அந்த நாள் ஆரமிச்சதுதான் அதுக்கப்புறம் இப்போ வரைக்குமே ஓய்வே கெடைக்கல….அங்கையும் இங்கையுமா அலஞ்சு திரிஞ்சு வேல கேட்டு….ஓடி ஆடி வேல செஞ்சு…அழுத்துப் போச்சு…
அக்கம் பக்கத்துல இருந்த எல்லாருமே ஒரு மாதிரி இழிவா பேசதா செஞ்சாங்க…. அதையெல்லாம் காது குடுத்து கேட்டு கவலப் பட்டுட்டு இருந்தா புள்ளைங்களுக்கு பசிக்காம இருந்துருமா?….நம்ம கஷ்டப்பட்டாதான் புள்ளைங்க சாப்பிட முடியும்ன்ற மனநிலை அவளுக்கு இருந்தனால….தினம் தினம் சந்திக்குற எல்லாத்தையுமே அவளால நல்ல விதமா கடந்து வர முடிஞ்சது…
அப்போதைக்கு வறுமை ரொம்ப அதிகமா இருந்தனால…வசந்திய படிக்கவே வைக்க முடியல….குடும்ப சூழ்நிலையும் மோசமா இருந்தது அதுனால சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சாச்சு….வசந்தி பெத்த மக மருமகன் பெறாத மகன்…இது என்னைக்குமே மாறாதது… மீனாட்சி வாய் விட்டு வெளிய சொன்னது இல்ல…ஆனா மனசுக்குள்ள மருமகன் மேல பெரிய மரியாத இருக்கு….
எந்த மருமகனும் செய்யத் தயங்குற விஷயத்த அவரு நல்லபடியா செஞ்சு முடிச்சாரு….அதுதான்…ஆதிய படிக்க வச்சது அவருதான்…..ஏன்ன ஆதிய காலேஜ் சேக்க வேணாம் வேலைக்கு அனுப்பியர்லாம்னுதா மீனாட்சி சொன்னா….ஆனா அவருதான் பரவாயில்ல படிக்கட்டு நான் பாத்துக்குறேனு சொன்னாரு….அவரு சொன்ன வார்த்தைய மறக்காம கடைசி வரைக்கும் காப்பாத்துனாரு….இப்போ அவன் நல்ல வேலைல இருக்கான்…. ஆதிக்கும் மாமா மேல சொல்ல முடியாத அளவுக்கு பாசமு மரியாதையும் இருக்கு…
ஆனா இவ்ளோ தங்கமான மனசு இருக்குறவரு சங்கடப் படுற மாதிரி குழந்தை இல்லாம நாலு வருஷமா கஷ்டப்பட்டாங்க….. அதுக்கப்புறம் ஒரு வழியா சிங்கம் மாதிரி ஒரு ஆம்பள புள்ள பொறந்தது….அதுக்கப்புறம் அவங்க செல்வாக்கு நூறு மடங்கு அதிகமாச்சு…
ஆதி காலேஜ் படிக்க வெளியூர் போனதால… மீனாட்சி தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது அப்போக் கூட அவரு மீனாட்சிய தனியா விடல….வாங்க உங்க பொண்ணு வீட்ல இருக்க உங்களுக்கு என்ன தயக்கம்….என்ன உங்க பையன் மாதிரி நெனைப்பீங்கனு நான் ஆசப் பட்டேன் ஆனா நீங்க எங்க கூட வந்து இருக்க தயங்குறீங்கனு மருமகன் கேட்டதும் மனசு இறங்கி…மக வீட்டுக்கே மீனாட்சி போய் இருந்தா…
மீனாட்சி , வசந்தி , ஆதி இவங்க மூனு பேர் வாழ்க்கையிலயும் ஒரு நல்லது நடந்திருக்குனா…அது வசந்திக்கு நல்ல கனவர் கெடச்சதுதான்….இன்னைக்கு வரைக்கும் அவங்க மூனு பேரும் நல்லா இருக்காங்கனா அதுக்கு அவருதான் முக்கிய காரணம்….
ஆதிய நல்லபடியா படிக்க வச்சாரு…அவனும் நல்லா படிச்சான்….நல்ல வேலைக்கு போய் நல்லா சம்பாதிக்கவும் செய்றான்…..
அப்பாடா எப்படியோ நம்ம வாழ்க்க நம்ம நெனச்சது மாதிரியும் சந்தோஷமா மாறிடுச்சு அப்படினு சிரிச்சுகிட்டே ஃபோன் எடுத்து மாமாவுக்கு கால் பண்ணி….முதல் மாச சம்பளம் வாங்கிட்டேன் அப்படினு சொன்னான்….குடும்பமே சந்தோஷத்துல உற்சாகமா துள்ளிகிட்டு இருந்தாங்க…
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்துல பொறந்து வளந்து அத விட கொஞ்சம் முன்னேறி போகும் போது எந்த பையனுக்கா இருந்தாலும் அம்மாவ நல்லபடியா ராணி மாதிரி பாத்துக்கனும் அப்படின்ற ஆசை இருக்கும்….அதே ஆசைதான் ஆதிக்கும் இருந்தது…அந்த ஆசை ஆர்வமா மாற…அத மனசுல வச்சுக்கத் தெரியாம அம்மா கிட்ட சொல்லிட்டான்….
தீபாவளி லீவுக்காக வீட்டுக்கு வந்தவன் நல்லபடியா கொண்டாடிட்டு…எல்லார் கையிலயும் காச குடுத்துட்டு அக்கா மாமா அம்மா அக்கா புள்ளைங்கன்னு எல்லார் கூடையும் உக்காந்து அன்னைக்கு நைட் விருந்து மாதிரி பயங்கரமா சமையல ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு கிட்டே வேலைக்கு போன இடத்துல நடந்த வேடிக்கையான கதை எல்லாம் சொல்லி வயிறு வலிக்க சிரிச்சிட்டு இருந்தான்…..
“ஆதி பேசி சிரிச்ச வரைக்கும் போதும்….இனி ஒழுங்கா சாப்பிடு…நீதான் சாப்பிடாம இருக்க”
“சரிங்க மாமா சாப்பிடுறேன்….அவ்ளோதா”
“நல்லா சாப்பிடு….ஹோட்டல் சாப்பிட்டு உடம்பே உனக்கு வத்திப் போச்சு…”
“ஆமா மாமா…உடம்புக்கு ஒத்துக்கல…அடிக்கடி எதாவது ஒன்னு ஆகிருது…காசும் கட்டுபடி ஆகல….அதுனால வீட்லையே இனிமே சமச்சுக்கலாம் அப்படினு முடிவு பண்ணிருக்கேன்”
“ம்ம்ம் நல்ல முடிவு….ஆமா உனக்கு சமைக்கத் தெரியுமா?”
“இல்ல மாமா எனக்கு சமைக்கத் தெரியாது….அதான் நாளைக்கு ரிட்டன் கெளம்புறேன்ல அப்படியே அம்மாவையும் கூட கூட்டிட்டு போலானு இருக்கேன்…..”
ஆதி இந்த விஷயத்த சொன்னதும் மருமகன் முகம் சுருங்கி போச்சு…அத கவனிச்ச மீனாட்சியும் வசந்தியும் அவனுக்கு கண்ணாலயே ஜாட காட்டி அவன அந்த பேச்ச அதுக்கு மேல பேச விடாம பண்ணிட்டாங்க….
சரி எல்லாரும் வேணும்றத சாப்பிட்டு நேரத்தோட போய் படுத்து தூங்குங்க… அப்படினு மருமகன் சொல்லிட்டு படுக்கையறைக்கு போன பிறகு…. மீனாட்சி ஆதிய கூப்பிட்டுகிட்டு வீட்டுக்கு வெளிய இருக்க திண்ணையில வந்து உக்காந்தாங்க….
“ஏன்டா உனக்கு அறிவு இல்லையா…நீ அப்படி சொன்னதும் உங்க மாமா முகமே மாறிப் போச்சு….”
“அம்மா இதுல என்ன இருக்கு….இத்தன வருஷமா நீ காட்டுலயும் மேட்டுலயும் கெடந்து கஷ்டப்பட்ட…. இப்போ நான் நல்லா இருக்கேன் உன்னையும் நல்லா வச்சுக்கனும்னு ஆச படுறேன் இது தப்பா”
“தப்பு இல்ல…உனக்கு ஆசை இருக்கத்தான் செய்யும்…அதுக்காக நான் இவங்கள விட்டுட்டு உன் கூட வந்தா நல்லாவா இருக்கும்….இத்தன நாள் என்ன பெத்த தாய் மாதிரி பாத்துகிட்டாங்க…உன்ன படிக்கவச்சாங்க…எல்லாமே பாத்தாங்க…நம்ம கஷ்டப்படும் போது அவங்க கூடவே இருந்து அவங்க உதவியில வாழ்ந்துட்டு…இப்போ நல்லா ஆனதும் விட்டுட்டு போனா நல்லாவா இருக்கும்….”
“என்னம்மா நியாயம் பேசுற நீ…நான் அவங்களுக்கு எதுவும் செய்யாமையா இருக்கப் போறேன்….நல்லா சம்பாதிச்சு அவங்களோட தேவையுமே நான் பாத்து செஞ்சு குடுக்கதான் போறேன்…”
“நீ பின்னாடி அத இத செய்வனு எதிர்பாராத்து அவங்க உன்ன படிக்க வைக்கல….அவரு உன்ன தன்னோட பையன் மாதிரிதா நெனச்சாரு….இப்போ வரைக்கும் அப்படிதான் நெனச்சு கிட்டு இருக்காரு….”
“அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல…நான் அவங்க மேல பாசம் இல்லாம ஒன்னு இல்ல….எனக்கும் எல்லாமே தெரியும்….ஆனா எனக்கு ஒரு ஆசை சின்ன வயசுல இருந்து… உன்ன நல்லபடியா சொகுசா வாழ வைக்கனும்னு….நீ அவங்கள புரிஞ்சுக்குற ஆனா என்னோட ஆசைய புரிஞ்சிக்க மாட்டேன்ற “
“டேய் நீ இதுக்கு மேல இந்த பேச்ச பேசாத…என்னால இவங்கள விட்டுட்டு வர முடியாது…”
“ஏன்மா இப்படி சொல்ற….”
“சுயநலமான ஆசை எல்லாம் இனி இருக்கக் கூடாது ஆதி “
அம்மா அவனோட ஆசைய புரிஞ்சுக்காம பேசுறாங்க….அவங்களுக்கு அவங்க மகளும் மருமகனும் மட்டும்தா ரொம்ப புடிக்கும்…அவங்களதான் முக்கியம்னு நெனைக்குறாங்க….
…கதை தொடரும்…