக்கான பொருட்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் உடைகளை வாங்கிக்கொள்ளலாம். அதுவும் இலவசமாக.

 

கொஞ்சம் வசதியுள்ள மாணவர்கள் தாராள உள்ளத்துடன் கொடுக்கும் நன்கொடை மூலமாகவும், தன்னார்வ டொனேசன் ட்ரைவ்கள் மூலமாகவும் இந்த UT outpost இயங்கி வருகிறது.

 

அதற்காக நன்கொடை அளிப்பது பற்றியும் இருவரும் பேசினர்.

 

கூடுதலாக UT outpostல் வாலண்டியராகப் பணியாற்ற தன்னோடு வருகிறாயா என்று மதுரிமா கேட்டதும் சரியென தலையாட்டிவிட்டாள் ஆர்யா.

 

அவளால் பண உதவி எதுவும் அளிக்க முடியாது. ஆனால் இலவசமாகப் பணியாற்ற முடியுமே! பணி நேரம் வெறும் ஒன்றரை மணி நேரம் தானாம்.

 

இது அனைத்தையும் வீட்டுக்கு வந்ததும் டாமிடம் ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டாள் ஆர்யா.

 

“ஆஸ்டின் வந்து இத்தனை நாள் ஆகியும் ஒன்னுமே தெரியாம இருந்திருக்கேன் பாரு டாம்… இந்த வீக்கெண்ட் அவங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணிருக்காங்க… நம்ம போவோமா?”

 

“உன் கூட எங்க வேணும்னாலும் வர நான் ரெடி… பட் என்னை அவங்க கிட்ட யார்னு இன்ட்ரோ பண்ணுவ?”

 

ஆர்யா ஒரு நொடி தடுமாறினாள். பின்னர் தெளிந்தவளாக “என் ஃப்ரெண்ட்னு சொல்லுவேன்” என்றாள் அமர்த்தலாக.

 

“ஃப்ரெண்டா? வெறும் ஃப்ரெண்ட் மட்டும் தானா?”

 

புருவத்தை ஏற்றியிறக்கி அவன் கேட்ட விதத்தை ரசித்தவள் வெறுமெனே முறுவலிக்க பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பது போல அமர்ந்திருந்தான் டாம்.

 

ஆர்யா சங்கோஜத்துடன் சிரித்தவள் “ஃப்ரெண்ட் தான டாம்?” என அவனிடம் கேட்க அவனது தலை மறுப்பாக அசைந்தது.

 

“உன்னை வெறும் ஃப்ரெண்டா மட்டும் நான் பாக்கல… உன்னோட அழகை ரசிக்க எனக்குப் பிடிக்கும்… உன்னை ஹக் பண்ணுறப்ப ஷிவர் ஆகி உன் ஹார்ட்பீட் ரெய்ஸ் ஆகுமே அந்த மொமண்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜெர்ரி… உன் முகத்துல மூக்கு பக்கத்துல குட்டியா இருக்குதே இந்த மச்சம் அதுல கிஸ் பண்ணணும்ங்கிறது என்னோட கனவு தெரியுமா?”

 

டாம் ரசனையுடன் சொல்லவும் ஆர்யா வாயடைத்துப் போய்விட்டாள். நீ அழகி என்கிறான், முத்தமிட ஆசையாக உள்ளது என்று வேறு சொல்கிறான், ஒருவேளை இவனும் ரவியைப் போல மாறிவிடுவானோ?

 

முதலில் அவனது பேச்சில் உண்டான சிலிர்ப்பு அடங்கி பயம் வந்தது மனதிற்குள்.

 

அவள் சிந்தனை போன திசையை பளிங்கு போல முகம் காட்டிக்கொடுத்துவிட டாம் குறும்போடு அவளது நாசியை விரல்களால் நிமிண்டினான்.

 

“உடனே பயந்துடாத ஜெர்ரி… உன்னோட விருப்பம் இல்லாம அப்பிடி எல்லாம் நடந்துக்க மாட்டேன்… பட் என் மனசுல இருக்குறத ஓப்பனா சொல்லலைனா ஒரு மாதிரி ஃபீல் ஆகுது… அதான் பூசி மெழுகாம சொல்லிட்டேன்… பட் இந்த கேரண்டி வாரண்டி எல்லாம் சிச்சுவேசனைப் பொறுத்து மாறும்”

 

கடைசி வாக்கியம் கொஞ்சம் அபாயமானது என்றாலும் ஆர்யா நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளை ஓரக்கண்ணால் கவனித்தவன்

 

“நீ மட்டும் இந்தியன் கேர்ளா இல்லாம அமெரிக்கன் கேர்ளா இருந்திருந்தனா கண்டிப்பா உன்னை என்னோட லிவின் பார்ட்னர் ஆக்கிருப்பேன்” என்றான் இலகுவாக.

 

“வாட்?” ஆர்யாவின் கண்களில் கலவரம்.

 

“யாஹ்! யூ ஆர் தி பெர்ஃபெக்ட் பார்ட்னர் மெட்டீரியல் ஜெர்ரி” என்றான் அவன் சாதாரணமாக.

 

“அப்பவும் கல்யாணம் பண்ணிக்கணும்னு உனக்குத் தோணல பாரேன்” அதிருப்தியில் பொருமினாள் ஆர்யா.

 

“கல்யாணமா? அதுல எல்லாம் எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல… மேரேஜ் ப்ரிங்ஸ் லாட் ஆப் ரெஸ்பான்சிபிளிட்டீஸ்… அது நிறைய பிரச்சனைகளையும் சேர்த்தே கொண்டு வரும்… எனக்கு ஃபேமிலி லைஃப்ல பெருசா இண்ட்ரெஸ்ட் இல்ல ஜெர்ரி”

 

“அப்ப லிவின் மட்டும் எதுக்காம்?” பற்களைக் கடித்தாள் ஆர்யா

 

“எந்த கமிட்மெண்டும் இல்லாம என் கூட ஒரு பொண்ணு வாழுறதுக்கான டெம்பரரி அரேஞ்ச்மெண்ட் அது… நானும் ஆசாபாசமுள்ள ஆண்… எனக்கு பிசிக்கல் நீட்ஸ் இருக்கும்ல?”

 

“சீ!”

 

“என்ன சீ? நீ பசிக்குறப்ப சாப்பிடுற… தாகம் எடுக்குறப்ப தண்ணி குடிக்குற… அதே மாதிரி செக்சும் ஒரு உடல் தேவை தான்… பட் அதுக்காக ஒரு பொண்ணு கூட வாழ்க்கை முழுக்க பயணிக்கணும், அவளை மேரேஜ் பண்ணிக்கணும்னா, தட் இஸ் நாட் மை கப் ஆப் டீ ஜெர்ரி”

 

அவனது நாட்டு கலாச்சாரத்தை ஒட்டி டாம் பேசினாலும் ஆர்யாவால் அதை ஏற்க முடியவில்லை.

 

“பசி எடுக்குதுனு கண்டதையும் சாப்பிட முடியாது டாம்… சாப்பாட்டைக் கூட சரியான அளவு, சரியான இடத்துல சாப்பிடலனா அது விசமா மாறிடும்… அதுக்கும் சில கட்டுப்பாடு அவசியம்… அதே மாதிரி உடல் தேவைக்கும் சில கட்டுப்பாடு இருக்கணும்”

 

அவள் கறாராகச் சொல்லவும் தோளைக் குலுக்கினான் டாம்.

 

“தட் இஸ் யுவர் பெர்சப்சன் ஜெர்ரி” என்றவனை அவள் முறைக்கவும் கொஞ்சம் இறங்கி வந்தான்.

 

“நான் உன்னை அந்த மாதிரிலாம் கற்பனை கூட பண்ணல ஜெர்ரி… பட் சம்டைம்ஸ் நீயும் அமெரிக்கனா இருந்துருக்கக்கூடாதானு ஒரு ஏக்கம் வரும்… அதை ஓப்பனா சொன்னேன்”

 

ஆர்யா அரைகுறையாகச் சமாதானமானாள்.

 

“நீ என்னைப் பத்தி அப்பிடிலாம் யோசிச்சது இல்லயா ஜெர்ரி?”

 

“நீ பெர்ஃபெக்ட் ஹஸ்பெண்ட் மெட்டீரியல்னு யோசிச்சது உண்டு… பட் உனக்குத் தான் ஃபேமிலி லைஃப்ல இண்ட்ரெஸ்ட் இல்லயே… இன்ஃபாக்ட் இப்ப எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா குடும்பம்னாலே குழப்பமும் சண்டையும் தானோனு தோணுது… கல்யாணம்னு யோசிச்சாலே பயம் வருது… உன் கூட சேர்ந்து நானும் உன்னை மாதிரியே யோசிக்குறேன் போல”

 

“அந்த லிவின் விசயத்துல என்னை மாதிரி யோசிச்சனா ஐ வில் பி த லக்கியஸ்ட் மேன் இன் த யூனிவர்ஸ்”

 

கள்ளத்தனத்தோடு டாம் கூறவும் “அதுல எப்பவுமே நான் உன்னை மாதிரி யோசிக்கமாட்டேன் டாம்” என்று வீறாப்பாக பதிலளித்தாள் ஆர்யா.

 

டாம் குறுஞ்சிரிப்போடு தலையசைத்தபோது கூட அவனுக்குத் தெரியாது அவன் சொன்ன சூழல் வெகு சீக்கிரத்தில் வரும் என்பது.

 

அவன் உதவி பேராசிரியராகப் பணியாற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் இருந்த பொறுப்புகள் பின்னர் அவனை இழுத்துக்கொள்ள அந்த வாரம் முழுவதும் டாமிற்கு வேலை மும்முரத்தில் கழிந்தது.

 

வாரயிறுதியில் மதுரிமாவும், நவீனும் தங்கியிருக்கும் வீடு அமைந்துள்ள டங்கன் லேன் பகுதிக்கு ஆர்யாவை அழைத்துச் சென்றான் அவன்.

 

ஆர்யாவைக் கண்டதில் இருவரும் மகிழ்ந்தனர். அவளோடு நின்ற டாமைக் கண்டதும் குறுகுறுவென பார்த்தபடி இருவரையும் வீட்டுக்குள் வரவேற்றனர்.

 

ஆர்யா அவர்களிடம் டாமை தனது நண்பன் என அறிமுகப்படுத்தி வைத்த பிறகும் அந்தக் குறுகுறு பார்வை அகலவில்லை. டாம் தானாக முன்வந்து டெக்சாஸ் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுவதாகக் கூறியதும் குறுகுறு பார்வை மாறி பணிவாகப் பேச ஆரம்பித்தனர் இருவரும்.

 

பழச்சாறு, டெசர்ட் என விருந்துபசாரம் ஒரு பக்கம் நடந்தேறியது. மதுரிமாவும் நவீனும் காதலர்கள் என்பதால் அவர்களிடையே இயல்பாக அமைந்த நெருக்கம் அவர்களது அணைப்பிலும் அவ்வபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட இதழணைப்புகளிலும் வெளிப்பட்டது.

 

டாம் அதை பார்த்துவிட்டுக் கேலியாக ஆர்யாவின் காதைக் கடித்தான்.

 

“எங்க நாட்டுல அது பழக்கமில்ல, இது பழக்கமில்லனு சொன்னியே ஜெர்ரி… ஒருவேளை இவங்க நீ சொன்ன மாதிரி இந்தியன்ஸ் இல்லையோ?”

 

“இந்தியன்ஸ் தான்… அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்… அண்ட் ஒன் மோர் திங், தெயர் ஹக் அண்ட் கிஸ் ஆர் நாட் பேஷனேட்”

 

டாம் புருவத்தை ஆச்சரியமாக உயர்த்தி “வாவ்! நான் உன்னை ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர்னு நினைச்சேன்… பட் உனக்கு பேஷனேட் ஹக், கிஸ் பத்திலாம் தெரிஞ்சிருக்கு… சொந்த அனுபவமா இல்ல சினிமால பாத்ததா?” என்று சீண்டவும்

 

“என்னை யாரும் பேஷனேட்டா ஹக், கிஸ் பண்ணுனது இல்ல… அண்ட் ஐ வோண்ட் அலோ எனிபடி டு டூ… அண்டர்ஸ்டாண்ட்?” என்றாள் ஆர்யா எரிச்சலும் கோபமுமாக.

 

“வோண்ட் அலோ எனிபடி? சப்போஸ் அந்த எனிபடி நானா இருந்தா என்ன செய்வ ஜெர்ரி?”

 

தான் அணைக்கும்போதேல்லாம் ஆர்யாவின் மேனி நெகிழ்வதையும், மெல்லிய நடுக்கம் அவளுக்குள் இழையோடுவதையும் வைத்து கேட்டான் டாம்.

 

அவன் விளையாடுகிறானோ என்று முதலில் எண்ணியவள் டாமின் பச்சைவண்ண விழிகளில் தெரிந்த அதீத பளபளப்பில் அவன் சீரியசாகத் தான் கேட்கிறான் என்பதை புரிந்துகொண்டாள்.

 

டாமின் சிவந்த உதடுகளின் ஸ்பரிசம் எப்படி இருக்குமென மனம் கண்டபடி சிந்திக்கவும் திடுக்கிட்டவள் அதை மறைத்துக்கொண்டாள். இவனது சகவாசத்தால் என் புத்தி கெட்டுப்போய்விட்டது போல என கோபம் வந்தது.

 

“நீ மட்டும் என்ன ஸ்பெஷல் டாம்? நான் உன்னையும் அலோ பண்ணமாட்டேன்”

 

தனது எரிச்சலும் கோபமும் டாமைச் சீண்டிவிடுமென தெரியாதவளாக சிடுசிடுத்தாள்.

 

“இசிட்? லெட்ஸ் சீ” சவால் விடும் தொனியில் சொன்னவன் பின்னர் மதுரிமா மற்றும் நவீனின் விருந்தோம்பலில் திளைத்தான்.

 

“வான்ன டேஸ்ட் சிக்கன் பிரியாணி மிஸ்டர் போல்டன்? (wanna taste chicken biriyani Mr.Bolten?)”

 

மதுரிமா டாமின் தட்டில் சிக்கன் பிரியாணியை வைக்கப்போக அவசரமாகத் தடுத்தாள் ஆர்யா.

 

“டாமுக்குக் காரம் ஆகாது மது… ஒரு தடவை ரெஸ்ட்ராண்ட்ல பிந்தி மசால் சாப்பிட்டுட்டு காரம் தாங்காம குடம் குடமா தண்ணி குடிச்சான் தெரியுமா?”

 

க்ளே பிட்டில் நடந்ததைக் குறிப்பிட்டு ஆர்யா நகைச்சுவையாகப் பேசவும் டாமிற்கு திகைப்பு. அவளது இந்த அக்கறையும், உரிமைப்பேச்சும் அவனுக்குப் பிடித்திருந்தது.

 

கூடவே மதுரிமாவும் நவீனும் பழகிய விதம் மனதுக்கு இதமாக இருந்தது.

 

“இட்ஸ் மை ப்ளஷர் டூ மீட் யூ கய்ஸ்… யூ போத் ஆர் வொண்டர்ஃபுல் குக்ஸ்… அண்ட் யுவர் பேர் இஸ் ஆசம்”

 

டாம் அவர்களது ஜோடி பொருத்தத்தைப் புகழ்ந்ததும் மதுரிமாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

 

அவர்களிடமிருந்து விடை பெற்று வீட்டில் வந்து இறங்கியதும் ஆர்யா வீட்டுக்குள் சென்றுவிட டாம் கராஜில் காரை நிறுத்திவிட்டு நிதானமாக உள்ளே நுழைந்தான்.

 

ஆர்யா ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுப்பது தெரிந்தது. அவளருகே சென்றவன் “டாம்” என்று ஏதோ சொல்ல வந்தவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

 

ஆர்யா முதலில் திகைத்தவள் பின்னர் அவனது பெரிய கரங்கள் அவது முதுகை சுற்றி வளைத்து ஆக்கிரமித்ததும் உடலெங்கும் சிலிர்க்க கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை நழுவ விட்டாள்.

 

அவனது ஒரு கரம் ஆர்யாவின் முதுகை வருடி கழுத்தில் கோடிழுக்க கண் மூடிக்கொண்டாள் பெண்.

 

உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தவளின் கன்னத்தில் ஆட்காட்டி விரலால் கோடிழுத்தவன் தனக்கு மிகவும் பிடித்த அவளது மச்சத்தில் நிறுத்தினான்.

 

கடுகு போல இருந்த மச்சத்தில் தனது இதழை ஒற்றியவன் ஆர்யாவின் உடல் நடுங்கவும் மெல்லிய புன்னகையோடு அவளது செவ்விதழைத் தன் இதழால் மூடினான்.

 

யாரையும் வேட்கையோடு முத்தமிடவோ அணைக்கவோ அனுமதிக்கமாட்டேன் என்றவளின் வைராக்கியம் டாமின் இதழணைப்பில் மெதுவாய் கரையத் தொடங்கியது.

 

உடல் எடை முற்றிலும் குறைந்து இறகு போல காற்றில் மிதப்பதாய் எண்ணிக்கொண்டவளுக்கு டாமின் முரட்டு முத்தத்தில் மூச்சு வாங்கியது.

 

அதை கண்டுகொண்டவன் மெதுவாக அவளை விடுவித்தான்.

 

ஆர்யா அவன் தன்னை விடுவித்தது கூட தெரியாமல் மோனநிலையில் நின்றவள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். அவளெதிரே வெற்றிப்பெருமிதத்தோடு நின்றிருந்தான் டாம்.

 

ஆர்யாவுக்கு அந்நேரத்தில் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தடுமாறிப்போனது அவளது மனம். அவனிடமே பிடிவாதம் காட்டி இறுதியில் அவனது அணைப்பிலும் முத்தத்திலும் திளைத்தோமே என்று வெட்கம் பிடுங்கித் தின்றது அவளுக்கு.

 

இதயம் தடதடவென துடிக்க டாமின் கண்களை நேருக்கு நேராய் சந்தித்தாள்.

 

முறுவலித்த டாம் “பேஷனேட் ஹக் அண்ட் கிஸ் இப்பிடி தான் இருக்கும் ஜெர்ரி” என்றான் துளி கர்வத்தோடு.

 

பிடிவாதமாக இருந்த மங்கையின் மனமும் உடலும் தன்னிடம் நெகிழும் கர்வம் அவனுக்கு.

 

“டா…டாம்… நீ”

 

அவள் தடுமாறும் போதே மென்மையாய் அவளது இதழில் முத்தமிட்டவன் “ரொம்ப யோசிக்காத ஜெர்ரி… உன் மனசு இந்த ஹக்கையும் கிஸ்சையும் ரசிக்குது… ஏன்னா அதுக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்… இன்னைக்கு அது உறுதி ஆகிடுச்சு” என்றான்.

 

அவன் சொல்வது உண்மை தானோ என்று திகைப்பில் மலங்க மலங்க விழித்தபடி நின்றாள் ஆர்யா.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
52
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்