Loading

ஒரு வாரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. தனக்கு என்று ஒதுக்கிய அறையின் பால்கனியில் நின்று கொண்டு மேலே தன்னந்தனியாக காயும் நிலவின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும் ஆனால் ரசிக்கும் மனநிலை தான் இல்லை.

“காயத்தோட வடு இன்னும் ஆறக் கூட இல்லை. அதற்குள் அதே காயத்தைக் கீறி இப்படி பெரிசாகி விதி வேடிக்கை பார்க்கிறது. என்ன சொல்றதுன்னு தெரியலை. எனக்கு இப்ப வேண்டியது எல்லாம் பொறுமை மற்றும் நம்பிக்கை தான். எனக்கு பிரணவ் நல்லபடியாகக் குணம் ஆகிட்டால் போதும். நீ எனக்கு என்ன கேட்டாலும் கொடுப்ப தானே” என்று வானத்தைப் பார்த்துப் பேசிக் கொண்டு இருக்க, அவளின் கண்களை ஒரு கை மூடியது.

“பிரணவ் கண்ணா இங்க என்ன பண்றீங்க. தூங்கும் நேரம் ஆகுதே தூங்கலையா” என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்க,

“நீ ஏன் என் கூட இல்லாம இங்க இருக்க” என்று அவளை முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள, ஒரு நிமிடம் அவளுக்கு பக் என்று இருந்தது. என்ன தான் செயலில் சிறுவனாக இருந்தாலும்  நிஜத்தில் வளர்ந்த ஆண் மகன் தானே.

“இல்லடா கண்ணா நான் இங்கவே இருக்கேன். இங்க தானே இந்த பால்கனி இருக்கு. இது எனக்கு ரொம்ப  பிடிச்சு இருக்கு”  என்று அவனையும் அருகே நிற்க வைக்க,

“அப்படியா இதுல என்ன அழகா இருக்கு. வெளியே பாரு ஒரே இருட்டா இருக்கு. பேய் கூட எல்லாம் பேசுவியா” என்ற கேள்வியில் சிரிப்பு தான் வந்தது.

“பேய் கூட எல்லாம் பேச நான் என்ன மந்திரவாதியா. இருட்டைப் பார்த்துப் பயப்படக் கூடாது. இதுனால தான் நமக்கு வெளிச்சத்தைத் தேடி போகணும் என்று ஒரு உத்வேகம் வரும் கண்ணா” என்று அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்து பால்கனி கதவை மூட,

“சரி கண்ணா போய் தூங்கு. நாளைக்குப் பார்க்கலாம். நாளைக்கு நம்ம விளையாட தீம் பார்க் போகலாம் சரியாய்” என

“உண்மையாவா!!! அப்ப எனக்கு நாளைக்கு போட்டுக்க ஸ்பைடர் மென் ட்ரெஸ் வேண்டும்” என்று புதிய கோரிக்கை வைக்க, சுமக்காமலே தாயாகிப் போனால் கேள்வனுக்கு. விடியல் புதிதாக அவளுக்கு என்ன சோதனை வைத்து இருக்கோ??

வேகமாக ஒருவன் தேசிய நெடுஞ்சாலையில் தன் அதிநவீன இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டு இருக்க, எதிரே வேகமாக வரும் லாரியை எல்லாம் அவன் கணக்கிலே எடுக்கவில்லை. மோதும் கடைசி நிமிடத்தில் திரும்பப் பார்க்க ஆனால் அவன் நேரம் சரியில்லை போல, லாரியில் மோதி பெரும் சத்தம் அந்த இடத்தையே நிறைத்தது. 

“அம்மா…..” என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தாள் ப்ரணிதா. முகம் முழுவதும் வியர்வையில் குளித்து இருக்க, இதயம் வேகமாகத் துடிப்பது வெளியவே நன்றாகக் கேட்டது.

நேரத்தைப் பார்த்து விட்டு, “என்ன கனவு இது. அதுவும் இவ்வளவு காலையில். வண்டியை இப்படியா ஓட்டுவாங்க. எந்த லூசு என் கனவில் வந்தது என்று தெரியலையே” என்று ரெப்ரெஷ் ஆகி விட்டு, அடுத்து இருக்கும் அறைக்குச் சென்றாள்.

ஆறடி குழந்தை எந்த கவலையும் இல்லாமல் அமைதியாகத் துயில் கொண்டு இருந்தது. மனதில் ஆயிரம் கவலை இருந்த போதும் அவனின் முகத்தைப் பார்த்த அடுத்த நொடி அனைத்தும் மறந்து விடும் இவளுக்கு.

அவன் படுக்கையை நெருங்கி “எனக்கு உன் கூட நூறு வருஷம் வாழனும் என்ற பேராசை எல்லாம் இல்லை. வாழற காலம் முழுக்க உன் முகத்தை பார்த்துட்டே இருந்த கூட போதும். என்னை விட்டு போய்டாதே” என்று அவனின் கேசத்தைக் கோதிக் கொண்டு முகத்தைப் பார்த்துச் சொல்ல,

தூக்கத்தில் என்ன புரிந்ததோ அவனின் இதழ்கள் புன்னகைத்துக்  கொண்டது.

இப்பொழுதும் போல் தோட்டத்தில் நடைப்  பயிற்சியைத் தொடங்க, அவள் அருகே வந்தான் மாதவ். ஒரு முறை முறைத்து விட்டு தன் நடையை தொடங்க,

“சாரி ப்ரீ…. என் மேல தப்பு இருக்கு தான். அதுக்காக பேசாமல் எல்லாம் இருக்காதே. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உண்மையாவே உன் கேரக்டர் செம தெரியுமா. நீ என் லைப்பில் வரத்தை விட என் தம்பி லைப்பில் வந்தால் அவன் கண்டிப்பா சரி ஆகிடுவான் தோனுச்சு. 

அம்மா ஜாதகம் பார்த்துட்டு வந்து உன்னை பிரணவ்விற்கு கல்யாணம் பண்ணி வைக்க போவதாகச் சொல்லும் போது என்னோ தெரியலை அது தான் கரெக்ட் அப்படின்னு என் மனசு சொல்லுச்சு. இப்ப உன் லைப் எப்படி வேணா இருக்கலாம் ஆனால் ஒன்ஸ் என் தம்பி சரி ஆகிட்டா நீ ரொம்ப நல்லா சந்தோசமா இருப்ப. ஐ ப்ராமிஸ்” என

எதுவும் பேசத் தோன்றாமல் முறைத்துக் கொண்டே “தேங்க்ஸ்” என்று முன்னே நடக்கத் தொடங்கி விட்டாள். அவள் பதிலில் இவன் தான் குழம்பிப் போனான்.  

காலை பத்து மணிக்கே வெயில் பல்லை இளித்துக் கொண்டு வாட்டி வதைக்க, வியர்வை ஆறாக ஓட,

“பரி… பாரு பட்டம் பறக்கவே இல்ல. மேல போக சொல்லு. அந்த வீடியோவில் எப்படி உயரமா போச்சு. நமக்கு மட்டும் ஏன் போகலை” என்று பட்டம் பறக்காத சோகத்தில் கேட்க,

“அச்சோ குட்டி கண்ணா பட்டம் பறக்கவில்லையா. இங்க பாரு வெயில் எப்படி அடிக்கிது. நம்ம என்ன பண்ணலாம் ஈவ்னிங் வரலாம். அப்பக் காற்று அடிக்கும் நம்ம பட்டமும் மேல பறக்கும் சரியா” என்று தன் துப்பட்டாவில் அவனின் வியர்வையைத் துடைத்துக் கொண்டே சொல்ல,

“நிஜமா அப்பப் பறக்குமா” என்ற அவனின் ஆவல் நிறைந்த கேள்வியில், அவன் நாடியை மெலிதாக கிள்ளி முத்தம் ஒன்றை வைத்து விட்டு “பறக்கும். இல்லனா பறக்க வைக்கிறேன். கவலைப் படாதே” என்று கூறும் போதே இந்திரா அழைக்கும் சத்தம் கேட்க, இருவரும் கீழே வந்தனர்.

இவளின் கல்லூரி தோழிகள் நால்வர் வந்து இருந்தனர். ஜீவா, ஜோதி, சத்யா மற்றும் ரேணுகா. தன் தோழிகளை முதலில் பார்த்து சந்தோசம் கொண்டாலும் இவர்கள் பிரணவ்வின் நிலையை அறிந்தால் என்ன நடக்கும் என்ற பயமும் இருந்தது. 

பிரணவ்விடம் “கண்ணா நான் சொல்ற வரைக்கும் நீ எதுவும் பேசக் கூடாது. அங்க சோபாவில் ஒரு கார் பொம்மை இருக்கு பாரு அதை வெச்சி விளையாடிட்டு இருக்கணும் சரியா” என்று மெதுவாக அவனிடம் சொல்ல,

“ஓகே பரி நான் பேச மாட்டேன். அதோ அங்க பாரு நிறைய ஆண்ட்டி  வந்து இருக்காங்க” என்று அவனும் இவளைப் போல் மெதுவாகப் பேசி கொண்டே வந்தவர்களை நோக்கி கை காட்டினான்.

இருவரும் நின்று இருக்கும் இடம் படியின் வளைவு என்பதால் பெரிதாகக் கண்களுக்குப் புலப்படவில்லை.

அவனின் செய்கையில் மென்புன்னகை புரிந்து “அவங்களை நான் பார்க்கிறேன் நீ போய் சமத்தா விளையாடு” என்று நண்பர்களை வரவேற்கச்  சென்றாள்.

“ஹே பார்க்க வருகிறதா சொல்லவே இல்லை. வாங்க வாங்க அத்தை இவங்க எல்லாம் என் கூட ஒன்றா காலேஜில் படிச்சவங்க. இவ ஜீவா ரேணு ஜோதி சத்யா” என்று சிரித்த முகமாக அறிமுகம் செய்து வைக்க, நால்வரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தனர்.

இந்திரா “வெயில் நேரத்தில் வந்து இருக்கீங்க எதாவது குடிக்க எடுத்துட்டு வரேன் நீங்க பேசிட்டு இருங்க” என்று அவர்களுடன் சொல்லி விட்டு, சற்று தூரத்தில் அமைதியாக அமர்ந்து இருக்கும் மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு கிட்சன் நோக்கிச் சென்றார்.

ஜீவா “ஒய் மில்க் அது தானே உன் கணவர். என்ன எங்களை எல்லாம் அவருக்கு அறிமுகம் செய்ய மாட்டியா” என

ரேணு “அவ கல்யாணமே ஒரு விபத்து போல நடந்துச்சு இதுல அறிமுகம் ஒன்னு தான் கேடு. நீ கொஞ்சம் சும்மா இரு” என்று ஜீவாவை முறைத்து விடு ப்ரணிதா பக்கம் திரும்பி “முதல நீ எப்படி இருக்க அதை சொல்லு டி. உன்னை அவர் நல்ல பார்த்துக்கிறார் தானே இல்ல இல்ல வேற எதாவது கஷ்ட படுத்துறார” என்று கவலையுடன் கேட்க,

“அப்படி எல்லாம் இல்ல டி. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். இப்ப விட பின்னாடி ரொம்ப சந்தோசமா நிம்மதியா இருப்பேன் என் மனசு சொல்லுது என்ன பத்தி எல்லாம் கவலைப்படாதே.பிரணீ  பார்க்காத பிரச்சனைய” என்று தன் கவலையை மனதில் மறைத்துக் கொண்டு சொல்ல,

மற்ற மூவரும் வீட்டின் செழிப்பைக் கண்டு பொறாமையில் வெந்தனர். ஐவரும் ஒன்றாகப் படித்தவர்கள் தான். ஆனால் உண்மையான நண்பர்களா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. ப்ரணிதா உண்மையாகப் பழகினாலும் ரேணுவைத் தவிர யாரும் அவளின் நலனில் கவலை கொள்ள மாட்டார்கள்.

இவளின் கெட்ட நேரம் மாதவ் அறையில் ஏதோ விழும் சத்தம் கேட்க பிரணவ் என்ன செய்கிறான் என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் தோழிகளிடம் “ஒரு நிமிசம் என்னனு பாத்துட்டு வரேன்” என்று மேல் மாடியில் அவளின் அறைக்கு எதிரே இருக்கும் மாதவ்வின் அறைக்குச் சென்றாள்.

ஜீவா “என்னடி இவன் நம்ம இருக்கிறதை கூட கண்டுக்காம குழந்தை மாதிரி பொம்மைகளை வச்சிட்டு விளையாடிட்டு இருக்கான்” என்று தன்னை கண்டுக்காத கடுப்பில் சொல்ல,

ரேணு “ஹே என்ன மரியாதை இல்லாமல் பேசற. ஒழுங்கா பேசு இல்ல ப்ரீ கிட்டத் திட்டுவாங்க போற” என

சத்யா “ஆமா இவனுக்கு எல்லாம் மரியாதை ஒன்னு தான் குறை” என்று பேசிக் கொண்டே அவனை நெருங்கினாள்.

அடுத்த நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனால் ப்ரணிதா மாதவ் அறையிலிருந்து வெளியே வர அவள் கேட்டதோ பிரணவின் அலறல் சத்தத்தைத் தான்.

கண்களில் கண்ணீரோடு இதயம் படபடவென அடித்து‌க் கொள்ளும் பதட்டத்தோடு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் ப்ரணிதா. அவளுக்கு ஆதரவாக அருகே நின்று கொண்டிருந்தான் மாதவ்.

மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு நடந்தது என்னவோ??

உயிரோட்டங்கள் தொடரட்டும் 

நிலானி தாஸ் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்