Loading

அத்தியாயம் 37

 

“அப்படி என்ன தப்புலாம் செஞ்சிருக்க நீ?” என்று இளங்குமரன் கேட்கவும்,

 

“என்னோட ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து தண்ணி அடிச்சிருக்கேன். பிட்டு படம் பார்த்திருக்கேன். தம் அடிக்க முயற்சி செஞ்சிருக்கேன். இந்த வயசுல என்னலாம் டிரை பண்ணி பார்த்தா என்னனு தோணுமோ எல்லாமே செஞ்சிருக்கேன் டாக்டர். ஆனா மயிலு மேடம் செமினார் எடுத்த பிறகு இதெல்லாம் வாழ்க்கைல என்னிக்கும் செய்யக் கூடாதுனு நிறுத்திட்டேன் டாக்டர்” என்றான்.

 

“நிஜமா நிறுத்திட்டியாடா?” ஆச்சரியத்துடன் கேட்டான் இளங்குமரன்.

 

“பிராமிஸ் டாக்டர்! நமக்கு நல்ல குணமான ஒழுக்கமான சந்ததிங்க உருவாகனும்னா நாம ஒழுக்கமா கெட்டப் பழக்கம் இல்லாம இருக்கனும்னு மயிலு மேடம் சொன்னாங்க. என் அம்மா மாதிரி எனக்குப் பிறக்கப் போற குழந்தை இருந்துடக் கூடாது டாக்டர். குறைந்தபட்சம் நான் ஒழுக்கமா இருந்தா தானே என்னோட பிள்ளைங்க நல்ல பிள்ளையா இருப்பாங்க. எனக்கு நிவி மாதிரி பொண்ணு தான் வேணும். அவ ரொம்ப நல்லவ டாக்டர்!” என்றவன் சொன்னதைக் கேட்டு அமைதியாக அவனைப் பார்த்திருந்தான் அர்ஜூன்.

 

“என்னை நிறைய ஆச்சரியப்படுத்துறடா நீ” கனிவுடன் அவனை நோக்கியவனாய் கூறினான் இளங்குமரன்.

 

“சரி இப்ப உண்மையைச் சொல்லு, உங்கம்மாக்கு உன் லவ் பத்தி தெரிஞ்சிதுனா என்ன சொல்லுவாங்க?” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“இப்ப தான்டா நீ என் ரத்தம்னு நிரூபிச்சிருக்கனு பாராட்டுவாங்க” என்று சிரித்தவாறு வருண் கூறவும் வாய்விட்டுச் சிரித்தான் இளங்குமரன்.

 

“நிவி அப்பாகிட்ட அம்மா என்ன சொன்னாங்க டாக்டர்? அம்மா என்கிட்ட அதைப் பத்திலாம் எதுவும் சொல்லலை. ஆக்சுவலி அம்மாக்கிட்ட நான் பேசுறதை நிறுத்தி பல வருஷம் ஆகுது டாக்டர். அம்மா பழகுற ஆளை எனக்குப் பிடிக்காது டாக்டர். அப்பாவை விட அம்மாக்கு அந்தாளைத் தான் பிடிச்சிருக்குனு அவன் கூட லிவ் இன்ல வாழ்ந்துட்டு இருக்காங்க. அந்தாளை வச்சி தான் அம்மாக்கும் எனக்கும் சண்டை வந்து நான் பேசுறதை நிறுத்திட்டேன். எனக்கு என் அம்மாவைப் பிடிக்காது டாக்டர். எனக்கு அம்மான்னா அது என் பாட்டி தான். எங்க வீட்டுக்குப் போகவே எனக்குப் பிடிக்காது டாக்டர். அடிக்கடித் தோணும் சிங்கப்பூர்ல அப்பா கூட போய் இருந்துடலாமானு ஆனா பாட்டி பாவம். அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்களுக்காகத் தான் இங்கே இருக்கேன். இப்ப நிவிக்காகவும்” என்றான்.

 

வருண் கூறியதை எல்லாம் கேட்டு நெஞ்சம் கனத்துப் போனது இளங்குமரனுக்கு.

 

“இனி உனக்கு வாழ்க்கைல என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட வாடா வருண். நான் இருக்கேன் உனக்கு” உணர்ந்து உரைத்தான் இளங்குமரன்.

 

“தேங்க்ஸ் டாக்டர்! அந்த எண்ணத்துல தான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டிருக்கேன் டாக்டர். உங்களைப் பார்த்த நாள்ல இருந்தே நீங்க எனக்கு நல்லது தான் செய்வீங்கனு மனசு நம்புது டாக்டர்” என்றான் வருண்.

 

“உன் மனசோட நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்டா” அவனைத் தோளோடு அணைத்தவனாய் உரைத்தான் இளங்குமரன்.

 

*****

 

மூன்று மாதங்களுக்குப் பிறகு…

 

அன்று நிவேதாவின் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு இறுதித் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

 

தேர்வை எழுதி முடித்து விட்டு அந்த அறையின் வெளியே வராண்டாவில் வருணுக்காகக் காத்திருந்தாள் நிவேதா.

 

இன்னும் தேர்வு முடிய சில மணித்துளிகள் இருக்க, இன்னுமே எழுதிக் கொண்டிருந்தான் வருண்.

 

அடுத்த சில நிமிடங்களில் அவன் வெளியே வந்ததும், “வாடா உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றவளாய் வருணின் கைப்பற்றி வராண்டாவின் ஓரத்திற்கு இழுத்துச் சென்றாள்.

 

“இங்கே ஏன் கூட்டிட்டு வந்திருக்க நிவி? வெளியே மரத்துக்குக் கீழே போய் உட்கார்ந்து பேசலாம் வா” என்று அழைத்தான் வருண்.

 

“அய்யோ இல்லடா! அப்பா வாசல்லயே நின்னுட்டு இருப்பாங்க. நாம அங்க உட்கார்ந்தா அவங்களுக்குத் தெரியும். இப்பவே எங்கே என்னைக் காணும்னு தேடிட்டு இருப்பாரு. நம்ம காதல் அவருக்குத் தெரிஞ்ச நாள்லருந்து இப்படித் தான் என்னை மானிட்டர் பண்ணிட்டு இருக்காரு” என்ற நிவேதா,

 

“நான் நாளைக்கு பெங்களூருக்குப் போறேன்டா. அதை சொல்லத் தான் இங்கே உன்னைக் கூட்டிட்டு வந்தேன்” என்றாள்.

 

“என்னது பெங்களூருக்கா? என்ன திடீர்னு? இன்னும் பதினைஞ்சு நாள்ல நமக்கு டென்த் ஸ்டார்டன்ட் கிளாஸ் ஆரம்பிச்சிடுமே! அப்ப வந்துடுவ தானே” எனக் கேட்டான் வருண்.

 

“எனக்கே இன்னிக்கு தான்டா பெங்களூரு போறதைப் பத்தித் தெரியும். தாத்தா பாட்டி அங்க வரச் சொல்லிக் கூப்பிட்டுட்டே இருந்தாங்க. அதான் இப்ப லீவ்ல போய்ட்டு வந்துடலாம்னு பிளான் செஞ்சிருக்காங்க. அதனால கிளாஸ் ஆரம்பிக்கும் போது நான் வந்துடுவேன்டா” என்றாள் நிவேதா.

 

“பதினைஞ்சு நாள் உன்னைப் பிரிஞ்சி இருக்கனுமே நிவி” என்று சோகமாய் வருண் கூற,

 

“எனக்கும் அதான்டா கவலையா இருக்கு” என்ற நிவேதா,

 

“எங்கப்பா வேற ஃபோனை எடுத்துட்டு கொடுக்க மாட்டேங்கிறாரு. நான் புதுசா ஒரு மெயில் ஐடி கிரியேட் பண்ணி உனக்கு அனுப்புறேன்டா. அது மூலமா பேசிக்கலாம். அம்மாவோட போன்லருந்து வேறெந்த சோஷியல் மீடியா மூலமாவும் உன்னை கான்டேக்ட் செய்ய முடியாது. மெயில்னா ஸ்கூல் சம்பந்தமா ஏதோ மெயில் செய்றேன்னு சமாளிச்சிடுவேன்” என்று தன்னுடைய திட்டத்தை உரைத்தவள்,

 

பையிலிருந்து ஒரு பரிசு பொருளை எடுத்தவளாய் அவன் கையில் கொடுத்தாள்.

 

“அப்பா எனக்குக் கொடுத்த காசைச் சேர்த்து வச்சி வாங்கின கிஃப்ட் இது” என்றவாறு அந்தப் பரிசை அவளே பிரித்து அதிலிருந்த கைக் கடிகாரத்தை அவன் கையில் கட்டி விட்டாள்.

 

“நான் சொல்றது சினிமேட்டிக்கா தான் இருக்கும் ஆனாலும் இதுல இருக்க சின்ன முள் நான் பெரிய முள் நீனு நினைச்சு தான் இதை நான் வாங்கினேன். பத்திரமா வச்சிக்கோ” என்றவளாய் அவன் கைப் பற்றியவள்,

 

“சரிடா நான் வரேன். அப்பா தேடுவாங்க” என்றவாறு அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தவாறு கையசைத்தவளாய் விறுவிறுவெனச்  சென்றிருந்தாள்.

 

படபடக்கும் மனத்துடன் அர்ஜூன் முன் சென்று நின்றாள்.

 

“இவ்ளோ நேரம் எங்கே போன?” அர்ஜூன் கேட்க,

 

“பாத்ரூமுக்குப் போயிருந்தேன்ப்பா” என்றவளாய் வண்டியில் ஏறி அமர்ந்தாள் நிவேதா.

 

“வர வர வாய் திறந்தா பொய் தான் வருது உனக்கு” எனத் திட்டியவனாய் வண்டியை ஓட்டினான் அர்ஜூன்.

 

அவள் அவனுக்காகப் பரிசு வாங்கியது, இங்கே வருணிடம் கொடுத்தது என அனைத்தும் அர்ஜூனுக்குத் தெரியும். அந்தளவிற்கு தனது பார்வை வட்டத்திலேயே தான் அவளை வைத்திருந்தான் அர்ஜூன்.

 

பரிட்சையை எழுதி முடித்த வருண் நேராக இளங்குமரனின் இல்லத்திற்குச் சென்றான்.

 

“வாடா வருண்! பரிட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்க? சாப்பிட்டியா இல்லையா?” கேள்விகளை அடுக்கியவராய் இளங்குமரனின் தாய் அம்பிகா அவனை வரவேற்று அமரப் பணித்தார்.

 

இந்த மூன்று மாதங்களில் இளமயில் இளங்குமரனின் குடும்பத்தில் ஓர் உறுப்பினராய் மாறியிருந்தான் வருண்.

 

வருணின் குடும்பத்தைப் பற்றி மேலோட்டமாக தனது குடும்பத்தினரிடம் உரைத்த இளங்குமரன், அவனுக்கு மாரல் சப்போர்ட்டாக தான் இருக்கப் போவதாகவும் உரைத்திருந்தான்.

 

அதன் பிறகு இளங்குமரன் குடும்பத்தினர் அனைவரும் வருணிடம் அன்பாகப் பழகத் தொடங்கினர்.

 

அதிலும் அம்பிகாவை அவனது பாட்டியைப் போன்று பிடிக்கும் வருணுக்கு.

 

தினமும் பள்ளி முடிந்ததும் இளங்குமரனின் வீட்டிற்கு வருபவன், அம்பிகா செய்து கொடுப்பவற்றை சாப்பிட்டு விட்டு இளங்குமரனின் பிள்ளைகள் வள்ளி மற்றும் முத்துவுடன் கேரம் அல்லது செஸ் போன்று ஏதேனும் விளையாடி விட்டு ஆறு மணிக்கு மேல் தான் தன்னுடைய வீட்டிற்குச் செல்வான்.

 

வருண் இப்பொழுது வீட்டிற்குச் சென்ற நேரத்தில் வள்ளியும் முத்துவும் வீட்டில் தான் இருந்தனர். அவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்தனர்.

 

அம்பிகா கொடுத்த உணவை உண்டு முடித்தவனாய் கை கழுவி விட்டு வரவேற்பறையில் அமர்ந்த வருணிடம் வந்த வள்ளிமயில்,

 

“வருணு.. வருணு.. விளையாடலாம் வாடா?” என அழைத்தாள்.

 

“உன்னை விட பெரியவன் நான். என்னை டா போட்டு கூப்பிடுவியா? அண்ணானு சொல்லு! அப்ப தான் விளையாட வருவேன்” என்றான் வருண்.

 

“முடியாது போடா” என்றவள் உதட்டைச் சுழிக்க, அடிக்க கை ஓங்கியவனாய் அவளுக்குப் பயம் காட்ட வருண் முனைந்த நேரம், அவன் மண்டையிலேயே கொட்டியவளாய் ஓடியிருந்தாள் வள்ளிமயில்.

 

“அடியே குட்டி வாண்டு” என்று கத்தியவனாய் அவனைத் துரத்தினான் வருண்.

 

“என் தங்கச்சிய ஏன் துரத்துறீங்கண்ணா” என்றவாறு வருணைத் துரத்தினான் முத்து.

 

இப்படியே மூவரும் அந்த வீட்டையே வலம் வந்தனர்.

 

அந்நேரம் வீட்டினுள் வந்த இளமயில், “என்ன இங்கே விளையாட்டு? வீட்டுக்குள்ள விளையாடக் கூடாதுனு சொல்லிருக்கேனா இல்லையா?” என்று அவள் போட்ட சத்தத்தில் மூவரும் அமைதியாய் அவள் முன் வந்து நின்றனர்.

 

“மூனு பேரும் சாப்பிட்டீங்களா இல்லையா?” இளமயில் கேட்கவும், தனது அறையில் இருந்த வெளியே வந்த அம்பிகா, “உன் பிள்ளைங்க எங்கே திங்குதுங்க. நாள் முழுக்க விளையாட்டு தான்” என்று புகார் அளித்தார் அம்பிகா.

 

“நீ சாப்பிட்டியாடா வருண்?” எனக் கேட்டாள்.

 

“சாப்பிட்டேன் ஆன்டி” என்றவன், “நான் இவங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடட்டுமா?” எனக் கேட்டான்.

 

“அத்தை தட்டுல சாப்பாடு போட்டு வருண்கிட்ட கொடுங்க அத்தை” என்றவள் தனது சம்மதத்தைத் தெரிவிக்கவும்,

 

உணவு மேஜையில் இருவரையும் அமர வைத்தவனாய் ஊட்டி விட்டான் வருண்.

 

அவர்கள் மூவரையும் பாசத்துடன் பார்த்திருந்தாள் இளமயில்.

 

******

 

ஆயிரம் பத்திரம் சொல்லி மனைவியையும் மக்களையும் பெங்களூரில் விட்டு வந்தான் அர்ஜூன்.

 

ஒரு வாரம் அவர்களுடன் இருந்து விட்டு தான் சென்னைக்கு வந்தான்.

 

இந்த விடுமுறை நாட்களில் அன்றாடம் இளங்குமரனின் வீட்டிற்குச் சென்றிடுவான் வருண்.

 

நிவேதா அன்றாடம் மின்னஞ்சல் மூலம் அவளின் நாள்கள் அங்கு எப்படி கழிகிறது என்பதைப் பற்றியும், அங்கு அவள் செல்லும் இடங்களைப் பற்றியும் கட்டுரைப் போன்று செய்தி அனுப்பி வருணுடன் பேசிக் கொண்டு தான் இருந்தாள்.

 

பதினைந்து நாள்கள் கழித்து பத்தாம் வகுப்பு தொடங்கயிருந்த அந்நாளில் நிவேதாவைக் காணும் ஆசையுடன் பள்ளிக்குச் சென்றான் வருண்.

 

அவள் வருவாள் வருவாளென வாசலையே பார்த்தவாறு வகுப்பில் அமர்ந்திருந்தவனுக்கு அவள் வராதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

 

முந்தைய நாள் மின்னஞ்சலில் கூட, தான் சென்னைக்கு வரப் போவதாய் உரைத்திருந்தவள் இன்று வகுப்புக்கு வராது போனதில் கவலைக்குள்ளானான் வருண்.

 

அன்றைய வகுப்புகளை முடித்து விட்டு நேராக இளங்குமரன் மருத்துவமனைக்குச் சென்றவன், “இன்னிக்கு நிவி ஸ்கூலுக்கு வரதா சொல்லிருந்தா டாக்டர். ஆனா வரவேயில்லை. எனக்கு மெசேஜ்ஜூம் எதுவும் செய்யலை. உங்களுக்கு என்ன விஷயம்னு தெரியுமா டாக்டர்?” எனக் கவலையுடன் விசாரித்தான்.

 

“இப்ப அங்கே என்ன நடந்துட்டு இருக்குனு எனக்குத் தெரியாது வருண். ஆனா நிவேதா இனி படிப்பு முடிற வரைக்கும் சென்னைக்கு வர மாட்டானு மட்டும் தெரியும்” என்றான்.

 

அதிர்ந்து போனவனாய், “என்ன டாக்டர் சொல்றீங்க?” எனக் கேட்டான்.

 

“அவளை பெங்களூரு ஸ்கூல்ல சேர்க்கத் தான் அவங்க அப்பா அவளை அங்கே கூட்டிட்டுப் போனாங்க. இந்த ஐடியாவை கொடுத்ததே நான் தான்” என்று இளங்குமரன் கூறியதைக் கேட்டு எழுந்தே நின்று விட்டான் வருண்.

 

அத்தியாயம் 38 (நிறைவு)

 

“ஏன் டாக்டர் இப்படிப் பண்ணீங்க? நான் உங்களை எவ்ளோ நம்பினேன். நல்லவன் மாதிரி நடிச்சி என்னை ஏமாத்திட்டீங்கல” கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கக் கத்தினான் வருண்.

 

“வருண் ரிலாக்ஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா! உன் நல்லதுக்காகத் தான்டா இதை நான் செஞ்சேன்” என்றான் இளங்குமரன்.

 

“போங்க டாக்டர். என்னை ஏமாத்திட்டீங்க” என்று அழுதவாறு அவன் உரைக்க,

 

“இல்லடா! நிவேதாவை உன் கூட சேர்த்து வைக்கிறதுக்காகத் தான்டா நான் இப்படிச் செஞ்சேன். அர்ஜூனுக்கு நிவேதாவை உனக்கு கல்யாணம் செஞ்சி வைக்க விருப்பமில்லடா! இந்த நிலைமைல நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா அது அர்ஜூன் மனசுல வெறுப்பை தான் அதிகமாக்கும்” என்ற இளங்குமரன் அவனருகில் சென்று அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

இளங்குமரனை அணைத்துத் தோளில் சாய்ந்தவனாய் குலுங்கி அழுதான் வருண்.

 

“நிவேதாவைப் பார்க்காம நான் எப்படி இருப்பேன் டாக்டர்” என்று அழுதான் வருண்.

 

“நான் சொல்றதைக் கேட்டீனா அர்ஜூனே நிவேதாவை உனக்குக் கட்டி வைப்பாரு” என்று இளங்குமரன் கூறியதைக் கேட்டு வெடுக்கென நிமிர்ந்து பார்த்த வருண்,

 

“நிஜமாவா டாக்டர்? அதுக்கு நான் என்ன செய்யனும் டாக்டர்?” எனக் கேட்டான்.

 

“நீ நல்லா படிச்சி இந்தச் சமுதாயத்துல நல்ல பேரோட வாழனும்டா” என்றான் இளங்குமரன்.

 

அவன் புரியாது இளங்குமரனைப் பார்க்க, “டாக்டருக்குப் படிடா வருண். நான் உன்னை கைட் பண்றேன்” என்றான்.

 

அமைதியாக அமர்ந்து விட்டான் வருண்.

 

“வருண் தன்னுடைய சொந்த முயற்சினால படிச்சி பெரிய ஆளாகி இருக்கான்னு ஊரே புகழ்ந்து பேசுற அளவுக்கு நீ வளரனும்டா. டாக்டர் படிச்சி ஒரு உயிரை உன் கையால காப்பாத்தி பாரு! அவங்களுக்கு நீ தான் கடவுளா தெரிவடா” என்றான் இளங்குமரன்.

 

‘செய்றதுலாம் செஞ்சிட்டு நான் டாக்டர் ஆகனுமா?’ என்று எண்ணியவனாய் ஏதும் பேசாது குற்றம் சுமத்தும் பார்வையுடன் அமைதியாக இளங்குமரனைப் பார்த்தான் வருண்.

 

அவன் பார்வையின் பொருளை உணர்ந்த இளங்குமரன் பெருமூச்சு விட்டவனாய், “நிவேதா உன் கூட இல்லைனாலும் உன்கிட்ட பேசிட்டு தானேடா இருக்கா?” என்று சமாதானம் செய்ய முனைந்தான்.

 

“ஆனா இன்னைக்கு முழுக்க அவகிட்ட இருந்து மெசேஜ் வரலை டாக்டர்” என்றான் வருண்.

 

“வரும் வருண்! ஆனா நிவேதாவை நீ கல்யாணம் செஞ்சிக்கனும்னா நீ டாக்டர் ஆகனும்” என்று அழுத்தமாய் உரைத்தான் இளங்குமரன்.

 

“சரி டாக்டர். நான் டாக்டருக்குப் படிச்சா எனக்கு நிவேதா கிடைப்பானா நான் படிக்கிறேன் டாக்டர்” என்றவன் சோகமாய் கிளம்பிச் சென்றான்.

 

வருண் கிளம்பிச் சென்றதும் அர்ஜூனுக்கு அழைத்தான் இளங்குமரன்‌.

 

அர்ஜூன் அழைப்பையேற்றதும், “நீங்க எங்கே இருக்கீங்க அர்ஜூன்? பெங்களூர்ல எல்லாம் ஓகேவா” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“நான் சென்னைல தான் இருக்கேன் டாக்டர். நிவேதா நேத்து சென்னைக்கு வந்தே ஆகனும்னு அடம்பிடிச்சானு அர்ச்சனா சொன்னா! அப்புறம் அழுதுட்டே தூங்கிட்டதா சொன்னா! இன்னிக்கு பசங்களை பெங்களூர் டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டுப் போகச் சொல்லிருக்கேன்” என்றான் அர்ஜூன்.

 

“அப்புறம் ஒரு மன்த் டிரிப்பா வெளியூர் எங்கேயாவது கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். அப்ப தான் இவளை நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்” என்றான் அர்ஜூன்.

 

“சரி அர்ஜூன். பார்த்துக்கோங்க” என்றவனாய் இணைப்பைத் துண்டித்தான் இளங்குமரன்.

 

இளங்குமரன் வருணிடம் நெருக்கத்துடன் பழகுவது அர்ஜூனுக்குத் தெரியாது என்பதால் வருணைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அவன்.

 

அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வருண் இளங்குமரன் வீட்டிற்கோ மருத்துவமனைக்கோ வரவேயில்லை.

 

தன் மீது கோபமாக இருப்பதால் அவன் வரவில்லை என எண்ணிய இளங்குமரன், அவனாக வரட்டுமெனத் தொடர்பு கொள்ளாது இருந்தான்.

 

ஆனால் மேலும் ஒரு வாரமாகியும் அவன் வராது போக, அம்பிகாவும் இளமயிலும் அவனை அழைத்துப் பேசுமாறு இளங்குமரனை வற்புறுத்தினர்.

 

வருணின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பார்த்தான்.

 

அந்தத் கைப்பேசி எண் இப்பொழுது உபயோகத்தில் இல்லை என்றே வந்தது.

 

குழம்பிப் போனவனாய் மருத்துவமனையில் அமர்ந்திருந்தான் இளங்குமரன்.

 

‘என்னவாகியிருக்கும்? எங்கே போயிருப்பான் இவன்?’ என்று யோசித்தவாறு அமர்ந்திருந்த இளங்குமரன் முன்பு வந்து நின்றான் அர்ஜூன்.

 

சோர்ந்து களைந்த முகத்துடன் வந்து அமர்ந்த அர்ஜூனைப் பார்த்து, “என்னாச்சு அர்ஜூன்?” எனக் கேட்டான்.

 

“ஒரு வாரமா வருண் அவளுக்கு மெசேஜ் எதுவும் செய்யலையாம். நான் தான் வருணை என்னவோ பண்ணிட்டேன்னு சண்டைப் போட்டு என்கிட்ட பேச மாட்டேங்கிறா நிவேதா” என்று சோகத்துடன் உரைத்தான் அர்ஜூன்.

 

“நிவேதா பெங்களூர்ல தானே இருக்கா?” இளங்குமரன் கேட்க,

 

“ஆமா அங்கே அர்ச்சனாகிட்டயும் பேசுறது இல்ல, எனக்கும் கால் செஞ்சி பேசுறது இல்ல” என்றான்.

 

“ஆக்சுவலி வருண் பேசாததை நினைச்சு நீங்க சந்தோஷம் தானேப் படனும் அர்ஜூன்” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“எனக்கு அவன் பேசாம போனதுல சந்தோஷம் தான் ஆனா என் பொண்ணை எப்படி நார்மல் ஆக்குறது, இதுலருந்து எப்படி வெளியே கொண்டு வர்றதுனு தெரியாம குழம்பிப் போயிருக்கேன் டாக்டர்” என்றான் அர்ஜூன்.

 

இளமயிலின் கைப்பேசிக்கு அழைத்து அர்ஜூன் கூறியதை உரைத்தவனாய் இளமயிலை அங்கே அறைக்கு அழைத்தான் இளங்குமரன்‌.

 

அறைக்குள் நுழைந்த இளமயில், “வருணுக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள்.

 

“தெரியலை மயிலு! எப்படியோ அவன் நிவேதாகிட்டப் பேசாம இருக்கிறதுல அர்ஜூனுக்கு சந்தோஷம் தான். இப்ப நான் எதுக்கு உன்னைக் கூப்பிட்டேனா, நிவேதாவை எப்டி நார்மல் ஆக்குறதுனு சொல்லு. அவ அர்ச்சனா அர்ஜூன் ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரு வாரமா பேசாம இருக்காளாம்” என்றான்.

 

சிறிது நேரம் யோசித்த இளமயில், “நிவேதாவை அங்கே ஸ்கூல்ல சேர்த்துட்டீங்களா அர்ஜூன்?” எனக் கேட்டாள்.

 

“சேர்த்துட்டேன். ஆனா இன்னும் அவ ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கலை” என்ற அர்ஜூன்,

 

“என்னால தான் வருண் அவகிட்ட பேசலைனு நம்புறா மயிலு. நான் அவளை ஏமாத்தி பெங்களூருக்கு அனுப்பின மாதிரி வருணையும் என்னமோ பண்ணிட்டேன்னு நம்புறா மயிலு. அதுக்கு அவ அம்மாவும் உடந்தைனு சொல்லி எங்க யார்க்கிட்டயும் பேச மாட்டேங்கிறா” என்றான்.

 

“மொதல்ல வருண் எங்க இருக்கான்? என்ன செய்றான்னு நாம தெரிஞ்சிக்கனும் அர்ஜூன். அப்ப தான் நிவேதாகிட்ட சொல்லி நம்ப வைக்க முடியும். அவன் ஏன் அவகிட்டயும் பேசலைனு கண்டுபிடிக்கனும்” என்றாள் இளமயில்‌.

 

“ம்ப்ச் மயிலு நானே தலைக்கு வந்தது தலைப்பாகையோட போய்டுச்சுனு இப்ப தான் நிம்மதியா இருக்கேன். இப்ப போய் எதுக்கு நாம திரும்பவும் அந்தப் பையனை நிவேதா வாழ்க்கைக்குள்ள கொண்டு வரனும்னு சொல்ற?” எனக் கேட்டான் அர்ஜூன்.

 

“உங்க பொண்ணுக்கு உங்க மேல நம்பிக்கையை வர வைக்கிறதுக்கு வேற வழி இல்லை அர்ஜூன்” என்றாள் இளமயில்.

 

சட்டென எழுந்த அர்ஜூன், “இங்கே வந்தா ஏதாவது வழி கிடைக்கும் நினைச்சா, இருக்கிற பிரச்சனையைப் பெரிசாக்கத் தான் வழிச் சொல்ற நீ மயிலு” என்றவனாய் அங்கிருந்து சென்றிருந்தான் அர்ஜூன்.

 

பெருமூச்சுடன் இளங்குமரனைப் பார்த்த இளமயில் பதட்டத்துடன், “வருணுக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள்.

 

உதட்டைப் பிதுக்கியவனாய், “தெரியலை மயிலு. அவன் நம்பர் டஸ் நாட் எக்ஸ்சிஸ்ட்னு வருது” என்றான்.

 

“அவன் வீட்டு அட்ரஸ் தெரியுமா?” எனக் கேட்டாள்.

 

இல்லை என்றான் இளங்குமரன்.

 

“சரி வாங்க அவன் ஸ்கூல்ல போய் விசாரிக்கலாம். மீதியிருக்க பேஷன்ட்ஸ் எல்லாரையும் ஜூனியர் டாக்டர்ஸ் பார்த்துக்கச் சொல்லிடலாம். வாங்க போகலாம் மச்சான்” என்று அவசரப்படுத்தினாள் இளமயில்.

 

இருவரும் கிளம்பியவர்களாய் வருண் படித்த பள்ளிக்குச் சென்றனர்.

 

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சென்று வருணைப் பற்றி விசாரித்தனர். அவரிடம் ஏதும் தகவல் இல்லை.

 

வருணின் வகுப்பாசிரியரை அழைத்து விசாரித்தார் தலைமை ஆசிரியர்.

 

“ஒரு வாரமா வருண் கிளாஸூக்கு வரலை மேடம்” என்றார் அந்த வகுப்பாசிரியர்.

 

இப்பொழுது இளங்குமரன் இளமயில் இருவருக்குமே பயம் பீடித்துக் கொண்டது.

 

தன் மீது கோபம் கொண்டு அவன் வரவில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த இளங்குமரனுக்கு பதட்டமாகிப் போனது.

 

அச்சமயம் அங்கு வந்த அந்தப் பள்ளியின் அலுவலர் ஒருவர், “வருணோட அப்பா நேத்து தான் வந்து டிசி வாங்கிட்டு போனாரு! உங்களுக்கு தெரியாதா மிஸ்” வகுப்பாசிரியரிடம் கேட்டார்.

 

“தெரியாது சார். நேத்து நான் லீவ். யாரு டிசி ரெடி பண்ணிக் கொடுத்தாங்கனு தெரியலையே” என்றார் அவர்.

 

“நான் தான் வருண் அப்பாக்கு டிஜிட்டல் சர்டிபிகேட் அனுப்பி வச்சேன். அவர் சிங்கப்பூர்ல இருக்காராம். பையனையும் சிங்கப்பூருக்கு கூட்டிட்டு போறதா சொன்னாரு” என்றார் அந்த அலுவலர்.

 

அதற்குள் வேறு சில ஆசிரியர்களுக்கு அழைத்துப் பேசிய தலைமை ஆசிரியர், நேத்து வருணின் டிசியை முன்னின்று செய்து கொடுத்த ஆசிரியரை அழைத்தார்.

 

“சாரி டாக்டர். நானும் ஒன் வீக்கா லீவ்ல இருந்தனால ரீசண்ட்டா டிசி வாங்கினவங்க பத்தி எனக்குத் தெரியலை” என்ற தலைமை ஆசிரியர்,

 

“நேத்து டிசி ரெடி செஞ்சி கொடுத்த டீச்சர் இன்னிக்கு ஹாப் டே லீவ் சொல்லிருந்தாங்க. இப்ப தான் ஸ்கூலுக்கு வந்துட்டு இருக்காங்களாம். அவங்க வந்ததும் விசாரிக்கலாம்” என்றார்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நின்ற அந்த ஆசிரியரிடம் விசாரித்தனர்.

 

“வருணோட அப்பா நேத்து வந்தாரு. வருணோட அம்மாவும் பாட்டியும் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்களாம். கடவுள் அருளால தான் வருண் எப்படியோ தப்பிச்சிட்டான்னு சொல்லி கண் கலங்கினாரு. அவங்க பையனை அவர் கூட சிங்கப்பூருக்கு கூட்டிட்டுப் போறதா சொல்லி தான் டிசி வாங்கினாரு”

 

அந்த ஆசிரியர் கூறிய செய்தியில் இளமயில் இளங்குமரன் இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அங்கே தலைமை ஆசிரியரிடம் நன்றி கூறி விடைபெற்றவர்களாய் வெளியே வந்து அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தனர்.

 

“எப்படியோ அவன் அவங்கப்பாக்கிட்ட சேர்ந்துட்டதுல சந்தோஷம் தான் எனக்கு மயிலு” என்ற இளங்குமரன்,

 

“ஆனா ரெண்டு பேரை இழந்து இது நடந்திருக்க வேண்டாம்” என்று கவலையுடன் உரைத்தான்.

 

இளமயிலும் சோகத்துடன் தலையசைத்தாள்.

 

“இனி என்னாகும் இளா மச்சான். சிங்கப்பூருக்குப் போன பிறகு வருண் நிவேதாகிட்ட பேசுவானா? நிவேதா அவளோட அப்பா அம்மாகிட்ட நார்மலா பேசனும்னா வருண் அவகிட்ட பேசனும்”

 

“அவனாலலாம் அவகிட்ட பேசாம இருக்க முடியாது. சிங்கப்பூர் போனதும் பேசவானா இருக்கும்” என்றான் இளங்குமரன்.

 

“இந்த பையன் நமக்காவது போன் செஞ்சி சொல்லிருக்கலாம்ல” என்று இளமயில் ஆதங்கத்துடன் கூற,

 

“ஆக்சிடெண்ட்னு சொல்றாங்களே மயிலு. அவனுக்கு அடிப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கு தானே” என்றான் இளங்குமரன்.

 

“ஹ்ம்ம் சிங்கபூருக்குப் போன பிறகாவது நம்மளை ஞாபகம் வச்சி கூப்பிட்டு பேசுறானானு பார்ப்போம்” என்றவளாய் அங்கிருந்து கிளம்பினாள் இளமயில்.

 

ஆனால் அதன் பிறகு வருணிடமிருந்து யாருக்கும் எவ்வித செய்தியோ அழைப்போ வரவேயில்லை. வருணைப் பற்றிய எந்த விபரமும் அதன் பிறகும் எவருக்கும் தெரியவே இல்லை.

 

அடுத்த சில வருடங்களில் நிவேதாவின் வாழ்வில் வந்து போனவனாய் மட்டுமே அவள் நினைவினில் இருந்தான் வருண்.

 

— நிவேதாவின் கல்யாணக் கதை புதிய கதையாக தொடரும் அன்பர்களே!

 

வருணுக்கு என்னாயிற்று? அதன் பிறகு நிவேதாவும் வருணும் வாழ்வில் சந்தித்தார்களா?

 

அவர்களின் வாழ்வைப் பற்றிய கதையாக அடுத்த கதை இருக்கும்.

 

நிவேதா யாரைக் கல்யாணம் செய்வாள் என்றும் அக்கதையில் தெரிய வரும்.

 

இவை எல்லாத்துக்குமான பதிலாகப் புதிய கதையுடன் வருகிறேன்.

இக்கதையைத் தொடர்ந்து வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏 😍

 

அன்புடன்,

நர்மதா சுப்ரமணியம்

Click on a star to rate it!

Rating 2.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்