395 views

            சத்யா தன்னை மறந்துவிட்டான் என்ற வேதனை ஒருபுறம். தந்தையின் மிரட்டல் ஒருபுறம் இருக்க, என்ன செய்வதென தவித்து போனாள் பாவையவள். இதையெல்லாம் விட தன்னை நினைவுபடுத்துவது அவனது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பது தான் அவளது அதிகபட்ச கவலையாக இருந்தது.

சில மணித்துளிகள் யோசித்த பின் வேறுவழியின்றி அவனை பிரியும் முடிவையே சந்திரிகா எடுத்தாள். எடுக்க வைக்கப்பட்டாள் எனவும் கூறலாமோ! அதன்பிறகு அடுத்த ஒரே வாரத்தில் சக்கரவர்த்தியால் கனடா அனுப்பப்பட்டாள் சந்திரிகா. ஆனால் அன்றைய தினத்திற்கு பிறகு வீட்டில் ஒருவரையும் பார்க்க பிடிக்கவில்லை அவளுக்கு.

பாரபட்சமே இன்றி அனைவரையும் வெறுத்தாள். அவளது அன்னையை பார்க்கும்போது மட்டும் மனம் சற்று இளகும். ஆனால் பிறகு அவரை வைத்து ஏதாவது தன்னிடம் பேச வருவார்கள் என அவரிடமும் பேசாமல் இருந்தாள். யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமலே கனடா வந்து சேர்ந்தாள் சந்திரிகா.

சக்கரவர்த்தி செய்த ஒரே நல்ல விசயம் அவளை விடுதியில் எதுவும் சேர்க்காமல் தனது பால்ய கால நண்பனான கோதண்டரங்கம் வீட்டில் தங்க வைத்தது தான். சிறு வயதில் இருந்தே அவர்கள் குடும்பத்தில் அனைவரையும் தெரியும் என்பதால் சந்திரிகாவால் அங்கு சற்று இயல்பாக இருக்க முடிந்தது.

ஆனால் அவளை இவ்வளவு உயிர்ப்புடன் மாற்றிய முழுப் பொறுப்பும் தரணியோடதுதான். அவள் கனடா வந்த சில நாட்கள் ஏதோ மாதிரிதான் நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள். தரணிதான், “உனக்கு என்ன பிரச்சனைன்னு நான் கேட்க மாட்டேன் சந்துமா. ஆனா நீ இப்படியே இருந்தா எல்லாம் சரியாகிடுமா?

நீ அங்கிள் மேல கோபமா இருக்கனு அவர் சொல்றாரு. நீ அவரோட நிழல்ல தான் இருக்க போறீயா. இல்ல உன் படிப்பை முடிச்சு சொந்த கால்ல நிற்க போறீயான்னு நீயே முடிவு பண்ணுஎன அவன் கூறியது சரியாக வேலை செய்தது. எந்த பணத்திமிரில் இப்படியெல்லாம் செய்தாரோ அந்த பணத்தை, அவரை அடியோடு வெறுத்தாள்.

அதற்காகவே தரணியிடம், “நான் படிக்கறேன் தரணி. ஆனா எனக்கு பார்ட் டைம்ல ஏதாவது வேலை வாங்கி தரியா?எனக் கேட்டவளை ஓங்கி அறையலாம் போல இருந்தது தரணிக்கு. இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், “ஏன் சந்து. நானும் உனக்கு பிடிக்காதவனா போயிட்டனா? நான் உன்னை படிக்க வைக்க மாட்டனா? இப்படியெல்லாம் பேசாத ப்ளீஸ்என்றான்.

அப்படில்லாம் இல்ல. ஆனாலும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.” என சந்திரிகா தயங்கவும், “சரி ஓகே. நீ பிஸினஸ் ஆரம்பிக்கறப்ப என்னையும் பார்ட்னரா சேர்த்துக்கோ. இதை விட அதிகமா வாங்கிக்கலாம்லஎன்றான் விளையாட்டாக. ஆனால் அதையே பிடித்துக் கொண்டவள் தனது தொழிலில் அவனையும் ஒரு பார்னர் என்றே போட்டு ஆரம்பித்தாள்.

தரணியும், அவனது தங்கை சைந்தவியும் செய்யும் சேட்டையில் வீடு எப்போதும் கலகலவெனவே இருக்கும். அதை குடும்பமாக வேறு அமர்ந்து அந்த வீட்டின் பெரியவர்கள் ரசித்துக் கொண்டிருப்பர். அந்த வீட்டின் சந்தோஷமான சூழலே சந்திரிகாவை தனது துக்கத்தை வெளிக் காட்டிக் கொள்ளாதபடி பார்த்துக் கொண்டது.

ஒரு வருடம் அப்படியே கழிய, இரண்டாம் வருடத்தில் இருந்து அங்கு படிப்பை தொடர்ந்திருந்ததால் இப்போது மூன்றாம் வருடம் நோக்கி சென்றிருந்தாள். இந்த நிலையில் தான் தன் மனம் திறந்து தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் தனது நண்பனிடம் கூறினாள் சந்திரிகா.

அவளது நிலையை அறிந்தவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எப்படியாவது அவளை மாற்றி நல்ல முறையில் வாழ வைத்து விட வேண்டும் என நினைத்தான் தரணி. அதற்காகவே அவளது எண்ணத்தை மாற்ற பல கலைகளை கற்க வைத்தான். தோழமைகளுடன் இயல்பாக இருக்க சொல்வான். அவனது உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டாள்.

அப்போதுதான் தோழிகள் வட்டத்தை பெருக்கிக் கொண்டு, ஓரளவு சாதாரணமாக வலம் வர தொடங்கி இருந்தாள். ஆனாலும் இரவில் தூங்கும் போது, சத்யாவின் நினைவுகளிலே பல நாட்கள் தூக்கத்தை தொலைத்திருப்பாள்.

தனது கல்லூரி தோழமைகள் மூலம் சத்யாவை பற்றி அறியலாம் என்றால், உதய்யும், சத்யாவும் டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு எங்கேயோ சென்று விட்டதாக தகவல் தான் கிடைத்தது. ‘சத்யாவிற்கு நினைவே வரவில்லையோ. அதனால் தான் தன்னை தேடவில்லையோ. மறக்கும் அளவுதானா அவன் எண்ணத்தில் நாமிருந்தோம்.’ என தன்னையே சில நேரம் கழிவிரக்கத்தில் ஆழ்த்திக் கொள்பவள்,

மறுநாளேசத்யாவின் மீது வைத்துள்ள நம்பிக்கை துளி அளவும் குறைய கூடாது. கண்டிப்பாக தன்னை தேடி வருவான்என தன்னையே சமாதானம் செய்து கொள்வாள் சந்திரிகா. இப்படியே நான்கு வருடத்தையும் முடித்தவள், இதுவரையிலும் வீட்டில் யாரிடமும் பேசமாட்டாள்.

அவள் என்ன செய்கிறாள், ஏது செய்கிறாள் என்பதை தரணியின் மூலமே அனைவரும் அறிந்து கொள்ள முடிந்தது. இவளை நினைத்து ஏக்கத்திலே மல்லிகாவின் உடல் நிலையோ நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டே இருந்தது.

ஆனால் அவள் நல்ல முறையில் படிப்பை முடிக்கட்டும். அங்காவது சில நாட்கள் நிம்மதியாக இருக்கட்டும் என சந்திரிகாவிற்கு தெரியாமலே பார்த்துக் கொண்டார். நான்கு வருடம் முடிய போகும் நிலை வரை வெளியே அனாவசியமாக போகாதவளை முதல்முறையாக ஊர் சுற்றி பார்க்க அழைத்தனர் தோழிகள்.

தரணியும்,சைந்தவியும் உடன் வந்தால் மட்டுமே வருவேன் என அடம்பிடிக்க பிறகு அவர்களும் இணைந்து, கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று வரலாம் என இரு நாள் ஏற்பாடாக செய்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்ததாலும் தோழிகளுக்காக தனது உள்ளக் கிடக்கையை மறைத்ததாலும் தரணியின் தயவாலும் என்னவோ அந்த இரு நாட்கள் மிக மகிழ்வாக இருந்தாள்.

அப்போதுதான் அஸ்வின் கிருஷ்ணா சந்திரிகாவை பார்த்தது. பார்த்த முதல் பார்வையிலே தனது மனதை ஈர்த்தவளை அவளுக்கே தெரியாமல் இரு நாட்கள் பின் தொடர்ந்து விட்டு இந்தியா கிளம்பினான் அஸ்வின். இந்த நிலையில் தான்அக்கா அங்கே இருப்பதால் நானும் கனடாவில் தான் படிப்பேன்என சண்டையிட்டு சஞ்சனா வந்து சேர்ந்தாள்.

முதலில கனடாவில் சில வருடங்கள் பணி புரிந்து விட்டு இந்தியா வருவது தான் சந்திரிகாவின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதே நேரம் தனது தாயின் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் விபரம் தெரியவர, எதை பற்றியும் யோசியாமல் இந்தியா வந்து விட்டாள் சந்திரிகா.

இவளை பார்த்ததிலே அவருக்கு தெம்பு வந்துவிட சரியாக சாப்பிடாத காரரணத்தாலே உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிய வந்தது. அதன் பிறகு ஒரு வருடம் தனது தாயை அருகிலிருந்து பார்த்துக் கொண்டாள். இதற்கிடையில் தான் அவளது அத்தை இப்போது உயிருடன் இல்லை என்ற தகவல் வந்திருந்தது அந்த குடும்பத்திற்கு.

அதில் தாத்தாவும், பாட்டியும் நிலை குலைந்து போய்விட, அதே நேரம் பேத்தி பேசாமல் இருப்பதும் ஒரு வித வேதனையை தர, அவள் தங்களிடம் பேசும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தனர். சுரேந்திரனுக்கு திருமண பேச்சு வரும்போது அவனது தந்தை மனதிலும், அவன் மனதிலும் தோன்றிய ஒரே பெண் கீர்த்தியாக இருக்க, அனைவரது சம்மதத்துடன் விமரிசையாக திருமணம் நடந்தது.

அது வரை கீர்த்தியிடம் அவ்வபோது பேசிக் கொண்டிருந்தவள் தனது அண்ணன் மனைவியாக வந்த பின்பு அவளிடமும் பேசுவதை நிறுத்தி விட்டாள். வீட்டில் இருந்த ஒரு வருட காலத்திலும், சாப்பாட்டிற்கும், தங்குவதற்கும் பணம் குடுப்பாள் சந்திரிகா.

வீட்டில் இருந்தபடியே சிற்சில ப்ராஜக்ட்கள் தயாரித்து அதன் மூலம் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தாள். முதலில் பணம் கொடுத்த போது அன்னை அதை வாங்க மறுக்க மறுத்தால் மறுபடி கனடா செல்ல வேண்டியிருக்கும் என மிரட்டவும் வேறு வழியின்றி வாங்கி கொண்டார் மல்லிகா.

அதன்பிறகு மல்லிகாவின் உடல் பூரண குணமடைய, கீர்த்தியும் இருப்பதால் வெளியே வேலை தேடினாள் சந்திரிகா. இதை தெரிந்த சக்கரவர்த்தி தாம் தூம் என குதித்தவர், “வெளியே சென்று வேலை பார்த்தால் தனது கௌரவம் போய்விடும். நமது ஆபிஸிலே வந்து வேலை செய்.” என ஆர்ப்பாட்டம் செய்ய அந்த யோசனையை கைவிட்டாள்.

அதன்பிறகே தோழி ஒருத்தி வங்கி மேலாளராக இருக்க, அவள் மூலம் எப்படியோ லோன் வாங்கி சொந்தமாகவே தொழிலை ஆரம்பித்தாள். ஆனால் அவள் நேரமோ என்னவோ தொழில் தொடங்கிய சில மாதங்களிலே தனது தொழில் சுத்தத்தால் பலராலும் விரும்பப்பட்டு பல புதிய ஆர்டர்கள் குவிய தொடங்கியது.

எத்தனை ஆர்டர்கள் வந்தாலும் அத்தனையையும் நேர்த்தியாக அவளே கண் விழித்து அவளது மேற்பார்வை பணி நடக்குமாறு செய்ததால் தொழிலோடு அவளது பேரும் வளர்ந்தது. ஆனால் அவளை பொறுத்தவரை தன்னை மறந்து அதிக நேரம் பணி செய்வதில் சத்யாவின் நினைவு அதிகம் வராமல் இருக்கவே, அதற்காகவே தொழிலில் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டாள்.

இதற்கிடையில் தரணிக்கு கனடாவிலே ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைக்க, “சஞ்சனாவின் படிப்பு முடிந்ததும் வந்தால் போதும். அதுவரை அங்கேயே வேலை செய்எனக் கூறி விட்டாள் சந்திரிகா.

கீர்த்தியுடனான திருமணத்திற்கு பிறகு, சந்திரிகாவை பற்றி அவள் கூறி இன்னும் சில விசயங்களை அறிந்து கொண்ட சுரேந்திரன். வாழ்வின் முக்கியமான கட்டத்தில் தனது தங்கைக்கு துணையாக இல்லாமல் போனதை எண்ணி வருத்தப்பட்டு தன்னை புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறான்.

அதனாலே தனக்கு மகள் பிறந்தபின் அவள் அதிக நேரம் சந்திரிகாவுடன் இருக்குமாறு தனது அன்னையின் மூலம் பழக வைத்தான். தனது மகளின் குழந்தைத்தனம் நிச்சயம் தனது தங்கையை மீட்டெடுக்கும் என அவன் நம்பினான். ஆனால் இத்தனை வருடத்திற்கு பின்னும் எத்தனையோ விசயங்கள் மாறிய பின்னும் வீட்டில் மற்ற அனைவரிடத்திலும் மாற்றங்கள் வந்த பின்னும் மாறாமல் இருந்தது இரண்டே இரண்டு தான்.

அது சந்திரிகாவிற்கு சத்யாவின் மீதான காதல், சக்கரவர்த்தியின் பணத்தின் மீதான கர்வமும், வெட்டி கௌரவமும் தான். பார்க்கலாம் இரண்டில் எது ஜெயிக்குமென. தனது வாழ்வில் தனது தங்கை அறியாத பக்கங்களை சந்திரிகா எடுத்துக் கூறியதும், சில நிமிடங்கள் அதிர்ச்சி விலகாவதவளாக அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

ஏதோ எல்லோரையும் போல பருவ வயதில் ஒரு காதல் தனது தமக்கைக்கும் இருந்திருக்கும். அது பிடிக்காமல் தந்தை எதிர்த்ததில் அவருக்கும், இவளுக்கும் பிணக்கு இருக்கிறது. எல்லாம் சரியாகி விடும்.’ என்றுதான் இத்தனை நாட்கள் நினைத்திருந்தாள்.

ஆனால் இப்போது தந்தையை பற்றி அறிந்ததில் அவர் மேல் கோபம் வந்தது. அவளுடைய கோபம் என்னவென்றால்,பதின்ம வயதில் எல்லோருக்குமே வருவது காதல் எனக் கூறி விட முடியாது. ஒருவர் மீது வரும் ஈர்ப்பே சிறுக சிறுக பாசமாகி அப்படியே காதலாகி விடுகிறது.

சில பேருக்கு ஈர்ப்பின் போதே சில நாட்களில் அது கரைந்தும் விடும். சில பேருக்கு அது பாசமாக, சில பேருக்கே காதல் கரை கடந்து போகும். அந்த நேரங்களில் பொறுமையாக கையாளாவதே பிரச்சனை வராமல் தடுக்கும். தேவையில்லாமல் இருவரையும், மிரட்டி, உச்சபட்சமாக ஆக்ஸிடெண்ட் வரை சென்று அவரே இதை பெரிதுபடுத்தி விட்டார்.’ என்றே தோன்றியது சஞ்சனாவிற்கு.

இந்த எண்ணம் அவளுக்கு தோன்ற காரணமே சத்யா தான். தனது தமக்கையின் காதலை அவள் துளியும் சந்தேகிக்கவில்லை. ஆனால் இத்தனை வருடங்களில் சத்யாவிற்கு நினைவு வரவில்லையா என்பதே அவளது ஐயமாகி இருந்தது.

ஒருவேளை நினைவு வந்திருந்தும் அவனுக்கு சந்திரிகாவின் மீதான காதல் இல்லாமல் போயிருந்தால் தனது தமக்கையின் நிலையை நினைக்கவே அவளுக்கு பயமாக இருந்தது. சஞ்சனா நினைப்பது மெய்யாகுமா? சத்யாவிற்கு நினைவு வராமல் இருக்குமா? இல்லை அவனது காதல் பொய்த்திருக்குமா?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *