Loading

இரண்டு மாதங்களுக்கு முன்பு,

அன்று ஞாயிற்றுக்கிழமை. இரவு பத்து மணிக்கு தன் தந்தை கேசவனுடன் சென்னை செல்லும் தனியார் பேருந்தில் ஏற வந்திருந்தாள் ஆதினி. வந்த சில நிமிடங்களில் பேருந்து வந்துவிட ஆயிரம் பத்திரங்களைக் கூறிவிட்டு அவளை பேருந்தில் ஏற்றிவிட்ட கேசவன் வீடு திரும்ப பேருந்தும் கிளப்பப்பட்டது. படுக்கும் வசதி கொண்ட ஜன்னல் இருக்கையை முன்பதிவு செய்திருந்தாள். அது இருவர் படுக்கும் இருக்கை. 

பேருந்து கிளம்பிய அரை மணிநேரம் கழித்து ஆதினியை அடுத்து அமர்ந்திருந்த வயது பெண்ணொருத்தி,

“எக்சிகியூஸ்மீ..” என தயங்கியபடி அவளை அழைக்க,

“ஹான் சொல்லுங்க” என்றாள் ஆதினியும் கேள்வியாய் நோக்கியபடி.

“நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணனும்.. தயவு செஞ்சி முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்..” என்று கெஞ்ச ஆரம்பித்துவிட ஆதினிக்கோ ஒன்றும் புரியவில்லை. 

“ஹெலோ ஹெலோ.. ஒரு நிமிஷம் என்னாச்சுன்னு எனக்கு புரியல.. கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா.. நான் உங்களுக்கென்ன உதவி பண்ணனும்”

“அக்கா.. என்னை உங்க தங்கச்சி மாதிரி நெனச்சு இந்த உதவிய பண்ணுங்க ப்ளீஸ்”

“ஐயோ முதல்ல என்ன விஷயம்னு சொல்லுமா.. அப்போ தான என்னால செய்ய முடியுமா முடியாதான்னு சொல்ல முடியும்”

“அக்கா நான் ஒரு பையன ரொம்ப சின்சியரா லவ் பண்றேன் கா.. அவனும் என்மேல உயிரா இருக்கான்.. அவன் மிலிட்டரில வேலை பாக்குறான்.. அவன் பார்டருக்கு போயிட்டு இன்னும் மூணு வருஷம் கழிச்சு தான் திரும்பி வருவான்.. நாளைக்கு காலைல அவனுக்கு ஃபிளைட்டு.. எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் இன்னும் எங்க காதல் விஷயம் தெரியாது.. அவன் கூட சரியா பேசிக்க கூட முடியல.. இந்த ஒரு ராத்திரி மட்டும் தான் எங்களால மனசுவிட்டு பேசிக்க முடியும்.. அப்புறம் நாங்களே நெனச்சா கூட மூணு வருஷம் கழிச்சு தான் பார்க்க முடியும்..” என்று கூறிய பெண்ணின் கண்கள் மெய்க்காதலால் கலங்கியது. அவள் கூறியதைக் கேட்ட ஆதினிக்கோ மனது கேட்கவில்லை. 

“சரி மா.. இப்போ நான் என்ன செய்யணும்.. மொபைல் வேணுமா.. உன் லவ்வர் கூட காலைல வரைக்கும் தாராளமா என் மொபைல்ல பேசிக்கோ” என்று பெருந்தன்மையாக இவள் கூற அந்த பெண்ணோ,

“அயோ மொபைல் எல்லாம் வேணாம் கா.. நீங்க மனசு வச்சா நாங்க நேருலயே மனசு விட்டு பேசிக்க முடியும்..” என்று கூற ஆதினிக்கு ஒன்றுமே புரியவில்லை. 

“நான் மனசு வச்சாவா.. நீ சொல்றது எனக்கு புரியல”

“அக்கா நம்ம சீட்டுக்கு பின்னாடி சீட்ல தான் கா அவன் இருக்கான்.. அவன் கூட பேசணும்ன்னு எக்ஸாம் இருக்குன்னு பொய் சொல்லிட்டு தான் இப்போ சென்னை கிளம்பியிருக்கேன்.. அவசரத்துல எங்களுக்கு ஒண்ணா சீட் கிடைக்கல.. பின்னாடி சீட்ல அவனுக்கு பக்கத்துல ஒரு அண்ணா இருக்காங்க.. இந்நேரம் அவனும் அந்த அண்ணாகிட்ட கெஞ்சிட்டு தான் இருப்பான்.. நீங்க ரெண்டு பெரும் இந்த ஒரு நைட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா புண்ணியமா போகும்..” என்று இரண்டு காதலர்களும் அவரவர் அருகில் இருப்பவர்களிடம் கூற பின்னாடி இருப்பவனோ வேறு யாருமல்ல.. சாட்ஷாத் நம் தூயவனே.

“வாட்.. நான் எப்படி தெரியாத பொண்ணு கூட ஒரே சீட்ல படுத்துட்டு வர முடியும்.. சாரி பிரதர் என்னால முடியாது” என்று கறாராக கூற,

“அயோ அப்படி சொல்லாதீங்க சார் ப்ளீஸ்.. நாங்க வேற எந்த தப்பும் பண்றதுக்கு இந்த உதவிய கேட்கல.. இந்த நைட் நாங்க பேசுற பேச்சு தான் எங்க ரெண்டு பேருக்கும் மூணு வருஷத்துக்கு பார்க்காம பேசாம இருக்குறதுக்கு தெம்பு குடுக்கும்.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி யோசிங்க சார்.. ப்ளீஸ்” என்று இவன் கெஞ்ச முன்னே அவனின் காதலியின் கெஞ்சலுக்கு ஆதினியோ,

“என்னமா நீ.. நீயும் ஒரு பொண்ணு தானே.. பின்னாடி இருக்கறவன் யாரு என்னன்னே தெரியாம எப்படி அவனை நம்பி அவன் கூட இருக்க முடியும்.. வெறும் சீட் மட்டும்னா கூட அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்.. ஸ்லீப்பர் வேற.. பாக்குறவங்க என்ன நினைப்பாங்க..” என்று தன்னிலையை விளக்க,

“அயோ அக்கா உங்க நிலைமை எனக்கு நல்லாவே புரியுது.. நானே தர்ம சங்கடத்தோட வேற வழியே இல்லாம தான் இதை கேக்குறேன்.. ப்ளீஸ் கா.. உங்க கால்ல கூட விழுறேன்” என்று இவள் விழ போக,

“ஹே.. என்னமா நீ.. சரி ஓகே நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்.. அவங்களுக்கு ஓகேவான்னு கேக்க சொல்லு” என்று ஒருவழியாக ஆதினி மனமிறங்கினாள். அந்த பெண்ணும் அவளின் காதலனை அழைக்க அவனோ சோகமுகமாய்,

“நான் எவ்ளோவோ கேட்டு பார்த்துட்டேன் தங்கம்.. அந்த அண்ணா சம்மதிக்க மாட்டேங்குறாங்க..” என்று மெய்யாகவே வருந்தி கூற ஆதினிக்கோ பாவமாக இருந்தது. அந்த ஜோடிகளின் முகத்தில் இருந்த தவிப்பும் காதலும் தெள்ளத்தெளிவாக புரிந்தது ஆதினிக்கு.

‘உண்மையான காதலுக்காக உதவி பண்றதுல தப்பில்லையே’ என நினைத்தவளோ,

“எனக்கு ஓகே தான்னு சொல்லி பாருங்க பிரதர்” என்று கூற அவனும் தூயவனிடம்,

“அண்ணா.. அந்த அக்காக்கு ஏதும் பிரச்சனை இல்லையாம்.. அவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்னு சொல்லிட்டாங்க.. நீங்க கொஞ்சம் மனசு வச்சா போதும்” என்க அதற்கு மேல் வாதிட முடியாத தூயவனோ,

“என்ன பிரதர் நீங்க.. சரி ஓகே அவங்கள வர சொல்லுங்க..” என்று மனதே இல்லாமல் ஒப்புதல் அளிக்க அந்த ஆடவனும்,

“ரொம்ப நன்றி சார்.. இந்த உதவிய நாங்க மறக்கவே மாட்டோம்” என்றபடி ஆதினியிடம் கூற,

“அவரை இங்க வர சொல்லுங்க.. ” என்றிட,

“அயோ சிஸ்டர்.. அவரை கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சிருக்கேன்.. ப்ளீஸ் நீங்க அங்க போறீங்களா” என்க பெருமூச்சுவிட்டவள் இறங்கி அடுத்த இருக்கைக்கு சென்று ஏறினாள்.

தூயவனோ நன்கு ஜன்னலை ஒட்டி படுத்துக் கொண்டான். இவளை திரும்பி கூட பார்க்கவில்லை. அவன் கால் வைத்திருக்கும் திசையில் அவள் தலை இருக்கும்படிக்கு அமர்ந்து கொண்டாள் ஆதினி. அருகே அரவம் கேட்கவும் கண்களைத் திறந்து அவளை ஒருமுறை பார்த்துவிட்டு சலிப்பாக திரும்பிக் கொண்டான்.

‘அய்யடா.. ரொம்ப தான் டெர்ரர் பார்ட்டியா இருப்பானோ.. எனக்கு ஜன்னல் சீட் பக்கம் உக்காரலைனா தூக்கம் வராதே.. இவன்கிட்ட கேட்டா கடிச்சு குதரிடுவானோ.. சரி கேட்டு தான் பார்ப்போமே.. ‘ என்று நினைத்தவள்,

“ஹெலோ.. எக்ஸ்க்யூஸ் மீ… ஹலோ” என்று அவனை அழைக்க அவனோ என்ன என்ற கேள்வியை பார்வையில் தேக்கியபடி பார்க்க மட்டுமே செய்தான்.

‘வாய தொறந்தா முத்து சிந்திருமாக்கும்..’ என்று நினைத்தவள்,

“இல்ல ஜன்னல் பக்கம் நான் இருந்துக்கவா..” என்று கேட்க தூயவனோ பொங்கிவிட்டான்.

“ஏங்க.. ஒரு மனுஷனை நிம்மதியா டிராவல் பண்ண விட மாட்டேங்குறீங்க.. உங்க கூட சீட் ஷேர் பண்ணிக்க சம்மதிச்சதே பெரிய விஷயம்.. இதுல ஜன்னல் சீட் குடுங்க அது குடுங்கன்னு.. பெரிய அன்னை தெரசா மாதிரி அந்த லவ்வர்ஸ்க்கு உதவி பண்ணுறேங்குற பேருல முதல் ஆளா அட்ஜஸ்ட் பண்ணிக்க சம்மதிக்க தெரிஞ்சதுல.. அப்போ அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருங்க.. சும்மா மனுஷனை நொய் நொய்யினு..” என்று அவனின் மேல் இருக்கும் கோபத்தையும் சேர்த்து இவளிடம் காட்டி பொரிந்து தள்ளிவிட்டான்.

‘இப்போ நான் என்ன கேட்டேன்னு இவன் இவ்ளோ பேசுறான்’ என்று நினைத்தவளுக்கு மூக்கு புடைக்க கோபம் வர,

“ஹெலோ.. ஏதோ உங்க கூட இருக்கணும்னு பிளான் பண்ணி இதெல்லாம் பண்ணிட்டு வந்த மாதிரி ரொம்ப தான் ஓவரா பேசறீங்க.. என்ன சொன்னீங்க என்கூட சீட் ஷேர் பண்ணிக்க நீங்க சம்மதிச்சதே பெருசா.. இவர் பெரிய மன்மதன்.. சொல்ல போனா நான் தான் உங்களை மாதிரி ஒரு டெர்ரர் பீஸ் கூட இருக்க யோசிச்சுறுக்கணும்.. எப்போ என்ன செய்வீங்களோன்னு பயப்படனும்” என்று கூற அதில் தூயவனின் பொறுமைக் காற்றில் பறக்க,

“ஹே.. அவ்ளோ பயம் இருக்குறவ பல்லக்காட்டிட்டு முதல் ஆளா ஓகே சொல்லிருக்க கூடாது சரியா.. வீணா என் கோபத்தை கிளராத.. மூடிட்டு படு” என்றவன் திரும்பிக்கொள்ள,

‘பல்லக்காட்டிட்டு வரதுக்கு இவன் பெரிய பிரபாஸ்னு மனசுல நெனப்பு.. ஆளையும் மூஞ்சையும்.. சரியான உர்ராங்குட்டான்.. எனக்குன்னு வந்து சேருது பாரு’ என்று சற்று வாய்விட்டே புலம்பியவள் இருவருக்கும் இடையில் அவளது லக்கேஜை வைத்துவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

சற்று நேரத்தில் குடலைக் குமட்டுவது போன்று தோன்ற எழுந்து அமர்ந்தவள் வாயை கைக்கொண்டு பொத்தியபடி என்ன செய்யவென்று யோசிக்க அவனை எழுப்பினால் எரிந்து விழுவான் என்ரறிந்தவள் அவன் காலின் புறம் இருக்கும் ஜன்னலை திருந்து வாந்தியெடுத்து விட்டு சோர்வாக அவ்வாறே சாய்ந்து அமர.. தெரியாமல் அவனின் காலை அழுத்திவிட்டாள். அழுத்தியதில் கால் வலி எடுக்க,

“ஆஹ் அம்மா” என்று அலறியபடி எழுந்து அமர்ந்தான் தூயவன். அவன் அலரலில் முன்னே ஓட்டுனருக்கு துணையாக அமர்ந்திருந்த நடத்துனர் வந்து,

“என்னாச்சு.. என்ன சத்தம்” என்று கேட்க ஆதினியோ,

“ஒன்னுமில்லைன்னா கால் கம்பில இடிச்சுடுச்சு..” என்க அவரோ அவனையும் அவளையும் ஒரு மாதிரியாக பார்த்தபடி,

“இந்த லவ்வர்ஸுக்கு வேற இடமே கிடைக்காது போல” என சத்தமாக புலம்பியபடி சென்றுவிட்டார். அதனைக் கேட்ட தூயவனோ,

“ஹேய் அறிவில்ல.. உன்னால கண்டவங்கிட்ட நான் பேச்சு வாங்க வேண்டியிருக்கு.. அதுவும் உன்கூட சேர்த்து வச்சு.. சரியான இம்சை.. இப்போ எதுக்கு நீ என் காலை மிதிச்ச..” என்று கனல் தெறிக்க கேட்டான்.

“சாரி.. திடீர்னு வாமிட் வந்துருச்சு.. உங்களை எழுப்புனா திட்டுவீங்கன்னு அந்த விண்டோ பக்கம் போய் எடுத்தேன்.. தெரியாம மிதிச்சுட்டேன்..” என இந்த முறை தவறு அவள்மேல் என்றதால் சற்று பொறுமையாகவே கூறினாள் பெண்ணவள்.

‘ஓ.. வாமிட் பிராபிளம் இருக்குறதுனால தான் அப்போ ஜன்னல் சீட் கேட்டாளா..’ என்று சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தவன்,

“இப்போ என்ன ஜன்னல் பக்கம் உனக்கு வேணும் அவ்ளோ தான.. வா இங்க..” என்றபடி அவளுக்கு எதிரே அமர்ந்துக் கொண்டு தனது பையை ஆராய்ந்து அதிலிருந்து சானிட்டைசரை எடுத்து நன்கு கைகளில் தேய்த்துக் கொண்டான்.

அவன் பேசியது அனைத்தும் அவளின் சிந்தைக்குள் ஓட அனைத்தும் சற்று அதிகப்படியாக தான் தோன்றியது பெண்ணவளுக்கு.

‘இன்னைக்கு உன்னை என்கிட்ட சாரி கேட்க வைக்கல.. என் பேரு ஆதினி அரியநாச்சி இல்லடா’ என்று சபதம் பூண்டவள்,

“ஹெலோ மிஸ்டர். க்ளீன்” என்று அவள் அழைக்க அவனோ,

“என் நேம் எப்படி உனக்கு தெரியும்..” என்று அவன் கேட்க அவளோ,

“என்ன.. புரியல” என்க,

“நத்திங்.. எதுக்கு கூப்பிட்ட”

“உங்களுக்கு என்ன பிராபிளம்னு எனக்கு தெரியல.. ஆனா நானும் உங்களை மாதிரி ஒரு சூழ்நிலைக் கைதி தான்.. அந்த ஜோடிங்கள நெனச்சா அவ்ளோ பாவமா இருந்துச்சு.. அதான் ஹெல்ப் பண்ண நெனச்சு.. நாம ஒண்ணா இருக்க நான் ஓகே சொன்னேன்.. ஈவன் உங்களை பார்க்கவும் டீசென்ட்டா தெரிஞ்சீங்க.. அந்த நம்பிக்கைல தான் வந்தேன்” என்று இவள் கூறவும் அவனோ,

‘நாம தான் அவசரப்பட்டு ரொம்ப பேசிட்டோமோ’ என தன் கழுத்தினைத் கைகளால் தேய்த்தபடி யோசிக்க அவன் பார்க்காதபடிக்கு அவனைப் பார்த்து,

‘நீயா டா டீசண்ட்டு.. இண்டீசண்ட் ஃபெல்லோ’ என மனதில் நினைத்தபடி வக்கனை செய்தவள் மீண்டும் முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டாள். சிறிது நேர யோசனைக்கு பிறகு தூயவனோ,

“ஆக்சுவலி எனக்கு பஸ்ல வந்து பழக்கம் இல்லை.. பிடிக்கவும் பிடிக்காது.. என் கார் ரிப்பேர்.. அவசரமா சென்னை போகணும்னு வேற வழி இல்லாம தான் பஸ்ல கடுப்போட வந்தேன்.. இதுல அந்த பையன் வேற அப்படி எல்லாம் சொல்லவும் கூட கொஞ்சம் கடுப்பாயிட்டேன்.. அதுவும் நீங்க ஓகே சொல்லாம இருந்துருந்தா நான் அட்ஜஸ்ட் பண்ணி இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லங்குற ஒரு எண்ணம் உங்க மேல கோபமா வெளிய வந்துட்டு.. அப்புறம் கண்டக்டர் வேற அப்படி பேசவும்.. ஐ லாஸ்ட் மை கண்ட்ரோல்..” என்று நீண்ட விளக்கத்தைக் கொடுத்தான்.

‘பயபுள்ள இருந்தாலும் வாயில இருந்து சாரின்னு ஒரு வார்த்தை வருதா..’ என்று நினைத்தவள் இதற்கு மேல் அவனிடம் வம்பு வார்க்க தோணாமல் லேசான சிரிப்புடன் திரும்பிக் கொண்டாள்.

இருவருக்குமே உறக்கம் வரவில்லை. பாட்டு கேட்கலாம் என தனது வயர்லெஸ் ஏர்போட்ஸை (airpods) எடுத்தவள் பாட்டு கேட்க ஆரம்பிக்க தூயவனும் தனது ஏர்போடை தேடினான். ஆனால் அதனை மறந்து வீட்டில் விட்டு வந்தது நினைவிற்கு வர நெற்றியை நீவிக்கொண்டவன் மீண்டும் ஜன்னலை வெறிக்க அவன் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவள் தனது ஒருபக்க ஏர்போடை அவனிடம் நீட்ட அவனோ,

“இல்ல பரவாயில்ல.. வேணாம்.. தட்ஸ் ஓகே” என்க அவளோ,

“நீங்க தேடுனத நான் பார்த்தேன்.. இட்ஸ் ஓகே சாங் கேக்க தான தேடிருப்பீங்க.. ஹேவ் இட்” என்று கொடுக்க அவனோ வேறு வழியில்லாமல் தயங்கியபடியே வாங்கினான். வாங்கியவன் அவள் அறியாவண்ணம் அது சுத்தமாக உள்ளதா என ஆராய்ச்சி செய்து தன் கைக்குட்டையால் துடைத்துவிட்டு காதில் பொறுத்திக் கொள்ளவும் தவறவில்லை. அதனை கடைக்கண்ணால் கண்டுகொண்டவள்,

‘இவன் கொஞ்சம் ஓவரா தான் செஞ்சுட்டு இருக்கான்.. பாவப்பட்டு குடுத்த.. ரொம்ப தான்’ என மனதினுள் அர்ச்சித்தவள் திரும்பிக் கொண்டாள்.

கவிதை இரவு
இரவு கவிதை
எது நீ எது நான்
என தெரியவில்லை

நிலவின் கனவு
கனவில் நிலவு
எது நீ எது நான்
என புரியவில்லை

எனும் பாடல் ஒலிக்க ஏனோ அந்த இரவுக்கும் எதிரெதிரே அமர்ந்து இரவையும் இரவின் அழகை பிரதிபலிக்கும் நிலவையும் ஜன்னல் வழியே ரசித்த இருவரின் மனதையும் இப்பாடல் சுகமாய் அதிர வைத்தது. அதிலும் இடையே,

சில நேரம்
மார்கழி ஆகிறாய்
சில நேரம்
தீபொறி ஆகிறாய்

எனும் வரி அவனின் குணத்தை கூறுவது போலவே தோன்றியதோ என்னவோ அனிச்சையாக அவளின் விழிகள் அவனை நோக்க அடுத்த வரி,

எதுவாக நான்
ஆன போதிலும்
ஏன் நீ நீ நீ நீ
நீந்துகிறாய்

என ஒலிக்கும்போது அவள் பார்வை கொடுத்த குறுகுறுப்பில் அனிச்சையாக அவனும் அவளை தான் பார்த்தான்.

இவ்வாறாக மாதவன் மாதவி மற்றும் சமரிடம் கூறியவன் சற்று இடைவெளி விட சமரோ,

“நல்ல ரொமான்டிக்கா தான போயிட்டு இருக்கு.. அப்புறம் என்ன பிரச்சனை..” என்க மாதவனும் மாதவியும்,

“அதானே” என்றபடி தூயவனை நோக்க அவனோ,

“பிரச்சனையே இதுக்கு அப்புறம் தான ஆரம்பிச்சுது..” என்றவனின் கண்கள் சிவக்க மீண்டும் தொடர்ந்தான்.

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்