Loading

நேசம்-9

அழகுநிலாவை வீட்டில் விட்டுவிட்டு, நாளை சில வேலைகள் இருப்பதனால், இராஜேந்திரனையும் இரவே சந்தித்துவிட்டு, இன்னும் சில பணிகளையும் முடித்துவிட்டு, அவன் வீடு வந்து சேர்கையில் நேரம், இரவு பனிரெண்டைக் கடந்திருந்தது. வீடு முழுதும் இருள் சூழ்ந்திருந்தது. அமைதியாய் வரவேற்பறைக் கடந்து அறைக்குள் நுழையப் போனவனை மாதவியின் குரல் தடுத்து நிறுத்தியது.

“அதி நில்லு!”

“சொல்லுங்கம்மா!”

“என்னதான் நினைச்சுட்டு இருக்க நீ? இன்னும் எதுவுமே முடிவாகலை தெரியும் தானே?”

“இப்போ என்ன சொல்ல வர்ரீங்க.? எதுவா இருந்தாலும், நேரடியாய் சொல்லுங்க.!”

“அந்தப் பொண்ணை வீட்டில் போய் விட்டுட்டு வந்துருக்க? ஊர்ல என்ன பேசுவாங்க அதி?” என நேரடியாய் விஷயத்திற்கு வந்தார் மாதவி.

“உங்களுக்கு யார் சொன்னது?” பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவனை, கோபமாய்ப் பார்த்தார் மாதவி.

“யார் சொன்னதுங்கிறது மட்டுந்தேன் உனக்கு முக்கியம் அப்படித்தானே? அந்தப் பொண்ணு வீட்டில்தேன் ஃபோன் போட்டு சொன்னாங்க!”

“எப்படியோ உங்களுக்குத் தெரிஞ்சுடுச்சுல்ல? இப்போ என்ன?”

“அதி! சொன்னால் புரிஞ்சுக்கோ! யார் வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது. ஒண்ணுக்கு ரெண்டா பேசுவாங்க!”

“எனக்கு ஊரைப் பத்தி மட்டுமில்லை, யாரைப் பத்தியும் கவலை இல்லை.!”

“நானும் அப்பாவும் அந்தப் பொண்ணு வேணாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். அவங்க வீட்டுக்குள்ளேயே ஆயிரம் பஞ்சாயத்தா கிடக்கு. அந்தப் புள்ளையோட தாய் மாமனுக்குத்தான் கொடுக்குறதாகப் பேச்சாம்! என்ன நடந்துச்சுன்னு தெரியலை, வெளியில் மாப்பிள்ளை பார்க்குறாங்களாம்!”

“யாரைக் கேட்டு முடிவு செஞ்சீங்க?” முதன் முறையாய் வீட்டில் அவன் குரல் உயர்ந்தது. கூடத்தில் எதிரொலித்த அவனின் குரலில், அறையிலிருந்து வெளியே வந்திருந்தனர் இந்திரனும், ஹரிஷும்.

“ம்மா! ஏம்மா இப்படி அர்த்த ராத்திரியில் கத்திக்கிட்டு கிடக்குறீங்க? தூக்கம் வருதும்மா!”

“நான் இல்லைடா உன் அண்ணன்தேன்.! உன்னை யாருடா எந்திரிச்சு வரச் சொன்னது? நீ போய்த் தூங்கு.!”

“யாரைக்கேட்டு அந்தப் பொண்ணு வேணாம்ன்னு முடிவு செஞ்சீங்கன்னு உங்க மயன் கேட்கிறியான் பாருங்க! நீங்களே சொல்லுங்க உங்க பிள்ளைக்கிட்டே!” கணவரை முறைத்தபடி நின்றார். மகனிடம் வெளிப்படையாய் காட்ட முடியாத கோபம் கணவரிடம் வெளிப்பட்டது.

“நான் என்னத்தைச் சொல்றது? முடிவு எடுத்தது எல்லாமே நீதானே? நீயே சொல்லு!” என நழுவி கொண்டார் இந்திரன்.

“எல்லா விஷயத்திலும் என்னை முன்னே நிறுத்திட்டு நீங்க நழுவிடுங்க! அவங்க குடும்பமே சரியில்லைன்னு தானே, அந்தப் பொண்ணு வேணாம்ன்னு முடிவு பண்ணினோம்?” எனக் கணவரைப் பார்த்து மாதவி கேட்க,

“நான் அந்தக் குடும்பத்தைக் கல்யாணம் பண்ணிக்கல.. நான் நிலாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!” இடையிட்டுப் பதில் சொல்லியிருந்தான் அதிவீரன்.

“அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டியா?”

“இந்த ஜென்மத்தில் அவ மட்டும்தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணிட்டேன்.!” அழுத்தம் திருத்தமாய் அவன் சொன்னதில் அதிர்ந்து நின்றிருந்தார் மாதவி.

“அப்போ எங்க வார்த்தைக்கு என்ன மரியாதை அதி?”

“உங்களை நான் என்ன மரியாதைக் குறைவா நடத்திட்டேன்? நிலாவைப் பார்க்கக் கூட்டிப் போனது நீங்க தான். அவளை எனக்குப் பிடிச்சிருந்தது. அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். வாழப் போறது நான் தான். எனக்குப் பிடிச்ச பொண்ணைத் தான் நான் கல்யாணம் பண்ண முடியும்.!” கோபத்தின் அழுத்தத்தில் அதிகமாய்ப் பேசினான் அதிவீரன். பேச வேண்டிய கட்டாயமும் அவனுக்கு இருந்தது.

“அதுக்குச் சொல்லலை அதி, இன்னும் ரெண்டு மூணு பொண்ணைப் பார்த்துட்டு முடிவு பண்ணலாமேன்னு தான் சொன்னேன்.!” மகனின் கோபம் கண்டு, கொஞ்சம் தணிவாய் பேசினார் அவர்.

“இது என்ன பொம்மை வியாபாரமா? ரெண்டு மூணுன்னு கம்ப்பேர் பண்ணி வாங்குறதுக்கு? பேசாமல் உங்களுக்குப் பிடிச்ச பொண்ணுங்களா பார்த்து, ஒரே நாள் வரச் சொல்லுங்க, நம்ம வீட்டிலேயே ஃபேஷன் ஷோ நடத்திடுவோம்!” என அதிவிரன் சொல்ல பக்கெனச் சிரித்திருந்தான் ஹரீஷ்.

“டேய் கரீஷு! வாயை மூடிக்கிட்டு நில்லு! நிக்க முடியலைன்னா போய்த் தூங்கு! பல்லைக் காட்டின பல்லை தட்டிடுவேன்!” என மகனை முறைத்தார் மாதவி.

“ம்மா! நீ கோவமா சொன்னாலும் எனக்குச் சிரிப்பு தான் வருது!” என ஹரீஷ் வாயை மூடி சிரித்துக் கொண்டிருக்க,

“என்னைக் கடுப்பேத்தணும்ன்னே செய்றியாடா கரீஷூ!” எனக் கோபத்தைச் சின்ன மகனின் மீது காட்டினார் மாதவி.

“மாதவி! போதும்! அதி அவன் முடிவில் உறுதியாகத்தேன் இருக்கான். அவனுக்குப் பிடிச்சுருக்குன்னா விடேன். ஏன் விதண்டாவாதம் பண்ற? அவன் சொன்ன மாதிரி, வாழப் போறது அவன்தான். அதை மனசில் வச்சிட்டு யோசி.!”

“அதுக்கு இல்லைங்க, உறுதி பண்ணும் முன்னே அந்தப் புள்ளையை வண்டியில் கூட்டிட்டுப் போறதெல்லாம் நல்லாவா இருக்கு? நம்ம குடும்பத்துக்குதேன் அசிங்கம். அதோட பொண்ணு வீட்டுக்காரய்ங்க கிட்டே இவன், இம்புட்டுத் தூரம் இறங்கிப் போறது எனக்குப் பிடிக்கலை.! அவிங்கதேன் நம்மக்கிட்டே இறங்கிப் போகணும். இவனுக்கு அதெல்லாம் சொன்னால் புரியமாட்டேங்குது.!” என மாதவி சொல்ல,

“என்னை நம்பாமல் நிக்க வச்சு, கேள்வி கேட்கிற உங்க கிட்டே நான் எதையும் விளக்கத் தயாராய் இல்லை. நீங்க என்னை நம்பாமல் இருக்கிறது எனக்கு ஒண்ணும் புதுசு இல்லையே? பழகிப் போனது தான்.. ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன், அவள் இந்த வீட்டுக்குள்ளே வர்ரதுக்கு முன்னாடியே வெறுப்பை வளர்த்துக்காதீங்க!” எனச் சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென அறைக்குள் நுழைந்திருந்தான்.

மகன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளின் தாக்கத்தில், தலையைப் பிடித்துக் கொண்டு தொப்பென மெத்திருக்கையில் அமர்ந்தார் மாதவி.

“மாதவி! அவனைப் பத்திதேன் தெரியுமே? அவன் முடிவெடுத்துட்டா அதை யாராலும் மாத்த முடியாது. இப்போ அவன் விலகி நிற்கிறதுக்கே நாம தானே காரணம். திரும்ப அவனை நம்மை விட்டு விலகிப் போக வச்சுடாதே!” எனச் சொல்லிவிட்டு அவரும் உள்ளே சென்றுவிட, ஹரீஷ் மட்டும் அன்னைக்குத் துணையாய் அமர்ந்திருந்தான்.

“நீ மட்டும் ஏன் உட்கார்ந்திருக்கிறே? போய்த் தூங்கு!”

“எனக்குப் புரியலைம்மா! அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டது நீங்கதேன். அவனுக்குச் சந்தோஷமா பொண்ணு பார்த்ததும் நீங்கதேன். அவனுக்குப் பிடிச்ச பொண்ணைத் தானே அவன் தேர்ந்தெடுத்துருக்கான். இப்போ ஏன் கோபப்படுறீங்க? இது அவன் வாழ்க்கை தானேம்மா?”

“முறைன்னு ஒண்ணு இருக்கே டா! நம்ம பக்க ஆளுகளைப் பத்திதேன் உனக்குத் தெரியுமே டா? ஒப்புத் தாம்பூலமாவது மாத்தியிருந்தால், பேசி வச்சிருக்கோம்ன்னு சொல்லி சமாளிச்சுடலாம். இப்போ ஒண்ணும் சொல்ல முடியலை டா! ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தப் புள்ளையைக் கூட்டிட்டுப் போயிருக்கலாம் தானே அவன்?” என மாதவி கேட்க,

“அப்போ அவன் சொல்லிட்டு போகலைங்கிறதுதான் உங்க பிரச்சனை அப்படித்தானே? யார் கேட்டாலும் அவனை விட்டுக் கொடுக்காமல் ‘என் மயன் அவனுக்குப் பிடிச்ச பொண்ணைக் கூட்டிட்டு போவான்’ன்னு சொல்லியிருக்கணும் நீங்க. அவன் இதுவரையும், எதையாவது வெளிப்படையாய் சொல்லியிருக்கானா? யோசிக்காமல் பேசிட்டீங்களே? எனக்குத் தெரிஞ்சு, நீங்க கொஞ்சம் கொஞ்சமா மாமியாராய் மாறிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். இனிமே நீங்க சீரியல் பார்க்கும் போது, உங்களைக் கொஞ்சம் வாட்ச் பண்ணணும். மருமகள் வேலைக்குப் போறது, மருமகள் தனியா நின்னு சாதிக்கிறது, ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ், மருமகள் லேட்டா எந்திரிக்கிறதெல்லாம் பார்த்துக் கோபம் வருதான்னு செக் பண்ணணும். அப்படிக் கோபம் வந்தால் நிச்சயம், உங்களுக்கு மருமகள் ஹேட்டிங் சிண்ட்ரோம் இருக்குன்னு அர்த்தம்.!” பொறுப்பாகத் துவங்கி விளையாட்டாய் முடித்தான் ஹரிஷ். அவன் செயலில் மென்மையாய் சிரித்தார் மாதவி.

“இம்புட்டு அறிவு உனக்கு எங்கே இருந்துடா வந்துச்சு? நீயா இப்படிப் பொறுப்பா பேசுற?”

“இப்படியெல்லாம் பேசினால் தானே, நாளை பின்னே நான் லவ் பண்ணுற பொண்ணை என்னோட சேர்த்து வைப்பீங்க? ஒருவேளை வேணாம்ன்னு சொன்னீங்க, அண்ணனுக்கு மட்டும் அவனுக்குப் பிடிச்ச பொண்ணைக் கட்டி வச்சீங்க? எனக்கு மட்டும் ஓரவஞ்சனையான்னு கேட்பேன்! அதுக்குத்தான் இப்போவே ட்ரெய்னிங் எடுத்துக்கிறேன்!” என அவன் சொல்ல,

“நட்டநடு ராத்திரியில் இப்படி வாயடிச்சது போதும்! போய்த் தூங்கு! ஏன் கரீஷு நிஜமாவே நான் மாமியார் மனநிலைக்கு மாறிட்டேனா? அதி கிட்டே கோபமா பேசிட்டேனோ? எதோ பேர் சொன்னியே அது என்ன?” என அவர் கேட்க,

“அது சும்மா சொன்னேன்மா! நீங்க நீங்களாவே இருங்கம்மா! இன்னைக்கு நீங்க பேசினது நீங்களா பேசின மாதிரியே இல்லை. அண்ணன் சந்தோஷம்தான் முக்கியம்ன்னா அவன் விருப்படியே விடுங்க!” தமயனின் குணமறிந்து பேசினான் ஹரிஷ்.

“உங்க அத்தைதேன் இராத்திரி ஃபோன் போட்டாக! பொண்ணு பார்க்க அவுகளைக் கூப்பிடலைன்னு என்னவெல்லாமோ பேசிட்டாக டா! அதே நேரந்தேன் பொண்ணு வீட்டிலேயும் ஃபோன் போட்டு, அதி, அவளைக் கூட்டியாந்து விட்டுட்டு போனான்னு சொன்னாங்க.. நம்மக்கிட்ட ஒத்தை வார்த்தை இந்தப் பய சொல்லலையேன்னு கோபம் வந்துருச்சு.!” என அவர் சொன்ன பின் தான், அன்னை பேசியதன் காரணம் புரிந்தது.

“அவங்க பேசுறதையெல்லாம் மைண்ட்ல ஏத்திக்காதீங்கம்மா! போய்த் தூங்குங்க! அப்பா நீங்க இல்லாமல் தூங்காமல் உட்கார்ந்திருப்பாரு!” என ஹரிஷ் சொல்லவும், புன்னகையுடன் எழுந்து கொண்டார் மாதவி. தன் இளைய மகனைப் புன்னகையுடன் உற்றுப் பார்த்தார். விளையாட்டாய் பேசித் திரிந்த மகன் வளர்ந்துவிட்டான் என்பது, அவர் புத்திக்கு உரைத்தது.
ஹரீஷ் சொன்னதும் உண்மை தான். மாதவி இப்படிப் பேசக் கூடியவர் இல்லை தான். அவரின் அலைபேசி அழைப்புகளை மகன் எடுக்காததும், மூன்றாவது நபர் யார் மூலமாகவோ அவனைப் பற்றித் தகவல் சொன்னதும், அவரின் கோபத்தைத் தூண்டியிருந்தது.

 

என்னதான் வயதானாலும் கூட, சில விஷயங்களில் தெளிவு வருவதே இல்லை. நாம் தவறாக யோசிக்கிறோம் என்பதையும் உணர்வதே இல்லை. இறுதியில் ஒவ்வொருவரின் முடிவுகளும் அந்தந்த நேரத்து நியாயங்களாகத் தான் இருக்கின்றன.

இன்று தன் இளையமகன் பேசியதையெல்லாம் யோசித்துப் பார்த்தவருக்கு, அவனிடமிருக்கும் தெளிவு ஆச்சர்யத்தைத் தான் தந்தது. ‘யோசித்துப் பார்த்தால் சில நேரங்களில், நாம் பெற்ற பிள்ளைகளே, நமக்கு ஆசானாகவும் மாறிவிடுகிறார்கள்!’ என நினைத்தபடியே அறையை நோக்கி நகர்ந்திருந்தார். ‘காலையில் அதிவீரனிடம் பேச வேண்டும்’ என மனதில் குறித்துக் கொண்டார்.

*******

“கதிரு! என்னப்பா இப்படிச் சொல்ற? உன் உடம்பொறந்தவ மேலேதேன் குத்தச்சாட்டு வைக்கிறோம்ன்னு தெரிஞ்சு தானே சொல்லுற?”

வெள்ளை மீசையுடன், அந்த வீட்டின் கூடத்தில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் கேட்டார். அவர் வீராசாமி. அவ்வூரின் பெரிய தலைக்கட்டு. அவரின் சீயான் காலத்திலிருந்து வழி வழியாகப் பஞ்சாயத்தின் தலைவராகத் தான் இருந்து வந்திருக்கிறார்கள். முன்பு போல் ஆல மரத்தடி, பஞ்சாயத்து திண்டு என்றில்லாமல், வீட்டிலேயே வைத்து பேசி முடித்து வைக்கும் வழக்கமாய் மாற்றியிருந்தார். ஊர் மக்களும், காவல்துறையை நாடாமல், வீராசாமியின் உதவியுடன் தங்களுக்குள்ளேயே பேசி வம்பு வழக்குகளைத் தீர்த்துக் கொண்டனர்.

“தெரிஞ்சுதேன் சொல்லுறேன்ங்கய்யா! பொண்ணை எனக்குக் கட்டி தாரேன்னு சொல்லிப்புட்டு, இப்போ வேற மாப்பிள்ளை பார்க்கிறாக! தாய் மாமனா அந்தப் புள்ளையைக் கட்டிக்கிற மொத உரிமை எனக்கு மட்டுந்தேன் இருக்கு. பெரியவுக நீங்கதேன் நியாயத்தைச் சொல்லணும். சொன்ன வாக்கை காப்பத்துறதேன் நியாயம். அந்த நியாயமெல்லாம் இவுக ரெண்டு பேருக்குமே இல்லை!” எனத் தெனாவெட்டாய் மீசையை முறுக்கியபடி சொன்னான் கதிரவன்.

“என்னப்பா நீங்க என்ன சொல்றீக? பொண்ணைக் கொடுக்குறோம்ன்னு சொல்லிப்புட்டு, வெளிய மாப்பிள்ளை பார்த்தீகன்னா என்னப்பா அர்த்தம்? அவன் சொல்றாப்ல, மாமன்ங்காரனுக்குத்தேன் மொத உரிமை!” என அவர் செல்வியையும், புவியரசனையும் பார்த்துக் கேட்க, புவியரசன் கோபமாய் மனைவியை முறைத்தார்.

“கதிருக்குதேன் எங்க மவளைக் கட்டிக் கொடுக்கணும்ன்னு பேசுனது நெசந்தானுங்க! ஆனால் எங்கப் புள்ளைக்கு விருப்பம் இல்லாதப்போ நாங்க வற்புறுத்தி கட்டி வைக்க முடியாதுங்களே!” பொறுமையாய் பேசினார் புவியரசன்.

“அப்பறம் என்னத்துக்குப்பா பொண்ணைக் கட்டி வைக்கிறோம்ன்னு சொன்னீங்க?” என வீராசாமி கேட்க பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றார் புவியரசன்.

“இப்படிப் பேசாமல் நின்னால் என்னன்னு நான் எடுத்துக்கிறது. பொண்ணு தானே பார்த்துட்டு போயிருக்காய்ங்க, வேணாம்ன்னு சொல்லிப்புட்டு, கதிருக்கே கட்டி வச்சிருங்க! கொடுத்த வாக்கு முக்கியமில்லையா?!”

“கொடுத்த வாக்கு முக்கியந்தேன். ஆனால், அன்னைக்கு இருந்த சூழ்நிலையில், எங்க அம்மா கேட்டதும், யோசிக்காமல் சரின்னு சொல்லிப்புட்டேன். நான் என்னைக் கட்டினவர்கிட்டேயும் கேட்கலை, என் மவகிட்டேயும் கேட்கலை. யரையும் கலந்து ஆலோசிக்காமல் நான் எடுத்த முடிவுதேன் எம் மவளை இங்கணக் கொண்டார்ந்து நிறுத்தியிருக்கு. தப்பு செஞ்சது நான்தேன். நான் செஞ்சதுக்கு எம் மவ தண்டனை அனுபவிக்க வேணாம்ன்னுதேன் நான் நினைக்கிறேன்!” எனச் செல்வி இடையிட்டுப் பேசியிருக்க, யோசனையோடு மீசையை நீவினார் வீராசாமி.

“கதிரு என் தம்பிதேன் இல்லைங்கல, அதுக்காக வேலை வெட்டியில்லாமல் பொழுதுக்கும் குடிச்சுப்புட்டு ஊர் சுத்திக்கிட்டு திரியறவனை நம்பி, எங்க பிள்ளையை நாங்க எப்படிக் கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்? பெத்த தாயாக என் இடத்திலிருந்து நீங்க யோசிச்சு பாருங்கய்யா! என் வீடேறி வந்து, எம் மவளையே தூக்கிட்டுப் போய்த் தாலிக்கட்டுவேன்னு சொல்றான்! நீங்க மனசைத் தொட்டு சொல்லுங்க, இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு உங்க பொண்ணைக் கொடுப்பீங்களா? எல்லாத்துக்கும் மேலே, எங்க மவ விருப்பமில்லைன்னு சொல்லும் போது, வலுக்கட்டாயமா கட்டி வைக்கச் சொல்லுறீகளா?” எனச் செல்வி நீளமாய்ப் பேசிவிட்டு நிமிர்ந்து கணவனைப் பார்த்தார்.

 

புவியரசனோ, எதையும் கண்டு கொள்ளாமல், இறுகிய முகத்துடன் நின்றார்.

“என்னப்பா கதிரு உன்பக்கந்தேன் இப்போ அடிவாரம் ஆட்டம் காணுது. நம்பி வர்ர பொண்ணைக் காப்பத்தணுன்னா, சம்பாதிக்கணும்ப்பா! உத்தியோகம் புருஷ லட்சணம் இல்லையா? எல்லாத்துக்கும் மேல உன் அக்கா மவளுக்கே உன்னைக் கட்ட விருப்பம் இல்லாதப்போ, அவுகளும் என்ன செய்வாக.?” என்றவரின் பார்வை செல்வியின் அருகே நின்றிருந்த அழகுநிலாவைத் தான் பார்த்தது.

“நீ சொல்லுத்தா! உன் விருப்பத்துக்கு மீறி எதுவும் நடக்காது. தயங்காமல் உன் மனசில் பட்டதைச் சொல்லுத்தா!” என அவளைப் பார்த்து அவர்கேட்க,

“என்க்கு என் மாமாவை, தாய் மாமனாக மட்டுந்தேன் பிடிக்கும்! அவரை என்னோட வாழ்க்கைத் துணையாய், என்னோட இணை சேர்த்து ஒருநாளும் நான் யோசிச்சது இல்லைங்க ஐயா! கதிர் மாமாவைத்தேன் நான் கட்டணும்ன்னு நீங்க சொன்னீங்கன்னா, செத்தாலும் சாவேனே தவிர, அவரைக் கட்டிக்க மாட்டேன்.! இது மட்டுந்தேன் என் முடிவு.” தயங்கி தயங்கி சொன்னாலும், மனதில் இருந்ததைச் சொல்லிவிட்டாள் அழகுநிலா.

“அழகி! என்னத்துக்கு இப்படிப் பேசுற? வாய் வார்த்தைக்குக் கூட இப்படிச் சொல்லாதே!” எனப் பதறினார் செல்வி.

“எம் மவ செத்தாலும் சாவேன்னு சொல்றதையும் மீறி, எப்படி இவனுக்கு என் பிள்ளையைக் கொடுக்க முடியும்? பெத்தவங்களா, எம் மவ நல்லா வாழணும்ன்னு எங்களுக்கு ஆசை இருக்காதா? எல்லாம் இவளால் வந்ததுதேன்!” மனைவியை அடிக்கக் கையை உயர்த்தியிருந்தார் புவியரசன்.

“புவி! பொறுமையாய் இருப்பா! அது என்ன, பொம்பளையைக் கை நீட்டுற பழக்கம்?” எனப் புவியரசனைக் கண்டித்தவர்,

“இந்தாரு கதிரு, நான் சொல்றதை நல்லா கேட்டுக்க, உன்னைக் கட்டுறதுக்குச் செத்துப் போவேன்னு சொல்ற புள்ளையை வலுக்கட்டாயமாகக் கட்டினால், வாழ்க்கை நல்லா இருக்குமா? நீயே சொல்லு? உன் அக்கா மவதேன்.. மொத உரிமை உனக்குதேன். இதை யாரும் மறுக்கலை! ஆனால், அந்தப் பிள்ளைக்கு உன்னைப் பிடிச்சிருக்கணுமே?” எனக் கதிரவனைப் பார்த்து கேட்க, எரிச்சலுடன் வீராசாமியைப் பார்த்தான் கதிரவன்.

“எம்புட்டு காசு வாங்குனீக? பணத்தைப் பார்த்தால் பொணமும் நட்டமா நிக்குமாம்! நீங்க எம்மாத்திரம்? உங்க கிட்டே நியாயம் கிடைக்கும்ன்னு வந்தது என் தப்புதேன். நீங்க இருக்கவுகளுக்கு, ஒருமாதிரியும், இல்லாதவகளுக்கு வேறமாதிரியும் தீர்ப்பு சொல்லுவீக..!”

“கதிரு! வார்த்தையைப் பார்த்து பேசுப்பா! புவியோட முகத்துக்காக மட்டுந்தேன் பொறுமையாய் பேசிட்டு இருக்கேன். சட்டமே விருப்பமில்லாத கல்யாணத்தை நடத்தக் கூடாதுன்னுதேன் சொல்லுது. சட்டத்துக்கு முன்னாடி எல்லாரும் சமம்தேன். அங்க இருக்கவுக, இல்லாதவுகன்னு பாகுபாடு கிடையாது. அப்படித்தேன் இங்கேயும். முதலில் உன் தகுதியை வளர்த்துக்கோ கதிரு! நல்ல வேலைக்குப் போ! சம்பாதிச்சு காசு சேர்த்து வை! நானே நல்ல பொண்ணாய் பார்த்து கட்டி வைக்கச் சொல்றேன்.!” என அவர் சொல்ல,

“இவங்க பொண்ணைக் கொடுக்க மாட்டாங்க.. அழகிக்கு என்னைக் கட்ட விருப்பமில்லை! நான் இதை ஏத்துக்கிறேன். ஆனால், என்னை நம்ப வச்சு கழுத்தறுத்ததற்கு எனக்கு நஷ்ட ஈடு வேணும்.! அந்த வீட்டையும், கடையையும் என் பேருக்கு மாத்தி தரச் சொல்லிருங்க! நான் தன்னைப்போல் ஒதுங்கி போய்றேன்! அவங்க மகளை யாருக்கும் கட்டி வைக்கட்டும்!” எனச் சொன்னவனைக் கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்தார் புவியரசன்.

“நல்லா யோசிச்சுதேன் பேசுறியாப்பா! அவிங்க சம்பாதிச்சதை உன்கிட்டே கொடுத்துட்டு, அவுக தெருவில் நிற்பாகளா? இதெயெல்லாம் ஒரு பொழுதும் நான் சம்மதிக்க மாட்டேன். உனக்கு வேணும்ன்னா, ஒரு நல்ல வேலையைப் பார்த்துக் கொடுக்கச் சொல்றேன். வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிப்பா! பிறகு வேற பொண்ணைப் பார்த்து கட்டி வைக்கச் சொல்றேன்.! இதுதேன் என் முடிவு! இதுதேன் சரியான முடிவாகவும் இருக்கும்.” என வீராசாமி முன்பு சொன்னதையே மீண்டும் அழுத்தமாய்ச் சொல்ல,
“ஒரு மண்ணாகட்டியும் வேணாம்.! அம்புட்டு பேரும் என்னை ஏமாத்திட்ங்களே? அனுபவிப்பீங்க! நீ எவனைக் கட்டி சந்தோஷமா இருக்கிறேன்னு நானும் பார்க்கிறேன் டி!” எனக் கோபமாய் வெளியேறிருந்தான் கதிரவன்.

“இந்தாரு புவி! இவன் தானாக எதையும் பேசல.. பின்னால் இருந்து எவனோ தூண்டிவிடுறியான்! கவனமாகப் பிள்ளை கல்யாணத்தை முடிக்கப் பாருங்க!” எனச் சொல்லிவிட்டு விராசாமி எழுந்து சென்றிருந்தார். வீராசாமி சொன்ன விஷயங்களை யோசித்தபடியே புவியரசனும், செல்வியும் நின்றிருந்த அதே நேரம்,
வீராசாமியின் வீட்டிலிருந்து வெளியேறிய கதிரவன் இனியனுக்குத் தான் அழைத்திருந்தான்.

“இனியா! உங்க அப்பன், ஆத்தா, தங்கச்சின்னு ஒருத்தரும் மசிய மாட்டேங்குறாய்ங்க! அது அவிங்க சம்பாதிச்ச சொத்தாம்!”

“நீ விடாதே மாமா! எவன் வந்து அவளைக் கட்டுறான்னு பார்ப்போம்! என்னத்தையாவது ஒரண்டை இழுத்து, உழப்பி விட்டுரு மாமா! எப்படியும், பூ முடிக்கிறேன், பரிசம் போடுறேன்னு என்னைக் கூப்பிடுவாங்க! நான் வருவேன்! பார்த்துக்கலாம் மாமா!” எனச் சொன்ன இனியனின் முகம் அழகுநிலாவின் மீதான வன்மத்தில் பளபளத்தது.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment