Loading

 

காதல் 21

 

“ஒருத்தவங்களோட அதிகபட்ச தேவை அன்பான சில வார்த்தைகளும், அரவணைப்பும் தான்னு தெரியுறப்ப, ப்ளீஸ் அவங்களை அலட்சியப்படுத்தாதிங்க… உங்களோட அலட்சியம் அவங்களை தலைகீழா மாத்திடும்… அந்த மாற்றம் எல்லா நேரத்துலயும் நேர்மறையா இருக்கும்னு எதிர்பாக்க முடியாது… சில நேரங்கள்ல அது எதிர்மறையா அமைஞ்சுதுனா, ஒரு நல்ல மனுசனை நோகடிச்ச பாவம் உங்களுக்கு வந்து சேரும்… நீங்க விரும்பிப் போறப்ப அவங்க பழைய நபரா உங்க அன்புக்கு ஏங்குற நாய்க்குட்டியா இருக்கமாட்டாங்க… உங்களோட அலட்சியம் அவங்களுக்குள்ள இருந்த குறைஞ்சபட்ச நல்லவனைச் சாகடிச்சிடவும் வாய்ப்பிருக்கு… ஒருத்தர் மேல அன்பு காட்டுறதுக்கோ, அவங்களை அரவணைக்கிறதுக்கோ காசு பணம் செலவளிக்கப்போறதில்லயே! அப்புறம் ஏன் தயங்கணும்?”

 

     -ஜெர்ரி

 

திருமணமாகி இத்தனை வருடங்களில் மைத்ரி ஒரு முறை கூட தேவநாராயணனின் பேச்சைத் தட்டியதில்லை. கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவியாக அவர் என்ன கட்டளை விதித்தாலும் அதை கடைபிடித்து வந்தவர்.

 

அவரது அன்னை மணமாகி வரும்போது கொடுத்த அறிவுரை அப்படிப்பட்டது.

 

“வீட்டு ஆம்பளைங்களை அனுசரிச்சு போனா தான் நம்ம வாழமுடியும்டி… எதிர்த்துப் பேசுற பழக்கத்தை அடியோட மறந்துடு… அவர் சிடுசிடுனு பேசுனாலும் பொறுத்துப்போ… பாவம், வெளியுலகத்துல நாலு இடத்துக்குப் போய் நாலு பேரை பாக்குறவருக்குக் கோவம் வந்தா எங்க காட்ட முடியும்? உன் கிட்ட தான… கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குப் போற பொண்ணு அந்த வீட்டை விட்டு வெளிய வரணும்னு யோசிக்கவே கூடாது… குடும்பம் தான் நம்மளை மாதிரி பொம்பளைங்களுக்குப் பாதுகாப்பு மைத்ரி”

 

அன்னையின் அறிவுரைகள் மைத்ரியின் மனதில் தங்கிவிட்டதாலோ என்னவோ தேவநாராயணன் கடுமையாக நடந்துகொண்டாலும் அவர் முகம் திருப்பியதில்லை. அதே கடுமையை அவர் பெண்பிள்ளைகளிடம் காட்டியபோதும் தந்தைக்கு நிகரான அன்பை அவர்கள் மீது பொழிவார்.

 

“அப்பா என்ன சொன்னாலும் நம்ம நல்லதுக்குத் தான் இருக்கும்.. அவரை எப்பவும் எதிர்த்துப் பேசக்கூடாது”

 

தனது அன்னை கொடுத்த அறிவுரையை அடுத்த தலைமுறைக்குக் கடத்தினார் அவர்.

 

ஆராதனாவும் ஆர்யாவும் அன்னையின் பேச்சை மதிப்பவர்களாய், தந்தை என்றாலே ஒரு அடி பின்னே நகர்ந்து கொள்ள பயத்திற்கும் பாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத தேவநாராயணன் மைத்ரியின் வளர்ப்பில் அகம் குளிர்ந்து போனார்.

 

பெண்கள் இருவருமே தேவநாராயணனின் கட்டுப்பாடுகளை என்றுமே மீறியதில்லை.

 

ஆர்யா வெளிநாட்டில் படிக்க விரும்பியதைத் தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை என்பதே மைத்ரியின் எண்ணம். புகைப்படத்தில் ஒரு வெளிநாட்டவனுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்த பிறகும் மைத்ரியின் மனம் பெண்ணைத் தவறாக நினைக்கவில்லை.

 

அவ்வளவு கட்டுப்பாடாக வளர்த்த மகள் யாரோ ஒருவனிடம் இவ்வளவு சுதந்திரமாக நடந்துகொள்கிறாள் என்றால் அந்த யாரோ ஒருவன் எப்படிப்பட்ட இன்னலில் இருந்து அவளைக் காப்பாற்றினானோ என்று தான் தாய்மனம் மகளுக்காக யோசித்தது.

 

தேவநாராயணன் அப்புகைப்படங்களைக் காரணம் காட்டி ஆர்யாவைத் தலை முழுகியதோடு மட்டுமன்றி ஆராதனாவும் மைத்ரியும் அவளோடு எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாதென சொன்னபோது தாய்மனம் ஊமையாய் அழுதது.

 

கணவரை மீற முடியாமல் இளைய மகளோடு பேசுவதைக் கூட தவிர்த்தவர் இன்று வாய்க்கு வந்தபடி தேவநாராயணன் அவளைத் திட்டவும் மனம் நொந்து போனார்.

 

அதிலும் அவள் இறந்துவிட்டாள் என்றதும் பெற்ற வயிறு குமுறியது. இந்த ஆண்கள் தான் எத்துணை எளிதில் பிள்ளைகளின் உறவை முறித்துக்கொள்கிறார்கள்.

 

பத்து மாதங்கள் உடல்வலி, கர்ப்பகால உபாதைகளோடு போராடி, பிரசவத்தின் வலியைச் சமாளித்து சிசுவை உலகுக்குக் கொண்டு வரும் பெண்களுக்குத் தானே பிள்ளை பிறப்பின் வலி தெரியும்.

 

மைத்ரி துடித்துப்போனார். வேதனையின் உச்சத்திலிருந்த தாயுள்ளம் இத்தனை நாட்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்ததை மறந்தது அக்கணம்.

 

“என் பொண்ணுங்க ரெண்டு பேரும் எனக்கு ஒன்னு தான்… உங்களுக்குப் பிடிக்காதவ கூட உறவு வச்சுக்கிட்டா நான் இந்த வீட்டை விட்டுப் போகணும்னு சொன்னிங்கல்ல… போறதுக்கு நான் ரெடி, அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும்” என்றவர் தனது கழுத்தில் தொங்கிய தாலிக்கொடியைக் கழற்றினார்.

 

“இதை நீங்களே வச்சுக்கோங்க” என்று தேவநாராயணனின் கையில் கொடுத்தார் அவர்.

 

அங்கிருந்த ஆராதனா, ராஜேஷ், தேவநாராயணன் மூவரும் பூகம்பம் வந்தது போல அதிர்ந்தார்கள்.

 

அதோடு மைத்ரி விடவில்லை.

 

“இந்த வீடு உங்களுக்குச் சொந்தம்னு மார்த்தட்டிக்கிறிங்களே… இத்தனை வருசம் நீங்களா வீட்டை பாத்துக்கிட்டிங்க? கல்யாணம் ஆன நாள்ல இருந்து வீட்டைப் பெருக்கி, சுத்தம் பண்ணி வச்சிட்டிருக்கவ நான்… போதாக்குறைக்கு மூனு வேளையும் ஆக்கிப் போட்டு உங்க துணிமணிய துவைச்சு போட்டிருக்கேன்… உங்களை சமுதாயத்துல யாரும் ஆம்பளை இல்லனு சொல்லிடக்கூடாதுனு ஒன்னுக்கு ரெண்டா புள்ளைங்களை பெத்து குடுத்திருக்கேன்… இத்தனை நாள் இதெல்லாம் ஃப்ரீயா தான செஞ்சேன்… இப்ப வீட்டை விட்டுப் போக சொல்லுறிங்க… அப்ப என் உழைப்புக்கான பணத்தைக் குடுங்க… நான் கிளம்புறேன்”

 

தீர்மானமாக உரைத்தார் அவர். இதுவரை அனைவரையும் ஆட்டி வைத்த தேவநாராயணனே மைத்ரியின் புது அவதாரத்தில் ஆடிப்போய்விட்டார். மனிதர் முகத்தில் ஈயாடவில்லை.

 

“அத்தை…” என்ற ராஜேஷிடம் தன் மகள் ஆர்யாவைப் பற்றி அவனது நண்பனை விசாரிக்கச் சொல்லும்படி கேட்டுக்கொண்ட மைத்ரி, அமெரிக்காவில் சூழல் கொஞ்சம் மாறினாலும் தயக்கமின்றி சென்னைக்கு வந்துவிடுமாறு சொல்லுங்கள் என்று வேண்டுகோ விடுத்தார்.

 

தேவநாராயணன் மைத்ரியை முறைக்கவும் அவர் அழுத்தமாக அடுத்த வார்த்தையை உதிர்த்தார்.

 

“என் பொண்ணுக்கு இடமில்லாத வீட்டுல நானும் இருக்கமாட்டேன்… வீட்டை விட்டுக் கிளம்புறப்ப எனக்குச் செட்டில் பண்ண வேண்டிய பணத்தைக் குடுக்கச் சொல்லிடுங்க மாப்பிள்ளை… நான் ஏதோ ஒரு வீட்டை லீசுக்கு எடுத்து என் இளைய பொண்ணோட இருந்துப்பேன்… அவளுக்கு அந்த அமெரிக்கா பையனை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணி வைக்கவும் நான் ரெடி… ஆபத்துல என் பொண்ணுக்கு உதவியா நின்னவன் காலம் முழுக்க அவளைக் கைவிடமாட்டான்… சிலரை மாதிரி வெளிநாட்டுக்காரன், கலாச்சாரம் முக்கியம்னு உளறாம என் பொண்ணுக்குப் பிடிச்ச வாழ்க்கைய நான் அமைச்சுக் குடுப்பேன்”

 

ஆராதனாவுக்குத் தாயாரின் துணிச்சலான பேச்சைக் கேட்டு மயக்கம் வராத குறை. தற்கொலை மிரட்டல் விடுத்த தந்தைக்குத் தாயாரின் இந்தப் பேச்சு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்திருக்குமென நினைத்தவளாக கணவனோடு இடத்தைக் காலி செய்தாள்.

 

மைத்ரிக்குக் கொடுத்த வாக்கை ராஜேஷ் காப்பாற்றினான். அவனது நண்பன் பிரதீப்பிடம் எப்படியாவது ஆர்யாவைப் பற்றிய விவரத்தை டெக்சாஸ் பல்கலைகழகம் வாயிலாக திரட்டும்படி கேட்டுக்கொண்டான் அழுத்தமாக.

 

அவனும் பத்து நாட்கள் அவகாசம் கேட்டிருந்தான். ராஜேஷ் ஆராதனாவிடம் ஆர்யாவிடம் பேசுமாறு கூற “அவ கிட்ட எந்த முகத்தை வச்சு பேசுவேன் நான்? பிரதீப் அண்ணா அவளை பத்தி விசாரிச்சு சொல்லட்டுங்க… அப்புறமா பேசுறேன்” என்று சொல்லிவிட்டாள் அவள்.

 

தன்னைப் பற்றி குடும்பத்தினர் கவலைப்படுவது தெரியாமல் ஆர்யாவின் ஆஸ்டின் நாட்கள் கழிந்தன.

 

பிரதீப் சொன்ன பேச்சை காப்பாற்றினான். ஆம்! சொன்னபடி டெக்சாஸ் பல்கலைகழகத்தின் அலுவலகத்தில் தெரிந்தவர்கள் மூலம் ஆர்யாவைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தவன் அவளைச் சந்திக்கவும் செய்தான்.

 

முதலில் அவன் யாரென தெரியாமல் குழம்பியவள் ராஜேஷின் நண்பன் என்றதும் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.

 

“நீ எப்பிடி இருக்க? என்ன பண்ணுறனு தெரியாம உன் ஃபேமிலி கலங்கி போயிருக்காங்கம்மா” என பிரதீப் சொன்னதை அவளால் நம்ப கூட முடியவில்லை.

 

“ஃபேமிலியா?” எனத் தடுமாறினாள்.

 

“ஆமாம்மா… உன் அம்மாவும் அக்காவும் நீ எப்பிடி இருக்கனு தெரியாம தினமும் போராடிகிட்டிருக்காங்கம்மா… உன் ஃபோட்டோவை வாட்சப்ல பாத்ததும் உன் அப்பா ஆடி தீர்த்துட்டார்… அவர் உன் அம்மாவோட மனசை நோகடிச்சிட்டார்னு ராஜேஷ் சொன்னான்… உன் அக்காவும் அம்மாவும் உன்னைக் கான்டாக்ட் பண்ணுனாங்கனா சூசைட் பண்ணிடுவேன்னு மிரட்டி சிம்கார்டை நொறுக்கிட்டாராம் அந்த மனுசன்”

 

ஆர்யாவோ தனது அன்னையும் தமக்கையும் தன்னைக் கைவிட்டார்கள் என்று அத்தனை நாட்கள் கோபத்திலிருந்தவள் நடந்த உண்மையைப் பிரதீப் சொன்னதும் அவர்களைப் பற்றி தவறாக எண்ணிவிட்டோமே என மனம் குமைந்து போனாள்.

 

“அந்த போட்டோவ பாத்த அப்புறமும் உன் அம்மா உன்னை நம்பியிருக்காங்க… இப்ப கூட உன்னைக் காப்பாத்துன மனுசனையும் உன்னையும் அவங்க மோசமா நினைக்கவும் இல்ல, பேசவும் இல்ல”

 

ஆர்யாவின் மனம் அன்னையிடம் மன்னிப்பு கேட்டு அவரது மடியில் படுத்து கண்ணீர் விடவேண்டுமென துடித்தது. தமக்கையின் கைகளைப் பிடித்து அழுது தீர்க்கவேண்டுமென ஏங்க ஆரம்பித்தாள் அவள்.

 

அந்நேரத்தில் டாமும் வந்துவிட்டான்.

 

“ஜெர்ரி” என்றபடி வந்தவனைக் கண்டதும் பிரதீப் திகைக்க, தனது உணர்ச்சிக்கொந்தளிப்பை மறைத்துக்கொண்டாள் ஆர்யா.

 

முகமலர்ச்சியோடு டாமின் புஜங்களைப் பற்றிக்கொண்டவள் “என்னோட பார்ட்னர் டாம்… என்னை ரவி கிட்ட இருந்து காப்பாத்துனவர் இவர் தான் பிரதீப் சார்” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

 

டாமே எதிர்பாராத நிகழ்வு அது. அவன் ஆனந்தமாக அதிர்ந்தான்.

 

அதோடு நிறுத்தவில்லை அவள்.

 

“நாங்க லிவின் ரிலேசன்ஷிப்ல இருக்குறோம் பிரதீப் சார்… இப்போதைக்கு எனக்கு அம்மா, அப்பா எல்லாமே டாம் தான்… என் அப்பா பாத்த மாப்பிள்ளை ரவி என் கிட்ட தப்பா நடந்துக்க நினைச்சப்ப எனக்கு ஆதரவு குடுத்தது டாம் தான்… டாம் மட்டும் இல்லனா ரவி செஞ்ச கேவலமான காரியத்தால நான் அசிங்கப்பட்டுப் போயிருப்பேன்… என்னைக்குமே வளர்ந்த முறைய மறந்து வாழணும்னு நான் யோசிச்சதில்ல… ஆனா ரவியோட நாடகத்தை நம்பி அப்பா பேசுன வார்த்தைகள் எனக்குக் குடும்ப உறவு மேல கசப்பை வரவழைச்சிடுச்சு… அப்ப என் கண்ணுக்கு ஆபத்பாந்தவனா தெரிஞ்சவன் என் டாம் தான்… வெளிநாட்டு கலாச்சாரத்துல வாழ்ந்தவன் என்னோட சம்மதமில்லாத என்னை நெருங்கணும்னு யோசிச்சதே இல்ல… ஆனா ரவி என் சம்மதத்தை எதிர்பாக்காம முறை தவறி நடந்துக்க நினைச்சான்… இது வரைக்கும் என் அப்பாக்குப் பிடிச்ச மாதிரி அவரோட கட்டுப்பாட்டுக்குள்ளவே வாழ்ந்தும் அவர் என்னை ஒழுக்கமில்லாதவனு சொல்லிட்டார்… என் பொண்ணு இப்பிடி செய்யக்கூடியவளானு ஒரு செக்ண்ட் அவர் யோசிக்கலயே… அந்த நொடில தான் நான் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சேன் பிரதீப் சார்… அம்மாக்கும் அக்காக்கும் என் மேல வருத்தமில்லனு தெரிஞ்சதும் சந்தோசமா இருக்கு… ஆனா இனி யாருக்காகவும் என் வாழ்க்கைமுறைய நான் மாத்திக்கப் போறதில்ல.. இதை எல்லார் கிட்டவும் தெளிவா சொல்லிடுங்க”

 

“உன் மதரும் சிஸ்டரும் உன்னைப் பாக்கணும்னு ஆசைப்படுறாங்கம்மா… ராஜேஷ் விசாக்கு ஏற்பாடு பண்ணுற ஐடியால இருக்கான்” என்றவன் சில தினங்களுக்கு முன்பு மைத்ரிக்கும் தேவநாராயணனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைப் பற்றியும் சொல்லிவிட்டான்.

 

தேவநாராயணனிடம் வீட்டை விட்டுப் போகமாட்டேன் என மைத்ரி தைரியமாகச் சொன்னது, ஆர்யாவை ஆதரித்துப் பேசியது, டாமை மணக்க ஆர்யா விரும்பினால் கட்டாயம் சம்மதிப்பேன் என்று உறுதியாய் நின்றது என அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவன் கூற டாமும் ஆர்யாவும் மனதிற்குள் நிம்மதியுற்றனர்.

 

தன் அன்னையா தந்தையை எதிர்த்துப் பேசினார்? ஆர்யாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தந்தையிடமே சவால் விட்ட அன்னையின் துணிச்சல் ஆர்யாவுக்குத் தெம்பை அளித்தது.

 

இனி தேவநாராயணனால் முன்பு போல வார்த்தைகளால் அவரை வதைக்க இயலாது. அப்படி எதுவும் முயற்சி செய்தால் கூட அன்னை பதிலடி கொடுத்துவிடுவார் என நம்பிக்கை பிறந்தது ஆர்யாவுக்கு.

 

தான் மட்டும் படிப்பை முடித்துவிட்டால் அமெரிக்காவில் நல்ல வேலையைத் தேடிக்கொண்டு அன்னையையும் இங்கே அழைத்து வந்துவிடலாமென யோசித்தவள் அவரும் ஆராதனாவும் இப்போது அமெரிக்கா வரத் தேவையில்லை என தீர்மானித்தாள்.

 

தனக்கும் டாமுக்கும் இடையே உள்ள உறவை தன்னைப் போல அன்னையாலும் தமக்கையாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனால் என்ன செய்வது?

 

“அவங்க இங்க வர்றதுக்கான சூழல் இன்னும் உருவாகல சார்… நான் படிச்சு ஒரு நல்ல ஜாப்ல சேர்ந்து சொந்தக்கால்ல நின்னதுக்கு அப்புறம் அவங்க வரட்டும்… இப்ப இங்க வந்தாங்கனா என் வாழ்க்கைமுறை அவங்களைக் காயப்படுத்திடலாம்… மாமா கிட்ட விசாக்கு அவசரப்படவேண்டாம்னு சொல்லி வைங்க பிரதீப் சார்”

 

ஆர்யா இத்தனை தெளிவாகப் பேசும் போது பிரதீப்பாலும் அவளை வற்புறுத்த முடியவில்லை.

 

“உனக்கு விருப்பம் இருந்துச்சுனா உன் அக்காவுக்கும் அம்மாவுக்கும் கால் பண்ணி பேசும்மா… அவங்களோட நியூ நம்பரை நோட் பண்ணிக்கிறியா?”

 

கர்மசிரத்தையாக பிரதீப்பிடமிருந்து மொபைல் எண்களை வாங்கிக்கொண்டாள் ஆர்யா.

 

நேரம் இருந்தால் தங்கள் வீட்டுக்கு வருமாறு இருவருக்கும் அழைப்பு விடுத்துவிட்டுப் பிரதீப் கிளம்ப ஆர்யாவும் டாமுடன் வீட்டுக்குச் செல்ல ஆயத்தமானாள்.

 

அவளது வதனத்தில் தெரிந்த ஜொலிப்புக்கு முற்றிலும் வேறாக கண்களில் ஈரம் பளபளத்தது.

 

தன்னை அவள் அறிமுகம் செய்து வைத்த விதத்தில் குதூகலித்திருந்தவன் அவளது இரண்டுங்கெட்டான் மனநிலையைக் கண்டுகொண்டான்.

 

 வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக அவள் எப்படி உணர்கிறாள் என்று கேட்டவனிடம் ஆனந்தக் கண்ணீருடன் தனது மனநிலையைப் பகிர ஆரம்பித்தாள் ஆர்யா.

 

“என் அம்மாவும் அக்காவும் என்னை வெறுக்கல டாம்… அந்த போட்டோவ மட்டுமே வச்சு என் கேரக்டரை டிசைட் பண்ணுன எங்கப்பாவ மாதிரி அவங்க என்னைச் சந்தேகப்படல… ரொம்ப சந்தோசமா இருக்கு டாம்… அட்லீஸ்ட் தே அண்டர்ஸ்டுட் மீ”

 

முகம் விகசிக்க அவள் சொன்னதைக் கேட்டவனுக்கும் நிம்மதியே. அன்றொரு நாள் குடும்பத்தினர் தன்னை வெறுத்துவிட்டதாகச் சொல்லி அழுதபோது ஆர்யாவைப் போல அவனும் தானே துடித்துப் போனான்.

 

அவளது அன்னையும் தமக்கையும் ஆர்யாவுக்கு ஆதரவாக இருப்பது டாமின் மனதுக்கு உவப்பாக இருந்தது.

 

இப்படியே அமர்ந்திருந்தால் சந்தோச நினைவுகளோடு துன்பமான நினைவுகளும் அவளைத் தாக்கிவிடலாம் என்பதால் அவளது கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கினான்.

 

“இன்னைக்கு நான் நடத்துன சப்ஜெக்டை நீ சரியா கவனிக்கல… இப்ப எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுறேன்… ஒழுங்கா கவனிச்சு நோட்ஸ் எடு” என அவன் அதட்டவும்

 

“வீட்டுலயும் புரொபசர் அவதாரமா? ஏன் டாம் என்னைச் சோதிக்குற?” திடீரென பேராசிரியராய் மாறி அவன் அதட்டியதில் சிணுங்கினாள் ஆர்யா.

 

வகுப்பறையில் அவன் மிகவும் கண்டிப்பான பேராசிரியன். மார்க்கெட்டிங் பற்றிய எந்தவித தெளிவும் இல்லாத ஆர்யா அடிக்கடி புரொபசர் போல்டனின் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் விழிப்பது வாடிக்கையாகிவிட்டது.

 

அதனாலேயே அவளிடம் தினச்சரி கேள்வி கேட்டுப் பாடத்தைக் கவனிக்கிறாளா என்று சோதனை செய்வான்.

 

“க்ளாஸ்ல மிஸ்டர் போல்டன் ஸ்ட்ரிக்ட் புரொபசர்னா நீ மக்கு ஸ்டூடண்ட்… டெய்லியும் அவர் கிட்ட முறைப்பை வாங்கி கட்டிக்கிற ஆர்யா” என நவீனும் மதுரிமாவும் கூட அவளைக் கேலி செய்வதுண்டு.

 

வகுப்பறையில் கிடைத்த முறைப்பு வீட்டிலும் தொடரும் என்றால் அவள் மறுக்கத் தானே செய்வாள்!

 

அவள் எவ்வளவு மறுத்தும் கேளாமல் பாடத்தை நடத்த ஆரம்பித்த டாம் ஆர்யா பாடத்தில் மூழ்கியதும் தனது கையிலிருந்த புத்தகத்தில் அடிக்கோட்டிட்ட வரிகளை மட்டும் காட்டினான்.

 

“இது தான் இம்ப்பார்ட்டண்ட் பாயிண்ட்… இதை நோட் பண்ண மறந்துடாத”

 

பின்னர் அவள் குறிப்பெடுக்கட்டுமென தங்களது அறைக்கு வந்தவன் ஆர்யாவின் பொருட்கள் பத்திரமாக இருக்கும் மினி கண்ணாடி அலமாரியில் அவன் கொடுத்த இதய வடிவ குஷன் இருப்பதைப் பார்த்தான்.

 

அவளுக்குத் தானும் தனது நினைவுகளும் எவ்வளவு முக்கியமென கர்வம் கொண்டது டாமின் காதல் மனம். அன்று ஆர்யா அவளது குடும்பத்திற்கு வேண்டிய நபரிடம் அவனைப் பார்ட்னர் என்று அறிமுகம் செய்து வைத்தது வேறு அதீத தித்திப்பை அவனுக்கு வாரி வழங்கியிருந்தது.

 

இந்த தகவல் கட்டாயம் அவளது அன்னையைப் போய் சேரும். அவரது மகளைக் காப்பாற்றிய நபர் என தன் மீது அவருக்கு இருக்கும் நன்மதிப்பை பிரதீப் சொல்லிக்கொண்டிருந்தபோதே அவர்களை நெருங்கியவன் தனக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்றால் கூட சம்மதிப்பேன் என மைத்ரி சொன்னதாக பிரதீப் உரைக்கவும் உற்சாகமுற்றான்.

 

அதே உற்சாகத்தோடு டாமின் காதல் மனம் திட்டங்களைத் தீட்டியது.

 

“உன் ஸ்டடீஸ் மட்டும் முடியட்டும் ஜெர்ரி… அப்புறம் நான் என்ன செய்யணும்னு எனக்கு நல்லா தெரியும்” என்று மர்மமாகச் சொல்லிவிட்டுப் புன்னகைத்தான் டாம்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
44
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்