Loading

அத்தியாயம் 29

அன்று காலை ரிசாட்டிற்கு சென்ற அர்ஜூனுக்கு வேலை ஓடவேயில்லை.

 

நிவேதா ஏதோ தவறு செய்து விட்டு தன்னிடம் மறைக்கிறாளோ என்று தந்தையாய் பதறியது அவனுள்ளம்.

 

நேற்று இதை தான் இளமயில் பூடமாக தன்னிடம் கூறினாளோ என்று சிந்தித்தவனின் உள்ளம் உடனே இளமயிலிடம் பேச வேண்டுமெனப் பரபரக்க, மீண்டுமாய் இளங்குமரனின் கைப்பேசிக்கு அழைத்தான் அர்ஜூன்.

 

அப்பொழுது தான் இளமயிலிடம் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்திருந்த இளங்குமரன், உடனே அர்ஜூனின் அழைப்பையேற்றுப் பேசினான்.

 

“சாரி அர்ஜூன்! காலைல கொஞ்சம் வேலையா இருந்ததுல உங்க போன் காலை கவனிக்கலை. சொல்லுங்க அர்ஜூன்” என்றான்.

 

“மயிலுக்கிட்ட பேசனும் டாக்டர்” என்றான் அர்ஜூன்.

 

“மயிலு பசங்களை ஸ்கூல்ல டிராப் செய்ய போயிருக்கா. எதுவும் அர்ஜன்ட் விஷயமா பேசனும்னா ஹாஸ்பிடலுக்கு நேர்லயே வாங்க அர்ஜூன்” என்ற இளங்குமரனை அங்கே அவனின் மருத்துவ நண்பர்கள் அழைக்கவும்,

 

“ஒரு மீட்டிங்ல இருக்கேன் அர்ஜூன். முடிஞ்சதும் கால் செய்றேன்” என்றவனாய் இணைப்பைத் துண்டித்து விட்டு மருத்துவர்களை நோக்கிச் சென்றான்.

 

“ஓகே டாக்டர்” என்றவனாய் இணைப்பைத் துண்டித்திருந்தான் அர்ஜூன்.

 

இளங்குமரன் கால நேரம் கூறாது நேரில் வரக் கூறிவிட்டதால் உடனே ரிசாட்டில் இருந்து கிளம்பியிருந்தான் அர்ஜூன்.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையை வந்தடைந்த அர்ஜூன், இளங்குமரனுக்கு கைப்பேசியில் அழைத்துத் தெரிவிக்க, “என்னது ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்களா?” என்று முதலில் அதிர்ந்தவன் அதன் பின்பு தான், தான் அவனிடம் நேரம் கூறாமல் விட்ட தவறை உணர்ந்தான்.

 

“சாரி அர்ஜூன். உங்களை ஈவ்னிங் வரச் சொல்ல நினைச்சு, பேசுற அவசரத்துல சொல்லாம விட்டிருக்கேன்” என்றவனாய் நேரத்தைப் பார்த்தவன்,

 

“இங்கே நம்ம ஹாஸ்பிட்டல் பின்னாடி இருக்க கான்ஃபரன்ஸ் ஹால்ல தான் இருக்கேன். இருங்க டென் மினிட்ஸ்ல வந்துடுறேன்” என்றான்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அர்ஜூனிடம் வந்த வரவேற்பாளினி, “நீங்க தான் அர்ஜூனா? டாக்டர் உங்களை உள்ளே உட்கார வைக்கச் சொன்னாங்க! வாங்க” என்று அவனை அழைத்துச் சென்று இளமயில் நோயாளிகளுக்கு ஆலோசனை தரும் அறையில் அமர வைத்தாள்.

 

அடுத்த சில நிமிடங்களில் அந்த அறைக்குள் நுழைந்த இளங்குமரன்,

“ஹாய் அர்ஜூன்! சாரி இன்னிக்கு டாக்டர்ஸ் கான்பெரன்ஸ் நடக்குது நம்ம ஹாஸ்பிட்டல்ல. அதுல பிசியா இருந்ததுல கன்ப்யூசன் ஆகிடுச்சு. மயிலு காலேஜூக்குப் போயிருக்கா! ஈவ்னிங் தான் உங்களை அவ வரச் சொன்னா! நான் தான் போன்ல உங்ககிட்ட சொல்லாம சொதப்பிட்டேன். அதான் நானே பேசிடலாம்னு வந்தேன்” என்று விளக்கமளித்தவனாய் அவன் முன்பு வந்து அமர்ந்தான்.

 

“சாரி டாக்டர்! டிஸ்டர்ப் செஞ்சிட்டேனா? நீங்க உங்க வேலையைப் பாருங்க. நான் ஈவ்னிங் வரேன்” என்று அர்ஜூன் எழும்பவும்,

 

“நோ அர்ஜூன்! உட்காருங்க” அவனை அமரப் பணித்தான்.

 

“கான்பரன்ஸ் மதியம் தான் நடக்குது! இப்ப அதுக்கான அரேஞ்மென்ட்ஸ் அண்ட் டிஸ்கஷன் தான் போய்ட்டு இருக்கு” என்ற இளங்குமரன்,

 

“சொல்லுங்க என்ன பிரச்சினை? ஏன் இவ்ளோ வாட்டமா தெரியுறீங்க? நேத்து வீட்டுலருந்து கிளம்பும் போது கூட நல்லா தானே‌ இருந்தீங்க” எனக் கேட்டான்.

 

இளமயில் மூலம் ஏற்கனவே விஷயத்தை அறிந்திருந்தாலும் அர்ஜூன் மூலம் அறிந்து கொள்ள முனைந்தான் இளங்குமரன்.

 

காலை கைப்பேசியில் நிவேதா யாரிடமோ உரையாடியதைப் பற்றியும் தன்னிடம் அதை மறைத்துப் பொய்யுரைத்ததைப் பற்றியும் இளங்குமரனிடம் உரைத்த அர்ஜூன்,

 

“மனசே சரியில்ல டாக்டர். என்னமோ தப்பா நடக்குதுனு தோணிட்டே இருக்கு. நிவியை நிறுத்தி வச்சி துருவித் துருவிக் கேட்கவும் மனசு வரலை. இந்தப் பிரச்சினைல என் பொண்டாட்டியை வேற திட்டிட்டு வந்துட்டேன்” கவலையான குரலில் உரைத்தான்.

 

“நிவேதாவை நீங்க கேட்காம இருந்தது சரி தான் ஆனா அர்ச்சனாவை ஏன் திட்டுனீங்க அர்ஜூன்?” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“நிவிக்கிட்ட போன் இருக்குங்கிறதே எனக்கு ஷாக்கா இருந்துச்சு டாக்டர்.  அச்சுவுக்கும் அவகிட்ட போன் இருக்கிறது தெரியாதுனு நினைச்சா, அவளுக்குத் தெரிஞ்சிருக்கு ஆனா ஞாபகம் இல்லைனு சொல்றா! இந்தளவுக்கா பசங்க மேல கவனமில்லாம இருப்பானு கோவம். என்ன வளர்த்து வச்சிருக்கா பசங்களைனு வந்த கோவத்துல திட்டிட்டேன்” சற்றுத் தயங்கியவாறே உரைத்தான் அர்ஜூன்.

 

“குழந்தை வளர்ப்புங்கிறது ஷேர்டு ரெஸ்பாசிபிலிட்டி (Shared Responsibility) அர்ஜூன்! அப்பா அம்மா ரெண்டு பேருக்குமே சரிசமமான பங்கு இருக்கு. நீங்க எப்படி வெளி வேலைகள்னால பிசியா இருந்தீங்களோ அப்படித் தானே அவங்களும் வீட்டு வேலைகள்னால பிசியா இருந்திருப்பாங்க. கூடவே பிள்ளைகளையும் பார்த்துக்கிறது அவங்களுக்கு கூடுதல் வேலை தானே!

 

அவங்களோட உடல் மன மாற்றங்களை வேற அவங்க ஹேண்டில் செய்யனும். பசங்களோட படிப்புகளையும் பார்க்கனும். எல்லாத்துக்குமே உனக்கு நான் பக்கப்பலமா இருப்பேன்னு நீங்களும் சில ரெஸ்பாசிபிலிட்டி எடுத்துக்கிட்டா அவங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டா தெம்பா இயங்குவாங்க அர்ஜூன். அதை விட்டுட்டு நீ வீட்டை முழுசா பார்த்துக்கோ, நான் சம்பாதிச்சு போடுற வேலையை மட்டும் செய்றேன்னு இருந்தா அது அவங்களுக்கு பிரஷரா தான் இருக்கும்.

 

இப்ப சொல்லுங்க, இதுல நீங்க எப்படி அவங்களை மட்டும் குத்தம் சொல்ல முடியும்” என்று இளங்குமரன் கேட்கவும்,

 

“தப்பு தான் டாக்டர்” என உடனே ஒத்துக் கொண்டான் அர்ஜூன்.

 

“பிள்ளைங்க தவறு செஞ்சா அதுக்கு பெற்றோர் மட்டும் காரணமாக இருக்க முடியாது அர்ஜூன். வீட்டுல இருக்கிறதை விட ஸ்கூல்ல கூடப் படிக்கிற பசங்க கூடவும் ஃப்ரண்ட்ஸ் கூடவும் தான் பாதி நேரம் பிள்ளைங்க செலவழிக்கிறாங்க‌. அதனால அவங்க வளரும் போது சுத்தி இருக்க சூழலும் முக்கியம்.

 

அவங்க யாருக்கிட்ட பேசுறாங்க பழகுறாங்கனு தெரிஞ்சிக்க வேண்டியது பேரன்ட்ஸ் ஓட கடமை.

 

வீட்டுக்குள்ள இருக்க பாண்டிங் குறையும் போது தான் பிள்ளைங்க வெளில அன்பைத் தேடுவாங்க. என்ன தான் சுற்றம் சூழல் சமூகம் வயசுனு சொன்னாலும், வீட்டுக்குள்ள காண்பிக்கிற அன்பை விட பெரிய அன்பு வெளில கிடைக்காதுன்ற அளவுக்கு அவங்க டீன்ஏஜ்ல ஃபீல் செய்யனும். அப்ப தான் தவறிப் போக மாட்டாங்க அர்ஜூன். நீங்க அங்க தான் தவறிட்டீங்க” என்றான் இளங்குமரன்.

 

அர்ஜூனின் முகத்தில் கவலை ரேகைகள்!

 

குடும்பத்திற்காக நேரம் செலவழிக்க வேண்டிய நேரத்தில் தான் செய்யாது விட்ட தவறினால் இந்நிலை வந்துள்ளது என்று புரிந்தது அவனுக்கு.

 

அமைதியாக அவனைப் பார்த்த இளங்குமரன், “இப்ப உங்க பொண்ணு யாரையோ காதலிக்கிறானு சொன்னா என்ன செய்வீங்க அர்ஜூன்?” எனக் கேட்கவும்,

 

“என்னது லவ்வா? இந்த வயசுலயா?” என்று அதிர்வுடன் கேட்டான் அர்ஜூன்.

 

இளமயிலும் நிவேதாவும் சந்தித்த நிகழ்வை மேலோட்டமாக உரைத்த இளங்குமரன் இன்று காலை இளமயில் தன்னை அழைத்துக் கூறியதையும் உரைத்தான்.

 

இளங்குமரன் உரைத்ததைக் கேட்டு அதிர்ச்சி, கோபம், கவலை என கலவையான உணர்வுகளுடன் அர்ஜூன் அமர்ந்திருந்த நேரம் தான் இளமயிலும் அர்ச்சனாவும் அறையினுள்ளே நுழைந்தனர்.

 

இளமயிலைப் பார்த்ததும், “மயிலம்மா நீ காலேஜூக்குப் போகலையா?” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“இல்ல மச்சான்! காலேஜூக்கு லீவ் சொல்லிட்டேன். அர்ச்சனாவுக்கு டெஸ்ட் எடுத்துடலாம்னு கையோடக் கூட்டிட்டு வந்துட்டேன்” என்ற இளமயில்,

 

“அர்ஜூன் நீங்க எப்ப வந்தீங்க?” எனக் கேட்டப் போது மயங்கிச் சரிந்திருந்தாள் அர்ச்சனா.

 

காலையிலிருந்து பலவிதமான உணர்வுகளுக்குள் சுழன்றவளாய் கவலையுடன் உழன்றிருந்த அர்ச்சனாவுக்கு அர்ஜூனைக் கண்டதும் ஏதோ தவறு செய்தது போல் உள்ளம் பயந்து நடுங்கவும், மயங்கிச் சரிந்திருந்தாள்.

 

அர்ச்சனாவின் அருகே நின்றிருந்த இளமயில் அவளைக் கீழே விடாது உடனே தாங்கிப் பிடிக்க, ‘அச்சுமா’ எனப் பதறிக் கொண்டு ஓடி வந்து அவளை தன் மீது சாய்த்திருந்தான் அர்ஜூன்.

 

“நர்ஸ்! ஸ்ட்ரச்சர் கொண்டு வாங்க” என்று கத்தியிருந்தான் இளங்குமரன்.

 

அடுத்த சில நிமிடங்களில் அர்ச்சனாவை அந்த மருத்துவமனையிலேயே ஓரறையில் அனுமதித்திருந்தனர்.

 

ஒரு மணி நேரம் கழிந்திருந்த நிலையில், கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்த அர்ச்சனாவின் கையில் ஊசியுடன் மருந்து ஏறிக் கொண்டிருந்தது.

 

அவளருகே நாற்காலியில் கவலையுடன் அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அர்ஜூன்.

 

மயக்கம் தெளிந்த பிறகும் அர்ஜூனிடம் பேச பயம் கொண்டவளாய் அமைதியாக கண் மூடிப் படுத்திருந்தாள் அர்ச்சனா.

 

அவளின் கருவிழிகள் உருளுவதைக் கண்டு விருட்டென எழுந்து அவளருகே அமர்ந்த அர்ஜூன், “அச்சுமா” மென்மையாய் அழைத்தவனாய் அவளின் தலை முடியைக் கோதினான்.

 

மெல்ல கண் விழித்து அவனைப் பார்த்தவளின் கண்களில் சட்டென நீர் சூழ்ந்து கொள்ள, “என்னடா” என்றவனாய் அவளின் கன்னத்தை வருடினான்.

 

சட்டென விழி நீர் வெளியாகி கன்னத்தை நனைக்கவும், கண்ணீரைத் துடைத்தவனாய், “என்னடா உடம்பு ரொம்ப முடியலையா?” எனக் கேட்டான்.

 

இல்லையென அவளின் தலையசைய, அவள் உடலின் நடுக்கத்தை கையினில் உணர்ந்தவன், “குளிருதாடா கண்ணம்மா? காய்ச்சல் அடிக்குதா என்ன?” எனக் கேட்டவாறு அவளின் கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்துப் பார்த்தான்.

 

அவனின் கண்ணம்மா என்ற அழைப்பிலும், இந்த ஆறுதலான பேச்சிலும் அவளின் பதட்டமும் நடுக்கமும் மேலும் அதிகமாக, “அஜூப்பா” என்று அழுகைக் குரலில் கதறியவளாய் எழுந்து மருந்து ஏற்றியிருந்த கையாலேயே அவனை அணைத்து மார்பில் சாய்ந்து அழுதாள்.

 

“பார்த்துப் பார்த்துடா” பதறியவாறு மருந்து ஏறியிருந்த கையை தன்னிலிருந்து எடுத்து தள்ளி வைத்தவனாய் அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து உச்சியில் முத்தமிட்டான்.

 

“நிவி.. நிவி.. நான்.. எனக்கு.. எனக்கு எதுவும் தெரியாது அஜூப்பா!” என்றவளாய் கேவினாள் அர்ச்சனா.

 

அவளை அணைத்திருந்த தனது கரங்களில் அவளின் உடல் நடுக்கத்தை உணர்ந்தவன், முதுகை வருடியவனாய் அவளின் உச்சியில் முத்தமிட்டவாறே, “ஒன்னுமில்லடா! ஒன்னுமில்ல! எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நான் இருக்கேன். சரி செஞ்சிடலாம். நீ பயப்படாதடா கண்ணம்மா” என்று ஆறுதல் மொழி உரைத்தான்.

 

அழுகையின் விசும்பலுடன், “இல்ல நிவி செஞ்சது தெரிஞ்சா நீங்க என்னைத் திட்டுவீங்க” ஈரவிழிகளால் அவனை ஏறிட்டுப் பார்த்தவாறு கூறினாள்‌.

 

காலை தான் அவளைத் திட்டியது எந்தளவிற்கு அவளைப் பாதித்திருக்கிறது என்பதைக் கண்டவனுக்கு மனம் நொந்து போனது.

 

அவளின் கண்களைத் துடைத்து இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டவனாய், “சாரிடா கண்ணம்மா! உன் அஜூப்பாவை மன்னிப்பியா” என்றான்.

 

திடீரென்ற அவனின் மன்னிப்பு வேண்டலில் புரியாது அவனை அவள் பார்க்க, “டாக்டரும் மயிலும் நடந்ததை எல்லாம் என்கிட்ட சொல்லிட்டாங்கடா” என்றான் அர்ஜூன்.

 

அதிர்வுடன் சட்டென அவனை விட்டு விலகியவளாய், “பிள்ளையை நான் தான் ஒழுங்கா வளர்க்காம விட்டுட்டேன்” அழுகையினூடே உரைத்தாள்.

 

“அப்படிலாம் இல்ல அச்சுமா. சாரிடா! நான் அப்படித் திட்டினது தப்புத் தான்” என்று மன்னிப்புக் கேட்டான் அர்ஜூன்.

 

அவனை விட்டு விலகி அமர்ந்தவளாய்,

“இல்ல என் மேல தான் தப்பு! வீட்டையும் பிள்ளைங்களையும் கவனிச்சிக்கிறது தானே என் வேலை” என்றாள்.

 

“அச்சுமா ஐம் ரியலி சாரி” என்று மீண்டுமாய் அவன் மன்னிப்பு வேண்ட, அவள் அதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

 

“என் மேல தான் தப்பு! என் வளர்ப்பு தான் தப்பு. எல்லாமே என்னால தான்” என்று அழுகையுடன் கூறியவளாய் மீண்டும் மயங்கிச் சரிந்தாள் அர்ச்சனா.

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்