Loading

அத்தியாயம் 50

     “நாங்க தப்பு பண்ணோமா?” புரியாமல் கேட்டான் தெய்வா.

     “ஆமா, அதுவும் சின்னத் தப்பு இல்ல, கொஞ்சம் பெரிய தப்பு.” என்றாள் ஊர்மி.

     “நாங்க எதுவுமே பண்ணாம அமைதியா தானே இருந்தோம்.” செல்வா கேட்க, “இதோ நீங்க பண்ண தப்பை நீங்களே உங்க வாயாலே ஒத்துக்கிட்டீங்களே.

     தப்பு பண்றது தப்பு தான். ஆனா அதை விட தப்பு, தப்பு நடக்கும் போது அதைத் தட்டிக் கேட்காம அமைதியா இருக்கிறது. அதைத் தான் நீங்க மூணு பேரும் பண்ணி இருக்கீங்க.” என்றாள்.

     “நாகா எங்க கூடப்பிறந்தவனா இருக்கலாம். அதுக்காக அவனுக்கும், அவன் பொண்டாட்டிக்கும் நடுவில் நடக்கிற வாக்குவாதத்தில் நாங்க தலையிடுவது சரியா வராது. அதுவும் இல்லாம வீட்டுக்குப் பெரியவரா அப்பா அங்க இருக்கும் போது, நாங்க எப்படித் தலையிட முடியும். அதனால் தான் அமைதியா இருந்தோம். அதைத் தப்புன்னு எப்படிச் சொல்ல முடியும்.” கேட்டவன் தர்மா.

     “வாக்குவாதமா இருந்தவரைக்கும் நீங்க தலையிட்டு இருக்க வேண்டாம். ஆனா எப்போ அது வன்முறையா மாறுச்சோ, அந்த நிமிஷம் நீங்க கண்டிப்பாத் தலையிட்டு இருக்கணும்.

     இதுவே எங்க நாலு பேரில் யாராவது அடிபட்டுக் கிடந்தா, இப்படித்தான் அப்பா இருக்காங்க, மத்தவங்க இருக்காங்க எனக்கும் அடிபட்டுக் கிடக்கிறவங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. அதனால் நான் பாட்டுக்கு விலகிப் போறேன்னு போவீங்களா?” ஊர்மி கேட்க, என்ன பதில் சொல்ல முடியும் அவர்களால்.

     “அன்னைக்கு அந்த இடத்தில் உங்க தம்பின்னு இல்ல வேற யாரா இருந்தாலும் நீங்க கண்டிப்பா தலையிட்டு இருந்திருக்கணும். அது உங்க வீடு, அங்க இருக்கும் ஒவ்வொருத்தரும் உங்க பாதுகாப்புக்கு கீழே தான் இருக்காங்க. உங்க கண் முன்னாடி அநியாயம் நடக்கும் போது, எனக்கென்னன்னு பார்த்துக்கிட்டு இருக்கிறது சரிதானா சொல்லுங்க.

      உங்க தம்பி என் கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டுப் போகும் போது கூட நீங்க அமைதியா தான் இருந்தீங்க. அந்த இடத்தில் தான் நீங்க மூணு பேரும் எங்க அக்கா மனதில் இருந்து சறுக்கினது. என் கூடப்பிறந்த மத்தவங்க பார்வையில் நீங்க தப்பா தெரிஞ்சதும் அந்த இடத்தில் தான்.

     இதுவே அந்த நாகப்பாம்பு உங்க எல்லார் முன்னாடியும் என் மேல கை வைக்கும்போது, நீங்க குறுக்க வந்து அவனைத் தடுத்து இருந்தீங்கன்னா என் அக்கா மனசுல நீங்க ரொம்ப உயர்ந்து போய் இருப்பீங்க.

     ஆனா அன்னைக்கு அமைதியா இருந்து, உங்க தம்பி பண்றதுல தப்பு இல்லைங்கிற மாதிரி உணர்த்திட்டீங்க. இது தப்பில்லையா மாமா.” ஊர்மி கேட்க செல்வாவிற்கு என்னவோ போல் இருந்தது.

     “சரி செல்வா மாமாவை விடுங்க. தெய்வா மாமா, நீங்க ஏன் அமைதியா இருந்தீங்க. உங்க தம்பி, தம்பி பொண்டாட்டி ஆகாதவங்கன்னு அமைதியா இருந்துட்டீங்க இல்ல. அந்த இடத்தில் தப்பு பண்ற தம்பியைக் கண்டிக்கும் அண்ணனா நீங்க நடந்திருக்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு போலீஸாவது நீங்க நடந்திருக்கணும் இல்லையா?

     ஒரு பொண்ணை நாலு பேர் பார்க்க அடிக்கிறது தப்பு. கடும் வார்த்தைகள் சொல்லி கொடுமைப்படுத்துவது அதை விடப் பெரிய தப்புன்னு நீங்க உங்க தம்பிக்கு அந்த இடத்தில் புரிய வைச்சு இருந்திருக்கணும். ஆனா உங்களுக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி இல்ல நின்னீங்க.

     உங்களோட அமைதியும், ஒதுக்கமும் ருக்கு அக்காவை ரொம்பவே பாதிச்சிடுச்சு. என் வீட்டுக்காரர் நாகா மாமா அவரோட சண்டை போடுவாரோன்னு நினைச்சு ஒதுங்கிப் போயிட்டாரே. ஒரு வேளை நாளைக்கு நாகா மாமா என்னையே அடிச்சாக் கூட இப்படித்தான் அமைதியாக இருப்பாரோன்னு இராத்திரியெல்லாம் தூங்காம ஒரே புலம்பல்.

     தர்மா மாமா நீங்களுமா இப்படி. தேவகி உங்களைப் பத்தி எவ்வளவு பெருமையா சொல்லுவா தெரியுமா? என் புருஷன் ரொம்ப நேர்மையானவர். அதனால் தான் அவருக்குச் சரியா தர்மராஜ் னு பேர் வந்து இருக்குன்னு சொல்லி சொல்லி பெருமைப்படுவா. உங்களோட அமைதி அவளுக்கும் ஒரு பெரிய அடிதான்.

     குறைந்தபட்சம், தப்புப் பண்ற நாகா இது வேண்டாமுன்னாச்சும் உங்களில் யாராவது ஒருத்தர் சொல்லி இருக்கலாம்.” ஊர்மி சொல்ல அனைவரின் மனதிலும் நாகாவின் செயல்களைத் தாங்கள் தடுத்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

     “என் அக்கா, தங்கச்சிங்களை விடுங்க, எனக்குக் கூட என் புருஷனை விட உங்க மேல தான் வருத்தமும், கோபமும் அதிகம். அவனைப் பத்தி எனக்கு ஓரளவு தெரியும்.

     கொஞ்சம் பைத்தியக்காரன், எப்ப என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரியாது. ஆனா நீங்க மூணு பேரும் அப்படி இல்லையே. ரொம்ப நிதானமான ஆளுங்க, அப்படி இருந்தும் உங்க மரியாதையை நீங்களே குறைச்சுக்கிட்டீங்களே.

     வடிவேல் மாமா எங்க மேல குற்றம் சொல்லும் போது கூட உங்க ஒருத்தராலும் எங்களுக்குச் சாதகமாப் பேச முடியல இல்ல.” மனதின் பாரங்கள் அனைத்தையும் மாமன்கள் தலையில் இறக்கி வைத்தாள் ஊர்மிளா.

     “இங்க பாருங்க ஊர்மிளா, நீங்க எதிர்பார்க்கிற மாதிரி எல்லாம் நாங்க இருக்க முடியாது. நாங்க நாலு பேரும் இப்படித்தான் ஆளுக்கொரு திசையில் தான் இருப்போம். உங்களை மாதிரி பாசத்தை பொழியவும் மாட்டோம், பங்காளிங்க மாதிரி எப்பவும் பகைச்சிக்கிட்டும் நிக்க மாட்டோம்.

     ஒருத்தரோட சந்தோஷ துக்கங்களையே நாங்க இன்னொருத்தரோட பகிர்ந்துக்கிறது இல்ல. அப்படி இருக்கும் போது ஒருத்தரோட தப்பை நாங்க எப்படிச் சுட்டிக்காட்டுவோம்.

     எங்க நாலு பேரில் ஒருத்தரோட வாழ்க்கையில் ஏதாவது ஒன்னு நடந்தா அது மத்தவங்களைப் பொறுத்தவரைக்கும், தெருவிலோ இல்லை பக்கத்து வீட்டிலோ நடப்பது மாதிரி தான். இதை எங்களோட நிறைன்னு நாங்க நினைக்கிறோம். குறைன்னு நீங்க நினைச்சாக் கூட எங்களுக்குக் கவலை இல்லை.

     ஏன்னா குறைகள் இல்லாத மனுசங்க இங்க யாருமே கிடையாது. அவ்வளவு ஏன் நீங்க நாலு பேரும் நாங்க எதிர்பார்த்த மாதிரி அமையல தான். அதுக்காக உங்களை நாங்க மறுத்தோமா இல்லை உங்களை மாத்திக்கத் தான் சொன்னோமா. உங்களை உங்களாவே ஏத்துக்கிட்டோம் தானே.” சவடாலாகப் பேசினான் தெய்வா.

     “சரி எங்க பக்கக் கருத்தை நான் சொல்லிட்டேன். உங்க பக்கக் கருத்தை நீங்க சொல்லிட்டீங்க. இனி என்ன பண்ணலாம் னு அக்காகிட்ட பேசி முடிவு பண்ணி சொல்றேன். நீங்க கிளம்புறதுன்னா கிளம்பலாம். இல்லை உங்க உங்க பொண்டாட்டியைப் பார்க்கணும் னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வந்திடுவாங்க. எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை நான் ரெஸ்ட் எடுக்கிறேன்.” என்றுவிட்டு ஒரு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் ஊர்மி.

     “நாம இருக்கோம் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம இந்தப் பொண்ணு பண்றதைப் பாரேன்.” தெய்வா சற்றே சத்தமாகச் சொன்னான்.

     “அடங்குறியா, நானும் வந்ததில் இருந்து பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். அவங்களுக்கு நிஜமாவே முடியல. ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு தான் பேசிக்கிட்டு இருந்தாங்க.” என்ற செல்வா, அவள் இருந்த அறையின் கதவைத் தட்டினான்.

     “மச்சினிக்கு நல்லாத் தான் ஊழியம் பண்றான்.” தெய்வா முணுமுணுக்க, “நான் ஒரு டாக்டர், என் கண்ணு முன்னாடி யாராவது நோயால் கஷ்டப்பட்டா, அவங்களைச் சரிபண்றது என்னோட தொழில் தர்மம்.” எனக் கொட்டு வைத்தவன், ஊர்மி கதவைத் திறக்கவும், “ஏதாவது ஹெல்ப் வேணுமா? ஐ மீன் மெடிசன் ஏதாவது.” என்றான் தன்மையுடன்.

     “ரொம்ப நன்றி மாமா, எனக்காக அக்கறையாக் கேட்டதுக்கு. இப்படி அடிக்கடி அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க மேலும் கொஞ்சம் அன்பு காட்டிப் பாருங்க. உங்க வாழ்க்கை இப்ப இருக்கிறதை விட இன்னும் அழகாகிடும்.

     எனக்குப் பெருசா ஒன்னும் இல்ல. என்னோட பிரச்சனைக்கு நல்ல மெடிசன் தூக்கம் தான். அதனால் தான் நீங்க எல்லாரும் இருக்கிறதையும் மீறி நான் உள்ள வந்திட்டேன்.” என்றுவிட்டு அவள் அமைதியாக, அவளை மேற்கொண்டு தொந்தரவு செய்ய விரும்பாமல் லீலாவின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தான் செல்வா.

     “இந்த ஊர்மிக்குத் திடீர்னு என்னாச்சுன்னு தெரியல. சுவாமி தரிசனம் பார்க்காமலே வந்திட்டா. என்ன பிரச்சனையோ என்னவோ.” புலம்பிக்கொண்டே லீலாவர அவளைத் தொடர்ந்து மற்ற இருவரும் வந்தனர்.

     தெய்வாவைக் கண்டதும் ருக்கு ஏதோ சொல்ல வர, அவள் கை பிடித்து அமைதியாக்கிய லீலா, “எதுவா இருந்தாலும் கூட்டத்தில் பேசாம தனியாப் போய் பேசு.” என்றாள் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

     “வாங்க எல்லாரும் எப்ப வந்தீங்க. வீட்டில் மாமா நல்லா இருக்காங்களா?” சாதாரணமாகப் பேச்சை ஆரம்பித்தாள் லீலா.

     “ஆமா அன்னைக்கு அந்தப் பேச்சு பேசிட்டு, இன்னைக்கு ரொம்பத் தான் அக்கறை துள்ளுது. சரியா சாப்பிடாமக் கொள்ளாம இருக்காரு அந்த மனுஷன். அரசு மட்டும் இல்லன்னா ஆளே உடைஞ்சிருப்பாரு.” தகப்பனின் நிலையைப் பார்த்து கடின மனதோடு சொன்னான் தெய்வா.

     “லீலா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், நம்ம வாழ்க்கையைப் பத்தி. நீங்க சம்மதிச்சா இங்க பக்கத்தில் எங்கேயாவது தனியாப் போய் பேசலாம்.” செல்வா சொல்ல தங்கைகளைப் பார்த்து பொறுமை அவசியம் என்று கண்களால் சொல்லிவிட்டு, செல்வாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

     “தேவகி எப்படி இருக்கீங்க? என்னை, நம்ம வீட்டை, காலேஜை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு அக்கா முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு வந்துட்டீங்க.

     காலேஜில் உங்களைப் பத்தி விசாரிச்சாங்க. நீங்க எப்படியும் நம்ம வீட்டுக்கு வந்திடுவீங்கன்னு நம்பி, உடம்பு சரியில்லை குணமானதும் வந்திடுவீங்கன்னு மெடிக்கல் லீவ் அப்ளை பண்ணி இருக்கேன். இனி நீங்க தான் சொல்லணும்.” என்றான் தவிப்புடன்.

     தேவகிக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவனைக் கண்ணால் காணும் முன்னர் வரை கண்டதையும் யோசித்து அவன் மேல் சற்றே கோபத்தை வரவழைத்துக் கொண்டிருந்தவளுக்கு நேரில் பார்த்ததும் அன்பு ஊற்றாய் பெருக என்ன சொல்வது என்று தெரியாமல் அவனையே பார்த்தபடி நின்றாள்.

     அவர்களைக் கவனிக்காமல் ருக்கு அருகே வந்த தெய்வா, “அவங்க இரண்டு பேரைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. நான் உங்களை என்கூட கூட்டிட்டுப் போகத் தான் இங்க வந்திருக்கேன். நீங்க எனக்கு முக்கியம் னு நினைச்சு உங்களைத் தேடி வந்திருக்கேன். அதே மாதிரி நீங்களும் நான் உங்க வாழ்க்கைக்கு முக்கியம் னு நினைச்சீங்கன்னா இன்னைக்கே என் கூடக் கிளம்பி வந்திடுங்க.” உத்தரவு குரலில் சொன்னான்.

     “என்கூட வாங்க.” என்று தெய்வாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நகன்றாள் ருக்கு.

     “எல்லாரும் போயிட்டாங்க இப்பவாச்சும் உங்க மனசில் என்ன இருக்குன்னு சொல்லுங்க தேவகி. உண்மையில் நீங்க என்னை உங்க வாழ்க்கையில் இருந்து ஒதுக்க நினைக்கிறீங்களா?” ஒருமாதிரி குரலில் கேட்டான் தர்மா.

     அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டவள், “எனக்கு உங்களைத் தனியா விட்டுட்டு வந்ததில் ரொம்ப வருத்தம். ஆனா அக்கா கூப்பிட்டப்ப வேற எதுவுமே எனக்கு பெருசாத் தெரியல. அதோட ஊர்மி அக்கா பாவம். அங்க நாகா மாமா அவங்களைக் கஷ்டப்படுத்தும் போது, நீங்க போய் அவரை ஒரே ஒரு அடி அடிச்சிருந்தாக் கூட உங்களுக்காக என் அக்காகிட்ட நான் பேசி இருப்பேன், அவங்களையும் சேர்த்து நான் அங்கேயே தங்க வைச்சிருப்பேன்.

     ஆனா அதுக்கு வழி இல்லாமப் போச்சு. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. எனக்கு நீங்களும் வேணும், என் அக்காங்களும் வேணும். நீங்க தான் ஒரு நல்ல முடிவா சொல்லணும்.” முடிவைக் கேட்டு நின்றவனிடமே முடிவெடுக்கச் சொன்னாள் தேவகி.

     தேவகி சொன்ன அதே வார்த்தைகளை ருக்குவும் தெய்வாவிடம் சொல்லி இருக்க, “நான் இதில் என்ன முடிவு சொல்ல முடியும் ருக்கு. எனக்கு என் கூடப் பிறந்தவங்களைப் பத்தியோ இல்லை உங்க கூடப்பிறந்தவங்களைப் பத்தியோ எந்தக் கவலையும் இல்லை. எனக்கு நானும், நீங்களும் வாழப்போற வாழ்க்கை மட்டும் தான் முக்கியம்.

     இப்பவே என்னோட கிளம்பி வரதா இருந்தா வாங்க. இல்ல உங்க அக்கா தான் முக்கியம் னா அவங்க கூடவே இருந்திடுங்க.” சற்றே கோபத்துடன் சொன்னான். சமாதானப்படுத்தும் நோக்கத்தில் இல்லை பயத்திலாவது தன்னோடு வந்துவிட மாட்டாளா என்னும் ஆசையில் தான் இப்படிச் சொன்னது.

     “சரிங்க அப்ப நான் எங்க அக்கா கூடவே இருந்திடுறேன்.” அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தையில் அடிபட்ட மனதின் வலியை உணர்ந்தவளுக்குக் கோபம் வந்து வார்த்தையை விட அதிர்ந்த பார்வை பார்த்தான் தெய்வா. அவன் நேசம் அங்கு அடிபட்டதைப் போன்ற ஒரு பிரம்மை தோன்றியது அவனுக்கு.

     “என்னங்க அதிர்ச்சியா இருக்கா. நீங்க என்னைத் தப்பா நினைச்சாலும் பரவாயில்லை, நான் உங்களை ஒன்னு கேட்கிறேன். உங்க அப்பா உங்களோட மட்டும் வந்து இருக்க ஆசைப்படுறாருன்னு வைச்சுக்கோங்க. அது உங்களைப் பொறுத்தவரைக்கும் புதையல் கிடைச்ச அளவு சந்தோஷம். அவரை தாங்கு தாங்குன்னு தாங்கிப் பார்த்துக்க நினைக்கிறீங்க.

     ஆனா அப்ப நான் வந்து, என்னால உங்க அப்பா கூட இருக்க முடியாது. அவரைப் பார்த்துக்க முடியாது. அவரு வேணுமா நான் வேணுமான்னு கேட்டா என்ன பண்ணுவீங்க.

     சரிதான் போடின்னு உங்க அப்பா பின்னாடி தானே போவீங்க. அதுக்காக உங்களுக்கு என்னைப் பிடிக்கலன்னோ இல்லை என்னை விட உங்க அப்பாவைத் தான் ரொம்பப் பிடிக்கும் என்றோ ஆகிடாது இல்லையா.

     நானும் அப்படித்தான். என் அக்கா ஒரு சிறந்த வழிகாட்டி. விவரம் தெரிந்த நாளில் இருந்து அவங்க காட்டின நல்ல வழியில் அவங்க பின்னாடியே போன நான், கடைசிவரைக்கும் அப்படியே போக நினைக்கிறேன். இதுக்கு மேல என்னோட நிலையை தெளிவா சொல்லணும் னா, என்னால என் அக்கா தங்கச்சி இல்லாம உயிர்ப்போட வாழ முடியாது. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்.” என்றாள் ருக்கு. இதைக் கேட்டவன் கோபமாய் அங்கிருந்து கிளம்பிச் சென்றேவிட்டான்.

     “நல்ல வழிகாட்டியாம், மண்ணாங்கட்டி. கட்டின புருஷனை விட்டுட்டு வாழாவெட்டியா வந்து வீட்டில் இருன்னு கூட்டிட்டு வந்தவங்க தான் இவங்க கண்ணுக்கு நல்ல வழிகாட்டியாத் தெரியுறாங்க போல இருக்கு.

      என்னோட ஆசை, கனவுகள் எல்லாம் தெரிந்தும் என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் இல்லாம, என் உலகத்துக்கு வருவதற்கு யோசனை கூட செய்யாம, எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இப்படி அவங்க உலகத்துக்குள்ள இழுத்துக்க நினைக்கிறாங்களே. எப்படி மனசு வருது இவங்களுக்கு.” பொறுமலோடு தான் அங்கிருந்து கிளம்பினான் தெய்வா.

     தேவகியிடத்தில், “எல்லாத்துக்கும் காரணம் இந்த நாகா மட்டும் தான். அவன் கொஞ்சம் அமைதியா இருந்திருந்தா இவ்வளவு தூரம் பிரச்சனை வந்து இருக்காது. நீங்க என்னை விட்டுட்டு இங்க வந்ததால என்னால தூங்க முடியல, ரொம்பக் கஷ்டமா இருக்குன்னு எல்லாம் என்னால பொய் சொல்லத் தெரியாது.

     ஹாஸ்டலில் ரூம்மேட் ஊருக்குப் போனா அனுபவிக்கிற ஒருவிதமான தனிமை அதைத்தான் நீங்க இல்லாத அந்த ரூமில் அனுபவிக்கிறேன். காலேஜ் கிளம்பும் போதெல்லாம் உங்களையும் கூட்டிட்டுப் போய் பழகி, நீங்க இல்லாத அந்த காலைப் பயணம் திருப்தியாவே இல்லை. ஒருமாதிரி அசௌகர்யமா இருக்கு. ஏதோ ஒன்னை தொலைச்ச மாதிரியே பாரமா இருக்கு.” மனதின் தவிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தான் தர்மா.

     “எனக்கு உங்க கஷ்டம் புரியுது. ஆனா எங்களையும் நீங்க புரிஞ்சுக்கணும். நாங்க அந்த வீட்டுக்கு வந்தா நாலு பேராத்தான் வருவோம் இல்லைன்னா.” என்று மேற்க்கொண்டு பேச வந்த தேவகியைத் தடுத்த தர்மா,

     “வேற எதையும் சொல்லாதீங்க தேவகி. என்னோட உள் மனசு சொல்லுது இது நிரந்தர பிரிவு இல்லன்னு. ரொம்ப சீக்கிரம் உங்களை நம்ம வீட்டில் எதிர்பார்க்கிறேன்.” என்றுவிட்டுத் தானும் தனியாகவே கிளம்பிச் சென்றான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஊர்மி கேட்டது சரி தானே … வடிவேலு பேசும் போதும் … அந்த நாகா பண்ணும் போதும் வேடிக்கை பார்த்தாங்க மூணு பேரும் … மச்சினிச்சிக்கு ஊழியம் என்ன பேச்சு இதெல்லாம் தெய்வா … நல்லாவே இல்ல …

    செல்வாவும் தர்மாவும் தான் கொஞ்சம் புரிதலா இருக்காங்க … ஆனா பிரச்சனை வந்தா … எனக்கென்ன அப்படின்னு இருக்காங்க … ஒரு பொண்ணு மேல கை வைக்காத … பேசாத அப்படின்னு சொல்லியிருக்கணும் அது யாரா இருந்தாலும் …