Loading

தன் வீடு தனக்கே அன்னியமாக மாறிப்போன உணர்வில் சமையலறையில் தன் அன்னைக்கு உதவிக் கொண்டிருந்தாள், அஞ்சிலை. சொந்த பந்தங்கள் கூடி இருக்கையில் தனது இயல்பையே அவள் தொலைப்பது தான் எப்போதும் நடக்கும் வழக்கம் என்றாலும், இந்த முறை சற்று கடுப்பாகவே உணர்ந்தாள். 

‘அய்யோ வேலைக்கு வேற நேரமாகுது.. யாராவது அம்மாக்கு உதவிக்கு வந்தா விட்டுட்டு போகலாம்’ என்று உள்ளுக்குள் கடுப்புடன் அவள் புலம்புகையில், அங்கு வந்த அர்ஜுன் “அஞ்சு.. பாட்டி உன்னை கூப்பிடுறாங்க” என்றான்.

ஏற்கனவே வேலைக்கு நேரமான கடுப்பில் இருந்தவள் “என்னையா? எதுக்கு?” என்றிட, அந்த வழியே வந்த அவளது மூத்த அத்தை “பெரியவங்க கூப்பிட்டா என்னனு போய் பார்க்கனும். இதென்ன ஏன் எதுக்குனு கேள்வி கேட்குறது?” என்றிட, சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்த அவள் அன்னை சட்டென அவளை திரும்பிப் பார்த்து முறைத்தார்.

அன்னை தன்னை முறைப்பதைக் கண்டு அரண்டு விழித்தவள், “இ..இதோ போறேன் அத்த” என்க வந்த வேலை முடிந்தது என்ற பாணியில் அவரும் நகர்ந்தார். அன்னையை பயத்துடன் பார்த்தவள் “ம்..ம்மா.. அது” என்க “என்னை அசிங்கப்படுத்தனே செய்வீங்களா? கூப்பிட்டா என்னனு போய் பாரேன். அவங்க பேசுற போல ஏன் வச்சுக்குற? அவங்களாம் ரொம்ப நல்லா புள்ளகுட்டிய வளர்த்த மாதிரி இப்ப என் வளர்ப்ப தான் குறை பேசுவாங்க. நீங்களும் அதுக்கு ஏற்ற மாதிரி தானே நடந்துக்குறீங்க. போய் தொலை. என்னத்துக்கு கூப்டாங்கனு போய் கேளு” என்று சத்தமின்றி, ஆனால் அழுத்தமாக திட்டியனுப்பினார்.

கண்களில் கண்ணீர் தழும்பி நிற்க தன் தம்பியை பார்த்தவளை, பாவமாக பார்த்தவன் கண்களை சிமிட்டி ‘ஒன்னுமில்லை வா’ என்று சைகை செய்ய, அவனுடன் மேலே சென்றவள் கண்ணீர் கன்னம் தாண்டி வழியவும் ‘எங்கே யாரும் பார்த்து அதற்கும் ஏதாவது பேசிவிடுவறோ’ என்ற பயத்தில் சட்டென அதைத் துடைத்துக் கொண்டாள்.

“ஏ அழாத அஞ்சு.. அம்மா ஏதோ கோபத்துல பேசிட்டாங்க. என்னிக்காவது நம்மல இப்படி பேசிருக்காங்களா?” என்று அர்ஜுன் வினவ, “அம்மா மேல கோவம்லாம் இல்லைடா. எனக்கு என்மேலயே கோவம்‌. கடுப்பா இருக்குடா அஜு. சொந்த வீட்டுலயே விருந்தாளி போல வேற்று ஆளா உணருறேன். வேலைக்கு வேற நேரமாச்சு” என்றாள். “சரி பாட்டிய பார்த்துட்டு நீ கிளம்பு நான் அம்மாக்கு உதவி பண்ணிக்குறேன்” என்று அவன் கூற சிறு தலையசைப்புடன் நடந்தாள்.

பெரியவர் அன்று கிளம்ப உள்ளதால் பேரப்பிள்ளைகளுக்கு கையில் காசு கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைக்க, பாட்டியை வணங்கிவிட்டு கீழே வந்தவள், தனது அலைப்பேசி ஒலி எழுப்பவும் “ஏ சாய்தான்னு நினைக்குறேன்டா. நான் கிளம்புறேன் நீ அம்மாகிட்ட சொல்லிடு” என்றாள். 

“அஞ்சு.. இன்னிக்கு மதியமே எல்லாரும் கிளம்புறாங்க. நீ எல்லார்கிட்டயும் சொல்லிட்டுப்போ. அப்புறம் அதுக்கும் எதாவது பேச்சு வாங்குவ” என தமக்கை வருந்தும்படி ஏதும் நடந்திடக் கூடாது என அவன் கூற “சரிடா” என்றவள் சென்று அனைவரிடமும் கூறிக் கொண்டு தனது உடைமைகளுடன் வெளியே வந்தாள். 

அங்கு தன் இருசக்கர வாகனத்தில் கோபத்துடன் அமர்ந்திருந்த சாய், அவள் காலணிகளை அணியும் போது, சுற்றி நிறைய காலணிகள் இருப்பதை கவணிக்க, அவள் தாமதப்படுத்தியதன் காரணம் புரிந்து அமைதியாகினாள்.‌ வண்டியில் வந்தேறிய அஞ்சு “சாரி சாய் லேட்டாகிடுச்சு” என்று கூற “பரவாயில்லைடி” என்றபடி வண்டியை எடுத்தாள்.

தோழியின் அபார மௌனம் அவளுக்கு ஏதோ கசப்பான நிகழ்வு நடந்திருப்பதை உணர்த்த, அவளை திசைதிருப்பும் பொருட்டு பேச்சுக் கொடுத்தபடி மருத்துவமனையை அடைந்தாள். அன்றைய நாள் முழுதும் அஞ்சுவுக்கு சோக கீதமாகவே செல்ல, தோழியிடம் நடந்தவற்றை பகிர்ந்த பிறகும் கூட ஏனோ அவள் மனம் நிம்மதியடையவில்லை.

இரவு வீடு திரும்பியவள் இரவுணவை துறந்துவிட்டு தனதறைக்கு சென்று குளித்து உடைமாற்றிவிட்டு மெத்தையில் வீழ்ந்தவள், ‘ச்ச.. நான் ஏன் இப்படி இருக்கேன்? இந்த சோகமெல்லாம் எனக்கு செட்டாகுமா?’ என்று அவள் நினைத்துத் தன்னை திசைதிருப்ப முயற்சிக்க, கழிவிரக்கம் தான் வந்து தொலைத்தது.

தனது சோகங்களை சொல்லில் வடித்து நிம்மதியை பெற தன் பேனாவை நாடினாள்.. கவிதைகள் இயற்ற! காலை நடந்தவற்றை அசைபோட்டவளுக்கு மற்றவர் கூடியிருக்கும் வேலை தனது குறும்பான இயல்பை அவள் தொலைத்துவிடுவது புரிந்து மனம் கணக்க,

‘மகிழ்வாய் துவங்கிய சில வருகைகள்,

மனதை துளைத்து விடுகின்றன,

நான் என் இயல்பை தொலைப்பதால்!’

என்ற கவிதையை தனது நாட்குறிப்பில் எழுதினாள்.

மீண்டும் எண்ணங்களின் சுழற்சி எங்கெங்கோ பயணிக்க, அவள் கை கவிதைகளை தீட்டிக் கொண்டிருந்தது.

‘காதலாய் தான் துவங்குகிறது வாழ்க்கை,

ஆனால் காலம் கடந்த பின்பு,

கசந்து போய்விடுவது என்ன மாயமோ!?’

என்று அன்று சிற்றப்பாவின் சண்டையை எண்ணி அவள் கவிதை தீட்ட, தனது கவிதைகளை மீண்டும் வாசிக்கையில் தனது சோகங்களை அவை தாங்கிக் கொண்டதாக உணர்ந்தாள். மென் புன்னகை ஒன்று அவள் இதழில் வந்துபோக, அந்த புத்தகத்தை மூடிவைத்திட்டு படுக்கச் சென்றவளை நிம்மதியான தூக்கம் தழுவிக்கொள்ள, அந்த இரவு அமைதியாக முடிந்து மறுநாளுக்கு வழிவகை செய்தது.

அந்த அழகிய காலை வேளையில் தாயும் தங்கையும் தரகருடன் தீவிரமாக விவாதிப்பதையும், அவர் திருதிருவென விழிப்பதையும் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன். 

“என்ன அண்ணே நீங்க.. நல்லா மகாலட்சுமி மாதிரி பொண்ணு காட்ட சொன்னா நீங்க இப்படி பொண்ணா காட்டுறீங்க” என்று மகா கூற அந்த புகைப்படங்களில் ரெக்கை ஒன்று இருந்தால் தேவதை தான் என்று கூறப்படும் எழிலுடன் இருந்த பெண்கள் இதை கேட்க அங்கில்லையே என்று ஆசுவாசம் அடைந்தார்.

“ம்மா.. இதைவிட அழகிய நீங்க எங்க தேடுவீங்க?” என்று அவர் கேட்க “பாத்தாலே கண்ணுல கருணை இருக்கனும். முகத்துல ஒரு தெய்வீக பொழிவு இருக்கனும். உதட்டுல உண்மையான சிரிப்பு இருக்கனும், மரியாதை கொடுக்க தோணுற போல இருக்கனும்” என்று மகா கூறினார்.

“அம்மா.. அதுக்கு நீங்களே தான் ஒரு பொண்ணை உருவாக்கனும்” என்று அவர் கூற “மாமா.. இப்படிலாம் பேசாதீங்க.. என் அண்ணனுக்கு ஒரு நல்ல குணமான லட்சணமான பொண்ணா பார்க்கனும்‌. பார்த்ததும் இவங்கதான்னு உணர்த்தனும்” என்று ரூபி கூறினாள். ‘அவன் காதலிச்சு உணர வேண்டியதை கட்டி வைக்குற இதுக உணர நினைக்குதுங்க. காலக்கொடுமைடா ஈஸ்வரா’ என்று அவர் மனதோடு புலம்ப, வாய்விட்டு சிரித்த ருத்ரன் “மாமா.. நீங்க போங்க. இவங்க இப்படி தான் எதாவது குறை சொல்லுவாங்க. என் ஜாதகம் இருக்குதானே? அதுக்கு பொருந்தி எதும் வரன் இருந்தா மட்டும் கொண்டு வாங்க” என்றான்.

அவர் சென்றதும் “அண்ணா.. ஏன் இப்படி அவர தொறத்தி விடுற?” என்று ரூபி வினவ, ‘ஹாஹா’ என வாய்விட்டு சிரித்தவன் “யாரு நான் தொறத்துனேனா? உங்ககிட்ட இருந்து விடுதலை கொடுத்துருக்கேன்” என்றான். 

அவனை முறைத்த மகா “டேய் நல்ல பொண்ணா பார்க்க வேணாமாடா?” என்று வினவ, “அம்மா.. பொண்ணு அழகுல என்னம்மா இருக்கு? ம்ம் ஒத்துக்குறேன். அழகையும் பார்த்துதான் கல்யாணம் நடக்குது. ஆனா அதுல மட்டும் பொண்ணு நல்ல பொண்ணுனு எப்படி சொல்லிட முடியும். என்னை புரிஞ்சுக்குற ஒரு பொண்ணு அமைஞ்சா போதும் அம்மா. அதை போட்டோல பார்த்து புரிஞ்சுக்க முடியாது. வாழ்ந்து தான் புரிஞ்சுக்கனும். ஜாதகம் பொருந்தி வர்ற பொண்ணுல உங்களுக்கு யாரை புடிச்சிருக்கோ சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றான்.

மகனை பெருமிதத்துடன் ஒரு பார்வை பார்த்தவர் புன்னகையுடன் நகர, “ச்ச.. உனக்குள்ளே இப்படி ஒரு ரொமாண்டிக் பாய் இருக்கா அண்ணா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே” என்று ரூபி கூறினாள்‌. அதில் மேலும் சத்தமாக சிரித்து “வாயாடி..” என்றுவிட்டு நகர்ந்த அண்ணனை பார்த்து “என்ன அண்ணா ஷையா (வெட்கமா)?” என்று வம்பிழுத்து இரண்டு கொட்டு வாங்கிக் கொண்டு நகர்ந்தாள்.

ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் கல்யாண வயதில் தனக்கு வரப்போகும் தனது சரிபாதி தன்னிடம் இப்படி நடந்துக்கொள்ள வேண்டும், தான் அவரை இப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும்போது அதில் ருத்ரன் மட்டும் என்ன விதிவிலக்கா?

அவனுக்கும் தனது மனைவி தன்னிடம் இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும், தான் இப்படியெல்லாம் அவளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைகளும் இருந்தன. ஆனால் அத்தோ பரிதாபம் அவனவளாகப் போறவளுக்குத் தான் இவனை பற்றிய எந்த எண்ணமும் இல்லை.

அன்றைய இரவு மாடியில் அமர்ந்துக் கொண்டு அலைப்பேசியில் வேலை விடயமாக பேசிக்கொண்டிருந்தவனருகே வந்து ரூபி அமர்ந்துக் கொள்ள, அவள் புறம் திரும்பி மெல்ல புன்னகைத்துவிட்டு பேச்சை தொடர்ந்தவன் சில நிமிடங்களில் முடித்துக் கொண்டான். தங்கையை பார்த்து ‌”என்ன ரூபி சாப்பிட்டியா?” என்று அவன் வினவ “ம்ம் சாப்டேன் அண்ணா” என்றவள் அன்று கல்லூரியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி எப்போதும் போல் அவனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

என்ன தோன்றியதோ திடீரென, யோசனையான குரலில் “ஏ ரூபி.. என் கல்யாணத்துல இவ்வளவு சிரத்தையெடுத்து பொண்ணு தேடுறியே நாளைபின்ன அண்ணினு ஒருத்தி வந்தா அண்ணன் நம்மலை விட்டுடுவானோ? இல்ல அண்ணி பிரிச்சிடுவாளோனுலாம் உனக்கு பயம் இல்லையா?” என்று வினவ, தங்கையவள் கலகலவென சிரிக்கத் துவங்கிட்டாள்.

“எதுக்கு சிரிக்குற?” என புரியாமல் கேட்டவனைப் பார்த்து “என்ன அண்ணா சீரியல் கதைகள் போல பேசுற” என்றாள். “ப்ச்! அப்படி இல்ல ரூபி.. எல்லாருமே ஒரே போல நம்ம எதிர்ப்பார்க்க முடியாதுல” என்று அவன் கூற “அப்படிலாம் உனக்கு நடக்காது அண்ணா. எனக்கு வரப்போற அண்ணியவிட என் அண்ணன் மேல நம்பிக்கை இருக்கு. அதனால இதுமாதிரி எண்ணம் எனக்கு வரவும் இல்லை, வரவும் வராது” என்றாள்.

சிரித்தபடி தங்கை தலைகோதியவன் அவளுடன் கீழே செல்ல, அங்கு திகைப்புடன் விழித்தபடி தன் வீட்டுக் கூடத்தில் நின்றிருந்தாள் அஞ்சிலை. “எங்களுக்கு பார்த்ததும் பொண்ண புடிச்சிருந்தது. அதான் பேசிட்டு போகலாம்னு வந்தோம்” என்று அந்த முதியவர் கூற குணசேகரனுக்கு என்ன கூறவென்றே தெரியவில்லை.

மகளது திகைத்த விழிப்பைக் கண்டவர், “இல்லங்க. பொண்ணு இப்ப தான் படிச்சு முடிச்சு வேலைக்கு போறா. அதுமட்டுமில்லாம பையன் வெளிநாடு வேற போறான்னு சொல்றீங்க. நினைச்ச நேரம் பார்க்க முடியாத இடத்துல கொடுக்க எங்களுக்கு விருப்பமில்ல” என்றிருந்தார். சிலநிமிட உரையாடல் நீடிப்பதில், தந்தையின் யோசனை முகம் இவளுக்கு பயத்தினை ஏற்றிக் கொண்டே போக, கண்கள் கலங்குவது போலானது.

மகளின் நிலையைக் கண்ட தாயுள்ளம் அதை தெளிவாக படித்துவிட, தன்னால் இயன்ற வரை, இந்த சம்மந்தம் வேண்டாம் என்பதை அச்சூழலில் பதிவு செய்து அவர்களை அனுப்பி வைத்தார். கலங்கி நின்ற அஞ்சிலைக்கும் என்ன பேசவென்று தெரியவில்லை, பெற்றோருக்கும் என்ன பேசவென்று புரியவில்லை.

இரு அணிகளில் எந்த அணி முதலில் வாய்திறக்கும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் “இப்படியே எவ்வளவு நேரம் ஒருத்தர ஒருத்தர் பார்க்க போறீங்க?” என்று வினவ, தன் தொண்டையை செருமிக் கொண்ட குணா “அஞ்சுமா” என்று அழைத்தார். அவள் கண்களில் கோடாக ஒருதுளி நீர் உருண்டோட, “இது..உனக்கு..” என்று அவர் துவங்கும் முன், தந்தையை ஓடிவந்து அணைத்துக் கொண்டு “வெளிநாடுலாம் நான் போகமாட்டேன் ப்பா. ந.. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னுலாம் சொல்லலை. கொஞ்ச மாசம் போகட்டும். அப்பறம் நீங்க யாரை காட்டினாலும் கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றாள்.

“அட என்னடா நீ? அப்பா அவ்வளவு தூரம் உன்னை விடுவேனா? இதுக்கு எதுக்கு அழற?” என்று அவர் வினவ, “இல்ல.. அது.. பயத்துட்டேன் ப்பா” என்றாள். “நல்லா பயந்த. நாளபின்ன கல்யாணம் பண்ணி போய்தான்டி ஆகனும்” என்று காயு கூற “போம்மா” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.

உறவினர் திருமணமொன்றில் அவளை பார்த்து பிடித்துப்போன தம்பதியினர் தங்கள் மகனுக்கு அவளை பெண் கேட்டு வந்திருக்க, வெளிநாட்டில் மகளை விட விருப்பமற்றவர், வேண்டாம் என்ற முடிவிலேயே இருந்தார். மேலே தனதறைக்கு வந்து தோழிக்கு அழைத்து நடந்ததை கூறிய அஞ்சு, “மு.. முதல் தடவையா.. எனக்கு என்னமோ படபடனு ஆகி பயமா போச்சு சாய்” என்க தோழியின் மனநிலை அவளுக்கு நன்கு புரிந்தது.

எப்போதும் திருமணம் பற்றி நல்லதொரு அபிப்பிராயத்தில் இல்லாதவளுக்கு, திடீரென திருமணம் என்கவும் பயத்தில் கதி கலங்கி விட்டது. அதிலும் ‘வெளிநாடு வரை பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமா?’ என்ற அச்சமும் கூடிக்கொள்ள, கண்ணீர் கரை புரண்டு ஓடிவிட்டதை உணர்ந்தவள் “ஒன்னுமில்ல அஞ்சு. எப்படினாலும் நீ கல்யாணம் பண்ணிக்க தான் போற. என்ன முதல் தடவை அதுவும் வெளிநாட்டு சம்மந்தம்னு சொல்லவும் கொஞ்சம் பயந்துட்ட. கண்டதையும் யோசிக்காம நல்லா சாப்டுட்டு தூங்குற வழியப்பாரு” என்றாள்.

“ம்ம்..” எனப் பாவமாக ஒலித்த அவளது குரலில் மென்மையாக புன்னகைத்தவள் “அஞ்சு.. ஜஸ்ட் சில்.. நீ பார்த்தவரையான திருமண வாழ்க்கை வேறையா இருக்கலாம். ஆனா அதுல சண்டைகளும் சச்சரவுகளும் மட்டுமே நிறைஞ்சு தான் இருந்திருக்கும்னு என்ன நிச்சயம்?” என்று வினவ “ஏ சாய்.. சும்மாகிட. எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்துல பொய்யான நம்பிக்கையை உருவாக்கிக்க நான் விரும்பவில்லை” என்றாள்.

“ப்ச்.. அப்படி இல்லைடி” என்ற சாயை தடுத்து “விடுசாய், இந்த பேச்ச நிப்பாட்டிப்போம். நான் போய் சாப்பிடுறேன். ரொம்ப ரோசமா முகத்த திருப்பிக்கிட்டு வந்துட்டேன். அதையே மெயின்டெயின் பண்ணி சாப்டுட்டு மட்டும் வந்துடனும்” என்று கூற “சரி போய் சாப்பிடு” என்று அழைப்பை துண்டித்தாள்.

அழைப்பேசியை வைத்திட்ட அஞ்சிலை எழுந்து சென்றிட, இங்கு தன் பேசியையே பார்த்தபடி இருந்த சாய் “உனக்கு நம்பிக்கைய வளர்த்துக்க விருப்பம் இல்லாமலில்லை. எங்க திடீர்னு ஒரு ஆசைல நம்பிக்கைய வளர்த்துக்கிட்டு இதே போல நாளைக்கு உன் வாழ்க்கைலயும் நடந்தா அந்த வலிய தாங்க முடியாதேங்குற பயம்” எனக் கூறிக் கொண்டாள்.

ஒரு பெருமூச்சை விட்டவள் “ஹம்.. நான் சொல்றதை தான் காதுல ஏத்திக்க மாட்டேங்குற. நாளைக்கு உனக்கு வரப்போறவராது இதை உனக்கு புரியவைக்கும் படி இருக்கனும்” என தோழிக்காக ஒரு வேண்டாதலை போட்டுக் கொண்டு தானும் உண்ண சென்றாள்.

-வரைவோம்💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்