Loading

அத்தியாயம் 79

     “ஹலோ மிஸ்டர் ஓல்டுமேன், உங்களுக்கு ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக்கிட்டு இருக்கணுமா என்ன. நீங்க ஒன்னும் இருபது வயசு குமரன் இல்ல. அறுபது, அறுபத்தைந்து வயசு கிழம். அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.

     நாகா இருபத்தைந்து வயசு இளைஞன். அவனுக்கு அம்மை வந்தா அவன் தாங்கிப்பான். அதுவே உங்களுக்கு வந்தா தாங்கிக்க முடியுமா அதுவும் இந்த வயசுல. உங்க அப்பா பாசத்தை கொஞ்சம் ஒளிச்சு வைங்க.” என்றான் அரசு.

     “அவன் என் செல்லப் பையன் டா. சின்னதா காய்ச்சல் வந்தாக் கூட என் மடியிலே தலை வைச்சுக் கிடப்பான். ஏற்கனவே ஊர்மியை அவன் கண்ணில் காட்டாமப் பிரிச்சு வைச்சாச்சு. நானும் இல்லன்னா என் பையன் தவிச்சுப் போயிடுவான் டா. அவனைப் பார்த்துக்கிறதால் எனக்கு என்ன வந்தாலும் பரவாயில்லை.” என்றவரை பல மொழிகளில் மனதிற்குள் நன்றாக அர்ச்சித்தவன்,

     “ஏன் நீங்க பார்த்துக்கிட்டா மட்டும் தான் அவன் நல்லா இருப்பானா? நான் பார்த்தா நல்லா இருக்க மாட்டானா. அவன் கூடவே இருந்து, அவன் கால் தரையில் படாமப் பார்த்துக்கிறேன் போதுமா. நீங்க கொஞ்ச நாள் வீட்டு பக்கம் வராம இருந்தா அது தான் நீங்க எனக்குப் பண்ற பெரிய உதவியா இருக்கும். அதையும் மீறி வந்தீங்க அப்புறமா நாக்கு மேல பல்லைப் போட்டு ஏதாவது பேசிடுவேன் ஆமா.” சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை மிரட்டுவது போல் சமாதானப்படுத்தும் தாயைப் போல் பேசினான் அரசு.

     “என்னடா” என்று தவிப்பாய் பார்த்தார் வடிவேல். “உங்க பேரக்குழந்தைங்க வளர்ந்து, அவங்க ஒத்துமையா இருக்கும் அழகை நீங்க பார்க்கணும் தானே. அதுக்கு நீங்க உங்க உடம்பை நல்லாப் பார்த்துக்கணும்.” என்றபடி இனிமையான ஒரு கனவை அவர் மனதில் விதைக்க, அதை நினைத்துக்கொண்டே அரசுவின் வார்தைகளை ஏற்றுக்கொண்டார் வடிவேல்.

     நாகாவின் அறையில், “ஏன் இப்படி குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறீங்க. நான் உங்களை அப்படி என்ன கேட்டுட்டேன். சட்டையைக் கழட்டுங்க காயத்தில் மருந்து போடணும் னு தானே சொல்றேன்.

     அது மட்டும் இல்ல இந்த நேரத்துல சட்டை போடக்கூடாது. வெறும் உடம்போட தான் இருக்கணும். அது தான் உங்களுக்கு நல்லது புரிஞ்சிக்கோங்க.” நாகாவிடம் பொறுமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள் லீலா.

     “என்ன இத்தனை சாதாரணமாச் சொல்றீங்க. உங்க முன்னாடி எப்படி சட்டையில்லாம இருக்கிறது. இதெல்லாம் சரிவராது. அதனால் தான் சொன்னேன். நீங்க என்னைப் பார்த்துக்க வேண்டாம் னு.” அடம்பிடித்தான் நாகா.

     “மறுபடியும் முதலில் இருந்தா, ஏற்கனவே இதைப் பத்தி நிறைய பேசி முடிச்சுட்டோமே.” லீலா சொல்ல, “என்னம்மா லீலா என்ன சொல்றான் உன் அருமைக் கொழுந்தன்.” என்றவண்ணம் அறைக்குள் வந்தான் அரசு.

     “அண்ணா உங்களை யாரு இங்க வரச் சொன்னது.” லீலா கோபமாய் கேட்க, “என் உடம்பு வைரம் பாஞ்ச கட்டை. எனக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது. அப்படியே எதுவும் ஆனாலும் கூட என்னைப் பத்தி கவலைப் படுவதற்கு தான் அம்மா அப்பான்னு யாருமே கிடையாதே, அப்புறம் என்ன.

     அதோட சின்ன வயசுல இவனோட அண்ணன், தம்பிங்க மூணு பேருக்கும் அம்மை போட்டு இருந்தப்ப, பக்கத்தில் இருந்து பார்த்துக்கிட்டது நான் தான். எனக்கு வரணும் னு இருந்தா அப்பவே வந்து இருக்கும்.” அரசு சொல்லிக் கொண்டே போக, லீலா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

     “ஆத்தி, ஏதோ ஏடாகூடாமப் பேசிட்டேன் போலவே. என் தங்கச்சி இப்படி முறைச்சிக்கிட்டு நிக்கிது.” அரசு தனக்குள் யோசிக்க, “உங்களைப் பத்தி கவலைப்பட யாரும் இல்லையா. இங்க தான் எங்கேயோ அந்த பிரம்பு இருந்தது. அதை வைச்சு நாலு வெளு வெளுத்தா தான், உங்களுக்கு யார் யாரெல்லாம் இருக்காங்கன்னு உங்க மரமண்டைக்கு நல்லாப் புரியும்.” அதே முறைப்புடன் சொன்னாள் லீலா.

     “நோ வைலன்ஸ் மா லீலா. ஏதோ எதேச்சையா வாயில் வந்திடுச்சும்மா. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த அண்ணனை மன்னிச்சிடு. எனக்கு யாரும் இல்லன்னு இனி நான் சொல்லவே மாட்டேன். எனக்குத் தான் உடன் பிறவா தங்கச்சிங்க நீங்க நாலு பேரு இருக்கீங்களே.” என்றான் அரசு.

     “அது இப்ப தான் உங்களுக்கு ஞாபகம் வருதா. நெல்லைப் போட்டா அள்ளிடலாம் சொல்லைப் போட்டா அள்ள முடியாதுன்னு அந்தக் காலத்துல பெரியவங்க சொல்லியிருக்காங்க.” லீலாவிற்கு வந்த கோபம் குறைவேனா என்றது. இவர்களின் சண்டையை சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் நாகா.

     “அம்மாடி இராஜகாளி நான் தெரியாமச் சொல்லிட்டேன். கொஞ்சம் மலையிறங்கி வாம்மா.” கெஞ்சலாய் கேட்டான் அரசு.

     “மனசுல இருக்கிறது ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் தன்னை அறியாமல் வெளியே வரும் னு சொல்லுவாங்க. இத்தனை நாளா உங்க மனசுக்குள்ள இருந்த அத்தனையும் இப்ப வெளிய வந்துடுச்சு. சொல்றது எல்லாத்தையும் சொல்லிட்டு இப்ப வந்து இவரு மன்னிப்புக் கேட்பாராம், நான் மன்னிக்கணுமாம். மாமா வரட்டும் அவர்கிட்ட சொல்லி, குறைந்தபட்சம் மூணு மாசத்துக்காவது உங்களை இந்த வீட்டுக்குள்ள வர விடாமப் பண்றேன். அப்ப தான் உங்களுக்குப் புத்தி வரும்.” கடுகடுப்பாய் சொன்னாள் லீலா.

     “அப்படி மட்டும் பண்ணிடாதம்மா. எனக்கு இந்த வீட்டை விட்டா வேற போக்கிடம் கிடையாது. நான் இங்கேயே தான் சுத்திட்டு இருப்பேன். நீ எப்ப வேணாலும் என்னைத் திட்டலாம், அடிக்கலாம். அதுக்கு உனக்கு முழு உரிமை இருக்கு. ஆனா இப்போ உன் கொழுந்தனைப் பாரு. அவனுக்கு தான் இப்ப உன்னோட அன்பும், அக்கறையும் ரொம்ப அவசியமா தேவைப்படுது.” என நாகாவைக் கோர்த்துவிட்டு தான் தப்பிக்கப் பார்த்தான் அரசு.

     அதில் கோபம் மறந்தவளாய், “எங்க அண்ணா, இவர் சொல்பேச்சு எதுவுமே கேட்க மாட்டேங்கிறாரு. சட்டையைக் கழட்டுங்க மஞ்சள், சந்தனம் அரைச்ச பேஸ்ட் வைக்கணும். அப்ப தான் அந்தக் கொப்புளம் எல்லாம் உடைந்து சீள் வெளியே போகும் னு சொன்னா, இவர் சட்டையைக் கழட்ட மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார்.” வருத்தமாய் சொன்னாள் லீலா.

     “டேய் கருநாகம் என்ன தான் பிரச்சினை உனக்கு. பாம்புங்க கூட அடிக்கடி சட்டையைக் கழட்டிக்கிட்டு தான் இருக்கு. அதோட பெயரை வைச்சிருக்கிற நீமட்டும் சட்டையைக் கழட்ட மாட்டேன்னு அடம் பிடிக்கிறியே என்ன நியாயம் இது?” வழக்கம் போல் சீண்டினான் அரசு.

     “இங்க பாரு அரசு, நல்ல நேரத்திலே உன் மொக்கைக்கு எனக்குச் சிரிப்பு வராது. இப்ப இப்படி ஒரு நிலைமையில் என்ன சிரிக்க வைக்கிறேன்னு கோபப்படுத்தாதே.” என்றான் நாகா.

     “ரைட்டு விடு, இப்ப உனக்கு என்ன பிரச்சனை. அதைச் சொல்லு முதலில்.” பஞ்சாயத்து பேசும் தோரணையில் இறங்கினான்.

     “ஏங்க, அதான் அரசு வந்துட்டான் இல்ல. இனிமேல் என்னை அவனே பார்த்துக்கட்டும். தயவு செஞ்சு நீங்க இங்க இருந்து போங்க.” லீலாவைப் பார்த்து சங்கடத்துடன் சொன்னான் நாகா.

     “ஆஹா இந்த கருநாகத்தோட மனசுல தன்னைப் பத்தின நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவதுக்கு லீலாவுக்கு கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்புக்கு நானே தடையா வந்து நின்னுட்டேனே. இந்த நாகப்பாம்பு வேற என்னை இவன்கூட கோர்த்துக்க நினைக்குதே. எப்படியாவது கழண்டுக்கணுமே.

     நான் இங்கிருந்து போனா மட்டும் தான் நாகாவுக்கு லீலாவோட அன்பும், அக்கறையும், அவளோட நல்ல மனசும் புரியும். நாலு பேருல இவன் தான் பெரிய விடாக்கண்டன். இவனைச் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டமாச்சே சமாளிப்போம். எவ்வளவோ பண்றோம் இதைப் பண்ண மாட்டோமா.” எனத் தனக்குள் நினைத்தவாறு,

     “நாகா என்னடா, நீ எப்படி இருக்க என்ன பண்றன்னு பார்த்துட்டு போகலாம் னு வந்தா, என்னை உனக்கு துணையா இருக்க வைக்க நினைக்கிற.” அரசு கேட்க,

     “ஏன் அவனுங்க மூணு பேருக்கு ஒன்னுன்னா மட்டும் தான் பார்ப்பியா? நானும் உன் வடிவேல் அங்கிள் பையன் தான். என்னையும் கூட இருந்து பார்த்துக்கோ.” சட்டம் பேசினான் நாகா.

     “அடப்போடா இவ்வளவு காலம் கழிச்சு இப்பத் தான் உங்க அப்பாவுக்கு எனக்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் னு அறிவு வந்திருக்கு. அந்த அறிவு மழுங்கிப் போறதுக்குள்ள அவரைப் பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டுப் போகணும்.” அரசு சொல்ல, அவனை இரு என்றும் சொல்லமுடியாமல் போ என்றும் சொல்ல முடியாமல் பாவமாகப் பார்த்தான் நாகா.

     “கல்யாணமாவது மண்ணாவதுன்னு தூக்கிப் போட்டுட்டு நான் உன்கூடவே இருந்திடுவேன் தான். இருந்தாலும் நாளைக்கு இந்த அரசுவோட பேர் சொல்ற மாதிரி ஒரு பிள்ளை வேணும் இல்ல.

     அந்த ஒரு காரணத்துக்காக, நல்லா கேட்டுக்கோ அந்த ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நான் இங்கிருந்து கிளம்புறேன். ஆனா நீ ஒன்னும் கவலைப்படாதே. நான் உன் அண்ணி லீலாகிட்ட நல்லா சொல்லிட்டுப் போறேன். அவங்க உன்னை பக்கத்துல இருந்து பார்த்துப்பாங்க.” அண்ணி என்பதை அழுத்திச் சொல்லி, எரியும் கொள்ளியில் இன்னும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றினான் அரசு.

     “டேய் வீணாப் போனவனே, அவங்க என் பக்கத்துல இருக்காங்க என்பது தான் என்னோட கவலையே. என்னைப் பார்த்துக்கிறது அவங்களுக்கு வேண்ணா பெருசாத் தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு அவங்க கூட இருக்கிறது ஒரு மாதிரி தயக்கமா இருக்கு. அவங்க தொட்டா ஏதோ உடம்பெல்லாம் கூசுது டா.” சங்கடமாய் சொன்னான் நாகா. நல்லவேளையாக அந்த நேரம் லீலா நாகாவிற்கு சுடுதண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்தாள்.

     அரசுவிற்குப் பக்கென்று இருந்தது. “பைத்தியமா நீ, இதைக் கேட்டா லீலா சங்கடப்படுவா. இதுவே உங்க அம்மாவும், பாட்டியும் உயிரோடு இருந்து அவங்க உன்னைத் தொட்டா இப்படித்தான் கூசுமா.

     இல்ல உனக்கு ஒரு அக்காவோ, தங்கச்சியோ இருந்து அவங்க உன்னைத் தொட்டா இப்படித் தோணுமா? தப்பு உன் எண்ணத்தில் தான் இருக்கு.” என்க, நாகாவின் முகத்தில் உணர்வே இல்லை.

     “இங்க பாரு நாகா உனக்கு இந்தப் பணக்கார வாழ்க்கை மட்டும் தான் தெரியும். பணக்கார வீடுகளில் பணத்தைத் தவிர வேற எதுவுமே இருக்காது. இப்பெல்லாம் சில வீடுகளில் சொந்த புருஷன் அடிபட்டுக் கிடந்தால் கூட, அவனைக் கண்டுக்காம ஷாப்பிங் போற பொண்ணுங்க தான் அதிகமா இருக்காங்க.

     அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே பழகிப்போன உனக்கு, லீலா மாதிரிப் பொண்ணுங்க வித்தியாசமா தான் தெரிவாங்க. அவங்க அன்பை அனுபவிச்சுப் பார், அதில் உள்ள சுகம் தெரியும்.“ என்றவனுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்தான் நாகா.

     அவன் பார்வை புரிய, “சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லு. ஹாஸ்பிட்டல் போற, ஒரு லேடி டாக்டர் உனக்கு ஊசி போடுறாங்கன்னா உனக்கு இப்படி தான் உடம்பு கூசுமா. குழந்தை மாதிரி பண்ணாம அவங்களுக்குக் கொஞ்சம் ஒத்துழை, உடம்பு தானா சரியாகும்.” அரசு சொல்லி முடித்த நேரம் சரியாக லீலாவும் வந்து சேர்ந்தாள்.

     “லீலா நான் எல்லாம் சொல்லி இருக்கேன். இவன் அப்படித்தான் ஏதாவது சொல்லுவான். அதையெல்லாம் நீ கண்டுக்காத, நீ சொல்றதை அவன் கேட்கலன்னு வைச்சிக்க மண்டையில் ஓங்கிக் கொட்டிடு சரியா.” என்று புது யோசனை சொல்லிக்கொடுத்தான் அரசு.

     “ஏய் என்னை மாட்டி விடுறியா?” நாகா சீற, “ஆமாண்டா மாட்டி தான் விடுறேன். என்ன பண்ணுவ, உன்னால ஒன்னும் பண்ண முடியாது. இப்ப இருக்கிற நிலமையில் நீ பெட்டில் இருந்து எழுந்துக்க கூட முடியாது.” சீண்டினான் அரசு.

     “வேண்டாம் டா அரசு, என்னை ரொம்பக் கடுப்பேத்துற. நான் இப்படியே இருந்திட மாட்டேன். எழுந்திருச்சு வந்தேன்னு வைச்சிக்க உன்னை உண்டு இல்லன்னு ஆகிடுவேன்.” கடுப்பாகச் சொன்னான் நாகா.

     “என்னை உண்டு இல்லன்னு பண்றதுக்காகவாவது லீலா சொல்றதைக் கொஞ்சம் கேளு. அப்ப தான் உடம்பு சீக்கிரம் தேறி வரும். நீ சரியான பிறகு நாம ஓடிப்பிடிச்சி விளையாடலாம்.” என்றுவிட்டு கிளம்பினான் அரசு.

     அவன் சென்ற பின்னரும் நாகா லீலாவிற்கு ஒத்துழைக்கவில்லை. அதையும் இதையும் சொல்லி நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தான். “இதுக்கு மேலும் உங்ககிட்ட போராட எனக்குத் தெம்பு இல்ல. இப்போதைக்கு எனக்கு வேற வழியும் தெரியல.” என்ற லீலா ஊர்மிக்கு அழைத்து நாகா செய்து கொண்டிருக்கும் அட்டகாசங்களைச் சொன்னாள்.

     அந்தப்பக்கம் தங்கை பேச ஆரம்பித்ததும் இவள் ஸ்பீக்கரில் போட, “ஏன் இப்படிப் பண்றீங்க. ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு நினைச்சு நான் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன். இப்ப நீங்க அக்கா சொல்றதைக் கேட்க மாட்டேங்கிறீங்கன்னு நினைச்சு இன்னும் அதிகமா வருத்தப்படவா நானு. அது தான் உங்களுக்குச் சந்தோஷமா.

     அக்கா இதெல்லாம் சரிவராது. பேசாம நானே அவரைப் பார்த்துக்கிறேன். எனக்கு அம்மை வந்தாலும் பரவாயில்லை.” ஊர்மி தன்னைப் போல் சொல்லவும்,

     “இல்ல வேண்டாம். நீ வர வேண்டாம். தயவுசெஞ்சு நீ அந்த ரூமை விட்டு வெளியே வராதே. நான் உங்க அக்கா சொல்ற மாதிரி நடந்துக்கிறேன்.” என்று பணிந்தான் நாகா.

     “ச்சே உங்களோட கண்ட்ரோல் அவகிட்ட இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, இவ்வளவு நேரம் வேஸ்ட் பண்ணி இருக்க வேண்டாம்.” சிரித்த லீலா, அவன் சட்டையைக் கழட்டுவதற்கு உதவி செய்தாள்.

     உள்ளே பனியன் அணிந்திருக்க, “அதையும் கழட்டுங்க.” சாதாரணமாகச் சொன்னாள் லீலா.

     “ஏங்க அதுவாவது இருக்கட்டுமே.” நாகாவிற்கு அத்தனை அவஸ்தையாய் இருக்க, லீலாவுக்குச் சிரிப்பு தான் வந்தது.

     “கழட்டுறீங்களா இல்ல ஊர்மிக்கு மறுபடியும் போன் பண்ணவா?” சிரிப்புடனே கேட்டாள்.

     “இல்ல இல்ல வேண்டாம் வேண்டாம் நான் கழட்டுறேன்.” புலம்பியபடியே செய்தான் நாகா.

     அம்மைக் கொப்புளங்களில் லீலா மருந்திட ஆரம்பிக்க, கண்களை இறுக்கி மூடிக்கொண்டு படுத்திருந்தான் நாகா. வேலை முடிந்ததும் அவனுடைய வருத்தத்தைப் போக்க மெல்லிய பருத்துத் துணி ஒன்றை எடுத்து அவன் மேலே போட்டுவிட்டாள் லீலா.

     அவள் தன் வேலையை முடித்தது கூடத் தெரியாமல் கண்ணை இறுக்க மூடிக்கொண்டிருப்பவனைப் பார்த்து சற்றே சத்தமாகச் சிரித்தவள், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படி கண்ணை இறுக்கி மூடிக்கிட்டு படுத்து இருப்பீங்க. கண்ணு வலிக்கப் போகுது கண்ணைத் திறங்க.” என்றாள்.

     முடிஞ்சிடுச்சா என்ற ஆச்சர்யத்துடன் கண்ணைத் திறந்து பார்த்தான் நாகா. லீலாவின் ஸ்பரிசம் எதிர்பார்த்ததைப் போல் கூசவில்லை. மாறாக இனம்புரியாத வித்தியாசமான ஒருவித இதமான உணர்வைத் தந்தது.

     ஊர்மியின் ஸ்பரிசத்தில் இல்லாத, சொல்லப்போனால் இதுவரை எவருடைய தொடுதலிலும் இல்லாத ஏதோ ஒரு அற்புதமான உணர்வை உணர்ந்தான் நாகா. அது அவனுடைய மனதிற்கு இதமாகவும் இருந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அதுக்கு பேர் தான் அன்பு தாய்மை .. நாகா உனக்கு புரிஞ்சுட்டாலும் ..