Loading

என் உயிர் – 15 🧬

அயானாவை தூக்கி அணைத்து முத்தமிட்டு கொஞ்சி இறுக்கி அணைத்தாள். அயானாவும் அவளின் கன்னத்தில் முத்தமிட , உத்ராவின் கண்களில் விழவா என்று ஒரு சொட்டு வெளியில் எட்டிப்பார்த்தது.

அதற்குள் கதவை திறந்து செல்வி உள்ளே வர, சட்டென்று இவள் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள். செல்வி அவளின் முகத்தை கண்டாலோழிய அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவளும் இது தான் நடக்கும் என்பது தெரிந்ததால் ஒன்றும் கூறாமல் மகளை கூட்டிக் கொண்டு சோபாவில் அமர வைத்தாள்.

நான்கு வயது சிறுமியான அயானா  தனது மழலை மொழியில் “அம்மா….. உக்கு ஆர்டு கொதுதாங்க.. செல்லி அத்தை வாங்குச்சு …… பேச தொன்னாங்க …… மேக் வாங்கி … அல்லாமே பிரண்ட்விட்டுனு சொன்னுச்சு …. “

“அப்புறம் ” பின்னிருந்து வந்த குரலில், யாரென்று திரும்பி கூட பாராமல், சட்டென்று திரும்பி “அப்பா ” என்று கூவிக் கொண்டே சஞ்சயின் கழுத்தை கட்டிக் கொண்டு, உத்ராவிடம் கூறிய அனைத்து கதைகளையும்  கூறி, கன்னத்தில் முத்தமிட்ட பின்னரே அவனை விட்டு இறங்கினாள்.

பின்பு, முதல் அறையில் சுய நினைவு இருந்தும், உடல் ஒத்துழைப்பு இல்லாமல் திறன் இழந்து படுத்த படுக்கையாய் இருக்கும் வனஜாவிடமும் அனைத்து கதைகளையும் கூறினாள். அவரால் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.

பேத்தியை அள்ளி அணைக்க கூட முடியாத நிலையில் இருப்பதை நினைத்து வெதும்பிட தான் முடிந்தது. ஆனால், அயானாவோ அவருக்கென தனியாக இருக்கும் கைக்குட்டையை எடுத்து கண்களை துடைத்ததோடு , அருகில் இருக்கும் தண்ணீர் குவாலையில் இருந்து ஸ்பூனில் எடுத்து கொடுத்து விட்டு, இலவசமாக முத்தங்களை கொடுத்த பின்பே வெளியில் வந்தாள்.

அந்நேரம் உத்ராவும் வேலைக்கு செல்வதற்கு வெளியில் வந்தாள். கருப்பு நிற ஹை நெக் டிஷர்ட், அதற்கு ஏற்றத்தக்க கருப்பு நிற ஜீன்ஸும் அணிந்து, கருப்பு நிற பெல்டில் ஹைலைட்டாக தங்க நிறம் இருக்க, அதற்கு ஏற்றத்தக்க காதில் தங்க நிற கனமான சிறிய வளையம் மற்றும் ஒரு கையில் ரோலஸ் வாட்ச் , மற்றொரு கையில் ஆண்கள் அணியும் ஒரு தங்க நிற காப்பு , முடியை தோள்வரை வெட்டி இருப்பதால் ஹேர் ஜெல் வைத்து தலையில் படர விட்டிருந்தாள்.

கையில் அழகான சிறு டியோர் பேக்கை இடக்கையில் வைத்துக் கொண்டு, ஐபோனை வலக்கையில் வைத்துக் கொண்டு வெளியில வரும் தன் மகளை கண்குளிர ரசித்தார் திருமலை. அதே நேரம் பூஜை அறையில் வலப்புறத்தில் உள்ள கண்மணியின் புகைப்படத்தை கண்டு “இது எல்லாம் பாத்து ரசிக்க நீ இல்லேயே மா ! ” என மனதிற்குள்ளேயே வெந்து கண்ணீர் சிந்தினார்.

தகப்பனிடம் கூறி விட்டு, அயானாவையும் அள்ளி அணைத்து முத்தமிட்டு விட்டு அவளின் பிரத்தேயகமான அலுவலகத்திற்கு சென்று விட்டாள்.

அவள் சென்றது தெரிந்த பின்பு, செல்வி வெளியில் வந்தாள். அதே நேரம் சஞ்சய் அவளை அழைத்து செல்வதற்கு அவனது வீட்டில் இருந்து வந்தான். அதோடு வனஜா மற்றும் திருமலையின் சாப்பாட்டையும் கொடுத்து விட்டு, மேடிற்ற வயிற்றை பிடித்துக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து வரும் ஏழு மாதம்  நிறைந்த கர்ப்பிணியாக வரும் மனைவியைக் காண காண திகட்டவில்லை அவனுக்கு.

அவனின் பார்வையின் மாற்றத்தை உணர்ந்த செல்வி கண்களில் கனலை கக்கினாள். அதை எல்லாம் கண்டு கொண்டால் இவளிடம் குடும்பம் நடத்துவது சாத்தியம் அன்று எனப் புரிந்ததால் இவனும் அவளுக்கு சரிசமமாக காதல் அம்புகளை பரிமாறினான்.

அவனை நெருங்கியவுடன் அவளின் தோளில் கை வைத்து முதுகில் கைகளை படர விட்டு இடுப்பில் தஞ்சமடைந்தான்.

“டேய் நான் உன் பொண்டாட்டி தான். எவளையோ தொடுற மாதிரி இவ்ளோ உல்லாசமா பண்ணிக்கிட்டு இருக்க ? எல்லாம் பண்ணித் தான் இவ்வளவு பெரிய வயிறு “

“எத்தனை தடவைனாலும் புது ஃபீல்லா தான் இருக்கு “என புல்லரித்து கூறியவனை ஏற இறங்க பார்த்த செல்வி,

“எனக்குலாம் அப்படி தோணலையே ? ” என கண்களை உருட்டி கூறினாள்.

“எனக்கும் அது தாண்டி பிரச்சனை ! உனக்கு ஒன்னும் தோணலைனு ”  எனக் கூறியதோடு மேடிட்ட வயிற்றை தடவி விட்டு ” இது கூட என் உழைப்பு தான் ” என பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

“எப்பா உங்க அம்மா இன்னும் கூப்பிடலையா ?” திருமலை கேட்க,

“அதுக்கு தான்ப்பா கூப்பிட வந்தேன் “

“அப்புறம் என்னதுக்கு இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்க, கிளம்பு மொத ….. எம்மா செல்வி சாயங்காலம் இங்க வந்துருடா ”  சஞ்சய்யிடம் ஆரம்பித்து செல்வியிடம் முடித்தார்.

வழக்கம் போல் சஞ்சய்யும்  காலையில்  வேலைக்கு செல்லும் முன் தனது பெற்றோர்களிடம் செல்வியைக் காண்பித்து விட்டு இருவரும் வேலைக்கு செல்ல காரில் பயணம் மேற்கொண்டனர்.

அயானாவை சஞ்சய்யின் பெற்றோர்கள் பார்த்து கொள்வதால்  திருமலையும் கண் அசந்தார்.

செல்வியை அவளின் இரண்டு அடுக்கு கட்டிடமாக உயர்ந்து நிற்கும் அவளது பொட்டிக்கில் இறக்கி விட்டான். அவளின் மேடிட்ட வயிற்றை பிடித்து கடினப்பட்டு இறங்க, சஞ்சய் அவளுக்கு உதவி செய்யும் முன் அவளின் பணியாளர்கள் உதவினார்.
இவனும் சிரித்துக் கொண்டே சென்றவன் இவர்களின் காரின் உரையாடல்களை நினைத்தான்.

” இங்க பாருடி…. என்னமோ நான் உன்னை கொடுமபடுத்துற மாதிரி திரு அப்பா உன்னை வீட்டு பக்கம் கூட விட மாட்டேங்கிறாரு ” சலித்துக் கொண்டு கூறிய சஞ்சய்யை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டே ,

” அது எனக்கும் அம்மா வீட்டுக்கு போகனும்னு ஆச இருந்துச்சு அதான் “

“அதான் நான் சொன்னேல்ல  எப்போ தோணுதோ அப்போ போனு “

” அத தான் நானும் பண்ணுறேன் “

” இந்தாடி அதுக்குனு இப்படி ஏழு மாசம் அங்க தான் இருக்கிறதா ? “

“அதான் சனிக்கிழமை சனிக்கிழமை வீட்டில தான இருக்கேன்”

” ஆனா நான் இல்லை ” பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

“நீ தான் டெய்லி வேலை முடிச்சுட்டு வந்து பாக்குற , இல்லையா இப்படி பிக் – அப் , டிராப் பண்ணுற ! அப்புறம் என்னடா ? “

வண்டியை ஒரு ஒரத்தில் நிறுத்தி விட்டு, அவள் அணிந்திருக்கும் சல்வாரினை மேலிழுத்து , அவனின் உயிரை தழுவினான். அவள் நெஞ்சில் தலை சாய்த்து அவளின் வயிற்றை தொட்டு தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். அதில் சட்டென்று உள்ளிருக்கும் பிஞ்சு உதைத்தது. அதில் இருவருக்குமே ஆனந்தம். எப்பொழுது எல்லாம் சஞ்சய் தொடுகிறானோ அப்பொழுது தான் பிள்ளை உதைக்கும். மற்ற நேரங்களில் எவ்வளவு முயற்சி செய்தாலும் மெலிதாக மட்டுமே உதைக்கும் இல்லையென்றால் உதைக்காது.

“இதெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுறேன் டி “என கூறி அவளின் இதழைக் கவ்வினான். வலிக்கும் வரை அவளின் இதழைக் கொய்தான். அவளுக்கு அவ்வதை கூட இனிமையாக தான் இருந்தது. சுகமாக ஏற்றுக் கொண்டாள். எவ்வளவு நேரம் நீண்டது என தெரியவில்லை, சரியாக செல்வியின் அலைபேசி அழைத்தது. அதில் அவளின் அம்மாவின் புகைப்படம் வந்தவுடன் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து வண்டியைக் கிளப்பினான்.

செல்வி மற்றும் சஞ்சய்யின் காதல் திருமணத்தை ஒத்துக் கொள்ளாத செல்வியின் பெற்றோர்களை மீறி திருமணம் செய்து வைத்தனர் திருமலை மற்றும் தீரன். சஞ்சய்யின் தந்தை ஒரு விபத்தில் காலை இழந்து விட்டார்.  அன்றிலிருந்து அவர் வெளியில் எங்கும் செல்வது இல்லை. அவருக்கு உறுதுணையாக இருக்க அவரது மனைவியும் வெளியில் வர மாட்டார் .

இதனாலேயே செல்வியின் காதல் பிடிக்கவில்லை. இருந்தும் அவள் பொட்டிக்கை உருவாக்கி தனித்து நிற்கிறாள் என்கின்ற செய்தியில் மகளைப் பார்க்க வேண்டிய ஆசை மெலிதாக எட்டிப் பார்த்தது இருவருக்கும். அவள் உண்டாகி இருக்கிறாள் என தெரிந்தவுடன் செல்வியின் அன்னை அனைத்தையும் மறந்து மகளிடம் பேசி விட்டார். அன்றிலிருந்து செல்வியின் தந்தை இல்லாத நேரம் செல்வியிடம் பேசுவார். அதனாலேயே அந்நேரத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாள்.

இவ்வாறு பேசிக் கொண்டே அவளின் பொட்டிக்கில் இறக்கி விட, சஞ்சய் அவனது கம்பெனிக்கு சென்றான். அவன் உள்ளே நுழைந்த நொடி அனைவரின் பார்வையும் அவன் மீதே இருந்தது. ஆம், அவனின் சொந்த உழைப்பில் உயர்ந்து நிற்கும் அவனது யுனிவர்ஸிட்டி. அங்கு வித்தியாசமாக இன்ஜியரிங் , ஆர்ட்ஸ் என்று இல்லாமல் செல் பையாலஜி, ஜெனிட்க்ஸ் , பையோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பையாலஜி என்று அணுவை பற்றிய துறைச் சார்ந்த படிப்புகள் மட்டுமே அங்கே இருந்தன.

அவன் உள்ளே சென்று அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, அவனின் பிரத்யேக அறைக்கு செல்ல, வீடியோ கால் அழைப்பு வந்தது. அதனைக் கண்டு புருவம் சுருக்கியவன்  , டீன் என்று பலகையிடப்பட்ட  அறைக்கு சென்றான். அங்கு தீரன் கம்பீரமாக அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தார். அவரிடம் தனது அலைபேசியை நீட்டி விட்டு இவன் எதிரில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டான். 

இவர் அவ்வழைப்பை எடுக்க,
அந்நேரம் கதவைத் திறந்து கொண்டு ப்யூன் ஒருவர் அவசரமாக பார்க்க வந்திருக்கிறார் என்று கூறிக் கொண்டிருக்கும் முன்னரே, ஆதவ் செழியன்  உள்ளே நுழைந்து சஞ்சய்யின் அருகில் அமர்ந்தான்.

தீரனும் சஞ்சய்யும் அவனை நேர்பார்வை பார்க்க, அதனைக் கருத்தில் கூட கொள்ளாமல் ப்யூனிடம்  ஜூஸ் கேட்டுக் கொண்டிருந்தான் ஆதவ் செழியன். ப்யூன்  முழிக்க, சஞ்சய் ” நீங்க போங்க …… அதெல்லாம் வேண்டாம் “என்று கூறி ப்யூனை வெளியில் அனுப்ப, “இட்ஸ் ஓகே “என கூறி ஆதவ் தோளைக் குலுக்கிய  நொடி,

” இட் இஸ் நாட் ஓகே மிஸ்டர் ஆதவ் செழியன் “என்று அலைபேசியில் இருந்து வந்த குரலில் ஆதவ் அதிர்ந்தாலும் வெளியில் காட்டாமல் , அந்த அலைபேசியை தூக்க , ஆதவ் அதிர்ந்தே விட்டான்.

“நோ ………. ” என்று ஆதவ் கத்த , தீரன் மற்றும் சஞ்சய் திரைப்படத்தை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“எஸ் மிஸ்டர் ஆதவ் செழியன். மை டீப்பஸ்ட் கண்டோலன்சஸ் (என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ” எனக் கூறி செழியனை தூக்கில் தொங்க விட்டு , துடிக்க வைத்து கொன்று விட்டான் நிலவன்.

கீர்த்தி ☘️

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்