
அத்தியாயம் 35
அந்த மென்பொருள் நிறுவனத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் அர்ஜூன்.
வருணின் முகநூல் மூலமாக அவனது தாயின் முகநூல் கணக்கைக் கண்டுபிடித்து அதன் மூலம் அவரின் பணியிடத்தைக் கண்டுபிடித்திருந்தான் அர்ஜூன்.
வருணின் தாயிடம் என்னவெல்லாம் பேச வேண்டுமென மனத்தில் குறித்துக் கொண்டவனாய் அமர்ந்திருந்தான் அர்ஜூன்.
அச்சமயம் விரிந்த கூந்தலும் ஒல்லியான தேகமுமாய் ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்த பெண்ணொருத்தி வரவேற்பாளினியிடம் சென்று, “என்னைப் பார்க்க யாரோ வந்திருக்கிறதா சொன்னாங்க.. யாரது?” என்று கேட்டாள்.
அந்த வரவேற்பாளினி அர்ஜூனைக் காண்பிக்கவும், அர்ஜூனிடம் வந்து நின்றாள் அப்பெண்.
‘இவங்க என்ன santoor அம்மா மாதிரி இவ்ளோ யங்கா இருக்காங்க’ என்று இளமையாகத் தெரிந்த அந்த அம்மாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டவனாய் எழுந்து நின்ற அர்ஜூன், “ஹாய் ஐம் அர்ஜூன்! சேர்மேன் ஆஃப் அருஞ்சுனை ரெசார்ட்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஹாய் ஐம் மாலதி! ஹச் ஆர் ஹெட்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அப்பெண், “யெஸ் ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ (How can I help you)” எனக் கேட்டாள்.
“உங்ககிட்ட வருண் பத்தி பேசனும். வெளில போய் பேசலாமா?” எனக் கேட்டான் அர்ஜூன்.
அவன் அவ்வாறு உரைத்ததும் அந்தப் பெண் பதட்டமடைவார் குழப்பமடைவார் என்றெல்லாம் எண்ணியிருந்த அர்ஜூனுக்கு ஆச்சரியம் தரும் வகையில் வெகு இயல்பாய், “அவனைப் பத்தி என்ன பேசனும்” எனக் கேட்டாள்.
“உங்க பையன் என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல தான் படிக்கிறான்” அழுத்தமான குரலில் உரைத்தான் அர்ஜூன்.
“ஓ சோ வாட்” அத்தனை அலட்சியத்துடன் கேட்டிருந்தாள் மாலதி.
‘என்ன இந்தம்மா இப்படிப் பேசுது’ என்று குழம்பிப் போனான் அர்ஜூன்.
எப்படியேனும் தான் பேச வந்ததை பேசித் தான் ஆக வேண்டும் என்று எண்ணியவனாய், “உங்க பையன் என் பொண்ணை லவ் பண்றதா போக்கிரித்தனம் செஞ்சிட்டு இருக்கான். அவனைக் கண்டிச்சி வைங்கனு சொல்லத் தான் வந்தேன்” என்று கண்டிப்பான குரலில் உரைத்தான் அர்ஜூன்.
அர்ஜூனை ஏளனத்துடன் மேலும் கீழுமாய் பார்த்த மாலதி, “லவ் தானே பண்ணான். ரேப் பண்ணலையே” என்று கேட்டக் கேள்வியில் நெஞ்சம் நடுங்கிப் போனது அர்ஜூனுக்கு.
“ஹௌ டேர் யூ டூ டாக் லைக் திஸ்” என்று அந்தப் பெண்ணை அடிக்கவே பாய்ந்திருந்தான் அர்ஜூன்.
ஓங்கிய கரத்துடன் ஓரடி முன்னே வந்தவனைப் பார்த்து அரண்டு போனவளாய் ஓரடி பின்னே காலடி எடுத்து வைத்திருந்தாள் மாலதி.
இக்காட்சியைக் கண்டு பயந்த அந்த அலுவலக வரவேற்பாளினி காவலாளிக்கு அழைத்திருந்தாள்.
ஆனாலும் அசராமல், “ஆளு தான் பார்க்க மார்டன் மேன் நீ! திங்கிங்லாம் பழைய பஞ்சாங்கமால இருக்கு! லவ் பண்றதை எல்லாம் பெரிசா சொல்ல வந்துட்ட” என்று அவனை வெறுப்பேற்றினாள் மாலதி.
அதற்குள் அந்த அலுவலகத்தின் காவலாளி வந்து அவனை வெளியே செல்லுமாறு கூற, அப்பொழுது உள்ளே வந்த அலுவலகப் பணியாளர் ஒருவர் என்ன பிரச்சனை என வரவேற்பாளினி மூலமாகக் கேட்டறிந்து கொண்டவராய், கடுங்கோபத்துடன் வெளியே வந்த அர்ஜூனின் பின்னேயே வந்தார்.
“என்னங்க சார்? நீங்க எவ்ளோ இந்த லேடிக்கிட்ட ஏமாந்தீங்க?” என்று அர்ஜூனை நிறுத்தி வைத்துக் கேட்டார்.
அர்ஜூன் புரியாது விழி இடுங்க அவரைப் பார்க்க, “என்ன சார் அப்படிப் பார்க்கிறீங்க? இந்தப் பொம்பளைக் கிட்ட ஏமாந்தவங்க தான் இது வரைக்கும் இப்படி வந்து சண்டைப் போட்டிருக்காங்க. அதான் கேட்குறேன்” என்றார்.
அவரின் பேச்சில் கடுப்பானவனாய், “ஹலோ நான் ஒன்னும் யார்கிட்டயும் ஏமாறலை. அவங்க பையனைப் பத்திப் புகார் சொல்ல தான் நான் வந்தேன்” என்றான்.
“ஓ” என்ற அந்நபர், “இந்த லேடியே ஒழுக்கம் கிடையாது. இதுல இந்தம்மாகிட்ட அவங்க பையன் பத்தி புகார் சொல்ல வந்திருக்கீங்களே! ஆம்பிளைங்களை மயக்கி ஏமாத்தி பணம் பறிக்கிற ஆளு இந்த லேடி! இவங்களுக்கு இல்லீகல் அஃபையர் இருந்தனால தான் இவங்க புருஷன் இவங்களை டிவோர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு! இனி யார்க்கிட்டயும் பேசுறதுக்கு முன்னாடி அவங்களோட பேக்ரவுண்ட்டை விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டு வந்து பேசுங்க சார்” என்று அறிவுரை கூறியவராய் அங்கிருந்து சென்றிருந்தார் அந்நபர்.
பேரதிர்வுடன் தனது மகிழுந்தில் ஏறியமர்ந்த அர்ஜூன் தலையில் கை வைத்தவனாய் அமர்ந்து விட்டான்.
“என்ன பொம்பள இவ” என்று வாய் விட்டே புலம்பியவன்,
“இவளே இப்படி பஜாரியா இருக்கானா இவளோட பையன் மட்டும் என்ன ஒழுக்கமானவனாவா இருப்பான். லவ்ன்ற பேருல ஏமாத்துறவங்க தான் இப்ப நிறைய பேரு இருக்காங்கனு சொன்னா எங்க கேட்குறா இந்த நிவிப் பொண்ணு! நிவியோட காதலை இதுக்கு மேல நான் தொடர விட மாட்டேன்” என்று தன்னை மீறி கோபத்துடன் கர்ஜித்தவனாய் அங்கிருந்து மகிழுந்தை எடுத்தவன் நேராக இளங்குமரனின் மருத்துவமனைக்குச் சென்றான்.
அதே நேரம் அங்கே இளமயிலின் வீட்டிற்குச் சென்றிருந்தாள் அர்ச்சனா.
மொட்டை மாடியில் பின் மாலை நேரத்து வானத்தை ரசித்துப் பார்த்தவாறு தேநீர் அருந்தியவளாய் நின்றிருந்தனர் அர்ச்சனாவும் இளமயிலும்.
அர்ச்சனா அன்று காலை வீட்டினில் நடந்ததை உரைத்தவளாய், “ரொம்ப பயமா இருக்கு மயிலு! இந்த நிவி பொண்ணு பெங்களூருக்கு வர மாட்டேன்னு அடம்பிடிச்சா என்ன பண்றது?” என்று கவலையுடன் கேட்டாள்.
அர்ச்சனா கூறியதை அமைதியாகக் கேட்டிருந்த இளமயில் சற்று நேரம் சிந்தித்தவளாய், “அர்ச்சனா நிவி வேற எதுவும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி கத்துக்குறாளா?” எனக் கேட்டாள்.
“இல்ல மயிலு! பெங்களூர்ல பாட்டு, பரத நாட்டியம் டான்ஸ் கிளாஸ்லாம் போய்ட்டு இருந்தா! இங்கே வந்த பிறகு எந்த கிளாஸூக்கும் அவ போகலை. நாங்க கேட்டதுக்கு டென்த் முடிச்சிட்டு போறதா சொல்லிட்டா” என்றாள் அர்ச்சனா.
“நிவி செம்ம ஷார்ப் அண்ட் ஆக்டிவ் கேர்ள் அர்ச்சனா. அவளுக்கு பப்ளிக் எக்ஸாம்லாம் ஜூஜூபி மாதிரி. அவளோட மைண்ட்டை எம்டியா விடக் கூடாது. அப்படி விட்டதனால தான் இப்படிலாம் சுத்திட்டு இருக்கா! அவளை ஏதாவது மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளாஸ்கு அனுப்புங்க. இல்லனா பெயிண்ட்டிங் ஆர்ட்ஸ் மாதிரி எதுக்காவது அனுப்புங்க. நிவேதா எப்பவும் பிசியா இருக்க மாதிரி ஏதாவது ஆக்டிவிட்டி செய்ற மாதிரி பிளான் பண்ணி அனுப்புங்க அர்ச்சனா” என்ற இளமயில்,
“பெங்களூருக்கு ஸ்கூல் மாறும் போது நிவேதாகிட்ட இளா மச்சானை பேச வைக்கலாம் அர்ச்சனா. அவரு சொன்னா அவ கேட்பானு நம்பிக்கை இருக்கு” என்றாள்.
பெருமூச்சுடன் சரி என்ற அர்ச்சனா மேலும் சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
அம்பிகா மருத்துவமனைக்குச் சென்ற அர்ஜூன் பிரமைப் பிடித்தது போல் வரவேற்பறையில் இரவு பத்து மணி வரை அப்படியே அமர்ந்திருந்தான்.
மகளின் வாழ்வை எண்ணி தந்தையாய் பெருத்த கவலைக்குள்ளானான் அர்ஜூன்.
எப்படியேனும் மகளை இந்தப் படுகுழியில் விழுந்து விடாமல் காப்பாற்றி விட வேண்டுமென்று தீர்மானமாய் இருந்தான் அர்ஜூன்.
அன்றைக்கு வந்திருந்த அனைத்து நோயாளிகளையும் பார்த்து விட்டு வெளியே வந்த இளங்குமரன், வரவேற்பறையில் அமர்ந்திருந்த அர்ஜூனைப் பார்த்து, “ஹே அர்ஜூன் நீங்க எப்ப வந்தீங்க? ஏன் இங்கேயே உட்கார்ந்திருக்கீங்க? நேரா உள்ளே வந்திருக்கலாமே” என்றவனாய் அவனருகே சென்றான்.
“இல்ல நீங்க பிசியா இருந்தீங்க. டிஸ்டர்ப் செய்ய வேண்டாமேனு உட்கார்ந்துட்டேன் டாக்டர்” என்றான் அர்ஜூன்.
“சரி உள்ளே வாங்க” என்றவனாய் அறைக்குள் சென்ற இளங்குமரன் தனக்குப் பின்னேயே வந்த அர்ஜூனைப் பார்த்து, “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” எனக் கேட்டான்.
அர்ஜூன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனாய் வருணின் தாயைப் பார்த்தது முதல் அங்கு நடந்தது வரை அப்படியே உரைத்திருந்தான்.
இளங்குமரனுக்குமே பேரதிர்ச்சியாய் இருந்தது.
“ஆனாலும் யாரோ ஒருத்தர் சொல்றதை வச்சி மட்டும் வருண் அம்மாவைத் தப்பா நினைக்க முடியாதே அர்ஜூன். உங்கக்கிட்ட பேசினவருக்கு வருண் அம்மா மேல ஏதாவது பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ இருந்து அவங்களை பழி வாங்க உங்ககிட்ட அவர் தப்பா போட்டுக் கொடுத்திருக்கலாம் தானே” என்றான் இளங்குமரன்.
“ஆனாலும் அந்த லேடி வாயில இருந்து வந்த வார்த்தையைக் கேட்ட பிறகு எப்படி அவங்களை நல்லவங்களா நினைக்கத் தோணும் டாக்டர். எனக்கு நெஞ்சே நடுங்கிப் போச்சு டாக்டர். இனி என்னால நிவியை வருண்கிட்ட பேச விட முடியாது. இப்பவே அவளை ஸ்கூலை விட்டு நிறுத்திடலாமாங்கிற அளவுக்கு யோசிச்சிட்டு இருக்கேன்” அத்தனை கோபத்துடன் உரைத்தான் அர்ஜூன்.
“அப்படிலாம் நினைக்காதீங்க அர்ஜூன். பொண்ணு படிப்பு கெட்டுப் போய்டும். மூனு மாசம் தானே இருக்கு” என்ற இளங்குமரன்,
“நாம வேணா ஒன்னு செய்யலாம். ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வச்சி வருணோட ஆக்டிவிட்டீஸை வாட்ச் பண்ண சொல்லலாம். அவன் தப்பான பையனா இருந்து அவனால நிவேதாவுக்குப் பாதிப்பு வரும்னு ஊர்ஜிதமா தெரிஞ்சிதுனா ஸ்கூலுக்கு அனுப்பாம இந்த வருஷ படிப்பை முடிக்கிற மாதிரி வேற ஏதாவது மாத்து வழி இருக்கானு பார்க்கலாம்” என்றான்.
“இது நல்ல ஐடியா டாக்டர். உங்களுக்குத் தெரிஞ்ச டிடெக்டிவ் ஏஜென்சி எதுவும் இருக்கா இல்லை நான் விசாரிக்கவா?” எனக் கேட்டான் அர்ஜூன்.
“என்னோட சீனியர் டாக்டருக்குத் தெரிஞ்ச டிடெக்டிவ் ஆபிசர் ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட நான் பேசுறேன்” என்ற இளங்குமரன்,
“நாம பிளான் செய்றதுலாம் சரி தான். ஆனா இனி ஸ்கூலுக்குப் போகக் கூடாதுனு சொன்னா, நிவேதா கேட்பாளா?” எனக் கேட்டான்.
“கேட்கலைனா கேட்க வைப்பேன் டாக்டர். இதுக்கு மேல அவளை ஃப்ரீயா விடுறதா இல்லை டாக்டர். இன்னிக்கு காலைலயே இனி போன் யூஸ் செய்யக் கூடாதுனு சொன்னதுக்கு அடம்பிடிக்கத் தான் செஞ்சா” என்றவனாய் காலை நடந்ததை உரைத்தான் அர்ஜூன்.
அமைதியாக அர்ஜூன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த இளங்குமரன், “நானுமே நேத்து இதைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன் அர்ஜூன். மூனு மாசம் கழிச்சி எப்படி நிவேதாவை சமாதானம் செஞ்சி பெங்களூருக்கு அனுப்ப போறீங்களோனு நினைச்சேன். அதுக்கு ஒரு ஐடியா தோணுச்சு எனக்கு” என்றதும்,
“என்ன ஐடியா டாக்டர்?” என்று ஆர்வத்துடன் கேட்டான் அர்ஜூன்.
“நிவேதாவுக்கு எக்ஸாம் முடிஞ்ச மறுநாள் ஸ்கூல் லீவுக்கு பெங்களூரு தாத்தா பாட்டி வீட்டுக்கு வரச் சொன்னாங்கனு சொல்லி அனுப்பி விட்டுருங்க. அதுக்குப் பிறகு நிவேதாவை இங்கே கூட்டிட்டே வராதீங்க. அப்படியே அங்கே வேற ஸ்கூல்ல சேர்த்து விட்டிருங்க. இங்கே டிசி வாங்குற வேலையை நீங்க பாருங்க. அங்கே வேற ஸ்கூல்ல சேர்த்து விடுற வேலையை அர்ச்சனா பார்க்கட்டும்” என்று இளங்குமரன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்தவனாய்,
“நல்ல ஐடியா டாக்டர்” என்றான் அர்ஜூன்.
“நீங்க நாளைக்கு டிடெக்டிவ் ஆபிசர்கிட்ட பேசிட்டு சொல்லுங்க டாக்டர்” என்றவனாய் விடைப்பெற்று கிளம்பினான் அர்ஜூன்.
அத்தியாயம் 36
வருணின் தாயைத் தான் பார்த்ததுக் குறித்தும் துப்பறியும் நிபுணர் மூலம் வருணையும் அவனது குடும்பத்தினரைப் பற்றியும் விசாரிப்பது குறித்தும் அர்ச்சனாவிடம் ஏதும் கூறவில்லை அர்ஜூன்.
ஆனால் மறுநாளில் இருந்து நிவேதாவை வெளியே எங்கும் தனியே செல்ல அனுமதிக்கவே இல்லை அவன்.
காலை அவள் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், இனி தானே காலை அவளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாகவும், மாலை தானே அழைத்து வருவதாகவும் கூறி விட்டான்.
நிவேதா தனது மிதிவண்டியிலேயே செல்வதாக அடம்பிடித்த போதும் விடவேயில்லை. மிரட்டி உருட்டி தன்னுடனேயே அழைத்துச் சென்றான்.
காலை பள்ளியில் சரியாக பள்ளி பிரார்த்தனை கூடுகைத் தொடங்கும் நேரத்தில் அவளை உள்ளே விடுபவன், மாலை பள்ளி விடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சென்று காத்திருக்கத் தொடங்கினான்.
அவனைப் பொறுத்த வரையில் பள்ளி இடைவேளை நேரத்தைத் தவிர வேறெந்த நேரத்திலும் வருணிடம் அவள் பேசவும் பழகவும் நேரம் வழங்கக்கூடாது என்று திட்டமிட்டுச் செய்தான் அர்ஜூன்.
அந்த இடைவேளை நேரத்திலும் கூட, பெற்றோர்களை உள்ளே அனுமதிப்பார்களா என்று விசாரித்து விட்டு அது சாத்தியமில்லை என்றறிந்த பின்பு தான் இடைவேளை நேரம் மட்டும் பேசிக் கொள்ளட்டுமென விட்டு விட்டான்.
இவ்வாறாக ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் துப்பறியும் நிபுணரிடம் இருந்து அறிக்கை வந்துவிட்டதாகக் கூறி அர்ஜூனை தனது மருத்துவமனைக்கு அழைத்தான் இளங்குமரன்.
“என்ன சொன்னாரு அந்த ஆபிசர்?” எனக் கேட்டவனாய் இளங்குமரனின் முன்பு அமர்ந்திருந்தான் அர்ஜூன்.
அந்த அறிக்கையை அர்ஜூனிடம் கொடுத்துப் படிக்கக் கூறினான் இளங்குமரன்.
புருவம் இடுங்க அவ்வறிக்கையை வாசித்து முடித்த அர்ஜூன், “அப்ப அந்த லேடி பத்தி அந்த ஆளு சொன்னது பொய்யா?” எனக் கேட்டான்.
“முழுக்க பொய் இல்ல அர்ஜூன். பாதி உண்மை பாதி பொய்” என்றான் இளங்குமரன்.
“புரியலை டாக்டர்” என்று அர்ஜூன் கூறவும்,
“வருண் அம்மாக்கு இல்லீகல் அஃபையர் இருந்தனால தான் வருண் அப்பா டிவோர்ஸ் கொடுத்திருக்காரு. சோ அது உண்மை. ஆனா அவங்க எல்லா ஆம்பிளையும் மயக்கி ஏமாத்துறவங்கனு சொன்னது பொய்.
இப்பவும் வருண் அம்மாக்கு அந்த இல்லீகல் அஃபையர் இருக்கு. அது அவங்க பர்சனல். அவங்களுக்குப் பிடிச்சவங்க கூட அவங்க வாழுறாங்க” என்ற இளங்குமரன் பெருமூச்சு விட்டவனாய்,
“ஆனா இதுல பாதிக்கப்பட்டது வருண் தான் அர்ஜூன்” என்றான்.
“அவனுக்கென்ன! அவங்க அப்பா தான் சிங்கப்பூர்ல சம்பாதிச்சு அவனுக்கு பணம் அனுப்புறாரு போலயே! ரிப்போர்ட்ல அதைப் பத்தியும் போட்டிருக்காங்களே! பணத்துக்குக் கஷ்டமில்லாத வாழ்க்கை தானே. அதான் இப்படிப் பொண்ணுங்க பின்னாடி லவ் பண்றேன்னு சுத்திட்டு இருக்கான் போல” என்று கடுப்புடன் உரைத்தான் அர்ஜூன்.
“அர்ஜூன் திரும்பவும் சொல்றேன் பிரபோஸ் செஞ்சது நிவேதா தான். அவன் இல்லை” என்றான் இளங்குமரன்.
“அதான் டாக்டர். என் பொண்ணே போய் அவன்கிட்ட பிரபோஸ் செய்ற அளவுக்கு அவகிட்ட நல்லவனா நடிச்சி ஏமாத்திருக்கான்” என்றான் அர்ஜூன்.
“இல்ல அர்ஜூன். இந்த ரிப்போர்ட்ல எங்கேயுமே அவனை தப்பான பையனா சொல்லவே இல்லை. அவனோட டெய்லி ஆக்டிவிட்டீஸ்ல கூட அவனோட அம்மாகிட்ட அவன் பேசுறது இல்ல. அவனோட பாட்டி தான் அவனுக்கு கிளோஸ்னு போட்டிருக்காங்க பாருங்க. அப்பானா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்னு போட்டிருக்காங்க. வருண் அப்பாகிட்ட இருந்து ஜீவனாம்சமா நிறைய பணத்தை வாங்குறதுக்காக வருணை அவங்க அம்மா அவங்க அப்பாகிட்ட விடாம கூட வச்சிருக்காங்களா இருக்கும்” என்று இளங்குமரன் சொல்லவும், சற்றுச் சிந்தித்தான் அர்ஜூன்.
“அதோட யோசிச்சு பாருங்க அர்ஜூன், பத்து வயசுல அப்பா அம்மா சண்டைப் போட்டு பிரிஞ்சி தனியாளாக்கப்பட்ட சின்ன பையனுக்கு அப்ப என்ன மாதிரி மனநிலை இருந்திருக்கும். அப்ப கூட அன்னிக்கு நான் அவன்கிட்ட பேசும் போது, நல்லா சம்பாதிச்சு அம்மாவை நல்லா கவனிச்சிக்கனும்னு தான் ஆசைனு சொன்னான். அவங்க அம்மாவை அவனுக்குப் பிடிக்கலைனாலும் வெளியே விட்டுக் கொடுத்துடக் கூடாதுனு அப்படிச் சொல்லிருக்கான் அர்ஜூன். எனக்கு இப்ப தான் வருண் மேல பெரிய மரியாதையே வருது அர்ஜூன்” என்றான் இளங்குமரன்.
“எது எப்படியோ இவனால என் பொண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லனு தெரிஞ்சிடுச்சு. இந்த மூனு மாசம் ஸ்கூல் முடியுற வரைக்கும் நிவேதாவை இங்கேயே படிக்க விட்டுட்டு அதுக்குப் பிறகு நீங்க சொன்ன மாதிரி நிவியை நான் பெங்களூருக்கு அனுப்பிட்டு அங்கேயே ஸ்கூல் கன்டினியூ பண்ண வைக்கிறேன். அப்படியே போகப் போக அவ வருணை மறந்திடுவா! மறக்க வைக்கனும்” என்றான் அர்ஜூன்.
அர்ஜூனின் கூற்றில் மெல்லச் சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.
“நீங்க உங்கப் பொண்ணுக்காக யோசிக்கிறீங்க. நான் வருணோட நல்லதுக்காக யோசிக்கிறேன்” என்றான் இளங்குமரன்.
“எனக்கு வருண் மேலயும் வருண் குடும்பத்து மேலயும் எந்தவொரு நல்ல அபிப்ராயமும் இல்ல டாக்டர். கண்டிப்பா என் பொண்ணோட காதலை நான் வளரவிட மாட்டேன்” என்று தீர்க்கமாக உரைத்தவனாய் அங்கிருந்து கிளம்பினான் அர்ஜூன்.
மறுநாள் மாலை அர்ஜூன் நிவேதாவை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்ற பிறகு அங்கு தனது மகிழுந்தில் வந்து நின்றாள் இளமயில்.
வருண் வெளியே வருவதற்காகக் காத்திருந்தவள், அவன் தரிப்பிடத்தில் இருக்கும் தனது மிதிவண்டியை நோக்கிச் செல்வதைப் பார்த்து அவன் பின்னேயே சென்றாள்.
“வருண்” என்று அழைத்தவளாய் அவன் பின்னே அவள் செல்ல, சட்டென நின்ற வருண் திரும்பிப் பார்த்தான்.
“மயிலு மேடம், நீங்களா என்னைக் கூப்பிட்டீங்க?” எனக் கேட்டான்.
“ஆமா வருண்! இளா டாக்டர் உன்கிட்ட பேசனும்னு கூட்டிட்டு வரச் சொன்னாரு. என் கூட வர்றியா?” எனக் கேட்டாள்.
“அய்யோ மேடம்! கூட்டிட்டுப் போய் என்னை அடிச்சி கொன்னுப் போட்டுட மாட்டீங்களே” என்று பயத்துடன் கேட்டான் வருண்.
அவன் அவ்வாறு கேட்டதும் வாய்விட்டுச் சிரித்தவளாய், “இவ்ளோ பயம் இருக்கிறவன் எதுக்குடா லவ் பண்ணனும்?” எனக் கேட்டாள்.
“பயம் வரும் தான் மேடம். ஆனா நிவேதாவைப் பார்த்ததும் அவளுக்காக செத்தா கூட பரவாயில்லனு தோணும்” என்று சிரித்தான்.
“படவா என்ன பேச்சு பேசுற நீ?” என்று அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள் இளமயில்.
அடித்த அவளின் உள்ளங்கையில் சுர்ரென வலி இருக்க அவனோ ஈஈஈ என இளித்தவாறு அவளைப் பார்க்கவும், “டேய் என்னடா வலிக்கலையா உனக்கு? எனக்கு வலிக்குதுடா” என்று கேட்டவாறு தனது கையைத் தடவினாள் இளமயில்.
“வலிக்குது தான் மேடம். ஆனா எப்பவுமே நீ ஏன் உசுரோட இருக்க, செத்து போனு சொல்ற அம்மாவோட வார்த்தையைக் கேட்டே வளர்ந்தவனுக்கு, செத்து போறேன்னு சொன்னதுக்கு அடிச்ச உங்க அடி எப்படி வலிக்கும் மேடம்” என்றான்.
இளமயிலுக்கு உள்ளம் கலங்கிப் போனது. என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான் இவன்.
“ஏன்டா உங்க அம்மாக்கு உன்னைப் பிடிக்காதா?” எனக் கேட்டாள் இளமயில்.
அவளின் கேள்வியில் தான், தான் உளறி வைத்ததுப் புரிய நாக்கைக் கடித்துக் கொண்டவனாய், “இல்ல மேடம். அப்படிலாம் இல்லை. எங்கம்மாக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவங்க வாழுறதே எனக்காகத் தான்! சும்மா கோவத்துல அப்பப்ப அப்படிச் சொல்லுவாங்க” என்று சமாளித்தான் வருண்.
தாயை வெளியாள்களிடம் விட்டுக் கொடுத்துப் பேசிவிடக் கூடாது என்று எப்படி எல்லாம் சமாளிக்கிறான் இவன் என்று எண்ணியவளாய் அவனைப் பார்த்தவள்,
“சரிடா வா! எங்க வீட்டுக்குத் தான் உன்னைக் கூட்டிட்டுப் போக வந்தேன்” என அழைத்தாள்.
“நீங்க முன்னாடி கார்ல போங்க மேடம். நான் பின்னாடி சைக்கிள்ல வரேன்” என்றான்.
“டேய் ஏமாத்திட்டு வேறெங்கயும் போய்ட மாட்டியே” என்று இளமயில் கேட்டதும்,
“இந்தாங்க என்னுடைய ஸ்கூல் பேக்கை நீங்க வண்டில எடுத்துட்டுப் போங்க. நான் பின்னாடி வரேன். இப்ப நம்புறீங்களா?” எனச் சிரிப்புடன் கேட்டான்.
“மூளைக்காரன் தான்டா நீ! டாக்டர் உன்னைப் பத்தி சரியா தான் கணிச்சிருக்காரு” எனச் சிரித்தவளாய் அவனது பள்ளிப்பையுடன் தனது மகிழுந்தை நோக்கிச் சென்றாள் இளமயில்.
இளமயில் முன்னே மகிழுந்தில் செல்ல பின்னே மிதிவண்டியை வேகமாய் மிதித்தவனாய் தொடர்ந்து சென்றான் வருண்.
அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற இளமயில், தன்னுடைய மாமனார் மாமியாரிடம் அறிமுகம் செய்து வைத்து விட்டு வரவேற்பறையில் அமரப் பணித்தாள்.
அவன் என்ன குடிப்பான் எனக் கேட்டு காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.
அவன் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது வீட்டினுள்ளே வந்தான் இளங்குமரன்.
“ஹாய் வருண்! ஹௌ ஆர் யூ?” என்றவனாய் மெத்தையில் அமர்ந்திருந்த வருணின் அருகில் வந்து நின்றான் இளங்குமரன்.
“நல்லா இருக்கேன் டாக்டர். நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டவாறு எழுந்து நின்றான் வருண்.
“ஹே உட்காருடா! ஐம் ஃபைன்! நீ காபி குடிச்சிட்டு இரு! நான் ரிஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றவனாய் உள்ளே சென்றான்.
அடுத்த சில நிமிடங்களில் மொட்டை மாடியில் நின்றிருந்தனர் இருவரும்.
“எதுக்கு டாக்டர் என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?” எனக் கேட்டான் வருண்.
“உன்னோட அம்மா உன்கிட்ட உன் காதலைப் பத்தி எதுவும் கேட்கலையா வருண்?” எனக் கேட்டான் இளங்குமரன்.
“இல்ல டாக்டர். நான் தான் எங்கம்மாக்கு என் லவ் பத்தி எதுவும் தெரியாதுனு சொன்னேனே டாக்டர்” என்றான் வருண்.
“ஆனா அர்ஜூன் உங்கம்மாகிட்ட சொல்லிட்டாரு வருண்” என்று இளங்குமரன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் விழிகளை விரித்தான் வருண்.
“என்னது நிவி அப்பா என் அம்மாகிட்ட பேசினாரா?”
‘அய்யய்யோ அம்மாவைப் பத்தி எல்லா விஷயமும் இவங்களுக்குத் தெரிஞ்சி போச்சா?’ என அதிர்ந்து போனான் வருண்.
அவன் உடல் வெளிப்படையாவே உதறியது. அவமான உணர்வில் முகம் கருத்துப் போனது.
இளங்குமரன் அவனின் தோளில் கைப்போட்டு ஆறுதலாய் அரவணைத்துக் கொண்டான்.
மெல்ல அவனின் உடல் இலகுவானதும், “நீ ஏன் உங்கப்பா கூடப் போகலை வருண்” எனக் கேட்டான்.
“அம்மாக்குப் பணம் வேணும். அதுக்கு நான் வேணும். அதை விட என் பாட்டியை எனக்கு ரொம்ப பிடிக்கும் டாக்டர். அவங்களை விட்டு போக மனசு வரலை. அதான் அம்மா கூடவே இருக்கேன்னு கோர்ட்ல சொல்லிட்டேன். அப்பாவுக்கு அதனால என் மேல கோபம். அதான் உடனே ரெண்டாவது கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. அப்புறம் சமாதானமாகி என்கிட்ட பேசிட்டாங்க. சித்தி கூட என்கிட்ட பேசுவாங்க. அவங்களும் நல்ல டைப்! அப்பா என்னை சிங்கப்பூருக்கு வரச் சொல்லி நிறைய நேரம் கூப்பிட்டிருக்காங்க. எனக்குத் தான் பாட்டியை இங்கே விட்டுட்டுப் போக மனசில்லை” என்றான் வருண்.
“நல்ல பையன்டா நீ” என்றவனாய் அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் இளங்குமரன்.
“அய்யோ நான் அவ்ளோ நல்லவன்லாம் இல்ல டாக்டர்” என்று நெளிந்தான் வருண்.
“அப்படியா? அப்ப என்ன தப்புலாம் செஞ்சிருக்க?” எனச் சிரிப்புடன் கேட்டான் இளங்குமரன்.

