
“அம்மா நான் வருணை லவ் பண்றேன்மா. நான் காலைல போன்ல அவன்கிட்ட பேசினதை அப்பா கேட்டுட்டாங்கமா” என்று நிவேதா கூறியதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனாள் அர்ச்சனா.
‘என்னது லவ்வா? என்ன வயசாகுது இவளுக்கு? லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்கா?’ என்று குழம்பியவளாய் நிவேதாவைப் பார்த்தாள் அர்ச்சனா.
பெற்ற தாயிற்கு பிள்ளைகள் எவ்வளவு வளர்ந்தாலும் குழந்தையாகத் தானே தெரிவார்கள்.
அதற்கேற்ப மகளின் பருவ வயதான பதினைந்து வயது, குழந்தை வயதாகத் தான் தோன்றியது அர்ச்சனாவுக்கு. மகளின் வயது காதலிக்கும் வயதில்லை என்றாலும் காதலிக்கும் ஆசையைத் தூண்டிடும் வயது என்பதை மறந்து தான் போனாள் அர்ச்சனா.
“நான் வருணை லவ் பண்றது மயிலு ஆன்ட்டிக்குத் தெரியும். அவங்கத் தான் என்னைப் பத்தி அப்பாக்கிட்ட ஏதாவது போட்டுக் கொடுத்திருக்கனும். அதான் அப்பா இப்படி ரியாக்ட் செய்றாங்க. இல்லனா உன்னை லவ் மேரேஜ் செஞ்ச அப்பா ஏன் இப்படி சின்ன விஷயத்துக்கு இவ்வளோ பெரிசா ரியாக்ட் செய்யனும்” என்றாள் நிவேதா.
மயிலுக்கு இந்த விஷயம் தெரியும் என்பதும், இது குறித்து இளமயில் அர்ஜூனிடம் ஏதோ கூறியிருக்கிறாள் என்பதுமே அர்ச்சனாவுக்குப் புதிய செய்தியாக இருக்க, இதில் இதை சின்ன விஷயமென மகள் உரைத்ததில் அவளுக்குத் தலையே சுற்றியது.
அர்ஜூனுக்கு இளமயிலுடன் விவாகரத்தானதும் அதன் பிறகு அர்ச்சனாவை ரெண்டாம் தாரமாக மணந்து கொண்டதும் என எதுவும் நிவேதாவுக்குத் தெரியாது.
அவளுக்குத் தெரிந்ததெல்லாம் தாயும் தந்தையும் காதலித்து மணம் புரிந்து கொண்டவர்கள். அதிலும் அம்மா தான் அப்பாவை விரட்டி விரட்டி காதலிக்க வைத்து மணந்து கொண்டார் என்று அவர்களின் காதல் கதையைக் கேட்டிருந்தவளுக்கு நன்றாகவே தெரியும்.
அதனாலேயே காதலை தனது தாய் எதிர்க்க மாட்டார் என்ற நம்பிக்கையில் இதனை அர்ச்சனாவிடம் உரைத்திருந்தாள் நிவேதா.
இந்தச் சூழலை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை அர்ச்சனாவுக்கு.
மகளுக்கு வந்திருப்பது பப்பி லவ் என்று நன்றாகவே புரிந்தது அர்ச்சனாவுக்கு. ஆனால் மகள் இதை தங்களது காதலுடன் ஒப்பிட்டு கூறியதிலேயே மகளுக்கு இது பப்பி லவ்வாக புரிபடவில்லை என்றும் புரிந்தது.
ஆனால் இதை என்னவென்று சொல்லி மகளுக்குப் புரிய வைப்பது, அடம்பிடிக்கும் வயதல்லவா இது என்று குழம்பிப் போன அர்ச்சனா, “நிவிமா நீ ஸ்கூலுக்குக் கிளம்பு போ” என்று நிவேதாவைக் குளிக்கப் போகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் மா! பாரு நீ எவ்ளோ ஈசியா என் லவ்வை எடுத்துக்கிட்ட! ஆனா அப்பா எப்படி ஓவர் ரியாக்ட் செய்றாங்க பாரு! இன்னிக்கு நீயும் என் கூட ஸ்கூலுக்கு வா மா! நான் உனக்கு வருணை இன்ட்ரோ பண்றேன்” என்றவளாய் துள்ளலுடன் குளிக்கச் சென்றாள் நிவேதா.
‘அய்யோ இந்த ஜென் சி பிள்ளைகளை வைச்சிக்கிட்டு.. காதலிக்கிறதும் கல்யாணம் செய்றதும் சின்ன விஷயமா இவளுக்கு’ என்று தலையிலேயே அடித்துக் கொண்டாள் அர்ச்சனா.
‘நிச்சயமா இந்த விஷயம் அர்ஜூனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இவ யாருக்கிட்டயோ பேசினதா வந்த சந்தேகத்துக்கே அப்படிக் கத்தின மனுஷன், இவளோட காதலைப் பத்தி தெரிஞ்சா என்ன ஆட்டம் ஆடுவாரோ தெரியலையே?’ நெஞ்சம் பதறியது அர்ச்சனாவுக்கு.
‘என் காதலுக்குக் கூட நான் இவ்வளோ பயப்படலையே! என்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கா என் பொண்ணு’ என்று நினைத்த நொடி கண்களில் இருந்து பொசுக்கென பொங்கி வழிந்தது கண்ணீர்.
‘ம்ப்ச் அழுதுட்டே இருந்தா ஒன்னும் செய்ய முடியாது’ கண்ணீரைத் துடைத்தவளாய் நிமிர்ந்து அமர்ந்தவள்,
‘மொதல்ல நிவியை எப்படி ஹேண்டில் பண்றதுனு பார்க்கனும்?’ என்று சிந்திக்கத் தொடங்கினாள்.
அந்தச் சிந்தனையுடனேயே கீழே சமையலறைக்குச் சென்ற அர்ச்சனா வழமைப்போல் பால் காய்த்து அனைவருக்கும் ஏற்ப காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் எனக் கலக்கத் தொடங்கினாள்.
அப்போது அங்கு வந்த அவளின் மாமியார் சித்ரா, “நேத்து அந்த மயிலு வீட்டுலருந்து லேட்டா வந்தீங்க போல! அங்கே போக வேண்டாம்னு நான் சொல்லியும் கேட்காம உன்னையும் கூட்டிட்டுப் போய் அங்கே அவ்ளோ நேரம் இருக்க வச்சிருக்கான் பார்த்தியா! அப்படி என்ன தான் அந்த மயிலுக்கிட்ட இருக்கோ தெரியலை. அவ என்ன சொன்னாலும் மண்டையை ஆட்டுவான் என் மவன்” என்று காழ்ப்புணர்ச்சியுடன் உரைத்தவராய் அங்கிருந்து செல்லவும்,
அர்ச்சனாவின் மூளைக்குள் பல்ப் எரிய, ‘வாவ் தேங்க்ஸ் அத்தை! ஐடியா கிடைச்சிருச்சு’ என்று மனத்திற்குள் அத்தையிடம் நன்றியுரைத்துக் கொண்டாள்.
‘மயிலு சொன்னா அஜூ கேப்பாரு! மயிலை வச்சி அஜூவை கோபப்படாம இந்த விஷயத்தை ஹேண்டில் செய்ய வைக்கனும். நிவியை இப்ப எப்படி ஹேண்டில் செய்றதுனும் மயிலுக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும்’ என்று மனத்தோடு நினைத்துக் கொண்டாள்.
இந்த யோசனை வந்ததும் தான் இந்தப் பிரச்சனையைச் சுலபமாய் கையாள முடியும் என்கின்ற நம்பிக்கையும் மனத்திடமும் வந்தது அர்ச்சனாவுக்கு.
‘மொதல்ல நிவேதாவைப் பத்தி மயிலு அஜூகிட்ட எதுவும் சொன்னாங்களானு கேட்கனும்? மயிலுக்கு எப்படி நிவேதாவை முன்னாடி தெரியும்னு கேட்கனும்?’ என்று இளமயிலிடம் பேச வேண்டியவற்றை மனத்திற்குள் குறித்துக் கொண்டவளாய் பால் கலந்து எடுத்துக் கொண்டு கீழே மாமியார் மாமனாருக்குக் கொடுத்து விட்டு பிள்ளைகளின் அறைக்குச் சென்று மேஜையில் கோப்பைகளை வைத்து விட்டு அர்ஜூன் அறைக்குச் சென்றாள் அர்ச்சனா.
அவன் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்கவும், அவனுக்கான கோப்பையை மேஜை மீது வைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது.
‘என்னை என்னலாம் பேசிட்டாரு! என் பிள்ளைங்க மேல எனக்கு அக்கறை இல்லாமலா இருக்கும். என் பிள்ளைங்களை எப்படி பொறுப்பா வளர்க்கனும்னு எனக்குத் தெரியாமலா இருக்கும். இந்த விஷயத்தை சரி செஞ்சிட்டு நான் யாருனு காட்டுறேன் இவருக்கு’ என்று மனத்தோடு நினைத்தவளாய் அங்கிருந்து வெளியே வந்தாள் அர்ச்சனா.
அடுத்த அரை மணி நேரத்தில் யாரிடமும் கூறாமல், அவள் வைத்துச் சென்ற பாலையும் அருந்தாமல், காலை உணவையும் உண்ணாமல், அர்ஜூன் அவனது அலுவலுக்குக் கிளம்பிச் சென்றிருந்தான்.
அர்ஜூன் கிளம்பிச் சென்றதை அவனது மகிழுந்து செல்லும் சத்தத்தை வைத்து தான் தெரிந்து கொண்டாள் அர்ச்சனா.
அர்ஜூன் வெளியூருக்குப் பயணப்படும் நேரங்களில் அர்ச்சனா தான் மகிழுந்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றிடுவாள்.
அதனால் இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அவளே அழைத்துச் செல்லுமாறு அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு சென்றிருந்தான் அர்ஜூன்.
அவனது குறுஞ்செய்தியைப் பார்த்து பெருமூச்சு விட்டவளாய் உடனே குளிக்கச் சென்றாள்.
நிவேதா அந்த வருணை அர்ச்சனாவுக்கு அறிமுகம் செய்து வைப்பதாய் கூறியிருந்ததால் அவளை மிதிவண்டியில் செல்ல வேண்டாமெனக் கூறி மகிழுந்தில் தன்னுடனேயே அழைத்துச் சென்றாள் அர்ச்சனா.
சிவகணேசனை அவனது பள்ளியில் இறக்கி விட்ட அர்ச்சனா, நிவேதாவின் பள்ளிக்குச் செல்வதற்காக மகிழுந்தை திருப்பிய நேரம் இளமயிலைப் பார்த்தாள்.
இளமயிலும் இன்று இளங்குமரன் இல்லாது தனித்து மகிழுந்தை ஓட்டியவாறு தங்களது இரட்டையர் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக
வந்திருந்தாள்.
இளமயிலைப் பார்த்த அர்ச்சனாவுக்கு தேடிய தெய்வத்தை நேரிலேயே கண்ட பரவசமும் ஆசுவாசமும் உண்டாக, மகிழுந்தை ஓரங்கட்டி விட்டு விறுவிறுவென இளமயிலை நோக்கிச் சென்றாள்.
மகிழுந்தில் அமர்ந்திருந்த நிவேதாவுக்கோ, ‘இந்த அம்மா ஏன் மயிலு ஆன்ட்டிக்கிட்டப் போறாங்க’ என்று எரிச்சலாக வந்தது.
தனது பிள்ளைகளை பள்ளி வாசலில் விட்டு திரும்பி தனது மகிழுந்தை நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடந்து வந்திருந்த இளமயிலை நோக்கி சென்றிருந்தாள் அர்ச்சனா.
தன்னை நோக்கி வந்த அர்ச்சனாவைப் பார்த்துச் சிரித்து கையசைத்தவளாய் நடந்த இளமயிலுக்கு அர்ச்சனாவின் முகத்தில் தென்பட்ட கவலையிலேயே, எதுவோ சரியில்லை என்று தோன்றியது.
தன்னருகே வந்து நின்ற அர்ச்சனாவிடம், “என்னாச்சு அர்ச்சனா? ஆர் யூ ஓகே? இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?” எனக் கேட்டாள் இளமயில்.
உடனே கண்களில் கண்ணீர் திரண்டுவிட, இல்லை எனத் தலையசைத்த அர்ச்சனா கண்களைத் துடைத்தவளாய் காலை நடந்ததை உரைத்தாள்.
“காதலிக்கிற வயசா இது மயிலு. இதுல அவ இந்தக் காதலை எங்கக் காதலோட கம்பேர் பண்ணி வேற பேசுறா! எனக்கு அவக்கிட்ட என்னனு சொல்லி புரிய வைக்கிறதுனே தெரியலை மயிலு” என்று புலம்பினாள் அர்ச்சனா.
“அர்ச்சனா கூல் டவுன். இதெல்லாம் அந்த வயசுல இயல்பா நடக்குறது தான். நாம பக்குவமா எடுத்துச் சொன்னா கேட்டுப்பாங்க” என்று நம்பிக்கை அளித்தாள் இளமயில்.
“நிஜமா கேட்டுப்பாளா? இதை எப்படி அர்ஜூன்கிட்ட சொல்லப் போறேன்னு வேற தெரியலை. சும்மாவே நான் பொறுப்பா வளர்க்கலைனு சொன்னவரு இது தெரிஞ்சா இன்னும் என்னலாம் எனனைப் பேசுவாரோ ஏசுவாரோனு பதறிட்டு வருது மயிலு” கலங்கிய குரலில் உரைத்தாள் அர்ச்சனா.
அர்ச்சனாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது இளமயிலுக்கு.
இதில் தாய் தந்தையர் இருவருக்குமே பங்கு இருக்கிறது தானே. இச்சூழலை இருவருமே இணைந்து கையாள வேண்டுமே தவிர ஒருவர் மீது மொத்த பழியையும் சுமத்தி சிலுவை சுமக்கச் செய்வது எவ்விதத்தில் நியாயம்? அர்ஜூன் மீது கோபம் வந்தது இளமயிலுக்கு.
“மொதல்ல கூலா இருங்க அர்ச்சனா.
நீங்க பதறுற அளவுக்கு கவலைப்படுற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்லை. அடுத்து இதுல உங்க மேல எந்தத் தப்புமே இல்லை. ஏன் நிவேதா மேலயும் எந்தத் தப்புமே இல்லை. அப்புறம் அர்ஜூன் திட்டுறது எப்படி சரியாகும்? அர்ஜூனுக்கு நாம அதைப் புரிய வச்சா அவர் அதைக் கேட்டுப்பாரு. நான் அர்ஜூன்கிட்ட பேசுறேன். உங்க உடம்பை மொதல்ல பார்த்துக்கோங்க அர்ச்சனா. ரிலாக்ஸா இருங்க. டென்ஷன் ஆகாதீங்க”
இளமயிலின் இந்த அக்கறையான ஆறுதலான பேச்சில் நிஜமாகவே மனத்திற்குள் தெம்பு வந்திருந்தது அர்ச்சனாவுக்கு.
“தேங்க்ஸ் மயிலு” சற்றுத் தெளிந்த முகத்துடன் உரைத்த அர்ச்சனா,
“உங்களுக்கு நிவியையும் நிவி காதலைப் பத்தியும் எப்படித் தெரியும் மயிலு? அந்த வருண் உங்களுக்குத் தெரிஞ்ச பையனா?” எனக் கேட்டாள்.
“வருணா? யாரது?” இளமயில் கேட்க,
“நிவி காதலிக்கிற பையன் பேரு வருண்ணு நிவி சொன்னா” என்றாள் அர்ச்சனா.
“இல்ல அர்ச்சனா. நான் நிவேதா ஸ்கூல்ல செக்ஸ் எஜூகேஷன் பத்தி செமினார் எடுத்தேன். அப்ப தான் நிவேதாவைப் பார்த்தேன். நான் அந்த செமினாரை முடிச்சிட்டு போகும் போது நிவேதா என்கிட்ட தனியா வந்து பேசினா! டீன் ஏஜ்ல உருவாகுற செக்ஸ் ஃபீலிங்க்ஸ் நார்மல் தான்னும் போது காண்டம் யூஸ் செஞ்சி சேப்பா (Safe) செக்ஸ் வச்சிக்கிற ஆப்ஷனும் இருக்கும் போது இரண்டு பேர் மனசுலயும் ட்ரூ லவ்வும் இருக்கும் போது ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வச்சிக்கக் கூடாதுனு சொல்றாங்கனு நிவேதா என்கிட்ட கேட்டா”
என்று இளமயில் கூறியதைக் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டது அர்ச்சனாவுக்கு.
இருபத்தைந்து வயதில் காதலித்த போதும் கூட காமம் பற்றிய போதிய அறிவும் தெளிவும் அர்ச்சனாவுக்கு இருக்கவில்லை. அதைப் பற்றி எவரிடமும் பேசும் தைரியம் கூட இருந்ததில்லை. ஆனால் இந்தப் பெண் பதினைந்து வயதில் இப்படிக் கேட்டிருக்கிறாளே என்று அதிர்ந்து பேச்சுற்றுப் போனாள் அர்ச்சனா.

