406 views

               

                 அடுத்து ஒரு வாரம் கழிந்த பின்புதான் மீண்டும் சந்திரிகா மீண்டும் சத்யாவின் அலுவலகத்திற்கு சென்றாள். அடுத்த வாரத்தில் இருந்து பணி துவங்குவதால் அதற்கு பின்பே அலுவலுக்கு வர முடியும் என மெயில் அனுப்பி விட்டாள். அன்று கிளம்பி செல்லும்போது எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லை அவளிடம். வழக்கமான தனது வேலைகளை பார்த்தபடியே சென்றாள்.

அங்கு சென்றதும் நல்ல வேளையாக சத்யா அலுவலகத்தில் இருக்க, ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதார வளாகத்தின் கட்டிட வேலைகள் நிறைவடைந்திருக்க இவள் அனைத்து பள்ளிகளையும் பார்வையிட்டு, மாணவர்களே ஆர்வத்துடன் அதை பராமரிக்கும் வண்ணம் அதன் மேல் சில வேலைப்பாடுகள் வருமாறு வடிவமைத்த டிசைன்களோடு சென்றிருந்தாள்.

அவனே மீட்டிங் ஹாலில் அமர்ந்து அவள் தரும் டிசைன் மற்றும் விளக்கங்களை கேட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு சுகாதார வளாகத்திலும் அதை சுற்றி தோட்டம் போன்ற அமைப்பு இருந்தது. கழிவு நீர் தேங்கி நிற்காத வண்ணம் நீரை அதிகம் உறிஞ்சும் பயிர்களை அதில் வைக்கலாம் என யோசனை கூறியிருந்தாள்.

முதலில் கட்டிடங்கள் கட்டுவதற்காக இருவர்க்கு காண்ட்ராக்ட் கொடுத்தவன் மேல் வேலைகளுக்காக என ஆர்க்கிடெக் என்ற முறையில் இவளையும் இந்த பணியில் இணைத்து விட்டிருந்தான் சத்யா.

ஆனால் போக போக சாதாரண கழிப்பறைக்கு சரியான கட்டிடங்கள் இருந்தாலே போதுமே எதற்காக இவர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்தோம் என கூட சில முறை நினைத்திருக்கிறான் சத்யா. இன்று என்ன பிளான் எனக் கேட்டுவிட்டு காண்ட்ராக்ட்டை கேன்சல் செய்து விடலாம் எனவும் சிந்தித்து கொண்டிருந்தான்.

அதனால்தான் எப்போதும் அவளிடம் சிடுசிடுவென விழுபவன் இன்று மிகவும் பொறுமையாக இருந்தான். ஆனால் அவள் கூறிய சின்ன சின்ன யோசனைகள் அவனது எண்ணத்தையே நீர்த்து போக செய்தது.

பெயிண்டிங்கில் ஆரம்பித்து, சின்ன சின்னதாக சுகாதார வளாகத்தை சுற்றி செய்யும் சில வேலைப்பாடுகள் மாணவர்களை அதை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்ற உணர்வை நிச்சயம் கொண்டு வரும். என்னதான் செலவு செய்து பெரிய பெரிய கட்டிடங்களாக கட்டினாலும், மாணவ மணிகள் அதை பயன்படுத்துவதிலும், சரியாக பராமரிப்பதிலும் தான் சுகாதாரம் இருக்கிறது.

தனி மனித ஒழுக்கமே தேசத்தின் மாற்றத்திற்கு வித்திடும். இதை அடிப்படையாக கொண்டே சந்திரிகாவின் வடிவமைப்புகள் இருந்தது. அது மட்டுமின்றி இதோடு பள்ளியிலும் சிற்சில மாற்றங்கள் தனது சொந்த செலவில் செய்து தருவதாக கூறினாள் சந்திரிகா.

மறுப்பே சொல்லாமல் அவளது யோசனைகளை ஏற்றுக் கொண்டவன் பள்ளியில் இப்போது மாற்றங்கள் செய்ய வேண்டாம். இதை பராமரிப்பதை பொறுத்து சிறிது சிறிதாக மாற்றங்களை கொண்டு வரலாம் என கூறி விட்டான் சத்யா.

அவளுக்கும் அது சரியென பட எல்லா பள்ளிகளுக்கும் பொதுவான ஒரு டிசைனை சத்யாவை செலக்ட் செய்ய சொல்லி வாங்கி கொண்டவள், சரியாக ஒரு மாதத்தில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று விடும் எனவும் உத்திரவாதம் கொடுத்தாள்.

அதன்பிறகு அவளது லேப்டாப்பை மூடி வைக்கவும் சத்யா, “பரவால்ல மேம். எல்லாரையும் மாதிரி உங்களையும் தப்பா நினைச்சிட்டேன். என்னதான் பணம் இருந்தாலும் மத்த விசயத்துல எப்படியோ, வேலை விசயத்துல ரொம்ப பொறுப்பாவும், திறமையாகவும் நடந்துக்கறீங்க. ஐ அப்ரிஷியேட் யூ.” என்றான்.

ஏனோ அவன் கூறியது அவளுக்குள் கோபத்தை கிளர, “வேலைன்னு மட்டும் இல்ல சார். நான் எல்லா விசயத்துலயும் நான் சின்சியரா தான் இருப்பேன். நீங்க அதுக்கு சர்ட்டிபிகேட் குடுக்கனும்னு அவசியம் இல்லை.” என்றாள் வேகமாக. “ஓ.ஓகே. ஓகே கூல். நீங்க சின்சியர் தான் நான் ஒத்துக்கறேன். உங்ககிட்ட பர்சனலா ஒன்னு கேட்கட்டுமா?” என்றான் சத்யா.

“ம்ம் கேளுங்க” என சந்திரிகா கூறவும், “ஆமா நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணீக்கல?” எனக் கேட்டதில் அதிர்ந்து நின்றாள் சந்திரிகா. “அதை ஏன் நீங்க கேட்கறீங்க? இப்போதைக்கு பண்ணிக்கனும்னு தோணல. அவ்வளவுதான்.” என தயங்கியவாறு பேசியபடி அவன் முகம் பார்த்தாள்.

ஆனால் அதிலிருந்து எதையும் அவளால் கண்டறிய முடியவில்லை. அவனோ, “ஹேய் ரிலாக்ஸ். என்னாச்சு. நான் சும்மாதான் கேட்டேன். மாப்பிள்ளை ரெடியா இருக்கும் போது சீக்கிரம் பண்ணி செட்டிலாகலாமே. அதுக்குதான் கேட்டேன்.” என்றான் சத்யா.

“வாட் டு யூ மீன்.” என கோபமாக சந்திரிகா கேட்க, “கரெக்டா தானே கேட்டேன். உங்களுக்கும் தரணிக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம்னு கேள்விப்பட்டேன். அதான் வாழ்த்து சொல்லலாமேனு கேட்டேன். அவரும் உங்களுக்காக கனடாவெல்லாம் விட்டுட்டு இந்தியா வந்து இருக்கார்.

சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டா, நீங்களும் பாரீன் போய் நல்லா லைஃபை சந்தோஷமா வாழலாமே. அதான்” என அவன் பேசிக் கொண்டே போக இவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“ஸ்டாப் இட் சத்யா.” என கத்தியவள், “நான் எப்ப கல்யாணம் பண்ணிக்கனும். எங்க போய் செட்டிலாகனும்னு சொல்றத்துக்கு உங்களுக்கு எந்த ரைட்ஸ்ஸும் இல்லை. அண்டர்ஸ்டாண்ட். இனிமே என் பர்சனல் விசயத்துல தலையிடாதீங்க.” என கூறிவிட்டு வேகமாக வெளியேறினாள். ஆனால் அப்போதும் மறக்காமல் அவனுக்கு கொண்டு வந்த ஸ்வீட் பாக்ஸ் டேபிளில் வைத்து விட்டே சென்றிருந்தாள்.

காருக்கு வந்த பிறகும் அவளால் நிதானத்திற்கு வர முடியவில்லை. யாரை பார்த்து என்ன வார்த்தை கூறி விட்டான். அதுவும் என்னிடம் அந்த கேள்வியை எப்படி அவன் சொல்லலாம். யாராவது தான் காதலித்த பெண்ணிடம் இன்னொருவனை திருமணம் செய்ய சொல்வார்களா?

என சத்யாவை வறுத்தவளுக்கு, சத்யாவிற்கு தான் தன்னை யாரென்றே தெரியாதே. பிறகு அவன் கூறியது எப்படி தவறாகும் என்றெல்லாம் தோன்றவே இல்லை. அவனை திட்டி தீர்த்தபடியே அலுவலகத்திற்கு வந்தவள் அன்று முழுவதும் எல்லோரிடமும் கடுகடுவெனவே நடந்து கொண்டிருந்தாள்.

இங்கு அலுவலகத்தில் சத்யாவோ, ‘தான் என்ன தவறாக கேட்டோம். அன்று ரிசப்ஷனில் கூட திருமணத்திற்கு அசோக் வாழ்த்து சொன்னபோது கூட அமைதியா இருந்தாளே. அன்று எல்லோரும் இவர்களின் திருமணத்தை பற்றிதான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவேளை தரணி மீது ஏதோ கோபத்தில் இருப்பாளோ. அதனால்தான் அவன் பேச்சை எடுத்ததும் கோவமாகிட்டான்னு நினைக்கறேன்.’ என எதையோ கற்பனை செய்துக் கொண்டிருந்தான்.

            அஸ்வின் அந்த ஒரு வாரத்தில் ஓரளவு சகஜமாக தொடங்கியிருந்தான். நடுவில் ஒருநாள் சந்திரிகாவே அவனுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தாள். முதலில் எடுக்க வேண்டாம் என நினைத்தவன் என்னவென்று தான் கேட்போம் என நினைத்து எடுத்தான். அவளோ மறுமுனையில் சாதாரணமாக பேச இவனுக்குதான் ஏதோ போல் இருந்தது.

“இவ்ளோ நார்மலா பேசறீங்க. என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா சந்திரிகா?” என அஸ்வின் கேட்டான். “உங்க மேல எனக்கு என்ன கோபம் அஸ்வின். அன்னைக்கு உங்ககிட்ட சும்மா வாய் வார்த்தைக்கு ஃப்ரண்ட்ஸ்னு சொன்னேனு நினைச்சிங்களா?

நிஜமாலுமே நான் உங்களை என் ஃப்ரண்டாதான் நினைக்கறேன். உங்க மேல எனக்கு அக்கறை, பாசம் எல்லாமே இருக்கு. அதனாலதான் உங்களை நல்லபடியா வழி நடத்துற பொறுப்பும் எனக்கு இருக்குன்னு நினைச்சேன். மத்தபடி நீங்க பேசனதை நான் எப்பவோ மறந்துட்டேன்.” என்றாள்.

“ரொம்ப தேங்க்ஸ் சந்திரிகா. தேங்க்யூ சோ மச். நீ என்ன அவாய்ட் பண்ணுவன்னு நினைச்சேன். ஆனா நீ எப்பவும் ஒரே மாதிரிதானு நிரூபிச்சிட்ட சொல்லுங்க ஃப்ரண்ட். எதுக்கு ஃபோன் பண்ணீங்க.” என்றான் அஸ்வின். “ஒன்னுமில்ல. உங்க கம்பெனில ஏதாவது வேக்கன்சி இருக்குமா?” எனக் கேட்டாள் சந்திரிகா.

“த கிரேட் ஆர்க்கிடெக் சந்திரிகா என்னோட ஆபிஸ்ல வேலைக்கு வராங்களா? நம்ப முடியவில்லை. இல்லை.” என அஸ்வின் இழுக்க, “நான் அங்கல்லாம் வர ஐடியா இல்ல. அதுக்கு நேரமும் இல்ல.” என்றவள் சைந்தவி பற்றி கூற,

“ஓ. ஆனா இப்பதான் நிறைய இன்ஜீனியர்ஸ் வேலைக்கு எடுத்தோம். இப்போதைக்கு தீபக்குக்கு ஒரு பர்சனல் செகரட்டரி போஸ்ட் தான் வேகன்ட் இருக்கு. நான் வேகன்ஸி வந்தா சொல்லவா. சாரி.” என்றான் அஸ்வின்.

“நோ பிராப்ளம் அஸ்வின்.” என்றபடி ஃபோனை வைத்தவள், சைந்தவியிடம் விவரம் கூற அவளோ, “பரவால்ல. அந்த வேலைக்கே போறேன்.” என்றாள். அங்கு வந்த தரணி, “நீ போவ. ஆனா அவங்க உன்ன எடுக்கனுமே. இண்டர்வியூ வைச்சா பர்ஸ்ட் ரவுண்ட்ல வெளில வருவ பாரு.” என கிண்டலடிக்க,

சந்திரிகாவிடம் திரும்பியவள், “ஒரு இன்ஜினியரால பி.ஏ வா இருக்க முடியாதுன்னு கிண்டல் பண்றான் அக்கா. இந்த வேலையை வாங்கி காட்றேன். நீங்க அவங்ககிட்ட சொல்லுங்க” என்றாள். பிறகு மீண்டும் அஸ்வினிடம் கூறி, இண்டர்வியூவிற்கு ஏற்பாடு செய்தாள் சந்திரிகா.

இண்டர்வியூக்கு வந்த அன்றே அஸ்வினுக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. வந்த உடனே, “சந்துக்கா சொன்னாங்கன்னுலாம் என்ன வேலைக்கு எடுக்க வேண்டாம் சார். இந்த வேலைக்கு நான் ஓகேன்னா மட்டும் செலக்ட் பண்ணுங்க.” என்றுவிட, அவளது புரபைலை வாங்கி பார்த்தவன் அதிர்ந்தான்.

அப்போது அறைக்கு வந்த தீபக், அஸ்வின் முகம் அதிர்ச்சியில் இருப்பதை பார்த்தவன் என்ன பார்க்கிறான் என பைலை எட்டி பார்க்க, அவனும் அதிர்ந்தான். “என்ன ரெண்டு பேரும் அப்படி பார்க்கறீங்க.” எனக் கேட்க, “நீ இன்ஜினியரீங்ல கோல்ட் மெடலிஸ்ட் ஆ.” என இருவரும் ஒரு சேர கேட்டனர்.

“ஆமாம் சார். அப்படின்னா இந்த வேலை தர மாட்டீங்களா?” எனக் கேட்க, தீபக் சத்தம் போட்டான். “நீ படிச்ச யுனிவர்சிட்டிக்கும், உன் மார்க்குக்கும் எவ்வளவு பெரிய பெரிய கம்பெனில்லாம் உனக்கு ஆபர் வந்திருக்குமே. நீ ஏன் அதெல்லாம் விட்டுட்டு இங்க ஒரு பி.ஏ போஸ்ட்க்கு இண்டர்வியூ வந்திருக்க. உனக்கு ஏதாவது மூளை கீது கழன்றுச்சா.” என்றான்.

“அங்கெல்லாம் வேலைக்கு போனா என்ன நடக்கும்.” எனக் கேட்டாள் சைந்தவி பொறுமையாக. “என்ன நடக்குமா. லட்சக்கணக்குல பணம் சம்பாதிக்கலாம். ஆன்சைட் கூட போக சான்ஸ் கிடைக்கும்.” என அஸ்வின் கூற, “அவ்வளவு தான் சார் நடக்கும். மத்தபடி இந்த திறமையை முழுசா பயன்படுத்த முடியாது. யாரோ ஒருத்தர் சொல்ற வேலையை செஞ்சுகிட்ட பணம் பண்ணலாம் அவ்ளோதான்.

அப்ப சொந்தமா தொழில் பண்ணலாமே. இங்கயும் வேலைக்கு தானே வந்திருக்கன்னு நீங்க கேட்கலாம்.சொந்தமா பிஸினஸ் பண்ண கொஞ்சமாவது அனுபவம் வேணும். இங்க வேலைக்கு சேரனும்னு நான் நினைச்சதே உங்க பிராஜக்டை பார்த்துதான். புதுசா ஏதாவது சாதிக்கனும்னு உங்க ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரு எக்ஸ்போஷர் இருக்கு. அதுல நானும் ஜாயின் பண்ணிக்கனும்னு நினைச்சேன் அவ்ளோதான்.” என்றாள் சைந்தவி.

அதன்பின் இவர்களால் எதுவும் பேச முடியாமல் போக பி.ஏ போஸ்டிங் இல்லாமல் இருவருக்கும் அஸிட்டெண்ட் ஆக இருக்கும்படி போஸ்டிங்கை போட்டு அவளை வேலைக்கு சேர்த்தனர்.

           அன்று போலவே இன்றும் அதே கெஸ்ட் ஹவுஸில் கமிஷனர் கையைக்கட்டிக் கொண்டு நின்றிருக்க, அந்த பெரிய மனிதர் சில தகவல்களை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்துவிட்டு கமிஷனரிடம் அதை கொடுக்க அதில் சத்யாவும், அசோக்கும் சேர்ந்து பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தன.

அதை பார்த்ததும் அவர் முகம் அதிர்ச்சியை பிரதிபலிக்க, “இப்ப புரியுதா. அந்த பய ஏன் உன் பேச்சை கேட்காம ஆடறானு. எல்லாம் அந்த கலெக்டர் குடுக்கற சப்போர்ட். இரண்டு பேரும் ஒரே நேரத்துல இங்க போஸ்டிங் வாங்கி வந்திருக்கானுவ. அந்த கலெக்டர் தம்பி ஏதோ இந்த ஊரை காப்பாத்த வந்த வள்ளல் மாதிரி ஏதேதோ பண்றான்னு கேள்விப்பட்டேன்.

அவன் என்னவோ பண்ணிட்டு போகட்டும். ஆனா ஆட்டை கடிச்சி, மாட்டை கடிச்சு கடைசில மனுசன கடிச்ச கதையா இப்ப என் பிஸினஸ்லயே கை வைக்க பார்க்கறாங்க.” எனவும் கமிஷனர் அவரை புரியாமல் பார்த்தார். அதற்கு அவர், “என்ன அப்படி பார்க்கற. அவனுங்க ரெண்டு பேரும் இருக்கறதுதான் தனித்தனியா. ஆனா செய்யற வேலை ஒன்னாதான் இருக்கு.

இப்ப எங்கங்க போதை சப்ளை நடக்குதுன்னு லிஸ்ட் எடுக்கறாங்களாம். இதெல்லாம் தெரியாம நீ ஒரு கமிஷனர்.” எனக் கூறிக் கொண்டு இருக்க. அன்று தோப்பு வீட்டில் பார்த்த ஒருவன் ரகுவை கூட்டிக்கொண்டு அங்கு வந்து கொண்டிருந்தான்.

ரகுவை காட்டி, “இவன் யாருனு பார்க்கறீயா. இவன்தான் நம்ம உளவாளி. இப்ப நமக்கு நம்பகமான தகவல் குடுக்கற விசுவாசி. அந்த போலிஸ்காரன் இவனை வச்சு நம்பளை பிடிக்க பார்த்தான். நான் இவனை வைச்சே அவனை முடிக்கறேன் பாரு” என்றார்.

“அப்ப அவனை டிரான்ஸ்பர் பண்ணிடட்டுமா. சார்?” என கமிஷனர் கேட்க, “இனிமே வாலாட்டுனா டைரக்டா உலகத்தை விட்டே டிரான்ஸ்பர் தான். நீ பேசாம இரு.” என சிரித்தார் அவர்.

      இரு நாட்களுக்கு பிறகு, அதிகாலை இரண்டு மணியளவில் சென்னை ஏர்போர்ட்டில் முகம் மறைத்தபடி, ஆளுயர ஜர்கின் ஒன்றை போட்டபடி வந்து இறங்கினான் ஒருவன். நேராக சத்யாவின் வீட்டை அடைந்தவன் பின்பக்க சுவர் மூலமாக ஏறிக் குதித்து, அவனது அறையை நோக்கி சென்றவன், சத்யா நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்து, உறையில் இருந்து கத்தியை எடுத்தபடி அவனை நோக்கி நகர்ந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *