453 views

சந்திரிகா, தன்னை பற்றி அறிந்து கொண்ட பின்பும் அமைதியாக அமர்ந்திருந்த தனது தங்கையை பார்த்தவள் அவளை உலுக்கினாள். அதன்பின்பே நனவுக்கு வந்தவள் தனது தமக்கையை அணைத்துக் கொண்டாள். “சாரிக்கா. ரொம்ப கஷ்டப்படுறல்ல. ஏன்கா இவ்ளோ நாள் இதெல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணனும்னு உனக்கு தோணல?” எனக் கேட்டாள்.

“சொல்லக் கூடாதுன்னு இல்லமா. இதெல்லாம் நடக்கறப்ப நீ ரொம்ப சின்ன பொண்ணு. அதனால தான் உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு” என்றாள். “இன்னைக்கு வரட்டும் அவன். இவ்வளவு நடந்திருக்கு. ஏதோ ஒரு நார்மல் லவ் பெயிலியர்னு சொன்னான். அவனை இன்னைக்கு சும்மா விட மாட்டேன்.” என தரணியை நினைத்து சஞ்சனா கூற,

“அவனுக்கும் இவ்வளவு டீடெய்லா லாம் தெரியாதுடா. அதனால தான் சொல்லிருக்க மாட்டான். எதுனாலும் நாளைக்கு பேசிக்கலாம். நீ போய் தூங்கு” என்றாள் சந்திரிகா. “ம்ம்க்கா. ஆனா எனக்கு ஒரே ஒரு டவுட். இவ்வளவு நடந்திருக்கு. அவருக்கு இன்னமும் பழசெல்லாம் நியாபகம் வராமலா இருந்திருக்கும். உன்னை பார்க்கறப்ப எந்த ரியாக்ஷனும் காட்டலயா?” எனக் கேட்டாள் சஞ்சனா.

“அவரை பத்தி எனக்கு நல்லா தெரியும் சஞ்சனா. அவருக்கு நியாபகம் வந்திருந்தா கண்டிப்பா என்னை தேடி வந்திருப்பார். ஒரு வேளை சில விசயங்கள் மட்டும் கூட நினைவில் இருக்கலாம். என்னை பற்றிய நியாபகங்கள் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனா எந்த சூழ்நிலையிலும் என் சத்யாவை நான் சந்தேகப்பட மாட்டேன். மனசை போட்டு குழப்பிக்காம போய் தூங்கு.” என தங்கையின் மனம் அறிந்து பதில் கொடுத்தாள் சந்திரிகா.

            வழக்கமாக வரும் வெய்யோனின் கதிர்வீச்சு சற்று குறைவாக இருக்க, வானமும் மேகங்களால் மூடப்பட்டு, சிலு சிலுவென்ற காற்றோடு, ரம்யமாகவே விடிந்தது அன்றைய காலைப்பொழுது. எப்போதும் நேரத்தோடு எழுந்து விடும் சந்திரிகா பழைய நினைவுகளின் தாக்கத்தாலோ என்னவோ, அசந்து எட்டு மணிக்கு மேலும் உறங்கி கொண்டிருந்தாள்.

சஞ்சனாவும் தனது தமக்கையை பின்பற்றி அறையில் இருந்து வெளியே வராமல் உறக்கத்தை தழுவிக் கொண்டிருந்தாள். இருவரையும் காணாமல் தரணியோ யாரை முதலில் எழுப்பலாம் என யோசனை செய்துக் கொண்டே ஹாலில் அமர்ந்திருந்தான்.

ஆனால் வழக்கமாக பத்து மணி உறங்கும் நமது அஸ்வினோ காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி எல்லாம் செய்து முடித்து எட்டு மணிக்கெல்லாம் தயாராகி சாப்பாட்டு மேஜைக்கு வந்தான்.

அவன் வருவதை கண்ட அவனது தந்தை தெய்வ விநாயகம், “சரஸ்வதி. காலையிலே மேக மூட்டமா இருக்கு. மழை வரும் போல. இன்னைக்கு புயல்னு கூட நியூஸ்ல சொல்லலயேனு கேட்டியே. இப்ப தெரியுதா காரணம்.” என கிண்டலடித்தார். அதைக் கேட்டு அருண்மொழியும், சரஸ்வதியும் சிரிக்க, அதை பார்த்த அஸ்வினோ கடுப்பாக வந்து அமர்ந்தான்.

“என்னடா குடும்பம் இது. பொதுவா பிள்ளைங்க பொறுப்பா இருந்தா சந்தோஷப்படற வீட்டை பாத்திருக்கேன். இங்க என்னடான்னா எல்லாரும் சேர்ந்து கிண்டல் பண்ணி சிரிக்கறீங்க.” என்றான் அஸ்வின்.

“டேய் டேய் போதும்டா. நீ எப்பயும் இப்படி இருந்தா பாராட்டலாம். ஆனா நீயே ஆடிக்கு ஒருமுறை ஆவணிக்கு ஒருமுறை நேரத்துல எழுந்திருக்கிற. அப்பறம் சிரிப்பு வராம என்ன பண்ணும்.” என சிரித்துக் கொண்டே கைகழுவினார். “அப்படில்லாம் சொல்லாதீங்கப்பா. இதுவரை நீங்க பார்த்த அஸ்வின் வேற. இனிமே நீங்க பார்க்க போற அஸ்வினே வேற.

இனிமேல் எல்லா நாளும் இப்படித்தான். ஐயாக்கு கிடைச்சிருக்கற புது பிராஜக்ட் அப்படி.” என பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தவன், அன்னையின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்து விட்டு, “வரேன்மா. வரேன் டாடி. பாய்டா அண்ணா. அண்ணியை கேட்டேனு சொல்லு.” என்றவன் துள்ளிக் குதிக்காத குறையாக அலுவலகம் சென்றான்.

“என்னவோ நடக்குதுமா. என்னனு தான் தெரியல. பையன் மந்திரிச்சு விட்ட மாதிரியே நடந்துக்கறான்ல.” என்றான் அருண்மொழி அன்னையிடம். “விடு அருணு. எப்படியோ அவன் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.” என சரஸ்வதி கூறவும், மற்ற இருவரும் அதை ஆமோதித்து விட்டு அவர்களும் அலுவலகம் கிளம்பினர்.

அஸ்வின் அலுவலகத்திற்கு வந்தபோது அப்போதுதான் ஒவ்வொருவராக ஆபிஸ் உள்ளே வரத் தொடங்கியிருந்தனர். தீபக் அறைக்கு சென்றால் அவன் இன்னும் வரவில்லை. உடனே அவனுக்கு ஃபோன் செய்தவன், “டேய் மணி ஒன்பது ஆகுது. இன்னும் ஆபிஸ் வராம என்னடா பண்ற.” என கத்த தொடங்க,

மறுமுனையிலோ எந்த சத்தமும் இல்லை. இவன் மறுபடி குரல் கொடுத்ததும், “நான் அனு பேசறேன். அண்ணன் குளிக்குது. சொல்ல சொன்னுச்சு.” என பதில் கிடைத்தது. ‘அச்சோ தீபன்னு நினைச்சு கத்திட்டமே.’ என நினைத்தவன்.. “பரவாயில்ல அனு. ஒன்னும் அவசரமில்லை. அவனை பொறுமையா வர சொல்லு.” என்றான் அஸ்வின்.

“சாரி” என்றாள் அனு. “நீ ஏன்மா சாரி சொல்ற.” என அஸ்வின் கேட்க, “இல்ல என்னாலதான் அண்ணாக்கு லேட் ஆகிடுச்சு.” எனும் போதுதான் அவளது குரல் சோர்வாக ஒலிப்பதை அறிந்தான் அஸ்வின். “ஆமா, நீ ஏன் வீட்ல இருக்க? காலேஜ் போகலயா?” எனக்கேட்க,

அதற்குள் அவள் கையில் இருந்து ஃபோனை வாங்கிய தீபக், “சொல்லிட்டு வைன்னு தானே சொன்னேன். ஏன் இப்படி கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்க. போ. போய் படு.” என்று அனுவிடம் கூறியவன் அஸ்வினிடம், “அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைடா அதான் லேட் ஆகிடுச்சு. இன்னும் 10 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.” என்றான் தீபக்.

உடனே அஸ்வின்,”என்னாச்சுடா. ஹாஸ்பிட்டல் எதும் கூட்டிட்டு போனியா?” எனக் கேட்டான். “இல்லடா நார்மல் பீவர்தான். டேப்லெட் குடுத்துருக்கேன். அப்பறம் சொல்ல மறந்துட்டேன்டா. இன்னைக்கு சந்திரிகா ஆபிஸ்ல வர வேணாம்னு சொல்லிட்டாங்க. காலைல தான் ஃபோன் வந்தது.” என கூடுதல் தகவலையும் கூறினான்.

அஸ்வின்,”ஓ ஏனாமா?” எனக் கேட்க, “அது தெரியலடா. நாளைக்கு வர சொன்னாங்க.” என தீபக் கூறவும் ஒரு நிமிடம் யோசித்தவன், “ஓகேடா. நீ வீட்லயே இரு. நானே வரேன். வந்து பேசிக்கலாம்.” எனக்கூறி ஃபோனை வைத்து விட்டு, வெளியே வந்து காரை எடுத்தான்.

தீபக் வீட்டிற்கு சென்றதும், “இப்ப அனுக்கு எப்படி இருக்கு.” எனக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவன் சோபாவிலே படுத்திருந்த அனுவை கண்டதும், சோர்வாக தெரிந்தவளை தொட்டு பார்த்தான். காய்ச்சல் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. இவன் சத்தம் கேட்டதும் சமையலறையில் இருந்து கஞ்சியுடன் வெளியே வந்தான் தீபக்.

“என்னடா நார்மல்லா இருக்கானு சொன்ன. இப்படி நெருப்பா கொதிக்குது. வா உடனே ஹாஸ்பிட்டல் போலாம்.” என அழைக்கவும், இப்போது அனு மறுத்தாள். அவன் அதை எல்லாம் சட்டையே செய்யாமல் இருவரையும் கிளப்பி மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.

மருத்துவர் பரிசோதித்ததும் அவரிடம் விவரம் கேட்டவன் நார்மல் பீவர் என்றதையும் கேட்காமல் வலுக் கட்டாயமாக பிளட் டெஸ்ட் எடுக்க வைத்து அதையும் பரிசோதித்த பின்பே வீட்டுக்கு கூட்டி வந்தான். வீட்டிற்கு வந்ததும் தீபக்கிற்கு ஒரு ஃபோன் வர, விவரம் கேட்டவன் அஸ்வின் கிளம்புவதை பார்த்ததும் தானும் வெளியே வந்தான்.

“நீ எங்கடா வர. இன்னைக்கு லீவ் எடுத்துகிட்டு அனுவை பாரு.” என்றான் அஸ்வின். “இல்லடா ஒரு சின்ன வேலை பழைய ஆபிஸ் வரை போயிட்டு வரனும். ரொம்ப அவசரம். அதான் கிளம்பறேன். ஒரு ஒன் ஹவர்ல வந்திடுவேன்.” என்றான் தீபக்.

“அப்படியா சரி நீ போய்ட்டு வா. அதுவரை நான் அவ கூட இருக்கேன்.” என அஸ்வின் கூற, “உனக்கு ஏன்டா வீண் சிரமம். நான் சீக்கரம் வந்திடுவேன்.” என்றான் தீபக். “இதுல என்னடா சிரமம். நம்ப அனுதானே. நீ கிளம்பு.” என அவனை அனுப்பி வைத்த அஸ்வின், சமையலறையில் நுழைந்து தீபக் வைத்திருந்த கஞ்சியை சூடு செய்து எடுத்துக் கொண்டு அனுவை அழைத்தான்.

“நீங்க கிளம்பலயா?” எனக் கேட்டுக் கொண்டே வந்தவளை சோபாவில் அமர வைத்தவன் கஞ்சியை எடுத்துக் குடுத்தான். “தீபக் வந்ததும் கிளம்பறேன். நீ இந்த கஞ்சியை குடி” என்றவன், அவள் கை நடுங்குவதை பார்த்து தானே ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்டத் தொடங்கினான்.

‘அஸ்வினின் மனதில் எந்த விகல்பமும் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது அனுவிற்கு. ஆனால் தன் மனம் என்ன நினைக்கிறது என்பதையே சில நாட்களாக புரிந்து கொள்ள முடியவில்லை. அஸ்வினின் புறம் தன் மனம் சாய்வது நல்லதிற்கில்லை என்பது புரியாமல் இல்லை மூளைக்கு.

ஆனால் அவளது மனமோ அதையெல்லாம் அலட்சியப்படுத்தி அவன் பின்னே சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது கூட நண்பனின் தங்கை என்ற பாசத்தில் அஸ்வின் காட்டும் அக்கறை, தன் மீதான காதலாக இருக்க கூடாதா? என மனம் ஏங்குகிறது.’ இப்படியே யோசித்துக் கொண்டிருந்தவள், அவனது சத்தத்தில் நடப்புக்கு வந்தாள்.

“சாப்பிடும் போது என்ன யோசனை. ஒழுங்கா சாப்பிடு.” என ஊட்ட, அவனை பார்த்துக் கொண்டே உண்டு முடித்தாள். பிறகு அவனே மாத்திரைகளை எடுத்துக் கொடுக்கவும், மறுக்காமல் வாங்கி கொண்டவள், படுத்துக் கொள் என்றதும் சோபாவிலே கால் நீட்டி படுத்தாள். “உள்ள போய் படுத்துக்கலாம்ல” என அஸ்வின் கேட்டதற்கு, “இல்ல பரவால்ல. இங்கதான் நல்லா இருக்கு.” என பதில் கொடுத்தாள் அனு.

பின்னே உள்ளே சென்று படுத்தால் அஸ்வினை பார்க்க முடியாதே. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தற்போது தனக்கு கிடைக்கும் இந்த நிகழ்வுகளை பொக்கிஷமாக சேர்த்துக் கொள்ள நினைத்தாள் அனு. அஸ்வின் சென்று போர்வை எடுத்து வந்து போர்த்தி விட்டவன், “தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போகிடும். சரியா தூங்கு.” என்றவன் எதிர் சோபாவில் அமர்ந்து நாளிதழ் ஒன்றை புரட்ட ஆரம்பித்தான்.

அனுவோ அஸ்வினையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள். அலை அலையான கேசம், சற்று அகன்ற நெற்றி, அது தெரியாமல் இருக்க இட்டிருந்த சின்ன சந்தன கீற்று, கோட் சூட்டில் நன்கு பாந்தமாக அமர்ந்து அவன் புத்தகம் படிக்கும் அழகே ரசிக்கும் படி இருந்தது.

சட்டென நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவளது பார்வை வித்தியாசமாக பட, அவளோ இவனை பார்ப்பதை தவிர்த்தாள். “ஏதாவது வேணுமா?” என அஸ்வின் கேட்க, மறுப்பாக தலையசைத்தாள். “அப்ப தூங்கு.” என அஸ்வின் கூறவும், அவனை கண்ணுக்குள் நிரப்பிக்கொண்டே மாத்திரையின் வீரியத்தில் மெதுவாக உறங்க ஆரம்பித்தாள்.

அதன்பின்பு, ‘அனுவின் பார்வையில் ஏதோ வித்தியாசமாக தெரிந்ததே. என்னவாக இருக்கும்’ என யோசித்தவன், பிறகு இதுல யோசிக்க என்ன இருக்கு. உடம்பு சரியில்லாததால அப்படி இருந்திருக்கும்.’ என தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான்.

இன்னும் சற்று யோசித்து விடை அறிந்திருந்தால் பின்னால் வரப்போகும் பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாமோ!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *