583 views

 

           அன்று சென்னை மாநகரமே பரபரப்பாக இருந்தது. நகரத்தின் முக்கிய புள்ளி. செல்வந்தர் ராஜரத்தினம் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன. போதை பொருள் வழக்கில் அவரை மட்டுமல்லாது அவரோடு இணைந்து செயல்பட்ட பலரும் அந்த கைது நடவடிக்கையில் சிக்கி இருந்தனர்.

அதில் பல அரசியல் பிரமுகர்களும், பெரிய பெரிய அதிகாரிகளும் கூட இருந்தனர். இத்தனை பெரிய அளவில் இதுவரை இதுபோல நடந்ததில்லை என்பதால் மக்கள் அனைவரும் நடப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் அஸிட்டென்ட் கமிஷ்னர் அசோகமித்திரன் தான் எனவும், அவரது தனிப்பட்ட குழு மூலம் இரவு பகலாக வேலை செய்து அத்தனை ஆதாரங்களையும் திரட்டி இருக்கின்றனர் எனவும் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது.

இதனை எல்லாம் தனது அறையில் இருந்த தொலைக்காட்சியின் மூலம் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனாவிற்கு பெருமையாக இருந்தது. இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரன் தன்னவன் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடியது. தனது எண்ண ஓட்டத்தை எண்ணி அதிர்ந்து போனாள் சஞ்சனா.

ஆனாலும் அதை மாற்ற முயலவில்லை இம்முறை. மனதை அதன் போக்கிலே விட்டுவிட்டு செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆரம்ப காலத்தில் எதுவும் இல்லாத ஒரு சாதாரணமானவனாக இருந்த ரத்தினம், முதலில் சாராயம் விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான்.

அதில் வரும் வருமானம் போதுமானதாக இல்லாமல் இருக்க சிறு சிறு திருட்டுகளையும், அடிதடிகளையும் நடத்தி முக்கிய ரவுடி ஒருவனை கொன்றதன் மூலம் அவனது ஏரியாவில் பிரபலமானான்.

அப்போது அவனுக்கு கிடைத்தது தான் இந்த போதை பழக்க வழக்கம். மற்ற தொழிலை விட பல மடங்கு லாபம் என்பதால் ஒரு கட்டத்தில் அடிதடியை எல்லாம் விட்டு விட்டு முழுக்க போதை மருந்து தொழிலில் இறங்கினான்.

மற்றதை விட இதில் சவால் இருந்ததால் சிறிய அளவில் உணவு பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை தொடங்கி தொழிலதிபராக தன்னை காட்டிக் கொண்டான். யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களை பணம் கொடுத்தோ, இல்லை தனது அதிகாரத்தை காட்டியோ வளைத்து விடுவதுதான் அவனது வழக்கம்.

நன்கு தொழிலில் வருமானம் பார்க்கவும், தன் மீது இருந்த கேஸ்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கியதோடு தனது பெயரையும் இராஜ ரத்தினம் என மாற்றிக் கொண்டான். சென்னையின் முக்கிய தொழிலதிபராக ஆனான். குடும்பம் பெரிதானதும் தனது பிள்ளைகள் மூலம் வேறு வேறு தொழில்களை நிர்வகித்து வருகிறான்.

இவ்வளவு பணம் வந்த பின்பும் போதை பொருட்களின் மீதான மயக்கம் குறையவில்லை. ஆனால் இப்போது அரசாங்கம் பலவித கெடுபிடிகள் காட்டுவதால் முன்பு போல போதை பொருள் கடத்துவது அவ்வளவு எளிதாக இல்லை.

ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தூண்டுதல் படி இப்போது புதிய திட்டமாக குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டில் இருந்து மருந்து பொருளான டானிக் மற்றும் சிகரெட் போன்றவற்றிலும் அபின் போன்ற போதை மருந்துகளை கடத்தி விற்கலாம் என முடிவு செய்தனர்.

அதுதான் ராஜ ரத்தினம் செய்த முதல் தவறு. அதோடு இல்லாமல் அவருக்கு தப்பாத மகனாக பிறந்திருந்தான் ராம்பிரசாத். அத்தனை கெட்ட பழக்கங்களையும் கற்றதோடு தந்தையின் தொழிலையும் எடுத்து நடத்த ஆரம்பித்தான். தொலைக்காட்சியில் அசோக்கின் செய்தியாளர் சந்திப்பு ஒலிபரப்பாகி கொண்டிருந்தது.

“எப்படி சார் இவ்ளோ பேரை ஒரே நாள்ல அரெஸ்ட் பண்ணியிருக்கிங்க. இதுல முக்கியமா உங்களோட சீனியர் கமிஷனரும் இதுல இன்வால்வ் ஆகியிருக்கறதா சொல்லி அவரையும் விசாரணை வளையத்துல கொண்டு வந்திருக்கிங்க. இது உங்களோட அதிகாரத்தை மீறி நீங்க செயல்படறதா நினைக்கலையா? இவ்வளவு பேருக்கும் எதிரா நீங்க சரியான ஆதாரம் வைச்சிருக்கீங்களா?” எனக் கேட்டார் நிருபர் ஒருவர்.

“நான் என்னோட அதிகாரத்தை மீறி எதுவும் பண்ணிடல. அதோட இப்ப கைது பண்ணவங்க யாரும் சாதாரண ஆளுங்க இல்லனு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கப்ப வாரண்ட் இல்லாம யாரையும் நாங்க கைது பண்ணிட முடியாது. கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு மேல இதை பிளான் பண்ணி தான் இந்த வேலையை முடிச்சிருக்கோம்.

எல்லாருக்கும் எதிரா ஆதாரங்கள் இருக்கு. அதை நீதிமன்றத்துல சமர்ப்பிப்போம்” என பதில் குடுத்தான் அசோக். “சார். நீங்க இங்க ஜாயின் பண்ணியே எட்டு மாதம்தான் ஆகுது. அப்ப இந்த வேலைக்காக இங்க வந்தீங்களா? இல்ல வந்ததுக்கு அப்பறம் இந்த கேஸ் உங்களுக்கு கொடுக்கப்பட்டதா?” என மற்றொரு நிருபர் கேட்டார்.

“போதை பொருள் கடத்தல் ஒரு வழக்கா இருந்தது. ஆனா இது இவ்வளவு பெரிய கேஸா மாறும்னு நாங்க எதிர்பார்க்கல. விசாரணைக்கு அப்பறம் உங்களை மறுபடி சந்திக்கறேன்.” என்றவன் அவர்களிடம் விடைபெற்றான். சஞ்சனா தொலைக்காட்சியை அணைக்கவும், அங்கு சைந்தவி வரவும் சரியாக இருந்தது.

“என்னடி உன் ஆளு ஒரே நாள்ல ஓவர் பேமஸ் ஆகிட்டாரு. பார்த்து உன்னை கட்டிக்க மாட்டேனு சொல்லிட போறாரு.” என்றாள் சைந்தவி. “அதெல்லாம் சொல்ல மாட்டாரு. இன்னும் எவ்ளோ பேமஸ் ஆனாலும் என்னை மறக்கவும் மாட்டாரு. வேற யாரையும் கட்டிக்கவும் மாட்டாரு.” என்றாள் சஞ்சனா பெருமையாக.

“பாருடா மேடம்க்கு எப்ப இருந்து எங்கண்ணா மேல இவ்வளவு பாசம் வந்தது. இதை முதல்ல அங்க சொல்லனுமே.” என பரபரத்தாள் சைந்தவி. “அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேணாம். நானே பார்த்துக்குவேன். நீ போய் உன் வேலையை பாரு.” என அவளை கிளப்பினாள் சஞ்சனா.

அவள் சென்றதும் வந்த சந்திரிகா, “ஹேய் நியூஸ் பார்த்தியா? அசோக் கலக்கிட்டாருல.” என புகழ்ந்து கொண்டே வந்தாள். “ஆமாக்கா. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு. இதுனால அவருக்கு எவ்ளோ எதிரிங்க உருவாக போறாங்கன்னு தெரியல. உயிருக்கே கூட ஆபத்து வரலாம்.” என கவலைப்பட்டாள் சஞ்சனா.

“அதெல்லாம் நீ கவலைப்படாத. ‘நார்கோட்டிக்ஸ் இன்டலிஜென்ஸ் பியூரோ’ தெரியும்ல. அதான் ‘போதைப்பொருள் உளவுத்துறை’ அதோட முக்கியமான பொறுப்புல இருக்காராம் அசோக். இவ்வளவு சின்ன வயசுல யாருக்கும் இது கிடைக்காதுனு சொல்றாங்க.

சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டதுமே இங்க இருக்கற இந்த போதைப்பொருள் கடத்தலை இன்வெஸ்டிகேட் பண்ண சொல்லி தனியா பொறுப்பு குடுத்துருக்காங்க. சொல்லப்போனா போலிஸ் ஸ்டேஷன்லயே மஃப்டில வேலை பார்த்திருக்காரு. அப்பனா எவ்ளோ தைரியம் பாரு.

சோ நீ கவலைப்படற மாதிரில்லாம் எதுவும் இருக்காது. ஃபுல் செக்யூரிட்டி குடுப்பாங்க.” என தனது தங்கையை தேற்றினாள் சந்திரிகா. சற்று முன் இதே மனநிலை அவளுக்கும் இருந்தது. இதைப்பற்றியெல்லாம் கூறி சத்யாதான் அவளது பயத்தை போக்கினான்.

         மேலும் ஒரே வாரம் சென்றிருந்தது. அந்த வாரம் முழுக்க அசோக்கை யாரும் பார்க்கவே முடியவில்லை. கைது செய்ததற்கு ஆதாரங்கள் இருந்தாலும் அதை நீதிமன்றத்தில் ஒப்படைத்து நிரூபித்த பிறகே, சற்று நிம்மதியடையலாம். அந்த வாரம் முழுதும் அவர்களை விசாரணைக்கு எடுத்திருந்ததால் அசோக் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று.

பாதிக்கும் மேலானவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு சிலர் அப்ரூவராக மாறவும் தயாராக இருந்ததால் வேலை சற்று எளிதானது. அன்று மாலை சத்யா, அசோக், சஞ்சனா, சந்திரிகா நால்வரும் அவர்களது தோட்ட வீட்டில் கூடியிருந்தனர்.

பொதுவான நல விசாரிப்புகளுக்கு பிறகு, பேச்சு வழக்கில் வந்து நின்றது. “பொதுவா மும்பை, டெல்லிதான் டிரக்ஸ் ரொம்ப கடத்துவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப சென்னைல்லயுமா?” என ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா.

“இது மாதிரி நாம நினைக்கறது தான் ஒரு காரணமாக இருக்கு. அத்தனை இல்லீகல் பிஸினஸூம் இப்ப சென்னைல்ல நடக்குது. மத்த இடத்தை விட இங்க பாப்புலேஷன் அதிகம். அதாவது எல்லா தரப்பு மக்களும் அதிகமா வாழற இடம் சென்னை.

இங்க பணத்தேவை இருக்கறவங்கள இந்த மாதிரி கிரிமினல்ஸ் ஈசியா யூஸ் பண்ணிக்கிறாங்க. ஆனா பெரிய அளவுல இவங்க கடத்த மாட்டாங்க. சின்ன சின்ன அளவுல நிறைய பேரை வைச்சு செய்யறாங்க. ‘கேட்டமைன்’ போதைப்பொருள் கடத்தல்ல மும்பைக்கு அடுத்து இரண்டாவது இடத்துல சென்னை இருக்கு.

சர்வதேச போதை மருந்து கடத்தல்ல பொதுவா ரெண்டு டெர்ம் யூஸ் பண்றாங்க. ஒன்று தங்கப்பிறை இன்னொன்னு தங்க முக்கோணம். தென்மேற்கு ஆசியாவோட சில நாடுகளை இணைச்சு தங்க பிறைன்னும், தென்கிழக்கு ஆசியாவோட சில பகுதிகளை இணைச்சு தங்க முக்கோணம்னு சொல்வாங்க.

இது இரண்டும்தான் போதைப் பொருள் கடத்தல்ல முக்கிய பங்கு வகிக்குது. இதை இணைக்கிற முக்கிய இடமா சென்னை இருக்கறதால இப்ப இது ஒரு முக்கிய கேந்திரம்.” என அசோக் கூற, “இப்ப நீங்க இவங்களை அரெஸ்ட் பண்ணீட்டிங்கள்ள. அப்ப அவங்க தொழில் நஷ்டமடையாதா? உங்களை குறி வைக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.” எனக் கேட்டாள் சந்திரிகா.

“அதுதான் இல்ல. இது ஒரு சூதாட்டம் மாதிரிதான். வாய்ப்பு, திறமை, பணம் மூனும் இருக்கிற யார் வேணா மறுபடி இதை பண்ணுவாங்க. கேட்க கஷ்டமா இருந்தாலும் இதுதான் உண்மை. இவங்ககிட்ட இருந்து நூறு கிலோக்கு மேல டிரக்ஸ் பறிமுதல் பண்ணியிருக்கோம்.

பொதுவா இந்த மாதிரி கேஸ்ல ஒருத்தர் மாட்டிட்டா மத்தவங்க அவங்களை காப்பாத்த நினைக்கறதில்ல. அதுக்கு பதிலா அவங்க சேஃப் ஆகதான் பார்ப்பாங்க. எங்களோட கணக்குப்படி மொத்தம் 92 பேர் இந்த பிஸினஸ் பண்றாங்க. இப்ப மொத்தமே ஒரு இருபது பேர்தான் மாட்டி இருக்காங்க.

மேக்ஸிமம் கொரியர் மூலமாக நிறைய கடத்தல் நடக்குது. மைதா மாவு பாக்கெட்ல இருந்து ‘மனித வெடிகுண்டு’ன்னு சொல்லப்படற வயிறு மூலம் வரை கடத்தறாங்க.” என்றான் அசோக். “இவ்வளவும் இங்க யார் யூஸ் பண்றாங்க. எல்லாமே விலையும் அதிகம். அவ்ளோ டிரக்ஸ் இங்க தேவைப்படுதா என்ன?” எனக் கேட்டாள் சஞ்சனா.

இவங்களோட மெயின் டார்கெட்னா மேல்தட்டு வர்க்கத்தினர்தான். எல்லா எண்டர்டெயின்மெண்ட்டும் போர் அடிச்சு காசை கையில வச்சுட்டு என்ன பண்றதுனு தெரியாம இருக்கிற கோடிஸ்வரர்களும், லட்சாதிபதிங்களும் இதுல மாட்றாங்க.

உதாரணத்துக்கு கேட்டமைனே பார்த்திங்கனா சென்னை ஈ.சி.ஆர்ல உள்ள பஃப்ல தாரளமா புழங்குது. அரை ஸ்பூன் அளவு ஒரு லட்சம் ரூபாய். ஐந்து பேர் எடுக்கலாம் அதுவே. அப்ப பார்த்துக்கோங்க.” என்றான் சத்யா.

“இவ்வளவு விசயம் தெரிஞ்சும் எப்படி பெரும்பாலும் மாட்டமலே இருக்காங்க. போலிஸ்லாம் கண்டுக்க மாட்டீங்களா?” எனக் கேட்டாள் சஞ்சனா அசோக்கை பார்த்து. “பொதுவா அப்படின்னு சொல்லிட முடியாது. ஆனா எவ்வளவு அளவு பிடிக்கிறமோ அதை பொறுத்துதான் தண்டனைகள்.

ஒரு கிலோ வரை கடத்துனா கூட ஆறு மாசத்துல வெளில வந்துட முடியும். அதனால சரியான ஆதாரம் இல்லாம இந்த மாதிரி கேஸ் பிடிக்கறதுல போலிஸ்காரங்க ஆர்வம் காட்றதுல்ல.”  என விளக்கம் கொடுத்தான் அசோக்.

“அப்ப இந்த ராஜ ரத்தினம் மட்டும் எப்படி மாட்டினான். அவனை கரெக்டா ஃபாலோ பண்ணி பிடிக்கற அளவு அவன் என்ன பண்ணான்.” எனக் கேட்டாள் சஞ்சனா. “அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அது என்னனு தெரிஞ்சா நீயே அவனை கொல்லாம விடக்கூடாதுனு சொல்லுவ.” என பீடிகை போட்டான் அசோக்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்