

அன்றிரவு நிகழ்ச்சியைச் சிறப்பாய் நிறைவு செய்து விட்டு அங்கேயே இரவுணவையும் உண்டு விட்டு இரவு பத்து மணியளவில் வீட்டிற்குச் சென்றான் அர்ஜூன்.
எப்பொழுதும் வீட்டிற்குள் நுழைந்ததும் மனத்தைக் கவ்வும் வெறுமை இன்று அவனிருந்த அலுப்பிலும் சோர்விலும் வெகு அதிகமாகவே அவனைத் தீண்டின.
பெருமூச்சு விட்டவனாய் குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு வந்து கட்டிலில் படுத்துக் கண் மூடிய மறு நொடி, “உங்களை நான் கல்யாணம் செய்ய கன்சிடர் பண்ணலாமானு யோசிச்சிட்டு இருக்கேன். அதுக்கு உங்களுக்குக் கல்யாணம் ஆச்சா இல்லையானு எனக்குத் தெரியனும் தானே” பரவசமான குரலில் சிரித்த முகமாய்க் கண்கள் மின்ன தன்னிடம் கேட்டிருந்த அர்ச்சனாவின் முகம் அவன் மனக்கண்ணில் வந்து போனது.
சட்டென அவனையும் மீறி அனிச்சையாய் முறுவலித்திருந்தது அவன் இதழ்.
அந்நிகழ்வை நோக்கிப் பயணித்தன அவன் நினைவுகள்.
அவள் அவ்வாறு கேட்டதும் வியப்பில் விரிந்திருந்தன அவன் விழிகள்.
அவன் கண்களில் தோன்றிய பாவனையை ரசித்துப் பார்த்தவளாய், “உங்க கண்ணு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு” தன்னை மீறியே உரைத்திருந்தாள்.
இப்பொழுது அர்ஜூனின் மனம் இறகில்லாமல் பறந்து கொண்டிருந்தது. அவனின் ரணமான மனத்தைக் குளிர்விக்கச் செய்திருந்தன அவளின் வார்த்தைகள்.
“என் அப்பாவோட கண்ணு இப்படியே தான் இருக்கும் அர்ஜூன். அவங்க முகத்துல எப்பவுமே இருக்கும் அந்தச் சிரிப்பு அவங்க கண்ணுலயும் இருக்கும். அந்தக் கண்ணுல கோபம் அன்பு பாசம்னு அவங்க காட்டுற எல்லாப் பாவமும் எனக்குப் பிடிக்கும். ஆனா அதுல வலியையோ வேதனையோ பார்த்துட்டா என்னால தாங்கிக்கவே முடியாது. அப்படி நான் ரசிச்சு ரசிச்சு பார்க்கிற மாதிரியான கண்ணை நீங்க வச்சிக்கிட்டு அதுல வலியைப் பார்க்கவும் ஏன்னு கேட்கத் தோணுச்சு”
‘ஓ அதான் ஆர் யூ ஒகேனு முதல்ல கேட்டாங்களா?’ என்று மனத்தோடு நினைத்தவனாய் அவளையே பார்த்திருந்தவனின் கண்களில் இப்பொழுது அவளை வருடும் பாவனை.
மீண்டுமாய் அவளின் குழுவினர் அவளை அழைக்கவும், “நான் அப்புறம் வந்து பேசுறேன்” என்றவளாய் அங்கிருந்து நகர்ந்து சென்றாள் அர்ச்சனா.
மதிய உணவுக்குப் பிறகு பாட்டுக்குப் பாட்டு போட்டி போன்று இசைக் குழுவினருடன் இணைந்து சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அடுத்து மாலைப் பொழுதில் கிளம்பும் நேரம் இவனைத் தேடி வந்தாள்.
அவனின் கண்களை உற்று நோக்கியவளாய், “ஆர் யூ ஓகே?” எனக் கேட்டாள்.
அவன் இப்பொழுதும் புரியாது புருவத்தை உயர்த்த, “இல்ல ரொம்ப டயர்டா தெரியுறீங்க! கூடவே அந்த வலி அப்ப நான் பேசும் போது காணாம போயிருந்த அந்த வலி இப்ப திரும்ப வந்துடுச்சே! அதான் கேட்டேன்” படபடவென உரைத்திருந்தாள்.
“தெரியாத ஒருத்தர்கிட்ட பேசுறோம்னு எந்தத் தயக்கமும் இல்லையா மேம் உங்களுக்கு” குறுஞ்சிரிப்புடன் கேட்டிருந்தான் அர்ஜூன்.
“இல்லயே அர்ஜூன். உங்களைப் பார்க்க எங்க குடும்பத்து ஆளுங்கல ஒருத்தரா தான் எனக்குத் தோணுது. உங்களுக்கு அப்பா மாதிரியே கண்ணு இருக்கனால அப்படித் தோணுதானு தெரியலை” என்றவள்,
“ஆமா உங்க சொந்த ஊரு என்ன?” என்று கேட்டாள்.
“சென்னை” என்றான்.
“இல்ல உங்க பூர்வீகம்?” எனக் கேட்டாள்.
“பூர்வீகமா?” நெற்றிச் சுருங்க யோசித்தவன்,
“அப்பா அம்மாக்கு திருச்செந்தூர். நான் பிறந்து வளர்ந்ததுலாம் சென்னை தான்ங்க” என்றான்.
“ஹே வாவ் நான் நினைச்சேன். எங்களுக்கும் திருச்செந்தூர் தான். பாருங்க நீங்க எங்களுக்கு ஏதாவது தூரத்து உறவா தான் இருப்பீங்க. இல்லனா உங்களைப் பார்த்ததும் எனக்கு அப்பா மாதிரி இருக்கீங்கனு தோணுமா” என்றாள்.
அச்சமயம் அவனை வேறு வேலையாக ஊழியர்கள் அழைக்க, “எக்ஸ்க்யூஸ் மீ” என்றவன் நகர முற்பட்டான்.
“இருங்க. உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா? அதை நீங்க சொல்லவே இல்லையே” எனப் படபடப்புடன் கேட்டாள்.
அக்கேள்வியில் இது வரை அவன் முகத்தில் இருந்த பொலிவு சட்டென்று மறைந்து போக,
“ஆகிடுச்சு மேம்” இறுக்கமான குரலில் உரைத்தவன் அங்கிருந்து விறுவிறுவென நடந்திருந்தான்.
அதிர்ச்சியுடன் அவளின் பார்வை அங்கிருந்து நகர்ந்து சென்றவனின் முதுகைத் துளைத்தன.
‘என்னை அவாய்ட் செய்ய பொய் சொல்றாரோ?’ என்று நினைத்தவளாய் அங்கிருந்து கிளம்பியிருந்தாள் அர்ச்சனா.
இதை எல்லாம் நினைத்தவாறே படுத்திருந்தவனின் கைப்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி எழுப்பவும் எடுத்துப் பார்த்தான்.
வெற்றியைப் போலவே
ஒரு தோல்வியும் நல்லதடா
வேப்பம்பூவிலும்
சிறு தேன் துளி உள்ளதடா
புயல் மையம் கொண்டால்
மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும்
சிறு நன்மை உண்டு
Good Night. Sweet dreams
Yours Archana
என்று வந்திருந்த குறுஞ்செய்தியைப் பார்த்து இன்பமாய் அதிர்ந்து போனான்.
“யார்ரா இவ?” சிரிப்புடன் வாய்விட்டே கூறினான் அர்ஜூன்.
இத்தனை நேரமாய் மனத்திற்குள் சூழ்ந்திருந்த வெறுமை மெல்ல நீங்க, இதழ் விரிந்த சிரிப்புடனேயே உறங்கியிருந்தான் அர்ஜூன்.
அதே நேரம் அங்கே தனது தந்தை கோவிந்தராஜனிடம் பேசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
“அப்பா, உன் கண்ணுப்பா அவருக்கு. அந்தக் கருவிழி சுத்தி ஒரு காபி கலர் வட்டம் இருக்குமே. அதுலாம் உன்னைத் தவிர வேற யாரு கண்ணுலயும் நான் பார்த்ததில்லை தெரியுமா?” என்று எதையோ சிந்தித்தவளாய்,
“அப்பா உனக்கு அக்கா தங்கச்சினு யாராவது இருந்து வீட்டை விட்டு ஓடிப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்களா என்ன?” தீவிரமான பாவத்துடன் மகள் கேட்கவும், வாய்விட்டுச் சிரித்திருந்தனர் அவளின் தாயும் தந்தையும்.
பெங்களூரில் மேல் தட்டு மக்கள் வசிக்கும் இடத்தில் இரு மாடிக் கட்டடமாய் இருந்த அவர்களின் சொந்த வீட்டின் தரைத்தளத்தில் தங்கியிருந்தனர் கோவிந்தராஜன் குடும்பத்தினர்.
இரண்டு மாடியிலிருந்த வீடுகளையும் வாடகைக்கு விட்டிருந்தனர்.
இரவுணவை உண்டு முடித்து விட்டு மொட்டை மாடியில் காற்றோட்டமாய் நடந்தவாறு பேசிக் கொண்டிருந்தனர் மூவரும்.
“ஏன்டி உனக்குப் பிடிச்சிருக்குனா அந்தப் பையன் உங்கப்பாக்கு அக்கா பையனா தான் இருக்கனுமா?” என்று சிரிப்புடன் கேட்டிருந்தார் அவளின் அன்னை மல்லிகா.
“அய்யோ அம்மா நான் நினைச்சதை அப்படியே சொல்றியே! அந்தப் பையன் என் அத்தை பையனா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சு தான் நான் பேசினேன்மா. கடைசில கல்யாணமாகிடுச்சுனு சொல்லிட்டாருமா” உற்சாகத்துடன் ஆரம்பித்தவள் சோகமாய் முடித்தாள்.
“அச்சோ வடை போச்சே” என்று அவளின் அப்பா கேலிச் செய்ய,
“அதெல்லாம் ஒன்னும் போகலைப்பா. அவருக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சாம். அவரோட அசிஸ்டென்ட் ஜீவா சொன்னாரு” என்று கண் சிமிட்டினாள்.
“அடிப்பாவி ரெண்டாந் தாரமா வாக்கப் போட போறியா?” அவளின் அம்மா பதறிப் போய்க் கேட்க,
“அவர் நல்லவரா இருந்தா எனக்குப் பிரச்சனை இல்லமா” என்று தோளைக் குலுக்கினாள் அர்ச்சனா.
“அர்ச்சனா என்ன பேச்சு இது? ஏதோ விளையாட்டாப் பேசுறனு நினைச்சா, கல்யாணம்ங்கிறது விளையாட்டாப் போச்சா உனக்கு?” என்று அதட்டினார் அவளின் அன்னை மல்லிகா.
“இல்லமா ஐம் சீரியஸ்! அவரோட முதல் கல்யாணம் டிவோர்ஸ் ஆனதுக்கு நியாயமான காரணம் இருந்து அவரு நல்லவரா இருக்கும் பட்சத்தில் எனக்கு அவரைக் கட்டிக்கப் பிரச்சனை இல்லமா. அவரைப் பத்தி விசாரிங்கப்பா” இது தான் முடிவு என்பது போல் உரைத்து விட்டு அவள் மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்று விட,
“என்னங்க இவ இப்படிச் சொல்றா? இது எப்படிச் சரியா வரும்? அவளுக்காக நாம பார்த்து வச்ச வரன்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இன்னிக்கு பார்த்த பையனுக்காக இப்படிப் பேசிட்டு இருக்காளே” கவலையுடன் கூறியிருந்தார் மல்லிகா.
“விடு பார்த்துக்கலாம். படபடனு பேசினாலும் நம்ம விருப்பமில்லாம அவளா எதுவும் செய்ய மாட்டா மல்லி” என்ற கோவிந்தராஜன் சற்று சிந்தித்தவராய்,
“என் பொண்ணை இந்தளவுக்குக் கவர்ந்த அந்தப் பையன் யாருனு தான் யோசிச்சிட்டு இருக்கேன். அவனைப் பத்தி நாளைக்கே விசாரிக்கிறேன்” என்றார்.
“விசாரிச்சு நல்லவனா இருந்தா கட்டிக் கொடுத்துடுவீங்களா?” அக்னிப் பார்வையுடன் மல்லிகா கேட்கவும்,
“நல்ல பையனா இருந்தா பார்க்கலாமே மல்லி” என்றார்.
“என்னது பார்க்கலாமா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க அப்பாவும் பொண்ணும் மனசுல? உங்க பொண்ணுக்கு என்ன குறைச்சல்? இருபத்தஞ்சு வயசு தானே ஆகுது. அதுக்குள்ள எதுக்கு ரெண்டாந்தாரமா இன்னொருத்தனை அவ கட்டிக்கனும்” எனக் கேட்டிருந்தார்.
“நல்ல பையனா இருந்து வேற ஏதோ காரணத்துனால டிவோர்ஸ் ஆகியிருந்தா நாம ஒத்துக்கிறதுல என்னமா இருக்கு” என்று கேட்டார் கோவிந்தராஜன்.
“நீங்க முற்போக்கா யோசிக்கிறேன்னு கண்டபடி யோசிங்க. அதுக்காக நானும் அதுக்குச் சம்மதிப்பேன்னு நினைக்காதீங்க! இதோட இந்தப் பையனோட பேச்சை நிறுத்துங்க. அவனைப் பத்தி விசாரிக்கவும் தேவையில்ல ஒரு மண்ணும் தேவையில்ல” என்றவராய் அங்கிருந்து சென்றிருந்தார் மல்லிகா.
‘அச்சுமாகிட்ட அந்தப் பையன் மேல ஆசையை வளர்த்துக்காதனு சொல்லி வைக்கனும்’ என்றெண்ணிக் கொண்டவராய் பெருமூச்சு விட்டவர் தனது மனைவின் பின்னே சென்றிருந்தார்.
மறுநாள் காலை பத்து மணியளவில் ஹோட்டலில் தனக்கான அறையில் அமர்ந்திருந்த அர்ஜூன் முன்பு வந்து நின்ற ஜீவா, “சார் உங்களைப் பார்க்க அர்ச்சனா மேடம் வந்திருக்காங்க” என்றான்.
இத்தனை நேரமாய்த் தீவிர சிந்தனையுடன் வேலையில் ஈடுபட்டிருந்தவனின் முகம் அர்ச்சனா என்ற பெயரில் கனிந்து போனது.
புன்னகையுடன், “வரச் சொல்லுங்க” என்றவனாய் சாய்ந்து அமர்ந்தான் அர்ஜூன்.
அந்த பெரிய மாளிகைப் போன்ற உணவக விடுதியின் வரவேற்பறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னுடைய முழு உருவத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் அர்ச்சனா. அங்கு அவளைத் தவிர வேறு யாரும் இல்லாதிருக்க அக்கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை ஆசையாய் பார்த்திருந்தாள்.
உயரத்திற்கேற்ற அளவான ஒல்லியான தேகத்துடன் ஜீன்ஸ் குர்தி அணிந்தவளாய் கழுத்து வரை நீண்டிருந்த சுருள் கேசத்தை விரித்து விட்டிருந்தாள். தோளில் இருந்த பையுடன் தனது உருவத்தை அக்கண்ணாடியில் இப்புறமும் அப்புறமும் திருப்பியவளாய் பார்த்தவள், “அழகுடி அச்சு நீ” கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்திடமே கூறியவளாய் நின்றிருந்தவள் ஜீவா வரும் அரவம் கேட்டு சட்டென அங்கிருந்த காத்திருப்பு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“சார் உங்களை வரச் சொன்னாரு மேம்” என்று அவளை உள்ளே அனுப்பி வைத்தான் ஜீவா.
கதவைத் தட்டி விட்டு, “ஹாய் அர்ஜூன்” என்றவாறு முகம் நிறைந்த புன்னகையுடன் உள்ளே வந்தாள் அர்ச்சனா.
“வாங்க மேம்! உட்காருங்க” மென்னகையுடன் அவளை அமரப் பணித்தான்.
அவனெதிரில் இருந்த நாற்காலியில் அவள் அமர்ந்ததும், “ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ மேம்?” என்று கேட்டான்.
“என்னை அர்ச்சனானு பேரு சொல்லி கூப்பிடுங்க. எதுக்காக வந்திருக்கேன்னு விஷயத்தைச் சொல்றேன்” என்றாள்.
புன்னகைத்தவனாய், “சொல்லுங்க அர்ச்சனா” என்றான்.
“குட் பாய்” என்று பாராட்டி அவனின் கண்களில் மின்னலை வரச் செய்தவள்,
“நேத்து நல்லா தூங்குனீங்களா அர்ஜூன்” என்று கேட்டாள்.
“இதைக் கேட்கத் தான் இவ்வளோ தூரம் வந்தீங்களா அர்ச்சனா?” சற்று கூர்மையான பார்வையுடனேயே கேட்டிருந்தான்.

“ஆமா எனக்கு நேத்து முழுக்க உங்க கண்ணு தான்ங்க கனவுல வந்து போச்சு. அந்தக் கண்ணுல தெரிஞ்ச வலி! அது இன்னிக்கு சரியாகிடுச்சானு பார்க்கத் தான் வந்தேன். ஆர் யூ ஓகே நௌ?” எனக் கேட்டாள்.
அவளின் கேள்விக்குப் பதிலிறுக்காது அமைதியாக அவளைப் பார்த்தவன், ‘இதை இதுக்கு மேல தொடர விடுறது நல்லதில்ல’ என்று மனத்திற்குள் நினைத்தவனாய், “தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ் அர்ச்சனா” சற்றுக் கடுமையான குரலில் உரைத்திருந்தான்.
அவளின் முகம் ஒரு நொடி சுருங்கிப் போகப் பின் சுதாரித்தவளாய், “ஓகே ஆல்ரைட்! நீங்க ஓகேவா இருந்தா எனக்கென்ன இல்லாட்டி எனக்கென்ன?” என்று உதட்டைச் சுழித்தவள் தான் வந்த காரியத்தைப் பற்றிப் பேசலானாள்.
“என்னுடைய அப்பா அம்மாக்கு இருபத்தைந்தாவது வெட்டிங் ஆனிவர்சரி வருது. இங்கே சின்னதா ஈவ்னிங் பார்ட்டி மாதிரி பிளான் செய்யலாம்னு நினைக்கிறேன்” என்று அவள் கூறவும்,
“ஓ கண்டிப்பா செய்யலாம்” என்றவன் அந்நிகழ்வுகான திட்டமிடலைக் கூறி அதற்குரிய பணத்தையும் கூறினான்.
அவன் கூறிய பணத்தில் வாயைப் பிளந்தவள், “சரிங்க அர்ஜூன். நான் வீட்டுல பேசிட்டு சொல்றேன்” என்றவளாய் எழுந்து கொண்டாள்.
செல்லும் முன் அவனின் கண்களை உற்று நோக்கியவளாய், “நீங்க சொல்லலைனாலும் உங்க கண்ணு எனக்குக் காட்டிக் கொடுத்திடும் அர்ஜூன். யூ ஆர் நாட் ஓகே! இன்னும் உங்க கண்ணுல வலி தெரியுது” என்றவளாய் அங்கிருந்து சென்றிருந்தாள் அர்ச்சனா.
அதிர்ந்து வியந்த விழியுடன் செல்லும் அவளையே பார்த்திருந்தான் அர்ஜூன்.
அன்றைய நாளின் நினைவில் படுத்திருந்தவன், தனது கையணைவில் உறங்கும் மனையாளைப் பார்த்து, ‘என் கண்ணை வச்சே நான் நல்லா இருக்கேனா இல்லையான்னு கவனிக்கிற என் அச்சுமா எங்கே போய்ட்டா?’ பெருமூச்சுடன் மனத்தில் நினைத்தவனாய் மனைவியைத் தன்னோடு அணைத்துக் கண்களை மூடி உறக்கத்திற்குள் ஆழ்ந்தான் அர்ஜூன்.

