Loading

“அவளில்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல டாக்டர்” அர்ஜூனின் இந்த வார்த்தையில் இத்தனை நாள்களாய் அர்ஜூன் குறித்து அர்ச்சனாவின் மனத்தில் இருந்த கசடுகள் அனைத்தும் உள்ளத்தின் அடியாழத்திற்குச் சென்று மறைந்து போயின.

 

உனக்காக நான் இருக்கிறேன், நீ இல்லாது நான் இல்லை என்கின்ற அவனது உணர்வுகளை உரைக்கும் செயலையும் வார்த்தைகளையும் எதிர்பார்த்து ஏமாந்து தானே அவனிடம் தொடர்ந்து சண்டையிட்டு இருந்தாள் அர்ச்சனா. அவனின் இந்த வார்த்தைகள் அவளின் மன உளைச்சலை எல்லாம் பின்னே தள்ளியிருக்க, சற்று நெகிழ்ந்த மனத்துடன் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

 

“டைம்மாகிடுச்சு வாங்க சாப்பிடப் போகலாம்” என்ற இளங்குமரன், அனைவரையும் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.

 

பிள்ளைகளின் அறைக்குச் சென்று அவர்களையும் அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள் இளமயில்.

 

மாடியில் கேண்டில் லைட் டின்னர் போன்று மெல்லிய இசை வழிந்தோட வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த இடத்தைப் பார்வையிட்ட அர்ஜூனும் அர்ச்சனாவும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“வாவ் இப்படி ஒரு பார்ட்டி அரேஞ்ச்மெண்ட்டை நாங்க எதிர்பாக்கலை டாக்டர்” என்று புகழ்ந்தவாறு அங்குப் போடப்பட்டிருந்த உணவு மேஜையில் அமர்ந்தான் அர்ஜூன்.

 

ஒலிபரப்பியின் (ஸ்பீக்கர்) மூலம் மெல்லிய இசை காற்றோடு கலந்து ஒலித்துக் கொண்டிருக்க, இசையை ரசித்துக் கேட்டவர்களாய் உணவு மேஜையில் அமர்ந்தனர் அனைவரும்.

 

வீட்டுப் பணியாளர்கள் உணவுப் பாத்திரங்களை எடுத்து வந்து உணவு மேஜையில் வைத்துக் கொண்டிருக்க, ஒலிபரப்பியின் அருகே சென்ற இளமயில், தனது கைப்பேசியில் ஏதோ பாடலைத் தேர்ந்தெடுத்து ஒலிபரப்பியோடு இணைத்து விட்டு அனைவரையும் பார்த்தவாறு திரும்பி நின்றாள்.

 

“அனைவருக்கும் வணக்கம். எங்களோட அழைப்பை ஏற்று வந்திருக்கும் அர்ஜூன் அர்ச்சனா குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கிறோம். இந்த டின்னர் பார்ட்டியை அர்ச்சனாவோட பாட்டோட ஆரம்பிக்கனும்னு ஆசைப்படுறோம்” என்ற இளமயில், அர்ச்சனாவை அழைத்தாள்.

 

இளமயிலின் இந்தத் திடீர் அழைப்பில் அர்ச்சனா திகைத்துத் தயங்கியவளாய், “இல்லங்க. நான் பாட்டு பாடி ரொம்ப நாள் ஆகிடுச்சுங்க! நான் இப்ப பாடுற மூட்லயும் இல்லை மயிலு” என்று பாட மறுத்தாள்.

 

“எனக்காகப் பாடு அச்சுமா. நீ பாடுறதைக் கேட்டு ரொம்ப நாள் ஆகுதுடா கண்ணம்மா! ப்ளீஸ்டா!” என்று அர்ச்சனாவின் காதினோரம் மெல்லிய குரலில் கெஞ்சினான் அர்ஜூன்.

 

அர்ஜூனின் கண்ணோடு அவள் நோக்க, கண்களைச் சுருக்கிக் கெஞ்சுதலுடன் பாடுமாறு வாயசைத்துக் கூறினான்.

 

எப்பொழுதும் அவள் ரசித்து மயங்கும் அவனது கண்களின் பாவனையில் தன்னை தொலைத்தவளாய் மனம் இறங்கியவள் பாடுவதற்காக இளமயில் அருகே சென்று நின்றாள்.

 

“ஹே அம்மா பாடப் போறாங்க” என்று நிவேதா கைத்தட்டிக் குதூகலிக்க, மற்ற இளையவர்களும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

 

“என்ன பாட்டு பாடட்டும்?” என்று கேட்டாள் அர்ச்சனா.

 

“நீங்க உங்க கல்யாணத்துல அர்ஜூனைப் பார்த்துப் பாடின பாட்டோட கரோகியை கனெக்ட் செஞ்சி வச்சிருக்கேன். பேக்ரவுண்ட் மியூசிக் வரும். நீங்க அதையே பாடுங்க அர்ச்சனா” என்று கண் சிமிட்டியவளாய் உரைத்த இளமயில், அந்தப் பாடலின் இசையை ஓடவிட்டாள்‌.

 

இந்தப் பாடல் இருவரையும் அவர்களின் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களின் காதலைப் புதுப்பிக்க வழிவகுக்கும் என்று திட்டமிட்டுத் தான் இந்தப் பாட்டைத் தேர்ந்தெடுத்திருந்தாள் இளமயில்.

 

எந்தப் பாடலை இளமயில் கூறுகிறாள் என்ற யோசனையுடன் நின்றிருந்த அர்ச்சனா, பாடலின் இசை தொடங்கவும் மனத்தில் பரவசம் பொங்க விழிகளை நிமிர்த்தி அர்ஜூனைப் பார்த்தாள்.

 

அது என்ன பாடல் எனக் கண்டுகொண்ட அர்ஜூனின் பார்வை அர்ச்சனாவை ஆசையுடன் தழுவியது.

 

காதல் கணவா உந்தன்,

கரம் விடமாட்டேன்.

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே!

 

அவள் பாட ஆரம்பிக்கவும் காதலோடு அவளைப் பார்த்தான் அர்ஜூன்.

 

அர்ஜூனின் பார்வையில் தெரிந்த காதலில் மயங்கியவளாய் அவ்வரிகளின் உணர்வுகளை குரலில் வழியச் செய்து இமை மூடி ரசித்துப் பாடினாள் அர்ச்சனா.

 

தாய் வழி வந்த எங்கள்

தர்மத்தின் மேலே.

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே !

 

ஒரு குழந்தை போலே,

ஒரு வைரம் போலே,

தூய்மையான என்

சத்தியம் புனிதமானது !

 

அர்ச்சனாவின் காதல் ததும்பும் குரலில் காதை நிறைத்த பாடலில் அர்ஜூனின் நினைவுகள் அவளைக் கரம் பிடித்த அந்நாள்களுக்குப் பயணித்தன.

 

******

 

அன்றாடம் இரவு ஒன்பதரை மணிக்கு அழைப்பதாகக் கூறிய அந்நாளிற்கு மறுநாள் அர்ச்சனாவின் அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தான் அர்ஜூன்.

 

அவளின் அழைப்பு வந்த மறுநொடி அவனின் முகம் பூவாய் மலர அவ்வழைப்பை ஏற்றான் அர்ஜூன்.

 

“ஹாய் அஜூ” உற்சாகமான குரலில் பேசிய அர்ச்சனாவின் பரவசமும் துள்ளலும் இவனையும் தாக்கி உற்சாகமூட்டின. ஆயினும் அவ்வுணர்வைக் குரலின் மூலம் அவளுக்குத் தெரிவித்து விடக் கூடாது என்று இறுக்கமான குரலில், “ஹாய் அச்சுமா மேடம்” என்று இயல்பாய் உரைத்திருந்தான்.

 

“வாவ் நீங்க அச்சுமானு சொல்லும் போது என் மனசு அப்படியே வானத்துல பறக்குது தெரியுமா!” தன் மனத்தின் உணர்வுகளை அப்படியே அவனிடம் வெளிபடுத்தினாள் அர்ச்சனா.

 

அவன் இதழ்கள் முறுவலித்தன.

 

அவன் ஏதும் எதிர்வினை ஆற்றாது அமைதியாக இருக்கவும், “சாப்பிட்டீங்களா அஜூ?” எனக் கேட்டாள்.

 

“ஹ்ம்ம் ஆச்சு” என்றான்.

 

“நான் சாப்பிட்டேனானு கேட்க மாட்டீங்களா?” எனக் கேட்டாள்.

 

“சாப்பிட்டீங்களா அச்சுமா மேடம்” மேடம் என்ற வார்த்தையை அழுத்தி அவன் உச்சரிக்க,

 

“என்னை வெறுபேத்த தானே மேடம்னு அழுத்திச் சொல்றீங்க” சிணுங்கலாய் கேட்டவள்,

 

“ஆனாலும் பரவாயில்ல. நீங்க இப்படி என்கிட்ட இயல்பா இருக்கிறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்றாள்.

 

“நான் இப்ப தான் வந்தேன். இன்னிக்கு ஒரு ரிசப்ஷன் கச்சேரி இருந்துச்சு. பாடி முடிச்சிட்டு அங்கேயே சாப்பிட்டுட்டு வந்துட்டேன். இப்படிக் கச்சேரிக்குலாம் போனா செம்மயா சாப்பிடலாம் தெரியுமா? பஃபெட் சாப்பாடு தான். சப்பாத்தி, குருமா, பிரிஞ்சி…” எனக் கூறிக் கொண்டே வந்தவள் எதிர்புறமிருந்து எவ்வித சத்தமும் வராமல் போகவும்,

 

“ஹலோ.. ஹலோ.. ஹலோ… லைன்ல இருக்கீங்களா?” எனக் கேட்டாள்.

 

“ஹ்ம்ம் இருக்கேன்” என்றான்.

 

“இப்படி நான் பேசுறதுக்கு ம்ம் கொட்டினா தானே நீங்க கேட்குறீங்களா இல்லையானு எனக்குத் தெரியும். நான் என்னமோ தனியா பேசிட்டு இருக்க மாதிரி இருக்கு. நான் பேசுறதை ம்ம்ம் கொட்டிக் கேளுங்க” என்று கட்டளைப் போல் அவள் உரைக்கவும் அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர, “சரி தான்” என்றான்.

 

“ஹ்ம்ம் சரி நான் எங்கே விட்டேன்” என்று யோசனையுடன் கேட்டாள்.

 

“பிரிஞ்சில விட்டீங்க அச்சுமா மேடம்” என்றான்.

 

“ம்ப்ச் அந்த மேடத்தை கொஞ்சம் கட் பண்ணுங்களேன் அஜூப்பா. பிரிஞ்சி சாப்பிடும் போது வாயில பிரிஞ்சி இலை சிக்கின மாதிரி கடுப்பா வருது” இந்நேரம் வரை அடக்கி வைத்திருந்த சிரிப்புப் பொத்துக் கொண்டு வர சத்தமாகச் சிரித்திருந்தான் அர்ஜூன்.

 

அவனின் சிரிப்பொலியைக் கைப்பேசியில் கேட்டுக் கொண்டிருந்தவளின் உள்ளம் துள்ளிக் குதிக்க, “விட்டுருவீங்க தானே. இனி நான் உங்களுக்கு அச்சுமா மட்டும் தான். சரியா?” என்றாள்.

 

“அதெப்படி நீங்க முடிவு பண்ணலாம் அச்சுமா மேடம்” சிரிப்புடன் அவன் கேட்க,

 

“என் செல்ல அஜூப்பா இல்ல” கொஞ்சும் குரலில் கூறினாள்.

 

“இல்லை” முகம் முழுவதும் புன்னகை மிளிர அழுத்தமாய் உரைத்தான் அவன்.

 

“என் பட்டுக்குட்டி அஜூப்பா இல்ல” கொஞ்சினாள் அவனை.

 

“இல்லை” முகம் கனிந்த போதும் அதே அழுத்தமான குரலில் உரைத்தான்.

 

“என் தங்கம் அஜூப்பா இல்ல” என்று அவள் குழைவாய் சொல்லவும், அவன் குரல் இளகிப் போக, இல்லை என்றான்.

 

அடுத்து ஒரு நொடி வரையில் அவளிடம் இருந்து எவ்வித பேச்சும் வராது போக,

 

‘லைன் கட்டாகிடுச்சா’ என்று யோசித்தவனாய் காதில் இருந்த கைப்பேசியை கையில் எடுத்துப் பார்த்து விட்டு மீண்டுமாய் காதில் வைத்து ஹலோ என்றவன் சொன்னதும்,

 

“அஜூபா அஜூஜூபா.. அஜூபா அஜூஜூபா”

 

ரீங்காரமாய் பாடியிருந்தாள் அர்ச்சனா.

 

ஜீன்ஸ் படத்தில் வரும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் பாடலின் இடையில் வரும் பிஜிஎம்மை அஜூபா அஜூபா என்று பாடியிருந்தாள் அர்ச்சனா.

 

அவள் பாடப் பாட வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்திருந்தான் அர்ஜூன்.

 

“போதும் அச்சுமா! என் கண்ணுல தண்ணி வந்து வயிறு வலியே வந்துடுச்சு” என்று சிரிப்பினூடே அவன் உரைக்க,

 

“என்ன இதுக்கே இப்படிச் சிரிக்கிறீங்க? நான் இதை தான் உங்க நம்பருக்கு ரிங்டோனா வைக்கலாம்னு பிளான் செஞ்சி வச்சிருக்கேன்” தீவிரமான குரலில் அவள் சொல்லவும்,

 

“அடிப்பாவி என் மானத்தை வாங்காத” என்றான் சிரித்துக் கொண்டே!

 

அவனின் உரிமையான பேச்சில் அவளின் உள்ளமும் முகமும் கனிந்து போக,

 

“ஆர் யூ ஓகே அஜூ?” என்று கனிந்த குரலில் கேட்டாள் அர்ச்சனா‌.

 

“ஹ்ம்ம்” என்று மென்னகையுடன் அவன் கூற,

 

“இப்ப உங்க கண்ணுல இருக்க சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பார்க்க ஆசையா இருக்கு அஜூப்பா. நீங்க என்னிக்கும் இப்படிச் சந்தோஷமாவே இருக்கனும்” மனதார உரைத்திருந்தாள் அர்ச்சனா.

 

அவளின் குரலில் நெகிழ்ந்தவனாய், “தேங்க்யூ அச்சுமா! நான் இப்படிச் சிரிச்சு ஒரு வருஷம் மேல ஆகுது” என்றான்.

 

“இனி நீங்க இப்படிச் சிரிச்சிட்டே தான் இருப்பீங்க. அதுக்கு இந்த அர்ச்சனா கேரண்டி” என்றவள்,

 

“எனக்கு தேங்க்ஸ்லாம் வேண்டாம். ட்ரீட் தாங்க” என்றாள்.

 

“ட்ரீட்டா? சரி எங்கே வேணும்?” எனக் கேட்டான்.

 

சற்று யோசித்தவளாய், “இப்ப வேண்டாம். அப்புறமா நானே எங்கே வேணும் எப்படி வேணும்னு சொல்றேன்” என்றாள்.

 

“ஆஹா பெரிசா திட்டம் போடுற மாதிரி தெரியுதே” கேலியாய் அவன் உரைக்கவும்,

 

“ஒன்னும் கவலைப்படாதீங்க. உங்க பாக்கெட்டுக்கு வேட்டு வைக்க மாட்டேன். ஆனா கண்டிப்பா நீங்க எனக்குத் தரப் போற ட்ரீட் ஸ்பெஷலா தான் இருக்கப் போகுது பாருங்க” துள்ளலான குரலில் உரைத்தாள்.

 

“உனக்கு ஸ்பெஷலா இருக்கப் போகுதுனு சொல்றியா?” எனக் கேட்டான்.

 

“இல்ல நமக்கு ஸ்பெஷலா இருக்கப் போகுது” கண்களில் கனவுகள் மின்ன உரைத்தாள்‌.

 

“அச்சுமா நான் உன்கிட்ட ஃப்ரண்ட்டா தான் பேசுறேன். நீயும் அந்த லிமிட்லயே இருந்துக்கோ. தேவையில்லாம கனவுகளை வளர்த்துக்காத” கடுமையான குரலில் உரைத்தான் அர்ஜூன்.

 

“தெரியும் அஜூ! நீங்க ஹேப்பியா இருக்கனும். அது போதும் எனக்கு” என்று அவனிடம் கூறியவளோ,

 

‘உங்களை எப்படி என் வழிக்குக் கொண்டு வரனும்னு எனக்குத் தெரியும் அஜூப்பா’ என்று மனத்தோடு நினைத்துக் கொண்டாள்.

 

“சரி இப்ப நீங்க என்ன சாப்பிட்டீங்க?” எனக் கேட்டாள்.

 

“நான் அங்கே ஹோட்டல்லயே சாப்பாத்தி சாப்பிட்டுட்டு வந்துட்டேன்” என்றான்.

 

“ஹ்ம்ம் அப்புறம் இன்னிக்கு நாள் எப்படிப் போச்சு?” எனக் கேட்டாள்.

 

“ஹ்ம்ம் குட்” என்றான்.

 

“நான் என்ன ரேபிட் ஃபயர் ரவுண்ட்டா நடத்திட்டு இருக்கேன். ஒரு வார்த்தைல பதில் சொல்லிட்டு இருக்கீங்க” என்றவள் கேட்கவும் சிரித்தவன்,

 

“எனக்கு உன்னை மாதிரி நீட்டி முழக்கி பேசத் தெரியாது அச்சுமா” என்றான்.

 

“சரி அப்ப நான் கேட்குறதுக்குலாம் பதில் சொல்லிட்டே வாங்க” என்றவள், அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கியவளாய் அவனது அன்றாட வழக்கங்களை கேட்டறிந்து கொண்டாள்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்