Loading

அதிர்வு – 11

 

அதையெல்லாம் காதில் வாங்காத தூயவன் ஆதினியின் முகத்திற்கு வெகு அருகில் தன் முகத்தைக் கொண்டு செல்ல அதில் பதறியவள்,

“ஐயோ என்னை ஏதும் செஞ்சுராத.. விட்டுரு ப்ளீஸ்..” என்ற அலறலுடன் வேர்க்க விறுவிறுக்க எழுந்து அமர்ந்தாள். அச்சமயம் அந்த அறையின் வெளியில் அமர்ந்துக் கொண்டிருந்த தூயவனின் காதில் அவ்வலறல் விழ ஏதேனும் பிரச்சனையோ என்றபடி உள்ளே பார்க்க அதற்குள் கேசவனும் அபிராமியும் கூட வந்து சேர்நதனர். கேசவனோ,

“ஆது என்னாச்சு டா.. கெட்ட கனவு ஏதும் கண்டியா” என்றபடி அவர் அருகில் செல்ல அவளது கண்களோ மிரண்டபடி தூயவனின் மீது தான் படிந்தது.

‘இவ ஏன் நம்மள இப்படி பார்க்குற’ என்ற யோசனையில் அவளின் ‘ஐயோ என்னை ஏதும் செஞ்சுராத.. விட்டுரு ப்ளீஸ்’ என்ற  அலறலையும் அவள் முகத்தில் இருந்த பயத்தையும் தன் மீது படிந்த பார்வையையும் தொடர்பு படுத்திப் பார்த்தவனுக்கு அவள் என்ன மாதிரி கனவு கண்டிருப்பாள் என்று மிக தெளிவாகவவே புரிந்தது. புரிந்த கணத்தில் அவனுக்கு கோபம் தலைக்கு ஏற காட்ட வேண்டிய சூழ்நிலை இதுவல்ல என்று புரிந்தவன் அவளை அழுத்தமாக கோபப்பார்வைப் பார்த்தபடி வெளியில் வந்து அமர்ந்துவிட்டான்.

இரவு தாலி கட்டிய சம்பவத்திற்கு பிறகு மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்த பொழுதும் தூயவனுக்கும் ஆதினிக்கும் கண்களை சுழற்றிக்கொண்டு தூக்கம் வர இருவரும் ஆளுக்கொரு அறையில் மருத்துவமனையில் நன்கு உறங்கிவிட்டனர். பயண களைப்பாக இருக்கும் என்று பெரியவர்களும் குழப்பத்தில் இருப்பர் என்று இளசுகளும் நினைத்தபடி அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டனர். படுத்த உடனேயே இருவரையும் நித்ராதேவி தழுவிக்கொண்டாள். சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டோம் என்ற நிம்மதியோ என்னவோ..?

காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் கொண்ட தூயவனுக்கு ஆறு மணிக்கே முழிப்பு தட்ட எழுந்து முகம், கை, கால்களை இரண்டு மூன்றுமுறைக் கழுவிவிட்டு கேன்டீன் சென்று காகித கோப்பையில் காபி ஆர்டர் செய்தவன் அருந்திவிட்டு அமைதியாக அறையின் வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தபடி நேற்றைய நிகழ்வையே அசைபோட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் ஆதினியின் அலறலைக் கேட்டவன் இப்பொழுது இன்னும் அதிகமான அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்திருந்தான்.

‘என்ன தைரியம் இருந்தா இவளுக்கு இப்படியெல்லாம் வேற கனவு வரும்.. என்னைப் பார்க்க அவளுக்கு எப்படி தெரியுதாம்.. இவ பெரிய அழகி.. இவள ரேப் பண்ண வேற நான் வறேனாக்கும்.. இருக்கட்டும் எல்லாத்துக்கும் சேர்த்து என்கிட்ட நீ வாங்கி கட்டுவ.. உன்னைக் கட்டுனதுக்கு நான் தான் டி அலறனும்.. எல்லாம் தலை எழுத்து’ என்றபடி மனதினுள் அவளை அர்ச்சிக்க மீனாட்சி பாட்டியை அனுமதித்திருந்த அறையில் சலசலப்பு கேட்க யோசனையுடன் அங்கு சென்றான்.

அங்கோ மீனாட்சி பாட்டி திடகாத்திரமாக கட்டிலில் அமர்ந்து வெற்றிலையை இடித்து வாய்க்குள் அமுக்கிக் கொண்டிருந்தார். கணபதியோ,

“ம்மா இப்போ வெத்தலை எல்லாம் போடலாமா என்னன்னு தெரியல.. டாக்டர் வந்ததும் கேட்டுட்டு எல்லாம் பண்ணுங்க” என்று கத்திக் கொண்டிருக்க அதையெல்லாம் காதில் வாங்காத மீனாட்சி அவர் வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட தூயவன் விறுவிறுவென சென்று பாட்டியின் கழுத்தைப் பற்றி,

“ஏய் கிழவி.. உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்.. நேத்து அவ்ளோ தூரம் சாகுற நிலைமைக்கு போயி என்னையும் சேர்த்து சவடிச்சுட்டு இப்போ குத்துக்கல்லாட்டம் உக்காந்து வெத்தலை இடிச்சுட்டு இருக்க.. உன்ன” என்றவன் வெற்றிலை இடிக்கும் உரலைக் கொண்டு அவரின் மண்டையைப் பதம் பார்க்கும் அளவுக்கு தன் சிந்தையில் காட்சியை ஓடவிட்டவன் நிகழில் வேறுவழியின்றி அமைதியாக நின்று மனதினுள் மட்டும் மீனாட்சி பாட்டியை அர்ச்சித்தான். அவனைக் கண்ட மீனாட்சி பாட்டியோ,

“தூயவா.. வா டா .. ஏன் அங்கேயே நிக்குற.. பாட்டிக்கு ஒன்னும் இல்ல இப்போ ரொம்ப நல்லா இருக்கேன்.. நீ கவலைப்படாத.. ஆமா உனக்கும் ஆதினிக்கும் எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று கேட்க அங்கிருந்த கணபதி, இந்திரா, தூயவன் மட்டுமன்றி அப்பொழுது தான் அறைக்குள் நுழைந்து மாதவன், மாதவி மற்றும் சமரும் கூட,

“எதேய்.. எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாமாவா..” என்ற ரீதியில் பார்த்தனர்.

“ஏன் பாட்டி.. அப்போ நேத்து என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு நிஜமாவே தெரியாது அப்படி தானே..” என்று சமர் கேட்க மீனாட்சியோ,

“தூயவனுக்கும் ஆதினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஒரு நல்ல ஐடியாவை நான் குடுத்தேன்.. அதுவரை நியாபகம் இருக்கு.. அதுக்கு மேல என்ன நடந்துச்சுன்னு தெரியலையே சமரு.. இந்த தூயவன் பைய கல்யாணம் பண்ணமாட்டேன்னு எதுவும் சொல்லி தொலைஞ்சானா” என்றபடி தூயவனை முறைக்க இதற்குமேல் இங்கிருந்தால் உள்ளிருக்கும் கோபம் வெளியில் சிதறிவிடும் என்றறிந்த தூயவன்,

“எல்லாம் என் தலையெழுத்து” என்று தலையிலடித்தபடி வெளியில் சென்றுவிட்டான். சமரோ,

“அவன் உங்களை கொல்லாம விட்டானேன்னு சந்தோஷப்படுங்க பாட்டி.. நல்லவேளை அமைதியா வெளிய போய்ட்டான்” என்க பிறகு கணபதி நடந்த அனைத்தையும் மீனாட்சி பாட்டிக்கு எடுத்துரைத்தார்.

“அப்போ ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா.. எங்க என் பேத்தி” என்றவர் எழுந்து விறுவிறுவென்று பக்கத்து அறைக்கு செல்ல அவரைத் தொடர்ந்து அனைவரும் செல்ல ஆதினியோ கழுத்தில் தாலியுடன் சோகமாக அமர்ந்திருந்தாள்.

“அம்மாடி ஆதினி” என்றபடி மீனாட்சி பாட்டி உள்ளே வர அவளோ,

“ஐயோ பாட்டி நீங்க எங்க இங்க.. சொல்லிருந்தா நானே அங்க வந்திருப்பேன்ல.. முதல்ல வந்து உட்காருங்க” என்றபடி பதற அவரோ,

“எனக்கு எல்லாமே சரி ஆயிடுச்சு கண்ணு.. எங்க நீ எங்க வீட்டு மருமகளா ஆகாம போய்டுவியோன்னு நெனச்சு பயந்தேன் தெரியுமா..” என்றவர்,

“டேய் சமரு.. தூயவன் பையல கூப்பிட்டு வா டா” என்க அவனும் சென்று அழைத்து வந்தான். அவனைக் கரம் பற்றி இழுத்த மீனாட்சி ஆதினியின் அருகில் நிற்கவைத்து இருவரையும் ஜோடியாக கண்குளிர பார்க்க,

“என் கண்ணே பட்டுரும் போல” என்று நெட்டி முறிக்க இருவருக்குமே எங்கு சென்று முட்டிக் கொள்ளலாம் என்று தான் இருந்தது.

பிறகு மருத்துவர் வந்து மீனாட்சி பாட்டியை மீண்டும் பரிசோதித்துவிட்டு,

“இப்போ பெட்டரா இருக்காங்க.. இருந்தாலும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.. டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போலாம்” என்று கூறிவிட பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர். கணபதியோ கேசவனிடம்,

“சம்மந்தி நீங்களும் எங்க கூட எங்க வீட்டுக்கு வாங்க.. ஆதினி முதல் தடவ எங்க வீட்டுக்கு வரா.. நீங்களும் வாங்க” என்று அழைக்க பின்பு அனைவரும் தூயவனின் வீட்டிற்கு சென்றனர். கணபதியின் காரில் பாட்டியோடு சேர்ந்து பெரியவர்கள் அனைவரும் ஏறிக்கொள்ள தூயவனின் காரில் இளசுகள் அனைவரும் ஏறினர். 

மாதவன், மாதவி மற்றும் சமருக்கு இவர்களின் திடீர் திருமணம் ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும் ஒருபுறம் மகிழ்ச்சியையும் கொடுத்தது. ஏனெனில் மித்ரா மீதான அவனது காதலுக்கு உத்திரவாதமில்லை என்று ஏற்கனவே வருத்தத்தில் இருந்தவர்கள் தானே.. இப்பொழுது ஆதினி போன்று நல்ல பெண் அவனுக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்விருக்காதா.. அதுமட்டுமல்லாமல் மாதவனுக்கு இருந்த குற்றவுணர்வும் நீங்கிற்று. மாதவன் மாதவியின் காதலுக்கும் இனி பிரச்சனை இல்லை.

இவ்வாறாக மாதவன், மாதவி சந்தோஷப்பட சமரோ இனிமேல் ஆதினியோடு அடிக்கடி கதம்பரியை பார்க்கலாம் என்று வேறொரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். மொத்தத்தில் தூயவன் மற்றும் ஆதினி இருவரை மட்டும் தவிர்த்து அனைவர்க்கும் மகிழ்ச்சியே. அரைமணி நேர பயணத்திற்கு பிறகு இரண்டு கார்களும் வீடு வந்து சேர்ந்தது. காரில் இருந்து இறங்கிய தூயவன் வேகமாக வீட்டினுள் செல்ல எத்தனிக்க,

“டேய் தூயவா நில்லு..” என்று அதிர்ந்தது பாட்டியின் குரல். 

“என்ன பாட்டி” என்றவன் சலிப்போடு நின்றான். ஆதினியைக் கரம்பற்றி அழைத்து வந்தவர் அவனோடு நிற்கவைத்து,

“கல்யாணம் ஆன ஜோடிங்க ஆலாத்தி எடுக்காம வீட்டுக்குள்ள போக கூடாது” என்றவர் இந்திராவுக்கு கண்ணசைக்க அவர் சென்று ஆலாத்திக் கலந்து எடுத்து வந்தார். ஆழத்தி சுற்றியதும் இந்திராவோ,

“வலது கால் எடுத்து வச்சு உள்ள போமா ஆதினி” என்க இருவரும் காலடி எடுத்துவைத்தனர் வீட்டினுள். வீடோ ஆடம்பரமாக இருந்தது. இவர்களுக்கு வசதி அதிகம் என்று ஆதினி கேள்விப்பட்டாள் தான். ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கேசவனும் அபிராமியும் கூட வியப்போடு பார்த்தனர். இத்தகைய வசதி படைத்தவர்கள் எப்படி இவ்வளவு பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார்கள் என்ற ஆச்சர்யமும் இருந்தது. பிறகு மணமக்கள் பூஜை அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

ஆதினி விளக்கேற்ற அனைவர்க்கும் மனது நிறைந்தது ஒருவனைத் தவிர்த்து. பிறகு கணபதி கேசவனுடன் அமர்ந்து பேச ஆரம்பிக்க இந்திரா வந்தவர்களுக்கு ஏதேனும் செய்துகொடுக்க சமயலறைக்கு சென்றுவிட மீனாட்சி பாட்டி அவரது அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட தூயவன் அவனது அறைக்கு விரைய அவனைத் தொடர்ந்து மாதவன், மாதவி மற்றும் சமர் சென்றுவிட ஆதினியும் அபிராமியும் மட்டும் நின்றனர். ஆதினியை வெளியில் இருக்கும் தோட்டத்திற்கு அழைத்து சென்ற அபிராமியோ பேச ஆரம்பித்தார். 

“எங்க மேல உனக்கேதும் கோவம் இருக்கா டி” என்றவரின் கண்கள் லேசாக கலங்கி இருந்தது. 

“கோபமா எதுக்கு மா” என்று வாய் ஆறுதலாக கூறினாலும் முகமோ சோகமாக காணப்பட்டது. 

“உன்னை கேட்காம சம்மதம் சொல்லிட்டோமோன்னு.. என்னால உன் நிலைமையை புரிஞ்சுக்க முடியுது டி.. மாதவன் தம்பி தான் உன் புருஷன்னு முதல்ல மனசுல நெனச்சு வச்சுருந்துருப்ப.. இப்போ திடிர்னு அவர் தம்பிய கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை ஆகிடுச்சு.. நீ நெனச்சா வேணாம் விருப்பமில்லன்னு சொல்லிருக்கலாம்.. ஆனா நீ உன் அப்பாக்காக யோசிச்சு சரின்னு சொல்லிட்ட.. சரி தான” என்று அவளின் மனதைப் படித்து கூற அவளோ,

“விடு மா.. முடிஞ்சதைப் பேசி என்ன ஆக போது.. என் மனசு இன்னும் நடந்த எதையும் ஏத்துக்கல இப்போவரை.. கொஞ்சம் டைம் எடுக்கும்.. என்னை கொஞ்ச நாளைக்கு என் போக்குல விட்ருங்க எதுவும் கேட்காம”

“என்ன டி இப்படி சொல்ற.. வாக்கப்பட்டு வந்தது பெரிய இடம்.. நீ அவங்களுக்கு ஏத்தமாதிரி கொஞ்சம் அனுசரிச்சு போய்க்கோ டி..” என்றவர் மேலும் அறிவுரைக் கூறுவர அவரைத் தடுத்தவள்,

“ம்மா.. இப்போ தான சொன்னேன்.. என்னை என் போக்குல விடுன்னு.. அதுக்குள்ள அட்வைஸ ஆரம்பிக்கிற.. நேத்து என் கழுத்துல தாலி ஏறுனதுல இருந்து இப்போவர ஏதாவது தப்பா நடந்துருக்கேன்னா.. இல்ல தான.. இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்க எனக்கு தெரியும்.. என்னால உனக்கும் அப்பாக்கும் கெட்ட பேரு வராது.. போதுமா” என்க அபிராமிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. மகளின் மனநிலையும் அவருக்கு புரிந்ததால் அதற்குமேல் எதுவும் பேசாமல் வீட்டினுள் செல்ல எத்தனிக்க ஆதினியோ,

“ம்ம்மா” என்று அழைக்க அவரும் அவளைப் பார்க்க அணைத்துக்கொண்டாள் தன் தாயை. அணைத்த கணத்தில் இருவருக்கும் கண்ணீர் பெருகியது. தன் தாயின் முகத்தைப் பற்றி நிமிர்த்தியவள்,  

“கவலைப்படாத மா.. நான் பாத்துக்குறேன்” என்று ஆறுதல் கூற அக்கணமே தன் மகளின் மீதான கவலைக் காற்றோடு பறந்து நம்பிக்கை பிறந்தது அந்த அன்னைக்கு. ஆதினி மற்றும் அபிராமியைக் காணாமல் தேடிய இந்திரா வெளியே வர ஒரு பெண்ணாக ஆதினி மற்றும் அபிராமியின் நிலை நன்றாகவே புரிந்தது. அருகில் சென்றவர்,

“என்ன சம்மந்தி.. என் மருமக என்ன சொல்றா” என்று கேட்க அவரது ‘என் மருமக’ எனும் கூற்றிலேயே அபிராமியின் மனது நிறைந்து காணப்பட்டது. 

“அதை உங்க மருமககிட்டயே கேட்டுக்கோங்க சம்மந்தி” என்றார் அபிராமி சிரித்தபடி. ஆதினியின் கரத்தைப் பற்றிய இந்திராவோ,

“ஒரு பொண்ணா உன் நிலைமை எனக்கு நல்லாவே புரியுது ஆதினி.. இங்க நீ எந்தவித தயக்கமும் இல்லாம உன் வீட்டுல இருக்குறது போலவே இருந்துக்கலாம் சரியா.. இங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்குறது மீனாட்சி அத்தை மட்டும் தான்.. ஆனா அவங்களும் இப்போ உன் கட்சி தான்.. அதனால நீ மனசை போட்டு கொழப்பிக்காம நிம்மதியா இரு..” என்றவர் அபிராமியிடம்,

“நீங்க தைரியமா இருங்க சம்மந்தி.. ஆதினிய நான் என் பொண்ணு மாதிரி பார்த்துக்கறேன்” என்று நம்பிக்கையளிக்க பெண்ணைப் பெற்றவருக்கு வேறென்ன வேண்டும் இதைவிட. கணபதியும் கேசவனும் கூட இது குறித்து தான் பேசிக்கொண்டிருந்தனர்.

“ஆதினி கொஞ்சம் செல்லமா வளர்ந்த பொண்ணு.. ஏதாவது தப்பு செஞ்சா நீங்க அவகிட்ட சொல்லி புரியவைங்க.. கண்டிப்பா புரிஞ்சு நடந்துப்பா” என்று கேசவன் தயக்கமாக கூற கணபதியோ,

“அட என்ன சம்மந்தி நீங்க.. ஆதினிய பார்த்தா எவ்ளோ தெளிவான பொண்ணு மாதிரி தெரியுது.. நீங்க தான்  தேவையில்லாம வருத்தப்படுறீங்க.. மாதவனைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னிங்க அதுக்கும் அவ சம்மதம் சொன்னா.. ஹாஸ்ப்பிட்டல்ல எல்லாம் தலைகீழா ஆன அப்புறம் நீங்க அவ கிட்ட சம்மதமான்னு கூட கேட்கல.. ஆனாலும் அவ மறுபேச்சு பேசாம வந்து தூயவனுக்கு கழுத்தை நீட்டுனா.. அதுலயே எனக்கு ஆதினியோட நல்ல குணம் புரிஞ்சுட்டு.. எங்களை நம்பி வந்த பொண்ண எங்க பொண்ணு மாதிரி பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு சம்மந்தி” என்று கூற மகிழ்ச்சியில் கேசவனின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. 

“இது போதும் சம்மந்தி எனக்கு.. இது போதும்” என்ற கேசவனுக்கு மனம் நிறைந்து காணப்பட்டது. 

பூஜையறையில் இருந்து நேராக தனதறைக்கு சென்ற தூயவன் குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி இலகுவான ஆடைக்கு மாறி வெளியே வர அவனது உடையே கூறியது இவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்றும் அடுத்து இவன் என்ன செய்ய போகிறான் என்றும். மாதவியோ,

“டேய் தூயவா.. இப்போ வேணாம் டா.. சொன்னா கேளு..” என்று அவனின் கரம் பற்ற அதனைத் தட்டிவிட்டவன் வெளியில் செல்ல எத்தனிக்க மாதவனோ,

“டேய் ப்ளீஸ் டா.. வந்தவங்க என்ன நினைப்பாங்க” என்க அதெல்லாம் அவன் காதில் விழவில்லை. சமரோ,

“மச்சான்” என்றபடி ஏதோ கூறுவர தூயவன் பார்த்த பார்வையில் அடங்கிவிட்டான். முறைத்தவனின் கால்கள் விறுவிறுவென்று சென்று நின்ற இடம் அவர்கள் வீட்டில் அவன் பிரத்யேகமாக உருவாக்கியிருந்த உடற்பயிற்சி அறை. கைகளில் பாக்சிங் கிளௌசை அணிந்தவன் பஞ்சிங் பேக்கை ஆதினியின் முகமென நினைத்தானோ என்னவோ தன் மொத்த கோபத்தையும் திரட்டி தாறுமாறாக குத்த ஆரம்பித்தான்.

“இவன் என்ன டா இப்படி ஆகிட்டான்.. இவன் இவ்ளோ கோபப்பட்டு பார்த்து ரொம்ப நாளாச்சே டா..” என்று மாதவி வருத்தமாக கூற,

“அதான் டி எனக்கும் பயமா இருக்கு.. நேத்து நடந்த எல்லாமே ஒரு கோயின்சிடென்ட்.. இவன் எதுக்கு இவ்ளோ கோபம் படுறான்.. ஒருவேளை மித்ராவை அவ்ளோ சீரியஸா லவ் பண்றானா..” என்று மாதவன் குழம்ப சமரோ,

“எனக்கு தெரிஞ்சு மித்ரா மேல அவனுக்கு இருக்குறது லவ் மாதிரி தெரியல.. அவனே அதை லவ்வுன்னு நெனச்சுட்டு இருக்குறான்.. இவன் இவ்ளோ பொங்க காரணம் ஆதினியை முதல் தடவ சந்திக்கும் போது ஏதோ நடந்துருக்கு.. அது என்னன்னு தான் தெரியல… பேசாம ஆதினியைக் கூப்பிட்டு கேட்ருவோமா” என்க மாதவனோ,

“இல்ல டா தம்பி.. அது சரிப்பட்டு வராது.. இப்போ அவ இருக்குற மைண்ட்செட்ல கேக்குறது நல்லா இருக்காது..” என்க மாதவியும் ஆமோதித்தாள். இவ்வாறாக இவர்கள் கலந்துரையாட கீழே இந்திராவோ,

“மேல தூயவன் ரூம் ரெண்டாவது ரூம் அங்க தான் அவனும் அவன் பிரண்ட்ஸும் இருப்பாங்க.. நீ போய் பேசிட்டு இரு ஆதினி” என்று கூற வேறு வழியின்றி மாடிக்கு வந்த ஆதினிக்கு தூயவன் பஞ்சிங் பேக்கைப் படுத்தும் பாடு கண்ணாடி கதவின் வழியே கண்ணில் பட அவளது மனக்கண்ணில் பஞ்சிங் பேக் தூயவனின் முகமாகவும் குத்திக்கொண்டிருந்த தூயவனின் பிம்பம் தனது பிம்பமாக தோன்ற மானசீகமாக அவனை வெளுத்து வாங்கினாள் ஆதினி. 

“சரியான உராங்குட்டான்… நான் செய்ய வேண்டியதெல்லாம் அவன் செஞ்சிட்டு இருக்கான்.. மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பு இவனுக்கு.. வந்ததும் வராததுமா என்மேல உள்ள கோவத்தை அதுல காமிக்குறான்.. தைரியம் இருந்தா என்கிட்ட காமிக்கட்டுமே.. அயோ இவன் பண்றதை எல்லாம் அப்பா அம்மா பார்த்தா வருத்தப்படுவங்களே” என்று வாய்விட்டு புலம்பியவள் நேரே கண்ணாடி கதவினைத் திறந்து கொண்டு அவனின் முன் சென்று நின்றாள். 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்