Loading

அத்தியாயம் 12

அடிவாங்கிய உடம்பு பச்சைப் புண்ணாக நோகவும் படுத்திருக்கவும் முடியாமல் எழுந்திருக்கவும் முடியாமல் பெரும் வேதனையுடன் அவஸ்தைப்பட்டாள் நிறைமதி. தன் விதியை எண்ணி நாள்முழுதும் அழுதழுது கரைந்து விட்டாள்.

‘கடவுளே எனக்கு என்ன செய்வதென்றே தெரியல்லையே. நான் பேசாமல் இப்படியே இருந்தால் குகனுடன் கல்யாணத்தை நடத்தி வைத்துட்டுத் தான் அம்மா ஓய்வார்போல. அம்மாவிற்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் என்று புரியவில்லையே. நானும் அவங்க பெத்த பிள்ளைதானே. என் மனசை ஏன் புரிஞ்சு கொள்றாங்க இல்ல?நான் எங்க போறது? யாரிடம் போய் உதவி கேட்பது? எந்த முடிவையும் எடுக்க முடியல்லையே? அலைபேசியையும் அம்மா பறிச்சு வைச்சதால செந்தூரனுடனும் கதைக்க முடியல்லை. அவரிடமாவது கேட்கலாமென்றால் இந்த அம்மா அதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டாரே..’ என்று தனக்குள்ளாகவே மருகிக் கொண்டிருந்தாள்.

இன்று அவளைக் கடை திறக்கவும் போகக் கூடாதெனத் தடுத்து விட்டனர். எழுந்ததிலிருந்து பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்காமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். வீட்டின் பெரியவர்களுக்கோ அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. உமையாளுக்குத் தன் காரியம் நடந்தால் போதும் என்ற மனநிலை தான். அவள் காதலில் விழுந்து வேறு எவனையாவது கட்டினால், அவன் எவ்வளவு வசதியானவனாக இருந்த போதும் தங்களைப் பார்ப்பான் என்பது கேள்விக்குறியே. யாராக இருந்தாலும் நிச்சயம் பார்க்க மாட்டான். எனவே தன் அண்ணன் மகனைக் கல்யாணம் செய்தால் எப்படியும் அண்ணன் கடைசிவரையும் எங்களைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதைவிட அன்பரசனை எப்படியாவது அண்ணி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார். அதன் பிறகு எவ்வளவு வசதியாக வாழ முடியும் என்று கற்பனைக் கோட்டைகளைக் கட்டி வைத்துள்ளார். அதையெல்லாம் இவள் தகர்க்க விட்டுவிடுவாரா?

கண்ணீர் வடித்து ஓய்ந்து போய் இருந்தவள் படுக்கையில் முழங்காலில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள். கதவு திறக்கும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். அறைக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்தது அவள் தோழி கவிதா. அவளைக் கண்டதும் ஏதோ ஆபத்பாந்தவன் வந்துவிட்டடதைப் போன்ற நிம்மதி மனதில் பரவுவதை உணர்ந்தாள். உள்ளத்தின் சந்தோசம் கண்களில் சிறிதளவு எட்டிப்பார்க்க “வா கவி” என்று மெதுவாக அழைத்தாள்.

நிறைமதியைக் கண்டதும் அவளுடன் சண்டை பிடிக்க வேண்டும், அவள் காதலிக்கும் விஷயத்தைத் தன்னிடம் சொல்லவில்லேயே என்ற ஆதங்கத்தை அவளைத் திட்டித் தீர்க்க வேண்டும் என்று எண்ணியே வந்திருந்தாள். ஆனாலும் அவள் செந்தூரனைத்தான் காதலிக்கிறாள் என்ற செய்தியால் விளைந்த சந்தோசத்துடனேயே வந்தவள் தன் தோழியின் பரிதாபத் தோறறத்தைக் கண்டதும் எல்லாவற்றையும் மறந்து நிலை குலைந்து போனாள். கன்னத்தில் வாங்கிய அறையாலும் நாள் முழுதும் அழுததாலும் வீங்கிப் போயிருந்த முகமும் உடல் முழுதும் தடி, வயர் எனக் கொண்டு அடித்ததில் இரத்தம் கண்டிப்போயிருந்ததையும் பார்பபதற்கே கொடுமையாக இருந்தது.

“ஐயோ நிறை.. இது என்ன கோலம்?  என்னடி நடந்திச்சு? ஏன் இப்படி அடிச்சிருக்காங்க?” என்று கேட்டபடி கண்கள் கலங்க அவள் அருகில் போய் அமர்ந்து அவள் கைகளைப் பற்றினாள்.

தன் வேதனையைக் கோட்டித் தீர்க்கவும் ஒரு ஜீவன் வந்துள்ளது என்ற எண்ணமே அவளுக்கு சற்றே தெம்பைத் தர ,வீட்டில் நடந்தவற்றைக் கூறும்போதே அழுகையுடன் தன் தோழியின் மடியில் படுத்தாள்.

அவளது தலையை ஆதரவாகத் தடவி விட்டவள், செந்தூரன் தன்னைத் தேடி வந்ததைக் கூறினாள்.

“நிறை, நீ எதுக்கும் யோசிக்காத. அண்ணா ரொம்ப நல்லவர். உனக்காக என்னவும் செய்வார். ஒருக்கா நீ அண்ணாவோட கதைச்சாத்தான் நல்லம்” என்று சொல்லி தனது அலைபேசியை எடுத்துச் செந்தூரனுக்கு அழைப்பு எடுக்க முயன்றாள். அப்போது அறைக்குள் வந்தார் உமையாள். அதுவரை நேரமும் தாயும் பவித்திராவும் சேர்ந்து கல்யாணத்துக்குத் தேவையான உடைகளை எடுக்கக் கடைக்குச் சென்று இருந்தனர். அவர்கள் ஒருவர் நின்றிருந்தாலும் கவிதாவுடன் இவ்வளவு பேச விட்டிருக்க மாட்டார்கள். உள்ளே வந்ததும் “வா கவிதா.. என்ன தோழியைப் பார்க்க வந்தாயா? நல்லது நீயாவது அவளுக்கு நல்ல புத்தியைச் சொல்லு” என்று சொன்னவர் அவ்வறையிலேயே கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து விட்டார். அதற்கு மேல் கவிதாவால் செந்தூரனுக்கு அழைப்பெடுக்க முடியவில்லை 

எனினும் ஆற்றாமையுடன் “ஏன் அத்தை இவளைப் போட்டு இந்த அடி அடிச்சிருக்கீங்க?” என்று கேட்டாள். “ம்ம்.. நான் இவளைக் கொல்லாமல் அடியோடு மட்டும் விட்டுட்டேன் என்று சந்தோசப்படு. இவள் செய்யுற வேலை.. எங்க எலலாற்ற வாழ்க்கையிலும் மண்ணள்ளிப் போடப் பார்த்தாள். பாவி… அதுசரி இவள் உனக்கு இப்ப சொல்லியிருப்பாளே? என்னென்றாலும் வாற திங்கக்கிழமை காலம இவளுக்குக் கல்யாணம். நீ முதல் நாளே வந்துடு சரியா” என்றுவிட்டு சட்டமாக அங்கேயே அமர்ந்திருந்தார். அந்நேரம் பார்த்து கவிதாவிற்கு செந்தூரன் அழைத்தான். இவளால் அதனை ஏற்கவும் முடியவில்லை. உமையாளின் குணம் அறிந்தவள் எதுவும் சொல்லாமல் தோழியை அணைத்து விடைபெற்று வந்துவிட்டாள்.

 

நிறைமதியும் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமனிலைக்குக் கொண்டு வந்தவள் கட்டிலின் ஓரத்தில் மீண்டும் சுருண்டு படுத்து விட்டாள்.

தான் நிறைமதியைப் போய் பார்த்து வருவதாகக் கூறிச் சென்ற கவிதாவும் வரவில்லை. அவளுக்கு அழைப்பெடுத்தாலும் ஏற்கிறாள் இல்லை. நிறைமதியின் அலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மிகவும் பரிதவித்துப் போனான் செந்தூரன். கவிதா சென்றதும் அவள் வீட்டிலேயே அவளது வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.  ஒரு சில நாட்களுக்கு முன் யாராவது அவனைப் பார்த்து நீ ஒரு பெண்ணின் காதலுக்காக அலைந்து திரிவாய் என்று சொன்னால் அவன் அவர்களைப் பார்த்து சிரித்திருப்பான். இன்று அவன் நிலை பரிதாபமாக இருந்தது.

‘இப்படியே இருந்தால் நிச்சயம் பைத்தியம் பிடிச்சிடும். பேசாம அவள் வீட்டிற்கே போவோம். என்ன நடந்தாலும் பார்க்கலாம்’ என முடிவெடுத்தவன், புறப்பட தன் வண்டியில் ஏறி அமரவும் கவிதாவும் வந்துவிட்டாள்.

“என்னாச்சு கவிதா? மதியைப் பார்த்திங்களா? என்ன செய்யுறாள்? ஏன் அவள் ஃபோன் ஓவ்பில இருக்கு? ஏன் கடை திறக்கல?” என்று அவளை நோக்கி சராமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தான்.

அவளோ தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அவள் பாவம் அண்ணா. அவளுக்குச் சரியான அடி விழுந்திருக்கு அண்ணா” என்று சொல்லும்போதே சட்டென்று விறைப்புற்று நிமிர்ந்தான். “என்னாச்சு?” என்ற அவனது கேள்வியில் அத்தனை உஷ்ணம். அவனது மதியைக் கஷ்டப்படுத்தியவர்கள் மட்டும் இப்போது அங்கே வந்தால், அவர்களை அடித்துக் கொல்லும் ஆவேசம் அவன் மனதில் எழுந்தது.

கவிதாவும் நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்கும்போது அவன் கண்கள் சிவக்க, கை முஷ்டி இறுகக் கோபத்துடன் நின்றான்.

“எனக்கு என்ன சொல்றதெண்டே தெரியல அண்ணா.. அவள உங்ககூட பேச வைப்பம் என்டு நானும் ஹோல் எடுக்க ட்றை பண்ணினன். அதுக்கிடையில அவ அம்மா வந்திட்டா… நான் என்னண்ணா செய்ய?” என்று தவிப்புடன் கேட்டாள்.

அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வண்டியை விட்டு இறங்கியவன், கவிதாவின் வீடடிற்குப் பின்புறம் இருந்த கடற்கரையைத் தேடிச் சென்று, அங்கிருந்த மரக்குற்றியில் அமர்ந்தான். சற்று நேரம் கண்களை மூடி அப்படியே அமர்ந்திருந்தான். கவிதாவிற்குத்தான் பதட்டமாகிப் போய்விடடது. ‘என்னடா இவன், அவளது பிரச்சினைக்குத் தீர்வு சொல்வானென்று நினைச்சால் இப்படி தியானம் செய்யிறானே. அவளுக்கு வேற நான் அண்ணா இருக்கார் உனக்கு என்று சொல்லிட்டு வந்திற்றனே’ என்று தன் மனதிற்குள் எண்ணினாள்.

அப்போதுதான் வேலை முடிந்துவந்த கீர்த்திவாசன் பதட்டத்துடன் நின்ற கவிதாவைப் பார்த்தான்.

“என்ன கவி ஏதோ டென்ஷனாய் இருக்கிறாய் போல..? எங்க என் குட்டிமா?” என்று கேட்டவன், வழமைபோல அவளை பின்புறமாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். நடந்த விஷயம் தெரியாமல் இவருக்கு ரொமான்ஸ் வேற கேட்குது என்று மனதுக்குள் சலிப்பாக எண்ணினாள். அவனை சற்று தள்ளி நிறுத்தி விட்டு “குட்டியம்மாவை உங்க அம்மா வீட்டில விட்டிருக்கன்” என்றவள், அன்று செந்தூரான் வீட்டுக்கு வந்ததையும் தான் நிறைமதி வீட்டுக்குச் சென்று வந்ததையும் அவனுக்குச் சொன்னாள்.

“இப்ப மச்சான் எங்கடி” என்று கேட்டான்.

“அதுவா… அவர் பின்னால போயிருந்து தியானம் செய்யிறார். நீங்களும் போய் அவரோட கூட்டாத் தியானம் செய்யுங்க”

“நீ வேற, பேசாம இருடி.. அவனே இப்ப எவ்வளவு ரென்ஷனாய் இருப்பான்” என்றுவிட்டு செந்தூரனைத் தேடிச் சென்றான். கீர்த்திவாசன் அவன் தோளில் கை வைத்து மச்சி..” எனக் கூப்பிடவும் கண் திறந்து பார்த்தவன் முகம் இப்போது தெளிவாக இருந்தது. இவனிடம் “கொஞ்சம் பொறு மச்சான்” என்றுவிட்டுத் தனது அலைபேசியை எடுத்து தன் அத்தைக்கு அழைத்தான்.

அவரிடம் ஒருசில விடயங்களைக் கூறியவன், அவர் சொன்னதைக் கேட்டதும் சந்தோஷமானான். அதே மனநிலையோடு

“மச்சான் எனக்கு ஒரு உதவி செய்வியா?” என்று கேட்டான்.

“என்ன மச்சி உதவியென்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறாய். செய்யடா என்றால் செய்திட்டுப் போறன். சொல்லு என்ன செய்ய?” என்று கேட்டு நின்றான்.

“இப்பவே என்னோட வெளிக்கிட்டுவா.. என்னால பொறுமையா இருக்க முடியாது..  என் மதி பாவம்” என்றுவிட்டு கீர்த்திவாசனை அழைத்துக் கொண்டு சென்றான். அவன் சென்று நின்றது நிறைமதியின் வீட்டு வாசலில். 

வேகமாகத் தனது வண்டியை நிறுத்தி விட்டு வாசலில் வந்து நின்றவன் எந்தவித தயக்கமும் இன்றி உரிமையோடு “மதி..” எனப் பெரிய சத்தத்தில் அழைத்தான். அவன் குரல் அறையில் படுத்து அழுதுகொண்டிருந்த நிறைமதியின் காதில் விழமுன்னர் சமையல் அறைக்குள் இருந்த உமையாளின் காதிலும் வரவேற்பறையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் காதிலும் விழுந்தது. யாரென யோசனையுடன் இருவரும் வந்து எட்டிப் பார்த்தனர். “யார் தம்பி நீங்க? என்ன வேணும்?” என்ற உமையாளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் “மதி” என மீண்டும் பெரிதாக அழைத்தான். அவனைக் கண்டுகொண்ட பவித்ரா பதட்டத்துடன், “அம்மா இதுதான்.. அம்மா.. அக்காவோட அன்றைக்குக் கடையில கண்டன் என்டு சொன்னேனே இது அவர்தான் அம்மா” எனக் கூறினாள். தான் பார்த்துக் கொண்டிருந்த நாடகத்தை பவித்திரா நிறுத்திவிட்டு வந்ததால் நிறைமதிக்கு மீண்டும் அவன் அழைத்த குரல் கேட்கவும் திகைத்துப் போய் எழுந்தாள்.

‘அவர் குரல் தானே இது? அவர் எப்படி இங்கே?’ என நினைத்தபடி வெளியில் வந்து எட்டிப் பார்த்தவள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

பவித்ரா அவன் யார் எனச் சொல்லவும் கோபம் கொண்ட உமையாள், அப்போதுதான் அவன் பின்னால் வந்துநின்ற கீர்த்திவாசனையும் கண்டார். கீர்த்திவாசனிடம் “வாசன் தம்பி.. எதுக்கு இங்க இவனைக் கூட்டி வந்தனிங்க. பொம்பளப் பிள்ளையள் இருக்கிற வீட்டுக்கு இப்படி கூட்டி வரக்கூடாது. கவிதாகிட்ட அப்போவே சொல்லிவிட்டன் தானே… மூத்தவளுக்குக் கல்யாணம் பேசியாச்சு. அதைக் குழப்புற மாதிரி இது என்ன வேலை?” என்று கோபக்குரலில் கேட்டார்.

செந்துரனோ அங்கிருந்த இருவரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவர்கள் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவுமில்லை.

நிறைமதியைக் கண்டதும் “மதி இங்க வா” என அழைத்தான். அவன் குரலுக்கு மந்திரத்தால் கட்டுப்பட்டவள் போல அசைந்து அவன் அருகில் வந்து நின்றாள் நிறைமதி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்