Loading

திருப்பம்-35

 

 

நாட்கள் சில கடந்திருந்தது…

 

சுயம்புலிங்கம், விக்ரமன், வடிவேலு, திருமாவளவன், மகாதேவன், மற்றும் கார்த்திகா ஆகியோர் கூடத்தில் அமர்ந்திருக்க, சங்கமித்ரா மற்றும் தனம் கூடத்திலேயே கீழே அமர்ந்து ஒளிசுடரை மடியில் போட்டுக்கொண்டு பூக்கட்டிக் கொண்டிருந்தனர்.

 

தெய்வா சமையலறையை சுத்தம் செய்துகொண்டிருக்க,

 

“என்னம்லே என்னதாம் செய்யனுருக்க?” என்று மகாதேவன் கேட்டான்.

 

“தெரிலயே அத்தான். நியூஸுல மழைக்கு வாய்ப்பிருக்குனு சொன்னதால எல்லாம் கதிரறுத்துடுவோமுங்காவ. இன்னும் ரெண்டு நா போனா பொங்கலு. பொறுத்து பொங்கலுக்கே அறுத்துபுடுவமானு யோசனையாருக்கு” என்று விக்ரம் கூற,

 

“நடுவுல மழ காட்டிபுட்டா அம்புட்டும் வீனா போவுமேலே… வருசா வருசம் பொங்கலுக்கு மட்டுந்தேம்லே நெல்லு போடுதோம். அத உருப்படியா எடுக்கவேணாமா?” என்று வடிவேலு கேட்டான்.

 

“அதேம் நானும் சொல்லுதேம் அண்ணே. இவியதேம் பொங்கலுக்கு அறுத்து பழகியாச்சேனு யோசிக்காவ” என்று கார்த்திகா கூற,

 

“நீய என்னம்லே பண்ண போதீய?” என்று சுயம்புலிங்கம் இளைய மகன் மற்றும் அவன் தோழனிடம் கேட்டார்.

 

“எங்களுக்கென்ன மாமா. ரப்பரு தோட்டத்துக்கு வம்பேயில்ல. தென்னந்தோப்பு பக்கட்டு பெருசா வேலையில்ல. அங்கனதேம் பொங்க வக்கப்போறோம்ன? அதனால மஞ்ச கொழாவும் காப்பும் கட்டுற சோலிதேம்” என்று வடிவேல் கூற,

 

“நீயு பொங்கலுக்கு ஏதும் எடுக்கனுமுனு ரோசிக்கிலியாலே?” என்று மகா கேட்டான்.

 

“நான் நெல்லா அத்தான் போட்டிருக்கேம்? ரப்பருதான? தென்னையிலயும் தேங்க பறிக்க வேலையில்ல இப்ப” என்று வளவன் கூற,

 

“நீங்க என்ன யோசிக்கீய?” என்று கார்த்திகா தன்னவனிடம் கேட்டாள்.

 

“நல்லா ரோசிச்சு முடிவெடுலே. பொறவு வம்பா போச்சுன்னா மில்லுகாரி பத்து பைசா நவட்ட மாட்டா ஆமா” என்று மகாதேவன் கூறி சிரிக்க,

 

“ஆமா ஆமா. நான் ரொம்ப கராரான ஆளாக்கும்” என்று கார்த்திகாவும் கேலியில் இறங்கினாள்.

 

சரியாய் அவ்விடம் வந்த தெய்வா, “இஞ்சாருடி.. ஆருக்கு ஆரு படியளக்குறது? கணக்கு பாத்துபுட்டா நீயுதேம் அவேனுக்கு படியளப்பேம்பியோ?” என்று கத்த,

 

“தெய்வா அனக்கத்தக் கூட்டாம போயிடு. வரவர வார்த்த அம்பூட்டும் தேளாதேம் வருது ஒனக்கு” என்று சுயம்புலிங்கம் கூறினார்.

 

முகம் வாடி அமர்ந்த தன் மனையாளைப் பார்த்த விக்ரம், “மில்ல தொவங்க மொதலு போட்டதும் அவதேம், மில்லு இருக்குறதும் அவோ பேருலதேம், மில்லுக்கு ஓனரும் அவோதேம். அவ படியளந்து கஞ்சி குடிச்சா நாவொன்னும் கொறஞ்சுட மாட்டேம்” என்று கூறிவிட,

 

கார்த்திகா அவனை விழிகள் விரிய பார்த்தாள். 

 

‘தேரிட்டய்யா புருசா’ என்ற கூற்று அவள் பார்வையில் இருக்க மனதிற்குள் லேசாய் சிரித்துக் கொண்டவன் அன்னையை அழுத்தமாய் பார்த்தான்.

 

“ஆருக்கு ஆரு சொல்லித்தந்தாவனுதேம் தெரியில. எல்லாம் எங்கிட்ட ஒடக்கிழுக்கத்தேம் வாரீய” என்ற தெய்வா சங்கமித்ராவை முறைத்துவிட்டுச் செல்ல,

 

‘நாம்பாட்டுக்கு சிவனேனுதானம்மா இருந்தேன்’ என்பதாய் அவரைப் பார்த்துக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.

 

ஒரு பெருமூச்சுடன் அனைவரும் மீண்டும் பேச்சில் இணைய, “சரி பாக்கேம் ஐயா. ஆளுவளுக்கு சொல்லி வைக்கேம். சரினுபட்டா பொங்கலன்னிக்கு அறுக்க கொஞ்சத்த விட்டுபோட்டு மித்தத நாளைக்கு அறுத்துபுடுவோம்” என்று விக்ரமன் கூறினான்.

 

“ஏங்க சுடர கூட்டிகிட்டு போயி அறுப்பம்முங்க. போன பொங்கலுக்கு பச்ச புள்ளனு அத கூட்டிகிட்டு போவ முடியல” என்று கார்த்திகா ஆசையாய் கேட்க,

 

“அதுக்கென்னத்தா? புள்ளயவே மொத கதிர அறுக்க வச்சுபுடுவோம். என்னய்யா?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.

 

“சரிங்கய்யா” என்ற விக்ரமன், “அத்தான் நீங்களும் புள்ளையல இட்டுவாங்க. எல்லாஞ் சேந்து அறுக்கட்டும்” என்று கூற,

 

“சரிலே பெரிய மனுசா” என்று கூறினான்.

 

“நீங்க தாம்லே அனக்கத்தயே கூட்டாம உக்காந்தருக்கீய” என்று மகா, வடிவேலு மற்றும் வளவனைப் பார்த்துக் கூற,

 

ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டவர்களில் வளவன், “எங்க பொழப்பு அப்புடி. ரப்பரு தோட்டதுல மரத்துக்கெல்லாம் மஞ்ச பூச ஆளு விட்டிருக்கோம். நாள போயி நான் மரத்த வெட்டி பெட்டிய வச்சுடுதேம். மறுநாளுக்கு பூசைக்கு முன்னுக்கு போயி தூக்கிட்டு வாரம். பூந்தோட்டத்துல இப்பதேம் ஒரு செட்டு எடுத்து அனுப்பினது. சும்மா நாலு பூவு பறிச்சுகிட்டு கொண்டாந்துடுரோம்” எனக் கூறினான்.

 

“சரிலே. நானே அந்த ரப்பர பூசய முடிச்சுட்டு எடுத்துக்கேம்” என்று மகா கூற,

 

“எப்பவும் அது ஒங்களுக்குதேம் அத்தான்” என்று கூறினான்.

 

அன்றைய நாளே வேலையின் பரபரப்போடு செல்ல பெரும் அலைச்சலுக்குப் பின் தூங்கியிருந்த திருமாவளவன், மாலை பொழுதில் கண் விழித்தான். அவனுக்கான தேநீருடன் அவனை எழுப்ப வேண்டி அறைக்குள் நுழைந்தாள் சங்கமித்ரா.

 

தேநீர் கோப்பையை நீட்டிக் கொண்டு நின்றவளது முகத்தில் இருந்த மறைக்க இயலாத சோகத்தைக் கண்டு, கோப்பையை வாங்கி மேஜையில் வைத்தவன், அவள் விரல் சுண்டி இழுக்க, நிலை தடுமாறி அவன்மீது சாய்ந்தாள்.

 

அவள் வெற்றிடையை வாகாய் பற்றிக் கொண்டு, அள்ளிக்கொடியாய் சுருட்டித் தன் மார்பில் போட்டுக்கொண்டவன், “என்னமா மொகம் வாட்டமாருக்கு?” என்று கேட்டான்.

 

அமைதியாய் அவன் நெஞ்சில் தலைசாய்த்து, விரல்களை ரோமம் படர்ந்த அவன் மார்பில் வைத்து கிறுக்கலிட்டவள் கண்கள் கலங்கிவிட்டது.

 

அதை மறைக்கும் பொருட்டு முகத்தை தாழ்த்தி அவன் மார்ப்புக்குள் அவள் புதைய, அவள் நாடி பற்றி வலுக்கட்டாயமாய் அவள் முகம் நிமிர்த்தினான்.

 

“என்னனு கேட்டேம்ல?” என்று அழுத்தமாய் திருமாவளவன் வினவ,

 

“ம்..ம..மண்ணாந்தனா என்னங்க?” என்று கேட்டாள்.

 

அவளை புருவம் சுருங்க பார்த்தவன், “யாரு சொன்னா அப்புடி?” என்று கேட்க,

 

“அப்படினா என்ன?” என்று உடையக்காத்திருக்கும் குரலில் கேட்டாள்.

 

“யாரு சொன்னாவனு கேட்டேம்” என்று மீண்டும் அவன் கேட்க,

 

“அ..அத்தை” என்று கூறினாள்‌.

 

மேலும் ஏதோ பேச வந்து அவள் மென்று விழுங்குவதைக் கண்டவன், “மித்ரா..” என்று அழைக்க,

 

“பெரியண்ணியும் அண்ணாவும் வந்திருக்காங்க. அண்ணி என்னமோ எடுத்துட்டுவரச் சொல்ல எனக்கு அது என்னதுனு புரியல. என்னதுனு கேட்டதுக்கு அ..அத்தை இ..இ..இது ஒரு ம..மண்ணாந்த ஒன்னும் தெரியாதுனு சொல்றாங்க. அ..அண்ணியும் ஒருமாதிரி சிரிக்குறாங்க” எனக் கூறி முடிப்பதற்குள் அவள் தொண்டைக்குழி ஏகத்துக்கும் ஏறி இறங்கியது.

 

கண்களைக் கரித்துக் கொண்டு அப்படியொரு கண்ணீர் பீறிட்டது.

 

“அ..அப்படினா என்ன?” என்று மீண்டும் அவள் கேட்க, தன் கரங்களுக்குள் அவள் கன்னம் பொத்தியவன் அவள் இதழில் ஆழப்புதைந்தான்.

 

கண்களில் கண்ணீர் பெருகியோட தானும் அவனுள் புதைந்தவள் அவன் சட்டையை இறுக்கமாய் பற்றிக் கொள்ள, அவளிடமிருந்து விலகியவன், அவள் கரம் பற்றி எழுப்பினான்‌.

 

பயந்துபோனவள், “ம்ஹும்.. அண்ணா வீட்டாளுங்க எல்லாம் இருங்காங்க” என்று கூற,

 

“உன்னய பேசும்போதும் இருந்தாவ தான?” என்று பற்களில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் அவளை இழுக்காத குறையாய் அழைத்து வந்தான்‌.

 

தெய்வநாயகி தன் மகளுக்கென்று போட்டக் கருப்பட்டிக் காப்பியை ஆற்றிக் கொண்டு வர,

 

அவளிடம் கொடுக்கும் முன் அதை வாங்கி சுவரில் ஓங்கி வீசியிருந்தான்.

 

மொத்த வீடுமே அதன் சப்தத்தில் அரண்டு போனதென்றால், சங்கமித்ரா பயந்து அவன் முதுகோடு ஒன்றி, “வேண்டாங்க” என்று ஈன சுவரத்தில் கெஞ்சினாள்.

 

அவளைத் திரும்பிப் பார்த்துத் தீயாய் முறைத்தவன், அன்னையின் புறம் திரும்ப,

 

பொங்கல் விழாவிற்காக துணி கொடுத்துவிட்டு, அவர்களுக்கான சீர் துணிகளை வாங்க வந்த சிவபாதசேகரனும் அவனது பெற்றோரும் திருமாவளவனின் ரௌத்திரக் கோலத்தில் அரண்டு எழுந்தனர்.

 

“என்னம்லே இது? அம்மா முன்னுக்க இப்படியொரு கோபம் ஒனக்கு?” என்று கத்தியபடி திரிபுரா எழுந்து நிற்க,

 

அக்காவைப் பார்த்தானே ஒரு பார்வை. தான் பார்த்திடாத ஒரு திருமாவளவன் இவன் என்று அப்பார்வை ஒன்று உணர்த்திட, அதன்பின் பேசுவாளா அவள்?

 

“ஏம்மா.. பட்டம் ரெண்டு படிச்சு கைநெறக்க இந்த வீட்டுக்கு சம்பாதிச்சும், பொங்கியும் போடுற எம்பொண்டாட்டி ஒனக்கு மண்ணாந்தையா போயிட்டாளா?” என்று திருமாவளவன் கேட்க,

 

தெய்வா கோபமாய் சங்கமித்ராவைப் பார்த்தார்.

 

“அதுசரி.. சும்மா நளி அடிச்சதுக்கு உம்பொண்டாட்டி கரச்சிட்டாளாக்கும்? கடலத்தான் கண்ணுல வச்சுருக்காம்லே” என்று திரிபுரா கூற,

 

“அக்கா.. உங்கிட்ட பேசலை. உன் வீட்டு ஆளுவ முன்னுக்க உம்மரியாதைய கெடுத்துகிடாத” என்றவன் அன்னையைப் பார்த்து, “தனியாருக்கும்போது இப்படியொருவார்த்தய அவளச் சொல்லிருந்தாளே பொறுத்திருக்க மாட்டேம். நாலு பேரு முன்னுக்க எம்பொண்டாட்டிய முட்டாளுங்குற அளவுக்கு அவ என்னம்மா கொறஞ்சு போயிட்டா?” என்றான்.

 

“ஆமா.. படிச்சு பட்டம் வாங்கிட்டா ஆச்சாடா? சிப்பல கொண்டா வட்டில கொண்டானா ஆ ஆனு முழிக்குறா. இவள மண்ணாந்தங்காம என்னனு சொல்ல?” என்று தெய்வாவும் வார்த்தையை விட்டுவிட,

 

அதிகபடியான கோபத்தில் எங்கே பெரியவர்கள் முன்னிலையில் அன்னையை ஏதும் சொல்லிவிடுவோமோ என்ற ஆத்திரத்தோடு அருகே கிடக்கும் பானையைத் தூக்கி வீசினான்.

 

சரியாக அப்போதே வேலை முடித்து சுயம்புலிங்கம், கார்த்திகா மற்றும் திருவிக்ரமன் வர, இக்காட்சியைக் கண்டு அதிர்ந்தே விட்டனர்.

 

“அம்புட்டுக்கு ஒன்னும் அவ வெவரங்கெட்டு போயிடல. நான் அவள நாலு வார்த்த இங்கிலிஷ்ல பேசச் சொல்றேனே. ஒங்களுக்கு புரியுதானு பாப்பமா?” என்று கேட்டானே ஒரு கேள்வி.

 

தெய்வநாயகி அவமானத்தில் அதிர்ந்து நிற்க,

 

“வளவா.. என்னதிது? என்ன சலம்பலு?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.

 

“வாங்க ஐயா.. எம்பொண்டாட்டிட்டுக்கு சிப்பலு வட்டலு என்னனு தெரியலையாம். அதாம் ஒங்க மவளும் பொண்டாட்டியும் அவள மண்ணாந்தனு வைதாவ.. ச்ச.. இல்ல இல்ல. நளி (கேலி) பேசுதாவ” என்றவன்,

 

“நல்லா பாத்துக்கங்கம்மா. இவ எம்பொண்ணாட்டி. என்னுல பாதிலாம் இல்ல. நானும் அவளும் ஒன்னுதேம். நளி பேசுறதுக்கும் நாலு பேரு முன்னுக்க அசிங்கப்படுத்துறதுக்கும் வித்தியாசம் இருக்கும்ல? இவள பேசுறது அம்புட்டும் என்னையும் சேரும்” என்று உறுமினான்.

 

சுயம்புலிங்கம் சங்கமித்ராவைப் பார்க்க, கண்ணீருடன் தன்னவன் பின் நின்றுகொண்டு அவரிடம் கையெடுத்து கும்பிட்டாள்.

 

மன்னிப்பை இறைஞ்சியபோதும் ‘என்னாலதான் சண்டைனு நீங்களும் சொல்லிடாதீங்க மாமா’ என்ற வேண்டுதல் அவள் விழிகளில் இருந்தது.

 

அதை கண்டு வேதனையுற்றவர், “லே.. அவோள உள்ளார கூட்டிட்டுப். போ” என்று கூற,

 

தந்தையைப் பார்த்தான்.

 

“நான் பேசிகிடுறேம்லே. நீ போ” என்று அவர் கூற,

 

மனையாளைத் திரும்பிப் பார்த்தான்.

 

கண்களில் நீர் வழிய மருண்டு நின்றுகொண்டிருந்தவளைக் கண்டு ஆத்திரம் கொண்டவன், “பேசித்தான் தொலையேம்டி.. ஒனக்கென்ன தியாகி பட்டமா தரப்போறாவ? கேலி பேசினா புரிஞ்சுக்கத் தெரியாதா? என்ன பேசினீங்க ஏன் பேசினீங்கனு வாயத்தொறந்து கேக்கத்தான? ஒனக்கு ஒன்னுனா நீதேம் கேட்கனும்” என்று கத்தினான்.

 

அவன் அதட்டலில் திடுக்கிட்டுப்போனவளை ஆதராவய் சென்று பிடித்துக் கொண்ட கார்த்திகா, “கொழுந்தரே அதட்டாதீய” என்று கூற,

 

“பின்ன என்ன மைணி?” என்றான்.

 

“ஏம்லே நாமலாம் இல்லியா? இந்தா நீ இப்பம் வந்து கேக்கலையா? அந்த புள்ளையே பயந்துருக்கு” என்று விக்ரமன் உடன் பிறந்தவனை அதட்ட,

 

“நானும் போய் சேந்தபொறவாட்டி என்னத்தக் கிழிப்பா? நான் தான் வந்து கேக்கனுமா? வாய தொறந்து பேசினாதேம் தோ இப்புடியெல்லாம் அவமானப்படாதபடிக்கு இருக்க முடியும்” என்று கத்தினான்.

 

அவன் பேச்சில் அதிர்ந்து போன சங்கமித்ர கார்த்திகாவின் கரத்தைப் பயத்தில் இறுக பற்ற, அவள் உடல் வெளிப்படையாய் நடுங்கியது.

 

“ஏம்லே.. செவுல்லயே விட்டேன்னா புரியும்லே. என்ன பேச்சிது?” என்று சுயம்புலிங்கம் அதட்ட,

 

“பொறத்தால நாலு போட்டா புரியம்லே.. என்னத்தயாது பேசி அத சங்கடபடுத்தாம போ” என்று விக்ரமனும் கோபமாய் கத்தினான்.

 

தன்னையே அதிர்ந்த பார்வை பார்த்து நிற்பவள் கரம் பற்றியவன் இழுத்துக் கொண்டு செல்ல,

 

மகன் ஆடிய ஆட்டத்தில் உண்மையில் ஆடிதான் போனார் தெய்வநாயகி. 

 

அவன் கோபமும் செயலும் எத்தனை ஆழமாய் சங்கமித்ரா அவனுள் பதிந்திருக்கின்றாள் என்பதை உணர்த்திய அதேநேரம், தன்னை தன் சம்மந்தி வீட்டார் முன்பு அவமானப்படுத்திவிட்டானே என்று ஆத்திரமும் எழுந்தது.

 

நடந்தவை இதுதான்… தனது மகள் வந்தாலே சங்கமித்ராவை எதிரிபோல் பாவித்து நடந்துகொள்பவர் இன்று என்ன மனநிலையில் இருந்தாரோ? மகளோடு சேர்ந்துகொண்டு அவளைப் பற்றி அமைதியாய் குறைபேசிக் கொண்டே இருந்தார்.

 

ஒரு பாத்திரத்தில் சோற்றைக் கொண்டு வந்து ஆரவைத்துக் கொண்டிருந்த தெய்வா அருகே வந்த திரிபுரா, “என்னத்துக்குமா சோறு இப்பத?” என்க,

 

“ராவுக்கு கலவயா கலந்து உங்கத்தாம்டி” என்றார்.

 

“இப்பவே ஆக்க ஆறமிச்சுட்டியாக்கும்?” என்று அவள் கேட்க,

 

“ஒன்னய வாரச்சொன்னேம்ல? பெரியவளயும் வரச்சொல்லிட்டேம். அதாம் இப்பதருந்தே ஆரமிச்சுடுவம்னு” என்று கூறியவர், “ஆத்தா.. சிப்பல எடுத்தார மறந்தேனே” என்று எழ முற்பட்டார்.

 

“நீ இரும்மா” என்று கூறிய திரிபுரா, “சங்கு” என்று உரக்க அழைக்க,

 

சமையலறையிலிருந்து ஓடி வந்தாள்.

 

“போயி சிப்பலெடுத்தா” என்று அவள் கூற,

 

“எ..என்னது மைணி?” என்று புரியாது விழித்தாள்.

 

“சிப்பலெடுத்தாம்லே” என்று மீண்டும் அவள் கூற,

 

பெரும் தயக்கத்துடன் விழித்தாள்.

 

சிவபாதசேகரன் வெளியே அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, அவனது பெற்றோர் கொண்டுவந்த துணிகளை தாம்பாலத்தில் அடுக்கியபடி நடப்பதை அவ்வப்போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“ஏ மக்கா.. இந்தூட்டுக்கு நீயு வாழ வந்து எம்புட்டு மாசம்லே ஆவுது?” என்று திரிபுரா கேட்க,

 

“அ..அஞ்சு மாசம் ஆகப்போகுது மைணி” என்றாள்.

 

“பரிகேடுத்தா.. அஞ்சு மாசத்துல சமய பண்டத்துக்குக்கூடவா பேரு கேட்டு வச்சுகிட மாட்ட?” என்று அவர் கூற,

 

‘அதற்கு முதலில் தெய்வா சமைக்க அனுமதிக்க வேண்டுமே?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது.

 

“என்னம்மா இது? இப்புடியா இருப்பாவ?” என்று மேலும் அவள் தாயிடம் கேட்க,

 

“எல்லாம் நேரம்டி. எம்மூட்டு புள்ளைக்கு அமஞ்ச வாழ்க்க அந்த லட்சனம்” என்று அவர் கூற, திரிபுராவின் மாமனார் மாமியார் அவளை நிமிர்ந்து பார்த்தனர்.

 

தெய்வாவின் வார்த்தையிலும் பேச்சிலும் மனம் நொந்து நின்றவளுக்கு அவர்களின் பார்வை வேறு அவமானமாய் உணர வைத்தது.

 

“சரியான மண்ணாந்த (முட்டாள்)” என்று தெய்வா கூற,

 

சங்கமித்ராவைப் பார்த்து திரிபுரா ஒரு ஏளனச் சிரிப்பை சிந்தினாள். ‘இதுக்கு உனக்கு எப்படியும் அர்த்தம் தெரியாது தானே?’ என்று சொல்லாமல் சொன்னது அச்சிரிப்பு.

 

அமைதியாய் நின்றுகொண்டிருந்தவள் சமையலறைக்குள் சென்றுவிட, சில நிமிடங்களில் தன்னவனுக்காக தேநீர் எடுத்துக் கொண்டு மேலே சென்றவள் அனைத்தையும் கொட்டித் தீர்த்து, அவன் ஆடித் தீர்த்திருந்தான்.

 

தற்போது சண்டை முடித்து அறைக்குள் வந்தவன் அவளை உதரவிட்டுவிட்டு பால்கனிக்குச் செல்ல,

 

அவளுக்கு அப்படி அழுகை வந்தது.

 

வேகமாய் அவனிடம் சென்று நின்றவளுக்கு முகம் திருப்பி அவன் கோபத்தை வெளிப்படுத்த, “எனக்கும் கூட உ..உங்க மேல ரொம்ப கோவமா இருக்கு” என்றவள் அவன் முகத்தை வலுக்கட்டாயமாக தன் புறம் திருப்பி, “சத்தமா அழனும் எனக்கு” என்று கூறினாள்.

 

அடுத்த நொடி அவளை இழுத்துத் தன் மாரோடு அவன் அணைத்துக் கொள்ள, வெடித்து அழத்துவங்கினாள்.

 

“உ..உங்கம்மா ரொம்ப பண்றாங்க” என்று அவள் கூற,

 

‘அத்தை’ என்ற சொல், ‘உங்கம்மா’ என்று மாரியதை மனம் வலிக்க உணர்ந்து கொண்டான்.

 

“அ..அவ..அவங்க..அவங்கலாம் பாக்குறாங்க.. எ..எ.. எனக்கு அசிங்கமா போச்சு தெரியுமா?” என்று அவள் கூற,

 

அவன் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாய் வழிந்தது.

 

“நா.. நான் அப்படி என்னப் பண்ணேன் அவங்களுக்கு? அவங்க தான பொண்ணு பார்த்து என்னை பிக்ஸ் பண்ணது? அ.. அவங்க பொண்ணுக்கு புடிக்கலைங்கவும் எ..என்னை இப்படிலாம் பேசுறாங்க” என்று கேட்டு அழுதவள் அழுகை சப்தம் இன்னும் அதிகரிக்க, அவன் அணைப்பின் இறுக்கமும் அதிகரித்தது.

 

“வலிக்குதுங்க.. எ..என்னால சத்தியமா தாங்க முடியல” என்று அவள் கூற,

 

“சாரிடி” என்றான்.

 

இம்முறை அவன் மன்னிப்பைக்கூட அவள் தடுக்கவில்லை. அவனைக் குற்றம் சுமத்தி அவ்வாறு அவள் அமைதியாக வில்லை. ஆனால் அவன் மன்னிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை.

 

அவள் அழுகையின் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து, கொஞ்சம் கொஞ்சமாய் தணிந்து வர, அவள் முதுகை வருடிக் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

 

அவன் அணைப்பும் வருடலும் ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை.

 

அழுது ஓய்ந்துபோன நிலையில் அவளிடமிருந்து பெருமூச்சுகள் மட்டுமே வெளியாக, அவள் உடல் வெகுவாய் சோர்ந்து போனது.

 

“மித்ரா” என்று அவன் அழைக்க,

 

“என்னலாம் பேசுறீங்க நீங்க?” என்று கண்களில் கண்ணீர் மின்ன அவனைப் பார்த்துக் கேட்டவள் வெடுக்கென நகர்ந்தாள்.

 

“நீயு பேசாம இருக்கியே? அதேம் நானு நெறயா பேச வேண்டிபடுது” என்று அவன் கோபம் மாறாதக் குரலில் கூற,

 

“நாம்பேசிட்டா மட்டும்? அய்யோ அம்மா மன்னிச்சுடு தாயினா சொல்லப்போறாங்க? அப்பவும் எம்புள்ள வாழ்க்கைல வந்து அவன் வாழ்க்கைய கெடுத்துட்டா, எம்புள்ளைய எங்கிட்டருந்து பிரிச்சுட்டானு தான சொல்லப்போறாங்க?” என்று கத்தினாள்.

 

“அதுக்காவ பேசுறதயெல்லாம் சூடு சொரன இல்லாம கேட்டுகிட்டு இருப்பம்னு நிப்பியாடி?” என்று அவனும் கத்த,

 

“சூடு சொரன இருந்துட்டாப்ல? எங்கிட்ட வாயகாட்டாம உங்கம்மா அமைதியாகிடுவாங்களா? எப்பப்பாரு எம்புள்ள வாழ்க்கைய கெடுத்துட்டா வாழ்க்கைய கெடுத்துட்டா வாழ்க்கைய கெடுத்துட்டா. ச்சை” என்று கத்தினாள்.

 

மாறி மாறி ஐந்து நிமிடத்திற்குத் தொடர்ந்து இருவருக்கும் அதுகுறித்தே பெரும் வாக்குவாதம் ஓடியது.

 

“சும்மா ஏதாது பேசாதீங்க. நான் வாயத்தொறந்தா உங்கம்மா பொட்டிய கட்டி அனுப்பிடுவாங்க. போக வேண்டியதுதான் நானு” என்று அவள் கத்த,

 

“தனியா போகச் சொன்னா எம்புருஷன கூட்டிகிட்டுத்தேம் போவேம்னு சொல்லத்தான? சொல்லிப்பாரு. பொறவு வாய தொறக்கவே மாட்டாவ” என்றான்.

 

அவனை ஆயாசமாய் பார்த்தவள், “நானே கூப்டாகூட தனியா வந்துடாதீங்க. சத்தியமா அத்தைக்காக சொல்லலை. விக்ரமத்தான் நொந்தே போயிடுவாங்க” என்றுவிட்டு உள்ளே செல்ல,

 

பால்கனி கம்பிகளை இறுக பிடித்துக் கொண்டு திரும்பி நின்றான்.

 

உள்ளே சென்றவளுக்கும் கண்களில் கண்ணீர் பொழிந்தது, பால்கனியில் நின்றவன் கண்களிலும் நீர் நிற்கவில்லை.

 

‘கூப்பிட்டா வருவேன்னு தயாரா சொல்றாங்க. அப்படி நான் என்ன செஞ்சேன் இவங்களுக்கு? பிறந்து வளந்த குடும்பத்த விட்டுட்டு வர்றதுக்கு?’ என்று அவள் எண்ணி அவன் காதலில் உருக,

 

‘இம்புட்டுக்கு பொறவுங்கூட கூப்பிட்டா வராதீயனு எப்புடித்தேம் சொல்றாளோ? அம்புட்டுக்கு நான் என்ன செஞ்சேம்?’ என்று அவள் காதலில் அவன் கரைந்தான்.

 

வானத்தை வெறித்துக் கொண்டு நின்றிருந்தவன் மனம் நடந்ததைக் கடந்துவர இயலாது தவித்து நிற்க,

 

உள்ளே அறையிலிருந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல் ஒலித்தது…

 

‘ஆ…..

 

நிலாவே வா செல்லாதே வா…

 

என்னாளும் உன்…

 

பொன்வானம் நா..ன்

 

எனை நீதா..ன் பிரிந்தாலும்..

 

நினைவாலே.. அணைப்பே..னே

 

நிலாவே வா…

 

செல்லாதே வா…’ என்று ஒலிக்க மெல்ல அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

 

அவர்களது டேப் ரெக்கார்டர் முன் அமர்ந்துகொண்டு அவள் கடிதம் எழுதிக் கொண்டிருக்க, சுவரில் சாய்ந்து நின்று கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து நின்றான்.

 

கடிதத்தை எழுதி முடித்தவள் நிமிர, அவள் பார்வையின் பாஷை புரிந்து வந்தவன் தாளை எடுத்துப் பார்த்தான்.

 

‘அன்புள்ள திருமாலுக்கு,

 

வருத்தமா தான் இருக்கு. கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா என் சுயமரியாதை பாதிக்கப்படுடுச்சோனு தோன்றலை. என்னால எதிர்த்து பேச முடியலைதான். ஆனா நீங்க பேசிட்டீங்க தானே? அதுபோதும் எனக்கு. இப்படி வாய் திறக்காம இருக்காளேனு உங்களுக்கு கோவமா இருக்குல? என்ன செய்யங்க? எனக்கு வரலை. எனக்கு அவங்கக்கிட்ட அப்படி எதுர்த்து பேச வரலை. அவங்க எதாவது சொன்னா முதல்ல அழுகதான் வருது. அழுறதால நான் கோலைனு தோனுதா உங்களுக்கு? எல்லாரும் அப்படித்தான் என்னை சொல்வாங்க. எதுக்கெடுத்தாலும் அழுதுடுற கவர்ட் கேர்ள்னு. ஆனா என் நேச்சரே இதுதாங்க. எனக்கு வேண்டிய இடத்துல நான் பேசுவேன்தான். ஆனா என்னால அவங்ககிட்ட எதிர்த்து பேச முடியலை. பயமா? தயக்கமா? மரியாதையா? எதுமே தெரியலை. பேசினதும் வருத்தமா இருக்கும். அழுக வரும். ரொம்ப வலிக்கும். கத்தி அழதோனும். ஆனா எதிர்த்துப் பேச வரலைங்க. சாரி. ஒவ்வொரு முறையும் அழுது நான் உங்கள வருத்தப்பட வைக்குறேன்ல? இந்த விஷயத்த என்னால மாத்திக்க முடியலைங்க. முயற்சி பண்ணாம எல்லாம் இல்லை. அவங்க பேசிக்கும் போது எனக்கு புரியும்படி சொல்லுங்கனு கேட்கனும்போலதான் இருந்துச்சு. என்ன பயன்? என்னைக் கேலி பேசனும்னு மோட்டிவோடதான் அவங்க பேசுறாங்க. அப்ப நான் என்ன சொன்னாலும் என்னை சொல்லத்தான போறாங்க? பேசுறதால எம்மனசுக்கு நிம்மதி எதும் கிடைச்சுடுமானு யோசிச்சா இல்லைனுதான் தோன்றுது. அதனாலதான் பேசத்தோன்றலையோ என்னமோ? ஆனா உங்கக்கிட்ட என் வலிகள மறைக்க முடியாதுல்ல? அதான் வந்து கொட்டிடுறேன். எனக்கு என்ன சொல்லனு தெரியலைங்க..’ என்று அவன் படித்து முடிக்க,

 

அவனையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

 

“எனக்குங்கூட என்ன சொல்லனு தெரியலைடி. அம்மா பேசுறாவனு அவியட்ட போயி சண்ட போட்டாலும் அவிய அனக்கத்தக்கூட்டாதிருக்க மாட்றாவ. ஒன்னயும் வெசனப்படாதபடிக்கு வச்சுகிட முடியல” எனக் கூறியவன் காகிதத்தை மேஜையில் வைத்துவிட்டுத் தன் நெஞ்சை தேய்த்துக் கொண்டு, “வலிக்கிடி” என்க,

 

அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

அவள் கழுத்தடியில் முகம் புகைத்தவன், “ஒன்னய நல்லா பாத்துகிடலையோ மித்ரா?” என்க,

 

அடுத்த வார்த்தை பேச அவன் இதழ்களுக்கு அனுமதியில்லாது பூட்டிக்கொண்டாள்.

 

சின்னத் தீண்டல், வேதனையின் சுவடுகளைக் கலைக்கும் நோக்கத்தில் இறங்க,

 

மென் உரசல்களில் மோதிக்கொண்டு திடுமென்ற இசையோடு காதல் துளிகளைப் பொழியும் பெரும்மழையாய், மோகம் ஊற்றெடுத்து இருவரையும் அரவணைத்துக் கொண்டது.

 

சிப்பியென இருக்கும் அவளது விழிகளை ஆடவன் சிற்பியாய் மாறி தன் இதழ் கொண்டு செதுக்க, அதனில் உரு பெற்ற விழிகளில் காதல் கசிந்துருகியது.

 

மஞ்சத்தை விடுத்து, கட்டிலருகே கீழே அவளோடு சரிந்தவன், அமைதியாய் அவளில் கரைய, தன் நேசம் பூசிய மொழிகளில் அவனை பாவை ஆராதித்துக் கொண்டிருந்தாள்.

 

‘பொன்மணி மேகலை ஆடுதே உன் விழி தான் இடம் தேடுதே 

பெண் உடல் பார்த்ததும் நாணுதே இன்பத்தில் வேதனை ஆனதே 

என் அத்தான்….

என் அத்தான் உன்னை எண்ணித்தான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் 

சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான் 

மோகந்தான் சிந்தும் தேகந்தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்’ என்று பாடல் பின்னணியில் ஒலிக்க,

 

அந்த இசையில், திசைமறந்து பயணித்துக் கொண்டிருந்தவள், நாணம் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

 

அதில் மந்தகாசப் புன்னகை சிந்தியவன், “வெளக்க அணைக்கவேயில்லியே மவாராணி?” என்க,

 

பதில் கூற இயலாது அவன் மேல்கரத்தை பற்றிக் கொண்டு இன்னும் குழைந்தாள்‌. அதில் சிரித்துக் கொண்டவன் அவள் முகம் நிமிர்த்தி, “எப்பவுமே ஒன்னய சமாதானப்படுத்த வேண்டியவன், அந்த வேலைய ஒனக்கு வச்சுடுதேம்ல?” என்க,

 

கண்கள் மூடி மெல்ல இதழ் பிரியாது சிரித்தாள்.

 

“பரவால இதுவும் நல்லாத்தேம் இருக்கு” என்று அவன் கூற,

 

“ச்சு.. அமைதியாருங்களேன்.. ப்ளீஸ்” என்று நாணத்துடன் கூறி அவன் சிரிப்பில் இன்னும் இன்னும் சிணுங்கி இன்பமாய் சிதைந்தாள்.

 

Click on a star to rate it!

Rating 3.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்