Loading

அத்தியாயம் -36

பூர்ணா மேலும் சில விஷயங்களை சொன்னார்.

“சிற்பி உன்னோட மாமா செய்ய நினைத்த எல்லா விஷயங்களையும் உனக்காக நேற்று நிரஞ்சன் செய்ய  நினைத்ததோடு அதற்காக அவரே பேசி எல்லாத்தையும் சரிசெய்து  எதையும் உன்னுடைய நல்லதுக்காக  செய்ய தயாராக இருந்த நிரஞ்சனை பார்க்கும் போது மாமாக்கு  ரொம்ப பிடிச்சு போச்சு.சிற்பிக்காக இவ்வளவு யோசிக்கிறாங்கன்னு ரொம்ப ஆச்சரியம் அடைந்து  மாமா அதைப் பற்றி எங்ககிட்டேயும் சொன்னாங்க. அதனால உனக்கு அமைந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்க வேண்டும்னு  மாமாவே  உங்க ரெண்டுபேரையும் நேராக  ஊருக்கு அழைச்சுட்டு போய் அண்ணன்கிட்டேயும் தாமரை அண்ணிகிட்டே பேசலாம்னு என்கிட்ட முடிவா சொன்னாங்க” என்று சொன்னார்.

பூர்ணா சொன்னதை எல்லாம் கேட்ட சிற்பிக்கு நடப்பது எல்லாம் கனவா? நினைவா? என்று யோசிக்கத் தெரியாமல் விழிகளில் கண்ணீரோடு அப்படியே விக்கித்து  நின்றாள்.

அன்பு என்பது சில நேரங்களில் எதிர்பாராத உறவிடம் இருந்து மழையாகக் கொட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடும். அப்படித்தான் இங்கே வெளியே தெரிவதற்கு கரடுமுரடாக இருந்தாலும் உள்ளே அதன் அன்பு தித்திப்பானது.அதைத் தான் சிற்பி இப்போது தன் மாமாவான  சபரியிடம் உணர்ந்துக் கொண்டிருக்கிறாள்.

அதிகமான அன்பு அக்கறையை கோபமாக தான் வெளிக்காட்டும் என்பது எவ்வளவு உண்மை.பூர்ணா சொன்னதைக் கேட்டவுடன் அறையை விட்டு வெளியே வந்தவள் அங்கே உட்கார்ந்து இருந்த சபரியை அன்பாக ஆரத் தழுவிக் கொண்டாள் சிற்பி.

வார்த்தைகள் இல்லை அவளின் கண்ணீரே இங்கே பேசிக் கொண்டது.பூர்ணாவும் செழியனும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சபரி ஒன்றும் தெரியாதது போல் “என்னாச்சு சிற்பி?” என்று கேட்டார்.அவளிடம் பதிலில்லை. விசும்பலே பதிலாக வந்தது.சபரி  மீண்டும் “ஏன் அழறே சிற்பிம்மா?”

என்று கேட்கவும் நிமிர்ந்து அவரைப் பார்த்தவள் “மா…மாமா…ரொம்ப தாங்ஸ் மாமா என்னச் சொல்றதுன்னே தெரியலை” என்ற போது அவளது கண்கள் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

அவளின் பதிலைக் கேட்டவர் மெலிதான புன்னகையோடு “இந்த மாதிரி என்னை அன்போடு பார்க்கும் சிற்பியைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு? ரொம்ப நாளுக்கு அப்புறம் திரும்ப அதை நான் பார்க்கிறேன், இப்போ மட்டும் மாமான்னு சொல்லி அன்பாக கட்டிக்க தைரியம் வந்திடுச்சா? இத்தனை நாளா என்னைப் பார்த்தால் ஓடிப்போன பொண்ணு யாருக்கு வேணும்?உன் தாங்ஸ் நீயே வைச்சுக்கோ சிற்பி.இன்னும் எதுவும் பேசி முடிவாகலை அதுக்குள்ளே அவசரமாக எத்தனை தடவை இந்த தாங்ஸ் சொல்லனும் நினைச்சு இருக்கே” என்று கேள்வியாகக் கேட்டார்.

சிற்பியோ “மாமா எத்தனை முறையேனும் நான் உங்களுக்கு நன்றி சொல்லுவேன்.என்னை இவ்வளவு தூரம் புரிஞ்சு வைச்சிருப்பதே எனக்கு தெரியாதே! சின்ன வயசுல இருந்த பாசம் இன்னும் இருக்கு ஆனால் வளர வளர உங்களைப் பார்த்தாலே பயம்.எப்பவும் எல்லாத்தையும் கண்டிஷனா சொல்லுவீங்கல்ல அதான் கொஞ்சம் இல்லை நிறைய தள்ளி போயிட்டேன் மாமா சாரி என்னை மன்னிச்சிடுங்க உங்க பாசத்தை நான் சரியா புரிஞ்சுக்கலை” என்று வருத்தத்தோடு பேசினாள் சிற்பி.

சபரி தன்னை நேரில் அழைத்து பேச விரும்புவதை நிரஞ்சன் தன் நண்பர்களிடம் நடந்த எல்லா விவரங்களையும் விவரமாகச் சொன்னான்.அதைக் கேட்ட சஹா சிரித்துக் கொண்டே “அ…அப்போ சிங்கிள் மேன். இனி பேமிலி மேன் ஆகப்போற?அதானே காங்கிராட்ஸ்” என்று நிரஞ்சனின் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த்துச் சொன்னான் அவன்.

அவன் செய்வதைப் பார்த்த காந்தன் “அடேய் அறிவு கெட்டவனே! நிரஞ்சன்  அங்கே என்ன நடக்கப் போகுதோ? நாம என்னச் செய்யப் போறோம்னு ஒரு பதற்றத்தில் இருக்கான். அவன்கிட்டே போய் கல்யாணம்னு கிண்டல் பண்ணிட்டு இருக்கே சூழ்நிலை தெரியாமல் பேசாதே! ” என்று கடிந்துக் கொண்டான்.

இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்ட நிரஞ்சன் “எனக்கு பதற்றம் இல்லை காந்தன். காலம்  நிறைய அனுபவங்களை கொடுத்து இருக்கு. ஆனால் இந்த முறை யாருக்காகவும் என்னுடைய காதலை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு ஒரு பிடிவாதம் இருக்கு காந்தா.ஆனாலௌ அதை நான் சரியா செய்யனும் எப்பவும் நான் சிற்பியை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று யோசனையோடு சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்ட பார்த்திபன் “நிரஞ்சன் நீ போற இடத்துக்கு எங்களையும் கூடிட்டு போகனும்.ஏன்னா யாருமே இல்லாமல் இருந்த எங்களுக்கு ஒரு உறவை அமைச்சுக் கொடுத்தது நீதான். அதனால நாங்க தானே உன்னுடைய உறவு.வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்கப் போகும் போது நாங்கள் இல்லாமல் எப்படி நீ மட்டும் தனியாகப் போவே. அதனால நாங்களும் உனக்கு துணையாக வர்றோம் நிரஞ்சன்” என்று அவன் உறுதியாகச் சொல்லவும்  மற்ற இருவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

நிரஞ்சன் யோசனையாக “இதெல்லாம் சரியாக வரும்னு நினைக்கிறீங்களா?

எல்லோரும் திடீர்னு போய் நின்றால் பிரச்சினை ஏதும் வராது தானே?” என்று கேள்வியாகக் கேட்டான்.

காந்தனோ “நாம எல்லோரும் ஒன்றாக முயற்சி செய்து பார்க்கிறதில் தப்பில்லை நிரஞ்சன்.இதுவரைக்கும் நம்ம வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவுகள் எல்லாம் ஒன்றாகத் தானே எடுத்தோம்.பிறகு எல்லாம் நல்ல படியாக முடியும்” என்று அவன் சொல்லவும் நிரஞ்சனுக்கு நம்பிக்கை கொடுத்தார்கள் மூவரும்.

நால்வருமாக அங்கிருந்து கிளம்பி சபரியின் வீட்டிற்கு வந்தார்கள்.அவர்கள் அழைப்பு மணியை அழுத்தவும் செழியன் நிரஞ்சனாகத் தான் இருக்கும் என்று  நினைத்து கதவை திறந்தவனுக்கு பெருத்த அதிர்ச்சி.

அங்கே நால்வரையும் ஒன்றாக  கண்டவன் யோசனையோடு “உள்ளே வாங்க” என்று அழைத்தான். அவர்கள்  நால்வரும் செழியனை நலம் விசாரித்து விட்டு உள்ளே வந்தனர்.

நிரஞ்சன் தான் வருகிறான் என்று எண்ணி சபரி எழுந்துக் கொள்ள அங்கே வந்த நால்வரையும் பார்த்து அவருக்கு அதிர்ச்சியாகவும் யோசனையாகவும் இருந்தது.எல்லோரையும் உட்காரச் சொன்னவர் அவரும் அவர்களுக்கு எதிராக  அமர்ந்தார்.சிறிது நேரம் அங்கே ஒரு அமைதி நிலவி இருந்தது.எல்லோரையும் ஒன்றாக பார்க்கவும் சிற்பிக்கு ஒருவிதமான பயம் மனதில் தோன்றியது.அதை வெளிக்காட்டாமல் அப்படியே அவளும் அங்கே பூர்ணாவுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

பூர்ணா தான் முதலில்  மெதுவாக ஆரம்பித்தார்.“இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும்.முதல்ல என்ன விஷயம்னு யாராவது பேச ஆரம்பிங்க அப்போ தானே என்ன விஷயமே அதை விவரமா பேசி முடிவெடுக்கலாம்” என்று சொன்னார்.

சபரி முதலில்  “நிரஞ்சன் தம்பி நான் உங்களை மட்டும் தானே வரச் சொல்லி இருந்தேன்” என்று கேட்டார்.

உடனே காந்தன் மரியாதை நிமித்தமாக எழுந்துக் கொண்டவன் “அங்கிள் நான் பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க.நிரஞ்சனோட குடும்பமே நாங்க தான், அதனால அவனுடைய நல்லது,கெட்டதுன்னு எல்லா எவிஷயங்களிலும் நாங்களும் உறுதுணையாக இருப்போம்.அதனாலத் தான் அவனை தனியாக அனுப்ப மனமின்றி  எல்லோருமாக சேர்ந்தே போகலாம்னு முடிவெடுத்து வந்தோம்” என்று கொஞ்சம் தயங்கியபடியே சொன்னான்.காந்தன் சொன்னதைக் கேட்டு சபரியோ மெலிதாக புன்னகைத்தார்.

நிரஞ்சனைப் பார்த்து சபரி “நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை அன்றைக்கு கோவாவில் நடந்த எல்லாத்தையும் நான் நேர்ல பார்த்தேன்.அதுக்கு முன்னாடியே எனக்கு எல்லா விஷயமும் தெரியும்.எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு தம்பி.ஏன்னா சங்கீத மேளாவில் நீங்க பாட வரனும்னு நினைச்சு சொன்ன ஒருவரில் நானும் ஒருத்தன்.சிற்பிகா எனக்கும் பொண்ணு தான்,அவளுடைய கனவை நினைவாக்குறது தான் எனக்கு இப்போ முக்கியம் இப்பொழுது சிற்பியை  பாட உங்களோடு  அழைச்சுட்டு போங்க. அதுக்கு மட்டும் தான் இப்போது என்னால அனுமதி கொடுக்க முடியும்.அவளுடைய திறமையைப் பத்தி முதல்ல அவளை  பெத்தவங்களுக்கு தெரியனும். அது வெளியே தெரிவதற்கு மேடை ஏறி உங்க குழுவோடு பாடி அவள் திறமையை நிரூபிக்கட்டும்.அதற்கு பிறகு எல்லாமே நான் பார்த்துக்கிறேன்” என்று அவர் மனதில் உள்ள விஷயங்களை நேராகவே சொன்னார்.

அவரின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியான சிற்பி “மாமா நான் பாட்டு பாடப் போறேன்னு தெரிந்தால் அம்மா ரொம்ப கோபப்படுவாங்களே? அம்மாவை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது” என்று தயக்கமாகக் கேட்டாள்.

சபரி “நீ எதுவும் கவலைப்படாதே! சிற்பி  தாமரைக்கிட்டே எப்படி பேசினால் சரிவரும்னு எனக்கு தெரியும். நீ முதல்ல போய்  ப்ராக்டீஸ் பண்ணு மத்தது எல்லாம் அப்புறமா பார்த்துக் கொள்ளலாம்” என்று முடிவாகச் சொன்னவர்

நிரஞ்சனைப் பார்த்து “நிரஞ்சன் உங்களுக்கு நாட்கள் ரொம்ப குறைவா இருக்குது.பயிற்சிக்கே நேரம் சரியாக இருக்கும்.அதனால போட்டியில் மட்டும் கவனத்தை செலுத்துங்க. இனிமேல் நீங்க தான்  எங்க வீட்டு மாப்பிள்ளை அதுக்கு நான் உறுதி கவலைப்படாமல் உங்க வேலையைப் பாருங்க” என்று ஒரு வார்த்தையில் முடித்து வைத்தார் சபரி.அவரின் வெளிப்படையான பேச்சைக் கேட்டு அங்கிருந்த எல்லோர் முகத்திலும் புன்னகை பரவி இருந்தது.

காரணம் இல்லாமல் நம் அனைவரின் வாழ்க்கையிலும்  எதுவும் நடப்பதில்லை.

அதனால் தான் சில நேரங்களில் வாழ்க்கைத் தரும் இன்ப அதிர்ச்சிகளை அதன் போக்கிலேயே அனுபவித்து விடுவது நல்லது.இப்பொழுது சிற்பி மற்றும் நிரஞ்சனின் வாழ்க்கை அப்படித் தான் மாறிப் போய் இருந்தது.

சபரி சொன்னதைக் கேட்டு கண்களில் கண்ணீரோடு “ரொம்ப தாங்ஸ் அப்பா என் அப்பா இருந்தால் எப்படி எனக்கான நல்லதை முடிவு எடுத்து இருப்பாங்களோ? அந்த மாதிரி எங்க ரெண்டுபேருடைய விருப்பத்தையும் இலட்சியத்தையும் புரிந்து சொல்லி இருக்கீங்க” என்று சொல்லவும் சபரி அன்பாக அவனை அரவணைத்துக் கொண்டார்.

அடுத்து இவர்கள் மூவரும் சபரியை அதே போல் ஆரத்தழுவிக் கொண்டனர்.சஹா “எ…எங்களுக்கு சிற்பியால  புதுசா ஒரு சொந்தம் கிடைச்சு இருக்கு” என்று சொல்லவும் மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.பூர்ணாவும் செழியனும் சிற்பியின் முகத்தில் தெரிந்த புன்னகையைக் கண்டு அவர்களும் திருப்தி அடைந்தனர்.

நிரஞ்சன் அங்கே எல்லோரின் முன்பாக தன் கரங்களை சிற்பிக்கு முன்பாக நீட்டியவன்  “சிற்பி முதல்ல உனக்கு பிடித்த  பாடுறதை  விருப்பம் போல பாடு.பிறகு நமக்கான நாளை பிறகு முடிவு செய்யலாம் இப்பொழுது என்னோடு வா  போகலாம்” என்று அழைத்தான். சிற்பி தன் மாமாவையும் அத்தையையும்  பார்த்தாள்.இருவரும் ஒன்றாக சரியென்பது போல் தலையசைக்கவும் நீட்டியிருந்த கரங்களின் மேல் தன் கைகளை கோர்க்கவும் சிற்பியின் விரல்களை அழுந்த பிடித்தான் நிரஞ்சன்.

செழியன் நிரஞ்சனின் விழிகளில் தெரிந்த காதலை பார்த்து அவன் தனக்குள் திருப்தி அடைந்தான்.அவர்கள் எல்லோரும் அங்கிருந்து சென்று இருந்தனர்.

பூர்ணா சபரியிடம் “என்னங்க சிற்பியை பாடச் சொல்லி அனுமதி கொடுத்துட்டீங்க. தாமரைக்கிட்டே என்னச் சொல்லி அவளை சம்மதிக்க வைக்கப்போறீங்க?” என்று கேள்வியாகக் கேட்டார்.

சபரி யோசனையாக “நீ கவலைப்படாதே பூர்ணா! நான் அதுக்கு நான் ஒரு நல்ல யோசனை வைச்சு இருக்கேன்.அதை நாளையிலிருந்து செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டியது தான்,பிறகு பாரு நாம நினைச்ச மாதிரியே எல்லாம் நமக்கு சாதகமாக அமையும்” என்று ஒரு உறுதியான திட்டத்தோடு சொன்னார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்