Loading

அத்தியாயம்-41

 

டிக்..டிக்..டிக்.. என்று ஓய்வின்றி உழைக்கும் கடிகாரத்தின் உபயத்தால் நாட்கள் அழகாய் சென்றன. மாலைநேரத் தேநீருக்காக சங்கமித்ராவும் வளவனும் புத்துணர்ச்சிப் பெற்று வர,

 

அறையைவிட்டுச் செல்லும் முன் தன்னவளை அமர்த்திய வளவன், “மித்ரா.. ஒரு ரோசனைடி” என்றான்.

 

“என்னதுங்க?” என்று மித்ரா கேட்க,

 

“நாம முன்ன ஆத்துல மீனுபிடிக்குலாம் ஏலமெடுப்போம் மித்து” என்று அவன் பேச்சை முடிக்கும் முன், “மீன் ஏலமா? இதெல்லாம் எப்போங்க?” என்று ஆர்வமாய் கேட்டாள்.

 

லேசான சிரிப்போடு, “முன்ன மித்ரா.. அஞ்சு வருஷமாச்சு. ஏலம் வேற ஆளுவ எடுத்தாவ. அப்பத கையில பைசா பொழங்கலைனு விட்டுப்புட்டம்” என்று கூற,

 

“ஓ.. இப்ப மறுபடி நீங்க எடுக்கப் போறீங்களா?” என்று கேட்டாள்.

 

“இல்லட்டி.. பண்ண மாதிரி வப்பமானு யோசிக்கேம்” என்று அவன் கூற,

 

“வாவ்.. சூப்பருங்க. அப்ப நம்ம வீட்டுக்கு இனி மீனெல்லாம் ஈசியா கிடைக்கும்” என்று ரசனையிலேயே ருசி பார்த்தபடி கூறினாள்.

 

அவள் தலையில் கொட்டியவன், “இது தொழிலுட்டி. நீயு திங்க வேணுமின்னா கேலேம். நான் வாங்கித்தாரேம்” என்று கூற,

 

“எங்க? உங்க அம்மா தான் மீனெல்லாம் எப்பவாதுதான் பண்ணுவோம். எனக்கு சேராது, இப்படி செஞ்சா மாமாக்குப் பிடிக்காது அப்படி இப்படினு செய்யவே மாட்டேங்குறாங்க. நானா எனக்கு மட்டுமாது வச்சுக்கலாம்னா அதுக்கும் வழியில்ல” என்று கூறினாள்.

 

“ஒனக்கு சாப்புடனும்மினா நீயு வாங்கி செஞ்சுகிடு இனிமே. ஆறும் ஏதும் சொன்னா, நாங்கேட்டேன்னு சொல்லிக்க” என்று கூறியவன், “சரி என்னைய சொல்ல வந்தத சொல்ல விடேம்டி” என்க,

 

“ஓகே ஓகே சொல்லுங்க” என்றாள்.

 

“பண்ண தொவங்க எடமெல்லாம் தேடிகிட்டுதேம் இருந்தேம். பைசா போடனும். ஒன்னால…” என்று முடிக்கும் முன்,

 

“ஓ பணமா? என்கிட்ட நீங்க உரிமையா பணம் கேட்டு நாயில்லைனு சொல்லுவேனா? நீங்க சம்பாதிக்குறதுல எனக்கு எப்படி உரிமையிருக்கோ, அதேபோலதான் என் சம்பாத்தியத்துல உங்களுக்கு உரிமையுண்டு” என்றவள் தனது கைப்பையிலிருந்து வங்கி கணக்கு அட்டையை அவன் கையில் வைத்தாள்.

 

“இதுல என் சேவிங்ஸ்ல இருக்குறது போதுமானு பார்த்துக்கோங்க” என்று அவள் கொடுக்க,

 

சின்ன சிரிப்போடு, “இதுல எம்புட்டு இருக்கோ அது போதும். ஓம்பேருலதேம் தொவங்கப்போறேம். அதேம் ஓங்கிட்ட காசு வாங்குதேம்” என்றான்.

 

அவனை அதிர்வாய் பார்த்தவள், “என் பேர்லயா? எதுக்குங்க?” என்று கேட்க,

 

“இந்தூட்டுல அம்புட்டு பேரு பேருலயும் ஐயா ஒவ்வொன்னு போட்டு வச்சாவ மித்ரா. வர்ற மருவளுங்களுக்கு என்னமாது நீங்க செய்யனும்யானு அடிக்கடி சொல்வாவ. விக்ரமுக்கு வயலு மொத்தமும் கொடுத்தாவ. அண்ணி கல்யாணத்துக்கு முன்னுக்கவும், கட்டிகிட்டு ரெண்டு மாசமும் ஐடில வேலை பாத்துச்சு தெரியும்ல? அண்ணி காசுலதேம் அண்ணே மில்லு கட்டிச்சு. எம்பொட்டாட்டி இந்தூட்டுல வடிச்சுக்கொட்ட மட்டுமில்ல, எனக்கும் சேத்துதேம் அவ பொழப்புக் கொடுக்கானு நாலு பேருட்ட நாம்பெருமையா பேசிகிடனும். அதுக்கும் மருவாதி கொறையக்கூடாதுனு சொல்லுவியாம். ஐயா எது வாங்கிபோட்டாலும் அம்மா பேருலதேம் வாங்குவாவ. அம்மா கையில காசெல்லாங்கிடையாது அப்பத. கொஞ்ச பேரு ஓசிக்கு புருஷம் வாங்கி போட்டதுதானனு சொல்லவுந்தேம், அந்த பேச்சுக்கூட ஒனக்கு வேணாமுடினு மைணிட்டயே காசு வாங்கினியான் விக்ரம். பத்து பைசாகூட போதும் நீயு கொடு. மித்ததுக்கு நாம்போட்டுகிடுதேம்னு சொல்லினியாம். தனத்துக்கு வீடு இருக்கு, திரி அக்கா பேருலதேம் பூந்தோட்டமிருந்துச்சு. திரி அக்காதேம் பாத்துகிட வழியில்லனு எனக்கே வித்துட்டாவ. ரப்பரு எம்பேருல எழுதினதாலதேம் தீபிக்கு மாத்தல. இல்லாங்கட்டிக்கு அங்கனதேம் போயிருக்கும். தாத்தா காடு ஒன்னு இருக்கு. அததேம் தீபியக்கா பேருல எழுதிவச்சாவ. ஒனக்கு என்னமாது போடனும்முனு ரோசிச்சுட்டே இருந்தேம். ஏங்கையில பூந்தோட்டம், ரப்பரு தோட்டம், தேங்கதேம் இருக்கு. தேங்க பறிச்சு விக்குறது, ரப்பரு அத்தானுக்கு போயிடும். பூவு வித்துபோவும். சென்டு பேக்டிரி ஆரமிப்போமானு ரோசிச்சேம். நம்ம சோலிக்கு சரிபட்டு வாராதுனு பட்டுச்சு. அதேம் பேசாம பண்ண போடுவம்னு இந்த முடிவுக்கு வந்தேம்” என்று நீளமாகப் பேசி முடித்தான்.

 

“ஏ ஹப்பா..” என்று அவள் மூச்சிழுத்துவிட,

 

அதில் சிரித்துக் கொண்டவன், “இன்னுமொன்னு நீயுங்கூட ஜூவாலஜி படிச்சவதேம். ஒனக்கும் பண்ணபோட்டா நாலு வேல எடுத்து செஞ்சுகிட தெரிஞ்சுருக்கும்ல?” என்று கேட்டான்.

 

“ம்ம்.. தெரியுங்க. நான் யூஜி, பீஜில இன்டர்ன்ஷிப் கூட ஃபிஷ் எக்ஸ்போர்ட் சைட்தான் போனேன். மீன் சாப்பிட பிடிக்குங்குற ஆர்வத்துல போனது. அங்க போனா பத்துநாள் ட்ரெயினிங் முடிஞ்சு போகும்போது ஃப்ரீயா மீன் தருவாங்க.. அங்கதான் சுறாலாம் தந்தாங்க.. என்னா டேஸ்டு தெரியுமா?” என்று நினைவுகளில் சஞ்சரித்தபடியே அவள் கேட்க,

 

“ஏட்டி.. நீயு பேசுறத பாத்தாக்க ஒன்னய வச்சுட்டு மீனு பண்ண தொவங்குறது செரமம் போலயோனு படுது இப்பம் எனக்கு. நீயே கொண்டாந்து பொறிச்சு சாப்பிட்டுடுவ போலயே” என்று கேட்டான்.

 

“ஹலோ மிஸ்டர் திருமால்.. வேலைனு வந்துட்டா நாங்க வெள்ளக்காரங்க. அதுலாம் கராரா இருப்போமாக்கும்” என்று கோபம் போல் அவள் கூற,

 

அவளை இடையோடு வளைத்துக் கொண்டவன், “இஞ்சார்ரா.. அப்புடிங்கலாக்கும்? அப்பனா நானுங்கூட கொஞ்ச வேல வச்சுருக்கேம். பாக்கீயளா?” என்று கேட்டான்.

 

அவன் பிடியில் அதிர்ந்து குளிர்ந்து சிவந்தவள், “அ..அதுலாம் இப்ப முடியாது” என்க

 

வாய்விட்டு சிரித்தபடி, “கோம்ப” என்று அவள் நெற்றி முட்டினான்.

 

“சரி.. வீட்டுல கலந்து பேசி முடிவாயிட்டு பொறவு கேக்கேம். அப்ப குடு” என்று அவன் கூற,

 

சரியென்று ஒப்புக்கொண்டாள்.

 

அன்று மாலையே சுயம்புலிங்கம் மற்றும் விக்ரமிடம் தனது எண்ணத்தை அவன் கூற,

 

“ரொம்ப நல்ல வெசயம்யா. நாங்கூட ரெண்டு மாசமானா கண்ணாலமாயி வருஷமே ஆவப்போவுது இன்னும் ஏம்யா ஏதும் நீயு செய்யலனு கேக்கத்தேம் இருந்தேம். நீயாவே முன்னுக்க வந்துட்ட. நல்லபடியா எடுத்து நடத்து” என்று சுயம்புலிங்கம் கூறியிருந்தார்.

 

“என்ன சங்கு? வீட்டுல மீனு வாங்கி செய்ய முடியலைனு பண்ணைக்கு இறங்கியாச்சு போல?” என்று கார்த்திகா கேலியாக் கேட்க,

 

“நான் நினைச்சேன் க்கா நீங்க இதைதான் கேட்பீங்கனு” என்று மித்ரா கூறினாள்.

 

“கேக்காமயா? நீதேம் மீனுமீனுனு தவிப்பியேடி மைணி” என்று தனலட்சுமி கூற,

 

“அடியே.. ஒன்னு வாடி போடினு கூப்பிடு. இல்ல அன்னினு கூப்பிடு. ஏன்டி மிக்ஸ் மேட்ச் பண்ற?” என்று சங்கமித்ரா கேட்டாள்.

 

“பேச்ச மாத்தாதத்தா” என்று கார்த்திகா கூற,

 

“சத்தியமா எனக்கு தெரியாதுக்கா. அவங்களாதான் வந்து சொன்னாங்க. ஆனா என்கிட்ட கேட்டிருந்தா நானும் மீன்பிடி பக்கம்தான் போயிருப்பேன். கடல்பக்கம் வாழ்ந்துட்டு மீன் சாப்பிட மாட்டேங்குறீங்களேக்கா நீங்கலாம்” என்று ஆயாசமாய் சங்கமித்ரா கேட்டாள்.

 

“நானு விருதுநகரு காரிடி. பொறிச்ச பொரட்டாவும் கோழி கொழம்புந்தேம் எங்களுக்குலாம்” என்று கார்த்திகா கூற,

 

“மீனு வாட திரியக்காவுக்கு ஆவாது மைணி. அதேம் இந்தூட்டுல சின்ன புள்ளையலருந்தே எங்களுக்கு மீனுலாம் பேருசா பழக்கல. எப்பமாது வெளிய சாப்பிட்டாதேம்” என்று தனம் கூறினாள்.

 

“அதுசரி.. எந்த மேட்டரெடுத்தாலும் திரி அண்ணிதான் எனக்கு வில்லன் வேலைப் பாக்குறாங்க” என்று சங்கமித்ரா அழுப்பாய் கூற,

 

“இதெல்லாம் ரெகார்டு போட்டு அக்காட்டக் காட்டனும்” என்று தனம் கூறினாள்.

 

“ஏட்டி… ரெகார்டுலாம் வேணாம். சங்கு இப்புடி பேசிச்சுனு நீயு நாலு வார்த்த சொன்னாபோதும். மைணி பாத்துகிடுவாவ” என்று கார்த்திகா கூற,

 

“அத செல்லுங்க அக்கா. ஆதாரமாம் ஆதாரம். என்னைத் திட்ட அதலாம் வேண்டவே வேணாம் அவங்களுக்கு” என்றாள்.

 

அதில் மற்ற இருவரும் சதங்கையொலியாய் சிரிக்க, இதமான மனநிலையோடே அன்றைய நாள் முடிந்தது. காலை புன்னகையே உருவாய் புறப்பட்டுச் சென்ற மனைவியை மாலை இப்படிக் காண இயலாது என்று தெரியாமல் அவளுக்கு முத்தங்களை வழங்கி அனுப்பிவைத்துவிட்டுத் தானும் தன் பணிக்குச் சென்றான்‌ வளவன்.

 

காலை பூந்தோட்டம், மதியம் ரப்பர் தோட்டமென்று வேலை நெட்டித் தள்ள, மாலை தென்னந்தோட்டம் வந்தவன், வடிவேலுடன் மேற்பார்வையில் ஈடுபட்டான்.

 

“ஏம்லே வளவா.. இஞ்சாரேம்.. பூஞ்ச புடிக்கிடா தென்னையில. அடித்தண்டழுவ போலருக்கு?” என்று வடிவேல் ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டிக் கூற,

 

“அட ஆமால்லே” என்றவன் குறிப்பிட்ட அப்பகுதியில் உள்ள சில மரங்களின் தண்டுகளில் ஒருவகையான பூஞ்சைத் தாக்கியிருப்பதைக் கண்டான்.

 

“என்னம்லே இது.. நம்ம தென்னைக்கு வந்த சோதன” என்று வடிவேல் வருத்தமாய் கூற,

 

அவனோடு தோப்பு வீட்டிற்குச் சென்றவன், மருந்து கலவைகளை நீரில் கலந்து, “நாம பூச்சு மருந்து ஒன்னும் அடிக்கிலியேலே ஒன்னும் வாராதுனு கட்டியஞ்சொல்லுறதுக்கு. வுடு மருந்து அடிச்சுப் பாப்பம்” என்று கூறினான்.

 

வாலி நிறைய நீருடன் அதற்கான மருந்தை கலந்துகொண்டு சென்றவர்கள் மருந்துகலந்த நீரை மரத்தில் அள்ளித் தெளித்தனர்.

 

வடிவேல் தான் கொண்டு போன மருந்துகளைத் தெளித்து முடித்து வரவும், வளவனின் அலைபேசி ஒலி எழுப்ப, “யாருனு பாருலே” என்று கூறினான்.

 

அவன் கழட்டி வைத்திருந்த சட்டையில் கிடந்த அலைபேசியை எடுத்த வடிவேல், “ஏதோ நம்பரா இருக்குதுலே” என்க,

 

“எடுத்து ஸ்பீக்கரு போடு” என்றபடி மருந்து கலவையை அள்ளித் தெளித்தான்.

 

வடிவேலும் அழைப்பை ஏற்று, ஒலிபெருக்கியில் போட, “அ..அண்ணே..” என்று அழும் குரலில் ஒரு இளைஞனின் குரல் ஒலித்தது.

 

“யாரும்லே?” என்று வளவன் புருவம் சுருக்கி அழைக்க,

 

“அண்ணே.. நா.. நான் மணி. சங்கு அக்காகூட வேலபாக்கேம்” என்று கூறினான்.

 

சங்கமித்ரா பெயரை அவன் குறிப்பிட்டதுமே, அவனது அழும் குரலில் பதறிய வளவன், குவளையைக் கீழே போட்டு அலைபேசியைப் பட்டென வாங்கி, “அவோளுக்கு என்னம்லே?” என்க,

 

எதிரிருப்பவன் ஓவென்று அழுதான்.

 

“லே என்னனு சொல்லிட்டு அழுடா” என்று ஆத்திரத்தோடு வடிவேல் சப்தமிட, வளவன் இதயம் வேகமாய் படபடத்தது.

 

“அ..அக்காவுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சுண்ணே” என்று அவன் கூற,

 

காதுகளில் இடி விழுந்ததைப் போல் உறைய வைத்தது, திருமாவளவனை.

 

அவன் உறை நிலையில் அலைபேசியை பிடுங்கிய வடிவேல், “எங்கம்லே இருக்கீய? ஆஸ்பத்ரி போயாச்சா? தங்கபுள்ளைக்கு என்னம்லே?” என்று கேட்க,

 

“ஆஸ்பிடல்லதாம் இருக்கேம் அண்ணே. கொண்டாந்து சேத்துருக்கியேம். எ.. எனக்கு பயமாருக்குண்ணே. அக்காக்கு நெறையா ரெத்தம் போயிடுச்சு. டாக்டருலாம் என்னென்னமோ பேசிக்காவ” என்று அழுதான்.

 

அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க, வளவன் உள்ளம் இன்னும் அதன் துடிப்பை அதிகரித்தது.

 

மருத்துவமனை விபரங்களைக் கேட்ட வடிவேல், “வளவா ஒன்னுமிருக்காதுலே. நீயு பதட்டப்படாதுவா” என்று அழைக்க, 

 

அவன் கரத்தை இறுக்கமாய் பற்றியவன், “செத்துடுவேம்லே” என்றான்.

 

“லே கோம்பத்தனமா பேசாத. அதுலாம் ஒன்னுமாவாது. வா” என்று நண்பனை தேற்றியவன் அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

 

மணி கூறிய மருத்துவமனையை அடையவுமே வண்டி நிறுத்தும்வரையும் கூட பொறுக்காது வளவன் உள்ளே பாய்ந்து நுழைந்தான்.

 

“சிஸ்டர், சங்கமித்ரா?” என்று பதைபதைப்பாய் முகப்பில் அவன் விசாரிக்க,

 

அவரும் குறிப்புகளை பிரட்டி, “அந்த ஆக்ஸிடென்ட் கேஸ் தானே சார்?” என்று கேட்டு வழிகூறினார்.

 

ஓட்டமாய் அங்கே சென்றவன், அறுவகை சிகிச்சை பிரிவிலுள்ள அறை வாசலில் பயமும், கலக்கமுமாய் அமர்ந்துகொண்டிருந்த மணியைக் கண்டு, பதைபதைப்போடு சென்றான்.

 

வளவனை ஏற்கனவே புகைப்படங்களில் கண்டிருப்பதால் அடையாளம் கண்டுகொண்டு எழுந்த மணி, “அண்ணே.. அக்கா..” என்று அறையைக் கைகாட்ட, 

 

அவன் கைகாட்டிய அறைக் கதவின் வழியே பார்த்தவனுக்கு, ரத்தம் நிறைந்த பெண்ணவளின் தோற்றத்தினை சுத்தம் செய்து கட்டிட்டுக் கொண்டிருந்த மருத்துவர்களின் செயல் கண்ணில் பட்டது.

 

அந்த நொடியே, தன் செயல்பாடு நின்றுவிட்டதைப்போல் அவன் பொத்தென்று தரையில் அமர,

 

அங்கே ஓடிவந்து நண்பனைத் தாங்கிய வடிவேல், “வளவா..” என்றான்.

 

“எ..எம்மித்ராலே..” என்று கைகள் நடுநடுங்க அவன் அறையைக் காட்ட,

 

கண்கள் கலங்கத் தன் நண்பனைப் பார்த்தவன், “ஒன்னுமாவாதுலே” எனக் கூறி, மணியைப் பார்த்து, “என்னம்லே ஆச்சுது?” என்றான்.

 

“தெரில அண்ணே. அக்கா எங்கிட்ட பேசிட்டு வாரேம்னு சொல்லிட்டு கெளம்பிப் போச்சு. நானும் வேலைய முடிச்சுட்டு அடுத்த பத்து நிமிஷத்துல கெளம்பிட்டேம். எங்க ஆபிஸ்லருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரே கூட்டம். என்னனு வந்துபாத்தா..” என்றவன் ரத்த வெள்ளத்திற்கு நடுவே கிடந்த சங்கமித்ராவின் தோற்றத்தை மீண்டும் காலப்பயணம் செய்து பார்த்து வந்ததைப் போல் நடுங்கினான்.

 

செவிலியரும் மருத்துவரும் வெளியே வர, வடிவேல் ஓடிச்சென்று, “டாக்டர்… சங்கு?” என்று பதைபதைப்போடு கேட்டான்.

 

“நீங்க?” என்று அவர் வினவ,

 

“நான் அது அண்ணே டாக்டர். அவேம் அவோ புருஷன்” என்க,

 

“வண்டி மோதினதுல தூக்கி எறியப்பட்டிருக்காங்க சார். சில இடங்கள்ல போன் (எலும்பு) கிராக் ஆயிருக்கு. தலைலயும் நல்ல அடி. ப்ளட் நிறைய லாஸ் ஆயிருக்கு. நல்லவேல ரேர் ப்ளட் க்ரூப் இல்ல. சீக்கிரம் ஆபரேஷன் பண்ணியே ஆகனும்” என்று கூறினார்.

 

விறைத்தபடி அமர்ந்திருக்கும் நண்பனைக் கண்கள் கலங்க பார்த்தவன், “ஆபரேஷனுக்கானதா பாருவ சார். எங்க பக்கமிருந்து செய்ய வேண்டியதெல்லாம் செய்யுதோம்” என்க,

 

“ஆக்ஸிடென்ட் கேஸ் சார். போலீஸ்லயும் கொஞ்சம் பேசிடுங்க. அவங்க நிலைமை கிரிடிகலா இருக்கப்போய்தான் எடுத்தோம்” என்று கூறிச் சென்றார்.

 

வளவனைத் தேற்றுவதைவிட தற்போது ஆகவேண்டியதைப் பார்ப்பதே முக்கியம் என்று புரிய, வடிவேல் விக்ரமனுக்கு அழைத்தான்.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும், கொஞ்சம் கூட தாமதிக்காமல், “லே.. நாஞ்சொல்லுற ஆஸ்பத்திரிக்கு வா. நம்ம சங்குக்கு ஆக்ஸிடென்ட் ஆவிபோச்சு. பேச நேரமில்ல. ஆக்ஸிடென்ட் கேஸ்னு தயங்குறாவ. ஸ்டேஷன் போயி பர்மிஷன் லெட்டரு எழுதிட்டு வா” என்றான்.

 

“என்னம்லே சொல்லுத?” என்று அதிர்ந்து எழுந்த விக்ரமனும் அவன் குரலின் அவசரம் புரிந்து விரைந்து செயலாற்றினான்.

 

சில நிமிடங்களில், வீட்டிற்கும் தகவல் தெரியப்படுத்தப்பட, வீட்டாட்கள் அனைவரும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.

 

“லே வேலா.. என்னய்யா என்னென்னமோ சொல்லுத? என்னம்லே ஆச்சு சங்குக்கு?” என்று தீபிகா கேட்க,

 

“ஆரோ அடிச்சு வீசிருக்காவக்கா நம்மூட்டு புள்ளைய” என்று கண்ணீரும் வேதனையுமாய் கூறினான்.

 

“என்ன அண்ணே சொல்றாவ?” என்று கார்த்திகா பயம் கலந்த குரலில் கண்ணீரோடு கேட்க,

 

“ஆபரேஷன் பண்ணனுமுனு சொல்லுறாவத்தா. எலும்பெல்லாம் ஒடஞ்சுருக்குதாம்” என்றான்.

 

“ஆத்தே!” என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்ட தெய்வா மகனை நோக்க,

 

வந்தபோதிருந்த நிலையிலேயே அப்படியே வெறித்து அமர்ந்திருந்தான்.

 

மகாதேவனும் சிவபாதசேகரனும், அவனுக்கு இருபுறமும் சென்று மண்டியிட்டு, “லே வளவா.. ஒன்னுமாவாதுலே அவளுக்கு” என்க,

 

அவன் பதில் உரைத்தானில்லை.

 

“அய்யோ எம்மவேன இப்புடி பாக்க முடியிலயே..” என்று தெய்வா சப்தமிட்டு அழ,

 

அழுகையுடன் திரிபுரா அவரைத் தாங்கிக் கொண்டாள்.

 

தீபிகாவும் கார்த்திகாவும் ஒருபக்கம் பயமும் கண்ணீருமாய் நிற்க, தனலட்சுமியும் சூழலில் மிரண்டு அழும் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதபடி அவ்விடம் விட்டுச் சென்றாள்.

 

அங்கு விரைந்தோடி வந்த விக்ரமன், தன் குடும்பத்தைக் கண்டு பெருமூச்சு விட்டு, “எல்லாம் ஆச்சுது. ஆபரேஷனாரமிச்சுடுவாவ. ஒன்னுமாவாது. யாரும் அச்சப்படாதிருங்க” என்று கூற

 

“எய்யா விக்ரமா.. என்னய்யா சொல்லுறாவ.. எனக்கு ஒன்னுமே ஏறலயே..” என்று சுயம்புலிங்கம் கண்ணீரோடு கேட்டார்.

 

“ஒன்னுமாவாது ஐயா.. வெசனபடாதிருங்க” என்று அவன் கூற,

 

“என்ன சத்தம் இங்க? இது ஆஸ்பிடல். இத்தன பேர்லாம் இருக்கக்கூடாது. நாலுபேர தவிர எல்லாரும் கிளம்புங்க” என்று செவிலி வந்து சப்தமிட்டார்.

 

மகா, வளவன், விக்ரம் மற்றும் வடிவேல் இருப்பதாய் கூற,

 

“எய்யா பொம்பளைங்க ஆரும்னா இருக்கட்டும்லே” என்று சுயம்புலிங்கம் கூறினார்.

 

“ஆபரேஷன் முடியவே ரொம்ப நேரமாவுமாம்யா. புள்ள முளிக்க நாள மதியங்கூட ஆவும். எல்லாத்தையும் கூட்டிகிட்டு போங்க. ஒன்னுமாவாது” என்று ஆறுதல் கூறி எப்படியோ விக்ரமன் அனைவரையும் அனுப்பிவைத்துவிட்டுத் தன் இரட்டையனிடம் வந்தான்.

 

எதையும் உணராத நிலையில் விறைத்திருக்கும் வளவனை விக்ரமன் இறுக அணைத்துக் கொள்ள, இயற்கை ஊற்றாய் நீர் ஊர்ந்துவரும் கிணற்றைப்போல், கண்ணீர் ஊற்று சுரந்து, அவன் கண்களிலிருந்து பொழிந்து, மெல்ல விசும்பல் பிறந்து, பெரும் கேவலாகி, வெடித்துச் சிதறும் அழுகையாய் உருமாறியது.

 

“அ..அவோள இ..இப்புடி பா..பாக்க முடியிலயேலே.. தா..தாங்க மாட்டாளே.. அ..அவளுக்கு எ..என்னமாதுனா செ..செத்துடுவேம்லே..” என்று தன் நெற்றியில் அறைந்துக் கொண்டு அழுதான்.

 

வளவன் கோபத்தைத் தான் அவ்வீட்டார் பார்த்திருக்கின்றனரே தவிர, அவன் கண்ணீரையில்லை.. அதிலும் இந்த வெடித்துச் சிதறும் கண்ணீரை நிச்சயமில்லை…

 

“லே.. ஒன்னுமாவாதுடா” என்று தன் உடன் பிறந்தவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட விக்ரமன் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிய,

 

“ப..பயமாருக்குலே..” என்று கதறலாய் உரைத்தான்.

 

“ஏவேய்.. அழுவாம இருடா. ஒன்னுமாவாது‌. டாக்கருவ உசுருக்கு பாதகமுனு ஒன்னுஞ் சொல்லலியே. நீயா ஏம்லே வெசனப்படுதவ?” என்று மகா அவனைத் தேற்ற முயற்சிக்க, 

 

அவன் கதறல் நின்ற பாடில்லை.

 

“இம்புட்டுக்கு இவேம் அழுவியானாலே?” என்று மகாவே வருத்தமும் ஆச்சரியமுமாய் கேட்க,

 

“அந்த புள்ளைய கட்டிக்க முடியாம போனதுக்கே அப்புடி தவிச்சாம் அண்ணே. இ..இப்பத” என்று வடிவேல் கண்ணீர் குரலடைக்கக் கூறினான்.

 

உடன் பிறந்தவனின் சோகத்தை அவன் உடனே பிறந்த விக்ரமால் உணர இயன்றது. “ஒன்னுமாவாதுலே.. நீயி பயப்படாதிரு. ஒன்னுமாவாது” என்பதை மட்டும் தாரக மந்திரமாய் கூறியவன், அவனை அணைத்து சிறுபிள்ளைக்குத் தட்டிக் கொடுப்பதைப் போல் தட்டிக் கொடுத்து ஆற்றுப்படுத்த முயன்றான்.

 

வெடித்தழும் கண்ணீர் ஓய்ந்து அப்படியே வெறித்த நிலையில் விக்ரமன் மீதே அவன் சாய்ந்து அமர்ந்திட, “ஏலே என்னமாது குடிக்காவது வாங்கியாலே அவேனுக்கு” என்று மகா அனுப்பினார்.

 

வடிவேலும் விரைந்து சென்று பழச்சாறை வாங்கிவர, அதை வாங்கிய விக்ரமன், “அவோ முழிச்சு வாரயில ஒனக்கு தெம்பிருந்தாதேம் பாத்துகிட முடியும். என்னமாது பொழம்பாம மருவாதிய இத குடிலே” என்று அதட்டலாய் கூற முயன்றும் அதில் வருத்தம் படிந்தே வந்தது.

 

மறுத்துப்பேசுமளவுகூட திராணியில்லை வளவனிடம். அவளுக்கு விபத்து என்று அவளை அக்கோலத்தில் பார்த்த நொடியே தன் திடம் மொத்தமும் இழந்துவிட்டான். அந்த நிலையில் கொடுக்கப்பட்ட பாணத்தை மறுக்காது அவன் பருகிட, இரவு ஆண்கள் யாரும் துளி தூக்கமில்லாது தவித்துக் கொண்டிருந்தனர்.

 

நள்ளிரவைக் கடந்து இரண்டு மணிநேரம் ஆன பின்புதான், மருத்துவர் அவர்களை அழைத்தார்.

 

விக்ரம், வடிவேல் மற்றும் மகா எழுந்திட, வளவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

 

மூவரும் அவனைத் திரும்பிப் பார்க்க, “அவளுக்கு ஒன்னுமில்லதான? எ..எதும்..எதும் தப்பா சொல்லிட மாட்டாவளே?” என்று கரகரத்தக் குரலில் திக்கித் திணறிக் கேட்டான்.

 

“அதெல்லாம் ஒன்னுமிருக்காதுலே.. வா” என்று அவனைத் தாங்கிக் கொண்ட மகாதேவன் உள்ளே செல்ல,

 

மருத்துவர் அவர்களை அமரும்படிக் கூறினார்.

 

மகாவும் வளவனும் அமர, வடிவேலும் விக்ரமும் பின்னே நின்றுகொண்டனர்.

 

கண்கள் சிவந்து விழிநீர் தேங்க மருத்துவரைப் பார்த்த வளவன், “அவ உசுருக்கு மட்டும் என்னமாதுனு சொல்லிடாதீய டாக்டர்” என்க,

 

“பயப்படாதீங்க சார். அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று அவன் மனதில் இதம் விதைத்துப் பாசனமிட்டார்.

 

தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சாய்ந்தவன், பிடித்து வைத்த பெருமூச்சை வெளியிட, “பட் அவங்க நிலைமையைப் பற்றி கொஞ்சம் சொல்லனும்” என்றபடி மற்றவர்களைப் பார்த்தார்.

 

“அவேம்ட தனியா ஏதும் பேசனுமா டாக்டர்?” என்று மகா வினவ,

 

“இல்ல சார். அப்படியெந்த பிரச்சினையும் இல்லை” என்றவர், அவளது மருத்துவ விபரம் சார்ந்து கோப்பை எடுத்து வைத்து, “அவங்க ரெண்டு கைலயும் பலத்த அடி ஏற்பட்டிருக்கு. வலது கைல எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. இடது கால்லயும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. தலையில் அடி ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கானதுல ரத்தம் எதும் உறைஞ்சிருக்குமோனு பயந்தோம். லக்கிலி அப்படி எதுவும் நடக்கலை. ஆனா..” என்று இழுக்கவும்,

 

“ஆனா? ஆனா என்ன டாக்டர்?” என்று விக்ரம் படபடப்பாய் கேட்க,

 

“அவங்க விழுந்து இடத்தில் இரும்பு கம்பி, கட்டை இப்படி எதும் ஆப்ஜக்ட் இருந்துருக்கும்னு நினைக்குறேன். அவங்க தொண்டைப் பகுதியில் நல்லா அடிச்சிருக்கு. அதுல அவங்க வோகல் கார்ட் சேதமடைஞ்சிருக்கு” என்றார்.

 

“அதால?” என்று வடிவேல் படபடப்பாய் கேட்க,

 

“அவங்களால பேச முடியாது” என்று பெரும் இடியை அவர்கள் தலையில் இறக்கினார்.

 

ஆடவர்கள் மூவர் மருத்துவரை அதிர்ந்து பார்க்க, “அவ உசுருக்கு?” என்று வளவன் கேட்டான்.

 

“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை சார்” என்று கூறியவர் அடுத்து பேசும் முன், “அவள எப்ப பாக்கலாம்?” என்று கேட்டான்.

 

“இப்பதான் ஆபரேஷன் முடிஞ்சுருக்கு சார். காலைல அலோவ் பண்ணுவோம்” என்று அவர் கூற,

 

கண்களை அழுத்தமாய் மூடிக் கொண்டு தலையைத் தாங்கினான்.

 

“டாக்டர்.. கொ..கொரலு.. இனி..” என்று வடிவேல் தடுமாற,

 

“ஸ்பீச் தெரபி எடுத்தா குணமாகும். வாய்ப்புகள் ரொம்பவே அதிகம் தான். ஆனா கண்டிப்பா இப்ப முடியாது. அவங்களுக்கு பட்டிருக்கும் அடிலருந்து மீண்டு, அவங்களோட மெடிகேஷன்ஸ் முடியவே ஒரு வருஷமாது ஆகும். அவங்க சாதாரணமா எழுந்து நடக்கவே மூனு நாலு மாசம் மேல ஆயிடும். அதுலருந்து அவங்க முழுசா ரெகவர் ஆயி வர்றதுக்கு பத்துலருந்து பன்னிரண்டு மாசம் வரை தாராளமா தேவைப்படும். அது முடிஞ்சு அவங்க தெரபிக்கு ஃபிஸிகலி ரெடியானா தான் மேற்கொள்ள முடியும். ஆனா கண்டிப்பா பேச்சு மீண்டுவர்றதுக்கான வாய்ப்புகள் அதிகம் தான்” என்று கூறினார்.

 

சந்தோஷம் கொள்வதா துக்கப்படுவதா? என்று புரியாத நிலையில் மற்ற முவரும் தவிக்க,

 

“ஒரு வருஷத்துக்குத் தானே டாக்டர்? அவ பேசிதேம் புரியனுமுனு எனக்கு இல்ல. அவள நான் ஒருக்கா பாக்கனும். அதுக்கு மட்டும் என்னமாது பண்ணுங்களேம்” என்று மன்றாடலாய் அவன் கேட்க,

 

அவன் வருத்தம் கண்டு மனம் இறங்கியவர், “டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி நின்னு பாத்துட்டு வாங்க சார்” என்றார்.

 

அதுவே போதும் என்பதைப் போல் எழுந்தவன் வெளியேற, அவனை செவிலி ஒருவர் உள்ளே அழைத்துச் சென்றார்.

 

முடி மழிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தேறியதன் பலனாய் தலையில் கட்டிடப் பட்டிருக்க, முகத்திலும் கழுத்தில் சிராய்ப்புகளும் காயங்களும் குடிபுகுந்திருந்தன.

 

வலது கையில் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து கட்டிடப் பட்டிருக்க, இடது கையில் ஏற்பட்ட பெரிய பெரிய காயங்களுக்கும் தையிலிடப்பட்டு கட்டிடப் பட்டிருந்தது. இடது காலிலும் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து கட்டிடப் பட்டிருக்க, பலவகையான மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் வென்னீர் ஊற்றப்பட்ட அல்லிக்கொடிபோல் படுத்துக் கிடந்தாள்.

 

அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு அழுதிட வேண்டும் என்று வந்த எண்ணத்தை அவள் நிலை குறித்து எண்ணிக் கட்டுப்படுத்தியவனுக்கு, அவனையும் மீறி கேவல் வெளியே எட்டிப் பார்த்தது.

 

‘முழிச்சு வந்து என்னைய பார்வையாலயே நூறு கேப்பியேடி.. ஒனக்கு எப்படிடி சமாதானஞ் சொல்லப்போறேம்?’ என்று மனதோடு கேட்டுக் கொண்டவன், அதற்குமேல் தாக்குப்பிடிக்க இயலாமல் வெளியே சென்றுவிட்டான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. 😥😥😥😥😥 treatment முடிந்து பேச்சு வந்திடணும்… பாவம் ரெண்டு பேரும்…