இமை 28
எழிலிற்கு நேத்ராவை விட்டு செல்ல மனமில்லாமல் ஒரு வாரம் வேலைக்கு விடுமுறை எடுத்திருந்தாள்.. வேனிக்கும் ஒரு வாரம் விடுமுறை விட்டிருந்தாள் வேணியிடம் நம்பிக்கை இருந்தாலும், ஏனோ நேத்ராவை யாரிடமும் விட்டு செல்ல மனம் மறுக்கிறது..
குழந்தையை இன்னும் தான் சரியாக கவனித்து கொள்ளவில்லை என்ற குற்ற உணர்வு அவள் இதயத்தில் இரும்பு குண்டை வைத்து அழுத்துவது போல அழுத்தி வலி கொடுக்க நேத்ராவை விட்டு எங்கும் அகலாமல் குழந்தையுடனே இருந்தாள்..
பெண்ணாக பிறந்த ஒரே காரணத்திற்காக தன் குழந்தை அனுபவித்த துன்பங்களை நினைத்து மனம் பரிதவித்தது.. இப்போ தான் குழந்தைக்கு துனையாக இருக்கேன் ஒரு வாரத்திற்கு பிறகு?..” என்ற கேள்வி அவளை மருட்ட, நெற்றியை நீவியபடி அமர்ந்திருந்தாள்..
“ம்மா சாக்லேட் அங்கிள் ஏதோ சர்ப்ரைஸ் தரேன்னு சொன்னாங்க இல்ல என்னம்மா அது?.. உங்ககிட்ட சொன்னாங்களா என நேத்ரா எழிலிடம் ஆர்வமாக கேட்க, எழில் இல்லை என்பது போல் மறுப்பாக தல அசைக்கவும்,
“ம்மா அந்த சாக்லேட் அங்கிள் ஸ்வேதா அங்கிள்கிட்ட பேசியிருப்பாங்களா?. இனி அந்த ஸ்வேதா அங்கிள் என்கிட்ட வர மாட்டாங்கள்ல?.. உங்களையும் எதுவும் செய்ய மாட்டாங்க தானே..” என்று பயமும் நம்பிக்கையுமாக கேட்க, எழிலிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை ஆம் என்று நம்பிக்கை கொடுக்கவும் முடியவில்லை.. இல்லை என்று விஜய் மேல் அவநம்பிக்கை கொடுக்கவும் மனம் வரவில்லை..
“அங்கிள் வர்றேன்னு சொன்னாங்க இன்னும் காணமே.! என கூறிவிட்டு, கார் ஹாரன் சத்தம் கேட்கும் போதெல்லாம் தன் சாக்லேட் அங்கிள் தான் வந்து விட்டாரோ என்று ஆர்வமாக வாசலை எட்டிப் பார்த்து விட்டு வருவதும், போவதுமாக இருந்த நேத்ராவை பார்க்க எழிலிற்கு மனம் தாளவில்லை..
“இந்த ஹோட்டல்கார் ஏன் இப்படி செய்றாங்க?.. ஒரு விஷயம் முடியாதுன்னா, எதுக்கு குழந்தை கிட்ட முடியும் சொல்லி ஏமாத்தணும்? ‘இனி ஸ்வேதா அப்பாவை பத்தி நினைக்காத என்று பெரிசா உத்தரவு மட்டும் போட்டா போதுமா?.. இப்ப அம்மு என்கிட்ட தான் கேட்டிட்டு இருக்காளே..” என்று விஜயை மனதில் திட்டிய எழிலிற்குமே
விஜய் ஸ்வேதாவின் தந்தையிடம் எதாவது பேசியிருப்பானா என்று எண்ணம் தோன்றியது.. ஆனால் அந்த ஹோட்டல்கார் அவனை விட்டாலும் நான் அவனை சும்மா விட மாட்டேன்.. என்று மனதில் சூளுரை செய்தவள், நேத்ராவை உறங்க வைத்த பிறகு தான் அந்த மிருகத்தை போய் பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டவள் தன் எண்ணத்தை மறைத்து கொண்டு
“அந்த அங்கிளுக்கு நிறைய வேலை இருக்கும் அம்மு.. அவங்களை தொல்லை செய்ய கூடாது.. அவங்க வரும் போது வரட்டும்.. அதான் உன் பக்கத்துல நான் இருக்கேன்ல அந்த ஸ்வேதா அங்கிள் உன் பக்கம் வந்தால் நான் அவனை கொன்ருவேன்..” என்று முகம் சிவக்க கண்களை உருட்டி காளி தேவியாக மாறி சொல்லி கொண்டு இருக்க, எழிலின் இந்த கோபமான முகம் கண்டு நேத்ரா பயம் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு
“அம்மா என்று உடல் நடுங்கி இருந்ந குழந்தையை கண்டு, “அம்மு முன்னாடி கோபப்படக் கூடாதுன்னு அந்த ஹோட்டல்கார் நேத்தே சொன்னார் கேட்டேனா நானு..” என தன் கண்முன்னே பயந்து நடுங்கி இருந்த நேத்ராவை பார்த்தபடி தன்னையே திட்டிக் கொண்ட எழில், “இல்லடா அம்மு நான் கோப படல..” என்று நேத்ராவை அணைத்தபடி சமாதானம் செய்து கொண்டு இருக்க,
வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டது அதனை தொடர்ந்து “மேடம்..!!” ஈனஸ்வரத்தில் ஒரு குரல் கேட்க, எழில் சிறு தயக்கத்தோடு கதவை திறக்க அங்கு ஸ்வேதாவின் தந்தை சந்தீப் நின்றிருந்தான்.. அவளைப் பார்த்த நொடியில் எழில் ஆங்காரத்தோடு அவன் கன்னத்தில் ஓங்கி அரைந்திருந்தாள்.. சத்தம் கேட்டு அங்கு வந்த நேத்ரா அந்த சந்தீப்பை பார்த்ததும் பயந்து எழில் பின்ன மறைந்து கொண்ட குழந்தையை இரு வலிய கரங்கள் தூக்கி கொண்டது..
சந்தீப் தான் தன்னை தொடுகிறான் என நினைத்து பயத்தில் அலறிய நேத்ரா அந்த கைகளில் இருந்து விடுபட திமிறி கொண்டு இருக்க “ஷ் பேபி நான் தான் உன்னோட சாக்லேட் அங்கிள்..” என்ற குரலில் அப்படியே அமைதியானாள்.. கண்களை திறக்க பயந்து அழுது கொண்டிருந்த குழந்தை விஜய்யின் குரல் கேட்டதும் சட்டேன்று கண் திறக்க,
“அங்கிள்.. அங்கிள்!! இவங்கதான் ஸ்வேதா அங்கிள்.. இவங்கதான் என்ன பேட்..”
“ஷ் பேபி ஒன்னும் இல்லடா.. நீ என்னைய ஸ்வேதா அங்கிள் கிட்ட பேச சொன்னேல நான் அவங்களுக்கு புரியற மாதிரி பேசினேனா.. நான் பேசினதுல அவங்க தான் நான் செஞ்சது தப்பு.. நான் பாப்பா கிட்ட சாரி கேட்கிறேன் அப்படின்னு மனம் திருந்தி உன்கிட்ட இந்த ஆள் சாரி கேட்க தான் வந்திருக்காங்க..” என்று மென்மையாக எடுத்து சொல்ல
“குழந்தை ஆச்சரியமாக கண்களை விரித்து நிஜமாவா அங்கிள்?! இனி இந்த அங்கிள் என்னைய..” சந்தேகமாக கேட்ட நேத்ராவை இடைமறித்த விஜய், “நான் உன் அங்கிள் உன் பக்கத்துல தான் இருக்கேன்.. என்ன பயம் இங்க நேராக நிமிர்ந்து அவரை பாரு பேபி” என்று அழுத்தமாக கூற, அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்றில் நேத்ராவிற்கு தைரியம் வந்தது.. விஜய்யின் கழுத்தை கட்டிக்கொண்டு சந்தீப்பை நேராக நிமிர்ந்து பார்த்தாள்..
விஜய் சந்திப்பை பார்த்து கண் ஜாடை காட்ட அவனும் சரி என்று தலையசைத்து, “பாப்பா நான் செஞ்சது ரொம்ப தப்பு.. ரொம்ப பாவம்.. என்னைய மன்னிச்சிருமா.. நான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டேன்.. இனி இந்த தப்பை கனவில் கூட செய்ய மாட்டேன்..” என்று மன்னிப்பு கேட்டபடி நேத்ராவின் காலை தொட்டு கும்பிட வர,
விஜய் சட்டென்று நகர்ந்து கொண்டான்.. “மன்னிப்பு கேட்க கூட என் பேபி காலை தொட உனக்கு அனுமதி இல்லை.. மன்னிப்பு கேட்டாச்சுல்ல என் பேபி மன்னிச்சா நீ போகலாம்.. இல்லனா என் பேபி மன்னிக்கிற வரை நீ அங்க ரோட்ல நின்று மன்னிப்பு கேட்டுக்கிட்டே இருக்கணும்.. என்று உத்தரவிட
“வேண்டாம் அங்கிள் அவங்க போகட்டும்.. எனக்கு அவங்களை பார்க்க வேண்டாம்..” என்றபடி விஜய் கழுத்தில் முகம் பதித்து கொள்ள, சரி பேபிக்கு உன்னை பார்க்க பிடிக்கல.. நீ போகலாம்.” என்று உத்தரவிட, அந்த சந்தீப் தலைகுனிந்து வெளியே செல்ல, இங்கு நடப்பதை வியப்பாக பார்த்து கொண்டு நின்றிருந்தாள் எழில்
அந்த சந்தீப்பை பார்ப்பதற்கு சாதரணமாக இருந்தாலும், விஜய்யை பார்த்ததும் அவன் கண்கள் உயிர் பயத்தை காட்டுவதை எழில் நன்றாக உணர்ந்து கொண்டாள்.. இந்த ஹோட்டல்கார் அவனை என்னமோ செஞ்சிருக்கார்.. அதான் அவன் கண்கள்ல அந்த பயம் தெரியுது.. அப்படி அவனை என்ன செஞ்சிருப்பார் இந்த ஹோட்டல்கார்?..” என்று சிந்தித்து கொண்டு இருக்க
“நேத்ரா பேபிக்கு இப்ப ஹேப்பியா?..” என்று விஜய் நேத்ராவிடம் கேட்க, நேத்ரா விஜய்யின் கன்னத்தில் முத்தமிட்டு, “நான் சோ ஹேப்பி அங்கிள்.. நான் ரொம்ப பயந்தேன்.. அந்த அங்கிள் சாரி கேட்டாங்களா நான் ஹேப்பி..” என்று முகம் மலர்ந்து கூற
“நேத்ரா பேபி ஹேப்பினா அங்கிள் ஹேப்பி.. இனி எதுவாக இருந்தாலும் அம்மா கிட்டயோ, இல்லை என்கிட்டயோ மறைக்காம சொல்லணும் சரியா?..” என்று சொல்ல, “ம் சரி அங்கிள் இனி நான் மறைக்க மாட்டேன்..” என்று முகம் மலர்ந்து சிரிக்க,
“மை கியூட்டி ஏஞ்சல்!!” என்று நேத்ராவின் கன்னத்தில் முத்தமிட்டு கீழே இறக்கி விட்ட விஜய் அவள் கரத்தில் சாக்லேட் கொடுத்தவன், “இனி பேபி ஹேப்பியா இருங்க.. அங்கிள் நாளைக்கு வர்றேன்..” என்று நேத்ராவின் கன்னம் தட்டி சென்றவன் இரண்டு எட்டு எடுத்து வைக்க அவன் கை பிடித்து தடுத்த நேத்ரா,
அங்கிள் அப்போ அந்த சர்ப்ரைஸ்?.. என்று கேட்க, வாவ் பேபி நான் சொன்னதை நீங்க மறக்காமல் இருக்கிங்களே என்று வியந்தவன், “இன்னும் டு டேஸ் வெயிட் பேபி..” என்றவாறு நேத்ராவை தலைக்குமேல் தூக்கி போட்டு விளையாடியவன். விடைபெற்று செல்ல, நேத்ரா சந்தோஷமாக தலையசைக்க, பேண்டில் ஒரு கை நுழைத்து மற்றொரு கையால் தலை கோதியபடி கம்பீரமாக நடந்து சென்ற விஜய்யை தன்னை அறியாமல் எழில் வியப்பாக பார்த்தபடி நின்றிருந்தாள்…
எழில் ஒரு வாரம் வேணிக்கு விடுமுறை கொடுத்தாலும் மனம் கேளாமல் மறு நாள் எழில் முன் வந்து நின்ற வேணி எழில் முன்பு தலைகுனிந்து நின்று இருக்க, எழில் கைகளை கட்டிக்கொண்டு அவரை அழுத்தமாக பார்த்து கொண்டு இருந்தாள்.. அவள் பார்வையே வேணியை குற்ற குறுகுறுப்பில் தள்ள,
“என்னை மன்னிச்சிரும்மா.. பாப்பா வெளியே போக ரொம்ப ஆசை பட்டா அதான் இங்க பக்கத்தில் பூங்கா கூட்டிட்டு போனேன்.. அங்க இந்த சார் வந்து பாப்பாவை ஸ்கூல் கூட்டிட்டு வந்துட்டாங்க.. நான் அவ்வளவு தடுத்தும் பாப்பாவும், அந்த சாரும் கேட்கவே இல்லை..’ என்று இயலாமையுடன் சொல்ல
“ஸ்வேதா இங்க எப்போ வருவா? என்று எழில் அந்த பேச்சை விடுத்து வேறு விசாரிக்க, “என்னாச்சு மா இங்க எதுவும் தொலைஞ்சு போச்சா?.’ என்று பதட்டமாக கேட்க “நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் நீங்க வேற கேள்வி கேட்கறிங்க அக்கா?..” என்ற எழிலை நிமிர்ந்து பார்த்த வேணி,
“அது வந்து பாப்பாவை வெளியே எங்கேயும் கூட்டிட்டு போக கூடாது நீங்க சொன்னிங்கள்ல அதனால் நான் எதாவது பொருள் வாங்க கடைக்கு போகும் போது பாப்பாவை பார்த்துக்க ஆள் இல்லாமல்.. ஸ்வேதா இங்க வந்து விளையாடுவா.. ஸ்வேதா கூட சில சமயம் அவ அப்பா வருவாங்க.. என்னாச்சு மா” என்று வேணி மீண்டும் கேட்க.
“அம்முவை இனி நானே பார்த்துக்கிறேன்.. நீங்க இங்க வர வேண்..” என்று வேணியை வேலையில் இருந்து நீங்குவதாக கூற போகும் நொடியில் எழில் அலைபேசி சத்தம் கொடுக்க, புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும், யார் என்று தெரியாமல் அழைப்பை எற்க மறுத்து இணைப்பை துண்டித்தாள்..
மீண்டும் அந்த எண்ணில் இருந்து அழைப்பு வரவும் சிறு யோசனையோடு அழைப்பை ஏற்று காதில் வைக்க, “ஹேய் ராங்கி முதல் வேளையாக அந்த கேர்டேக்கரை வேலையை விட்டு அனுப்பு.. அவங்களுக்கு எவ்வளவு தைரியம் நம்ம பெர்மிஷன் இல்லாமல் நம்ம பேபியை வெளியே கூட்டிட்டு போய்ருப்பாங்க.. அதனால் பேபிக்கு எதாவது ஆபத்து நடந்தால் என்ன ஆகிருக்கும்?.. சோ நீ அவங்களை அனுப்பு..” என்று உத்தரவிட, சற்று முன் தான் செய்ய நினைத்ததை விஜய் கட்டளையாக கூறவும் அவளுக்குள் இருந்த வீம்பு விழித்து கொள்ள,
“யாரை வேலைக்கு வைக்கணும் வைக்க கூடாது என்று நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. வேணி அக்கா எங்கேயும் போக மாட்டாங்க நீங்க போனை வைங்க..” என்று கோபமாக பேசிவிட்டு இணைப்பை துண்டிக்க, “ஹ.ஹ. ஷப்பா..!! படபட பட்டாசு.. நான் என்ன சொன்னாலும் அதுக்கு நேர்மாறாக தான் நீ செய்வ என்று எனக்கு தெரியுமே.. அதான் நான் அப்படி சொன்னேன்..” என்று சிரித்தபடி எழிலை செல்லமாக திட்டியவன்,
“எப்படியோ வேணி அவங்க வேலையை காப்பாத்தியாச்சு..” என்று முணுமுணுத்தபடி திரும்ப அங்கு ஷக்தியும், விதுரனும் கேலியாக சிரித்தபடி இவனை பார்த்து கொண்டு நின்றிருந்தனர்.. “ என்ன.. என்ன எதுக்கு இப்படி பார்க்கிறிங்க?” என்று வேகமாக கேட்க “இந்த பொழைப்புக்கு..” என்று இருவரும் ஏதோ கூற வர
“உங்க ரெண்டுபேரை விட நான் குறைவு தான்.. காதல் வந்தால் எல்லா கேடித்தனமான வேலை செய்யலாம்.. என்று உங்களை பார்த்து தான்டா கத்துக்கிட்டேன்..” என்று பதிலுக்கு கெத்தாக கூறி இருவரையும் கிண்டல் செய்த விஜய்,
“ஆனாலும் இந்த காதல் இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் நினைச்சே பார்க்கல மச்சி.. நான் பிஸினஸ் என் எதிரிங்க கண்ணில் விரலை விட்டு ஆட்றேன்.. ஆனால் இந்த ராங்கி பாரேன்.. என்னை என்னா பாடு படுத்தறா.. யானை காதுக்குள்ள கட்டெறும்பு போன மாதிரி என்னை படுத்தி எடுக்கறாடா..” என்று புலம்ப
“ஹ..ஹ.இது சும்மா ட்ரெய்லர் மச்சி இனி தான் மெய்ன் பிக்சர்ஸ்..” என்று விளையாட்டாக கூறிவிட்டு மச்சி இது ஆரம்ப ஸ்டேஜ்.. முதல்ல காய் கசக்கும் அதுவே கனியானால் இனிக்கும் அப்படி தான் அப்படி தான் இந்த காதலும்.. ஆரம்பத்தில் கஷ்டமா இருந்தாலும், அந்தக் காதல் கைகூடிய பிறகு வரும் இன்பமே தனி..” என்று தத்துவம் கூற, அவர்கள் பேச்சை விஜய்யின் கண்கள் கலங்கியது..
“ஹேய் மச்சி என்னடா ஏன் அழற?. என்று இருவரும் புரியாமல் கேட்க, “நான் காதல் பண்றதுல வர கஷ்டத்தை கூட அனுபவிச்சிடுவேன்டா.. ஆனால், நீங்க சொல்ற தத்துவம் இருக்கே அந்த கஷ்டத்தை மட்டும் என்னால அனுபவிக்கவே முடியல..” என்றபடி வராத விஜய் கண்ணீரை துடைத்துக் கொள்ள, ஷக்தியும், விதுரனும், சேர்ந்து விஜய் மொத்தி எடுக்க விஜய் அவர்களிடம் இருந்து தப்பி ஓட அந்த இடமே கலகலப்பானது…
“எழில் நேத்ராவிற்கு உணவு ஊட்டி கொண்டு இருக்க, பக்கத்து வீட்டில் ஒரு வேன் வந்து நிற்க அதில் இருந்து வீட்டு உபயோக பொருட்கள் வந்து இறங்க, “என்ன என்று தெரியல மா அந்த ஸ்வேதா வீடு நேத்து நைட்டோட இந்த வீட்டை யாருக்கோ வித்துட்டு வீடு காலி செஞ்சிட்டு போய்ட்டாங்களாம்.. இப்போ யாரோ புதுசா இங்க குடி வர போறாங்க போல..” என்று போற போக்கில் வேணி சொல்லியபடி சமையலறை செல்ல,
“அடுத்த வீட்டு கதை நமக்கு எதுக்கு வேணி அக்கா?.. நம்ம வேலையை மட்டும் பார்ப்போம். இனி பக்கத்து வீட்டு பத்தி மட்டும் இல்லை யாரை பத்தியும் எதுவும் என்கிட்ட பேசாதீங்க என்று உறுதியாக கூறிய எழில், நேத்ராவிற்கு உணவு ஊட்டி கொண்டு இருக்க அவள் வாசல் கதவு தட்டப்பட்டது..
“வேணி அக்கா யாரோ கதவை தட்டுறாங்க அந்த மேஜிக் ஹோல் வழியாக யாருன்னு பார்த்துட்டு அப்புறமா கதவை திறங்க..” என வேலை எச்சரித்து உத்தரவிட வேணியும் பார்த்துவிட்டு ஆள் யாருன்னு தெரியல அவங்க முதுகு மட்டும் தான் தெரியுது.. கதவை திறக்கவா? வேண்டாமா?” வேணி கேட்க சில நொடிகள் யோசித்த எழில்
சரி கதவை திறங்க என்று சொல்ல வேணியும் கதவை திறக்க அதுவரை முதுகு காட்டி நின்று இருந்த விஜய் முகம் மலர திரும்பி, ஹாய் வேணி சிஸ்டர் நான் தான் இங்க பக்கத்து வீட்டுக்கு குடி வந்து இருக்கேன் புது வீடு பால் காய்ச்சினேன்.. அதான் இங்க கொடுத்திட்டு போகலாம் என்று வந்தேன்..” என்று புன்னகையுடன் சொல்ல
விஜயின் குரல் கேட்டதும் வெளியே வந்த நேத்ரா “வாவ் அங்கிள் நீங்களா இங்கே பக்கத்து வீட்டுல வந்து இருக்கீங்க.. சூப்பர் என்று குதூகலத்துடன் கூறி அவனிடம் தாவ,
“என்ன இந்த ஹோட்டல்கார் தான் பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிறாரா..” என்று வியப்பும் திகைப்புமாக நினைத்த எழிலிற்க்கு இனி நான் நிம்மதியாக ஸ்கூலுக்கு போய்ட்டு வரலாம் என்று அவள் ஆழ்மனதில் அவள் அறியாமல் சிறு நிம்மதி எழுந்தது உண்மை.. அதை உணராமல்
“தூரத்தில் இருக்கும் போதே தொல்லை தாங்காது.. இனி பக்கத்தில் வந்து தொல்லை தர போறாங்க..” என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க முணுமுணுத்தபடி அவனை முறைத்தவாறு நின்றிருந்த அவன் ராங்கியை பார்த்து
“என் மனசுல நீ இருக்க அப்படிங்கறது நூறு சதவீதம் உண்மை.. ஏன்னா நான் மனசுல என்ன நினைச்சேனோ.. அதையே தான் நீ இப்ப முணுமுணுத்த இதை விட வேற என்ன வேண்டும் எனக்கு.. இனி தொலைவில் இருந்து வந்த என் தொல்லை.. அருகில் தொடரும்.. ராங்கி..” என்று கண்சிமிட்டி சொல்ல,
அவனைமு றைத்தவாறு நின்றிருந்தாள் விஜய்யின் ராங்கி.!!”
இமை சிமிட்டும்