

கையில் பழச்சாற்றை எடுத்துக் கொண்ட நிவேதாவுக்குப் பயத்திலும் பதட்டத்திலும் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பி நிற்க, அவளின் பதட்டத்துக்கான காரணம் புரிந்த இளமயில் மென்னகையுடன் அவளின் தலைக் கோதியவளாய், “என்னமா படிக்கிற? உன் பேரு என்ன?” எனக் கேட்டாள்.
தன்னை தெரியாதது போல் இளமயில் கேட்ட அக்கேள்வியில் ஆசுவாச மூச்சு விட்டவளின் முகம் சட்டெனப் பிரகாசிக்க, “என் பேரு நிவேதா ஆன்டி. நைன்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்” புன்னகையுடன் உரைத்திருந்தாள்.
மற்றவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தவனாய் பார்வையைச் சுழற்றியிருந்த அர்ஜூனின் பார்வையில் நிவேதாவின் இந்தப் பதட்டமும் அதன் பின்பான ஆசுவாசமும் தவறாது வந்து விழுந்திருந்தன.
‘மயிலைப் பார்த்து நிவி ஏன் பயப்படுறா?’ என்று யோசித்தவாறு அவர்களைப் பார்த்தான் அர்ஜூன்.
“படிப்புலாம் எப்படிப் போகுது?” என்று இயல்பாய் இளமயில் சில நிமிடங்கள் அவளிடம் நின்று பேசியதைப் பார்த்தவனின் உள்ளமோ என்னவோ சரியில்லை என்று அவனுக்கு அறிவுறுத்தியது.
“உன் தம்பி எங்கே? வரலையா?” என நிவேதாவிடம் கேட்டாள் இளமயில்.
“சிவா உங்க பிள்ளைங்களோட உள்ளே போனான் ஆன்டி” என்று அவன் சென்ற அறை நோக்கி கையைக் காண்பித்தவாறு உரைத்தாள் நிவேதா.
“ஓ அவங்க ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்களா” என்றவளாய் அறைக்குச் சென்று பிள்ளைகள் மூவருக்கும் பழச்சாற்றைக் கொடுத்து விட்டு வந்து இவர்களுடன் அமர்ந்தாள் இளமயில்.
அனைவருமே ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, அதில் கலந்து கொள்ளாது அமைதியாக அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
அவளின் முகத்தில் அப்பட்டமாய் அசௌகரிய பாவனை தென்பட்டது.
அதைப் பார்த்தவாறு வந்து அமர்ந்த இளமயில் அவளை இயல்பாக்கவென, “உங்க மியூசிக் கான்சர்ட்லாம் எப்படிப் போகுது அர்ச்சனா? சென்னை வந்த பிறகு எந்த கான்சர்ட் க்ரூப்போட சேர்ந்து பாடிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
இளமயிலின் கேள்வியில் அர்ச்சனாவின் முகத்தில் வேதனைப் படர, உடனே அதனை மறைத்தவளாய் சிரித்த முகத்துடன், “அதெல்லாம் மறந்து போய் பல நாளாச்சுங்க” என்றாள்.
“சென்னை வந்த பிறகு அவ எங்கேயும் பாடப் போகலை மயிலு. பசங்களுக்கு ஸ்கூல் அரேஞ்ச் செஞ்சி பாடம் சொல்லிக் கொடுத்து அவங்களைப் பார்த்துக்கிட்டு என்னோட அப்பா அம்மாவைப் பார்த்துக்கிறதுலயே அவளுக்கு நேரம் சரியா போய்டுது” இளமயிலைப் பார்த்து உரைத்திருந்தான் அர்ஜூன்.
இப்போது இளங்குமரனும் இளமயிலும் அர்த்தம் பொதிந்த பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
அர்ச்சனாவைப் பார்த்த இளமயில், “அப்பவே உங்க மேரேஜ் ஃபங்ஷன்ல ஆட்டம் பாட்டம்னு செம்மயா பெர்பார்ம் செஞ்சீங்க தானே! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஏன் பாடுறதை நிறுத்திட்டீங்க அர்ச்சனா? அது தானே உங்க அடையாளம்” எனக் கேட்டாள்.
“ஆமா தான். ஆனா சூழ்நிலை அப்படி ஆகிடுச்சுங்க” விரக்தியான குரலில் உரைத்தாள் அர்ச்சனா.
அவளின் குரலில் தென்பட்ட விரக்தியில் விருட்டென அவளைப் பார்த்தான் அர்ஜூன்.
“வாழ்க்கைல யாருக்காகவும் எதுக்காகவும் நம்ம மனசுக்கு நிம்மதி தர்ற விஷயத்தைச் செய்யாம விட்டுடக் கூடாது அர்ச்சனா. பின்னாடி உனக்காக எனக்குப் பிடிச்ச விஷயத்தைக் கூட செய்யாம நான் விட்டுட்டு இருந்தேனே, ஆனா நீ அதை கூட புரிஞ்சிக்காம நடந்துகிறியேனு நாம யாருக்காக இதெல்லாம் விட்டுட்டு இருந்தோமோ அவங்க மேலேயே பழிப் போட்டுப் பேசிடுவோம். நாம அவங்க மேல வச்ச அன்பையே ஆதங்கம் தாங்காம, அந்த அன்புக்காக இதை செஞ்சேன் அதை செஞ்சேன்னு விளக்கி விலை பேச ஆரம்பிச்சிடுவோம். அதுவே இரண்டையும் பேலன்ஸ் செஞ்சி வாழ்க்கையை நடத்தும் போது அந்த அன்புக்கு ஈடாக எதையும் எதிர்பார்க்காம போய்க்கிட்டே இருப்போம்” என்றாள் இளமயில்.
இளமயிலின் கூற்றில் அர்ச்சனாவின் முகத்தில் வேதனைப் படர்ந்தது. இப்பொழுது அதனை அவள் மறைக்க முற்படவில்லை.
“உண்மை தான் மயிலு. சில நேரம் என்னமோ என்னோட சுயத்தையே நான் இழந்துட்ட மாதிரி தோணும். நான் எதுக்குமே லாயக்கில்லை, நான் நானாவே இல்லனு கூட தோணும்” என்று அர்ச்சனா கூறவும், அர்ஜூன் முகத்தில் யோசனை ரேகைகள்.
இளமயில் ஏதோ சொல்ல முற்படும் போது, “நீங்க எப்படி கல்யாணம் ஆகி குழந்தைங்கனு வந்த பிறகும் பார்மஸி ஷாப் வச்சு நடத்துறீங்க? எப்படி டாக்டரேட் படிச்சீங்க மயிலு? அதை எப்படி அச்சீவ் பண்ணீங்க” தீவிரமான குரலில் கேட்டிருந்தாள் அர்ச்சனா.
“பார்மஸி ஷாப் வைக்கனும்ங்கிறதுக்காக தான் பார்மஸியே படிச்சேன் அர்ச்சனா. ஆனா படிச்சு முடிச்ச பிறகு பல வருஷமா பார்மஸி ஷாப் வைக்கிற சூழ்நிலை அமையவே இல்லை. அப்புறம் கல்யாணத்துக்குப் பிறகு இளா மச்சான் தான் என்னோட லட்சியத்தைப் பத்தி தெரிஞ்சி ஷாப் வச்சி கொடுத்தாங்க. அவங்க தான் என்னை சைக்காலஜில டாக்டரேட் படிக்க வச்சாங்க” என்றாள் இளமயில்.
இளமயில் கூறியதைக் கேட்டு பெருமூச்சு விட்டவளாய்,
கேட்டீங்களா என்பது போல் அர்ஜூனைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள் அர்ச்சனா.
அர்ஜூனுக்கு அர்ச்சனாவின் பார்வையின் பொருள் விளங்கவும், ‘டாக்டர் அவரோட மனைவிக்கு உறுதுணையா இருந்தா மாதிரி அவளோட சிங்கிங் கனவுக்கு நான் உறுதுணையா இல்லனு சொல்றாளா? சிங்கிங்கை விட்ட கோபத்துல தான் என்கிட்ட இப்படி அடிக்கடி சண்டைப் போடுறாளா?’ அதிர்வுடன் நினைத்தவனாய் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான் அர்ஜூன்.
அவளின் குரலும் பாடலும் தான் அவனுக்கு அத்தனை பிடிக்குமே! தானே அவளின் பாடும் கனவைச் செயல்பட விடாமல் செய்திருப்பேன் என்று எப்படி அவளால் நினைக்க முடிந்தது என்று குழம்பிப் போனான் அர்ஜூன்.
‘சென்னைக்கு வந்த பிறகு இங்கே ஏதாவது ட்ரூப்ல சேர்ந்து பாடுறியானு கேட்டதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப என்ன இப்படிச் சொல்லிட்டு இருக்கா இவ! இதனால தான் ஸ்ட்ரெஸ் ஆகி தேவையில்லாத விஷயத்துக்குலாம் என்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்காளா இவ!’ என்று மனத்தோடு நினைத்தவனாய் அவளையே பார்த்திருந்தான் அர்ஜூன்.
அர்ச்சனாவின் பார்வையையும் அர்ஜூனின் முகப் பாவனையையும் பார்த்த இளமயில்,
“ஆனா அர்ச்சனா எனக்கு பார்மஸி கடை வைக்கனும்ன்ற ஆசையும் லட்சியமும் வந்ததே இளா மச்சான்னால தான். அவங்க தான் ஸ்கூல் படிக்கும் போதே காலேஜ்ல பார்மஸி கோர்ஸ் எடுத்துப் படிச்சி இந்தக் கடை வைக்கனும்னு நினைச்சாங்க. அவங்களோட லட்சியம் தான் என்னோடதும்னு நான் இருந்தனால அதையே படிச்சிட்டேன். அதோட இளா மச்சான் எனக்கு பார்மஸி ஷாப் வச்சிக் கொடுக்காம விட்டிருந்தாலும் நானே அதை வச்சிருப்பேன் அர்ச்சனா. அதுக்கான லைசன்ஸ்லாம் நான் முன்னமே வாங்கி வச்சிருந்தேன். அதனால இளா மச்சான் செய்யாம விட்டிருந்தாலும் சில வருஷம் கழிச்சு அதை நானே செஞ்சிருப்பேன்!”
எந்த வகையிலேனும் என்னுடைய லட்சியக் கனவை நானே அடைந்திருப்பேன் என்ற பொருளில் இளமயில் கூறியதைக் கேட்ட அர்ச்சனாவுக்கு, தானும் தனது பாடும் திறமையை யாருக்காகவும் விடாது இருந்திருக்க வேண்டும் என்று புரிந்தது.
சில நொடி அமைதிக்குப் பிறகு இந்தப் பேச்சை மாற்ற விரும்பியவளாய், “ஸ்கூல்லருந்தே பார்மஸி ஷாப் வைக்கனும்னு தான் லட்சியம்னா உங்களுக்கு டாக்டரை ஸ்கூல்ல படிக்கும் போதுலருந்தே தெரியுமா மயிலு” என வினவினாள் அர்ச்சனா.
இளமயிலின் இந்த ஆறுதலான பேச்சில் அவள் மீதிருந்த அர்த்தமற்ற கோபம் எல்லாம் காணாமல் போயிருந்தது அர்ச்சனாவுக்கு. அதனாலேயே அவளால் இளமயிலிடம் இயல்பாய் பேச முடிந்திருந்தது.
“தெரியுமாவா? அப்போதுலருந்தே என் மருமவளுக்கு என் மவன்னா உசுரு” என்று பெருமை பொங்க உரைத்திருந்தார் இளங்குமரனின் தாய் அம்பிகா.
“என்னது ஸ்கூல்லருந்தே லவ் பண்ணீங்களா? உங்களோடது காலேஜ் லவ்னுல நான் நினைச்சேன்” என்று ஆச்சரியத்துடன் அர்ச்சனா வினவ,
இப்போது நிவேதாவின் முகத்தில் பெரும் திகைப்பு.
‘என்னது மயில் ஆன்ட்டியோடது லவ் மேரேஜா? அதுவும் ஸ்கூல் லவ்வா? அப்புறம் என்கிட்ட மட்டும் அன்னிக்கு அப்படி அட்வைஸ் செஞ்சாங்க’ என்று எண்ணியவளாய் இளமயிலைப் பொசுக்கும் பார்வை பார்த்தாள் நிவேதா.
நிவேதாவின் பார்வையைப் பார்த்துச் சிரிப்பு தான் வந்தது இளமயிலுக்கு.
இளங்குமரனுமே நிவேதாவின் பார்வையைப் பார்த்து விட்டு இளமயிலைப் பார்த்தான். நிவேதாவுக்கு ஏற்கனவே இளமயிலைத் தெரியுமோ என்று சந்தேகம் வந்தது அவனுக்கு.
“அந்த வயசுல வர்ற ஈர்ப்பு ஆசையை காதல்னு நினைச்சு குழம்புற டீன்ஏஜ் பிள்ளைங்க மாதிரி தான் நானும் இருந்தேன் அர்ச்சனா. ஆனா அதனால நான் பட்ட கஷ்டங்கள் அதிகம் அர்ச்சனா. அதான் அப்படி அந்த வயசுல வர்ற ஈர்ப்பை காதல்னு நினைச்சு வாழ்க்கையைப் பாழாக்கிக்காதீங்கனு இப்ப பிள்ளைங்களுக்குப் பாடம் எடுத்துட்டு இருக்கேன்” என்று நிவேதாவுக்கு மறைமுகமாய் பாடம் எடுத்தவளாய் உரைத்தாள் இளமயில்.
“ஆனா அதெப்படிங்க தப்பாகும். ஸ்கூல் டேஸ்லருந்து லவ் பண்ணாலும் பொறுப்பா காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குப் போய் வாழ்க்கைல செட்டில் ஆன பின்னாடி மேரேஜ் செஞ்சி நல்லா வாழ்ந்துட்டு இருக்க எத்தனை ஜோடியை ரியல் லைஃப்ல பார்க்கிறோம்” என்று மறுவாதம் செய்தாள் அர்ச்சனா.
“உண்மை தான் அர்ச்சனா. ஆனா அதுக்கு இரண்டு பேரும் அந்தப் பொறுப்பை உணர்ந்து இருக்கனுமே. உடல் இச்சையைத் தீர்த்துக்கிற காதலாகத் தான் இப்ப பெரும்பாலான காதல் இருக்கு. அப்படியான ஆணை நம்பி பெண்கள் காதல்ல விழுந்து வாழ்க்கையைப் பாழாக்கிக்கக் கூடாது இல்லையா. காதல்ன்ற பேருல ஏமாத்துறவங்க தான் இப்ப நிறைய பேரு இருக்காங்க அர்ச்சனா. அதனால இன்றைய காலகட்டத்துல உண்மையான காதல் எதுனு புரிஞ்சிக்கிற மனப்பக்குவம் வரும் போது தான் காதலிக்கனும் அர்ச்சனா” என்றாள் இளமயில்.
“உண்மை தான் மயிலு” என்று ஒத்துக் கொண்டாள் அர்ச்சனா.
அனைவரும் இவர்களின் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“எனக்கு இளா மச்சான் தனியா ஸ்கூல்ல மட்டும் தெரிஞ்ச பையன் இல்ல அர்ச்சனா. அவரோட அப்பா, அம்மா, மாமா, அத்தைனு மொத்த குடும்பமும் எனக்குத் தெரியும். என்னோட அம்மாவும் இளா மச்சானோட அம்மாவும் பால்ய சிநேகிதிகள். ஸ்கூல் லவ்னு என் லவ்வைச் சொன்னாலும் அதுக்குப் பின்னால அவரோட முழு குடும்பமும் அவரோட குணமும் கூட எங்க அம்மாக்கும் எனக்கும் தெரியும். அதனால நல்லவனைத் தான் நான் காதலிக்கிறேன்ற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு. ஆனா இப்ப யாரையும் நல்லவன்னு நம்ப கூடிய காலத்துல நாம இல்லை. இப்படி எல்லாம் தெரிஞ்சி காதலிச்ச நானுமே ஈசியா இளா மச்சானை சேர்ந்துடலை. அந்தக் காதலுக்காக நான் பட்டக் கஷ்டங்கள் அதிகம்” என்றாள் இளமயில்.
“நானும் தான்ங்க கஷ்டப்பட்டேன். இந்த மனுஷனை அவ்ளோ சீக்கிரத்துல ஒத்துக்க வைக்க முடியவே இல்லை” பட்டென அர்ச்சனா உரைத்து விட, சட்டெனச் சிரித்திருந்தனர் அனைவரும்.
ஏதோவோர் ஆதங்கத்தில் படபடவெனப் பேசிய அர்ச்சனாவுக்கு, ‘உளறிட்டோமோ’ என்று தோன்ற அமைதியாகிப் போனாள்.
அர்ச்சனாவின் பேச்சில் அர்ஜூனின் பார்வை அவளை வருடிச் சென்றது.
“ஏன் அர்ஜூன் உங்க மனைவியை அப்படிக் கஷ்டப்படுத்துனீங்க?” என்று இளங்குமரன் சிரிப்புடன் கேட்க,
“இனி என் வாழ்க்கைல கல்யாணமே இல்லங்கிற விரக்தில நான் இருக்கும் போது, கல்யாணம் செஞ்சிக்கலாம்னு அர்ச்சனா வந்து நின்னதும் என்னால ஏத்துக்க முடியலை டாக்டர். ஆனா ஒன்னு மட்டும் உண்மை டாக்டர். அர்ச்சனா மட்டும் என் வாழ்க்கைல வராம இருந்திருந்தா நான் இன்னுமே தனியாளா தான் இருந்திருப்பேன். அவளால தான் நான் இப்ப குடும்பம் குழந்தைங்கனு சந்தோஷமா இருக்கேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த தேவதை அவ. அவளில்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல டாக்டர்” நெகிழ்ச்சியான குரலில் உரைத்திருந்தான் அர்ஜூன்.
அர்ஜூனின் இந்த வார்த்தைகளில் இத்தனை நாள்களாய் ஆற்றாமையில் குமைந்து கொண்டிருந்த அர்ச்சனாவின் உள்ளம் நெகிழ்ந்து போக, விழிகளில் கண்ணீர் திரண்டு விட்டிருந்தன.
இளமயிலும் இளங்குமரனும் இவர்களை விருந்துக்கு அழைத்ததற்கான நோக்கம் நிறைவேற ஆரம்பித்திருந்தது.


